தந்தை பெரியார் பல விசித்திரங்கள் நிறைந்தவன். அவர் எந்தப் பிரச்சனையில் எப்படித் தலையிடுவார், பேசுவார் என்பதை எவரும் அறிய முடியாது. ஒரு நிகழ்ச்சியைத் சொல்லலாம்.

1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்புக் களத்தில் அவர் பெண்களை மறியல் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சுமத்தி அரசு வழக்குத் தொடர்ந்தது. வழக்கு 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதை எதிர்த்து வழக்காட வேண்டுமென்று ராஜா சர். முத்தையா செட்டியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆகியோர் பெரியாரிடம் கூறினர். ஆனால் பெரியார் மறுத்துவிட்டார். ஆனால் நீதிபதியிடம் ஒரு அறிக்கையை எழுதிக் கொடுத்தனர்.

பெரியாரின் அந்த வாக்குமூலத்தில் "இந்தக் கோர்ட் காங்கிரஸ் மந்திரிகளின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியான தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இது தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விசயத்தில் நியாயம் அநியாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டுமென்றும் பேசினேன். இந்தி எதிர்ப்பு விசயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்கு முறையே என்பது எனது கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நீதியை எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை தர முடியுமோ, அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் தண்டனை கொடுத்து, இவ் வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றத்தில பெரியாரைத் தவிர வேறு யாரும் இப்படிக் கூறியிருக்க முடியாது.

தீர்ப்பு விபரம்

இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆண்டு கடுங்காவல். அபராதம் ஆயிரம் ரூபாய். அபராதம் செலுத்தாவிடில் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை. இரண்டாண்டு கடுங்காவலையும் ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பெரியார் சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்குச் சென்றார்.

- எஸ்.ஏ.பி.

Pin It