பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்க காலமான 35 ஆண்டுகளில் (1796 - 1830) இலங்கையின் முதலாளித்துவ வகுப்பு பிற்கால எழுச்சிக்குத் தேவையான ஆரம்ப மூலதனத்தைத் தேடிக் கொண்டது. காலனித்துவ வாதிகள் இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, வங்கிகள் ஆகிய முக்கிய துறைகளைத் தமது பிடியில் வைத்திருந்தனர். இவை ஐரோப்பிய முதலாளிகளின் ஏகபோக உரிமையாக இருந்தன. காலனிய ஆட்சியாளர்கள் பின்வரும் சில துறைகளை உள்ளூரவர்கள் ஈடுபட்டு லாபம் உழைக்கக்கூடிய வகையில் திறந்து விட்டனர்: 1. இந்தியாவுடனான கடல் வர்த்தகம், 2. உள்ளூர் வர்த்தகம், 3. பொருட்கள், சேவைகள் என்பனவற்றை வழங்குவதற்கும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்குமான ஒப்பந்த வேலை, 4. சாராயக்குத்தகை: பலவித தீர்வைகளையும் வரிகளையும் விடுவதற்கான குத்தகை மேற்குறித்த நான்கு துறைகளுள் உள்ளூர் வர்த்தகம் தென்னிந்திய வர்த்தகர்களின் (நாட்டுக் கோட்டை செட்டியார்கள்) கணிசமான பங்களிப்பு இருந்தது.

இந்தியாவுடனான கடல் வர்த்தகத்திலும் உள்ளூர் முதலாளிகள் ஈடுபட்டனரெனினும் அது அவர்களின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. ஏனைய இரு துறைகளும் உள்ளூர் முதலாளிகளின் ஏகபோகமாகவே இருந்தன. 1830க்கு முற்பட்ட காலத்தின் வர்த்தக முயற்சிகளில் சாராய வர்த்தகம் பிரதான இடத்தைப் பெற்றது.

“அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பு”

இலங்கையின் பொருளாதார வரலாறு பற்றி இதற்கு முன்னர் எழுதியோர் பலர் சாராய வர்த்தகம் பற்றி எடுத்துக் கூறினரேனினும் இலங்கை முதலாளித்துவத்தின் எழுச்சிக்குச் சாராய வர்த்தகம்தான் பிரதான மூலமாக இருந்தது என்ற உண்மையை ஜயவர்த்தன அவர்களே முதன்முதலாக ஆதாரப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். குமாரி ஜயவர்த்தன அவர்களின் நூல் பற்றிக் குமார் ரூபசிங்க என்னும் ஆய்வாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

குமாரி ஜயவர்த்தன தமது “அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை இலங்கை முதலாளித்துவத்தின் தோற்றம்” என்னும் நூலில் (2001) 19ம் நூற்றாண்டின் முன்னுரைப் பகுதியில் உள்ளூரில் ஆரம்ப மூலதனத் தேட்டம் சாராய வர்த்தகத்தின் மூலம் கிடைத்தது என்ற அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். அவர் உள்ளூர் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான இயந்திரம்  ஆக சாராய வர்த்தகம் தான் விளங்கியது என்று அடையாளம் காண்கிறார்'' 'Development and conflict in Srilanka என்னும் நூலின் பக் 343). “அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பு” என்று குமார் ரூபசிங்க வர்ணித்திருப்பது மிகைக் கூற்றன்று. தீவிர பௌத்த தேசியவாதத்தை முன்னெடுத்த இலங்கை முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மது ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவை வழங்கியது. கருத்தியல் மட்டத்தில் தனது மூலத்தை மறைத்துக் கொள்ளும் தேவை ஒன்றும் அக் காலத்தில் இலங்கை முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது. இப் பின்னணியிலேயே குமாரி ஜயவர்த்தனவின் கண்டுபிடிப்பு அதிர்ச்சி தருவதாக உள்ளதெனலாம்.

