இந்திய தண்டனை சட்டமும், சமூக உரிமைகள் பாதுகாப்பு சட்டமும் 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு முப்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின் இச்சட்டத்தினால் தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் சாதி இந்துக்கள் இழைக்கின்ற கொடுமைகளிலிருந்து தேவையான அளவுக்கு பாதுகாப்பு அளிக்கமுடியவில்லை எனக் கூறி 1989 ஆம்ஆண்டு அன்றை இந்திய சட்ட அமைச்சர் பி. சங்கர் ஆனந்தன் அவர்களால் சாதிய ரீதியிலான துன்புறுத்தல்களிலிருந்து தலித்துகள், ஆதிவாசிகளை பாதுகாக்க வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு இருபதாண்டுகள் கடந்து விட்ட பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டம் தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் உண்மையிலேயே பாதுகாப்பு அளித்திருக்கிறதா? உதவி இருக்கிறதா? எனில். இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. இந்தியாவில் தலித்தோ, ஆதிவாசியோ இந்தியக் குடியரசு தலைவராக, மாநில முதல்வராகக் கூட வந்து விட முடியும். ஆனால் அவர்களால் சிதம்பரம் கோயிலில் நுழைந்துவிட முடியாது என்பது தான் இந்திய சாதிய சமூகத்தின் எதார்த்தமாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் செல்வி. மாயாவதி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட அன்று உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கூடிய ஆயிரக்கணக்கான தலித்துகள், தங்கள் மீது சாதி இந்துக்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இவர்களின் நம்பிக்கை ஒரு வருட காலத்திற்குள்ளாகவே தவிடு பொடியானது.

தனியார் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில், டெல்லியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமர்பித்த அறிக்கை கீழ் கண்டவாறு கூறுகிறது “மாயாவதி பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஒரு மாத காலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் ஏழு தலித்துகள் கொல்லப்பட்டதும், மூன்று தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு சாதி இந்துக்களால் ஆளாக்கப்பட்டதும் நடந்தேறியது. அரசியல் ரீதியாக பகுஜன் சமாஜ் கட்சி ஆதாயம் பெற்ற இடங்களான ரேபரெலி, மோகன்லால் கஞ்ச், லஷ்மிபூர், கேரி, மாகொலா போன்ற இடங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து சாதி இந்துக்களால் நடத்தப்பட்டு வருகின்றன’’

தலித்துகளுக்கு கூடுதல் அதிகாரம் தரவும், நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை வழங்கவும் செல்வி. மாயாவதி அரசு முயலுமெனில் தலித்துகளுக்கு எதிரான சாதி இந்துக்களின் உணர்வு மேலதிகமாக வெளிப்படுவதோடு மாநில அரசுக்கு எதிராக மாறிவிடும் தன்மை உள்ளதாக அக்கருத்தரங்கம் குறிப்பிட்டு உள்ளது. மேற்கு உத்தரபிரதேச மாவட்டங்களான பாக்பாத், முசாபர்நகர் மற்றும் மீரட் மாவட்ட கிராமங்களில் தலித்துகளுக்கு அரசால் கொடுக்கப்பட்ட பட்டா நிலங்களை சாதி இந்துக்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, தட்டி கேட்டும் தலித்துகளை அடித்து"contentpane">, உதைத்து காயப்படுத்துவதும், நடைபெற்று வருவதாக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது. நீதித்துறை, காவல் துறை, மாவட்ட அரசு நிர்வாக அமைப்புகள் உத்தரபிரதேசத்தில் சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் அலுவலகத்திலிருந்து வழங்கப்படும் உத்தரவுகள் அனைத்தும் இவ்விஷயத்தில் எந்த பயனும் அளிப்பதில்லை என்பதே எதார்த்தமாகும். தேசியக் குற்றப் பதிவு குழுமம் 2007 ஆம் ஆண்டு தந்த புள்ளி விபரங்களின்படி தலித்துகள் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் உத்தரபிரதேசத்தில் அதிகபடி உள்ளதாகவும், தலித்துகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் நிறுவன மயமாகியும் உள்ளன. இந்திய அளவில் உத்தரபிரதேசத்தில் தான் மிக அதிக அளவிலான வன்முறைகளும், தாக்குதல்களும் தலித்துகள், ஆதிவாசிகளுக்கு நிகழ்த்தப்படுகின்றன. தேசிய அளவில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான 9,819 வழக்குகளில் 2113 வழக்குகள் உத்தரபிரதேசத்தில் பதிவானவையாகும். இவ்விபரங்கள் இந்திய அளவில் 10.2 சதம் அளவில் தலித்துகள், ஆதிவாசிகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகாரித்துள்ளதாகவும், உத்தரபிரதேசத்தில் 20.3 சதமாக இருப்பதையும் தேசிய குற்றப் பதிவு குழுமம் சுட்டிக் காட்டுகிறது.

