இந்திய நாட்டில் எல்லாத்துறைகளிலும் ஊழல்  தலைவிரித்தாடுவது ஒன்றும் புதிய தகவல் இல்லைதான். அங்கிங்கு என்று எங்கும் நிறைந்திருக்கும் இந்த ஊழல் இப்போது விளையாட்டு  துறை யிலும் ஆட்டம் போட துவங்கி உள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க உள்ள காமன் வெல்த் போட்டிகளில் கோடி கோடியாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தொடர்ந்து தகவல் வந்துக்கொண்டிருப்பது நமது நாட்டிற்கு அவமானத்தையே சேர்க்கும். அதைவிட கொடுமையான செய்தி நமது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு நிதியையும் இப் போட்டிக்காக செலவழித்து இருப்பதுதான்.

பிரிட்டிஷ் மன்னராட்சியின் கீழ் பல நாடுகள் காலணி நாடுகளாக அதாவது அடிமையாக இருந்தபோது பொழுது போக்குக்காக விளையாட்டுப்போட்டிகளை நடத்தினார் பிரிட்டிஷ் மகாராணி. 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மற்றும் அதன் அடிமை நாடுகள் இணைந்த விளையாட்டு போட்டிகளை பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விளையாட்டுகள் என்ற பெயரில் நடந்தது. 4 ஆண்டு இடைவெளியில் இந்த போட்டிகள் நடைபெற்று வந்தன. 1940களுக்கு பின் பல நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற்றன. இதனால் 1954ல் நடைபெற்ற போட்டியை பிரிட்டிஷ் மற்றும் பொது நாடுகள் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் நடத்தின.  உலக அரசி யலுக்கு ஏற்ப 1978 க்கு பின் காமன்வெல்த் என்ற பெயரில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த போட்டிகள் 2006ல் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட முடிவுப்படி 2010 அக்டோபர் 3 முதல் 11 ஆம் தேதி வரை இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்தியரசு விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் பொறுப்பை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் ஒப்படைத்து செலவுக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தந்தது. இங்கிருந்து தான் ஊழல்கள் ஆரம்பமாகியுள்ளன. இப்பணத்தில் புது விளையாட்டு அரங்கங்கள், விடுதிகள், சொகுசு பங்களாக்கள், புதிய ரக கார்கள், புதிய சாலைகள் என அமைக்கப்படுகின்றன. உலகின் பார்வையில் இந்தியா தனியாக உயர்ந்து தெரிய வேண்டும். இந்திய மக்கள் குடிப்பது மினரல் வாட்டர், கொப்பளிப்பது பன்னீர், வறுமையென்றால் இந்தியா மக்களுக்கு என்னவென்றே தெரியாது என காட்ட வேண்டும் என்பதற்காக விளையாட்டுப்போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள குடிசைகளை டெல்லி மாநகராட்சி மூலம் காலி செய்தது அரசு. விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

 மத்திய கண்காணிப்பு ஆணையம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்ட பல கட்டிடங்கள் உறுதியற்றவை,  கட்டிடம் கட்ட ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் மோசமானவை என்ற அறிக்கையை மத்தியரசிடம் தந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தன் பங்குக்கு சி.பி.ஐ.க்கு ஒரு பெரிய பைல் அனுப்பியுள்ளது. அதில் காமன்வெல்திற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடம் கட்டுவதற்கு விடப்பட்ட டெண்டரில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் பெரிய அதிகாரிகள் எல்லாம் தவறு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென ஆதாரங்களுடன் பெயர் பட்டியல்களை அனுப்பியது. காமன்வெல்த் போட்டியை வைத்து திட்டமிட்டே ஊழல் செய்துள்ளார்கள் இதை விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விவகாரத்தை பெருதாக்கியதால் தற்போது பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூன்று மாதத்திற்கு முன்பு வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் பயணம் செய்ய அதாவது ஊர் சுற்ற விலை உயர்ந்த 2 ஆயிரம் கார்கள் வாங்கப்பட்டன. அதில் ஊழல் நடந்துள்ளது என்ற தகவல் வெளியானது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது நடைபெற்ற ஊழலில் பெரும் பகுதி குறைந்திருக்கும். ஸ்டேடியம் கட்டுமானம் மற்றும் புதுப் பிக்கும் பணிகளில் டெண்டரை திருத்தி பல கோடி மோசடி, வீரர்கள் நடைபயிற்சி செய்யும் டிரெட் மில் எந்திரத்தை வாடகைக்கு எடுத்ததில் முறைகேடு, பலூன்கள் வாங்க பெரிய தொகை ஒதுக்கியதில் தில்லுமுல்லு, காமன்வெல்த் ஜோதியை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்ததில் நிதி முறைகேடு, ஜோதி தொடர் ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்ட டாக்சியின் கட்டணங்களை உயர்த்தி கமிஷன், டென்னிஸ் ஆடுகளங்களை அமைக்க தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கி விதி மீறல் இவ்வாறு பல்வேறு மட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஜோதி தொடக்க ஓட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில், கிராமங்களில் வசிக்க வீடுயில்லாமல், உண்ண உணவு இல்லாமல், விவசாய கடனை அடைக்க முடியாமல், படிக்க வழியில்லாமல் உள்ளவர்களுக்கு இந்த 35 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தால் வறுமை போய் நிம்மதியாக இருந்திருப்பார்கள். குறைந்த பட்சம் அதை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க, சிறந்த மைதானங்களை உருவாக்க பயன்படுத்தியிருந்தால் அவர்கள் பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பார்கள்.

Pin It