ராவணன் திரைப்படம் வெறும் குப்பைதானா?

 

ஜூலை 2010 செம்மலர் இதழில் ஜா. மாதவராஜ் அவர்கள் எழுதி இருந்த “மக்கும் குப்பையா மக்காத குப்பையா” விமர்சனத்தை வாசித்தேன்.

“ராவணன்” திரைப்படத்தை இப்படி அடித்து நொறுக்கி இருக்க வேண்டாமே எனச் சாதாரண ரசிகன் நிலையில் இருந்து சொல்ல விரும்புகிறேன்.

ராவணன் திரைப்படத்தை விமர்சிக்கையில் தினரத்தினங்கள் என்னும் மலையாளத் திரைப் படத்தின் கதைக் கருவை வாசகர் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இது நல்லதுதான். இத் திரைப்படத்தில் மம்முட்டி ஒரு இடதுசாரியாக சித்தரிக்கப்படுவதை சொல்லியுள்ளார். இதுவும் வரவேற்கத்தக்கதே!. ஆயினும் , தமிழ்நாடு கேரளா அல்ல.

ராவணன் திரைப்படத்தின் மூலம் மணி ரத்னம் இடதுசாரி கருத்துக்களை பிரதிபலிக்க வில்லையே என்ற ஏக்கமும்  கோபமும் கொந் தளிப்பும் நியாயமானதே. “தின ரத்தினங்கள்” மலையாளத் திரைப்படத்தைப்போல் கதை அமைத்து காட்சிப்படுத்தவில்லையே என்ற  ஆவேசம் மட்டும் நமக்கு இருந்தால் போதுமா? அதற்கான சூழல் தமிழகத்தில் வேர்விட இன்னும் சில காலம் ஆகும் என்பதை மாதவராஜ் அறியாத வரா என்ன?

இப்போதும் சில புதிய இயக்குநர்கள் கதை சொல்வதில் தங்கள் திறமையை திரைப்படங் களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இவற்றை இன்றைய சூழலுக்கேற்ற முறையில் திறமையாக கையாளவும் செய்கின்றனர். இப்புதிய நிலைமை களைக் கூர்ந்து கவனித்து அவர்களோடு இணக்க மான நேசத்தை உருவாக்கி வளர்த்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு உண்டு.

ஒருவரைப் பாராட்ட முனைவதுகூட ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவே எனக் கருதலாம். ஒரு நேசத்தை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் அளவான விமர்சனம் இருந்தால் போது மானது. அதை விடுத்து மட்டையடியாக மக்கும் குப்பையா மக்காத குப்பையா என நாம் “குத்தாட்டம்” போட வேண்டியதில்லை.

ராமாயண கதை காலந்தோறும் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு இதிகாசம். மக்களிடம் செல்வாக்கு ஒரு புறமும், அதற்கு எதிரான கருத்துக் கள் மறுபுறமும் செல்வாக்கு பெற்றுள்ளன.

குறிப்பாகத் தமிழகத்தில் திராவிட இயக்கம் ராமாயணத்திற்கு எதிராக கீமாயணம் படைத்தது. தந்தை பெரியாரின் பங்கு இதில் முக்கியமானது. ஆரியத்துக்கு எதிரான கருத்துருவுக்குத் தக்கபடி ராவணன் பிம்பம் தமிழக மக்கள் மத்தியில் பதியப் பட்ட வரலாறு இங்கு உள்ளது. தோழர் ஜீவா முன்னிலைப் படுத்தியக் கம்பனை, அண்ணா ‘கம்பரசம்’ எனும் நூலால் ஆரியக் காவியம் என்றும், அவற்றில் காமரசமே மிகுந்திருப்பதாக எள்ளி நகையாடிய ஒரு வரலாறு தமிழகத்தில் உண்டு.இந்தப் பின்னணியோடு இத்திரைப் படத் தின் கதைக் கருவை அணுக வேண்டியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்து கொண்ட கதைக்களம், தமிழக சூழலுக்கேற்ப அமைந் துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவல்துறையின் மனிதத் தன்மையற்ற மனித உரிமை மீறல்கள் - அரசியல் சட்டப்படியான உயிர் வாழும் உரிமைகளைப் பறிக்கும் நீசச் செயல் கள் இத்திரைப்படத்தில் அளவோடு உணர்த்தப் படுகிறது. அதோடு ராமாயணக் கதையில் வரும் வேறு சில முக்கியப் பாத்திரங்களும் பொருத்த மாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

