நாட்டுப்புறக் கதை

ராமான்ஜம் ஆறுகல் தொலைவு நடந்திருக்கிறாரு. ஆனாலும் அலுப்புத் தட்டலை. நடைவேகமும் குறையல. இன்னும் ஒரு கல் தொலைவுட்டுதான். ரயில்வே டேஷன் வந்துரும். ஒரு வாரத்துக்கு தேவையான புளிச்சாதம் துணிப்பொட்டலத்தில கட்டி முடிந்து இடது கையில் வைத்து தூக்கி வரும்போது, இடது பக்கம் தலைசாய்ந்து வலது கை நீளமாக பக்கவாட்டில் படரவிட்டும் வலது கையில் மாற்றும்போது வலப்பக்கம் கழுத்து சாய்ந்து இடது கை பக்கவாட்டில் நீளமாக நீட்டிய படியும் வேகுது பிடுங்குதுன்னு நடந்தார்.

"வக்காள வாத்தாளி இன்னக்கி என்னான்னு பாத்திருவமே இந்த ரயிலை. என்னடான்னா ஊருக்குள்ள பேர் பாதிப்பேரு நா ஏறுனேன் ரயில்லேங்கிறான். நா இறங்குனேன் ரயில்லேங்கிறான். அதென்ன பெரிய்ய மம்மாவா.....ம்....... நாமளும் அதெ என்னான்னு பாத்திருவமே"

ரயிலு என்னம்மோ சாயுங்காலந்தான் வருது. என்ன ஒண்ணுக்கும் கருக்கல்லயே போயி நின்னுக்குடுவமே கொஞ்சம் முன்னப்பின்ன ஆனா நம்ம மேல சொஷ்டி குறைவு வந்திரப்படாது என்று ராமான்ஜத்தின் தீர்மானம்.

தாயோலியிது மனுசனை என்னென்னவெல்லாம் போக்குகாட்டியிருக்கு. ரயிலு வந்த ஆரம்பகாலங்கள்ல மனுசர்கள் தன்னால ரயிலுன்னா அங்கபங்கம் பதறி அல்லோல கல்லோலப்பட்டிருக்காங்க.

மானாவாரியில வேலை செய்யுற சனங்ககிட்டெ ரயிலின்னா என்னா எவடம்ன்னு வெள்ளைக்காரன் விஸ்தாரிக்க கேட்டு அரண்டு போயி அது மொத மொதல்ல பம்பாயிலிருந்து புறப்படப்போகுதுன்னு தாக்கல் தெரிஞ்சது தான் தாம்சம். ஒத்தச்சனம் ஊருக்குள்ள நடமாட்டமில்லே. கப்சிப்புன்னு ஒரு ஈக்குஞ்சு வீட்டைவிட்டு வெளியேறல.

கதவை பூட்டிக்கிட்டு எல்லாச்சோலியும் உள்ளேயேதான். பின்னென்ன அத்தந்தண்டி உருவம் ஹொகே ஹொலேன்று அவயம் போட்டுக்கிட்டு வந்தா மிதமாவா இருக்கும்?

அட இந்த சட்டக்காரன் ஓட்டிட்டு வர்ற மோட்டாரு சைக்கிளு! அது வர்ற வரத்து அது சீவனுக்கு போடுற கூப்பாடு. அடேஙப்பங்கப்பா எருமை கன்னுக்கட்டி உயரந்தான் இருக்கு. அது கூளங்கடிக்கிற மாதிரியும் தெரியல. அதோட சங்குக்குழிக்கு நேரா ஒரு திருகு திருகி இம்புட்டு சீமைத்தண்ணிய ஊத்துறான். அவ்வளதான். அந்த மட்டுல கழுதை மேல காலைத்தூக்கி போடுற மாதிரி போட்டதும் ஒரு மிதி வெக்கிறான். அது தன்னால வேதனை தாங்க மாட்டாம ரோட்டுல ரவ்வாளி போட்டு வர்றத பாக்கணுமே....

