சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி

பாபர் மசூதி இடிப்பின் பின்னணியில் நிறைய காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. முதலாவதாக, மண்டலின் தாக்கத்தை மசூதி இடிப்பின் துணிகரத்தைக் கொண்டு எதிர்கொள்வது. இரண்டாவதாக, படையெடுப்பாளர்களிடம் தொடர்ச்சியாக அடைந்த தோல்விகளால் (பிளவுபட்ட சாதி அமைப்பின் விளைவு இது என ஒருவர் சொல்ல முடியும்) இந்து உளவியலை இடைஞ்சலுக்குள்ளாக்கும் தோல்வியுற்ற மனநிலையை பெருமித உணர்வாக மாற்றுவது. மூன்றாவதாக, தலித் - பகுஜன் மக்கள் திரளின் எழுச்சியை சமூக முரண்பாடுகளையும், வர்ணப் போராட்டத்தையும் ஒரு பரந்த இந்து புத்துயிர்ப்பு மற்றும் ஒற்றுமையின் பெயரால் நீர்த்துப் போக வைப்பது. நான்காவதாக, இந்து ராஷ்டிரம் மற்றும் இன்னபிறவற்றையும் சாதிப்பதற்காக மத வெறியூட்டி இந்து வாக்கு வங்கியைத் திரட்டுவது.

Periyar
ஒரு குறிப்பிட்ட நாளை (டிசம்பர் 6) தெரிவு செய்ததன் பின்னுள்ள காரணத்தை ஆராயும் போது, மேலும் ஒரு காரணம் இருப்பது நமக்குப் புலப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இந்துத்துவாவிற்கு மிகப்பெரிய சவால் சந்தேகமின்றி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால்தான் விடுக்கப்பட்டது. முதல் பார்வையில் இந்த சவால் அரசியல் ரீதியிலானது போல் தோன்றினாலும் அது ஒரு கொள்கை சார்ந்த சவால். அம்பேத்கருடன், இந்துத்துவத்திற்கு மிக வலுவான சவாலாக இருந்த இன்னும் இரு பெயர்களைச் சொல்வதென்றால், பெரியார் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரைச் சொல்லலாம். பெரியாரின் தாக்கம் தென்னிந்தியாவோடு நின்று போனது கெடு வாய்ப்பானது.

லோகியாவின் முழக்கமான "பிச்தா பாவே சாவ் மெய்ன் சாத்'' (பிற்படுத்தப்பட்டவன் நூற்றுக்கு அறுபது பெறட்டும்) என்பது, இந்துத்துவத்தை முன்மொழிபவர்களின் அரசியல் அதிகாரத்திற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. இன்று வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்திலும், பீகாரிலும் நாம் காணும் சமூக மாற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் லோகியா வாத கொள்கையின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது.

இந்து மதம், இந்து தத்துவம் மற்றும் இந்துப் பண்பாடு ஆகியவை குறித்த அவரது சிந்தனைகளில் இருந்த முரண்பாடுகள், நிலையற்ற தன்மை ஆகியவை குறித்து ஒருவர் நிச்சயமாக கேள்விகள் எழுப்ப முடியும்தான். அவரிடம் ஆற்றல் வாய்ந்த முழக்கங்கள் இருந்தாலும், அவரது சிந்தனையில் இருந்த இந்த இடைவெளி, அர்த்தமுள்ள எந்த இலக்கையும் அடைய முடியாத வகையில் சமூக நீதிப் பயணத்தில் மிக மோசமாகத் தடையுண்டாக்குவதாக இருந்தது. எனவே லோகியா மற்றும் அம்பேத்கர் ஆகியோரது தத்துவங்களின் ஒருங்கிணைப்பு, சமூக நீதி அரசியலுக்கு இன்றியமையாத ஒரு பகுதியை வழங்க மிகவும் தேவைப்படுகிறது.

பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரது பெயர்களைக் கேட்டாலே காவிப் படைகள் நடுநடுங்குகின்றன. இந்து மதத்தின் எதார்த்தத்தைத் தோலுரித்தும், இந்து நம்பிக்கை என்பது பார்ப்பனியம் அல்லது வர்ண அமைப்பு முறை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அய்யத்திற்கிடமின்றி நிறுவியதும் இவர்கள் இருவர் மட்டுமே. இந்து மதத்தை முற்றுமுழுதாக வேரறுக்கும் வரையில் நிறுத்தாதீர்கள் எனத் தங்களைப் பின்பற்றுவோர்களிடம் இவர்கள் இருவருமே பணித்துள்ளனர். பெரியார் இந்தக் காரணத்துக்காகத்தான் நாத்திகத்தைக் கையில் எடுத்தார். அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறி உடனடியாக புத்த மதத்திற்கு மாற வேண்டும் என்று வாதாடினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவராக இருந்த போதிலும் கூட, பாபா சாகேப் அம்பேத்கர் உலகின் மிகப்பெரிய புரட்சியாளர்களின் வரிசையில் இடம் பெறுவதை மிகப் பெரிய கவுரவமாகக் கருதினார். இந்நாட்டில் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தடையின்றி கோலோச்சிக் கொண்டிருந்த ஓர் அமைப்பு முறையை ஒழித்துக்கட்ட அவர் முயன்றார். பேச்சுரிமையற்றவர்களாகவும், அதிகாரமற்றவர்களாகவும், விலங்குகளை விடவும் மோசமான வாழ்க்கையை நடத்தி வந்த தீண்டத்தகாதோரை ஓர் ஆயுதப் புரட்சிக்கு முயலுமாறு நிர்பந்தப்படுத்தியிருக்க முடியாது. எனவேதான் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுபவராக அவர் இருந்தார்.

இந்து மதத்தின் வேத நூல்களை மிகக் கவனமாக ஆய்ந்து ஆற்றல் வாய்ந்த நூல்களை (‘இந்து மதத்தின் புதிர்கள்', ‘சாதி ஒழிப்பு', ‘பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப் புரட்சியும்' போன்ற நூல்கள்) வெளியிட்டதன் மூலமும், மநுஸ்மிருதியை தீயிட்டு எரிப்பது போன்ற ஆற்றல் வாய்ந்த குறியீட்டு ரீதியிலான நடவடிக்கைகளின் மூலமும், வட்டமேசை மாநாடுகளில் தீண்டத்தகாதோரின் முழக்கங்களையும், தேவைகளையும் வெளிப்படுத்தும் வகையில் குரல் கொடுப்பதன் மூலமும், மொத்த உலகின் முன்னால் இந்து மதம் மற்றும் இந்து சமூகத்தின் பாசாங்குகளை, முரண்பாடுகளை, மனித விரோதத் தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

இந்திய அரசியல் நிலப்பரப்பில் தலித்துகளுக்கான இடத்தையும், அவர்களது தனிப்பட்ட அடையாளத்தையும் பாதுகாக்க காந்தி போன்ற ஆளுமைகளுடன் கடுமையான தனிநபர் விமர்சனங்களில் இறங்கவும் விவாதத்தில் ஈடுபடவும் கூட அவர் தயங்கவில்லை. அரசியல் நிர்ணய சபையில் நுழைந்ததன் மூலம் தலித்துகளுக்கான சில சலுகைகளைக் கைப்பற்றிய அதே வேளையில், பல்வேறு காரணங்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கவும் செய்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல சட்ட அமைச்சராக அவர் ஆனபோது, இந்து சமூகத்தின் நிலையை இன்னும் குறிப்பாக இரங்கத்தக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையை உயர்த்த அவர் மிகக் கடுமையாக உழைத்தார், போராடினார். அந்நோக்கத்திற்காக இந்து சட்ட மசோதாவை வரைந்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கடுமையாக முயன்றார். நவீனமானதும், தீவிரத்தன்மை கொண்டவையுமான அச்சீர்திருத்தங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் மிகுந்த பழமைவாதிகளின் செல்வாக்கால் அவரது முயற்சிகள் கடுமையான பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்து சமூகத்தின் உறுப்பினராகத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என அவர் அப்போது உணர்ந்தார். இந்து மதத்தை விட்டு வெளியேறும் தமது அழைப்பை செயல்படுத்துவதை, கடந்த இருபது ஆண்டுகளாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்திருந்தார். இந்த நாட்கள் முழுவதிலும் தனது எதிரிகளுடனான உறவை சரி செய்ய அவர் உண்மையாக முயன்று கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவரால் அதை ஒரு கணமும் தொடர முடியாது. சாதி அமைப்பைக் கேள்விகேட்ட குற்றத்திற்காக 15 நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாடு கடத்தப்பட்டதும், இந்த நாட்டைத் தனது பிறப்பிடமாகக் கொண்டதுமான பவுத்தத்தை அம்பேத்கர் தனது லட்சக்கணக்கான தொண்டர்களுடன் தழுவி, அதை மீண்டும் இம்மண்ணில் நிலை நிறுத்தினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அம்பேத்கர் இப்போது ஒரு நவீன புத்தரின் அங்கியை அணிந்து கொண்டார்.

