காவிரிப் பூம்பட்டினத்தின் நகரமைப்புக் குறித்துச் சிலப்பதிகாரம் விரிவாகக் கூறுகிறது. அந்நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பகுதிகளாக அமைந்திருந்தது. மருவூர்ப் பாக்கம் என்பது ஊரின் புறநகர்ப்பகுதி ஆகும். அங்கு வெளிநாட்டு வணிகர்களின் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. உள்நாட்டுத் தொழிலாளர்களான கம்மியர், கொல்லர், தச்சர், தட்டார் முதலியவர் களும் வணிகர்களான உமணர் (உப்பு வணிகர்), ஓசுநர் (மீன் விற்போர்), காழியர் (பிட்டு வணிகர்), கூவியர் (அப்பம் விற்போர்), பாசவர் (வெற்றிலை வணிகர்), வாசவர் (வாசனைப் பொருள் விற் போர்) முதலானவர்களும் வாழ்ந்த குடியிருப்புக் களும் அமைந்திருந்தன.

பட்டினப்பாக்கம் என்பது அரசனின் அரண் மனை அமைந்திருந்த பகுதி ஆகும். அரண்மனை பாக்கத்தின் நடுநாயகமாக தேரோடும் வீதிகள் சூழ அமைந்திருந்தது. அவ்வீதிகளில் அமைச்சர், புரோ கிதர், படைத்தலைவர் முதலான அரச சுற்றத்தார் மற்றும் அதிகார வர்க்கத்தாரின் வளமனைகள் அமைந்திருந்தன. அவற்றின் அருகில் அரண் மனைப் பணியாளர்களான சூதர், மாகதர், வை தாளிகர் மற்றும் ஏவற் சிலதியர், பூவிலை மடந்தை யர் முதலானவர்களின் குடியிருப்புக்கள் அமைந் திருந்தன. இவர்களில், ஏவற்சிலதியர் என்போர் அரண்மனைப் பணிப்பெண்கள் ஆவர். பூவிலை மடந்தையர் என்போர் அரசர் மற்றும் அதிகார வர்க்கத்து ஆடவரின் ஆசை நாயகியர் ஆவர்.

பூவிலை மடந்தையர் என்னும் சொல் பூக்களை மாலையாகத் தொடுத்து விலைக்கு விற்கும் பெண் களைக் குறிப்பதாகாது. அவ்வாறு பூவாணிகம் செய்த மகளிர் மருவூர்ப் பாக்கத்தில் வாசவர் என் பார் வாழும் பகுதியில் வாழ்ந்தனர். அரண் மனைக்கு அருகில் பட்டினப்பாக்கத்தில் அவர் களின் குடியிருப்புக்கள் அமைக்கப்படவில்லை. அரண்மனை மற்றும் அதிகார வர்க்கத்தாரின் வள மனைகளுக்கு அருகில் வீடுகள் அமைத்துக் குடி யிருந்த பூவிலை மடந்தையர் என்போர் பூ வாணி கம் செய்வோரின் வேறாவர்.

அரசர் மற்றும் அதிகார வர்க்கத்தாரின் ஆசை நாயகியராக இருந்த பூவிலை மடந்தையர், என்றும் அவர்களின் பராமரிப்பில் இருந்திடவில்லை. முதுமை காரணமாக அம்மகளிர் ஆண்டைகளால் கைவிடப்பட்டனர். அந்நிலையில் அவர்கள் பரத் தையராக-விலைமகளிராக -ஆயினர். இம்மகளிர் “தாரும்  கண்ணியுமான” மாலைகளைத் தம் ஏவல் பெண்களிடம் கொடுத்து அவற்றுக்குரிய விலையைக் குறிப்பிட்டு “நகர நம்பியர் திரிதருமறுகில்” விற்று வருமாறு கூறி அனுப்பி வைப்பர்.

ஏவற் பெண்கள் கொண்டு வரும் மாலைகளை அவர் கூறும் விலை கொடுத்துச் செல்வக் குடியின ரான வணிகர் மற்றும் ஆண்டைகள் வாங்கி, அவற்றை விற்கக் கொடுத்த கணிகை யரின் இல்லத்தை அடைந்து அன்று இரவு அவளுடன் தங்கிச் செல்வர். இவ்வாறு, பரத்தையரான அம்மடந்தையர் தம் அடையாளமாகப் பூமாலைகளைக் கொடுத்து விற்று வரச் செய்தமையால் “பூவிலை மடந்தையர்” எனப்பட்டனர். மாதவியும் அவள் தாயும் கணிகையுமான சித்ராபதியும் பூவிலை மடந்தையரே ஆவர்.

