இஎம்எஸ் நூற்றாண்டு

உலகில், நம் நாட்டில் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், சுதந்திர இயக்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பத்திரிகை ஆசிரியராகவும் பணிசெய்திருக்கிறார்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ராஜாராம் மோகன்ராய், காந்திஜி, அம்பேத்கர், திலகர், அரவிந்தர், அன்னிபெசன்ட், அபுல்கலாம் ஆசாத், பாரதியார், பெரியார், சிங்காரவேலர், ஜோதிபாசு, பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி... என இவர்களின் பட்டியல் நீளும். இவர்களைப் போலவே புகழ்வாய்ந்த பெரும் தலைவராகிய இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்களும் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இஎம்எஸ் ஆசிரியராகப் பொறுப்பேற்ற முதலாவது பத்திரிக்கை "ப்ரபாதம்" என்கிற மலையாள வாரப் பத்திரிகை. ப்ரபாதம் என்றால 'விடியல்' என்று அர்த்தம்.

இந்த ஏடு ஒரு நபருக்குச் சொந்தமானதாக சிறிது காலம் பாலக்காடு நகரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. இதை ஆரம்பித்தவர் கே.எஸ்.நாயர் என்பவர். அவருக்சு சொந்தமாக ஒரு அச்சகமும் இருந்தது. பல காரணங்களால் அப்பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை. ப்ரபாதம் அச்சகத்தை விற்றுவிட முடிவு செய்தார். இதுபற்றி மலையாளத்தில் எழுதிய "ஆத்மகத" (சுயசரிதம்) எனும் தமது நூலில் இஎம்எஸ் இவ்வாறு கூறுகிறார்.

"ஒரு வாரப் பத்திரிக்கையும், சிறு பிரசுரங்களும் அச்சிட்டு வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள அந்த அச்சகத்தை நாங்கள், விலைக்கு வாங்கினோம். 'ப்ரபாதம்' என்கிற பெயரிலேயே ஒரு வாரப் பத்திரிகையை சொர்ணாவூரிலிருந்து துவக்கினோம். (ஆண்டு 1935 ஜனவரி)

"கேளரா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக என்னை ஆசிரியராகக் கொண்டு அது வெளிவந்தது. அச்சகம் வாங்கியதற்கான விலை கொடுப்பது, வாரம்தோறும் அச்சிடுவதற்கான காகிதம் வாங்குவது, அச்சு எழுத்துடைப்புகளும் இதர சாதனங்களும் வாங்குவது, மற்ற உபகரணங்களைப் பழுது பார்ப்பது, அவசியமாய்த் தேவைப்படுகிற பிற பொருட்களை வாங்குவது, தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுப்பது, பத்திரிகைத் தொடர்பான, நிர்வாகம் தொடர்பான பணிகளைச் செய்கிற எங்களுக்காகும் செலவுகளைக் கவனிப்பது - ஆகிய இவற்றுக்கெல்லாம் தேவையான பணம் திரட்டுவது மிகக் கஷ்டமான வேலையாக இருந்தது. ஆனாலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்தோம்.

ப்ரபாதம் பத்திரிகைக்கு இஎம்எஸ் ஆசிரியர் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 26. அன்று கல்கத்தாவிலிருந்து வெளிவந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய பத்திரிகையாகிய "காங்கிரஸ் சோசலிஸ்ட்" என்கிற ஆங்கில வாரப் பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளை இஎம்எஸ் மற்றும் அவரது தோழர்களும் மலையாளத்தில் மொழிபெயர்த்து ப்ரபாதத்தில் பிரசுரித்தனர்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக குரல்கொடுத்த அந்த ஏடு கேரளப் பிரச்சனைகளை ஆராய்ந்து எழுதியது; கேரளத்தில் வளர்ந்து வந்த தொழிலாளரின் வர்க்கப் போராட்டங்களுக்கு உத்வேகமளித்தது சோசலிஸக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தது.

பிரிட்டிஷ் பார்லிமெண்டில் நிறைவேற்றப்ட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து ப்ரபாதம் ஒரு தலையங்கம் எழுதியது. அதன்தலைப்பு : "தகர்த்திடுக!" என்பதாகும். பிறகு அந்தச் சொல் காங்கிரசில் இருந்த இடதுசாரிகளின் முழக்கமாகவே இந்தியாவெங்கும் ஒலித்தது என்கிறார் இஎம்எஸ் பிரிட்டிஷ் பார்லிமென்ட் நிறைவேற்றிய இந்திய அரசியல் சட்டத்தைப் "பயன்படுத்த வேண்டும்" என்ற வலதுசாரித் தலைவர்களின் அணுகுமுறைக்கு எதிரானதாகவும் இருந்தது. இந்த "தகர்த்திடுக" முழக்கம்.

