உண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள்

திரு பி.ஜி. கோல்செ பாட்டில், முன்னாள் நீதிபதி, மும்பை உயர் நீதி மன்றம், புனெ.

கல்பன ஷர்மா, மூத்த பத்திரிகையாளர், மும்பை.

ஜோ.டி.குருஸ், எழுத்தாளர், சென்னை.

Koodan-kulam-7_380உண்மை அறியும் குழு சென்ற கிராமங்கள்/இடங்கள்இடிந்தகரை, சுனாமி காலனி, இடிந்தகரை, வைராவிகிணறு, கூடங்குளம்,சிறார்காப்பகம், பாளையங்கோட்டை.

முன்னுரை

கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணுஉலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கண்ட கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் செப்டம்பர் 10, 11- & 2012 தேதிகள் அன்று திரண்டபோது, காவல்துறையினர் கண்ணீர் புகையைப் பயன்படுத்தி அவர்களை கலைத்தனர் என்றும் அவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்தனர் என்றும் உண்மை அறியும் குழுவினர் அறிய வந்தனர். அமைதியாக போராடி வந்தவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர் என்றும், பலர் காயமுற்றிருந்தனர் என்பது குறித்தும் செய்திகள் வெளிவந்தன. மேலும் தடியடி பிரயோகம் நடந்த பிறகு, காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று சோதனையிட்டனர் என்றும், மக்களை பயமுறுத்தி, மிரட்டினர் என்றும் பொருட் சேதம் விளைவித்தனர் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிகழ்வுகளை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்வதற்காக உண்மை அறியும் குழுவினர் மேற்சொன்ன கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தனர். அவர்களுடைய வாக்குமூலங்களை கேட்டனர். அவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை விளக்கிக் காட்டிய சாட்சியங்களை கண்டனர்.

குழுவினர் கண்டவற்றின், கேட்டவற்றின் சுருக்கம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகளின் சுருக்கம்

குழுவினர் சந்தித்த தனிநபர்கள் அளித்த வாக்கு மூலங்களிலிருந்து பலர் காயப்பட்டிருத்ததை அறிய முடிந்தது. கண்ணீர்ப்புகை வீசப்பட்டதால் ஏற்பட்ட தீக்காயங்களுடன் பலரைப் பார்த்தோம். சிலருக்கு தையல் போடப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஊரை விட்டு நீங்கி மருத்துவ உதவி நாடிச் செல்ல பலர் பயப்படுகின்றனர், அவ்வாறு செய்தால் தாங்கள் கைது செய்யப்படலாம் என்று அஞ்சுகின்றனர் - இதை நாங்கள் தொடர்ந்து கவனித்தோம்.

லூர்த்து மாதா ஆலயத்தை காவல் துறையினர் பாழ்படுத்தியிருப்பது குறித்து பலர் செய்திகளை கூறினர். அன்னை மேரியின் திருவுருவச் சிலை உடைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் ஆலயத்தில் சிறுநீர்க் கழித்ததாகவும் கூறினர். உடைக்கப்பட்ட சிலையின் பகுதிகள் உண்மை அறியும் குழுவினருக்கு காட்டப்பட்டன.

சுனாமி காலனி மக்கள் பீதியுற்றிருந்ததைக் கண்கூடாகக் காணமுடிந்தது. மக்கள் தமது வீடுகளுக்கு வரப் பயப்படுவதால் பல வீடுகள் பூட்டியே உள்ளதை காண முடிந்தது. செப்டம்பர் 10 அன்று ஊருக்குள் நுழைந்தகாவல் துறையினரால் வீட்டுச் சன்னல்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதையும், அலமாரி களிலுள்ள பொருட்கள் சூரையாடப்பட்டிருப்பதையும் வீட்டு கதவுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதையும் மக்கள் உண்மை அறியும் குழுவினருக்குக் காட்டினர். அதற்கு பிறகு காவல்துறையினர் பலநாட்களுக்கு ஊரில் முகாமிட்டிருக்கின்றனர். இதனால்தான் மக்கள் இரவு நேரத்தில் ஊரில் இருக்கப் பயப்படுகின்றனர். இரவானதும் இடிந்தகரை மாதா கோயில் வளாகத்தில் உள்ள கூடாரங்களில் தங்கி விடுகின்றனர்.

வைராவிக்கிணறு கிராமத்திலும் மக்கள் பீதியுடன்தான் இருந்தனர். செப்டம்பர் 10 அன்று காவல்துறையினர் ஊருக்குள் நுழைந்து ஏற்படுத்திய சேதங்களை அவர்களும் காட்டினர். ஊரைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 16 வயது சிறுவனும், ஏறக்குறைய கண்பார்வையிழந்து விட்ட 75 வயது முதியவரும் அடங்குவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோம் காவல்துறையினர் தங்களை இவ்வாறு நடத்தியதற்கு என்று அவர்கள் திரும்பதிரும்ப கேட்டனர்.