குடும்பக் காட்டல்கள்

1830க்கு முற்பட்ட காலத்தை ஆரம்ப மூலதனத் தேட்டம் நடைபெற்ற காலமாக ஜயவர்த்தன அடையாளம் காண்கிறார். அக் காலத்தில் சாராய வர்த்தகத்தில் சிறுவர்த்தகம், ஊகவியாபாரம் என்பற்றில் ஈடுபட்டிருந் தவர்களும் சுதேசிகளான அரசாங்க உத்தியோ கத்தர்களும் ஈடுபட்டனர். 1832இல் அரசாங்க உத்தியோகத்தர்கள் சாராயக் குத்தகை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தடைவிதித்தது. 1830 - 1870க்கு இடைப்பட்ட காலத்தில் சாராய வர்த்தகம் “ஒலிகோ பொலி” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிலர் உரிமை வர்த்தகம் ஆகியது. குறிப்பாக 1850க்கு பிற்பட்ட காலத்தில் மிகப்பெரிய சாராய வர்த்தகர்கள் என்றுகூறக்கூடிய குடும்பங்கள் சில தோற்றம் பெற்றன. சாராயக் குத்தகை வியாபாரத்தில் மொறட்டுவ, பாணந்துறை என்ற இரு இடங்களைச் சேர்ந்த “கராவ” சாதியினர் மேலாதிக்கம் பெற்றனர். ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் சாராய வியாபாரத்தில் தொடர்ந்து நிலைத்தனரேனினும் சாராய வர்த்தகம் “கராவ” சாதியின் ஏகபோகமாகவும் சில குடும்பக் “கார்ட்டல் களின்” கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவும் மாறியது. வர்த்தகமும் சாதியும் குடும்ப உறவு முறையும் பின்னிப் பிணைந்திருந்தன. ஏலத்தின் போது குத்தகைக்காரர்கள் ஒன்றிணைந்து விலையைத் தாழ்த்தி விடுதல், கழுத்தறுப்பு போட்டி மூலம் பிறரை வியாபாரத்தில் இருந்து ஒழித்துக் கட்டுதல் என்ற சூழ்ச்சி முறைகளும் தந்திரங்களும் சாராய வர்த்தகத்தில் சர்வ சாதாரணமாயிற்று. சாராயம் வடிப்போர், மொத்த விற்பனையாளர்கள், குத்தகைக் காரர்கள், தவறணை நடத்துவோர், பாதுகாப்புக் கடமை செய்வோர், தோட்டங்களிலும் கிராமங்களிலும் கள்ளச் சாராயம் விற்போர் என்று ஒரு பெருங் கூட்டம் சாராய வர்த்தகத்தைச் சார்ந்து தொழிற்பட்டது.

சாதியும் வர்க்கமும்

இலங்கையில் முதலாளித்துவ வளர்ச்சி சிங்கள மக்களின் சாதிக் கட்டமைப்பிலும் சில அடிப்படை மாற்றங்களை உருவாக்கியது. காலனித்துவ ஆட்சியில் முதலியார்கள் என்னும் பதவியை வகித்த கொய்கம சாதி உயர்குடும்பங்கள் காணி உடமையாளர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் இருந்தனர். “முதல் தர கொய்கம” என்று பெருமை பேசிய இக் குடும்பங்கள் சமூகத்தின் “சம்பொடி” ஆக இருந்தனர். இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சி “சலாகம”, “கராவ”, “துரவ” என்ற மூன்று சாதிகளில் இருந்தும் முன்னர் அநாமதேயங்களாக (“நோபொடி”)இருந்தோரை அறியப்பட்டோராக (சம்பொடியாக) மாற்றியது. குறிப்பாக மொறட்டுவ, பாணந்துறை ஆகிய இடங்களைச் சேர்ந்த “கராவ” சாதியில் இருந்து முதலாளித்துவக் குடும்பங்கள் பல முன்னிலைக்கு வந்தன. நவீன கால ஆய்வாளர் சிலர் பெருளாதார நடவடிக்கையில் “கராவ சாதியின் மேலாதிக்கம்” என்ற கருத்தை முன்வைத்தனர். குமாரி ஜயவர்த்தன இக் கருத்தை மறுத்துரைப்பதோடு “பல்வேறு சாதிகளைச் சேர்ந்தோரும், பல்வேறு இனக்குழுமத்தினரும் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டனர். ஆகவே கராவவின் எழுச்சி அல்ல முதலாளித்துவ வகுப்பின் எழுச்சி என்னும் விடயமே அரங்கேறிக் கொண்டிருந்தது'' என்று கூறுகிறார். முதலாளித்துவ வகுப்பின் எழுச்சிக்கு பிரதான மூலமாக இருந்த சாராய வர்த்தகம் “கராவ” சாதியினரின் மேலாதிக்கம் உள்ள துறையாக இருந்ததற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறார்.