ஆனால் மாதவி பிறந்த மரபு குறித்துக் கூறும் இளங்கோவடிகள் “அவள் இந்திர லோகத்துக் கணிகையான ஊர்வசியின் மரபில் பிறந்தவள்” என்று கூறுகிறார். அது குறித்த கதை இது:

“தமிழ் முனிவரான அகத்தியர் இந்திரனைக் காண பொதிய மலையில் இருந்து இந்திரலோகம் சென்றார். தன்னைக் காணவந்த அகத்தியரைப் பெருமைப்படுத்தக் கருதிய இந்திரன் தன் ஆசை நாயகியான ஊர்வசி என்ற கணிகையின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான். இந்திரனது சபையில் ஊர்வசியின் நடனம் சிறப் பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியைக் காண முனிவர்கள் பலர் வந்திருந்தனர்; இந்திரன் மகனான சயந்தனும் வந்திருந்தான்.

கவர்ச்சிகரமாக நடனமாடிய ஊர்வசியின் அழகில் மனத்தைப் பறிகொடுத்த சயந்தன், அவளைக் காமக்குறிப்புடன் நோக்கினான். சயந்தனின் காமப்பார்வை யின் வசப்பட்ட ஊர்வசியின் மனம் தடுமாற்றம் அடைந்தது. அதனால் தாளலயம் தவறியது; வீணை மங்கலம் இழந்தது. அதனால் சினமுற்ற அகத்தியர் அவர்கள் இருவரையும் மண்ணுலகில் பிறக்குமாறு சபித்தார். அகத்தியர் இட்ட சாபத்தால் ஊர்வசி மண்ணுலகில் புகார் நகரில் வந்து பிறந்தாள். அவளது மரபில் பிறந்தவள் தான் மாதவி” என்று இளங்கோவடிகள் கூறினார்.

புகார் நகரத்தை ஆண்ட சோழ மன்னர்களுக்கும் இந்திரனுக்கும் இருந்த நெருக்கமான தொடர்புகள் குறித்துப் பல கதைகளைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மாதவி பிறந்த மரபு குறித்துக் கூறப்பட்ட இக்கதை அவற்றில் ஒன்று ஆகும்.

அடிகள் கூறும் இக்கதை புராணக்கற்பனை சார்ந்தது. எனினும் மாதவியின் முன்னோர்கள் புகார் நகரத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். வேற்றுப் புலத்து ஊர் ஒன்றில் இருந்து வன்முறை மூலமாகப் புகார் நகருக்குக் கொண்டு வரப்பட்டவர் கள் என்ற வரலாற்று உண்மையை உணர்த்துகிறது.

கோவலன் விலை கொடுத்து வாங்கியதாகக் கூறப்பட்ட மாலை, நமக்குக் கூறப் பட்டுள்ளதுபோல, பச்சை மரகத மாலை அல்ல. அது இலையும் பூவும் கொண்டு தொடுக்கப்பட்ட இலை மாலை தான். அதைத்தான் சோழ மன்னன் அரங்கேற்றத் தின்போது மாதவிக்குக் கொடுத் தான். அதனையே சித்ராபதி பூவிலை மடந்தையர் அனைவரும் செய்தது போலத் தன் ஏவல் பெண்ணான கூனியின் கையில் கொடுத்து “நகர நம்பியர் திரி தரு மறுகில்” விற்று வருமாறு அனுப்பினாள். “1008 கழஞ்சு பொன் கொடுத்து மாலையை வாங்குவோர் மாதவியை அடைய லாம்” என்று கூறி விற்று வரச் செய்தாள்.

அரங்கேற்றத்தின் போது சோழமன்னன் மாதவிக்கு 1008 கழஞ்சு பொன் கொடுத்தான். அப்பொன் மாதவியின் கலைத்திறனைப் பாராட்டி மன்னன் பரிசி லாக அள்ளிக் கொடுத்துவிட வில்லை. அவளை ஒருநாள் அனுபவிப்பதற்காகக் கொடுத்ததே ஆகும். இது குறித்துச் சிலப்பதிகார உரையாசிரியர்கள் கூறும் விளக்கம் இது:

“ஆயிரம் கழஞ்சு பரியத்துக்கும் எண்கழஞ்சு அழிவுக்கும் ஆம் என நிச்சயித்து” என்று அரும்பத உரைகாரரும் “ஆயிரம் பரிசத்துக்கும் எண்கழஞ்சு போகத்துக்கும் என நிச்சயித்து” என்று அடியார்க்கு நல்லாரும் விளக்கம் கூறுகின்றனர். (பரியம்=பரிசம், ஸ்பரிசம், தொடுதல்; அழிவுக்கு = கன்னித்தன்மை கழிப் பதற்கு)

