கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களும், கல்வியாளர்களின் கோரிக்கையும் தான் சமச்சீர் கல்வி. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாடு இந்தியா. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் கூட அனைவருக்கும் இலவசமான பொதுப்பள்ளி முறை உள்ளது. இந்தியாவில் மட்டுமே ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வை நிலைநாட்டக்கூடிய இன்னும் அதிகரிக்கக்கூடிய கல்வி முறை உள்ளது. இதில் தமிழகம் ஒரு படி மேலே சென்று 1970ல் இருந்து நான்கு விதமான பள்ளிகளை மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில கல்வி வாரியம் என நடத்துகிறது. இப்படிப்பட்ட வேறுபாட்டை எதிர்த்து அனைவருக்கும் பொதுவான, தரமான, சமமான பள்ளிக்கல்விக்காக டி.ஒய்.எப்.ஐ, எஸ்.எப்.ஐ போன்ற அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என சேர்த்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு முன்னாள் துணைவேந்தர் முனைவர். முத்துக்குமரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

முத்துகுமரன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பும் அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்காகவே, எம்.பி. விஜயகுமார் (முன்னாள் ஐஏஎஸ்) தனிநபர் குழு ஒன்றும், பின்னர் அவர் தலைமையிலான மற்றொரு குழு என்று குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு மக்களை ஏமாற்றியபொழுது, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று டி.ஒய்.எப்.ஐ, எஸ்.எப்.ஐ, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை போன்ற அமைப்புகளின் போராட்டம் அரசாங்கத்தை அச்சுறுத்தவே சமச்சீர் கல்வியை யாருக்கும் பாதிப்பு இல்லாமல் 2010_2011 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துவோம் என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஆயிரம் குளறுபடிகளோடு பொதுப்பாடத்திட்ட வரைவு வந்தது அதை இறுதிபடுத்தாமலே பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டன. இப்படி அக்கறையில்லாமல் அலட்சியமாக செயல்பட்ட அரசாங்கம் நவ 30 _ 2009 வெளியிட்ட சமச்சீர் கல்வி குறித்த அவசர சட்டம் சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சங்களை உதறிவிட்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜனநாயக இயக்கங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியானது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி தரமானதாக இல்லை. அது சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்பதை இந்த அரசு ஒப்புக்கொண்டாலும் மீண்டும் அதையே தொடரக் கூடிய வகையிலே சட்டம் இயற்றியுள்ளது. இந்தசட்டம் அவசரக்கோலத்தில் மிகவும் அலட்சித்துடன் இயற்றப்பட்டது. என்பதற்கு எடுத்துக்காட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர். முத்துக்குமரனை, பாரதிதாசன் பல்கலையின் துணைவேந்தர் என்று குறிப்பிட்டிருப்பது மேலும் இதற்கு முன்பாக அமைக்கப்பட்ட மூன்று குழுக்களின் அறிக்கையும் பொதுமக்களின் பார்வைக்கே வராமல் அவற்றிலிருந்து எந்த பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டது என்றும் கூறவில்லை அதோடு இந்த சட்டத்தில் சமச்சீர் கல்வி சமமான, தரமான (ணினிஹிமிஜிகிஙிலிணி ஷிஜிகிழிஞிகிஸிஞி ணிஞிஹிசிகிஜிமிளிழி) என்பதையே மாற்றி ஹிழிமிதிளிஸிவி ஷிசிபிளிளிலி ஷிசீஷிஜிணிவி அதாவது தமிழில் பொதுப்பள்ளி முறை என்று கூறலாம். ஆனால் பொதுப்பள்ளி முறை என்றால் என்ன என்பதே இதில் விளக்கப்படவில்லை. சட்டத்தின் மிக முக்கிய அம்சமே இங்கு காணவில்லை.

பொதுப்பாடத்திட்டம், ஒரே மாதிரியான தேர்வுமுறை மற்றும் புத்தகங்கள் மூலம் தரமான கல்வியும், சமூகநீதியும் வழங்கப்படும் என்று அரசு சொல்கிறது. ஆனால் கழிவறை, நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாமல், ஆசிரியர்களே இல்லாமல், பள்ளிக்கூட கட்டடங்கள் கூட இல்லாமல் மரத்தடியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எப்படி தரமான கல்வி கிடைக்கும்? இவர்கள் எப்படி ஆடம்பர வசதி கொண்ட உயர் முதலாளி வர்க்க வாரிசுகள் பயிலும் தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டி போட முடியும்? இது எப்படி சமூகநீதியை உறுதிப்படுத்தும்? இது எப்படி சமச்சீர் கல்வியாக முடியும்?