இந்தியச் சமூகம் சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுதலை பெறும் வரையில் அம்பேத்கரின் செல்வாக்கு, தலித் - பகுஜன் மக்கள் திரளை பாதிக்கவே செய்யும். அம்பேத்கரை சூத்திரர் மற்றும் ஆதி சூத்திரர்களின் நாயகனாக மட்டுமே அடையாளப்படுத்துவது ஒரு குறுக்கல்வாத நிலையாகவே இருக்கும். அவர் ஒட்டுமொத்த ‘இந்து'க்களின் தலைவர். ஏனெனில் அவருடைய முக்கியமான நோக்கமே, எண்ணற்ற தனித்தனி சாதிச்சுவர்களைத் தகர்த்தெறிந்து, முழு ‘இந்து சமூகத்தை'யும் விடுதலை செய்வதாகவே இருந்தது. ஒரு பார்ப்பனருக்கும் ஒரு தோட்டிக்கும் மனிதத் தன்மையற்ற இந்தச் சாதி அமைப்பிலிருந்து விடுதலை என்பது, அம்பேத்கரியத்தில்தான் வேரூன்றியிருக்கிறது.

அம்பேத்கரின் வாழ்க்கை, செயல்பாடுகள், சிந்தனைகள், போராட்டங்கள் ஆகியவை இந்துத்துவத்திற்கு அவ்வளவு பெரிய சவாலாக ஏன் இருக்கிறது என்பதற்கான ஒரே காரணமாக இதுதான் இருக்கிறது. தலித் - பகுஜன் மக்கள் திரளின் செயல்பாட்டுக்கு அவரது தத்துவம் வழிகாட்டியாக இருக்கிறது. ஆயினும் அவரது புகழை அழிக்கும் நோக்கத்தில் முயற்சிகள் பல்கிப் பெருகி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அருண்ஷோரி போன்ற காவிக் கொள்கைக்காரர்கள் எழுதிய ‘தவறான கடவுளரை வணங்குதல்' போன்ற புத்தகங்கள் இத்தகைய கெட்ட எண்ணத்தை நோக்கமாகக் கொண்டு வந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.

ஒரு போதும் துடைத்துவிட முடியாத நினைவை, அழித்துவிட முடியாத ஒரு செல்வாக்கை, பொய்கள், அப்பட்டமான கண்கட்டு வித்தைகளின் மூலம் குறைந்த பட்சம் மங்கச் செய்யவாவது முடியும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியும்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை நாடே கடைப்பிடித்துக் கொண்டிருந்தபோது, சங்பரிவார் அமைப்புகள் தமது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் உதவியோடு பாபர் மசூதியை இடிப்பதில் முனைந்திருந்தன. அம்பேத்கரின் நினைவை மாற்றீடு செய்வதற்காக ‘இந்துப் பெருமித' உணர்வு அவர்களால் புனையப்பட்டது. அதுவரையில் அம்பேத்கர் புகழ் மட்டுமே நிலவியிருந்த தலித் - பகுஜன்களின் உளவியலிலும், அவர்களின் கூட்டு நினைவு மற்றும் தனித்தனி நினைவுகளிலும் இந்துத்துவா ஒரு கேவலமான ஆக்கிரமிப்பைச் செய்தது.

தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராகத் திட்டமிட்டும் அடிக்கடியும் நிகழ்த்தப்படும் இனப் படுகொலைகளை விட எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாததும், வன்முறையானதும், அபாயகரமானதுமான கடுமையான ஓர் உளவியல் போரை நாம் கண்டோம்.

