"நாடுகளுக்கிடையே ஒரு வேலைப்பிரிவினை இருக்கிறது. சில நாடுகள் வெல்வதில் தேர்ச்சி பெறுகின்றன; வேறு சில இழப்பதில் தேர்ச்சி பெறுகின்றன. உலகத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியான லத்தீன் அமெரிக்காவின் மக்கள் தோற்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். மறுமலர்ச்சிக் கால ஐரோப்பியர்கள் கடல்கடந்து வந்து(அமெரிக்க) இந்திய நாகரிகத்தின் குரல்வளைகளில் அவர்களின் பற்களைப் பதித்த பழங்காலம் தொட்டு தோற்றுக் கொண்டே இருப்பவர்கள்" - இப்படித்தான் துவங்குகிறது எடுவார்டோ கலியானோ எழுதிய "லத்தீன் அமெரிக்காவின் திறந்திருக்கும் ரத்த நாளங்கள்". 

நம் நாட்டைவிட்டு விரட்டிவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம் விரட்டுவதில் முன்நின்றவர்களின் தோள்களின் மீதே அமர்ந்து மீண்டும் ஊர்வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் கலியானோவைப் பற்றியும், அவருடைய எழுத்துகளைப் பற்றியும் அறியாமலிருப்பது துப்பாக்கியும் தோட்டாக்களும் இல்லாமல் வேட்டைக்குப் போவதற்கு ஒப்பாகும். நம்மைப்போல் இழந்து கொண்டிருப்பவர்களின் கதையை மட்டும் அவர் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கவில்லை கலியானோ. அவர்கள் எழுந்து நிற்கும் இன்றைய சமகால வரலாற்றையும் அவர் பதிவு செய்து கொண்டிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் ஐந்நூறு படை சோகத்தையும் கோபத்தையும் கவித்துவம் ததும்பும் வார்த்தைகளால் வர்ணிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஐரோப்பியர்களும் பின்னர் ஐரோப்பியக் குடியேறிகள் உருவாக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும் இன்றும் நடத்திவரும் சுரண்டல் பொருளாதாரத்தின் புள்ளி விவரச் சல்லி வேர்கள் வரை நம் கவனத்தை ஈர்க்கிறார். இந்தப் புதிய எழுதும் முறைக்கு புனைவற்ற கதை சொல்லல் என்று பெயர்.

ஐரோப்பியர்கள் ஆதிவாசிகளாய் குகைகளுக்குள்ளேயிருந்த காலத்திலேயே நாகரிகத்தின் உச்சங்களைத் தொட்டிருந்தவர்கள் மாயா, இன்கா, அஸ்டெக் என்ற இனங்களைச் சேர்ந்த தென் அமெரிக்கப் பூர்வகுடியினர். 1492ல் இந்தியாவைத் தேடிக் கப்பலேறிய ஸ்பானிய மாலுமி கொலம்பஸ் தென் அமெரிக்க கரையை அடைந்தபோது, பரிசுப் பொருட்களுடன் ஓடிவந்த இந்த பூர்வகுடியினருக்கு அவன் தந்த பரிசுகள் பல. தங்கம் கொண்டுவரச் சொன்னான். கொண்டு வராதவர்கள் முடமாக்கப்பட்டனர். கொலைசெய்யப்பட்டனர். அதற்குப் பின்னர் பல ஐரோப்பியக் கப்பல்கள் அமெரிக்கக் கண்டத்தை நோக்கி வந்தன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆரம்ப மூலதனமாக அக்கண்டத்தின் தங்கமும், வெள்ளியும், தாமிரமும், தகரமும் பயிர்களும், பழங்களும், நிலங்களும், நீர்நிலைகளும் லட்சக்கணக்கான செவ்விந்தியர்களின் உழைப்பும், உயிர்களும்! மேற்கத்திய நாகரிகத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வளம் சேர்த்த தென் அமெரிக்க மக்களின் ரத்த நாளங்கள் திறந்தே வைக்கப்பட்டிருந்தன! நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் ஓங்கி நிற்கும் அடுக்குமாடிக் கட்டடங்களின் அஸ்திவாரங்கள் செவ்விந்தியர்களின் எலும்பினால் கட்டப்பட்டவை! பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட பூர்வகுடி செவ்விந்தியர்களின் ஆவியாகிப் போன வியர்வையும் ரத்தமும்தான் இன்று எகாதிபத்திய மையங்களில் மழையாகப் பெய்து கொண்டிருக்கிறது!