உரையாசிரியர்கள் கூற்றுப்படி, மாதவியைத் தொட்டு அனுபவிப்பதற்காகவே மன்னன் ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன் கொடுத்தான். அரங்கேற்றத் தின் போது மாதவி பன்னிரண்டு வயதுப் பாவை என்பது நாம் நினைவிற்கொள்ளத்தக்கதாகும். நடனம் பயின்று அரசன் முன் அரங் கேற்றும் கன்னியரான கணிகையரை அரசனே முதலில் அனுபவிக்கும் வழக்கம் நடை முறையில் இருந்தது. அதுவே விதிமுறையாக இருந்தது. அதிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிமுறை. அதற்காகவே அரசன் அவர்களுக்கு ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்தான். இதனையே “விதிமுறைக் கொள்கை யின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறையாகப் பெற்றனள்” என்று சிலம்பு கூறுகிறது.

அரங்கேற்ற நாளன்று அரசன் முதலில் அனுப வித்த பின்னரே, தாய் சித்ராபதி மகள் மாதவியைக் கடைவீதியில் ஏலம் கூறி விற்க முற்பட்டாள். அரசன் ஒருநாள் தொட்டு அனுபவித்து விட்டு விடும் மகளிர்க்குத் தொடர்ந்து வாழ்நாள் முழுவ தும் பாதுகாப்பான துணை வேண்டும் என்பதற் காகவே அக்கணிகையர் நகர நம்பியர்க்கு அப் பெண்களின் தாயாரால் விற்கப்பட்டிருக்க வேண் டும். அதன்படியே தாய் சித்ராபதியும் மகள் மாதவியை விற்றிட முனைந்தாள். ஆயிரம் பொன் பரிசத்துக்காகவும் (தொடுதலுக்காகவும்) எட்டுப் பொன் போகத்துக்காகவும் என நிச்சயித்துத்தான் அரசன் கொடுத்தான். அதனையே சித்ராபதி மகளுக்கு விலையாக வைத்தாள். கோவலன் அந்த விலையைக் கொடுத்துத்தான் மாதவியை வாங்கி னான்.

சோழ மன்னன் மாதவியை அனுபவிப்பதற்காக ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் கொடுத்ததும் அதே அளவு பொன்னைக் கொடுத்துக் கோவலன் மாதவியை வாங்கியதும் “ஒரு சோற்றுப் பதம்” தான்.

karsilai_370கணிகையர் இவ்வாறு விலைக்கு விற்கப்பட்ட நிகழ்வுகள் சிலப்பதிகார காலத்துக்கு முற்பட்ட சங்க காலத்திலும் நிகழ்ந்துள்ளன. கடுவன் மள்ளனார் என்ற புலவர் பாடியுள்ள நற்றிணைப் பாடல் (150) ஒன்று இது குறித்துக் கூறுகிறது. அப்பாடலில் உள்ள “தாரும் மாலையும் காட்டி” என்ற தொடருக்கு “பரத்தையர் வேண்டும் பொருளை அவர்தம் ஏவற் பெண்டுகளிடம் கொடுத்து, அவர் விலை கூறி விற்கும் மாலை யையும் கண்ணியையும் செல்வர்கள் வாங்கிப் பரத்தை யரிடம் கொடுத்து முயங்கி மகிழ்வர். இதனைச் சிலப்பதிகாரத் தானும் அறிக. இம் மரபு பொருந்து மாறு பரத்தை “தாரும் கண்ணியும் காட்டி என்றனள்” என்னும் உரைக்குறிப்பு இவ்வழக்கம் சங்க காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை உணர்த்து கிறது. (நூல்: நற்றிணை: மூலமும் உரையும். என்.சி.பி.எச். வெளியீடு)

மருத நிலத் தலைவர்கள் மணப்பருவம் எய்தாத சிறுமியருடனும் பாலியல் ரீதியான வல்லுறவு கொண்டிருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் மற்றும் நற்றிணை ஆகிய நூல்கள் கூறுகின்றன.

“காமஞ்சாலா இளமையோள் வயின்
ஏமஞ்சாலா இடும்பை எய்தி”

என்று தொல்காப்பியம் இதுகுறித்துக் கூறுகிறது.

மருத நிலத் தலைவன் ஒருவன் மணப்பருவம் எய்தாத சிறுமி ஒருத்தியுடன் உறவு கொள்ள நினைத்து அவளை நெருங்கித் தழுவி முயங்க முயன்றான். அதனால் அச்சமுற்ற அச்சிறுமி அஞ்சி அழத் தொடங்கினாள். அந்நிலையில் அவன் அவளை விடுத்துத் தன் மனைவியை அடைந்தான்.

