பேருந்திலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு, "நவுருங்க நவுருங்க, வழிவுடுங்க" என்று சொல்லிக் கொண்டே இறங்கி அனிச்சைச் செயலாய் தொடையைத் தொட்டுப்பார்த்த போது 'பகீர்' என்று இருந்தது. பர்ஸைக் காணவில்லை.

இந்தப் பேருந்தில் ஏறும்போது அடித்திருப்பார்களா இறங்கும்போது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமாக இருந்தது. இந்தப் பட்டிமன்றத்தை மனத்தில் நடத்தி முடிவெடுப்பதற்கு முன்னால் ஏன் ஏறி இறங்கினேன் என்பதைச் சொல்ல வேண்டும்.

நாளை காலை 6.45 மணிக்கு என்மகன் மும்பை செல்ல விமானத்தைப் பிடிக்க வேண்டும். இங்கு கடலூரில் இரவு பதினோரு மணிக்கு வண்டி ஏறினால் விடியலில் நான்கு மணிக்கெல்லாம் மீனம்பாக்கம் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தோம். பத்து மணிக்கே பேருந்து நிலையம் வந்துவிட்டோம். ஆனால், எந்த வண்டியிலும் கால்வைக்க முடியவில்லை.

அவ்வளவு கூட்டம். எல்லோரும் சென்னை நோக்கியே ஏன் படையெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை நாளை அதிகாலை முகூர்த்தமாக இருக்கலாம், சனி, ஞாயிறு விடுமுறைக்கு வந்தவர்களாக இருக்கலாம்; ஏதேனும் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்குப் போக வேண்டியவர்களாக இருக்கலாம்; அதுசரி எல்லாமும் நாங்கள் ஏறும்போதுதானா ஏற்பட வேண்டும்.

நிலையத்தில் நிற்பவர்கள் அனைவருமே சென்னை செல்ல வேண்டியவர்கள் போலத் தோன்றியது. "நான் இடம் போட்டு வருகிறேன்" என்று நிலையத்தின் நுழைவாயிலில் சென்று நின்று கொண்டேன். சென்னை வண்டிக்காக உறுமீன் வருமளவும் காத்து நிற்கும் கொக்குபோல வழிபார்த்து இருந்தேன். சிறுமீன்களாக பல ஊர்கள் செல்லும் வண்டிகள் எல்லாம் வந்தபின்னர் உறுமீன் வண்டி வந்தது. அதில் பனிமனையிலிருந்தே சிலர் ஏறி வந்தது ஆச்சரியமாக இருந்தது.

மெதுவாக உள்ளே வந்த வண்டியின் கடைசிப்படியில் கால் வைத்ததும் நான் உள்ளே தள்ளப்பட்டேன். முன்னால் பக்கத்தில், பின்னால் என்றுஎனக்குப் பாதுகாப்புத் தருவதுபோல நெருக்கினார்கள்.

ஒருவழியாய் உள்ளே போய் உட்கார்ந்தேன். விழுப்புரம் சீதாராமில் அரசகட்டளை படம். முதல்நாளில் முதல் காட்சிக்கு சீட்டு வாங்கி வெற்றி பெற்றது போல மகிழ்ந்தேன். ஆனால், மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

வண்டி நிற்கும் இடத்திற்கு வந்ததும் கீழே பெரிய பெட்டியுடன் இருந்த மகனை நோக்கி, "இங்க வா எடம் போட்டிருக்கேன், ஏறி உள்ள வா" என்று குரல் கொடுத்தேன். அவன் சொன்னான்.

என்னாப்பா இதுல ஏறிட்ட... இது மீனம்பாக்கம் போகாதுப்பா, ஈசிஆர் வண்டி இது"

"அப்படியா" என நினைத்துப் பக்கத்தில் இருந்தவரிடம் "ஏங்க இது ஈசிஆர் வண்டியா" என்று உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டேன்.

"ஆமாங்க, முன்னால போட்டிருக்க" என்று கூறிய அவர் "அதை நீ பாக்கலியாட மடையா" என்று சொல்லவில்லை. ஆனால், மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பார். என் தவறை உணர்ந்தேன். ஆனால், யாராவது அதை ஒப்புக் கொள்வார்களா?

