ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்

தாமரை இதழ் ஆசிரியர் சி. மகேந்திரன் சுற்றுச்சூழல் மீதான தனது அக்கறையை விரிவாக வெளிப்படுத்தியுள்ள நூல் இது. "சூனியர் விகடன்" இதழில் வெளியான தண்ணீர் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய விரிவான கட்டுரைத் தொகுப்பு. நதியும் நதி சார்ந்த வாழ்க்கையையும் கொண்ட நம் பண்பாடு இன்று கண்மூடித்தனமான மணற்கொள்ளை, சிதைக்கப்பட்ட ஆறுகள், தொடர்ச்சியாக வெள்ளம், பாலம் இடிதல் என்று முற்றிலும் சிதைந்து வருகிறது. பெட்ரோலுக்கு அடுத்தபடியாக பன்னாட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்தும் மிகப் பெரிய வியாபாரமாக தண்ணீர் வியாபாரம் உருவாகி வருகிறது. தண்ணீருக்காக உலகப் போர் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எச்சரிக்கிறது இந்தப் புத்தகம்.

தொடர்புக்கு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 விலை ரூ. 140

 மேகத் துளி விழ

மென்பொருள் பொறியாளரான விஜய் கங்காவின் கவிதைகள் சுற்றுச்சூழல் சார்ந்த கவிதைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது. சாளரக் கம்பி துளித்துத் துளித்து/ வீழும் மழை நீர்/ சாயும் வானம்/ பிரதிபலிக்கும் கடல்நீர்/ சாயப்பட்டறை வெளியேற்றும் / வர்ணக் கழிவு நீர்/ மூன்றும் இணைந்த/  நீலத்தில் சாய நிறம் தரித்து/ சிற்றோடையில் கலங்குகின்றன/ மழையும் வானமும்...  என்பது போன்று சுற்றுச்சூழல் அக்கறைகளை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு.

தொடர்புக்கு: பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014 விலை ரூ. 40

வெண்மைப் புரட்சி விளைவித்த வேதனைகள்

வேளாண்மையை எப்படி பசுமைப்புரட்சி சீரழித்ததோ, அதுபோல மக்களின் ஆரோக்கியத்தை அழித்தது வெண்மைப்புரட்சி என்கிறது மருத்துவர் காசி பிச்சை எழுதியுள்ள இந்த நூல். தற்கால பால், கோழிமுட்டை, இறைச்சி உற்பத்தி முறைகளால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் குடியிருக்க நேர்வதையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம். ஏழ்மை, வறுமையை ஓட்ட வந்த, ஆயுட்காலத்தை அதிகரிக்க வந்த, குழந்தை இறப்பை குறைக்க வந்த வெண்மைப்புரட்சி உண்மையில் நமக்கு தந்தது என்ன என்று அலசுகிறது இப்புத்தகம்.

தொடர்புக்கு: வெண்ணிலா பதிப்பகம், மனிதம் இல்லம், 218-3, ராமசாமி நகர், திருமானூர், அரியலூர் மாவட்டம் - 621 715 தொடர்புக்கு: 04329 - 244330 விலை ரூ. 30

பாசன நீர் மேலாண்மை

 நீரியல் நிபுணர் இரா.க. சிவனப்பன் எழுதிய தொழில்நுட்பக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இந்தியாவின் "சொட்டு நீர் பாசன முன்னோடி" என்று அழைக்கப்படும் அவரது ஐம்பது ஆண்டு அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வராகச் செயல்பட்ட அவர், நீர் நுட்ப மையத்தையும் தோற்றுவித்தவர். அவரது கட்டுரைகளைத் தொகுக்க வேளாண் பொறியியல் கல்லூரியின் தற்போதைய முதல்வர் முனைவர். சிவ. சந்தானபோசு உதவியுள்ளார். விவசாயிகளுக்கும், நீர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் உதவும்.

தொடர்புக்கு: சிறீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை, 107 , செங்குப்தா வீதி, ராம்நகர், கோவை - 641 009

 

Pin It