 “பெருங் கயிறு நாலும் இரும்பனம்        பிணையல்
 பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
 அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி
 நல்கூர் பெண்டின் சில்வளைக்குறு மகள்” என்று நற்றிணை இதுகுறித்துக் கூறுகிறது. (நல்கூர் பெண்டு பெண்மைத் தன்மையில் குறைவுற்றவள்)

காமஞ்சாலா இளமையோரான இச்சிறுமிகள் மருதநிலத் தலைவர்களுக்கு எவ்வாறு கிடைத்தனர் என்ற வினா இங்கு எழுகிறது. இச்சிறுமியர் இவர்களுக்கு இரண்டு வகைகளில் கிடைத்திருக்கலாம் என்று கருத இடம் உள்ளது. தந்தை இன்னார் என அறியப்படாத அச்சிறுமியரை அவர்களின் தாயார் வறுமை காரணமாக- வளர்த்து  ஆளாக்க இயலாத நிலையில் - செல்வர்களான தலைவர்களுக்கு விற்றிருக்கலாம்; அல்லது அச்சிறுமியர், சீறூர் மக்களுடன் செல்வக்குடியினர் போரிட்டுக் கவர்ந்து வந்த கொண்டி மகளிராக (பகைவர் மனையோராய் கவர்ந்து வந்த பெண்கள்) இருக்கலாம்.

எப்படிக் கொண்டுவரப்பட்டவர்களாக இருந்தாலும் அப்பெண்கள் தலைவனின் அடிமை களேயாவர் என்பது உறுதியாகிறது. ஏனெனில் காமஞ்சாலா இளமையோரான அச்சிறுமியர் தலைவன் மீது கொண்ட காதலால் அவனிடம் வந்து சேர்ந்தார்கள் என்று கருதச் சிறிதும் இடம் இல்லை. “ஏமஞ்சாலா இடும்பை எய்தி” என்று தொல்காப்பியமும் “அழுதனள் பெயரும் அம்சில்ஓதி” என்று நற்றி ணையும் இதனை உறுதி செய்கின்றன.

மருதநிலத் தலைவர்களான ஊரன், கிழவன், மகிழ்நன் என்னும் ஆண்டைகள் மிகப்பலரான பெண்களுடன் உறவும் தொடர்பும் கொண்டிருந் தனர் என்று மருதத்திணைப் பாடல்கள் கூறுகின்றன. அத்தலைவர்களின் ஆசை நாயகியரது மிகுதி குறித்து “ஓர் ஊர் தொக்கிருந்த நின்பெண்டிர்” (ஓர் ஊரில் குடியமர்த்தத்தக்க அளவுக்குத் திரண்டிருந்த நின் ஆசை  நாயகியர்) என்று கலித்தொகை (68) கூறு கிறது.

தலைவர்களான செல்வர்கள் தனியிடத்தில் மொத்தமாக வீடுகள் அமைத்துக் கொடுத்துத் தம் ஆசை நாயகியரை அவற்றில் குடியமர்த்தி வைத் தனர். இக்குடியிருப்புக்கள் ஏனாதிப் பாடியம் எனப் பட்டன. அரசரிடம் ஏனாதி என்ற சிறப்புப் பட்டம் பெற்ற அமைச்சர், படைத்தலைவர் மற்றும் பெருஞ்செல்வர்கள் தம் ஆசை நாயகியர்க்கு அமைத்துக் கொடுத்த இக்குடியிருப்புக்களே ஏனாதிப்பாடியம் எனப்பட்டன என்று கலித் தொகை (81) கூறுகிறது. இந்த அளவுக்குப் பெருந் திரளினரான பெண்கள் ஆசை நாயகியராக அவர் களுக்கு எப்படிக் கிடைத்தார்கள் என்ற வினா இயல் பாக எழுகிறது.

மருதநிலத் தலைவர்களான அரசர்கள் தம் சுய நலம் சார்ந்த  உற்பத்திப் பெருக்கத்துக்காக “காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக் கும்” பணிகளை மேற்கொண்டனர். அவற்றைச் செய்து முடித்திட ஏராளமான மனித ஆற்றல் அவர் களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்த சீறூர்களின் மேல் படையெடுத்துச் சென்று போரிட்டு அங்கு இனக் குழுவாக வாழ்ந்த மக்களை அடிமை களாக்கித் தம் ஊர்களுக்குக் கொண்டு வந்தனர்.

