உலக இலக்கியங்களிலேயே ருஷ்ய மண்ணின் இலக்கியம் தனித்துவச் சிறப்புமிக்கது. உலகின் ஏராளமான வட்டார மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதே, அதற்கான மேலோட்டமான சான்று.

உலக இலக்கியக் கோட்பாடுகளிலேயே, மிகப்பெரிய அதிர்வுகளை நிகழ்த்தி, யதார்த்தவாதத்தின் கம்பீரத்தையும் சோசலிச யதார்த்தவாதத்தின் புதிய கட்டமைப்பையும் உலகமெல்லாம் நிலைநிறுத்துவதில் ருஷ்ய இலக்கியம் மிகப்பெரிய பங்களிப்பு செய்திருக்கிறது.

ஊடகங்களும், அதி நவீன இலக்கிய அறிவுஜீவிகளும், இருண்மைவாதிகளும், மார்க்சிய எதிர்ப்பிலும், கம்யூனிச எதிர்ப்பிலும் கண்ணும் கருத்துமான மூர்க்கத்தை குரூரமாகக் கடைப்பிடிக்கிற போதிலும்... அவர்களாலும் மூடி மறைத்துவிட முடியாத மூன்று முக்கியப் பேருண்மைகள்.

1. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் என்ற நிர்ணயிப்பு.

2. மார்க்ஸியப் பின்னடைவும், சோசலிசச்சரிவுகளுமாக நிகழ்ந்து கொண்டிருந்த வரலாற்றுப்போக்கை மறித்து, நிறுத்தி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோசலிச இடதுசாரி சக்திகளின் வெற்றி முகங்களின் கண்ணாக சாவேஸ் என்ற புதிய வரலாற்று முன்னேற்றம்.

3. சாகாவரம் பெற்ற ருஷ்ய இலக்கியப் பரவலின் முடிவில்லாப் பயணத்தில் புதியவேகம்.

அமெரிக்க தேசத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவும்,தனியார்மய பொருளாதார வீழ்ச்சியும் நிகழ்ந்த பிறகு... உலக அறிவு ஜீவிகள் அனைவரும், மார்க்சிய பொருளாதார நூல்களைத் தேடித்தேடி வாசிக்கிற புதிய நிலைமை. மார்க்சிய தத்துவ நூல்களின் அதிவேக விற்பனை முன்னேற்றம்.

சோசலிச சமுதாய அமைப்பையும், சர்வதேச அளவில் மார்க்சியத்தைப் பரப்புகிற கடமையையும் கொண்ட சோவியத் யூனியன் இல்லாமற்போயிற்று என்பது மட்டுமல்ல, மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம், ராதூகா பதிப்பகம் போன்ற மிகப்பெரிய சர்வதேச வியாபகமிக்க பதிப்பகங்கள் முடங்கிப்போன பின்னாலும்.. தமிழில் ருஷ்ய இலக்கியங்கள் கிடைக்கின்றன. என்.சி.பி.எச்.சிலும், பாரதி புத்தகாலயத்திலும், பாவை பப்ளிகேஷனிலும் ருஷ்ய நாவல்கள் சிறுகதைத் தொகுப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

இது எதைக் காட்டுகிறது? உலகமயமும், தனியார்மயமும், தாராளமயமும் பெரும் சூறாவளியாக வளரும் நாடுகளை சுழற்றியடித்து கபளீகரம் செய்து வருகிற மோசமான உலகச்சூழலில்... சோசலிச நாடுகள் பல வீழ்ச்சியடைந்தபின்பும் கூட... ருஷ்ய இலக்கியத்தின் இருப்பையும் பரப்புதலையும் யாரும் முடக்கிவிட முடியவில்லை. வேறு வேறு பதிப்பகங்கள் வாயிலாக புடைத்துக் கொண்டு பிறப்பெடுத்துப் புறப்பட்டு வருவதை ஒழித்துவிட முடியவில்லை.

காரணம், மார்க்சியம் ஒரு வெல்லற்கரிய தத்துவம் என்று சொல்லப்பட்டது எத்தனை சத்தியமான வார்த்தையோ... அதே போல ருஷ்ய இலக்கியமும் வெல்லற்கரிய உயிர்ப்புள்ள இலக்கியம். மனிதகுலத்தின் மனத்தேவைக்குரிய ஜீவனுள்ள இலக்கியம்.