ப்ரபாதம் ஏட்டை நீடித்து நடத்த முடியவில்லை. ஏழு மாதக் குறுகிய காலத்திலேயே நின்றுபோனது. அதற்குக் காரணம் ஒரு கவிதை!

சொவ்வர பரமேஸ்வரன் என்கிற கவிஞர் எழுதிய "விப்லவம் ஜெயிக்கட்டெ!" (புரட்சி வெல்லட்டும்!) எனும் தலைப்பிலான கவிதையை ப்ரபாதம் பிரசுரித்தது இதுகண்டு பிரிட்டிஷ் அரசின் கலெக்டருக்குக் கடுங்கோபம். இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தேச துரோகக் கவிதையென்று ப்ரபாதத்திற்குத் தண்டனையாக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த இயலாததால் இப்பத்திரிகை நிறுத்தப்பட்டது.

எனினும் இஎம்எஸ்-ஸு இதர இடதுசாரித் தலைவர்களும் சோர்ந்து சும்மா இருந்துவிடவில்லை. 1938 ஏப்ரல் மாதம் கோழிக்கோட்டிலிருந்து ப்ரபாதம் மீண்டும் வெளிவந்தது. இப்போதும் இஎம்எஸ்-ஸே அதன் ஆசிரியர். நிதிநெருக்கடியினாலும் ஆட்சியாளர்களின் நெருக்கடியினாலும் மிக்க சிரமத்துடன் நடந்து கொண்டிருந்த இந்த ஏடு 1942இல் நின்று போனது.

ப்ரபாதத்தின் ஆசிரியராக இஎம்எஸ் இருந்ததுடன், அதன் நிர்வாகியாக ஏ.கே.கோபாலன் இருந்தார்.

ப்ரபாதத்திற்கு அடுத்து 1942ல் வந்தது "தேசாபிமானி" வார இதழ். ப்ரபாதத்தின் தொடர்ச்சிதான் தேசாபிமானி என்கிறார் இஎம்எஸ். மேலும் அவர் கூறுகிறார்.

"தேசாபிமானி வார இதழ் தொடர்ந்து உருவான தேசாபிமானி நாளிதழ், சொர்ணாவூர் ப்ரபாதம், கோழிக்கோடு ப்ரவாதம் - இவையெல்லாம் தொழிலாளி வர்க்க அரசியல் வரலாற்றின் மைல் கற்கள்"

"தேசாபிமானி"யைத் துவக்குவதற்காக இஎம்எஸ் தம் மூதாதையர் சொத்திலிருந்து தமது பங்காகக் கிடைத்த சொத்தினைவிற்று ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். ஐம்பதாயிரம் ரூபாய் என்பது அறுபது வருடங்களுக்கு முன்பு இன்றைய மதிப்பில் பல இலட்சங்களாகும்! தேசாபிமானிக்காக ஏ.கே.கோபாலன் பம்பாய்க்கும், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று நிதி உதவிகள் பெற்று வழங்கினார்.

1946 ஜனவரியில் கோழிக்கோட்டிலிருந்து நாளிதழாகத் துவக்கப்பட்ட தேசாபிமானி முதலாவது இதழில் இஎம்எஸ் இவ்வாறு எழுதினார்.

"பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு புறத்திலும், பாசிஸ்ட் ஐந்தாம் படையினர் மறுபுறத்திலும் நின்று இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தேசத் தலைவர்களின் பிரிவினால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எதிரியை விரட்டியடித்து சுதந்திரம் பெற வேண்டியிருக்கிறது. ஆபத்தும் அவசரமும் நிறைந்த காலம் இது. இன்றையதேவை செயலற்றுக்கிடப்பதல்ல. சரியான உத்வேகத்துடன் இலட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டியுள்ளது.

"கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நீரோட்டத்தில் எதிர்நீச்சலடித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்; நீரோட்டத்திற்கு எதிராக நீச்சலடித்து இலட்சியத்தை அடைந்தே தீர வேண்டும். இல்லையெனில் சர்வநாசம்தான். ஆகவே, தோழர்களே! சிறிதும் தயங்காமல் முன்னேறுங்கள்! மக்களுக்கு விஷயங்களை விளக்கிச் சொல்லி அவர்களையும் முன்னேறச் செய்யுங்கள்! விளக்கவுரை - விளக்கவுரை மீண்டும் மீண்டும் விளக்கவுரை..."

-இஎம்எஸ்ஸின் உணர்ச்சிக் கொந்தளிப்பான வரிகள் - காலத்தை முன்நிறுத்தி தோழர்களுக்கு விடுத்த அறைகூவல்கள். மாமேதை லெனின் கூறியதுபோல் 'கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகை என்பது ஒரு கூட்டுப் பிரச்சாரகனாக மட்டுமின்றி, ஒரு கூட்டுக் கிளர்ச்சியாளனாகவும், ஒரு கூட்டு அமைப்பாளனாகவும் அனைத்து நேரங்களிலும் அனைத்து சூழ்நிலைகளிலும் செயல்படுகிறது.'

