வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியும், வேலை இழப்பு வளர்ச்சியும், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த கொள்கை திடீரென்று ஒருநாள் நண்பகலில் உதயம் ஆகவில்லை. நீண்ட திட்டத்துடன் முதலாளித்துவம் உருவாக்கிய கொள்கை என்பதை அறிவது அவசியம். முதலாளித்துவ கொள்கை எனும் போது அதன் அரசியல் பொருளாதாரம் குறித்தும் அறிவது அவசியம். முதலாளித்துவம் பழைய நிலபிரபுத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே விவாதித்துள்ளோம்.

எனவே முதலாளித்துவத்தின் லாபமீட்டும் வேகம் குறித்தும் நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியமான தேவை ஆகும். அரசு நிறுவனங்களும் இதிலிருந்து விதிவிலக்காக அமையவில்லை. லாபமீட்டுவதற்கு தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. இது இரண்டு வழிகளில் முதலாளித்துவத்திற்கு பயன் படுகிறது. ஒன்று தொழில் நுட்பம் ஆகும். இதன் மூலம் ஆலைகளில் ஆட்குறைப்பை அமலாக்குவது நிகழ்கிறது. அதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகப்படுத்துகிறது. வெளியில் வேலையில்லாதோர் அதிகரிக்கும் போது, வேலையில் இருப்போருக்கான உரிமைகளை குறைக்க முடியும். தொழிலாளர் நலச்சட்டங்களை அமலாக்க மறுக்கலாம். இரண்டு மேற்படி செயல்களும், தொழில் நுட்பத்தின் மூலமான உற்பத்தி பெருக்கமும் வேகமான லாபத்திற்கு வழிவகை செய்கிறது.

வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி மற்றொரு வழியிலும் உருவாகிறது. அது என்னவென்றால், புதிய தொழிற்சாலைகளை உருவாக்காமல், இருக்கிற தொழிற்சாலைகளை பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்குவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் நம் நாட்டிற்கு வரும். இது நாட்டின் அந்நிய செலாவணி வரவு செலவில் வருமான அதிகரிப்பை வெளிப்படுத்தும். ஆனால் புதியதாக எந்தவொரு வேலை வாய்ப்பையும் உருவாக்காது. வெளியில் இருந்து வந்த பணத்தின் காரணமாக ஒட்டுமொத்த வரவில் வளர்ச்சியிருப்பதால் பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. ஆகவே தான் இத்தகைய பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இது போன்ற கொள்கைதான் அமலாகி வருகிறது. தொழில் நுட்பத்தையும், அதன் மூலமான லாபத்தையும் அதிகரிக்க விரும்பும் நிறுவனங்கள், வேலையிழப்புக் கொள்கைக்கும் வ்ழிவகை செய்கின்றன. பங்குச் சந்தை இந்த கொள்கையை தீவிரப்படுத்த உதவுகிறது. எந்த ஒரு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருக்கிறதோ, அந்த நாட்டில் தொழிலாளர் உரிமைகள் பெரியளவில் பறிக்கப்படும். இந்தியாவிலும், ஏனைய ஆசிய நாடுகளிலும் இது போன்ற உரிமைப் பறிப்பையும், வேலை பறிப்பையும் பார்க்கமுடியும். இதற்கு சில உதாரணங்களையும் குறிப்பிடலாம். ஒன்று, டாடா ஸ்டீல் உற்பத்தி நிறுவனம், ஜாம்ஷெட்பூரில் உள்ள இந்த நிறுவனம் 30000 தொழிலாளர்களைக் கொண்டு செயல் பட்டபோது 50 லட்சம் டன் எக்கு தயாரிக்கப்பட்டது. இப்போது 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஆனால் உற்பத்தி 80 லட்சம் டன். இதே கொடுமையை அரசு நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது.

நெய்வேலி அணல் மின் நிலையம் ஒரு சுரங்கம், ஒரு மின் நிலையம் கொண்டு 600 மெகா வாட் மின்சாரம் தயரித்த போது, 24 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. இப்போது 3 யூனிட், 3 சுரங்கம், 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிற நிலையில் 17 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் லாபம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் உள்ள யதார்த்தம் என்னவென்றால், உண்மையில் தொழிலாளர் போதவில்லை என்பதாகும். தொழிலாளர் போதாத நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நியமனம் அதிகரிக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டத்தை அமலாக்குவதில்லை என்பதனால், நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டிட, இந்த கொள்கைகள் நிறுவனமய மாக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு பல லட்சம் கோடிகளில் பயனளிக்கிறது.

