இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் தனித்தன்மையோடு இருக்கின்றன. இயற்கையின் பெரும் ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஒரு பூவின் நிறமும், வடிவமும் ஒருபோதும் பிறிதொன்றை ஒத்திருப்பதில்லை. எந்தப் பறவையும் வேறொரு பறவையின் குரலில் பாடுவதில்லை. இந்தத் தனித்தன்மை கூற்றினை மனிதனைத் தவிர பிற அனைத்து உயிரினங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. மனிதன் மட்டுமே பிற மனிதனின் தனித்தன்மையை ஏற்க மறுப்பதோடு, தனது ஆளுமையை பிறர் மீது திணிக்கவும் முயல்கிறான். எல்லா மனிதர்களும் தமது ஆதிக்கத்தை சக மனிதர்கள் மீது செலுத்தும் முயற்சியிலேயே தமது வாழ்நாளின் பெரும் பகுதியையும், தம் ஆற்றலின் பெரும் பகுதியையும் செலவிடுகின்றனர். அதற்கு இயல்பான தனித்தன்மைகளை விடுத்து, செயற்கையான சில அடையாளங்களை ஆதிக்கத்தின் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். சாதி, நிறம், மதம், பாலினம், மொழி, பண்பாடு ஆகியவை ஒடுக்குமுறைக்குப் பயன்படும் ஆயுதங்களாக அவர்களிடம் மாறுகின்றன. இந்த ஆதிக்கத் திணிப்பால் தனது அடையாளத்தை ஒருவன் இழக்க நேரிடும்போது, அதை மீட்டெடுக்கத் துணிகிறான். அவனைப் பொறுத்தவரையில் அடையாள மீட்புக்கென அவன் நடத்தத் துணியும் போராட்டம், அவன் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கானப் போராட்டத்துக்கு இணையானது. சில நேரங்களில் அதைவிடவும் மேலானது!

Koogi vaa tiyange
தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆப்பிரிக்க படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள், அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘காலனிய ஓர்மை அகற்றல்' எனும் தனது நூலில் ஆப்பிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளிலிருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்செயல்பாடுகளை விவரிக்கிறார் (அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல் - கூகி வா தியாங்கோ; தமிழில்: அ. மங்கை, வல்லினம் - 2004). ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்க நாடுகளின் மீது நிகழ்த்திய, இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் பார்ப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் கூகியின் நூல், நமக்குப் பெரிதும் உதவி செய்கிறது. ஆப்பிரிக்காவின் மொழி, இலக்கியம் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் ஏகாதிபத்தியம் செய்திருந்த சீரழிவுகளை விரிவாகச் சொல்வதன் மூலம் ஆப்பிரிக்காவின் ‘ஆன்மா' எப்படி சிதைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

தனித்த மொழி, மண் மற்றும் மரபுக் கூறுகளுடனான புனைக் கதை, இன அடையாளம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய ஆப்பிரிக்க படைப்புகளின் அடிப்படைக் கூறுகளை தலித் இலக்கியக் கூறுகளோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளவும், தலித் படைப்புகளையும், படைப்பாளிகளின் எழுத்துச் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்யவும் கூகியின் நூல், நமக்குப் பெரிதும் உதவும் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவைப் பற்றி பிற மக்களிடம் பதிய வைக்கப்பட்டிருக்கும் இனக்குழு மோதல்களைப் பற்றிய கருத்தை நிராகரித்து விடும்படி கூகி, நூலின் தொடக்கத்திலேயே நம்மிடம் உறுதியாகக் கேட்டுக் கொள்கிறார். ஆப்பிரிக்கப் படைப்பாளிகளின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் இனக்குழு அடையாளத்துடன் அணுகப்படுவதையும், விமர்சிக்கப்படுவதையும் அவர் முற்றிலும் நிராகரிக்கிறார். ஏகாதிபத்தியமே இனக்குழு மோதல்களுக்கான காரணம் என்கிறார்.