ரொம்பப் பேரு எதிரே வந்தவன் ஓடி ஓடைக்குள்ளேயும் உடைப்புக்குள்ளேயும் போயி ஒளிஞ்சிருக்கான். பிறகென்ன அவன் மிதிச்ச மிதியில வலிதாங்கமாட்டாம கூப்பாடு போட்டு வந்து எதிர்ல வர்றவன் மேலே விழுந்த பிராண்டிட்டா? எண்ணெ நாக்குன நாய விட்டுட்டு எதுக்கெ வந்த நாய அடிச்ச மாதிரி! இதுவே இந்தக் காய்ச்சு காய்ச்சும்போது ரெண்டு ஊரு தூரத்துக்கு வளைஞ்சி வளைஞ்சி நெளிஞ்சி நுழைஞ்சி வர்ற ரெயிலு வச்சா வக்கிம். ஊருக்குள்ள வாரக்கணக்குல யாரும் காடு கழனின்னு போகலை.

பருத்தி சுளை சுளையா வெடிச்சுச் சிதறி காட்டுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பெறக்க நாதியத்துப் போய்க்கிடக்கு. தோட்டக்கால்கள்ல மிளகாய்ப்பழம் தன்னால உதிர்ந்து மண்ணு ரத்தச்சிவப்பாய்க் கிடக்கு.

ஒருத்தருக்கொருத்தர் வீடுகள்ல ஜன்னலை லேசா திறந்து நாலு வார்த்தை பேசுறதோட சரி.

"அண்ணே புஞ்சைப்பக்கம் போனயா எதுந் தாக்கலுண்டுமா?"

"எப்படிக்கூடி போக? கிளம்பி வந்துக்கிட்டிருக்காம் எப்ப எந்நேரம் எங்கவரும் போகுமுன்னு திட்டமாச் சொல்ல ஒரு தனையுங் காணோம்".

"அது வரும் போது ஊருக்கூரு கேட்டுப்போட்டு மூடிர்ராகளாம். அசந்து மசந்து திறந்து கிடந்தா ஊருக்குள்ள பாய்ஞ்சிரும்ன்னுதானே?"

"இது செம்ம பண்ணுன வெள்ளைக்காரனுக்கே சொன்னபடி கேக்கமாட்டேங்குதாம். நாமெல்லாம் எம்மாத்திரம். இது என்னேன்னு முடிஞ்சு நாமபோயி மகசூலப்பாக்க"

"மகசூலு மயிரு! பருத்தி வத்த போனா மயிரொண்ணு போச்சு உசிருபோனா வருமா சன்னலை சாத்து பேச்சைக் கொறெ"

அது ஒரு பேக்காலம் ராமான்ஜம் சிரிச்சுக்கிட்டார். வண்டிப்பாதை வழியா ஒரு சைக்கிள் போனாலே ஓடி ஓடி வந்து சனங்க வேடிக்கை பாப்பாங்க. வெள்ளைக்காரன் வந்தவிட்டு எந்திரமந்திரம்ன்னு ஒரு கோக்காட்டமா செஞ்சான். அதை வச்சி இங்கே ஒண்ணுக்குள்ள ஒண்ணு அப்புராணி சப்புராணிகளை ரொம்ப கிறுக்காக்கிறது.

'அது ஒரு பைத்தியகார காலம் செல்லுபடியாச்சு. இப்பொ நடக்குமா மகனே வந்து பாரு' ராமான்ஜம் அவரா தலையை ஆட்டிக்கிட்டாரு.

இவரோட தகப்பனாரு கிடாய் கிட்ணசாமியை இந்த பினாங்குநாக்கெரு எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கார். ஒரு நாள் வேலையில்லேன்னு கிடா கிட்ணசாமி மடத்தில உட்கார்ந்திருந்தார். இந்த மப்பேறுன பினாங்கு நாக்கெரு தின்னுபோட்டு சும்மா கிடக்காம. மாப்ளே மாப்ளே சல்க்காரு உத்யோகம் ஒண்ணு இருக்கு போறியா, சம்பளம் போக்கு வரத்தெல்லாம் வலுவாக்கிடைக்கும்ன்றிருக்கார்.

கிடா கிட்ணசாமிக்கு சந்தோசம் புடிபடலை. சமுத்திரம் தாண்டி போய் வந்த மனுசன் நாலா விவரந்தெரிஞ்சவர் மானாங்கானியாவா சொல்லுவார். போறேன் மாமா உங்க புண்ணியத்துல. பீடி வாங்கக்கூட முக்காத்துட்டு கிடையாது வேலை என்னான்னு சொல்லுங்கன்னார்.