மீண்டும் கீழே பார்த்து, "பரவாயில்லை, ஏறிக்கடா; கிண்டியில எறங்கி ஆட்டோவுல போயிடலாம்" என்றேன். இந்தக் காலத்தில்எந்தப்பிள்ளை தந்தைச் சொல்லைக் கேட்கிறான்.

"அதெல்லாம் விடிகாலை சரியா வராது: நீங்க கீழே எறங்குங்க" என்று நீதிபதியின் தீர்ப்புபோல மேலே வாதங்கள் இல்லை என்று முடிவெடுத்துக் கூறிவிட்டான்.

அப்புறம் என்ன செய்வது: ஏறியது போலவே இறங்கும்போதும் மக்கள் திருவிழாக் கூட்டத்தில் புகுந்து வழி ஏற்படுத்திக் கொண்டு, "ஏன் சார், பாத்து ஏறக் கூடாது? படிச்சவங்க மாதிரி தெரியறீங்க" என்ற அறிவுரையெல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு இறங்கி முடித்தேன்.

பேன்ட் சட்டை என்றால் படிச்சவங்க என்று எண்ணும் மனோபாவம் ஆங்கிலேயர் ஏற்படுத்திய சட்டம் என்பதை நான் முன்பே அறிவேன்.

"நான் என் பேன்ட்" பையைத் தொட்டுப் பார்ப்பது கண்டு மகன் கேட்டான்.

"என்னாங்கப்பா என்னாச்சு?"

"பர்ஸைக் காணோம்;" யாரோ அடிச்சுட்டாங்கன்னு நெனக்கிறேன்.

"உள்ள என்ன இருந்தது?"

"ஏடிஎம் அட்டை வேற இருக்குது..." என்று நான் சொல்லத் தொடங்கும் போதே "ஏடிஎம் கார்டுல்லாம் அதில ஏம்பா வைக்கறீங்க" என்று குறுக்கிட்டது கோபம் வந்தது.

"தொலைக்கணும்னா வைச்சேன்; நேத்திக்குப்போய் பணம் எடுத்தது; அப்படியே இருந்தது" என்றேன்.

"வரும்போது எடுத்துகிட்டுதான் வந்தீங்களா! நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க"

"நல்லா நெனவிருக்கு எடுத்துகிட்டுதான் வந்தேன்" அரசன் அரண்மனை விட்டுக் கிளம்பும்போது குடைபிடிப்பவன், சாமரன் வீசுபவன்,பராக் சொல்பவன், அமைச்சர், படைத்தளபதி யானை, குதிரை, மற்ற பணியாளர் என்று பரிவாரமே புறப்பாடு செய்வது போல என்னுடன் எட்டுப் பொருட்கள் கிளம்பும்.

நான் அவற்றைப் பாராட்டி எண்ணிக் கொள்வது வழக்கம். பேனா, கைக்குட்டை, சீப்பு, செல்பேசி, மூக்குக்கண்ணாடி (இதை கண் கண்ணாடி என்றுதானே சொல்ல வேண்டும்) கைக்கடிகாரம், வண்டிச்சாவி, பர்ஸ் என்ற எட்டுத் துணைவர்களும் எனக்கு என்றும் அஷ்ட திக்கஜங்கள் போல.

அந்த நேரத்தில் எட்டு என்ற எண் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாமே! அதை இனிமேல் மாற்றிவிடுவோமா? ஏதாவது ஒன்றைக்கூட்ட வேண்டும் அல்லது ஒன்றைக் குறைக்க வேண்டுமென்று வேண்டாத எண்ணமெல்லாம் எண்ணி மனம் குழம்பியது.

எதற்கும் வீட்டில் வழக்கமாக வைக்கும் இடத்தில் பர்ஸ் இருக்கிறதா என்று அறிய வீட்டுக்குப் பேசினேன்.
என் மனைவி வீடெங்கும் தேடிப் பார்த்து, வீட்டில் குடி இருப்பவரையும் சாட்சிக்காக அழைத்துத் தேடச் சொல்லி இல்லை என்று இருவரும் ஏகமனதாக முடிவெடுத்து எனக்குத் தெரிவித்தார்கள்.