கூடங்குளம் அணுஉலைக்கு அருகாமையில் வாழும் கூடங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். செப்டம்பர் 10 அன்று பெரிய காவல்துறை படை ஒன்று ஊருக்குள் நுழைந்து 34 பேர்களை கைது செய்தனர் என்றும், மக்கள் வீடு களில் பயந்து ஒளிந்திருக்க, காவல்துறையினர் வீடுகளுக் குள் புகுந்து பொருட் சேதம் ஏற்படுத்தினர் என்றும், வண்டிகளை பாழ்ப்படுத்தினர் என்றும் மக்கள் உண்மை அறியும் குழுவினரிடம் கூறினர். இதனால் இருட்டியதும் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் இருப்பதாகவும், ஏதாவது வண்டிச் சத்தம் கேட்டாலே பயப்படுவதாகவும், இரவில் சரிவர தூங்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எல்லா இடங்களிலும் மக்களுக்கு நேர்ந்ததை கவனிக்கும்போது பொதுவான சில அம்சங்களை அடையாளம் காண முடிகிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஒரு போல கீழ்க்கண்ட சட்டப் பிரிவுகளின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

124 A (தேசத்துரோகச் சட்டம்), 121A (அரசுக்கு எதிராக போர் செய்வது), 307, 353, 147, 148.

குழுவினர் சந்தித்துப் பேசிய 4 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் எல்லோருமே தாங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்ட போதும் சரி, காவல் துறையினர் ஊருக்குள் நுழைந்தபோதும் சரி, தங்களிடம் தரக்குறைவாகவும், பாலியல்வக்கிரத்தனத்து டனும் பேசியதாக வாக்குமூலங்களை அளித்துள்ளனர். உடல்ஊனமுற்ற பெண் தான் பாலியல்ரீதியாக துன்பு றுத்தப்பட்டதாகக் கூறினார். கடற்கரையில் நடந்த அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது தன்னை காவல்துறையினர் துரத்திக் கடலுக்குள் விரட்டினர் என்றும், அப்படிச் செய்யும் போது ஆபாச மான சைகைகளை செய்தனர் என்றும் மற்றொருவர் சாட்சியுரைத்தார்.

நிலைமை இத்தனை மோசமாக உள்ள போதிலும் தாங்கள் அணுஉலையை தொடர்ந்து எதிர்க்கப் போவதாக மக்கள் கூறினர். இவ்வளவு நடந்த பிறகும் NPCIL (Nuclear Power Corporation of India Ltd.) நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் முறையான பொது விசாரணையை நடத்தி மக்களின் கருத்துகளையும் அச்சங்களையும் அறிய ஏன் முயற்சி செய்யவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அணுஉலைக்கு அருகே வாழ்ப வர்கள் என்பதால் இத்தகைய கேள்விகளுக்கு விடைக் காண தங்களுக்கு முழுவுரிமை இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

முடிவுகள்

உண்மை அறியும் குழுவாக நாங்கள் கண்டறிந்த தகவல்கள் சில கனமான பிரச்சனைகளை கிளப்புவதாக உள்ளன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று யாரையும் விட்டுவைக்காமல் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதை எங்களால் அவதானிக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல், காவல்துறையினர் தனியார், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர், பொருட்களை சூரையாடியுள்ளனர், மக்களை மிரட்டி யுள்ளனர். எல்லாவற்றிர்க்கும் மேலாக காவல்துறையின ரின் செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவையாக உள்ளபோதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக புகார்கள் அளிக்க முடியாத நிலையில் உள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகவுள்ளது.

எனவே, சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights), பெண்களுக்கான தேசிய, மாநில ஆணையங்கள் (State/National Commissions for Women), தேசிய, மாநில மனிதவுரிமை ஆணையங்கள் (National/State Human Rights Commissions), மாண்புமிகு உச்ச நீதி மன்றம் ஆகியன அடையாளங்கண்டு நீதியை நிலைநாட்டவும் இயல்பு வாழ்க்கையை மக்கள் வாழ உதவும் வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

_MG_3425_380_copyநாங்கள் கேட்ட எல்லா விஷயங்களையும் உறுதி படுத்திக்கொள்ள எங்களுக்கு நேரமில்லை என்றாலும் நாங்கள் பார்த்த, கேட்டவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றை எங்களால் உறுதியாக கூற முடியும். 

