மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நமது பத்திரிகைகள் உற்சாகமாகக் கொண்டாடின. நெருக்கடி இல்லாத ஆட்சி அமைந்துவிட்டதாகவும், இனி இந்தியா பொருளாதாரத்தில் பீடுநடைபோடும் என ஆருடம் கூறினர். இந்த கூற்றை மெய்யாக்க காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் பங்கு சந்தை வரலாறு கானாத அளவு பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியதாக கயிறு திரித்தார்கள். அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து நூறு நாள் வேலை திட்டமிடலை தயாரிக்கச்சொல்லி அறிவுறுத்தினார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தீட்டப்படுவதாகவும். இன்னும் நூறு நாட்களில் ஏதோ சாதனை நடக்கப் போவதாகவும் உடுக்கை அடித்தார்கள். நூறு நாள் திட்டமிடலை பரபரப்பாகப் பேசியவர்கள் நூறு நாள் கடந்தவுடன் எந்த சாதனையையும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லாத தகவலை நாம் மக்களுக்கு சொல்லவேண்டி இருக்கிறது.நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி இந்த ஆட்சியின் முதல் வரவு-செலவு திட்டமிடலை முன்வைத்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, இந்திய நாட்டின் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டுமெனில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது அவசியம் என்று முழங்கினார். இடதுசாரிகள் ஆதரவுடன் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் பேசமுடியாமல் மௌனம் சாதித்த விசயம் இது. இருபது கோடி இந்தியர்கள் பணம் போட்டுள்ள இன்சூரன்ஸ் துறையை, கோடிக்கணக்கான மக்கள் உழைப்பால் உயர்ந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு, மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

நூறு நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது, ஊக வாணிபம், முன்பேர வாணிகம் என்ற பெயரில் கொள்ளை, சந்தை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் உணவு பாதுகாப்பும் கேள்விக் குறியானது, இதன் விளைவு மேலும் கோடிக்கண மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றது என்று இவர்கள் சாதனையை பட்டியல் போடலாம். சாதாரண மக்கள் வாழ்க்கையின் மீது அக்கரை செலுத்தாதவர்கள் அம்பானி குடும்பத்தில் பிரச்சனை என்றால் தவியாய் தவிக்கின்றார்கள். அதுவும் அரசின் வளத்தை பங்கு போடுவதில் அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அமைச்சர்கள் துவங்கி பிரதமர் வரை தலையிடுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் வறுமையை ஒழிக்க இந்த அரசு பாடுபடும் என்று பிரதமர் பேசிய தினத்தில் நமது நாட்டு விவசாயிகள் பத்து பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நூறு நாட்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

நூறு நாள் கடந்த பிறகு தனது அமைச்சரவை சகாக்களிடம் பேசிய பிரதமர் “நாம் திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நூறு நாட்கள் அல்ல, உலகமயப் பாதையில் நடைபோட்டால் நூறு ஆண்டுகள் சென்றாலும் மக்கள் நலத் திட்டங்களை அமலாக்க முடியாது.

ஏனெனில் இன்றைய முதலாளித்துவ உலகமயக் கொள்கையால் மக்களின் பிரச்சனையை தீர்க்கமுடியாது. இந்த ஏகாதிபத்திய உலகமயம் உலக வளங்களை ஒருசில முதலாளிகளின் கைகளில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. அதன் வடிவமைப்பு அதுதான். உலக மக்கள் பட்டினியால் வாடினால் அப்போதுகூட பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் கொடூர மனம் படைத்த அமைப்பு அது. ஆக இந்தக் கொள்கையை இந்திய நாட்டில் அமலாக்கம் செய்துவிட்டு வறுமை ஒழியவில்லை என்று ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவ தில்லை. இதை கடுமையாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்திருப்பது இந்த தேசத்தின் ஆபத்து என்பதை மக்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டிய நேரம் இது. காரணம் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் போது மக்களுக்கு கிடைத்த சில உரிமைகள் அவர்களால்தான் கிடைத்தது.

கிராமப்புறங்களில் வறுமையில் உழல்கிற மக்கள் தங்கள் வாழ்க்கையில் இன்று நூறு நாட்களாவது உணவு கண்ணில் தட்டுப்படுகிறது என்றால் இடதுசாரிகள் போராடிக் கொண்டுவந்த கிராமப்புற வேலை உத்திரவாத சட்டம்தான் காரணம். எனவே தவறான கொள்கையாள் மக்களை வாட்டி வதைக்கும் காங்கிரஸ் அரசின் நாசகரக் கொள்கையை எதிர்த்து நமது தேசத்தின் இளைஞர்களை போராட அழைப்பது அவசரக் கடமையாகிறது.

- ஆசிரியர் குழு 

Pin It