‘‘தென்மேற்குக் கரையோரமானது தென்னைப் பயிர் செய்கைக்குரிய இடமாகும். கராவ சாதியினர் இங்கு செறிந்து வாழ்ந்தனர். இதனால் சாராயம் வடித்தல், அதன் விற்பனை, குத்தகை வியாபாரம் என்பனவற்றில் அப்பகுதியில் வாழ்ந்தோர் ஈடுபட்டதில் வியப்பில்லை. கொய்கம சாதியின் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு குத்தகை வியாபாரம் பகுதிநேரத் தொழில். ஆனால் கராவ சாதி குத்தகைக்காரர்கள் முழுநேர முயற்சியாளர் களாக இருந்தனர். 1832க்குப் பின்னர் அரசாங்கம் அரச உத்தியோகத்தர்கள் குத்தகை வியாபாரத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்தது. அப்போது அரச உத்தியோகத்தில் இருந்தோர் வேறு துறைகளுக்கு தமது முதலீடுகளை மாற்றவோ வியாபாரத்தில் நீடிக்கவோ வாய்ப்பு இருக்கவில்லை. முழு நேர வியாபாரிகளான கராவ சாதிக் குத்தகைக்காரர்கள் சாராய வர்த்தகத்தில் முன்னேறியதன் பின்னணி இதுவே. (பக் 41 42)

இலங்கை முதலாளித்துவத்தின் இயல்பு

சாராய வர்த்தகத்தில் தேடிக் கொண்ட மூலதனத்தை உள்ளூர் முதலாளிகள் பின்வரும் மூன்று துறைகளில் முதலிட்டனர்: 1. பெருந்தோட்டங்கள், 2. காரியச் சுரங்கத்தொழில், 3. காணிகள், நகரச் சொத்துக்கள், கட்டிடங்கள்

பெருந்தோட்டங்களில் தேயிலைத் தோட்டங்கள் ஐரோப்பிய முதலாளிகளின் ஏகபோகமாகவே இருந்தன. ரப்பர் தென்னந் தோட்டங்களில் உள்ளூர் முதலாளிகள் முதலிட்டனர். காரியக் சுரங்கத் தொழிலும் ஐரோப்பியர் நுழையாத துறையாகவும் உள்ளூரவர்களின் முதலீடுகளைக் கொண்டதாகவும் இருந்தது. கொழும்பு நகரத்தில் காணிகள் கட்டிடங்களில் முதலிடுதலிலும் மாளிகைகளை நகரத்திலும் தோட்டங்களிலும் அமைப்பதிலும் முதலாளிகள் ஊக்கம் காட்டினர். சுதேச முதலாளிகள் போக்குவரத்து, மரவேலை, உள்ளூர் வர்த்தகம் போன்ற பல துறைகளில் ஈடுபட்ட போதும் மேற்குறித்த மூன்று துறைகளுமே பிரதான முதலீட்டுத் துறைகளாக இருந்தன. ஐரோப்பிய முதலீடுகளின் பெரும் பங்கு பெருந்தோட்டங்களிற்குச் சென்றது. குறிப்பாகத் தேயிலைத் தோட்டங்களில் ஐரோப்பிய முதலீடு அதிகமாக இருந்தது.

ஏற்றுமதி வர்த்தகம், இறக்குமதி வர்த்தகம், வங்கித் தொழில் என்பனவும் ஐரோப்பியரிடமே இருந்தன. இறக்குமதித் துறையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது யாதெனில் இத்துறையினை காலனித்துவ அரசு ‘பம்பாய் வர்த்தகர்களுக்கு’ விட்டுக் கொடுத்தது தான். ‘போரா’, ‘மெமன்’, ‘பார்சி’, ‘மார்வாரி’ வர்த்தகர்கள் ஐரோப்பியர் களின் தனியுரிமையாக இருந்துவந்த இறக்குமதி வர்த்தகத்தின் சில துறைகளில் புகுந்தனர்.