இச்சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பலவீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயமும், நீதியைப் பெறவும், வன்கொடுமை புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கவும் சிறிதளவே வழியுள்ளது. குற்றங்கள் புரியும் சாதி இந்துக்கள் மிக எளிதாக தண்டனைகளிலிருந்து தப்பிவிடுவதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை மேலும் வலிமையுள்ளதாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இச்சட்டம் தலித்துகள், ஆதிவாசிகளுக்கு எதிராக சாதி இந்துக்கள் செயல்பட்டாலோ, தாக்குதல்களில் ஈடுபட்டாலோ, குறைந்தபட்சம் சாதியின் பெயரை சொல்லி திட்டினாலோ அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. ஆனாலும், நமக்கு கிடைக்கின்ற விபரங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பயனை, நோக்கத்தினை முழுமையாக அடைந்து விடவில்லையென்பதாகவே காட்டுகின்றன. ஏனெனில் நீதி பெறுவது என்பது மிக நீண்டகாலம் இந்திய சமூகத்தில் நீடித்து வருகின்ற சாதியம் நிறுவனமயமாகி அனைத்து துறைகளிலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளதால், தலித்துகள், ஆதிவாசிகள் தங்களுடைய உரிமையை, நீதியை பெறுவதில் சாதி அமைப்பு மாபெரும் தடையாக இருந்து வருகிறது. சாதியே இந்தியாவில் வர்க்கமாகவும், வர்க்கமே சாதியாகவும் இருந்து வருகிறது. 80 சதமான தலித்துகள், ஆதிவாசிகள் சாதிய சமூகத்தில் கூலி விவசாயியாக, தொழிலாளிகளாக, ஏழைகளாக நீடித்து இருக்குமாறு வைக்கப்பட்டு வந்துள்ளனர், வருகின்றனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் மிக சரியாக அமல்படுத்தப்பட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், தனி நீதிமன்றங்கள், அரசு வழக்குரைஞர்கள், மாநிலத் தலைமை அலுவலர், தலித், ஆதிவாசிகள் பாதுகாப்பு துறை, மாநில மாவட்ட அளவில் தலித் _ ஆதிவாசிகள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை இல்லாமல் சிறப்பு தனி அதிகாரியாக மாவட்ட அளவில் மாவட்ட துணை காவல் துறை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இவ்வமைப்புகள் நிறுவப்படாமலோ அல்லது இந்த அமைப்புகள் போதுமான திறனுடனும் செயல்படவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. அரசின் நிர்வாக அமைப்புகளும் நீதித்துறை மற்றும் காவல் துறையாலும் இச்சட்டம் மெத்தனமாகவோ அல்லது அலட்சியமாகவோ கையாளப்படுகிறது. உதாரணமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2002 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பு கீழ்கண்டவாறு உள்ளது. “பெரும்பலான தலித் _ ஆதிவாசிகள் வழக்குகளில் போலிசும் மாவட்ட நிர்வாகமும், வழக்குகளை பதிவு செய்வதில்லை. மேலும், வழக்குகள் பதிவு செய்தாலும் தலித் _ ஆதிவாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைத்துக் காட்டியும், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதிலிருந்து பாதுகாக்கும் விதத்திலும், வழக்குகளிலிருந்து எளிதாக விடுவிக்கும் வகையிலும் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.’’

நீதிக்கான தேசிய தலித் இயக்கம் தலித் உரிமைகள் தேசிய ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றின் கணக்கின்படி 1992 லிருந்து 2007 வரை தலித் _ ஆதிவாசிகள் சாதி இந்துக்களின் வன் முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 33 சதம் பேர் மட்டுமே, தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என வழக்கை பதிவு செய்துள்ளனர். இதிலும் பெரும்பாலான வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ்தான் பதிவு செய்யப்பட்டன எனவும், தலித் _ ஆதிவாசிகளின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3.3 சதம் வழக்குளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது. எனவும் கூறுகிறது. இச்சட்டத்தை அமல்படுத்துவதில் நீதித்துறையின் செயல்பாடும் போதுமானதாக இல்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 14இன் படி நிறுவப்பட்ட தனி நீதி மன்றங்களில் 80 சதம் வழக்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதில் 95.1 சத வழக்குகளின் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை. சமூக நீதி அமலாக்க அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் காவல் துறையினர் தலித் _ ஆதிவாசிகள் மீதான தாக்குதல் வழக்குகளை வேண்டுமென்றே உள்நோக்கதுடன் தவிர்த்து விடுவதாகவும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்வதில்லை எனவும் தங்களின் இயலாமையை ஒத்துக் கொள்கின்றன.