"பர்சில எவ்வளவு பணம் இருந்துச்சு?"என்று மகன் கேட்டான். பேன்ட் பையில் எடுத்து வைக்கும்போது அதைப்பிரித்து உள்ளே இருந்தவற்றை எடுத்து எண்ணிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள், நான்கு நூறு ரூபாய் நோட்டுகள் மற்றும் மூன்று பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. சில்லறைகள் முக்கியமான நேரங்களில் மட்டுமே தேடப்படக் கூடியவை.

"ஆயிரத்து நானூத்தி முப்பது ரூபா இருந்திச்சு"

"சரி போனால் போவுது; நாளைக்கு காலை மொதல்ல பேங்குக்குப் போய் ஏடிஎம் கார்டை லாக் பண்ணச் சொல்லுங்க... போனாப் போவுது..." என்று சொல்லி அவன் என்னைப் பார்ப்பது ஒரு பரிதாபமான ஜந்தைப் பார்ப்பது போல் இருந்தது.

"எப்பொழுதும் இதைப்போல நடந்ததில்லை. எவ்வளவோ பணம் எடுத்து வந்திருக்கிறோம். ஆனால், இப்போதுதான் இந்தநிலையம் மோசம் என்று சொல்கிறார்கள்" என்றெல்லாம் மனத்துள் புலம்பிக்கொண்டு மேலே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது சென்னை வண்டி ஒன்று வந்தது. அது திண்டிவனம் வழியாகப்போகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஏறினேன். இடம்பிடித்து மகனை அழைத்து உட்காரவைத்து கீழே இறங்கினேன்.

இந்தப்பேருந்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. எனது ரூபாயை எடுத்துக் கொண்டு போவதற்காகவே அதில் கூட்டம் வந்தது போல்இருந்தது.

சென்னை வண்டி நகர்ந்தது. உள்ளே இருந்து 'மொதல்ல பேங்குக்குப் போய் சொல்லிடுங்க' என்று கையை ஆட்டிக் கொண்டே மகன் கூறியது காதில் விழுந்தது.

இப்பொழுது என்ன செய்யலாம்? நாளை காலையில் விழுப்புரம் வங்கிக்குப் போக வேண்டும்; அட்டை தொலைந்த விபரம் சொல்ல வேண்டும்; புது அட்டை வாங்க வேண்டும் என்றெல்லாம் நான் கவலைப்படுவதைப் பொருட்படுத்தாமல் பேருந்துகள் பல ஊர்களுக்குப் போய்க் கொண்டிருந்தன.

அடிவயிற்றில் பசி எடுப்பது போல, தலைவலிப்பது போல, கால்கள் எல்லாம் குடைவது போல உணர்வுகள் ஏற்பட்டன.
பட்டென்று சீராளனின் நினைவு வந்தது. இந்த வங்கி வேலை, மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்றம் இங்கெல்லாம் பழக்கம் உடையவர் அவர்தாம். என்னுடன் பணிபுரியும் சாமர்த்தியக்காரர். பட்டுக்கோட்டையார் போல முப்பது வயதுக்குள் நாற்பது வேலைகள் பார்த்தவர். இன்னும் அவர் ஹெலிகாப்டர் மட்டும்தான் ஓட்டவில்லை. காரணம் அது கிடைக்காததால். எதிலும் தக்கமுறையில் துணிச்சலோடு நுழைபவர்.

அவரிடம் அங்கிருந்தபடியே பேசினேன்.

"சீராளன்தானே? எங்கிருக்கீங்க?"

"என்னாங்கய்யா? சொல்லுங்க"

"நீங்க எங்க இருக்கீங்க? வீட்லதானே?"

"இல்லீங்க; நான் புதுச்சத்திரம் வரைக்கும் ஒரு வேலையா வந்திருக்கிறேன்; என்னங்க விஷயம்?"

"அப்படியா... வீட்டுக்கு எப்ப வருவீங்க; ராத்திரியேவா? காலையிலயா?"