"எங்களுடைய தோல்வி எப்போதுமே மற்றவர்களின் வெற்றியில் மறைந்து நிற்கிறது. சாம்ராஜ்யங்கள், அவற்றின் உள்ளூர் கங்காணிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்த்ததினால் எங்களுடைய செல்வமே எங்களின் வறுமைக்குக் காரணமானது. காலனிய, வைகாலனிய ரஸவாதத்தில் தங்கம் தகரமாகிவிடும்; உணவும் விஷமாய்ப் போகும்" என்று எழுதுகிறார் கலியானோ.

'லத்தீன் அமெரிக்காவின் திறந்திருக்கும் ரத்த நாளங்கள் ஓர் அரசியல் இலக்கியம். உலகெங்கிலும் கம்யூனிஸப் பரவலைத் தடுத்தே தீருவேன் என்று அமெரிக்க ஏகாதிபத் தியம் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில் span>, அதன் கொல்லைப் புறத்தில் கியூபா சிவப்பானது. கிலிகொண்ட ஏகாதிபத்தியம்அந்தச் சிறிய தீவின் புரட்சித் தீயை அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே சிலி நாட்டு மக்களும் சிவந்து போனார்கள். ஓட்டுப் போட்டு சால்வடோர் அலெண்டேயை ஆட்சியில் அமர்த்தினார்கள். லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் சோஷலிஸத்தின் தாக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அமெரிக்கக் கண்டத்தில் பல சர்வாதிகாரிகளை வளர்த்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ராணுவப் புரட்சிகளால் தகர்த்து ஜனநாயகத்தை சாகடித்தது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பலர் மாயமாய் மறைந்து போயினர்.

உருகுவே நாட்டிலும் ஒரு ராணுவப் புரட்சி நடந்தது. தலைநகரான மோண்டிவிடியோ நகரில் 1940ல் பிறந்து பத்திரிகையாளராய்ச் செயல்பட்டு வந்த கலியானோ கைது செய்யப்பட்டார். 'மார்ச்சா' 'எபோகா' என்ற பத்திரிகைகளின் ஆசிரியராக அவர் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் அமெரிக்க ஆசியுடன் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட சூழலில் அவர் எழுதிய புத்தகம்தான் 'ரத்தநாளங்கள்'! ராணுவ அரசு இப்புத்தகத்தை தடைசெய்தது. சிறைவாசத்திற்குப் பின் அர்ஜெண்டினா நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு 'கிரைசிங்' என்ற கலாச்சார இதழைத் துவங்கினார். அர்ஜெண்டினா நாட்டிலும் ஒரு ராணுவப் புரட்சி நடந்தது. அறிவுஜீவிகள், இடதுசாரிகள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் தொடங்கியது. ராணுவ அரசாங்கம் உருவாக்கிய கொலைப்பட்டாளத்தின் மரணப் பட்டியலில் கலியானோவின் பெயரும் இருந்தது. மறுபடியும் அவர் ஓட வேண்டியிருந்தது. இம்முறை அவர் கடல்கடந்து ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார்.

