கோகுலத்தில் கண்ணனிடமிருந்து வெண்ணெய்யைக் காப்பாற்ற கோபியர்கள் வெண்ணெய்ப் பானையை உறியில் கட்டித் தொங்கவிடுவார்களாம். எங்கள் வீட்டில் ஆட்டுக்கறியை என்னிடமிருந்து காப்பாற்ற எங்க அம்மா ஆட்டுக்கறிக் குழம்புச் சட்டியை உறியில் கட்டித் தொங்கவிட்டிருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து வந்த உடன் வீட்டில் கறிக் குழம்பு வைத்திருந்தால் தண்ணீர் குடிக்கப் போவது போல சென்று குழம்புச் சட்டிக்குள் கையை விட்டு அரித்துத் தின்றுவிடுவது வழக்கம். அப்படியும் சில சமயங்களில் கூடையைத் தூக்கிப்போட்டு உறி யில் உள்ள கறியை அபேஸ் செய்துவிடுவதும் உண்டு. ரெண்டு கால் பூனையின் தொல்லை தாங்கமுடிய வில்லை என்று செல்லமாகத் திட்டும் அம்மா.

யோசித்துப்பார்த்தால் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை கறியைச் சார்ந்தே பின்னப் பட்டிருப்பது தெரியும். பெரமைய்யா கோவில் பூஜை சமயத்தில் மதுக்கூர் வட்டாரத்தில் எப்படியும் பத்து ஆயிரம் ஆடாவது வெட்டுப்படும். ஆடி மாதம் ஆற்றில் தண்ணீர் வந்த பிறகுதான் பெரமைய்யா கோவில் பூஜை நடக்கும். ஆனால் வைகாசி மாதத்திலேயே குட்டி ஆடாகப் பார்த்து வாங்கி வீட்டில் கட்டி விடு வார்கள். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அந்த ஆடு களை மேய்க்க ஓட்டிச் செல்வது தான் முக்கிய வேலை. ஆசையாக வளர்த்த ஆடுகள் கண் முன்னால் வெட்டுப் படுவதைப் பார்க்கும்போது சங்கடமாகத்தான் இருக்கும். சிலர் அழுது விடுவதும் உண்டு.

அடுத்த நாள் அழுதுகொண்டே கறியைச் சாப்பிட்டு முடிப்பது பழக்கம்.

பெரமைய்யாவுக்கு வெட்டிய கிடாயின் கறியை உப்புக்கண்டம் போட்டுப் பாதுகாக்கக் கூடாது என்பது ஐதீகம். யாரோ ஒரு கறி வெறியர்தான் இதை கிளப்பி விட்டிருக்கவேண்டும். வீட்டுக்கு ஒரு ஆடு முதல் மூன்று ஆடு வரை வெட்டி கறி, ஈரல், குடல் என்று பிரித்து கலர்க் கலராகக் குழம்பு வைத்து ஒரு வாரத் திற்குச் சாப்பிடுவார்கள். உள்ளே போனால் மசாலா சும்மா இருக்குமா? ஆளாளுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு ஓடுவதுபோல ஆற்றுக்கரையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். ஓடிஓடிக் களைத்துப் போய் வந்தாலும் கறி சாப்பிடுவது நிற்காது. வயிற்றுக் கடுப்பில் வயிறு என்னதான் குத்தினாலும் சாமி குத்தம் ஆகாதல்லவா?

காட்டேறிக்கு ஆட்டுக்கறி ஆகாது. சேவக்கோழி தான் அறுக்க வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமை பன்னிரெண்டு மணிக்குத்தான் பூஜை நடத்தி சேவலை அறுத்து அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு விடவேண்டும். வீட்டுக்குக் கொண்டு வந்துவிடக் கூடாது. பெண்கள் காட்டேறிக்கு அறுத்த கோழிக் கறியைத் திங்கவே கூடாது. ஒரு வேளை காட்டேறியே நேரில் வந்து கேட்டால் கூடக் கொடுப்பார்களோ மாட்டார்களோ?

அறுவடை முடிந்த உடன் வயலில் கழுப்பு கழிப்பது என்று சொல்லி இரவில் கோழி அறுத்துப் பொங்கல் வைப்பார்கள். அந்தக் கறியையும் பெண்கள் சாப்பிடக்கூடாது. வீட்டிற்கும் கொண்டுவரக் கூடாது.

பெண்கள் மட்டுமே சாப்பிடும்படியாக எந்தச் சாமி பூஜை கறியும் இல்லை. பெண்கள் மட்டுமே சாப்பிடலாம் என்று சொல்லப்படுவது செவ்வாய்க் கிழமை பிள்ளையாருக்கு நள்ளிரவில் படைக்கப்படும் உப்பில்லாத கொழுக்கட்டை மட்டும்தான்.

நேத்து ராத்திரி நாகப்பாம்பு என் கனவில் வந்தது என்று யாராவது சொன்னால் வீட்டில் வளர்க்கப்படும் கோழியின் எண்ணிக்கையில் ஒன்று குறையப்போகிறது என்று அர்த்தம். பாம்பு குடியிருப்பதாக நம்பப்படும் கரையான் புற்றுக்கு அருகில் கோழியை அறுத்து ரத்தத்தை மட்டும் புற்றுக்கு காட்டிவிட்டு கறி வீட்டுக்கு வந்துவிடும்.