"ஏங்க; என்னா விஷயம்? சொல்லுங்க"

"வந்து நான் இங்க கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து பேசறேன்; இங்க என் பர்ஸை எவனோ அடிச்சுட்டான்;"

"அய்யய்யோ! எப்படிங்க"

"சென்னை வண்டியில பையனை அனுப்பறதுக்கு ஏறி எடம் போடப் போனேன்; ஒரே கூட்டம்"

"எத்தனை மணிக்குங்க சொல்லுங்க"

"இப்பதான் ஒரு பதினைஞ்சு நிமிஷம் இருக்கும்"

"இருங்க... அப்படீன்னா... இங்க என் பக்கத்துல ஒரு ஏட்டு இருக்காரு; அவருகிட்ட பேசுங்க" என்று அவரிடம் அவன் பேசியைக் கொடுத்தார்.

"ம்... அலோ... சொல்லுங்கய்யா" என்றார் அவர்.

"வந்துங்க, ஒரு பாஞ்சு நிமிஷம் முன்னாடி வண்டியில ஏறி இடம் போடறச்சே..." என்று தொடங்கினேன்.

"கொஞ்சம் ஒரக்க சத்தமா பேசுங்க, காதில விழல;" என்றார் அவர்.

"பெரியார்ல ஏறி இடம் போடச்சே யாரோ பர்ஸை அடிச்சுட்டாங்கய்யா"

"எங்க போற வண்டி"

"சென்னைக்குப் போறதுங்க; ஈசிஆர் வண்டி"

அவர் உடனே சொன்னார். "நீங்க ஒண்ணு செய்யுங்க, அப்படியே செல்ல நிறுத்தாம பேசிக்கிட்ட போயி ஸ்டாண்டு உள்ள இருக்கிற போலீஸ் பூத்கிட்டபோங்க".

நான் உரக்கப் பேசி கொண்டே போவதை அனைவரும் வேடிக்கை பார்த்தனர். பல ஊர்கள் செல்லும் பயணிகள், வெற்றிலைபாக்குக் கடைக்காரர், பொட்டலம் விற்பவர், பூக்கடை வைத்திருப்பவர், பழக்கடைக்காரர் போன்று நிலையத்தில் இருந்த எல்லாருக்கும் நான் பர்ஸ் தொலைத்த விவரம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பேசியில் பேசிய ஏட்டு பர்ஸின் விவரம் உள்ளே என்னென்ன இருந்தன என்று விவரம் கேட்டவர், "உள்ள போயி கோபுன்னு ஒரு கான்ஸ்டபிள் இருப்பாரு; அவருகிட்ட ஒங்க செல்லக்குடுத்து எங்கிட்ட பேசச் சொல்லுங்க" என்றார்.

என் காதில் செல்லே ஒட்டிக்கொண்டுவிட்டது போல் எரிய ஆரம்பித்தது. அங்கே நின்று கொண்டிருந்த சிதம்பரம், விருத்தாச்சலம், சேலம், புதுச்சேரி பேருந்துகளைத் தாண்டிப் பேசிக் கொண்டே சென்றேன்.

கழிவகம் பக்கத்தில் இருநத காவலர் அறையில் யாருமே இல்லை. உடனே வெளியில் வந்தேன். "அய்யா, இங்க யாரும் இல்லியே" என்று பேசியவாறு அந்த அறை முன்னால் இருந்த தூணருகில் வந்து நிற்கும் என்னை நோக்கி நான்கு பேர் வந்தனர்.

அவர்களில் ஒருவன், "ஐயா, இது ஒங்க பர்ஸா, பாருங்க" என்றான். அவன் கையில் என் பர்ஸ் இருந்தது. செல்பேசியை உடனே அணைத்தேன். "ஆமாம்பா, என்னுடையதுதான்" என்றேன்.

அனைவருமே பேன்ட் சட்டையுடன் தலைமுடி கலைந்து காணப்பட்டனர். இருவர் மீசை வைத்திருந்தனர். அவர்களுக்கு பதினேழு அல்லது இருபது வயது இருக்கலாம். ஒருவன் சட்டை மேல் பொத்தான் போடவில்லை.

