தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கருணாநிதி இப்போது என்ன சொல்லப்போகிறார்?

2009 ஏப்ரல் 27ல் ஒரு காலை நேரத்து கடற்கரையோர உண்ணாவிரதத்தில் இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக, தமிழர் துயர்துடைக்கப்பட்டு விட்டதாக கலைஞர் அறிவித்தார்.

தமிழ்நாட்டு எம்.பிக்கள் குழு இலங்கைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்கையில் தமிழர் படுகொலைகள் குறித்து அவர்கள் கவனத்திற்கு ஏதும் வரவில்லைபோலும். ஆனால், அதிபர் ராஜபக்சேவுடனான தேநீர் விருந்து மண்டபத்திற்குள் போர் அகதிகளாக்கி படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் இரத்தவாடை வீசியிருக்குமே ஏன் தமிழ்நாட்டு எம். பிக்கள் குழு அறியாமல் போயிற்று?

இராஜ்ஜிய ரீதியான ஒத்துழைப்பு என இரு கைகள் விரித்து நேசக்கரம் நீட்டிய பிரதமர் மன்மோகன்சிங் தமிழ் மக்களுக்கு இப்போது என்ன சொல்லப்போகிறார்? விடுதலைப்புலிகள் மீதான போர் என்ற பெயரில் தமிழர்கள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டது குறித்து இந்திய அரசுக்கு சிறு தகவல்கூட வரவில்லை என்பது நம்பும்படியாக இல்லை?

500 டிராக்டர்கள், 50,000 வீடுகள் கட்ட நிதியுதவி என சுமார் ரூ.1000 கோடிவரை இந்திய அரசு உதவி செய்யும் என அறிவித்த பின்னரும் இன்றும் கூட நடந்து கொண்டிருப்பதை அறிகையில் வேதனையே மேலோங்குகிறது. 1000 தமிழர்களுக்கு கூட வீடுகள் கிடைக்காத சூழலில் இந்திய அரசின் வலுவான தலையீடு இல்லையெனில் தமிழர்களுக்கு இந்தியாவின் நிதியுதவியால் பலன் கிடைக்கப்போவதில்லை. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளித்தது மட்டுமல்ல, நேரடியாக களத்தில் நின்று உதவியும் செய்தபோது கூட தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய அரசுக்கு தெரியவில்லையா அல்லது மறைக்கப்பட்டதா என்ன நடக்கிறது மத்திய அரசின் அமைச்சரவைக்குள் என திமுக அமைச்சர்கள் கூட பேசாதது வருத்தமளிக்கவே செய்கிறது.

1960, 1970 என பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. மாறிய சூழ்நிலைகளில் போர் தீவிரமடைந்த காலத்திலும், தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியாகும் இக்காலத்திலும் இலங்கை தமிழர்களுக்காக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பில் உள்ள திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதே இன்றைய வரலாறில் எழும் பெரிய கேள்வி.

2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையான 9 மாத காலத்தில் மட்டும் வன்னி பகுதியில் சுமார் 3லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்கள் துரத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருணாநிதியின் உண்ணாவிரத போராட்ட வெற்றிக்கு (2009 ஏப்ரல் 27) பின்னர் தான் இத்தகைய படுகொலைகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ முகாம்கள் சித்ரவதைக் கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், செஞ்சிலுவை சங்கத்தினர் மீது கூட கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இலங்கை இராணுவம் அனுமதிக்கவில்லை என ஐக்கிய நாட்டு சபையின் மூவர்குழு அறிக்கை வெளியிட்டபின் இன்று வரை மத்திய காங்கிரஸ் அரசு மவுனம் காப்பது அரசின் கொள்கை நிலைபாட்டின் மீதான சந்தேகத்தை எழுப்புகிறது.

எங்களுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் எல்லாம் மன்மோகன் சிங் காப்பாற்றுவார். இப்போதும் அவர் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கிறோம் என இலங்கை அமைச்சருக்கு நம்பிக்கை வரும் அளவிற்கு நடந்து கொண்ட இந்திய பிரதமர், தமிழ் மக்களின் நம்பிக்கையை இனி துளிக்கூட பெறமுடியாது.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்படவில்லை. ஆனால், இந்திய அரசு அளிக்கும் நிதியுதவியை மட்டும் வெட்கமில்லாமல் வாங்கிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.தமிழர்களைப் பார்த்தாலே சித்ரவதை செய்யவேண்டும் அல்லது சுட வேண்டும் என்று தான் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் போல. இதனால் தான் இன்றுவரை தமிழக மீனவர்கள் சுடப்படுவதும், கடத்தப்படுவதும் அதிகரிக்கிறதேயொழிய குறையவில்லை. ஆனால், மத்திய அரசோ புறாத்தூது போல தூதுவர்களை அனுப்பி பேசிக்கொண்டிருக்கிறது. படுகொலைகளை நிறுத்துவதற்குக் கூட இந்திய - இலங்கை இராஜ்ஜிய உறவு பயன்படவில்லையெனில் இராஜ்ஜிய உறவு என்று சொல்லிக்கொள்வதால் இந்தியாவுக்கு இழப்பே ஏற்படும்.

தமிழர்களுக்கான சுயாட்சி உரிமையை பெற்றுத்தருவதற்கு இந்திய-இலங்கை இராஜ்ஜிய உறவுகள் பயன்படுத்தப்படவில்லை என்ற வருத்தமும், மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் தமிழர்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்திய மோசடி அரசியலுமே வேதனையை அதிகப்படுத்தியுள்ளது ஏமாற்று அரசியலை முன்னெடுக்காமல் உடனடியாக பொறுப்புடன் கடமையை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் முன்வரட்டும்.

Pin It