அலெக்சி டால்ஸ்டாய் - ரஷ்யக் குட்டிக் கதை

ஒரு விவசாயி ஒரு ஆட்டுக்குட்டியை வளர்த்தார். ஆட்டுக்குட்டி ஒரு நாள் தப்பி ஒடியது. போகும் வழியில் அது ஒரு குள்ள நரியைச் சந்தித்தது. குள்ள நரி ஆட்டுக்குட்டியிடம் “எங்கே போகிறாய்?” என்று கேட்டது.

ஆட்டுக்குட்டி “நரியாரே, எனது அன்புத் தங்கையே, என்னை ஒரு விவசாயி வளர்த்தான் .எனக்கு அங்கு வாழவே பிடிக்கவில்லை. அங்கே ஒரு மோசமான ஆடு இருக்கிறது. அது ரொம்பச் சேட்டைகள் செய்யும். அது செய்யும் சேட்டை களுக்கு என்மீது பழிபோடும். அதனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விதி விட்ட வழி யென்று போய்க் கொண்டிருக்கிறேன்.”என்று பதிலளித்தது.

இதைக்கேட்ட நரி “எனது நிலையும் இதுதான். கழுகோ, பருந்தோ கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால் எப்போதும் என்மீதே பழி சுமத்துகிறார்கள். அதனால் நாம் இருவரும் ஒன்றாக ஓடி விடுவோம்” என்று கூறியது.

குள்ள நரியும் ஆட்டுக்குட்டியும் இணைந்து சென்றன. கொஞ்ச தூரம் சென்றதும் அவை பசியோடிருந்த ஒரு ஓநாயைச் சந்தித்தன. அந்த ஓநாய் இந்த இருவரையும் பார்த்து “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு நரி “நாங்கள் இருவரும் விதிவிட்ட வழியே போகிறோம்”என்றது. ஓநாய் உடனே “அப்படி என்றால் நாம் மூவருமே ஓன்றாகப் போவோம்” என்றது. ஆட்டுக்குட்டி, நரி, ஓநாய் மூன்றும் ஒன்றாய் நடந்தன.

ஓநாய் திடீரென ஆட்டுக்குட்டியைப் பார்த்து “என்ன ஆட்டுக்குட்டியே, நீ எனது கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டாய்?” என்று கேட்டது. உடனே குள்ளநரி குறுக்கிட்டு “என்ன தம்பி உண்மையிலேயே இது உனது கோட் தானா?” என்று ஓநாயைக் கேட்டது.

ஓநாய் உடனே “உறுதியாக இது என்னு டைய கம்பளிக்கோட்டு தான்” என்றது.

“அப்படியானால் உன் கோட்டை எடுத்து கொள்வது தான் நியாயம்” என்று குள்ள நரி கூறியது. ஆட்டுக்குட்டி பயத்தில் இல்லை என்று கத்தியது. ஆனால் உடனே ஓநாய்  ஆட்டுக்குட்டி யைக் கொன்று அதன்  தோலை உரித்து எடுத்து விட்டுத் திண்ண ஆரம்பித்தது. குள்ள நரிக்கும் பங்கு கிடைத்தது.

நீதி: சேரிடம் அறிந்து சேர்.

  

 

அமெரிக்க எழுத்தாளர் அம்புரோஸ் பீயர்ஸின் குட்டிக்கதைகள்

அரசநீதி

மதகாவோ நாட்டு அரசனுக்கும், போர்னி காஸ்கர் நாட்டு அரசனுக்கும் ஒரு தகராறு ஏற்பட்டு விட்டது. மதகாவோ அரசன் போர்னி காஸ்கர் அரசனுக்குப் பின் வரும் கடிதம் எழுதினான்:

“இந்த விசயம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டுமானால், அதற்கு முன் உங்கள் தூதரை என் தலைநகரிலிருந்து  நீங்கள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.”

போர்னிகாஸ்கர் அரசனுக்கு இது அத்து மீறிய கோரிக்கையாக இருந்தது. அதனால் இவன் கோபமடைந்து மதகாவோ அரசனுக்குக் கடிதம் எழுதினான்.

“என் தூதரை நான் திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது. மேலும், உங்கள் கோரிக்கை யை நீங்கள் வாபஸ் பெறாவிட்டால் நான் என் தூதரை வாபஸ் வாங்கிக் கொள்வேன்”

இந்த மிரட்டலைக் கண்டு மதகாவோ அரசன் அஞ்சி நடுங்கினான். அவன் போர்னி காஸ்கர் அரசனின் காலில் விழுந்து அவனது முடிவை ஏற்றுக்கொண்டான்.