அரசு நிறுவனங்களே இது போன்ற தொழிலாளர் விரோத அணுகுமுறையை கையாளுகிற போது தனியார் நிறுவனங்களின், அநியாயக் கொள்ளையை தடுக்க முன் வருமா? இப்போது இந்தியாவில் இந்த தொழிலாளர் புறக்கணிப்புதான் நடைபெற்று வருகிறது. பின் வரும் இரண்டு உதாரணங்களின் மூலம் மத்திய, மாநில அரசுகள் இளம் தொழி லாளர் புறக்கணிப்பை பகிரங்கமாக கையாண்டிருப்பதைப் பார்க்க முடியும். ஒன்று பாரத ஸ்டேட் வங்கி, தனது நிறுவனத்தில் 11 ஆயிரம் பணியிடங்கள் தேவை இருக்கிற நிலையில், ஓய்வு பெற்ற அலுவலர்களை பணிநியமணம் செய்ய முயற்சி எடுத்தது. டி.ஒய்.எஃப்.ஐ போராட்டம் மேற்படி முயற்சியை தடுத்தது. மிக சமீபத்தில் மேற்குறிப்பிட்ட 11 ஆயிரம் பணியிடங்களுக்கு 36 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்து பின்னர் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டதையும் நாம் அறிந்வோம்.

இரண்டாவது உதாரணம், தமிழ் நாடு அரசு சம்மந்தப் பட்டது. கடந்த 2009 டிசம்பர் 18 அன்று வெளியிட்ட அரசாணை எண் 170 ஆகும். மேற்படி ஆணை ஒய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் தருவது குறித்தது. இதன் மூலம் அரசு தனது செலவினத்தை குறைத்து விடப்போவதாக அறிவித்தது. டி.ஒய்எஃப்.ஐ தொடர்ந்து போராடி, கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் சிறை சென்று அரசை நிர்ப்பந்தித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் லட்சக்கணக்கில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை பூர்த்தி செய்திட எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுக்கிறது.

மத்திய அரசு ஏறத்தாழ வேலை நியமனத் தடை சட்டத்தை அமலாக்கி வருகிறது.  இத்தகைய புறக்கணிப்பு இன்னும் ஒரு வகையில் இந்திய மண்ணில் அரங்கேறுகிறது. அதாவது, உலகில் உள்ள இதர நாடுகளில் வெறும் வேலைப்பறிப்பை மட்டும் உருவக்குகிறது. இந்தியாவில் கூடுதலாக சமூக நீதியையும் இணைத்துப் பறிக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக கிடைத்த இடஒதுக்கீடு, மேற்படி பொருளாதாரக் கொள்கை காரணமாக பறிபோகும் அவலத்தை, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக குரல் கொடுப்பதாக கூறுபவர்களும் ஆதரிக்கின்றனர், என்ற செய்தி வேதனையானது. இது இந்திய நாட்டில் சமூக நீதிக்கான போராட்டம், வர்க்கப் போராட்டதுடன் இனைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்தியாவில் இத்தகைய சமுக நீதி மறுப்பு குறித்து சமுகநீதிக்காக போராடிய பெருமை கொண்டதாக சொல்லிக்கொள்ளும் அரசியல் இயக்கங்கலும் கவலை கொள்வதில்லை. மாறாக அவர்களும் இந்த சமூகநீதி மறுப்பிற்கு துணைபோகிறார்கள். எனவே தான் இடதுசாரிகள் முதலாளித்துவம் அல்லாத சமூக மாற்றம் தான் இத்தகைய சமூக சுரண்டல்களை வேரறுக்கும் என வலியுறுத்துகிறார்கள். இன்றைய இந்தியாவின் அனுபவம் சமூக நீதி என்கிற முழக்கமோ, சாதி ஒழிப்பு என்கிற முழக்கமோ சம்ந்தப்பட்ட மக்களை சிறிது காலம் இடது சாரிகளுடன் இனைவதை தடுக்கப் பயன் படுமே அல்லாது, முழக்கங்களை சாதித்துக்காட்ட பயன்படாது என்பதை தெளிவுபடுத்துகிறது.