1. செப்டம்பர் 10 அன்று கைதானவர்களுக்கு எதிராக எந்தவித தர்க்கநியாயமும் இன்றி சட்டப் பிரிவுகள் 124கி, 121கி பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே விதமான மொழியில் அதே குற்றப்பிரிவுகளை உள்ளடக் கிய ஒரே மாதிரியான அறிக்கைகளை காவல்துறையினர் தயாரித்துள்ளனர். இவற்றை மக்கள் எங்களிடம் காட் டினர். நான்கு சிறுவர்களுக்கும், பல முதியவர்களுக்கும் எதிராக இத்தகைய சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

2. தாய்மார்கள், மனைவிகள் பார்த்திருக்க, காவல் துறையினர் அவர்களது பிள்ளைகளையும் கணவன்மார் களையும் அடித்து இழுத்துக் சென்றுள்ளனர். பொது வில் வைத்து சிறுவர்களும் வயதானவர்களும் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.

3. காவல்துறையினர் தம்மை நோக்கி ஆபாசமான சைகைகளை செய்ததையும் மிக மோசமான, பாலியல் வசவுச் சொற்களை பயன்படுத்தியதையும் குறித்து பல பெண்கள் எங்களிடம் தெரிவித்துள்ளதன் பின்னணியில், அவர்களுடைய கூற்றுகள் நம்பத் தகுந்தவையே என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.

 4. காவல்துறையினரின் செயல்பாடுகள் எல்லா பக்கமும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. கூடங்குளத்துக்கு போகும் வழியில் காவல் துறையினர் காவல்அரண் அமைத்துள்ளதை இந்தக் குழுவினர் பார்த்தனர். அந்த பகுதிகளில் சாலைமார்க்கமாக செல்கையில் எல்லா பக்கமும் காவல்துறையினர் திரண்டு நிற்பதைக் காண முடிந்தது. இதனால் மக்கள் ஏதோ யுத்தப் பகுதியில் இருப்பது போலவும் தாங்கள் சிறையிடப்பட்டுள்ளது போலவும் உணர்கின்றனர்.

5. லூர்துமாதா ஆலையத்தின் புனிதத் தன்மையை மதிக்காமல் காவல்துறையினர் அந்த கோவிலை பாழ்படுத்தியது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஆபத்தான செயலாகும்.

6. மக்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களை நாங்கள் பார்த்தோம். அவை சந்தேகத்துக்கு இடமின்றி உண்மை யான காயங்களே. மருத்துவ உதவி நாடிச் செல்ல மக்கள் பயப்படுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். தமது கிராமங்களை விட்டுச் சென்றால் காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள், அல்லது அடித்துத் துன்புறுத்துவார்கள் என்ற அவர்களது அச்சம் கவனத்துக்குரியதாகும்.

7. இடிந்தகரை பகுதியிலுள்ள சுனாமி காலனியிலுள்ள வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம். சில நாளிதழ்களில் குறிப் பிட்டுள்ளது போல இவை கற்பிக்கப்பட்ட சேதங்கள் அல்ல, உண்மையானவைதான். காவல்துறையினரின் செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ள பயத்தையும் பீதியையும் எங்களால் நேரடியாகக் காண முடிந்தது.

8. மக்களுக்கு இவ்வளவு நேர்ந்துள்ள போதிலும் இந்த நிதர்சனங்களை குறித்து புகார்கள் அளிக்க இயலாதவர்களாக அவர்கள் உள்ளதையும் எங்களால் அவதானிக்க முடிந்தது. தங்களைத் தாக்கி, தங்களது வீடுகளை சேதப்படுத்தி, தங்களில் பலரை முறையற்ற வகையில் கைது செய்த அதே காவல்துறையினரிடம் எவ்வாறு நீதிக் கேட்டுச் செல்ல முடியும் என்று மக்கள் எங்களிடம் திரும்பவும் திரும்பவும் கூறினர்.

9. பாளையம்கோட்டையிலுள்ள சிறார் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிறுவர்களை சந்தித்து பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் அவர்கள் அடித்து, சித்திரவதை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற ஐயப்பாடு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கண்டனம்

அமைதியாக போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. தமது எதிர்ப்பை தெரிவித்துப் போராட மக்களுக்கு முழுவுரிமை உண்டு. மக்கள் திரளினர் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் விரும்பினால் அவர்களை அவ்வாறு செய்ய வைக்க எத்தனையோ அமைதியான வழிகள் உண்டு. பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் அடங்கிய கூட்டத்துள் நுழைந்து தடியடிப் பிரயோகம் செய்வதற்கு முன் காவல்துறையினர் ஏன் மக்கள் தலைவர்களுடன் பேச முனையவில்லை என்ற கேள்வி எழுகிறது.

