இரா.இராஜேந்திரன், கடலூர்

"மதக் கலவரத் தடுப்பு மசோதா"வில் பொதுவுடைமைவாதிகளின் நிலைபாடு என்ன? ஜெயலலிதா மசோதாவை எதிர்ப்பதால் மவுனம் காக்கப் போகிறார்களா?

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இது பற்றி ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய மசோதாவின் அவசியத்தை அது வலியுறுத்தியுள்ளது. விஷயம் என்ன வென்றால், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எதிலும் தங்கள் குறுக்குப்புத்தியைக் காட்டுவார்களே என்பதுதான். மதவெறியர்களை ஒடுக்குகிறேன் என்று மாநில அரசின் உரிமைகளில் கை வைத்துவிடக் கூடாது என்று மட்டுமே அது எச்சரிக்கை செய்கிறது. அப்படி கை வைக்காத மதக்கலவரத் தடுப்பு மசோதாவை அது உற்சாகமாக வரவேற்கிறது. ஜெயலலிதாவின் நிலைபாடு இதுவல்ல. அவர் மாநில உரிமை பறிபோகிறது என்று மதக் கலவரத் தடுப்பு மசோதாவே வேண்டாம் என்கிறார். கூட ஓடி வருகிறவரை இடித்துத் தள்ளாமல் திருடனைப் பிடி என்பதற்கும், கூட ஓடி வருகிறவரை இடித்துத் தள்ளி விடுவோம். ஆகவே திருடனைப் பிடிக்க வேண்டாம் என்பதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லையா? இந்த முக்கியமான வேறுபாட்டுக்குப் பெயர் மவுனமா?

ரெ.மருதசாமி, மயிலாடுதுறை

வெங்கட்சாமிநாதன் நூலுக்கு வெளியீட்டு விழா நடத்துவதற்குக்கூட ஆள் இருக்கிறதே?

சரியாப் போச்சு! அவருக்குத் தான் இங்கே ஆதி நாளிலிருந்து அதிக ஆட்கள் உண்டு. மார்க்சியவாதிகளைக் கரித்துக் கொட்டுவதே அவருக்குத் தொழிலாக இருந்தது. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரை விதவிதமாகத் திட்டினார். "மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்று வக்கிரமாகக் கூடக் கைலாசபதியைத் தாக்கினார். ஆனால் இதே நபர் "வெறும் கோமாளி என்று ஒதுக்கப்படும் சோஷிடம் தான் வீரத்தையும் விவேகத்தையும் காண்கிறேன்" என்றும் எழுதினார். இதிலிருந்தே இவர் யார் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். அப்படியும் இவரைத்தான் பிரமாதமான இலக்கிய விமர்சகர் என்று கொண்டாடுகிறது ஒரு கூட்டம்.

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்

உலகமெல்லாம் பொதுவுடைமை வந்தால் கழிப்பிடத்தைத் தங்கத்தில் கட்டலாம் என்று மாமேதை லெனின் சொன்னாரே..?

பவுன்விலை 21 ஆயிரம் ரூபாயை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அதை நினைவுபடுத்துகிறீர்களே! தங்கமும் ஓர் உலோகமே, ஏன் இவ்வளவு மதிப்பு? அழகுணர்ச்சி மட்டுமா காரணம்? இல்லை, அதுவொரு முதலீட்டு சமாச்சாரமாகிப் போனது. நிச்சயமற்ற முதலாளித்துவ உலகில் பங்குச் சந்தையை நம்புவதை விட தங்கச் சந்தையை நம்புகிறார்கள் சாதாரண மக்கள். முதலாளித்துவ சமூகம் மறைந்து பொதுவுடைமைச் சமூகம் பிறக்கும் போது அங்கே எதிர்காலம் உறுதியானதாக இருக்கும். உயிரற்ற உலோகங்களை நம்புவதை விட உயிருள்ள சக மனிதர்களை நம்புவார்கள். இதுதான் லெனின் சொன்னதன் தாத்பரியம்.

அண்ணாதுரை, அன்னா ஹசாரே-ஒப்பிடுக?