முன்பெல்லாம்... ருஷ்ய இலக்கியம் அதிகமாகப் பரவுவதற்குக் காரணம், அதன் மலிவு விலைதான் என்று குதர்க்கவாதிகள் கூறுவார்கள். நக்கல் சிரிப்புடன் பரிகசிப்பார்கள்.

எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட அலெக்ஸி டால்ஸ்டாயின் "சக்கரவர்த்தி பீட்டர்" என்ற நாவல், வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும். முந்நூறு பக்க, நானூறு பக்க இலக்கிய நூல்கள் யாவும் வெறும் ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்குக் கிடைக்கும்.

வழுவழுப்பான காகிதத்தில் பிழையே இல்லாத கச்சிதமான உயர்ரக-அச்சு வடிவில் கிடைக்கிற நூல்கள் நம்பமுடியாத அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அதற்குக் காரணம், மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம், ராதூகா பதிப்பகம் போன்ற சோசலிச சோவியத் யூனியன் பதிப்பகங்கள் உலகமெல்லாம் சோசலிச சிந்தனைகளைப் பரப்புகிற அரசியல் கடமை உள்ள பதிப்பகங்கள்.

மலிவான விலையால்தான் ருஷ்ய இலக்கியம் பரவுகிறது என்ற குதர்க்கத்தை மறுப்பதற்கு அப்போது இயலவில்லை.

ஆனால்.. அப்படிப்பட்ட மலிவுவிலை என்ற சலுகை துளியுமில்லாத இக்காலத்தில்... தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் தமிழ்நாட்டு சந்தை நிலவரப்படி ருஷ்ய இலக்கியத்தை அச்சிட்டு விற்கிற தற்போதைய தருணத்திலும் ருஷ்ய இலக்கியங்கள் தீவிரமாக விற்பனையாகின்றன என்றால்... அந்தப்பழைய குதர்க்கவாதம் தகர்ந்து விடுகிறது. ருஷ்ய இலக்கியத்திற்கு மனித குலத்திடம் இயல்பான ஒரு மனத்தேவை இருக்கிறது என்ற யதார்த்தம் புரிகிறது.

பொதுவாக... உலக மொழிகள் அனைத்திலும் உரைநடை இலக்கியத்திற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. கற்பனையான புனைவு இலக்கியமாகத் தோன்றி.. மெல்ல மெல்ல விமர்சன யதார்த்தமாக மாறி... அப்புறம்தான் யதார்த்தவாதம் என்ற எல்லையை அடையும்.

பிரெஞ்சுப்புரட்சி உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசு தர்பார்களாக நிலவிய உலகில், ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற குடியரசுக் குரலோடு எழுந்த பிரெஞ்சுப் புரட்சியில் விளைந்த பிரெஞ்சிலக்கியத்தை ஆதர்ஷமாகப் பெற்று எழுந்த ருஷ்ய உரை நடை இலக்கியம், இயல்பாகவே.. பிறக்கும்போதே யதார்த்தவாத இலக்கியமாகப் பிறப்பெடுத்தது. அதன் தோற்றமே எழுச்சிமயமானது. புயலில் பிறந்த இலக்கியம்.

மார்க்சிய மனோபாவம் கொண்ட மாக்சிம் கார்க்கி அலெக்ஸி டால்ஸ்டாய், மைக்கேல் ஷோலக்கோவ் சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாஸூ அலியெவா போன்ற படைப்பாளிகளின் இலக்கியங்களில் மட்டுமல்ல.. ஆன்டன்செகாவ், லியோடால்ஸ்டாய் போன்ற ஜனநாயகச் சிந்தனை கொண்ட படைப்பாளிகளின் இலக்கியங்களிலும் யதார்த்தவாதமே கொடிகட்டிப்பறந்தது. கற்பனார்த்த புனைவு இலக்கியம் என்ற கட்டமேயில்லாமல், எடுத்த எடுப்பிலேயே யதார்த்தவாதமாக பிறப்பெடுத்த ருஷ்ய இலக்கியத்தின் பிறப்பின் தனித்துவம், அதன் இப்போதைய இருப்பின் தனித்துவச் சிறப்பிலும் வெளிப்படுகிறது. அதன்பிறப்பின் தனித்துவமே அதன் சாகாவரம், காலமாறுதல்களைக் கடந்தும் மனிதகுல மனத்தேவையாக நீடிக்கிறது.

ருஷ்ய இலக்கியம் உலகமெல்லாம் ஆழ்ந்த தாக்கம் நிகழ்த்தியிருக்கிறது. ருஷ்ய இலக்கியத்தை வாசித்து வாசித்து வார்க்கப்பட்ட படைப்பாளிகள் படைப்புத்துறையில் நிலைமாறாக் கொள்கைப் பற்றுறுதி கொண்டவர்களாகத் திகழ்வதைக் காண முடிகிறது.

