ஆள் அரவமற்ற
மதுரையைத் தரிசித்திருக்கிறீர்களா?

வெளியூர் பயணம் சென்று விட்டு
விடியக்காலையில்
ஊர் திரும்பி வீடு வந்து சேரும் வரை
மூடப்படாமல் இருக்கிறது
இட்லிக்கடைகள்.

எத்தனை மணியானாலும்
பச்சையும், மஞ்சளுமாய்
வாழைப்பழம் விற்பவனுடன்
உடனிருக்கும்
நாயும் தூங்குவதில்லை.

எந்திரச் சத்தங்களற்று போன ஊரில்
தூக்கம் தொலைத்தவர்கள் நிறைய பேர்.
சிவனையே தூங்கவிடாத
கொசுக்கள் பொதுஜனத்தையும்
தூங்க விடுவதில்லை.

கையில் தென்னையோலை
விசிறிகளுடன் வயதான பலர்
கொசுக்களோடு, தூக்கத்தையும் சேர்த்து
தெருவில் விரட்டிக்கொண்டிருக்கின்றனர்.

தேங்காய்ப்பால் வண்டிகளும்
பானிபூரி வண்டிகளும்
மீனாட்சியம்மன் கோவில் தேரைப் போல
மாசிவீதிகளைச் சுற்றி இரவு முழுவதும்
உலா வருகின்றன.

வழக்கம் போல
ரயிலடி அருகே உதட்டுச்சாயம் பூசிய
பெண்களின் இரவு பயமற்ற
காத்திருப்புகள்
கரைத்து விடுகிறது
அவர்களின் பல பொழுதுகளை.

வேர்க்கடலை, மிட்டாய், பழங்களென
வாங்கக் கூடும் கூட்டத்தால்
இரவு இரண்டு மணியிலிருந்து
விடியும் வரை குவியும் கூட்டத்தைப் பார்த்து
கல்லாய் நிற்கும் யானை சிலைகூட
மிரண்டு விடும்.

எப்படியும் விடியும்
பிழைத்துவிடலாமென ஒரு கூட்டம்.
எப்படியும்
பிழைக்கலாம் என ஒரு கூட்டம்.
தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறது
மதுரை.

Pin It