தமிழ்ச் சமூகத்தில் வரி

இதுவரை தமிழ்ச் சமூகத்தில் காலம் தோறும் நிலவி வந்த வரிகளைக் குறித்துப் பறவை நோக்கில் அறிந்து கொண்டோம். இவ்வரிகளை வாங்கும்போது ஆளுவோர் மேற்கொண்ட கொடுமையான வழிமுறைகளை இவ்விதழில் காண்போம்.

place_370பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய நிலவுடைமைச் சமுகம் சோழர் காலத்தில் வளர்ச்சி நிலையை எட்டியது. இதனால் சோழர் ஆட்சியின்முக்கிய வருவாய் இனமாக நிலவரி அமைந்தது. இவ்வரியை வாங்க அவர்கள் மேற்கொண்ட செயல் முறைகளை சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

சோழர்காலக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் மண் கலம் உடைத்து ‘வெண்கலம் எடுத்து’ என்ற தொடர் இடம்பெறுகிறது. இத்தொடர் சோழப் பேரரசின் அலுவலர்கள் வரி வாங்குவதில் எவ் வளவு கடுமையாக நடந்து கொண்டார்கள் என் பதை எடுத்தியம்புகிறது.

வரி கொடுக்க முடியாத ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து, அவனது வீட்டிலுள்ள மதிப்பு வாய்ந்த பொருளான வெண்கலப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்தலை ‘வெண்கலம்’ எடுத்து என்ற சொல் குறிக்கிறது.

வெண்கலப் பாத்திரங்கள் எதுவும் இன்றி வெறும் மண்பாத்திரங்கள் மட்டுமே வரிகொடாத ஒருவன் வீட்டில் இருந்தால் அதைப் பறிமுதல் செய்வதால் பயனில்லை. இருந்தாலும், அவனுக்குத் தண்டனை வழங்கும் வழிமுறையாக அம்மண்பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதை ‘மண்கலம் உடைத்து’ என்ற சொல் உணர்த்துகிறது.

வரி செலுத்த இயலாதவனின் உலோக பாத்திரங்களைப் பறிமுதல் செய்தும் மண்பாத்திரங்களை உடைத்தும் அவன் சமைத்து உண்ணமுடியாது செய்வது பொற்காலச் சோழர்களின் வரிவாங்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.

1054 ஆம் ஆண்டுச் சோழர்காலக் கல்வெட்டு வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாது தற்கொலை செய்து கொண்டதைக் குறிப்பிடுகிறது. அவளிடம் வரிவாங்கி வந்த அரசு அதிகாரி ‘அரசு ஆணைக்கு’ அவளை உட்படுத்தினான். இது பொறுக்கமாட்டாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்து போனாள். இதற்குக் காரணமான அரசு அலுவலருக்கு முப்பத்திரண்டு காசுகள் விளக்கெரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

சுடுசொற்களை வரிவாங்குவதில் பயன்படுத்து வதை ‘அரவதண்டம்’ என்று சோழர்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்டமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘கடமைக்காக’ (வரிக்காக) வெள்ளாளரைச் சிறைபிடிக்கக் கூடாது’ என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனால் சோழர்கால ஆதிக்க வகுப்பினரிடம், வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு வழக்கிலிருந்தமை புலனாகிறது.

வரி செலுத்த முடியாதவர்களின் நிலத்தைப் பறிமுதல் செய்து விற்கும் பழக்கமும் இருந்துள் ளதைச் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவிற்கு நாகரிகத்தை வழங்கினோம் என்று கூறிக் கொண்ட வெள்ளையரசு மிகவும் அநாகரிகமான தண்டனை முறைகளின் வாயிலாக வரிவாங்கியுள்ளது. இதனை ஆங்கில அரசின் ஆவணங்களே பதிவு செய்துள்ளன. இந்தியாவில் சித்திரவதைகள் குறித்து ஆராய 1854 இல் அமைக்கப்பட்ட குழு அன்றைய சென்னை மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளைப் பதிவு செய்துள்ளது. இப்பதிவை ‘இந்தியாவைப் பற்றி’ என்ற தமது நூலில் கார்ல் மார்க்ஸ் மேற் கோளாகக் காட்டியுள்ளார். வரிகட்டாத ஒருவர் தான் அனுபவித்த சித்திரவதைகள் குறித்துக் கூறியுள்ளது வருமாறு:-

“என்னையும், வேறு சிலரையும் சில நபர்கள் பொறுப்பில் ஒப்படைத்தார்கள்: அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தி வைத்து குனியும்படி கூறி, எங்கள் முதுகில் கல்லைத் தூக்கி வைத்து, கொதிக்கும் மணலில் நிற்க வைப்பது வழக்கம். எட்டு மணிக்குப் பிறகு, எங்களைச் சாப்பிடுவதற்கு அனுமதிப்பார்கள். இத்தகைய கொடுமைகள் மூன்றுமாதகாலம் நீடித்து நடைபெற்றது. அச் சமயத்தில் நாங்கள் கலெக்டரிடம் மனுக்களைக் கொடுத்தோம் கலெக்டரோ, மனுக்களைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்; பிறகு நாங்கள் செஷன்° கோர்ட்டுக்குச் சென்று மனுக்கள் கொடுத்தோம் அந்தக் கோர்ட் அந்த மனுக்களை கலெக்டருக்கு அனுப்பிற்று. இதுவரையிலும் எங்களுக்கு நீதி கிடைக்கவே இல்லை.”

