நாங்கள் வளர்கிறோமே..!

இன்றைக்கு உணவுப்பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாகும். தொடர்ந்து உணவுத்தானிய உற்பத்தி வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்களே என்று கேட்டால் கேட்டவர்களை முறைக்கிறார்கள். உணவுப்பாதுகாப்பு என்பதற்கு பலரும் பல விளக்கங்களைத் தருகிறார்கள். உடல் இயங்குவதற்கு தேவையான கலோரிகளைத் தருவது உணவுப்பாதுகாப்பு என்றும் கூறுகிறார்கள்.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக்கழகம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகள் சாப்பிட வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. 2 ஆயிரத்து 700 கலோரிகளை ஒரு மனிதர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. ஆனால் வெனிசுலா மக்கள் சராசரியாக 2 ஆயிரத்து 790 கலோரிகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தக் கலோரிகளை விட குறைவாக உணவு எடுத்துக் கொள்பவர்களை வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று கணக்குப்போட்டால் 85 சதவிகித இந்தியர்கள் அந்தத்துயரத்தில் உள்ளது அம்பலமாகிவிடும் என்பது தனிக்கதை.

அமெரிக்காவின் பொம்மை அரசுகள் வெனிசுலாவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது ஊட்டச்சத்துக் குறைவால் 21 சதவிகித வெனிசுலாக் குழந்தைகள் அவதிப்பட்டார்கள். அரசின் இடதுசாரிக் கொள்கைகளின் விளைவால் அது ஆறு சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. ஊட்டச்சத்துக் குறைவு நெருக்கடியை எதிர்கொண்டு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வெனிசுலா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அது சரி, ஊட்டச்சத்தின்மை பிரச்சனையை எதிர்கொண்டு முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா...? வேறு யாருமல்ல, கியூபாதான்.

அந்தஸ்தை இழக்கும் அமெரிக்கா

முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த நாடு என்றால் “AAA” என்ற அந்தஸ்து அந்த நாட்டுக்கு பல ஆய்வு நிறுவனங்களால் வழங்கப்படும். அமெரிக்காவின் அந்தஸ்தை மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம்தான் நிர்ணயித்து வந்தது. இந்த மிகப்பெரிய அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

முதன்முறையாக, அந்த அந்தஸ்து உத்தரவாதமல்ல என்று ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவன் ஹெஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் அமெரிக்காவின் நிதிப்பற்றாக்குறை கணிசமான அளவுக்கு குறையவில்லை என்றால் இந்த அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றார் அவர். செப்.30 அன்று உள்ள நிலையின்படி 1.417 டிரில்லியன் டாலர் அமெரிக்காவின் பற்றாக்குறையாகும்.

இதற்கிடையில்தான் அக்.30 அன்று ஒரே நாளில் ஒன்பது அமெரிக்க வங்கிகள் திவாலாகின. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 115 வங்கிகள் மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்துவிட்டன. ஒவ்வொரு வங்கிகளாக அமெரிக்க மத்தியக் காப்பீட்டுக் கழகத்தின் நலிந்தோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

கேட்டால், இதென்ன பிரமாதம்... 1992இல் இதைவிடப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அதையே நாங்கள் சமாளித்து விட்டோமே... என்கிறார்கள். அந்த ஆண்டில் 181 வங்கிகள் திண்டுக்கல் பூட்டுகளைக் கதவுகளில் தொங்க விட்டு ஓடிப்போய்விட்டனவாம். ஆனால் ஒரு விஷயத்தை இவர்கள் மறந்து விட்டார்கள். மேலும் 300க்கும் மேற்பட்ட வங்கிகள் நெருக்கடியில் உள்ளன என்று அமெரிக்க அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வப் புள்ளிவிபரமே கூறுகிறது.

பாதிக்கிணறு தாண்டுவார்களா? விழுவார்களா?

கடலுக்கடியில் உட்கார்ந்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது மாலத்தீவு அரசு. புதிதாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் முகமது நசீத், துணை ஜனாதிபதி முகமது வஹீத் மற்றும் 11 அமைச்சரவை சகாக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். உலகிலேயே கடலுக்கடியில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இத்தகைய கூட்டம் நடத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்று பார்த்தால், பாதிக்கிணறு தாண்டி விட்டார்கள் என்று சொல்லலாம். டிச.7 அன்று கோபன்ஹேகனில் உலகச் சுற்றுச்சூழல் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய உடன்பாட்டை எட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தக் கடலுக்கடியிலான கூட்டத்தை மாலத்தீவு ஆட்சியாளர்கள் நடத்தினார்கள்.

நீரில் நனையாத தன்மையைக் கொண்ட பென்சிலால் வெள்ளை பிளாஸ்டிக் சிலேட்டில் தங்கள் தீர்மானத்தை எழுதிக் கையெழுத்திட்டனர். இதே நிலைமை தொடர்ந்தால் மாலத்தீவுகள் என்று ஒரு நாடு இருந்தது என்று வரலாற்றுப் புத்தகங்களில் படித்து மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். கடல் மட்டம் உயருவதால் மாலத்தீவுகள் மூழ்கிவிடும் என்பதுதான் அவர்களின் நியாயமான கவலையாகும்.

அவர்களின் இந்தக்கூட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான். இதைத்தான் நாம் பாதிக்கிணறு என்று சொல்லிக் கொள்ளலாம். பாதிக்கிணறு என்பது வேறுவகையிலும் பொருத்தமானதாகவே இருக்கும். ஒருவேளை உலகே எதிர்பார்க்கும் உடன்பாடு வரவில்லையென்றால் மாலத்தீவு விழப்போவது கிணற்றுக்குள்தான் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகவும் இது அமையும்.