ஆப்பிரிக்காவின் சிக்கல்களுக்கு அடிவேர் ஏகாதிபத்தியம் என்பதை உணரவிடாமல் தடுப்பதில் மேற்குலக ஆய்வாளர்களும், ஊடகங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இனக்குழு அடிப்படையில்தான் இன்று முழு ஆப்பிரிக்காவும் விளக்கப்படுகிறது. இப்படியான விளக்கங்கள், ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை மறைத்து விடுகின்றன. எனவே, ஆப்பிரிக்க இயல்பு நிலையை அணுகுவதற்கு இரண்டு பார்வைகள் கூகி வா அவர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய மரபும், எதிர்ப்பு மரபும்தான் அந்த இரண்டு பார்வைகள். இப்பார்வையினூடே அவர் முன்வைக்கும் கருத்துகள், ஆப்பிரிக்காவை புரிந்து கொள்ள வகை செய்கின்றன. ஒரு கையில் பைபிளையும் மறு கையில் வாளையும் கொண்டு ஆப்பிரிக்காவை நிர்மூலமாக்கிவரும் ஏகாதிபத்தியத்தின் அழிப்புகளை, கூகியின் அணுகுமுறையின் வழியாகவே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பிற இனங்களால் நிகழ்த்தப்படும் பெரும் ஒடுக்குமுறைகளில் நிரந்தரமானதும், நீண்டதுமான பாதிப்பினை செய்வது மொழி அழிவு. ஆப்பிரிக்காவின் மொழிகள், ஏகாதிபத்திய அரசுகளால் வேட்டையாடி சிதைக்கப்பட்டுள்ளன. அங்கு பல மொழிகளுக்கு வரி வடிவம் இல்லை; பல மொழிகள் பேசப்படுவதில்லை. காலனிய அரசுகள் தமது மொழியை தமது ஆதிக்கத்திற்குள் உள்ள ஆப்பிரிக்க மக்களிடம் திணித்தது மட்டுமின்றி, அந்த நாடுகளின் எல்லைகளையும் இந்தத் திணிப்பின் அடிப்படையிலேயே பிரித்திருக்கிறார்கள். 1884 இல் பெர்லின் நகரில் கூடிய காலனிய அரசுகளின் ஆட்கள் ஆப்பிரிக்காவை ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம் பேசும் நாடுகளாக வரையறுத்து எல்லைகளை உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் ஆப்பிரிக்கர்களின் அடையாளங்களும்கூட உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், அரசின் நிர்வாகத்துறையிலும், இலக்கியத்திலும் பல ஆண்டுகளாக காலனிய நாடுகளின் மொழிகளே பயன்படுத்தப்பட்டு, ஆப்பிரிக்கர்கள் தமது தாய்மொழியை மறந்து விட்டிருக்கிறார்கள். ‘பிறிதொரு மொழிக்காக ஒருவர் தனது தாய் மொழியைக் கைவிடுவது சரியா? அது மிகப் பெரிய துரோகச் செயலாகத் தோன்றுகிறது; பெரும் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. ஆனால், எனக்கு வேறு வழியேதும் இல்லை. எனக்கு இம்மொழி (காலனிய மொழி) கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதைப் பயன்படுத்த எண்ணியுள்ளேன்' என்று சினுவா ஆச்சிபி போன்ற புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் கூறும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

சினுவா மட்டுமின்றி செங்கோர், டேவிட்டியோப், பீட்டர் ஆப்ரஹாம்ஸ் என்ற பல ஆப்பிரிக்க புகழ் பெற்ற படைப்பாளிகள் அனைவரும் தமது தாய் மொழியில் எழுதாமல் காலனிய மொழியில் எழுதுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஆங்கில வழியேயும், பிரெஞ்சின் வழியேயும் ஆப்பிரிக்க இலக்கியத்தைப் படைத்ததற்காக இந்த எழுத்தாளர்களுக்கு காலனிய அரசுகள் - ‘புதியதொரு கலையை உருவாக்கியதற்காக' பரிசுகளையும், பாராட்டுகளையும் அளித்திருக்கின்றன.

