தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். கையில் ஆயுதங்களுடன் அங்கு புகுந்த வன்முறைக் கூட்டமொன்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் வெட்டி வீசி எரிந்தனர். அந்தக் குழந்தைகள் செய்த குற்றம் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தது மட்டும்தான். இது ஏதோ ஒரு தெருவின் நெஞ்சை பதற வைக்கும் கதை மட்டுமல்ல... பழமையின் சின்னமாகத் திகழ்ந்த பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த கோரச் சம்பவங்கள் நிகழ்ந்தன. நாகரிக சமூகம் வெட்கித் தலை குனிந்த இந்த கொடூரத்தை செய்துவிட்டு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் இதை நிகழ்த்தியவர்கள் வாக்குகளை சேகரிக்க மக்களை சந்தித்தனர். வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தனர். இது எப்படி அவர்களால் முடிந்தது என்ற திகைப்பு பலருக்கு இருந்தது உண்மை. ஆனால் இவர்களுக்கு முன்பே இவர்களின் ஆதர்ச நாயகன் ஹிட்லர் இதை ஜெர்மனியில் நிகழ்த்திக் காட்டினான். அதைத்தான் இவர்கள் இங்கு செய்தார்கள். ஒரே வித்தியாசம் அவனுக்கு யூதர்கள் எனில் இவர்களுக்கு இஸ்லாமியர்கள். அரசியலில் மதமும், அதிகாரத்தில் மதமும், அதிகாரத்தை வெல்ல மதமும் பின்னிப் பிணைந்த கலவையின் வளர்ச்சி இது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் விதைத்த நச்சு விதை, வளர்ந்து விருட்சமாகி மிகப்பெரிய கலவரமாய் வெடித்த ஆண்டு 1992. அந்த ஆண்டின் டிசம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பாஜக தலைமையிலான மதவெறியர்கள், 400 ஆண்டுக்கால பழமை வாய்ந்த பிரம்மாண்டமான பாபர் மசூதியை இடித்து நொறுக்கினர். மிகப்பெரும் மதவெறிக் கலவரங்களுக்கு காரணமாகிய இந்த நிகழ்வு குறித்து 17 ஆண்டுகள் விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் கடந்த ஜுன் மாதம் 30ஆம் தேதி தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக தவிர இதர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சுதர்சன், குஷபாவ் தாக்கரே, பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், விஜயராஜே சிந்தியா மற்றும் 11 அதிகாரிகள் உட்பட 68 பேருக்கு தொடர்பு இருப்பதாக லிபரான் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் இத்தகைய நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டுமென்று லிபரான் கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கையுடன், ப.சிதம்பரம் தாக்கல் செய்த நடவடிக்கை குறித்த அறிக்கையில், மதவெறி வன்முறைகளைத் தடுக்க வகை செய்யும் மசோதாவை கொண்டு வர வேண்டுமென்ற நீதிபதி லிபரானின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் குறித்து இந்த அறிக்கை எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இந்திய நாட்டின் மதச்சார்பற்ற சக்திகள், மதவெறி சக்திகள் மசூதியை இடிக்கப் போகின்றனர் என தொடர்ந்து சொல்லிவந்த போதும் கையில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்து நரசிம்மராவ் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தார். அத்வானியின் ரத யாத்திரையை, பீகாரில் லாலு தடுத்து நிறுத்திய அனுபவம் இருந்தும் அவர் செயல்படவில்லை. லாலு என்கிற மாநில முதல்வருக்கு இருந்த அக்கறை கூட இந்த நாட்டின் பிரதமர் நரசிம்மராவுக்கு இல்லை. இதைவிட செயல்படா தன்மைக்கு எடுத்துக்காட்டு வேறெதுவும் இல்லை. ஆனால் லிபரான் கமிஷன் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சில பகுதிகள் வெளியிடப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இந்த அமளியின் நோக்கம் அறிக்கையைவிட அமளியை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டும் என்பதுதான். நமது ஊடகங்களும் அதையே செய்தன. குற்றவாளிகள் யார் என தெரிந்துவிட்டது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். . எதிர்கால இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசமாக பீடுநடை போட வேண்டுமெனில் நடவடிக்கை அவசியம். இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினருக்கு, நம்பிக்கை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை. காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்கள் இயக்கங்கள் இதை சாதிக்கும்.

- ஆசிரியர் குழு