இலக்கிய ஆய்வாளர் ச.செந்தில் நாதன் எழுதிய திறனாய்வு- மதிப்புரை என இரு பகுதிகள் அமைந்த நூல் இது.

ஐந்து தலைப்புகளில் திறனாய்வுகளும், இருபத்தாறு தலைப்புகளில் மதிப்புரைகளும் உள்ளன. இவற்றுள் முன்னோடி முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களின் பெருமைகளை உரைக்கும் சிறு சிறு கட்டுரைகளும் உள்ளன.

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களாகிய விந்தன், கல்கி, சுந்தர ராமசாமி, டி.கே.சீனிவாசன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரின் நாவல்களை இந்நூலாசிரியர் திறனாய்வு செய்திருக்கிறார்.

"படைப்பை பள்ளிக்கூட வாத்தியார் போல் பார்ப்பவன் அல்ல திறனாய்வாளன். அவனுடைய சுய சிந்தனைக்கும், பார்வைக்கும் அதில் இடம் உண்டு" என்கிற தமது 'ஒரு சொல்' லில் குறிப்பிட்டுள்ள திறனாய்வு நெறிக்கேற்ப ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார் செந்தில்நாதன்.

விந்தனின் 'பாலும் பாவையும்' முதலான 6 நாவல்கள், கல்கியின் சிவகாமியின் சபதம், அலைஒசை ஆகிய இரு நாவல்கள், சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், குழந்தைகள்-பெண்கள், ஆண்கள் ஆகிய இரு நாவல்கள், திராவிட இயக்க எழுத்தாளர் டி.கே.சீனிவாசனின் ஆடும் மாடும் நாவல், தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் ஆகிய 12 படைப்புகளை திறனாய்வு செய்துள்ளார் செந்தில் நாதன்.

"சிறுகதைகளில் சரியான பார்வைக்குச் சொந்தக்காரராக இருக்கும் விந்தன் தன் நாவல்களில் அத்தகைய பார்வையைக் கொண்டிருக்கிறாரா என்பது மதிப்பீட்டிற்குரியதாகும்"-என்கிற நூலாசிரியர், தாம் பள்ளி மாணவனாக இருக்கும் போது, 47 ஆண்டுகளுக்கு முன் படித்து மகிழ்ந்த கல்கியின் சிவகாமி சபதத்தையும், அலை ஓசையையும் இப்போது மறு வாசிப்பு செய்திருக்கிறார்.

சுந்தரராமசாமியின் நாவல்களைக் குறித்துச் சொல்கிறபோது, "மார்க்சியத்தின் மீது தனக்குள்ள வெறுப்பை எப்படியாவது எழுத்தில் கொட்டித் தீர்க்க வேண்டும் என்பது அவருடைய தணியாத வேட்கை. அதுதான் அவருடைய 'ஆத்ம அதிருப்தி' என்று கடுமையாக விமர்சிக்கும் நூலாசிரியர் அதற்கான சான்றுகளையும் முன்வைக்கிறார்.