இந்த இலக்கியங்களே பள்ளிகளில் கற்பிக்கப்பட்டுள்ளன. பீரங்கிகளால் பணிய வைக்கப்பட்ட வழிமுறைகளுக்கு மாற்றாக, மொழித் திணிப்பு அதிகமான பலனைத் தந்ததாக சொல்கிறார் கூகி வா. துப்பாக்கி ரவை உடலை வருத்திப் பணிய வைக்கும் சாதனம். மொழி ஆன்மிக அடிமைப்படுத்தலுக்கு வழி வகுக்கும் என்று எழுதும் அவர், தனது கருத்துக்கு மிகப் பொருத்தமாக செயிக் கானேயின் நூலிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார். ‘கருப்புக் கண்டத்தில் நாம். அவர்களது உண்மையான சக்தி பீரங்கிகளில் இல்லை; அதைத் தொடர்ந்த வழிமுறைகளில் இருந்தன என்பதைப் புரிந்து கொண்டோம். பீரங்கிகளுக்குப் பின்னால், புதிய பள்ளிகள் இருந்தன. அப்பள்ளி பீரங்கியிலிருந்து போரிடும் ஆயுதத்தின் வலுவைப் பெற்றது. ஆனால், பீரங்கியை விட நிரந்தரமான வெற்றியை ஈட்டித் தந்தது. பீரங்கி உடலைப் பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவை ஈர்க்கிறது.”

தம் வீட்டிலும், வயல் வெளிகளிலும், வேலை செய்யுமிடத்திலும், மக்களிடத்திலும் பேசிய மொழியை ஆப்பிரிக்க குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியவில்லை. அவர்கள் தாய்மொழியில் கேட்ட கதைகளும், பாடல்களும், விடுகதைகளும் பள்ளிப் புத்தகங்களில் இல்லை. ஆப்பிரிக்க குழந்தைகள் படித்த காலனியப் பள்ளிகளில் தங்கள் தாய் மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டார்கள்; அவனமானப்படுத்தப்பட்டார்கள். நிர்வாணப்படுத்தப்பட்டு, அவர்களின் புட்டத்தில் பிரம்படிகள் வழங்கப்பட்டன. கழுத்தில் ‘நான் ஒரு முட்டாள்' என்றும் ‘நான் ஒரு கழுதை' என்றும் எழுதப்பட்ட பலகைகள் மாட்டப்பட்டு உலா வரவைக்கப்பட்டனர். தண்டத் தொகை வசூலிக்கப்பட்டது.

தாய்மொழியில் பேசும் மாணவரிடம் முதலில் ஒரு பொத்தான் காலையில் வழங்கப்படும். அந்தப் பொத்தான் அன்று முழுதும் யாரெல்லாம் தாய்மொழியில் பேசினார்களோ, அவர்களிடமெல்லாம் கைமாறி பயணம் செய்து கொண்டே இருக்கும். மாலையில் அது எந்தக் குழந்தையிடம் இருக்கிறதோ, அவரைக் கொண்டு எத்தனை பேரின் கைமாறியிருக்கிறது என்ற எண்ணிக்கை கண்டுபிடிக்கப்படும். பிறகு இந்த சங்கிலித் தொடரில் இருக்கும் ‘தாய் மொழி பேசிய குழந்தை குற்றவாளிகளுக்கு' ஆசிரியர் மூலம் தண்டனை கிடைக்கும். இத்தகைய கொடூர நடைமுறைகள் ஆப்பிரிக்க குழந்தைகளிடையே தாய்மொழியை ஒழித்துக்கட்ட உதவின. இதனோடு ஆங்கிலத்தில் பேசும், எழுதும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒரு மாணவன் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனுக்கு தேர்ச்சி உயர்வு மறுக்கப்பட்டது.