அவர்களில் ஆடவர் காடழித்து நாடாக்கிக் குளம் அமைத்து வயல் திருத்தும் பணிகளிலும் ஆண்டைகளின் பாதுகாப்பான சுகபோகம் மிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஏற்ற அரண்மனை களையும் வளமனைகளையும் அகழிகளையும் அரண்களை யும் அமைக்கும் பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். அவர்களே களமர், கடையர், கடைசியர், புலையர் முதலான உழைக்கும் மக்கள் ஆயினர். மகளிர் நெல்குற்றுவோராகவும் சமையல்காரி களாகவும் சலவைக்காரி களாகவும் செவிலியராக வும் பணியமர்த்தப்பட்டனர். அழகும் இளமையும் உடைய மகளிர் ஆண்டைகளின் ஆசை நாயகியர் ஆக்கப்பட்டனர்.

மருதநிலத் தலைவர்களான ஆண்டைகள் தாம் அமைத்த குடியிருப்புக்களில் தம் ஆசை நாயகிய ராக இளம் பெண்களையே குடியேற்றிப் பராமரித் தார்கள். அரசன் முதலான ஆண்டைகள் முதியோராக இருந்தாலும் அவர்தம் ஆசை நாயகியர் இளம் பெண்களாகவே இருத்தல் வேண்டும் என்று கருதினார்கள். அதனாலேயே இளம் பெண்களையே அங்கு குடியமர்த்தி னார்கள். ஆனால் அப்பெண்கள் அவர்தம் வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றிப் பராமரிக் கப்படவில்லை.  முதுமை எய்திய நிலையில் அம்மகளிர் ஆண்டைகளால் கைவிடப்பட்டனர்.

மகளிரது வாழ்நாளைத் தமிழ் இலக்கியங்கள் ஏழு பருவங்களாகக் குறிப்பிடுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பவையே அப்பருவங்கள். இவற்றில் பெதும்பைப் பருவத்தினராய்க் கொண்டு வரப்பட்ட மகளிர் மங்கைப் பருவம் வரையிலும் தான் தலைவர்களால் ஆசை நாயகியராகக் கொண்டு பராமரிக்கப்பட்டனர். மங்கைப் பருவம் கடந்து மடந்தைப் பருவம் எய்தியதும் ஆண்டைகள் அவர்களை முதுமையைக் காரண மாகக் காட்டிக் கைவிட்டனர். அவ்வாறு கைவிடப் பட்ட பெண்கள் வாழ்வாதாரத்தைத் தேடிப் பரத்தையராக - விலை மகளிராக - பூவிலை மடந்தையராக மாறிய அவலம் நிகழ்ந்தது. பூவிலை மடந்தை என்னும் தொடரில் உள்ள மடந்தை என்னும் சொல், அப்பருவத்திலேயே அவர்கள் ஆண்டைகளால் கைவிடப்பட்டனர் என்ற உண்மையை உணர்த்துகிறது.

தாம் பெற்ற பெண்களைக் காப்பாற்ற இயலாத நிலையில் அவர்களை ஆண்டைகளுக்கு விற்ற அம் மகளிர், வாழும் வழியாகப் புதிய வழிமுறை களைக் கையாளத் தொடங்கினர். புதிய வாடிக்கை யாளர்களைக் கவரவும் வந்த வாடிக்கையாளர் களைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்கள் இசை, நடனம், ஒப்பனை, ஓவியம் முதலான கலைகளில் பயிற்சியும் தேர்ச்சியும் பெறலாயினர். இக்கலை களின் வாயிலாக செல்வர்களான புதிய வாடிக்கை யாளர்களைக் கவர்ந்தனர்.

இக்கலைகளில் தேர்ந்தவர்களான பாணர், பாடி னியர் மற்றும் விறலியர் இக்கலைகளை இவர் களுக்குக் கற்பித்திருத்தல் கூடும். பூவிலை மடந்தை யர் ஆக்கப்பட்ட மகளிர் பாணர்களின் உதவியால் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, சிறந்த கலையரசிகள் ஆயினர். அதனால் மன்னர் முதலான ஆதிக்க வர்க்கத்தாரின் கவனத்துக்கு இலக்காயினர். தாம் பயின்ற கலைகளை அரசன் முன்னிலையில் அரங் கேற்றம் செய்தனர்.

மாதவி இசையும் நடனமும் பயின்று சோழ மன்னன் முன்னிலையில் அரங்கேற்றம் செய்த நிகழ்வு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும் என லாம். இவ்வாறு கணிகையர் என்ற இனம் புதி தாகத் தமிழகத்தில் உருவாயிற்று.

Pin It