உள்ளூர்க் கறி வைபவங்கள் தவிர வெளியூரில் சென்று ஆடு வெட்டிச் சாப்பிடும் சங்கதிகளும் நிறைய உண்டு. எங்க ஊரிலிருந்து இடச்சி மூலை என்ற ஊர் கிழக்கே பதினாறு கிலோ மீட்டர். அந்தக் கோவிலில் சிலர் மொட்டையடித்து, காது குத்திக் கிடா வெட்டுவார்கள். பத்து ரூபாய் மொய் செய்வதற்காக பதினாறு கிலோ மீட்டர் நடந்தே சென்று சாப்பிட்டு விட்டு திரும்பவும் நடந்தே வந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு ஆப்பை கறிக்கு முப்பத்தி இரண்டு கிலோ மீட்டர் நடையா? இப்போது நினைத்தால் மலைப்பாகத்தான் இருக் கிறது.

கல்யாணம் மற்றும் விசேச வீடுகளில் சாம்பார், ரசம் என்றால் அனைவருமே நாயன்மார்கள்போல அமைதியாகத்தான் சாப்பிட்டுவருவார்கள். கறிச் சாப்பாடு என்றால், எனக்கு ரத்தப் பொறியல் வர வில்லை, எலும்புக்குழம்பு சரியில்லை என்று கலகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கும். கவுரவத்தை விட்டுக்கொடுத்துவிட முடியுமா?

தஞ்சை மாவட்டத்தின் சில பகுதியில் கல்யாணம், காதுகுத்து என்று எந்த விசேசமும் வர வாய்ப்பில்லை என்றால் மொய் விருந்து என்று பத்திரிகை அடித்து தனியாக நடத்துவார்கள். பத்திரிகையின் அடியில் அவர்கள் பரம்பரையில் என்னென்ன பெயர்களில் இதுவரை மொய் செய்யப்பட் டுள்ளது என்ற சரித்திரக்குறிப்பு இடம் பெற்றிருக் கும். மொய் விருந்து அன்று அத்தனை பெயர்களிலும் செய்யப்பட்ட மொய்ப் பணத்தை கணக்குப் பார்த்துத் திரும்பச் செய்துவிட வேண்டும். ஒரு வேளை வறுமை காரணமாக மொய்ப் பணத்தை திரும்ப செய்ய முடியவில்லை என்றால், அவரது வீட்டு வாசலில் ஒரு பனை மட்டையில் அரைக் கிலோ ஆட்டுக்கறியை வைத்து வாசலில் நின்று தப்படிக்க ஏற்பாடு செய்வார்கள். ‘மொய்ப் பணத்தை வாங்கித் தின்றுவிட்டு திரும்பச் செலுத்த வக்கில்லாதவனே இந்தக் கறியையும் சமைத்து சாப்பிடு’ என்று இதற்கு அர்த்தமாம். இவ்வாறு வாசலில் ஆட்டுக்கறி வைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக தூக்கில் தொங்கியதும் உண்டு. சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியதும் உண்டு. வாசலில் வைக்கப்பட்ட கறியை யும் எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு ‘போடா வேலையைப் பாத்துகிட்டு’ என்று சவால் விட்ட மானஸ்தர்களும் உண்டு.

ஆட்டுக்கறி, கோழிக்கறிதான் என்றில்லை. நடப்பன, ஊர்வன, பறப்பன ஒன்றும் பாக்கியில்லை. வயலில் திரியும் வெள்ளெலியை பிடித்து அங்கேயே உறித்து சமைத்துத் தின்பதும் உண்டு. உடும்புக்கறி விஷயத்தில்தான் கொஞ்சம் சிக்கல். உடும்புக்கறி சாப்பிட்டால் விக்கல் வரக்கூடாதாம். அப்படி வந்துவிட்டால் மரணம் தானாம். இந்த நினைப்போடு உடும்புக்கறியைச் சாப்பிட்டால் விக்கல் வருகிற மாதிரியே இருக்கும்.

நத்தைக்கறி மூல வியாதிக்கு நல்லது என்பது ஒரு நம்பிக்கை. மூலத்திற்கு நல்லதோ இல்லையோ நத்தைக்கு நிச்சயமாக நல்லதில்லை.

மதுரை போன்ற நகரங்களில் தீபாவளிக்கு மட்டுமே ஆட்டுக்கறி சாப்பிடுகிற எளிய மக்கள் உண்டு. ஸ்வீட் பண்டு, பட்டாசு பண்டு போல கறிப் பண்டும் உண்டு. தீபாவளி அன்றைக்கு ஒரு கிலோ கறி வாங்குவதற்காக மாதா மாதம் 25, 30 என்று பணம் கட்டி சீட்டு போடுவார்கள்.

இப்படி கண்டதையெல்லாம் சாப்பிட்டாலும் மாட்டுக்கறியைச் சாப்பிடுபவர்களை மட்டும் இழிவாகக் கருதும் பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. வீட்டில் வளர்த்த மாடு சீக்கு வந்து செத்தால் கூட அதை தலித்துகள்தான் வந்து தூக்கிச் செல்ல வேண்டும். கறியோடு சேர்ந்த சாதி வெறி இது.

அண்மையில் ஊருக்குப் போனபோது, செத்த மாட்டை சிரமப்பட்டு மாட்டின் சொந்தக்காரரே தூக்கிக்கொண்டு போய்ப் புதைத்தார். இப்போதெல்லாம் மாடு தூக்க ‘அவங்க’ வருவதில்லை என்றார் வருத்தமாக. கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

Pin It