இப்படி கல்வி பயின்று இலக்கியவாதிகளாக மாறியவர்களுக்கு வேறொரு சிக்கலும் இருந்தது. அவர்களால் விரும்பினாலும் தமது தாய் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்த இயலவில்லை. அதன் வரிவடிவம் காலனிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாகவும், அதன் இலக்கணங்களும், அகராதிகளும் அவர்களால் எழுதப்பட்டதாகவும் இருந்தன.

போட்டி ஏகாதிபத்தியங்கள் மற்றும் காலனியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவற்றால் ஒரே மொழியின் ஒலி அமைப்புகளுக்கு வேறுபட்ட வரிவடிவங்கள் ஏற்பட்டன. ஒரே காலனிய எல்லைக்குள் இருந்த ஒரே மாதிரியான ஆப்பிரிக்க மொழிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக, ‘கிகூயூ மொழிக்கு இரண்டு வகையான போட்டி வரிவடிவங்களை, பிராடெஸ்டெண்டு மற்றும் கத்தோலிக்கப் பாதிரியார்கள் உருவாக்கினர்' என்கிறார் கூகி வா. கூகி இதை மிகத் தெளிவாக உணர்வதால், மொழி மூலம் உருவாகும் பிரிவினையை நீக்கி, ஒத்திசைவை உருவாக்க பங்களிப்பினை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

1961இல் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய அவர், 1977இல் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதன் பின்னர் அவரின் அனைத்து எழுத்துகளும் அவரின் தாய் மொழியான கிகூயூ மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவரின் இம்முடிவுக்குப் பின்னால் இருக்கும் கருத்தியல் முக்கியமானது. ‘கென்ய மக்களின் தாய் மொழிகள் குழந்தையின் பேச்சு மொழி லயத்தை மட்டுமின்றி, அவர்களின் இயற்கையுடனான போராட்டம் மற்றும் சமூகப் பண்புகளைக் காட்டக்கூடிய இலக்கியங்களை உருவாக்க வேண்டும் என விழைகிறேன். தனது தன்னிலை, மொழி, சூழலோடு இயைந்த ஒத்திசைவைத் தொடக்கக் காலத்தில் பெற்ற ஒருவர் பிற மொழிகளைக் கற்கலாம். அவற்றின் வளமான, மனிதநேயம் மிக்க, சனநாயக, புரட்சிகர அம்சங்களை அறிந்து கொள்ளலாம்' (பக். 37).

கிகூயூ மொழியில் எழுத முயன்றபோது, கூகி அவர்கள் சந்தித்திருக்கும் போராட்டங்கள் மிகவும் கடுமையானவை. தனியே விரிவாக விளக்கும் அளவு ஆழமானவை. இம்முயற்சிக்கென அவர் அரசு அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். மொழி, ஆன்மாவிலிருந்து உருவாகிறது. அது பேசும்போது தரும் பொருளை விடவும் வேறொரு பொருளை மிக ஆழமாக, வெளிப்படுத்த முடியாத வகையில் தன் மக்களுக்குத் தருகிறது. தன் எழுத்துகளில் மொழியைப் பயன்படுத்தும் படைப்பாளி, மொழியுடன் உறவாடுவதிலும், பண்பாட்டைப் பாதுகாப்பதிலும், உயிர்ப்பிப்பதிலும், மாற்றத்தைக் கட்டமைப்பதிலும் அதிக பங்கினை ஆற்றுகிறான். அவன் தாய் மொழியைப் புறக்கணிக்கிறபோது, வேறொரு மொழியின், கருத்தின் பிரதிநிதியாகி விடுகிறான். மொழியின் ஊடே ஆழமான பிளவையும், மிக நெருக்கமான உறவையும் ஏற்படுத்த முடியும் என்பதை வேறெவனைக் காட்டிலும் அவனே அறிந்திருக்கிறான். அடக்குமுறைக்கு எதிராக அவன் தன் தாய் மொழியை உயர்த்திப் பிடிக்கிறபோது ஒடுக்கப்படுகிறான்.