அதே போல் நான்கு வாரியங்களையும் ஒழித்து பொது வாரியம் அமைப்போம் என்று சொன்ன அரசு. இப்போது ஓர் பொது வாரியத்தின் கீழ் இந்த நான்கு வாரியங்களும் செயல்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. பொது வாரியம் என்பது ஓர் தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என முனைவர் முத்துக்குமரன் அறிக்கை வலியுறுத்திய போதும் பொது வாரியம் முழுக்க முழுக்க அதிகாரிகளால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மொத்தம் 13 உறுப்பிர்களில் 7 அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், 3 மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர்களுக்கு பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள அரசு மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ள மிக முக்கியமான பங்கு வகிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நிராகரித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரையில் அமைக்கப்பட்ட கல்வி குழுக்களும், முத்துக்குமரன் கல்விக்குழுவும் பரிந்துரைக்கும் மிக முக்கியமான அம்சம் தாய்மொழி வழிக்கல்வி, இதையும் அரசு நிராகரித்து எந்த மொழியில் வேண்டுமென்றாலும் பயிற்றுவிக்கலாம் என்று தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது. ஆங்கில வழிக்கல்வி, தமிழ் வழிக்கல்வி, என்று இருப்பதே கல்வியில் வேறுபாட்டை காட்டுகிறது.

தனியார் பள்ளிகளை கண்காணிப்பதைப் பற்றியோ, பள்ளிகளின் அடிப்படை வசதிகளைப் பற்றியோ சட்டம் ஏதும் விவரிக்கவில்லை. இது தனியார் பள்ளிகள் எப்படிப்பட்ட மோசமான தரத்தில் இருந்தாலும் அதன் வியாபாரத்தை தொடர அனுமதிக்கிறது. தமிழகத்தில் கும்பகோணம், வேதாரண்யம் போன்ற எத்தனை சம்பவங்களில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் இறந்தாலும், பச்சிளம் குழந்தைகளின் பிணங்களுக்கு மேலாக பணக்கட்டுகளை அடுக்கிக் கொண்டு பகட்டாக வாழும் கல்வி முதலாளிகளின் அடிமைகளாக இருக்கும் இந்த அரசு, கல்வி வியாபாரத்திற்கு எப்போதும் கடிவாளம் போடாது.

இந்தச் சட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட, பல்வேறு ஜனநாயக அமைப்புகளால் வலியுறுத்தப்பட்ட, அனைத்து மக்களும் பயன்பெறக்கூடிய சமச்சீர் கல்விக்கு சமாதிகட்டி அடிப்படை வசதிகள், அரசு பள்ளியின் ஆசிரியர் தேவைகள், நிதி ஆதாரங்கள் பற்றியெல்லாம் ஒரு வாக்கியம் கூட இல்லாமல் மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் தனியார் பள்ளிகளின் வியாபாரத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இதோடு நில்லாமல் இதுவரை அரசின் அனுமதி இல்லாமல் நன்கொடை என்ற பெயரிலும், அநியாய கல்விக் கட்டணத்தாலும் நடுத்தர மக்களை சுரண்டிக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும், தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் 2009 என்ற சட்டத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள் கட்டணம் பெறுவதற்கான விதிமுறைகள்.

1. பள்ளி அமைந்துள்ள இடம்

2. கட்டமைப்பு வசதிகள்

3. பராமரிப்பு

4. எதிர்கால தேவைகளுக்கான நிதி

5. வேறு தேவைகள்

இந்த விதிமுறைகள் கட்டணத்தை முறைப்படுத்தாது மாறாக அதிகக் கட்டணத்தை அரசின் அனுமதியோடு தனியார் பள்ளிகள் பெறும் மேலும் எதிர்காலத் தேவைகள், வளர்ச்சி நிதி என்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கூட அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஏழை, நடுத்தர மக்களை கல்வி கட்டணம் என்ற பெயரில் சுரண்டல் தொடரும். சமச்சீர் கல்வி சட்டம் என்று ஒரு புறம் பேசும் அரசாங்கம் மறுபுறம் இதுபோன்ற கட்டணச் சட்டத்தின் மூலம் பள்ளிகள் சமச்சீராக இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்விக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக பள்ளி அமைந்துள்ள இடம் என்ற பெயரில் நகர மக்களின் கல்விக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளது. வசூலிக்கப்படும் கட்டணங்களை எப்படி செலவிடப்பட வேண்டும் என்ற வழிக்காட்டுதலும் இல்லை. இந்த அவசரசட்டமும், கல்வி கட்டணச் சட்டமும் எந்தவிதத்திலும் ஏழை மாணவர்களுக்கு உதவாது. அது திமுக வின் தேர்தல் ஓட்டு வேட்டைக்கும், தனியார் பள்ளிகளின் கொள்ளையில் பங்கு கேட்கவும் மட்டுமே பயன்படும் என்று தெரிந்த டி.ஒய்.எப்.ஐ, எஸ்.எப்.ஐ தோழர்கள் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் கையெழுத்து இயக்கத்தின் மூலமாக அரசிற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் சமச்சீரான கல்வியும், சமூகநீதியும் கிடைக்க வேண்டுமெனில் தமிழ்நாட்டிற்கான தனியானதொரு கல்விச்சட்டம் இயற்றப்பட வேண்டும். அதில் அடிப்படை வசதிகள், நிதி ஆதாரங்கள், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் தாய்மொழி கல்வி போன்றவைகள் ஓர் சட்டமான இருக்க வேண்டும்.

சமச்சீரான கல்வி முறை மட்டுமே சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும், ஏழை, பணக்காரன் வித்தியாசத்தையும் குறைப்பதற்கு ஒரேவழி அதுவே வர்க்கங்கள் இல்லாத சமூக அமைப்பிற்கான முதல்படி.

- கிஷோர்

Pin It