bhagathsingh 450

நாகரிக உலகில், அரசதிகாரத்தின் கொடுங்கரங்களில் சோளகர்கள் சிக்கிய வடுக்களை ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல் அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தது. 

இயற்கை யோடு இணைந்து வாழும் எளிய வாழ்வை இன்றளவும் தொடரும் பழங்குடிகள் குறித்தான மானிடவியல் ஆய்வுகள் சமீபகாலங்களில் தொடர்ச்சியாகத் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அந்த வரிசையில், புதுவை பல்கலைக் கழகத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்ற அ.பகத்சிங்கின், ‘சோளகர் வாழ்வும் பண்பாடும்’ என்ற அறிமுக நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு அளவில் உள்ள பழங்குடிகள், 36 சமூகங்களாக பரிணமித்துள்ளனர். சோலைகளை ஆள்பவர் எனப் பொருள்படும் சோலையர்கள் என்பதே சோளகர்களாக மருவியது எனலாம்.

‘சோளகர்கள்’ தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலும், சத்தியமங்கலம், பர்கூர் போன்ற பகுதிகளில் நிறைந்து வாழ்கின்றனர். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5965 என்ற எண்ணிக்கையில் சோளகர்கள் காணப்படுகின்றனர்.

திம்பம் மலைப்பகுதிகளின் கெத்தேசால், தாளவாடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கர்நாடகத்திலும் பரவி காணப்படுகின்றனர்.

வாழ்வியல் பண்பாடு, தொன்மங்கள், குலங்கள், வழிபாடு, இசைக்கருவிகள், சடங்குகள், கல்வி, இன்றைய நாகரிக உலகின் நெருக்கடிகள் என பல தளங்களில் சோளகர்களின் வாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் குறுநூலாக, ‘சோளகர் வாழ்வும் பண்பாடும்’ வெளிவந்துள்ளது.

சோளகர்களின் வாழ்வை அறிமுகப்படுத்தும் முதல் நூல் என்ற வகையில் மகிழ்ந்தாலும், தமிழக, கர்நாடகத்தில் பரவிக் காணப்படும் சோளகர்களின் முழுமையான வாழ்வையும், இன்றைய நெருக்கடி களையும் பருண்மையான முழுமை பெற்ற நூலாக வெளிவரவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

அந்தவகையில், சோளகர்கள் மட்டுமின்றி, தமிழக பழங்குடிகள் குறித்தான முழுமையான ஆய்வுகளை பகத் சிங்கிடம் இனிவரும் காலங்களில் எதிர்பார்க் கலாம்.

சோளகர் வாழ்வும் பண்பாடும்,

ஆசிரியர்: அ. பகத்சிங், வெளியீடு: எதிர் வெளியீடு,

விலை ரூ.50.00 தொடர்பு கொள்ள 98650 05084