‘மக்களது மொழியில் புரட்சிகர ஒற்றுமை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் படைப்பாளி, நிலைகுலைவுப் பண்பு கொண்டவராகக் கருதப்படுகிறார். எனவே, ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது குற்றமாகிறது. தண்டனைக்குரியதாகிறது. அந்த எழுத்தாளர் சிறைவாசம், நாடு கடத்தல், மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அவருக்கு ‘தேசிய விருது'கள் இல்லை; புத்தாண்டு மரியாதைகள் இல்லை; ஆனால் வசவுகளும் அவதூறுகளும் அள்ளி வீசப்படும். ஆளும் சிறுபான்மை ராணுவ சக்திகளின் எண்ணற்ற பொய்கள் அவர்கள் மீது சுமத்தப்படும்” என்று தான் அனுபவித்த ஒடுக்குமுறைகளைப் பொதுமைப்படுத்தி கூறுகிறார் கூகி.

கூகியின் மொழி பற்றிய கருத்துகளும், மொழியை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட செயல்முறைகளும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருத்தப்பாடு உடையதாகவே இருக்கிறது. ஏகாதிபத்தியம் இங்கே ஆங்கிலத்தை தன் காலனி ஆதிக்க எச்சமாக விட்டுச் சென்றிருக்கிறது. அதற்கு முந்தைய ஆதிக்கமான பார்ப்பனியம் தனது சாதிய கருத்தியல்களையும், மூடக் கருத்தியல்களையும் இன்னும் விடாமல் நம்மைப் பற்றிக் கொள்ளச் செய்திருக்கிறது. தசைக்குள் ஊடுறுவி உயிர் வாழும் ஒட்டுண்ணியாக, ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் பார்ப்பனியம் இருக்கிறது. எனவே, நாம் கூகியின் கருத்துகளை நம் மொழியோடும், படைப்புச் செயல்பாட்டோடும் மிகவும் லாவகமாகவும், இயல்பாகவும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கீகூயூ மொழி பேசியதால் ஆப்பிரிக்க கென்ய குழந்தைகள் பெற்ற அதே விதமான தண்டனைகளை, இங்கே தமிழகத்தின் பல ஆங்கிலப் பள்ளிகளில் நமது குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்; இன்னமும் பெற்றுக் கொண்டுமிருக்கிறார்கள்.

ஆங்கிலத்துக்கு இருக்கும் பருண்மையான மதிப்பு தமிழுக்கு இங்கே இல்லை. பயிற்று மொழி, வழிபாட்டு மொழி, அலுவல் மொழி, வழக்குமன்ற மொழி, கணினி மொழி என இன்னும் தமிழ் முழுமையாக இங்கே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. மக்கள் பீரங்கி குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் பணிய வைக்கப்படாமல், மொழியால் பணிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் உடலை வெற்றி கொள்வதைவிடவும் மனதை வெற்றி, கொள்வதே முழுமையான வெற்றியாகிறது. அத்தகு வெற்றி ஆங்கிலத்தாலும் வடமொழியாலும் இங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இலக்கியத்திலும், ஊடகத்திலும், இன்று நல்ல தமிழ் பயன்படுத்தப்படுவதில்லை. நல்ல தமிழில் எழுதப்படும் இலக்கியங்கள் பரப்புரை செய்யப்படுவதாக ஒதுக்கப்படுகின்றன.