அங்கிருக்கும் போது 'காதல் மற்றும் போரின் பகல்களும் இரவுகளும்' என்ற புத்தகத்தை எழுதினார். அதற்குப் பின் 'அமெரிக்கக் கண்டத்தின் ஆன்மாவுடன் ஓர் உரையாடல் நடத்தி 'நெருப்பின் நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதினார். கொலம்பஸ் வந்திறங்குவதற்கு முற்பட்ட காலத்திலிருந்து நவீனகாலம் வரையிலான லத்தீன் அமெரிக்க வரலாற்றைப் பதிவு செய்கிறார். 'அமெரிக்கக் கண்டத்தினை ஒரு பெண்ணாக நான் கற்பனை செய்து கொண்டேன். அவள் தன் காதல் அனுபவங்களையும், தன் மீது நிகழ்ந்த பலாத்காரங்களையும் ரகசியமாக என் காதுகளில் சொன்னாள்" என்று கலியானோ கூறுகிறார்.

இந்தப் புத்தகத்தை மூன்று பாகங்களாக எட்டு மாதங்களில் தன் கைப்பட எழுதினார். "எனக்கு நேரத்தைச் சேமிப்பதில் குறிப்பான நாட்டம் இல்லை; நேரத்தை அனுபவிப்பதையே அதிகம் விரும்புகிறேன்". என்கிறார் கலியானோ.

1985ஆம் ஆண்டு நடந்த ஒரு பொது வாக்கெடுப்பில் மக்கள் ஆதரவை ராணுவ அரசாங்கம் இழந்தபின் உருகுவே நாட்டிற்குத் திரும்பிய கலியானோ பல அற்புதப் படைஸபகளை இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்.

லத்தீன் அமெரிக்காவுக்கு அரசியலும், இலக்கியமும் கலந்து பொங்கும் பாரம்பரியம் உண்டு. இதை உள்வாங்கியவர் ஸ்பானியக் காலனியாதிக்கத்திற்கு எதிராக முதன் முதலில் வீறு கொண்டெழுந்த சைமன் பொலிவார். இவருடைய பேச்சிலும் , உரைநடை எழுத்திலும் இருந்த இலக்கிய நயம் பின்வந்த போராளிகளுக்கு ஊக்க சக்தியாகத் தொடர்ந்தது. ஸ்பானியக் காலனியாதிக்கத்திற்கு எதிராக முதலில் எழுந்த கியூப நாட்டுப் பேராளியான ஜோஸ் மார்ட்டி ஒரு கவிஞர். அதற்குப் பின் வந்த பிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் அற்புதமான பேச்சாளர்கள், பாப்லோ நெருடா கவிதைகளின் அரசியல் வீச்சும் அற்புதங்களை நிகழ்த்தியது. இந்த வரிசையில் வருபவர்தான் கலியானோ

மாபெரும் மனிதர்களும், மகத்தான படைப்புகளும் என்ன தன்மை கொண்டவை என்று சேகுவேராவின் மரணத்தைப் பற்றிய ஒரு கட்டுரையில், "மந்திரம் போன்ற வாழ்க்கைக்கு மந்திரம் போன்ற முடிவு", இவ்வாறு எழுதுகிறார் கலியானோ.

"சேகுவேராவின் வாழ்க்கையும் அவரது மரணமும் ஒரு பெரும் படைப்பை போல் நம் உலகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். பெரும்பாலான மனிதர்களை சிறுபான்மையான மனிதர்களுக்காக பொதி சுமக்கும் விலங்குகளாகவும், சிறுபான்மையிலான நாடுகளின் நலனுக்காக பெரும்பான்மையான நாடுகளை அடிமைத்தனத்திற்குள்ளும், துயரத்திற்குள்ளும் தள்ளிவிடும் இந்த உலகத்திற்கு எதிரான குற்றச்சாட்டு; அதே நேரத்தில் இத்தகைய உலகத்தை மாற்றும் சாகத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ளாமலிருக்கும் அகங்காரம் பிடித்தவர்களுக்கும் கோழைகளுக்கும், தலையாட்டிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டும் ஆகும்."

இவ்வகையில், கலியானோவின் வாழ்வும், படைப்புகளும் சுரண்டல் உலகத்திற்கெதிரான குற்றச்சாட்டுதான்!

Pin It