ஆங்கில அரசு இத்தகைய சித்திரவதைகளை மேற்கொண்டதால், அதற்குக் கீழேயுள்ள மன்னராட்சிப் பகுதிகளிலும், ஜமீன் பகுதிகளிலும் இதை விட மோசமான நிலை நிலவியதில் வியப்பில்லை. சான்றாக சில செய்திகளைக் காண்போம்.

     திருவாங்கூர் மன்னராட்சிப் பகுதியில் “முலை வரி” என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட வயதுவரையிலான பெண்களிடம் வரி வாங்கப்பட்டது. இவ்வரியை வாங்க வந்த அதிகாரி மிகவும் மோசமான சொற்களைப் பயன்படுத்திய தால் அப்பெண் தன் முலையை அறுத்து அவனிடம் கொடுத்து ‘இந்தா இத வைச்சுக்கோ, இது இருப்பதால்தானே வரி கேட்கிறாய்?’ என்று கூறியதாகக் கிறித்தவ மிஷனரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தன் முலையை ஒரு பெண் அறுத்துக் கொடுத்தாள் என்னும் போது அவளிடம் எவ்வளவு கடுமையாக அரசு அதிகாரி நடந்திருப்பான் என்று யூகித்துக் கொள்ளலாம்.

இதே ஆட்சிப் பகுதியில் வரிகொடாதவர்கள் காதில் பூட்டுவதற்கென்றே ear lock என்ற கருவியை வைத்திருந்தனர். இதை ஒருவன் காதில் பூட்டி விட்டால் அதன் எடைகாதை இழுத்துத் துன்புறுத் தும். ஒரு கட்டத்தில் பளு தாங்காது காது அருந்து விடும்.

பொதுநீர் நிலைகளில் தண்ணீர் எடுக்கவிடாது தடுப்பது மற்றொரு தண்டனை முறையாகும். அடித்து வரிவாங்கும் முறையும் இருந்துள்ளதை வைகுண்டசாமியின் அகிலத்திரட்டால் அறிய முடிகிறது.

…ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஜமீந்தார்கள் வள்ளல்களாகவும், சமயப் புரவலர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் மிகக் கேவலமான வழிமுறை களைப் பின்பற்றி தம் குடிமக்களிடம் இருந்து வரி வாங்கியுள்ளனர்.

தென்மாவட்டம் ஒன்றின் மேற்குப் பகுதியிலுள்ள ஜமீந்தார் ஒருவர், வரிகொடாதவரை குடும்பத்துடன் அழைத்துவந்து, உடலுறவு விலக்கப்பட்ட இரத்த உறவுடையோரை (தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை) நிர்வாணமாக்கி ஒரேயறையில் அடைத்து வைப்பாராம்.

மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீந்தார் முறை குறித்து ஆய்வு செய்த வர்கிஸ் என்பவர் தமது ஆய்வு நூலில் வரிவாங்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு:

அய்ந்து தோல்பட்டைகளைக் கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது. இவ்வாறு அடிப்பதனால் அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும்.

காய்ந்துபோன மரங்களுக்கும், காய்ப்பு இல்லாத மரங்களுக்கும் வரிவாங்கப்பட்டது. வரி வாங்குவோர் துப்பாக்கிகளுடனும் லத்திக் கம்புகளுடனும் சென்று மிரட்டினர். நிலவரிப் பாக்கிக்காக குடியான வர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஏலமிட்டனர். ஜமீந்தாரே ஏலத்தில் பங்கு கொள்வார். அவருக்குப் பயந்து வேறுயாரும் ஏலம் கேட்க வரமாட்டார்கள். இதனால் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஒரணா (ஆறுகாசு) அல்லது இரண்ட ணாவுக்கு ஜமீந்தாரே ஏலத்தில் எடுத்துக் கொள்வார்.

இத்தகைய அநியாய வரிகளையும், வரி முறைகளையும், மக்கள் எப்போதுமே பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. அவ்வப்போது தமது எதிர்ப்பைப் பல்வேறு வழிமுறைகளில் வெளிப்படுத்தினர். இது தொடர்பான செய்திகளை அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்…)

Pin It