எனது வடக்கேமுறி அலிமா நாவலுக்கான தோழர் மேலாண்மை பொன்னுச்சாமியின் செம்மலர் மதிப்புரை வாசித்தேன்.

‘...அலிமா’ நாவலை ஒரு யதார்த்தவாதப் பிரதி என நிறுவிட மே.பொ. தனது முன்னுரையில் முயற்சிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அது அவருடைய பார்வை - சுதந்திரம்.

‘வடக்கேமுறி அலிமா-நாவல் அத்தனை எளிதாக எவராலும் புரிந்து கொள்ள முடியாத பிரதி’ என நான் எந்த இடத்திலும் குறிப்பிட்டிருக்க வில்லை. மேலும், அத்தியாயங்களை மாற்றிக் கலைத்து அடுக்குவது என் எழுத்தனுபவத்தில் புதிய விஷயமுமில்லை. ‘மீன்காரத் தெரு’ முதல் இந்த உத்தியை நான் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். நாவல் வாசகனுக்குத் தொடர்கதை வாசிப்பது போன்ற சலிப்பைத் தந்துவிடக் கூடாதென்னும் எச்சரிக்கை உணர்வே இதன் காரணம். நான் மட்டு மல்ல, நவீன தமிழிலக்கியச் சூழலில் எல்லா நாவ லாசிரியர்களும் இதையே செய்கிறார்கள்.

தோழர் மேலாண்மையின் மதிப்புரையில் மேலும் இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு நான் பதிலளிக்கக் கடமையுள்ளது.

அ) “இஸ்லாமிய படைப்பாளிகளுக்கே ஒரு மிகப்பெரிய அகச்சிக்கல் இருக்கிறது. மறு வாசிப்பு, மறுயோசிப்பு, எதிர்வாசிப்பு என்றெல் லாம் இதிகாச, வரலாற்று இலக்கியங்களை மறுபடைப்புச் செய்து முன்வைக்கிற உரிமை, இஸ்லாமிய படைப்பாளிகளுக்கு இருப்பதில்லை. மதப் பண்பாட்டுப் பழைமைகளைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கிற கடமையையும் செய்ய முடிவ தில்லை.”

தோழர் குறிப்பிடுவது போன்ற அகச்சிக்கல் இருந்திருப்பின் கீரனூர் ஜாகிர் ராஜா எழுத வந்து, அடையாளப்பட்டிருக்கவே முடியாது. இவர் குறிப்பிடுகின்ற மறுவாசிப்பு, மறுயோசிப்பு, எதிர்வாசிப்பு இதைத்தான் கடந்த 16 ஆண்டு களுக்கும் மேலாக என் எழுத்து முன் வைக்கிறது. 50-க்கும் அதிகமான சிறுகதைகள், 5 நாவல்கள், பல விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் என என் படைப்புகள் உரையாடுவதெல்லாம் இஸ்லா மியப் பழமைவாத, அடிப்படை வாதங்களுக்கு எதிராகவே. முன் எப்போதும் இல்லாத அளவு இஸ்லாமியத் தளத்தில் ‘முற்போக்காளர்களின்’ பங்களிப்பு பெருகியுள்ள காலம் இது. தோழர், தூய மதவாதத்ததை முன்னிறுத்தும் ‘மார்க்க எழுத்தாளர் களை’ மட்டுமே அறிந்திருக்கிறார் போலும். நாங்கள் ‘இஸ்லாமிய எழுத்தாளர்கள்’ எனப் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் ‘அ இஸ்லாம் எழுத்தாளர்கள்’ என்றே கட்டம் கட்டப்பட்டும், புறக்கணிப்பு, மிரட்டல், விலக்கம் போன்றவைகளால் எமது சகஜ நிலை பாதிக்கப் பட்டும் இயங்கி வருவதைத் தோழர் அறியாது போனார்.

அன்றைய அரேபியச் சூழலுக்கேற்ப இயற்றப்பட்ட இஸ்லாமியச் சட்டங்களை புனர் நிர்மாணம் செய்யக்கோரும் கலக மனமும், புனித நூலான குரானை மறுவாசிக்கத் தூண்டும் ஆய்வு மனமும், மனிதப்பிறவியாக வாழ்ந்து மறைந்த இறுதித் தூதர் முகம்மது நபிக்கு உருவம் தந்து

அழகு பார்த்த கலைமன வேட்கையும் தோழர் மேலாண்மை இயங்கிவரும் தமிழிலக்கியச் சூழலில் நிகழ்த்தப் பட்டவைதான்!

ஆ) “இந்த நிகழ்கால நிஜம் இந்த நாவலின் உள்ளடக்கத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுதந்திரப் பிரியையான பட்டாம்பூச்சி சிறுமியை இடுகாட்டில் விளையாட விடுவதே ஒரு குறியீடுபோல இருக்கிறது.

பர்தாவுக்குள், மதப்பண்பாட்டு ஒழுக்க வரையறைக்குள்ளும் தன்னை ஒடுக்கிக் கொள்ளாத ஒரு பெண்ணின் வாழ்க்கை எத்தகைய அவலமான சீரழிவை எதிர்கொள்ளும் - என்று நாவல் சொல்லி முடிகிறது”.

ஒரு இஸ்லாமியன் மரணித்தால் அவனை அடக்கம் செய்விக்கின்ற சமாதிக்குள் இறைவனால் அனுப்பப்படும் முன்கர்-நக்கீர் தோன்றி விசாரணை செய்வார்கள்....இது குரான் அறிவிக்கின்ற நியமம். எனது நாவல் நாயகி அலிமா ஒவ்வொரு சமாதி யாய்த் தட்டி எழுப்பி விசாரணை செய்வதன் மூலமாக மானுடப் பிறவியை முன்கர்-நக்கீருக்கு இணையாக மாற்றுவதுடன் புராணீகங்களைப் பகடி செய்யும் வேலையையும் அந்த புனைவு முன்வைக்கிறது.

தோழர் குறிப்பிடும் ‘அகச்சிக்கல்’ இருந் திருக்குமானால் வடக்கேமுறி அலிமாவைச் சிந்திப்பதே பாவமாகி நரக நெருப்புக்குழி எனக்குத் தோண்டப்பட்டதை எண்ணி எண்ணி இம்மையில் நொந்தழியும் ஜென்மமாகியிருப்பேனே! இடு காட்டில் விளையாட விடுவது எதன் குறியீடு என்று தோழர் புரிந்திருக்கிறார்? புரியவில்லை. மத ஆச்சாரங்களைப் பேணாத ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிந்து போகும் என்கிற கருத்தையா எனது நாவல் முன் வைக்கிறது?

என் நூலுக்கு எதிர்காலத்தில் வரப்போகும் விமர்சனங்களின் வழி எல்லா அகச் சிக்கல்களுக்கும் தீர்வு உண்டாகும்.

- கீரனூர் ஜாகிர்ராஜா