இவற்றைத் தரம் பிரித்து விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டியது விமர்சகனின் கடமை. அதை விட்டுவிலகுவது விமர்சனமாகாது. நாம் ஒன்றைக் குப்பை என்று சாடுவதாலேயே அது குப்பையாகிவிடாது. அது குப்பைதான் என்று சொல்லுவதற்குரிய சரியான விமர்சனத்தை எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்வதில் தவறேது மில்லை.

சுருக்கமாக இத்திரைப்படத்தின் பாத்திரப் படைப்புகள் குறித்து சொல்ல வேண்டுமாயின், காவல்துறை அதிகாரி ராமனாகவும், வீரையா ராவணனாகவும், காவல்துறை அதிகாரியின் மனைவி சீதையாகவும் காட்டப்படுகின்றனர். ராமாயணக் கதையில் வரும் வேறு சில பாத்திரங் களும் திரைக்கதையில் வலம் வருகின்றனர்.

மனிரத்னம் அமைத்துக் கொண்ட கதைக் களத்திற்கு ஏற்ப பாத்திரங்கள் கையாளப் பட்டுள்ள ன. இத்திரைப்படத்தில் கதாநாயகன் வில்லனாகவும், வில்லன் கதாநாயகனாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதாவது ராமன் (காவல் துறை அதிகாரி) வில்ல னாகவும், ராவணன் (வீரையா) கதாநாயகனாகவும் மணிரத்னம் மறு வாசிப்பு செய்துள்ளார்.

இப்படி பல பிரச்சனைகள் திரைப்படக் காட்சிகள் மூலம் சொல்லப்படுவதை செம்மலர் விமர்சகர் புறக்கணித்தது ஏன் என்று வியப்பு மேலி டுகிறது. எது எப்படியாயினும் ஒரு விமர்சனம் எப்படி அமைய வேண்டுமோ அப்படி ராவணன் திரைப்பட விமர்சனம் அமையாதது வருத்தத்தை அளிக்கிறது.

-என். மருத்துவமணி, வடசென்னை.

ராவணன் படவிமர்சனம் -அதுவும் வேறு இதழில் வந்தது. ஏன் சுயமாக எழுதவில்லை எனத் தெரியவில்லை. ஆசிரியர் குழுவினர் பார்த்து எழுதி யிருந்தால் மோசமான அந்தவிமர்சனம் வந்திருக் காது. ராவணன் என்று படத்திற்கு பெயர் வைத்ததே துணிச்சல்தான்!

ராமாயண காவியத்தில் ராவணன் வில்லன், ராமன் கதாநாயகன். இதில் ராவணன் கதாநாயகன் ராமன் வில்லன். இவ்வாறு ஒரு படத்தை தைரிய மாக எடுக்க மணிரத்னத்தைத் தவிர யாரால் முடியும்.

மேலும், ராமாயண காவியத்தில் கம்பன் செய்த தவறை இதில் மணிரத்னம் சரி செய்துள்ளார். இதை பாராட்ட வேண்டாமா? ராமாயண கதா பாத்திரங்களை எதிர் மறையாக எடுத்ததால்தான் இக்கதை மக்கள் மனதில் நிற்கவில்லை என நினைக் கிறேன். ஏனெனில் காலம் காலமாக ராமாயண கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்துள்ளது. அதற்கு எதிர்மறையாக வரும்போது அது சரியாக இருந்தா லும் மனதில் பதிவதில் சிரமம் இருக்கிறது.

- சி.ஏ.ராஜா, மதுரை.

எதிர்வினைகளுக்கு நன்றி! அப்படத் தில் ராமனை விமர்சித்திருப்பதும், ராவணன் மீது சீதை ஈடுபாடு கொள்வ தாகக் காட்டியிருப்பதும் ராமாயணத்தை மணிரத்னம் இன்னொரு விதமாக வாசிக்க முயன்றிருப்பதை காட்டுகிறது. அதை வரவேற்கலாம்.

- ஆசிரியர் குழு