ஆம்! கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையானது கட்சித் தோழர்களாடு இணைந்து பிரச்சாரம் செய்கிறது; போராட்டத்தில் தோழர்களோடு சேர்ந்து பங்கேற்கிறது; கட்சியைக் கட்டமைக்கும் பணியைத் தோழர்களோடு சேர்ந்து செய்கிறது. இந்தப் பணிகளில் கட்சிப் பத்திரிகைக்கு ஓய்வு என்பது எப்போதும் இல்லை!

இத்தகைய முதன்மையான பணிகளை தினம் ஆற்றும் கட்சிப் பத்திரிகையை கட்சித் தோழர்கள் வாங்கிப் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இஎம்எஸ் "பார்ட்டி பத்ரம் வெகுஜனப் பத்ரம்" என்கிற தலைப்பில் மலையாளத்தில் எழுதிய தமது கட்டுரையில் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் தீர்மானத்தையே முன் வைத்து வலியுறுத்திக் கூறியுள்ளார்.

"தேசாபிமானியைத் துவக்கிய காலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக இருந்த கேரளத்தில் இன்று (1992) இரண்டே கால் இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் தலைமையில் செயல்படுகிற வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களின் எண்ணிகைக 64 லட்சம் வரும். இவர்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்களத்தில் இறக்கிவிட்டால் கேரளத்திலே வேறு எந்தப் பத்திரிகையைக் காட்டிலும் கூடுதலான வளர்ச்சியை தேசாபிமானி பெற முடியும். இந்த உண்மையை மனதிற்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு நடைமுறைப்படுத்துவதற்கான இரண்டு அறிவுறுத்தல்களை முன்வைத்துள்ளது.

1. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஒன்று தேசாபிமானியின் சந்தாதாரர் ஆக வேண்டும்; அல்லது அவர் மற்ற ஒருவரை தேசாபிமானியின் சந்தாதாரராகச் சேர்க்க வேண்டும். இது நிறைவேறிவிட்டால் தேசாபிமானிக்கு இரண்டு லட்சத்திற்கும் மேலான சந்தாதாரர்கள் கிடைப்பார்கள்.

2. கட்சி உறுப்பினர்கள் தலைமை வகிக்கிற வர்க்க - வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 64 லட்சம் உண்டல்லவா? அவர்களிடமிருந்து பத்து பத்துப் பேர் கொண்ட தேசாபிமானி வாசகர் குழுக்களை அமைத்து, அந்த ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு தேசாபிமானி பிரதியை வாங்கினால் ஆறு லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகும்"

கட்சி மாநிலக்குழுவின் இந்தத் தீர்மானத்தை எடுத்துக் கூறிய இஎம்எஸ் மேலும் சொல்லுகிறார்:

"இந்த இரண்டு பணிகளையும் நிறைவேற்றுவதற்கான அறைகூவலை மாநிலக்குழு விடுத்திருந்த போதிலும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் மிக அடிமட்டத்தில் உள்ள கிளைகள் வரை ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.... கட்சிக்கு உள்ள இந்த வெகுஜன அஸ்திவாரம் வேறு எந்த முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கும் இல்லை. "

1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானதைத் தொடர்ந்து கட்சியின் மத்தியக்குழு சார்பில் ஆங்கிலப் பத்திரிகையொன்று துவக்குவது அவசரத் தேவையாய் இருந்தது. அவ்வாறு 1965 ஜூன் 27 அன்று

"பீப்பிள்ஸ் டெமாக்ரஸி" எனும் ஆங்கில வார ஏடு கல்கத்தாவில் துவக்கப்பட்டது. கட்சியின் மத்தியக்குழு அலுவலகம் அப்போது கல்கத்தாவில் இருந்தது. கட்சியின் மீது கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டிருந்த காலம் அது. கட்சியின் ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இஎம்எஸ்-ஸும் ஜோதிபாசும் மட்டுமே வெளியே இருந்தனர். இந்தக் கடுமையான நெருக்கடிக்கிடையேயும் இத் தலைவர்கள் பீப்பிள்ஸ்டெமாக்ரஸியை வெற்றிகரமாகத் துவக்கினர். இதன் முதலாவது ஆசிரியராக ஜோதிபாசு பொறுப்பேற்றார். இவருக்குப் பிறகு ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் பி.டி.ரணதிவே. பிறகு மூன்றாவதாக ஆசிரியர் பொறுப்பேற்றார் இஎம்எஸ்.

"கட்சியின் பத்திரிகை என்பது மக்களின் பத்திரிகை என்று மிகப் பெருமையுடன் சொன்ன இஎம்எஸ் இளமை முதலே ஒரு சிறந்த பத்திரிகை ஆசியிராகவும் திகழ்ந்திருக்கிறார்.

- தி.வரதராசன் 

Pin It