நம்மளுது அவங்களுக்கு அவங்களுது அவங்களுக்கு

அதுதான் உலகவங்கி தம்பிடோய்!

கறிசோறு அவங்களுக்கு காலிச்சட்டி நம்மளுக்கு

குறிசொல்லும் அமெரிக்க சாமிடோய்! (நம்மளுது)

 

தனியா நம்மையெல்லாம் ஒதுக்கி ஓரங்கட்ட

தந்தானே பாரதத்த சூதுசெய்யும் சோரன்கிட்ட.

அடதம்பி நீ பாரு! அட தம்பி நீ பாரு

டில்லியில வாஷிங்டனு ஆடுகிற ஜல்லிக்கட்ட!

டிமிக்கி குடுத்துப்புட்டான் தேசமே திருமொட்ட! (நம்மளுது)

 

அமெரிக்க வயித்துவலி எங்கேடா டேப்லட்டு?

அந்தவலிக் கின்னொருபேர் பாரத பட்ஜெட்டு

அடநம்ம பட்ஜெட்ட அடநம்ம பட்ஜெட்ட

எழுதுவான் அமெரிக்கா கால்மேல கால் போட்டு

இந்தியப் பிரதமரு வைப்பாரு கைநாட்டு! (நம்மளுது)

 

ஏத்துவான் வெலவாசி சிரிப்பான் சுகவாசி

எங்குபோய் முட்டிக்கொள்ள பஞ்சை பரதேசி?

அடதம்பி பாத்தாயா? அடதம்பி பாத்தாயா?

மானியத்தை வெட்டச் சொல்லும் உலகவங்கி எனும்வேசி!

மண்ணெண்ணை விலை எகிறும் காரணத்தை நீயோசி! (நம்மளுது)

 

ஐ.எம்.எப்பு கொடுத்த கடன் வட்டிகுட்டி போட்டுவரும்!

அதுக்காக வரிப்போட்டு அரசாங்கம் ஆணையிடும்!

அடதம்பி அரசாங்கம் அடதம்பி அரசாங்கம்

கந்துக் கடைக் காரனது காலடியில் மண்டியிடும்!

மலைமுழுங்கும் கேடியைப் போய் மகராசன் என்றுதொழும்! (நம்மளுது)

 

உலக வர்த்தகமாம் பேரு வெகுஜோரு!

உள்ளூரு வர்த்தகத்தின் உயிர்வாங்கும் எமன்பாரு!

அடதம்பி கேட்டாயா? அடதம்பி கேட்டாயா?

வயித்துக்கு சோறுஇல்லே வாங்கச் சொல்லு றான்காரு!

வாங்கிஅதில் ஏறச்சொல்லி கழுதையிடம் கூறு! (நம்மளுது)

 

கேட்டல்

மனிதன் சுகம்அடையும் வரம்கேட்டேன் - அவன்
மரணத்தை வெல்லுகிற திறம் கேட்டேன்! (மனிதன்)

உள்ளத்தில் நிஜம் கேட்டேன்!
ஓங்கிய புஜம் கேட்டேன்!
நெஞ்சத்தில் வெள்ளையாய் நிறம் கேட்டேன்!
நேர்மைக்கு கைகூப்பும் கரம் கேட்டேன்!
மெய்போல் உடை அணிந்து
பொய்வரும் பாதையிலே
ஓங்கி மிதித்து அதை ஒழிக்கின்ற உரம் கேட்டேன்!
உண்மைக்கு மாலையிட பூமணக்கும் சரம் கேட்டேன்! (மனிதன்)

வாழ்வினில் வளம் கேட்டேன்!
வறியவன் நலம் கேட்டேன்!
தாழ்வினில் துவளாத தைரியம் கேட்டேன்!
வீழ்கையில் நிமிர்ந்து நிற்கும் வீரியம் கேட்டேன்!
நட்சத்தி ரத்தையெல்லாம்
நாற்றாய் நடவு செய்து
அறுவடை செய்யுமொரு அதிசயத்தை நான் கேட்டேன்!
ஆகாய விவசாயம் செய்கின்ற ஆள் கேட்டேன்! (மனிதன்)

மனதில் ஒளிகேட்டேன்!
மயக்கமிலா மொழிகேட்டேன்!
விண்ணை ஊடுருவும் விழிகேட்டேன்!
மண்ணை ஊடுருவும் மழைகேட்டேன்!
பாட்டால் உலகத்தை
பாலித்த பாரதிபோல்
கேட்டால் கவிபொழியும் கிளர்ச்சியினை தினம்கேட்டேன்!
ஏட்டால் எழுதமுடி யாதகவி வளம்கேட்டேன்! (மனிதன்)