மேலும், கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய "திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன்", வல்லிக்கண்ணனின் தன் வரலாறு நூலாகிய "நிலை பெற்ற நினைவுகள்", கு.சின்னப்ப பாரதி எழுதிய "என் பணியும் போராட்டமும்", இரா.ஜவகர் எழுதிய 'கம்யூனிசம்: நேற்று", "இன்று - நாளை"காமராஜரைப்பற்றி வீரபாண்டியன் எழுதிய "ஆகட்டும் பார்க்கலாம்" "டி.செல்வராஜ் எழுதிய "ஜீவானந்தம்", கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய "என் அருமை ஈழமே!", கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 'தரையைத் தொடாத காற்று', நெல்லை கம்யூனிஸ்ட்டுகள் மீதான சதி வழக்குகள் (1945-1950) பற்றி ஆர்.எஸ்.ஜேக்கப் எழுதிய "வாத்தியார் மறு பிறவி", "மரணவாயில்" ஆகிய இரு நாவல்கள், ரோஜா குமாரி சிறுகதைத் தொகுப்பாகிய "நிலா முற்றக் காற்று", தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பாகிய "புதிய காற்று", கு.சின்னப்ப பாரதியின் நாவல் "பாலை நில ரோஜா" கவிஞர் தமிழ் ஒளியின் கடிதம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கை, தமிழ் ஒளியின் கடிதம் குறித்து முனைவர் வீ.அரசு எழுதிய குறிப்புகள், தமிழ் ஒளியின் நண்பர் பாவலர் பாலசுந்தரம் சொல்லியுள்ள குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்ட "தமிழ்ஒளி கடிதம்" எனும் ஆவண நூல், சங்கைவேலவன் ஆராய்ந்து எழுதிய உடுமலை நாராயண கவியின் திரைப்படப் பாடல்கள் பற்றிய நூல், தஞ்சை மாவட்டத்தைக் களமாக வைத்து சோலை சுந்தர பெருமாள் எழுதிய "தப்பாட்டம்" நாவல் ஆகிய பல முக்கிய படைப்புகளைப் பற்றித் தெளிவான கண்ணோட்டத்துடன் தமது ஆய்வுகளை முன் வைத்துள்ளார் செந்தில்நாதன். டாக்டர் ரெக்ஸ் சற்குணம் தமிழாக்கிய, இத்தாலிய மார்க்சிய அறிஞர் அன்டோனியா கிராம்சியின் சிந்தனைகள் நுல்பற்றியும், ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதிய "திராவிட இயக்கமும் வேளாளரும்" எனும் நூல் குறித்து ஆய்வு செய்யும் நூலாசிரியர் "திராவிட இயக்கத்தின் அடித்தளம் பற்றி ஆய்கிறவர்கள் நிராகரிக்க முடியாத படைப்பு இந்த நூல்" எனப் பாராட்டுகிறார்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. பற்றிய கட்டுரையில் "மறு வாசிப்பிலும் குறையாத உயரம்" எனப் பெருமிதம் கொள்கிறார்.

முற்போக்கு கலை-இலக்கிய முன்னோடி ஆளுமைகளான கே.முத்தையா, கோமல்சுவாமிநாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம், கந்தர்வன் ஆகியோரின் இலக்கிய ஆளுமையையும் தமிழ்க்களத்தில் இயக்கமாய் அவர்கள் தொண்டாற்றியதையும் நயம் படக்குறிப்பிட்டுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமியை வெகுவாகப் பாராட்டும் "மேலாண்மைக்கு மேலான விருது" எனும் தலைப்பிலான நூலின் நிறைவுக் கட்டுரையில் "தமுஎகச படைப்பாளிகளுக்கு ரொம்ப காலம் விருது தராமல் தள்ளிப் போட முடியாது என்பதை சாகித்திய அகாதெமி புரிந்து கொண்டது என்பது இந்த விருதால் விளங்குகிறது" பெருமிதத்துடன் கூறுகிறார் நூலாசிரியர்.

"நாத்திகராக இருந்து கொண்டே ஆத்திகர்களையும் தன்நோக்கத்திற்கு ஒருங்கிணைத்த பெரியாரின் அணுகு முறையும்,அவருடைய நயத்தக்க நாகரிகமும் மற்றவர்கள் கற்க வேண்டிய பாடமாகும்"-என்று கூறுகிற கட்டுரையில், உதாரணங்களாக பெரியார் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

இந்த ஆய்வுகளில் பாராட்டுகள் உண்டு; விவாதங்கள் உண்டு; விமர்சனங்கள் உண்டு; பெருமிதங்கள் உண்டு; நிறைய தகவல்கள் உண்டு. மேலும், சில இடங்களில் திறந்த மனதும் உள்ளது. படிக்க வேண்டிய நல்ல திறனாய்வு நூல் இது.

-

வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்

96, பெரியார் சாலை பாலவாக்கம்

சென்னை, 600041

Pin It