சென்ற இதழில் சாத்தன் சாம்பானின் கொலை குறித்து வேளாளர் சமூகம் சார்ந்த தகவலாளி கூறிய கதை வடிவைப் பார்த்தோம். இந்த இதழில் சாம்பான் பிறந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர் கூறிய கதை வடிவைக் காண்போம்.

சாத்தான்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் ஜமீன்தாராக சாத்தன் சாம்பான் விளங்கி வந்தான். இவன் வெட்டிய ஒரு குளத்திற்கு, இவனுடைய பெயரிட்டு அதன் அடிப்படையில் அக்குளத்தின் அருகிலுள்ள ஊரும் சாத்தன்குளம் என்று பெயர்பெற்று, காலப்போக்கில் சாத்தன்குளம் என்பது சாத்தான்குளம் என மருவியது.

தன் ஆளுகையில் உள்ள ஊர்களைச் சுற்றிப் பார்க்க குதிரையில் வருவது இவனது வழக்கம். அப்படி வரும்போது ஒரு நாள் தன்னிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்த ராமுபிள்ளை என்பவரின் மகளான பாப்பம்மாளைக் கண்டு அவள் மீது காதல் கொண்டான். அப்பெண்ணும் அவனது காதலை ஏற்றுக்கொண்டாள். இரவு நேரத்தில் தன் குதிரையை அவள் வீட்டுச் சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு அவன் ஏறிக்குதித்து அப்பெண்ணுடன் உறவாடும் அளவுக்கு இருவரின் காதலும் வளர்ந்தது.

இதை அறிந்த வெள்ளாளர்கள் அவனை பழிவாங்கத் திட்டமிட்டனர். வலிமை வாய்ந்த அவனை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதையுணர்ந்து மலையாள மாந்தீரிகர்கள் சிலரை வரவழைத்து ஆலோசனை கேட்டனர். அவர்கள் கூறிய ஆலோசனையின் அடிப்படையில் இரவில், அவன் வரும் வழியில் குழிவெட்டி அதன்மீது, பிரப்பம்பாயை விரித்து மண்ணைத்தூவி அதை மறைத்தனர். அவர்கள் தெருவிலேயே குழிவெட்டியதால் பிறர் அறியாதவாறு செய்வது எளிதாயிற்று.

வழக்கம்போல் குதிரையில் வந்த சாம்பான் பிரப்பம்பாயின் மீது குதிரை கால் வைத்ததும் குதிரையுடன் குழியில் விழுந்தான். திட்டமிட்டபடி பெரிய கற்களை எறிந்து அவனை எழவிடாமல் செய்து குதிரையுடன் புதைத்துவிட்டனர்.

மறுநாள் இச்செய்தியைக் கேள்வியுற்ற அவனது காதலி பாப்பம்பாள் அழுது அரற்றி தன் பெற்றோரையும், உறவினரையும் திட்டி சாபமிட்டாள். அதட்டல், மிரட்டல்களுக்கு அவள் அடங்காது போகவே அவளையும் அடித்துக் கொன்று தம் வீட்டிற்கு எதிரே இருந்த தோட்டத்தில் புதைத்து விட்டனர். சாத்தன் புதையுண்ட நாற்சந்திக்கு மிக அருகில் வடமேற்கில் கண்பார்வையில் படும்படி இத்தோட்டம் உள்ளது. இலந்தைப் புதர்கள் மறைவில் சிறுபீடம் ஒன்று அப்பெண்ணுக்குக் கட்டப்பட்டது.

சாத்தன் குளத்திலுள்ள அமராவதி அம்மன் கோயில் ஆதி திராவிடர்களுக்குரியது. இங்கு சாத்தன் சாம்பானின் தங்கை அமராவதியே தெய்வமாகியுள்ளாள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இக்கோயில் திருவிழாவின் போது பால்குடம் எடுத்து வந்து குத்துக்கல் மற்றும் பாப்பம்மாள் பீடம் என்ற இரண்டையும் வழிபட்டுச் செல்லத் தொடங்கினர்.

பாப்பம்மாள் இறந்து போகும் போது இட்ட சாபத்தினால் தான் அவளது குடும்பம் ஆண்வாரிசு அற்றுப் போய்விட்டது என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதுவரை நாம் பார்த்த இரு கதை வடிவங்களில், இரண்டாவது கதை வடிவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஏனெனில் முதல் கதை வடிவத்தைக் கூறியவர்களிடம் அப்பெண் என்ன ஆனாள்? என்று கேட்டபோது ‘அதான் அவன் செத்துபோனான்லா’ அப்புறம் பயமல்லாம இருந்தாள் என்று கூறினார்கள். ஆனால் சாத்தன் நினைவாக நடப்பட்ட குத்துக்கல்லுக்கு மிக அருகில் அப்பெண்ணுக்கு கட்டப்பட்ட பீடம் குறித்து எதுவுமே கூறாது மறைத்து விட்டனர்.

மேலும், ஆதிதிராவிடர் தரப்பில் கூறிய கதை வடிவில் சாதிமீறிக் காதலித்தவர்களுக்கு வழக்கமாக நிகழும் தண்டனை இடம் பெற்றுள்ளது. சமூக நடப்பியலை மறைக்காது இக்கதை வடிவில் குறிப்பிட்டுள்ளனர். தன் சமூகத்தைச் சார்ந்த ஒருவனைக் காதலித்து அதன் விளைவாக மரணமான வேளாளர் சமுகப் பெண்ணை புறக்கணிக்காது தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உழைக்கும் வர்க்கத்தின் மனிதநேய வெளிப்பாடாக இது அமைந்துள்ளது.

மேலும் உதிக்கும்...

Pin It