பண்டைக்கால இந்திய வரலாறு பற்றிய மார்க்சிய ஆய்வாளர்களில் ஒருவரான சுவீரா ஜெயஸ்வால் தனது முனைவர் வட்டத்திற்காக பாட்னா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வுதான் இந்நூல். மார்க்சிய ஆய்வாளர்கள் ஆர். எஸ். சர்மா வழிகாட்டியாகவும், டி. டி கோசாம்பி ஆலோசகராகவும் உதவியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. கி.அனுமந்தன், ஆர். பார்த்தசாரதி தமிழாக்கத்தில் என்.சி.பி.எச் புத்தக நிறுவனம் பயனுள்ள வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளது.

கிபி 300 முதல் 500 வரை மௌரியர், குப்தர்களின் ஆட்சிக் காலம் வைணவ வரலாற்றில் முக்கியமான காலகட்டம். அக்காலத்திய இலக்கிய ஆதாரங்களையும், தொல் பொருள் ஆய்வுகளையும் ஆதாரமாகக் கொண்டு சுவீரா ஜெயஸ்வால் இந்த ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

உலகம் முழுவதும் இறையியல் கருத்துக்கள் மக்களிடம் எப்படித் தோன்றியது என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல ஆய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளனர். மார்க்சிய ஆய்வு முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் வைணவ வரலாற்றில் முக்கிய இடம் பெறும் இதிகாசங்கள். இரண்டும் மக்களிடம் பரவியிருந்த கதைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை. இராமாயணத்தின் முதலாவது மற்றும் இறுதிக் காண்டங்கள் பிற்சேர்க்கை. மேலும் பல இடைச் செருகல்கள் மூலம் சாதாரண மனிதனான இராமன் விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரிக்கப்பட்டான். பரதம் பழங்கடி பிரிவுகளுக்கு இடையே நடந்த போராட்டங்களைச் சித்தரிக்கும் 'ஆதிபாரதம்' பின்னால் இதிகாசமாக மாற்றப்பட்டு, உட்கதைகள் புகுத்தப்பட்டு, மகாபாரதமாக மாறியது. திறமையான போர்க்கடவுளாக, ஆன்மீக வழிகாட்டியாக, பாண்டவர்களின் துணையாகச் சித்தரிக்கப்பட்ட வாசு தேவ கிருஷ்ணன், நாராயண விஷ்ணுவின் அவதாரமாக மாற்றப்பட்டார். ஸ்ரீ, லட்சுமி என்ற பெண் தெய்வங்கள் ஸ்ரீலட்சுமி என்ற செல்வத்தின் தேவதையாக மாற்றப்பட்டு விஷ்ணுவுடன் இணைக்கப்பட்டது.

குப்தர்கள் காலத்தில் வைணவம் ஆளும் வர்க்கத்தின் சமயமாக ஓங்கியது. நிலப்பிரபுத்துவ வேளாண் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல் பெற்ற பிராமணிய வைணவம் எழுந்தது. இந்திய மக்கள் மனதில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தியது.

வேதகால யாகம், பலியிடுதல் மாறி இறை பக்தி வழிபாட்டு முறை உருவானது. பலியிடுதலை எதிர்த்த புத்த, சமண மதம் பலவீனம் அடைந்தது. பக்தி மயமான வைணவம் அகிம்சையை வற்புறுத்தியது. பலியிடுதல் எதிர்த்தது. மாமிச உணவை மறுத்தது. சமூக நிலை மட்டத்தை அனைத்திந்திய மரக்கறி உணவு ஒரு அளவு கோலாக மாறியது.

வைணவத்தில் மற்றொரு முக்கிய அம்சம் அவதாரக் கொள்கை. விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் தீமைகளை அழித்து நல்லவர்களை காப்பாற்ற என்ற கருத்து கீதை மூலம் நிலைநிறுத்தப்பட்டது. உள்நாட்டு இனக் குழு மக்களிடம் பிராமணியத்தை பரப்ப இது பயன்பட்டது. நாட்டுக்கு ஒருவித கலாச்சார ஒற்றுமையை தருவதற்கும் உதவியது. மன்னர், உயர் குடியினர், மேனிலை மாந்தர் அரியின் அவதாரமென்று வர்ணிக்கப்பட்டனர்.

சடங்குகளும், விரதம், நோன்பு போன்ற செயல்முறைகளும் இந்தியா முழுவதும் பரவியது. இதன் மூலம் வைணவம் நாடு முழுவதும் பரவி பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியது.

பகவத் நாராயணரின் வழிபாடாகிய பாகவத கோட்பாடு வளர்ச்சியுற்ற நிலையே வைணவ சமயமாகும். அது பல்வேறு கூறுகளைச் சேர்த்து உட்கொள்ளும் போக்கை மேற்கொண்டதால் குப்தர் காலத்தில் மிகச் செல்வாக்கு பெற்ற சமயங்களில் ஒன்றாக மாறியது. நால் வர்ணம் சார்ந்த எல்லா மக்களும் வந்துசேர வைணவம் திறந்திருக்கிறது. வர்ணாசிரமம் காப்பாற்றப்படுவதற்கும், பாமர மக்கள் தம் சமூக பொருளாதார நிலைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வதற்கும் அது காரணமாக இருந்தது.

மேற்கண்ட விளக்கங்களும், நிர்ணயிப்புகளும் ஆதாரப்பூர்வமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆரம்பக்கால மத கோட்பாடுகளும், இதிகாசங்களும் எவ்வாறு உருவாகின -ஆளும் வர்க்கங்களுக்கு அவை எத்தகைய சேவை செய்தன என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மதவாத பிற்போக்குக் கருத்துக்களையும், சாதியத்தையும் எதிர்த்துப் போராட இந்நூல் தத்துவ பலம் அளிக்கும்.