கொழும்பு நகரின் "பெற்ளூ" எனப்படும் புறக் கோட்டைப் பகுதி நாட்டுக் கோட்டை செட்டியார்கள் முதலிய தென்னிந்திய வர்த்தகர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. காலனித்துவ கால இலங்கையின் முதலாளித்துவ வளர்ச்சியில் 1) வெள்ளைக்கார ஐரோப்பிய முதலாளிகள் 2) இந்திய வர்த்தகர்கள் 3) சுதேசியர்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களும் முயற்சியாளர்களும் என்ற மூன்று பிரிவினால் பெற்றுக் கொண்ட பங்கையும் வகிபாகத்தையும் நூலாசிரியர் விரிவாக விளக்கிச் செல்கிறார். இவ்வாறு விபரிக்கும் பொழுது இலங்கையில் ஏற்பட்ட முதலாளித்துவ மாற்றத்தின் அடிப்படை இயல்புகள் சிலவற்றை அவர் எடுத்துக் கூறுகிறார்.

1. இலங்கையின் முதலாளித்துவம் கைத்தொழில் முதலாளித்துவம் அல்ல. அது ஒருவகையான கைத்தொழில் சாரா முதலாளித்துவம் என்கிறார்.

2. ஐரோப்பியர்களாயினும் சரி, சுதேசிகளாயினும் சரி, முதலீடு செய்த துறைகளில் முதலாளித்துவ முறையிலான உற்பத்தி நடைபெறவில்லை. இயந்திரங்களில் முதலீடு செய்யப்படவில்லை. தொழில்நுட்பம் முன்னேறவில்லை. பொருட்களை ஏற்றுமதிக்காக தயாரிக்கும் முதல் விளைவுப் பொருள் உற்பத்தி தான் நடைபெற்றது. இங்கு ஈடுபடுத்தப்பட்டது வர்த்தக முலதனம் தான். இலங்கையின் முதலாளித்துவம் வர்த்தக முதலாளித்துவமாகவே இருந்தது.

3. மேற்குறித்த இரு இயல்புகள் காரணமாக

இலங்கை முதலாளித்துவம் ஆரம்பம் தொட்டே முதலாளித்துவ புரட்சிக்கோ சமூகமாற்றங்களுக்கோ வழி வகுப்பதாக இல்லாமல் இலங்கையின் பொருளாதாரத்தின் தேக்கநிலைக்கும் தடைப்பட்ட வளர்ச்சிக்கும் காரணமாயிற்று.

முதலாளித்துவத்திற்கு முற்பட்ட சமூக உருவாக்கங்கள் இலங்கையின் முதலாளித்துவம் வர்த்தக முதலாளித்துவமாகவே தோற்றம் பெற்றது. இன்று வரை அது வர்த்தக முதலாளித்துவத்தின் இயல்புகளைக் கொண்டதாகவே தொடர்கிறது. இந்த உண்மையை வரலாற்று ஆதாரங்களுடன் நூலாசிரியர் நிறுவுகிளூர். இந்த உண்மையை உணரும் போதுதான் ஏன் இலங்கையில் ஒரு முதலாளித்துவ புரட்சி முழுமையடையவில்லை? முதலாளித்துவத்திற்கு முற்பட்ட சமூக உருவாக்கங்கங்கள் ஏன் நிலைத்து நிற்கின்றன என்ற கேள்விக்கான விடை கிடைக்கிறது. இலங்கையின் முதலாளித்துவம் சாராயத்தினால் குபேர செல்வத்தை குவித்திருக்கலாம்: இந்தத் தேட்டம் விளைதிறன் குறைந்த நிலச்சொத்துகளிலும், ஆடம்பர மாளிகைகளிலும், பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தக முயற்சிகளிலும் முதலிடப்பட்டதே அன்றி கைத்தொழில் மூலதனமாக மாற்றம் பெறவில்லை என்பதை நூலாசிரியர் தெளிவு படுத்துகிளூர். எஸ். பி. டி. சில்வா, நியூடன் குணசிங்க ஆகியோரும் தமது ஆய்வுகளில் இந்த விடயத்தை எடுத்துக்காட்டியிருக்கிளூர்கள். நியூடன் குணசிங்க முன்னைய சமூக உருவாக்கங்கள் தொடர்வதை எச்சங்கள் அல்ல மீள உயிர்பித்தல்களே என்றார். மூலதனம் பழைய உறவுகளோடு முரண்பாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தபோதும் இம்முரண்பாடுகள் பகை முரண்பாடுகள் அல்ல. பழைய உறவுகளை அழிப்பதற்குப்பதில் அவ்வுறவுகளைப் பலப்படுத்துவதற்கே புதிய அமைப்பு உதவுகிறது. சமூக, அரசியல் தளத்திலும், கருத்தியல் மட்டத்திலும் இலங்கை முதலாளித்துவம் பிற்போக்கு தன்மை கொண்டதாகவே இருந்தது.