எல்லாரும் இரண்டு சுழி "ன" போட்டுக் கொண்டிருக்க தினமணி ஏடு மட்டும் மூணு களி "ண" போட்டது ஹசாரேக்கு. தமிழர்களுக்கு நன்கு தெரிந்த அண்ணாவின் இடத்தில் அவரை அமர்த்துவது அதன் நோக்கம் போலும். இருக்கட்டும். ஒப்பீட்டுக்கு வருவோம். பெயரில் தான் ஒரு மாதிரியான ஒற்றுமை இருக்கிறதே தவிர, இருவரும் எடுத்துக் கொண்ட விஷயங்கள் வேறானவை. அண்ணா பேசியது வருணாசிரம ஒழிப்பு சமூக நீதி, ஹசாரே பேசுவது ஊழல் ஒழிப்பு அரசியல் நீதி. அண்ணாவின் வாரிசுகளுக்கு ஊழலை எதிர்க்கும் அருகதை இல்லாமல் போனது. ஹசாரேயின் குழுவினரோ வருணாசிரம எதிர்ப்பு பற்றி இதுவரை வாயைத் திறக்கவில்லை.

எஸ்.கே.மகாலிங்கம், திருத்துறைப்பூண்டி

2 ஜி அலைக்கற்றை ஊழலில் ப.சிதம்பரத்தின் பெயரும் அடிபடுகிறதே..?

அன்றைய நிதி அமைச்சர் இப்போது சிக்கியிருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். மன்மோகன் சிங்கும் சிக்குவார். அவ்வளவு பெரிய கொள்கை முடிவை ஆ.ராசா எடுத்ததற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பிரதமர் கூறுவது சிறிதும் நம்பக்கூடியதாக இல்லை. குறைந்தபட்சம் அவர் தார்மீகப் பொறுப்பாகிலும் ஏற்க வேண்டும்.

மெ.ப.சுந்தரம், பாளையங்கோட்டை

சமச்சீர் கல்வி எப்படி இருக்கிறது?

அம்மாவுக்குப் பிடிக்காத பெண்ணை பிள்ளை திருமணம் செய்து கொண்டுவிட்டான். அந்த மருமகளின் நிலை புகுந்த வீட்டில் எப்படி இருக்கும்?

எஸ்.கே.நூர்ஜஹான், வாணியம்பாடி

அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டாலும் அதன் உலக நாட்டாமைத்தனம் குறைய வில்லையே, எப்படி?

அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டங்காணுகிறது. இரண்டு, அமெரிக்காவின் அதீத ராணுவ பலம். எனினும், ராணுவ பலத்தின் அஸ்திவாரம் பொருளாதாரத்தில் இருப்பதால் அமெரிக்காவின் ஆலவட்டம் நாலாவட்டத்தில் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு ரஷ்யா-சீனா- இந்தியா எனும் மூன்று நாடுகளின் பலமும், ஒற்றுமையும் பெருகுவது அவசியமாகும்.

கி.ராஜாங்கம், மதுரை

அதிகம் புத்தகம் படிப்பது இளைஞர்களா, மூத்தவர்களா?

ஆங்கில நூல்களை அதிகம் படிப்பது இளைஞர்கள்; தமிழ் நூல்களை அதிகம் படிப்பது மூத்தவர்கள். தமிழ் பழைய தலைமுறையினரின் பழக்கமாகிப் போகுமோ என்று பயமாக இருக்கிறது. இது சட்டென்று படுவது. எவரேனும் முறையான ஆய்வு செய்து சொன்னால் நன்றாக இருக்கும்.

என்.சீனிவாச ராகவன், சென்னை

பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுச்சட்டை போட்டவுடனேயே சேற்றைப் பூசிக் கொண்டாயிற்று. ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு இப்படியொரு அசிங்கம். ஏதோ சில தலித்துகள் கூடி மறியல் செய்திருக்கிறார்கள். தங்கள் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார்-வம்படியாக-என்று கேள்விப்பட்டால் அதுகூடச் செய்ய மாட்டார்களா? ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றதும் கல்லூரிப் பேருந்தைக் கொளுத்தி, மூன்று மாணவிகளைக் கொள்றார்களே அதிமுகவினர், அப்படியா நடந்து கொண்டார்கள்? இல்லையே. ஆனால், பரமக்குடியில் தேவையே இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். காவல்துறைக்குள்ளேயும் ஆதிக்கச் சாதிவெறி புகுந்திருக்கிறது என்பது பச்சையாகத் தெரிகிறது. மறியல் செய்தவர்கள் வேறு சாதியினர் என்றால் இவ்வளவு சாதாரணமாகத் துப்பாக்கிகள் வெடிக்குமா? தீண்டாமை என்பது அரசு நிர்வாகத்திலும் உள்ளது. காவல்துறையின் இந்த அக்கிரமப் போக்கை ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவர் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவரும் தீண்டாமையை ஒரு மாதிரியாக ஒப்புக் கொள்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டிவரும். அவர்களைப் பதவியில் வைத்துக் கொண்டே விசாரணை என்பது ஊரை ஏமாற்றும் வேலை.