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14அய் ஏன் தகர்ப்புக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கவில்லை என ஒருவர் நியாயமாகவே கேட்கலாம். விடை மிகத் தெளிவானது. அவரது நினைவு நாளை விடவும் ஒப்பீட்டளவில் பிறந்த நாள் மிகவும் உற்சாகத்துடனும், விமரிசையாகவும், பரவலாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே அந்நாளைத் தெரிவு செய்வது ஆபத்தான ஒரு செயலாக இருந்திருக்கும். அதன் மூலம் அவர்களது அம்பேத்கர் விரோத கொள்கைகள் மிகத் தெளிவாக வெளி உலகிற்கு வெளிப்பட்டிருக்கும். அவ்வளவு பெரிய ஆபத்தை அவர்களால் தாங்க முடியாது.

பாபர் மசூதி ஒன்றும் இடிக்கப்படுகிற கடைசி மசூதியும் இல்லை. இடிக்கப்பட வேண்டிய மசூதிகளின் (இந்துத்துவவாதிகளின்) பட்டியலில் இன்னும் நிறைய மசூதிகள் உள்ளன. அவ்வளவு பெரிய ஆபத்தைச் சந்திக்குமளவுக்கு ஆற்றலுடையவர்களாக எப்போது தங்களைக் காண்கிறார்களோ, அப்போது தங்கள் துணிச்சலை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அம்பேத்கர் மட்டுமின்றி, இந்துத்துவ சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இன்னும் நிறைய ஆளுமைகளும் உள்ளன.

கடைசியாக மேலே கொடுக்கப்பட்ட விளக்கம் முழுவதும் வாய்மொழி சார்ந்தது. இந்த கருதுகோளுக்கு ஒரு திட்டவட்டமான நிரூபணம் இல்லாதிருந்தது. ஏறக்குறைய அதற்குச் சமமான ஓர் ஆதாரத்தை ‘அவுட்லுக்' இதழின் இந்தி பதிப்பில் பிப்ரவரி 7, 2005 இதழில் வெளியான மாலே கிருஷ்ண தாரின் Open Secrets: India’s intelligence unveiled என்ற புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நான் கண்டுபிடித்தேன்.

டிசம்பர் 25இல் கே.என். கோவிந்தாச்சார்யா, மாலே கிருஷ்ண தாரை தொலைபேசியில் அழைத்து தனது இரு நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு விருந்துக்கு வரும் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். இரவு விருந்திற்குப் பிறகு உரையாடல் நள்ளிரவு வரை தொடர்ந்தது. தனது நண்பர்களிடமிருந்து அவர் அறிந்து கொண்டது அவரை நடுக்கமுறச் செய்வதாக இருந்தது. மசூதியை இடிப்பதற்கும், அந்த இடத்தில் கோயிலைப் போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கும் சங் பரிவார் அமைப்புகள் தயக்கம் காட்டவில்லை என்பதை விளக்கப் போதுமான விளக்கங்களை அவர்கள் அளித்தனர். இவர் கேட்டார், ‘ஏன் டிசம்பரில் அதைச் செய்தீர்கள்?' என்றவுடன் குருமூர்த்தி உடனடியாக ‘நீங்கள் மீண்டுமொருமுறை வரலாற்றைப் படிக்க வேண்டும்' என பதிலளித்தார். முகமது கஜினி சோமநாதர் கோயிலை 1025 ஆம் ஆண்டு டிசம்பரில் தானே இடித்தார்!

டிசம்பரிலும் அந்த குறிப்பிட்ட நாள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அப்புத்தகத்தின் ஆசிரியர் ஏன் கேட்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்று. அவர் கேட்டு, அதற்கு இவர்கள் ஏனென்றால் அது அம்பேத்கரின் நினைவு நாள் என்று பதிலளித்து, உரையாடலின் அந்த குறிப்பிட்ட பகுதியை காவிப் படையின் மனநிலையை அது முழுமையாகத் தோலுரித்துக் காட்டிவிடும் என்ற பயத்தில் கூட, அவர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்?

கட்டுரையாளர், பாட்னாவைச் சேர்ந்தவர். சமூக நீதி அமைப்புகளிலும், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச் சங்கத்திலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபாடு உடையவர். அவரது கட்டுரைகள் ‘ஒரு சிறுபான்மைச் சமூகத்து பிரதமரின் மன நெருக்கடிகள்' என்ற தலைப்பில் டிசம்பர் 2007இல் நூலாக வெளிவந்திருக்கிறது.

கட்டுரையின் தமிழாக்கம்: ம. மதிவண்ணன்
Pin It