"அது மாப்ளே ரொம்ப பொறுப்பான வேலை. அதாகப்பட்டது இந்த ரயிலைப் பாத்திருக்கியா ரயிலை"

"ஆமா மாமா பாத்திருக்கேன் ஏறுனதில்லே இறங்கினது இல்லே"

"அந்த ரயிலுக்கு இருட்டினவுடனே கண் பார்வை சரியா தெரியாது. அதுக்கு ரோடு நம்ம வண்டிப்பாதை மாதிரி கிடையாது. நாலு விரல்கிடை வாளந்தான். அதனால இருட்டில கொஞ்சம் தடுமாறுது.

பொழுது அடைஞ்சதும் அரிக்கேன் லைட்டை பொருத்தி வச்சுக்கிட்டு முன்னாடி தடங்காட்டிக்கிட்டே ஓடணும். பக்கத்து டேசன் போனவுடனே இன்னொருத்தன் கைமாத்திக்கிடுவான்."

நல்லது மாமா இந்தா இப்பொ கிளம்பிட்டேன். இந்த வார்த்தையை வெளியே விட்டுறாதீக. இருக்கிறவனெல்லாம் அரிக்கேன் லைட்டை தூக்கிக்கிட்டு வந்திருவான் ரெண்டாம் பேருக்கு தெரியாம அரிக்கேன் லைட்டோட நடுக்காட்டுல போயில ரயில் பாதை பக்கமா பொழுதடையுற வரைக்கும் காத்துக்கிடந்தார். ரயில் ஒண்ணு சத்தங்கொடுத்து வந்தது.

"நா ரெடி நா ரெடி இந்தா வந்துட்டேன்"

தடபுடலா எழுந்திருச்சி லைட்ட பத்தவச்சு, ரயிலுக்கு பக்கவாட்டுல கூடி கொஞ்ச தூரம் ஓடியிருக்கார். ரயிலு கடகட கடன்னு அரை நிமிசத்துல அவரை கடந்து போயிருச்சி.

"மெதுவா மெதுவா நின்னு நிதானமா அரிக்கேனை அணைச்சிப்போகணும். இந்தப் போக்கு போனா எப்படி ஐயையே இருட்டுல ஒரு பயம் பத்திரம் வேண்டாம். போச்சிபோ இது என்னத்தெ விளங்கும்"

மறுநாள் பினாங்கு நாக்கெரிடத்திலெ சொன்னார்: "அந்த வேலை லாயக்கப்படாது மாமா அது ஆளை ஏறிட்டுப் பாக்காம போனண்ணிக்கி ஒரு ஏத்தடி இறக்கடி ஆகிப்போச்சுன்னா நாம பதில் சொல்லி முடியாது. சர்க்காரு சமாச்சாரம். சட்டக்காரன் தொலிய உறிச்சு தொங்க விட்டிருவான்"

சரி அப்பொ அந்த வேலை வேண்டாம். இன்னொரு வேலையிருக்கு. இதையாவது கோட்டை விடாம செய்யணும் மாப்ளே.

ஆகட்டும் மாமா.

டவுன் போஸ்ட் ஆபீஸ்ல ஸ்டாம்பு வாங்கிட்டு வர்றவங்க ஒட்டுறதுக்கு பசையில்லாம சங்கடப்படுறாங்க. அந்த இடத்துல போயி உட்கார்ந்துகிட்டு நாக்கை நீட்டுன மட்டுல இருக்கணும். வர்றவன் போறவன் ஸ்டாம்ப்பையும் இன்லாண்ட் கவரையும் உன் நாக்குல தடவிக்கிடுவாங்க. எந்தக் காரணத்தை கொண்டும் ஆபீஸ் மூடுற வரைக்கும் நாக்கை உள்ளே இழுத்துறக்கூடாது.

கிடாய்  கிட்ணசாமிக்கு இந்த வேலையிலயாவது நிலைச்சிரணும்ன்னு ஆவல்ல ஓடிப்போய் ஆபீஸ் திறக்குமுன்னமே நாக்கை நீட்டுன மட்டுல உட்கார்ந்துட்டார். போற வர்ற ஆளுகள்லாம் இவரை வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். சாயுங்காலமா ஆளாளுக்கு மொகறையில போட்டு வீட்டுக்கு அனுப்புனாங்க. 

ராமான்ஜத்துக்கு இப்பொ கோபம் கோபமா வந்தது. என்னம்மோ அப்படியெல்லாம் கூறுகெட்டுப் போயி பைத்தியாரத்தனமா ஆள்கள் பட்டிக்காட்டுல இருந்திருக்காங்க. இப்பொ ஒண்ணுங் கிழிக்க முடியாது.