எஸ்.கே.ஆதிமூலம், தஞ்சாவூர்

ஊழலின் ஊற்றுக்கண் பேராசைதானே..?

நிச்சயமாக. ஆசையிலும் ஆசை பதவி ஆசை. அதற்காகத் தேர்தலில் பணத்தைக் கொண்டு விளையாடும் ஆசை. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தனது ராஷ்டிரபதி பவனத்து அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். அதில் இப்படிக் கூறியிருக்கிறார்- "மரியாதை நிமித்தமாக என்னைச் சந்திக்க ஜே.ஆர்.டி. டாட்டா வந்திருந்தார். நான் திட்டக் குழுவில் இருந்த காலத்திலிருந்தே நாங்கள் ஒருவரையொருவர் அறிவோம், காலப்போக்கில் பரஸ்பர மதிப்பு மிகுந்தது. போபர்ஸ் விவகாரமாக நாடாளுமன்றத்தில் ராஜீவ் அறிக்கை தாக்கல் செய்தது பற்றி டாட்டா குறிப்பிடும் போது இப்படிக்கூறினார் : பீரங்கி விவகாரத்தில் ராஜீவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எதையும் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி கமிசன் எதையும் பெற்றிருக்காது என்று கூறுவது கடினம். 1980 முதல் அரசியல் நன்கொடை கேட்டு தொழிலதிபர்கள் அணுகப்படவில்லை. ஆகவே, அந்தக் கட்சியானது இத்தகைய பேரங்களில் கமிசன் பெறுகிறது என்கிற பொதுவான உணர்வு அவர்கள் மத்தியில் இருக்கிறது." முதலாளித்துவ அரசியல் கட்சிகள் முதலாளிகளின் பணத்தில் நடக்கிறது. அப்படி நேரடியாக வாங்கவில்லை என்றால் நிச்சயம் ஊழல் பணத்தில்தான் நடக்கிறது! இதற்கு டாட்டாவே சாட்சி!

எஸ்.மனோகரி ரத்தினம், திருப்பூர்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே..?

மனித முயற்சியால் எட்டப்படும் எந்த வளர்ச்சியும் இயற்கைச் சூழலைப் பாதிக்கவே செய்யும். பெரிய அளவுக்கு பாதிக்காதபடி வளர்ச்சியைக் காணுவதே இலக்காக இருக்க வேண்டும். அணுகுண்டுகளை வீசி ஜப்பானியர்களைக் கொன்றுகுவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அணுசக்தியை மின்சாரத் தயாரிப்பு உள்ளிட்ட ஆக்கத் தொழிலுக்குப் பின்னர் பயன்படுத்தியது உலகம். விபத்துக்களின் காரணமாக இதில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி இப்போது கவலை அதிகரித்திருக்கிறது. அது நியாயம் தான். ஆனால் அணுசக்திக்குப் பதிலாக வேறு எந்த சக்தியைக் கொண்டு இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று எவரும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். மின்வெட்டு பற்றி சலித்துக் கொண்டு ஆட்சியிலிருந்தோரைத் தூக்கி எறிந்ததும் தமிழர்கள் தாம், இப்போது கூடங்குளம் மின்நிலையம் வேண்டாம் என்பவர்களும் தமிழர்கள் தாம். அதிலும் குழந்தை பிறக்கப் போகிற நேரத்தில் கலைக்கச் சொல்லுகிறார்கள்! அதில் போட்ட ரூ.13 ஆயிரம் கோடி பணம் என்னாவது? ஏற்கனவே, சேது சமுத்திரத் திட்டத்தை கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டி விட்டார்கள் சங்பரிவாரத்தினர். இப்போது இது. தென் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் அவ்வளவு எளிதில் வராது போலும். மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது போல இந்தத்திட்டம் பற்றி சந்தேகம் கொண்டுள்ள பொது மக்களிடம் அதைப்போக்கும் பணியில் ஈடுபடுவது தான் மத்திய அரசின் உடனடி வேலையாக இருக்க வேண்டும். அவர்களது ஒப்புதலோடு மின் திட்டத்தைத் துவக்குவதுதான் புத்திசாலித்தனம்.