முன்னால் இருந்தவன் கையில் என் பர்சும், அதன்மேல் ஏடிஎம் அட்டை, ஓட்டுனர் உரிமங்கள், முகவரி அட்டைகள் இருந்தன.

"எங்க கெடச்சுது?" என்று கேட்க, ஒருவன் "சந்துல கெடந்தது" என்றான். " எந்த சந்துல?" என்று கேட்டவுடன் பட்டென்று "தோ நிக்குது பாருங்க, வடலூர் வண்டி; இதுலதான் சந்துல கெடந்தது. எல்லாம் சரியா இருக்கா பாருங்க" என்றான் சட்டை பொத்தான் போடாதவன்.

கையில் வாங்கினேன். ஏடிஎம் அட்டையைப் பார்த்ததுமே எனக்குப்போன உயிர் திரும்பி வந்துவிட்டது. வாங்கியபோது "அட்டையில ஒங்க நெம்பர் இருந்தது பேசலாம்னு நெனச்சோம் என்று ஒருவன் கூறினான். "எங்கப்பா இதுல இருந்த பணம் எல்லாம் காணோம்" என்று நான் கேட்டவுடன் "அதெல்லாம் தெரியாதுங்க, அப்படியே கொண்டாந்து குடுக்கறோம்' என்றான் ஒருவன்

"எப்படி எங்கிட்ட வந்தீங்க" என்று கேட்டேன். "நீங்க ஒரக்க செல்லுல பேசிக்கிட்டே வந்ததைப் பார்த்து ஒங்க பின்னாடியே வந்துவிட்டோம்" என்றான் ஒருவன். இவன்தான் சற்று உயரம் குறைவாக இருந்தான்.

"சரி, பணம்தான் பேச்சு, அட்டையாவது கெடச்சுதே" என்ற முணுமுணுப்புடன் வைத்துக் கொண்டு காவலர் அறையைப் பார்த்தால் அங்கு ஒருவர் வந்து இருந்தார். உள்ளே போய் அவரிடம் விவரம் சொல்லி "இவங்கதான் கொண்டு வந்தாங்க" என்று வெளியில் வந்து பார்த்தால் யாரையும் காணோம்.

சீராளனுடன் இருந்த ஏட்டுடன் கோபு பேசினார். பிறகு நானும் சீராளனிடம் பேசி, "விவரமா காலைல சொல்றேன்" என்றேன்.

வண்டியில் தெருமுனைக்கு வரும்போது என் வீட்டு முன்னால் சிறு கூட்டமே இருப்பது தெரிந்தது. என் பர்ஸ் தொலைந்தவிவரம் சற்று முன் வந்த செய்தி என்று தொலைக்காட்சியில் போட்டுவிட்டார்களோ என்று சந்தேகம் வந்தது. நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். "பஸ் ஸ்டாண்டு போறதுக்கு ஏன் சார் அவ்வளவு பணம் எடுத்துக்கிட்டுப் போனீங்க?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

"ஏடிஎம் அட்டையைப் பர்சில வைக்காதீங்க" என்ற அறிவுரையும் ஒருவர் மூலம் வந்தது. "கொண்டு வந்து குடுத்தாங்களே அவனுவதான் எடுத்திருப்பாங்க'' என்றார் குடியிருந்தவர்.

"இருக்கும் இருக்கும்; பர்சை அடிச்சுட்டு நீங்க என்ன செய்றீங்கன்னு பாத்து இருப்பாங்க; போலீஸ் பூத்துகிட்ட போறது தெரிஞ்சதும் வந்துட்டாங்க; அவங்களுக்கும் இவங்களுக்கும் தொடர்பு இருக்கும்" என்றார் எதிர் வீட்டுக்காரர்.

"இல்ல, உண்மையில் கீழ கெடந்தும் கொண்டு வந்திருக்கலாம்ல" என்றாள் என் மனைவி. நான் ஆராய்ந்து பார்க்கிற மனநிலையில் இல்லை. எப்படியோ ஏடிஎம் அட்டை கெடச்சதே எனக்கு நிம்மதியாயிருந்ததால் நான் எதற்குமே பதில் பேசவில்லை.

Pin It