தந்தையும் மகனும்

சொன்ன பேச்சுக் கேட்காத முன்கோபியான தனது மகனிடம் அப்பா சொன்னார். “மகனே கோபம் கூடாது. கோபம் இருந்தால் உனது தவறை உணர்ந்து கொள்ள முடியாமல் போகும். அடுத்த முறை கோபம் வரும் போது ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணி விட்டுத்தான் அசைய வோ,பேசவோ செய்வேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடு”

மகன் உடனே சத்தியம் செய்து கொடுத் தான்.உடனே அப்பா தனது கைத்தடியால் மகனை அடிக்கத் தொடங்கினான். மகன் ஒன்று, இரண்டு, மூன்று,நான்கு என்று எண்ணத் தொடங்கினான். ஆனால் துரதிருஷ்டவசமாக அவன் எழுபத்தைந்து எண்ணி முடிந்ததும் அப்பா பயந்து போய் பக்கத்தில் நின்ற வாடகை வண்டியிலேறி ஓடி விட்டான்.

மனிதனும் மின்னலும்

ஒருவன் தனது அலுவலகத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.அவனைத் தொடர்ந்து வந்த மின்னல் அவனை முந்திக்கொண்டது. மின்னல்  அவனைவிட ஒரு அங்குலம் முன்னதாக வே சென்று கொண்டிருந்தது. அவனைப் பார்த்து மின்னல் சொன்னது:

“உன்னை விட நான் மிகவேகமாக ஓடுவேன்.” அதற்கு அலுவலகத்துக்கு ஓடுகிறவன் பதில் சொன்னான்:

“அது சரிதான், ஆனால் நான் எவ்வளவு தூரம் ஓடவேண்டும் என்பதை நினைத்துப் பார் மின்னலே!”

அப்பாவி

ஒரு அப்பாவி மனிதன் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது யாரோ ஒரு அந்நியன் அவனை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கி விட்டான்.

அடிபட்டவனை நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த அப்பாவி மனிதன் நீதிபதியைப் பார்த்து “இந்த உலகத்தில் எனக்கு ஒரு விரோதி கூடக் கிடையாது.”என்றான்.

“அதனால்தான் நான் அவனை அடித்தேன்” என்றான் உருட்டுக் கட்டைக்காரன்.

நீதிபதி: “அடித்தவனை விடுதலை செய்கி றேன். விரோதிகள் இல்லாதவனுக்கு நண்பர்களும் இருக்க முடியாது. நீதிமன்றம் இப்படிப்பட்ட வர்களுக்காக நடத்தப்படவில்லை” என்று தீர்ப் பளித்தார்.

விதவையும் அழகும்

ஒரு விதவை தனது கணவனின் சமாதி அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள். அப் போது ஆடம்பரமான ஒருவன் அவள் அருகில் வந்து மரியாதையுடன் “நான் உன்னை நீண்ட காலமாகக் காதலித்து வருகிறேன்” என்று கூறினான்.

“சீ! போடா அயோக்கியப் பயலே! தூரப்போயிடு! காதலைப் பற்றிப் பேச இதுவா நேரம்?” என்றாள் அவள்.

அதற்கு அவன் சொன்னான்.”நான் என் காதலை இப்போது உன்னிடம் தெரிவித்திருக்கக் கூடாது. ஆனால் உன் அழகு என் அறிவைக்  குருடாக்கி விட்டது”

“நான் அழாமல் இருக்கும் போது நீ என்னைப் பார்த்தால் இப்படிப் பேச மாட்டாய்” என்றாள் அந்த விதவை.

சிங்கமும் ஆடும்

சிங்கத்தைப் பார்த்து செம்மறியாடு சொன்னது: “ நீ ஒரு கொடூரமான சண்டைக்கார மிருகம். அதனால் தான் உன்னைத் துப்பாக்கியால் வேட்டையாடுகிறார்கள். என்னைப் பார் நான் அமைதியான பிராணி அதனால் மனிதர்கள் என்னை வேட்டையாடுவதில்லை”

அதற்குச் சிங்கம் பின்வரும் பதிலைக் கூறியது “அவர்கள் உன்னை வேட்டையாட வேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதில் உன்னை வளர்க்கிறார்கள் அல்லவா?”

சிங்கமும் சுண்டெலியும்

ஒரு சிங்கம் ஒரு சுண்டெலியைப் பிடித்து கொல்லப் போனது. அப்போது சிங்கத்தைப் பார்த்து சுண்டெலி சொன்னது. “என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்கு ஒரு நாள் பதிலுக்குப் பெரிய உதவி செய்வேன்”

சிங்கம் இரக்கப்பட்டு சுண்டெலியை உயிரோடு விட்டுவிட்டது. கொஞ்சகாலம் கழித்து சிங்கம் வேடர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது. அந்த வழியாக வந்த சுண்டெலி தனக்கு உயிர்ப் பிச்சையளித்த சிங்கம் நாதியில் லாமல் கிடப்பதைப் பார்த்தது. உடனே அதன் வாலைக் கடித்துத் தின்று விட்டது.

- தமிழில்: எஸ்.ஏ.பி.