கூகியின் மொழி குறித்த கருத்துகளோடு மற்றொரு ஒப்புமை யையும் நாம் செய்யலாம். அடையாள மீட்பின் நோக்கத்துடனேயே அவர் தனது தாய் மொழியான கிகூயூ மொழியில் எழுத முனைகிறார். ஆங்கிலத்தில் எழுதி மிகப் பரவலான கவனிப்பைப் பெற்றிருந்த நிலையிலும், கருத்தியல் நேர்மைக்கெனவும், தனது சமூகக் கடமைக்கெனவும் அவரால் அப்படி ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. தமிழ் இலக்கியத்தில் தனித்த அடையாளக் கூறுகளுடன் வெளிப்பட்ட தலித் இலக்கியம், தனக்கான மொழியை தனி அடையாளத்துடன் எப்படி கட்டமைத்துக் கொண்டுள்ளது என்பதை கூகியின் செயல்பாட்டுடன் இணைத்துப் பார்க்கலாம். தலித் படைப்பாளிகளுக்கு கையளிக்கப்பட்ட சாதிய தன்மைகள் கொண்ட, இந்து மத சார்பினைக் கொண்ட, ஆண் தன்மை கொண்ட மொழியை அவர்கள் எப்படி மாற்றி, தமது படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரியது.

Yal Library
தலித் இலக்கியத்தின் மொழி கலகத் தன்மை கொண்டது எனவும், வெளிப்படையானது எனவும் தொடக்கக் காலத்தில் மதிப்பிடப்பட்டது. அது மெல்ல நவீனத் தன்மையையும், செவ்வியல் தன்மையையும் இன்று பல படைப்பாளிகளின் படைப்புகள் வழியே பெற்றுக் கொண்டிருக்கிறது. நேரடித் தன்மையும், பேச்சு மொழியின் சாயலும், வழக்குச் சொற்களின் பயன்பாடும், விசையூக்கப் பண்பும் கொண்ட மொழியாக அது இருக்க வேண்டும் என்று விமரிசகர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அம்சங்களை தலித் படைப்பு மொழி முழுமையாகப் பெற்று வளரவில்லை. பேச்சு மொழி என்கின்ற அம்சத்துடனும், ஆத்திரத் தின் மொழி என்ற அம்சத்துடனும் மட்டுமே - இன்னும் அது பல தலித் படைப்பாளிகளின் படைப்புகளில் சுழன்று கொண்டுள்ளது; அல்லது முன்னமே உருவாக்கி கையளிக்கப்பட்ட இலக்கிய மொழியுடன், செறிவு பூண்டு கச்சிதமாக வெளிப்படுகிறது.

புது சொல்லாக்கங்களோ, சனாதன, சாதியத் தன்மைகளை கிலி கொள்ளச் செய்யும் தன்மையுடைய வார்த்தை உருவாக்கங்களோ இல்லை. தலித் இலக்கியம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் தாக்கத்திலிருந்தும், பிடியிலிருந்தும் விடுபடாததினால்தான் இந்த நிலை உருவாகி இருக்கிறது என்று உறுதியாகக் கூறிவிடலாம்; அல்லது அது செவ்வியல் தன்மையுடையவைகளின் வரிசையில் இடம்பிடித்துக் கொள்ள முன்னேறுவதால், தனது ஆதிக்கக் கருத்தியலின் ஓர்மையை மிகக் கவனமாக தவிர்க்க அது மறந்து விடுகிறது. தலித் பிரதிகள் மீது அன்றிலிருந்து இன்றுவரை வைக்கப்படும் விமரிசனத்தில் தொடர்ந்து வரும் இரு கருத்துகளில் ஒன்று, அதன் சொல் பிரயோகம். மற்றொன்று அதன் வடிவம் அல்லது கட்டமைப்பு. தலித் பிரதிகள் தனக்கான தனி வடிவத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதிலும், உருவாக்கிக் கொண்டதைப் புறக்கணிப்பதிலும் இவ்விமரிசனங்கள் பங்காற்றுகின்றன என்று நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் தலித் படைப்பு மொழி இன்று கவனிப்புக்கும், மீளாய்வுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியுள்ளது. தலித் மனித முகத்துடனான மொழியாகவும், உயிர் தன்மை கொண்ட மொழியாகவும் அது மாற வேண்டி யுள்ளது. இந்த மாற்றத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மட்டுமின்றி, இனி எழுத வரும் தலித் படைப்பாளிகளும் கவனத்தில் கொண்ட பின்னர் எழுதத் தொடங்கலாம்.