சாதிமட்டுமன்றி ஏனைய அடையாளங்களும் முதலாளித்துவ வகுப்பினருக்கு முக்கியத்துவம் உடைய விடயங்களாயின. அவ்வகுப்பின் ஆண்களிற்கும் பெண்களிற்கும் நான் யார்? என்ற கேள்வி முக்கியமாயிற்று.

என்னிடம் பணம் உண்டு, ஆனால் நான் தாழ்ந்த சாதி

என்னுடைய சமயம் மூடநம்பிக்கை என்ற பழிப்புக்குரியது

என்னுடைய மொழிக்கு கலாசாரத்திற்கு மதிப்பு இல்லை, அவை இகழ்ச்சிக்குரியதாகின்றன.

எனது பெண்பிள்ளைகள் எழுத வாசிக்கத் தெரியாத அறிவிலிகள்

முதலாளித்துவத்தை வாட்டிய பிரச்சினைகள் இவை (முன்னுரை பக் ஜ்ஸ்) என்று நூலாசிரியர் கூறியிருப்பது இலங்கையின் முதலாளித்துவம் சாதி, சமய, இன அடிப்படையிலான குறுகிய சிந்தனைகளின் பிடியில் ஏன் அகப்பட்டது என்பதை விளக்குவதாக உள்ளது.

Nobodies to somebodies: The Rise of Colonial Boureoisie in Sri Lanka என்னும் ஆங்கில நூலின் முதல் இரு பாகங்களின் மொழிபெயர்ப்பாக இத் தமிழ் நூல் விளங்குகிறது. மூல நூல் ஐந்து பாகங்களையும் 20 அத்தியாயங்களையும் கொண்டது. இம் மொழிபெயர்பு நூல் முதல் எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது. சரளமான மொழிநடையில் இம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. க.சண்முகலிங்கம் இதனை மொழிபெயர்ந்துள்ளார்.

முதல் இரு பாகங்களும் பொருளியல் வரலாறாக அமைந்துள்ளன. மிகுதி மூன்று பாகங்களும் முதலாளித்துவத்தின் தோற்றத்தின் விளைவாக இலங்கையில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு அரசியல் மாற்றங்களைக் கூறுவன. மீதி மூன்று பாகங்களையும் குமரன் புத்தக இல்லம் தமிழில் அடுத்து வெளியிடும் என நம்புகிறோம்.

நூலாசிரியர் குமாரிஜயவர்த்தன இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பட்டதாரி. இவர் பின்னர் லண்டன் பொருளியல் பள்ளியில் கற்று கலாநிதிப்பட்டத்தைப் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் இணைப் பேராசிரியராக இருந்தவர். பல்கலைக்கழக ஆசிரியப் பணியில் இருந்து இடையிலே ஓய்வு பெற்றுக் கொண்டு முழுநேர ஆய்வாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை - இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்

குமாரி ஜயவர்த்தன

தமிழில் :க.சண்முகநாதன்

வெளியீடு : குமரன் புத்தக இல்லம்

கொழும்பு _ 10

சென்னை -_ 26

ரூ. 150, பக்: 334

Pin It