``இந்தா அதே கிடாய் கிட்ணசாமி மகன்தான் ரயிலு ஏறப்போறன். ரயிலுக்கு போயிட்டு வந்த பிறகு கட்டில்ல சட்டடியா கிடக்குற பினாங்கு நாக்கெனுக்கு முன்னாடிபோயி இப்பொ என்னடா சொல்றே கிழட்டு நாய்க்கான்னு நகண்டுட்டு சாகிற மாதிரி நிக்கெப் போறேன். அப்படி நடத்தி காட்டலையாக்கும் நான் கிடாய் கிட்ணசாமிக்கு பிறக்கலை.

பொழுதும் போயிருச்சி ரெயிலும் வந்திருச்சி. ஏ,பாவிமட்டை எம்புட்டு நீளம் அடியும் முடியும் தெரியாத சிவன் போல கூட்டம்ன்னா கூட்டம் சள்ளை பறியுது. ராமான்ஜம் தத்திமுத்தி ஏறுனார்.

ரயிலு பூப்போல கிளம்புனது.

அடடா சும்மாவா சொன்னாங்க அலுங்காம குலுங்காமவில்ல போகுது. உட்கார இடமில்லை. கீழேதான் உட்காரணும். கட்டுச்சோத்து பொட்டலத்தை எங்கே வைக்கிறது. கீழே வச்சா ஆள்க கால்பட்டு சோறு கெட்டுப்போகும். ராமான்ஜம் மேல பார்த்தார். எல்லா இடத்துலயும் ஜனங்கள். மேலே ஒரு வாப்பான இடம் சோத்து பொட்டலத்தை தொங்கவிட.

அபாயச்சங்கிலி பிடித்து இழுக்கிற கைப்பிடியில் பொட்டலத்தை கட்டி தொங்கவிட்டார். அப்பாடா நிம்மதியாய் கீழே உட்கார்ந்தார். அவருக்கு சந்தோசம் புடிபடலை. சின்னப்புள்ளெக விளையாட்டுல சொல்ற மாதிரியே ரயிலு கிஜு கிஜு கிஜுன்னு போனது.

திடீர்ன்னு ரெயில் நின்னு போச்சு.

என்னான்னு தெரியல கொஞ்ச நேரத்துல நாலஞ்சு ஆபீஸர்கள் இந்த கேரேஜ்தான். இந்த கேரேஜ்தான்னு சொல்லி உள்ளே வந்தாங்க.

யார்யா அபாயச் சங்கிலியை பிடிச்சு இழுத்தது. எல்லாரும் திரு திருன்னு முழிச்சாங்க. இங்கே யாரும் பிடிச்சு இழுக்கலியே சார்.

இந்தா இந்தா பாரு "யோவ் அபாயச் சங்கிலியில யார்யா இந்த பொட்டலத்தை கட்டி தொங்கவிட்டது?"

"அய்யா அய்யா நான்தான் எம்பொட்டலந்தான்" ராமான்ஜம் வேகமா எழுந்திரிச்சார்.

"ஏன்யா அறிவிருக்கா சோத்துப் பொட்டலத்தைக் கொண்டு போயி இதிலே தொங்க விட்டுருக்கியே ஏதாவது அறிவிருக்கா. இப்பொ ரயிலு நின்னு போச்சுல்லே" ராமான்ஜம் ரொம்ப இளக்காரமாய் ஆபீஸரை ஏறிட்டு.

"எப்படி எப்படி இன்னொரு தரம் சொல்லுங்க. சோத்து பொட்டலத்தை தொங்க விட்டதால ரயிலு நின்னு போச்சாக்கும். ஙேஹே... ஆஹா... இத்தனை கோடி சனங்களை வச்சு இழுக்கிற ரயிலு இந்த சோத்துப் பொட்டலத்தை இழுக்கமாட்டாம நின்னு போச்சாக்கும். ஓகோ... அடிரா சக்கானக்கென்னானாம். அதானெ பாத்தேன் இன்னும் ஒருத்தனையுங் காணோமேன்னு பாத்தேன். ஒங்க பொட்டரட்டெல்லாம் கிடாய் கிட்ணசாமி காலத்தோடு போச்சுய்யோவ்".