கார்க்கியின் 'தாய்' நாவல், புரட்சிகர வர்க்க அரசியலின் சர்வதேசத் தன்மையை தாய்மைப் பேருணர்வில் குழைத்து எழுதப்பட்டது. அதேபோல அவரது "வாழ்வின் அலைகள்" "பிரம்மச்சாரியின் டயரி", "ஆர்த்தமனோவ் சகோதரர்கள்", "மூவர்" போன்ற நாவல்கள் யாவும் வணிககுலத்து மாந்தர் குணங்களின் உள்முகங்களையும், வர்த்தகத் தொழில் அதிபர்கள் குடும்பத்து உள் நிகழ்ச்சிகளையும், அவர்களை இழுத்துக்கொண்டே கடந்து செல்கிற சமுதாய வளர்ச்சியின் இன்றைய புதுமைகளையும் அடர்த்திமிக்க யதார்த்தவாத மொழிநடையில் எழுதப்பட்டுள்ள நாவல்கள். எனக்கு முந்தைய தலைமுறைக்கு உரமாகவும் ஒளியாகவும் திகழ்ந்த அந்த இலக்கியங்கள், எனக்கும் காலடி வெளிச்சமாகவும், மனப்பாதையாகவும் பயன்படுகின்றன. எனது மகன் வெண்மணிச் செல்வனையும் இதேநாவல்கள் வசீகரித்து வசியப்படுத்துகின்றன.

தலைமுறை கடந்து நிலைபெற்று வாழ்கிற தகுதியும் ஆற்றலும் ருஷ்ய யதார்த்தவாத உரைநடை இலக்கியத்துக்கு நிச்சயமாக உண்டு.

அரசர்களின் பார்வையில் வரலாற்றைச் சொல்வது ஒரு பாணி. சம்பவ அடுக்குகளின் தொகுப்புகளாகச் சித்தரிப்பது மற்றொரு வகை. அறிவு ஜீவிகள் பார்வையில் வரலாற்றைக் கட்டமைப்பது ஒரு வகை.

இயக்கஇயல் சரித்திர பொருள் முதல்வாத வெளிச்சத்தில், உற்பத்தி சக்திகளின், உற்பத்தி உறவுகளின் இயங்குமுறையாலும், தேசத்தின் தேவையாலும் அரசனின் குணபாவமே அமையும் என்று அசலான விஞ்ஞான ரீதியான வரலாற்று நாவல் என்றால் அது, ருஷ்ய எழுத்தாளர் அலெக்ஸி டால்ஸ்டாயின் 'சக்கரவர்த்தி பீட்டர்' நாவல்தான்' அது ஒன்றே ஒன்றுதான்.

துக்ளக் மன்னனைப் போலவே... தப்பிப்பிறந்த 'துக்கிரி'யாக மகா பீட்டர் மன்னரை எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ வரலாறு சித்தரிக்கிறது. ஆனால், அவரை டால்ஸ்டாய் வேறு மாதிரி சித்தரிக்கிறார்.

நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக... வணிக வர்க்கத்தையும் கடந்து அரும்பி வளர்கிற தொழில்முதலாளித்துவத்தின் பிம்பமாக பீட்டரை சித்தரிக்கிறார். டால்ஸ்டாய். வரலாறு 'துக்கிரி' என்று தூற்ற... நாவல் அவரை வரலாற்றின் கதாநாயகனாகச் சித்தரிக்கிறது.

சிங்கிஸ் ஐத் மாத்தவின் 'குல்சாரி' என்ற நாவல், வாசித்தவர் நெஞ்சில் வசிக்கும். குலுங்கா நடையான் என்று அழைக்கப்படும் குதிரையின் தோற்றமும், துள்ளலும், மன ஓட்டமும், தானாபாய் கிழவனின் வாழ்வியல் கண்ணீர் வெதுவெதுப்பும் மறக்கவே முடியாதவை. வாசித்த மனசுக்குள் உயிர்ப்புடன் இயங்கிவளரும். ஜமீலா, அன்னைவயல், முதல் ஆசிரியர் போன்ற அவரது நாவல்களும், போரும், காதலும், தாய்மையும் கலந்த உணர்ச்சிமிக்க காவியங்கள்.