ஈழத்தில் சிங்களப் பேரினவாதத்தால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் புகைப்படம், என் வீட்டு மேசை மீது இருக்கிறது. அதைப் பார்க்கின்ற போதெல்லாம் தீத்துண்டு ஒன்றைப் பார்ப்பது போலவும், இறந்த ஒருவரின் சாம்பலை பார்ப்பது போலவும் நான் உணர்வதுண்டு. எழுதும்போது, கை சோர்ந்து மேசையின் மேல் தலைவைத்து சாய்ந்து கொள்கையில் ஆயிரக்கணக்கான கூக்குரல்கள் கேட்கும். அப்போது மாலை நேரத்தில் பலநூறு பறவைகள் கூடு திரும்பும் கூட்டொலி கேட்கும். காட்டின் அருகே நின்று கொண்டிருப்பது போலவும் தோன்றும். அந்தப் புகைப்படம் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் போடப்பட்டு, எழில் என்ற கவிஞரால் எனக்குப் பரிசளிக்கப்பட்டது. அவரின் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபோது (உள்மை), ஈழத்தில் இருக்கும் அன்றாட வாழ்வின் சில தருணங்களை, ஆவணப்படமாகப் போட்டுக் காட்டினார். அவரின் கவிதைச் சொற்களுக்கு அப்படங்கள் மேலும் வலுவேற்றின. அதனுடன் கவிதைக்கான காட்சியையும் மனதுக்குள் விரித்தன. அக்டோபர் 30, 1995 என்ற அவர் கவிதை, யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதை இவ்வாறு கூறுகிறது :

யாழ் / தேனீக் கூட்டம் / கலைந்தது / அய்ந்து லட்சம் / தேனீக்கள் / முதுசத்தை / உழைப்பை / வரலாற்றுப் / பாரம்பரியங்களை / கலாச்சாரப் / புனிதங்களை / வியர்வையின் / உப்பை / ஒரே / ஒரு / இரவு / ஒரே / ஒரு பாலம் / விடுதலைப் / பயணம்

வெலிக்கடை சிறைச்சாலையைப் பற்றிய பிறிதொரு கவிதை, கொடூரச் சூழலை கண்முன் நிறுத்துகிறது.

மின்சார வேலி / இரும்புக் / கரங்கள் / வெளிச்சத்தைத் / தேடும் / இருள் / நிரம்பி / வழியும் / கைதிகள் / கோரப் பசி / மலங்களைப் / புசிக்கும் / வாய்கள் / மூத்திரங்கள் / தீர்க்கும் / தாகங்கள் / உரோமமே / இல்லாது / உடல்கள் / நகங்களை / வேண்டி / விரல்கள் / காடைத்தனத்தின் / கட்டவிழ்ப்பு / இரவு / நிசப்தத்தைக் / கிழிக்கும் கதறல் / அடங்கிப்போகும் / முனகல் / காலை / சுத்திகரிப்பு / ரத்த வெடில் / அடுத்தது / நானாகலாம் / பருந்து / உயரப் பறக்கிறது

அடையாள மீட்பின் எதிர் செயல்பாடுகளில் மேலும் மேலும் சந்திக்க வேண்டிய கொடுமைகளையும், சந்திக்க வேண்டிய இழப்புகளையும் அங்கிருந்து வரும் செய்திகள் நமக்கு ஓயாமல் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
Pin It