அகமதாபாத்தில் இயங்கி வருகின்ற சமுக நீதிக்குழு 2004இல் குஜராத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான நானூறு வழக்குகளை ஆய்வு செய்ததில் 320 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளதை கண்டுபிடித்தது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 18வது பிரிவு குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்குவதை தடை செய்கிறது. என்றாலும் குஜராத் நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் வழங்கியதை என்னென்பது? வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 4(1)இன் பிரிவின் படி பாதிக்கப்பட்ட தலித் _ ஆதிவாசிகளுக்கு உதவக்கூடிய வகையில் அரசு வழக்குரைஞர் ஒருவரும், மாவட்ட அளவில் உள்ள தலித் _ ஆதிவாசிகள் பாதுகாப்பு குழுவும் இணைந்து செயல்பட வேண்டும் என வழிகாட்டி இருக்கிறது. எனினும் மேற்கண்ட எந்தவொரு வழக்கிலும் இம்மாதிரியான நிர்வாக ஏற்பாடு இல்லை. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும் குறைந்த பதவியில் உள்ளவர்கள் இவ்வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்ற சட்ட விதி இருந்தாலும் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறைவான பதிவியில் உள்ளவர்களே விசாரித்துள்ளனர். தலித் பெண்கள் மீது பாலியல் கொடுமைகளை, வன்புணர்ச்சி செய்தவர்களை மிக சாதாரண குற்றவியல் வழக்குகளில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என குஜராத்தின் சமூக நீதிக் குழுவின் அறிக்கை கூறுகிறது. தலித் பெண்கள் தலித்துகள் என்ற முறையிலும், பெண்கள் என்ற வகையிலும் இரண்டு விதங்களிலும் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு, தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நீதிக்கான தேசிய தலித் இயக்கம், வெளியிட்டுள்ள கணக்கின்படி ஆந்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மாநிலங்களில் வாழ்கின்ற தலித் பெண்கள் பாலியல், மன ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக 2006இல் வெளியிடப்பட்ட அதன் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

சமூக நீதி அமைச்சகம் நாடெங்கும் தன் நீதி மன்றங்களை நிறுவி குற்றவாளிகளுக்கு தண்டணையும் பாதிக்கப்பட்ட தலித்துகள் ஆதிவாசிகளுக்கு உரிய நிவாரணமும், நீதியும் கிடைக்க ஆவண செய்யவேண்டும். இதன்படி அமைச்சகம் செயல்படுவதற்கு இந்திய அரசும், மாநில அரசுகளும் ஐம்பது, ஐம்பது சதம் நிதியை தங்களுடைய பட்ஜெட்டிலிருந்து ஒதுக்கித் தரவேண்டும். என்றாலும் நிதி ஒதுக்காமல் காலம் கடத்தி வருகின்றன. மேலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வருடம் தோறும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக அமைச்சகம் சரியான அளவில் செயல்படமுடியாமல் நீதி சுமையால் திணறி வருகிறது. தாலுக்கா, மண்டல அளவிலான நிவாரண உதவித் தொகையை மாவட்ட நீதிபதி மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பு வழிப்புணர்வு குழுதான் அமைச்சகம் தரும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், வழக்குக்கு சாட்சியம் அளிப்பவர்களுக்கும், வழக்கு நடந்துமுடியும் வரை பயணசெலவு, உணவு செலவு ஆகியவற்றிற்கும் நீதி தரப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவையும் அரசே ஏற்க வேண்டும் என சட்டம் தெளிவாக வரையறுத்து இருந்தாலும் நடைமுறையில், செயலாக்கத்தில் இவை சாத்தியமாகவில்லை.

மத்திய, மாநில அரசுகள் இச்சட்டத்தினை அமலாக்கப்படுவதற்கு மிக மிகக் குறைவான நிதியைத் தான் ஒதுக்கீடு செய்கின்றன. எடுத்துக்காட்டாக 2007 ஆம் ஆண்டு உத்தரபிரதேச அரசு தேவைப்படும் 1650 கோடி ரூபாய்களுக்கு பதிலாக 950 கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்தது. மற்ற மாநிலங்களின் நிலைமையும் இதுதான். சட்டீஸ்கர் 40 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு 235 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் எவ்வாறு பாரா முகத்துடன் இருந்து வருகின்றன என தெரியவரும்.

இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை தலித் _ ஆதிவாசிகளிடையே அதிகரிக்கச் செய்வதின் மூலமும், முற்போக்கு இடதுசாரி இயக்கங்களில் அவர்களை அணிதிரட்டுவதின் மூலம்தான் இச்சட்டத்தை மிகச் சரியான திசை வழியில் கொண்டு செல்ல முடியும். மேலும், இவ்வனைத்து பிரச்சனைகளுக்கும் இந்திய சாதிய அமைப்பே காரணமாக இருப்பதால், சாதி அமைப்புக்கு இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பே காரணகர்த்தாவாக இருப்பதால், மேற்கண்ட இவை இரண்டையும் இந்திய பெரு முதலாளித்துவம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் இம் மூன்றையும் ஒழித்து கட்டும்போது தான் தலித் _ ஆதிவாசிகளுக்கு முற்றான முழுமையான விடுதலை கிடைக்கும்.

(நன்றி: FRONT LINE, DECEMBER 04,2009)

Pin It