பாஸூ அலியேவா எழுதிய "மண்கட்டியை காற்று அடித்துப்போகாது" என்ற நாவல் கவித்துவச் செறிவுமிக்க கதைக்காவியம். அதில் வருகிற அவேரியப் பழமொழிகள் அமரத்துவப் பேரழகுமிக்கவை. அவேரியா என்பது மலைவாசிப் பகுதி. லிபியேயில்லாத மொழியைக் கொண்டது. அந்த மண்ணிலிருந்து மாஸ்கோவுக்கு கல்லூரிக்கல்வி கற்க பயணப்பட்ட முதல்பெண்தான் பாஸூ அலியேவா என்று படைப்பாளி. அந்த நாவலின் தாத்தாவும் பாட்டியும் சாகாவர மனிதர்கள்.

'உண்மை மனிதனின் கதை' என்ற ருஷ்ய நாவல் போரின் வலிய திர்வுகளைச் சொல்கிற நாவல். போரினால் வீழ்த்தப்பட்டாலும், மனசால் வீழ்ந்துபோகாத ஒரு செம்படை வீரமனிதனின் மனவலிமைமிக்க போர்க்குணத்தை உயிரும் சதையுமாகச் சொல்கிற நாவல்.

சாவின் புதைக்குழிககுள் கிடக்கிற அவனை வேட்டையாடுகிற ஓநாய்களால் உயிர்ப்புற்று, பனிக்கட்டிகளால் போராடி... தவழ்ந்து தவழ்ந்து.. ஊர்ந்து ஊர்ந்து பதினெட்டு நாட்கள் நகர்ந்து, கிராம மக்கள் கண்ணில்படுகிற அந்தப் போர்வீரன் காப்பாற்றப்படுகிறான். காலை காப்பாற்ற முடியவில்லை.

பொய்க்காலை மாட்டி, பயிற்சி எடுத்து.. அதிகாரிகளுடன் விதிகளுடன்போராடி.. மல்லுக்கட்டி, போர்விமான ஓட்டியாக செல்வதில் அவன் காட்டுகிற வைராக்கியம் நம்மைச் சிலிர்க்க வைக்கும். (இந்த நாவல், பாரதி புத்தகாலய வெளியீடு)

மைக்கேல் ஷோலக்கோவ் நாவலான 'டான் நதி அமைதியாக ஓடுகிறது' என்ற நாவல், ருஷ்ய நாட்டின் போர்க்குணமிக்க தனித்துவ பண்புமிக்க கொசாக்கியர்களின் அக உலக வரலாற்றையும், புற உலகப் போராட்டங்களையும் பதிவு செய்கிற நாவல்.

லியோடால்ஸ்டாயின் போரும் அமைதியும் மட்டுமல்ல, அன்னகரீனா போன்ற அத்தனை நாவல்களும் மானுடப்பேரன்பை வலியுறுத்துகிற அற்புதப்படைப்புகள், 'புத்துயிர்ப்பு' என்ற நாவல் வாசித்தவரை உழுது புரட்டிப்போடுகிற மகத்தான காவியம்.

பிறக்கும்போதே யதார்த்தவாதப் பண்போடு பிறந்த ஜனநாயகச் சிந்தனையும், சமத்துவநோக்கும் கொண்ட ருஷ்ய இலக்கியம், சோசலிச யதார்த்தவாதமாக பரிணமித்தது. 'வீரம்விளைந்தது' போன்ற காவியமாயிற்று.

அதன் வீர்யமிக்க யதார்த்தம், வாழ்வின் இருண்ட மூலைகளையும், மனிதனின் ஒளிமிக்க ஆளுமைகளையும் ஒருசேர உணர்த்தியது.

அதனால்.... அவை காலம் கடந்தும் அனைத்துத் தலைமுறை மாந்தருக்கும் ஒளியும் உரமும் தருகிற இலக்கியச் செல்வமாகத் திகழ்கின்றன.

என்.சி.பி.எச், பாவை பள்ளிகேஷன்ஸ், பாரதி புத்தகாலயம் போன்ற பதிப்பகங்கள் ருஷ்ய இலக்கியங்களில் சிலவற்றை நூல்களாக வெளியிடுகின்றன. இன்னும் உள்ள அனைத்து ருஷ்ய இலக்கியப் படைப்புகளையும் தமிழில் நூல்களாக வெளியிடவேண்டும்.

ஏனெனில், ருஷ்ய இலக்கியம், புரட்சியில் பூத்த சத்திய இலக்கியம். சகலமனிதர்களின் மனத்தேவையாக இருந்து வருகிறது.

 

Pin It