செப்டம்பர் 10 அன்று கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த பகுதி கிராமங்கள் இன்றளவும் பீதியின் பிடியில் உள்ளன என்பது கண்ட னத்துக்குரியது. அது போல வழிப்பாட்டுத் தலம் ஒன்று அசிங்கப்படுத்தப்பட்டதும் கண்டனத்துக்குரியதாகும். பெண்களுக்கு எதிராக பாலியல் வசவுச் சொற்களை பயன்படுத்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினரின் செயல்கள் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. பெண் களை ஏன் ஆண்காவலர்கள் அணுகினர், பெண் போலீ சார் ஏன் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த அறிக்கையுடன் ரிமாண்ட் செய்யப்பட்ட 56 பேர்களின் விவரங்களை அடக்கிய பட்டியலை இணைத்துள்ளோம். இவர்களைத் தவிர காணாமல் போனவர்கள், தேடியும் கிடைக்காதவர்கள் என்று நிறைய பேர்கள் உள்ளனர். அவர்களது குடும்பத்தார் அவர்களை எளிதில் சந்திக்க முடியாதபடிக்கு, கைது செய்யப்பட்டவர்கள் வேண்டுமென்றே தொலைவிலுள்ள சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்ற ஐயப்பாடும் எங்களுக்கு எழுகிறது.

இந்த பகுதி மக்களை நாங்கள் 2 நாட்கள் சந்தித்துப் பேசினோம். காவல்துறையினர் ஏற்படுத்திய பொருட் சேதத்தைக் கண்டோம். சட்டத்தை பாதுகாப்பதற்காக உள்ள ஒரு துறையை சேர்ந்தவர்களின் இத்தகைய நடத்தைக்கு சனநாயக நாடு என்று சொல்லிக் கொள் ளும் நாட்டில் ஒரு நாளும் இடம் இருக்க முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஓராண்டு காலமாக அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து போராடி வரும் மக்களை தேச துரோகிகளாகவும், அரசுக்கு எதிராக போர் தொடுப்ப வர்கள் என்றும் நியாயமற்ற வகையில் சித்தரித்தால், இனி இந்நாட்டில் பேச்சுரிமையின் எதிர்க்காலம் தான் என்ன?

வாக்குமூலங்கள்

பாளையங்கோட்டை சிறார் காப்பகம்:

குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர் ஒருவரும் சிறுவர்களின் வழக்குரைஞர் ரமேஷ் கணபதியும் உடன் இருந்த போதும், பாளையங்கோட்டை சிறார் காப்பகத்தில் உள்ள நான்கு சிறுவர்களைப் பார்ப்ப தற்கான அனுமதி மறுக்கப்பட்டது. சிறுவர் சீர்திருத்த வாரியத்தின் கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ள நவஜீவன் அறக்கட்டளையைச் சேர்ந்த கணேசனை சந்தித்த போது “அவர்கள் காவல்துறையினரால் மிக மோசமான முறையில் அடிக்கப்பட்டதாகவும், செருப்பைக் கழட்டி விட்டு தார் ரோட்டில் அவர்களை நடக்கச் சொன்னதாகவும், மீண்டும் மீண்டும் அவர்கள், “ஒண்டிக்கு ஒண்டி வர சொன்னீங்கள்ள, இப்ப வந்திருக்கோம். ஒண்டிக்கு ஒண்டி வா” என்று கூறி சிறுவர்களின் உடைகளை களைந்து அவர்களை கேவலமாக பேசியதாகவும் சிறுவர்கள் என்னிடம் கூறினர்.” சிறுவர்களில் ஒருவர் மிக மோசமாக அடிக்கப்பட்டதாகவும், இன்னொருவர் மன ரீதியாக மிகுந்த தாக்கத்துக்குள்ளாகியிருப்பதால் பேச மறுப்பதாகவும் கூறினார். சிறுவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த கூற்றுகளை உறுதி செய்யக்கூடிய கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிட்டவில்லை.

வைராவிகிணறு:

வயதான ராசம்மாவிற்கு நடப்பதே பெரும் முயற்சியாக இருந்தது. கண்களில் கண்ணீருடன் பேசிய அவர் தன்னுடைய 63 வயதான கணவர் பால் ராஜூம் தானும் உணவு உண்ண உட்கார்ந்த போது காவல்துறையினர் பால் ராஜை கூட்டிச் சென்றதாக கூறுகிறார். “மக்கள் ஓடும் சத்தம் எங்களுக்கு கேட்டது. நாங்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருந்த போதும், வேட்டைக்காரர்கள் போல் வீட்டினுள் நுழைந்த காவல்துறையினர் கதவை தள்ளி உடைத்து திறந்து கொண்டு வந்து என்னுடைய கணவரை வெளியே இழுத்துச் சென்றனர். அவர் வயது முதிர்ந்தவர். நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என்று கெஞ்சினேன். அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் அவருக்கு ஒரு கண் பார்வை சரியில்லை என்றும் கூறினேன். அவரது காலில் ஒரு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் எப்படியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவரை கொண்டு போய் வேலூர் சிறையில் இவ்வளவு தூரத்தில் வைத்துள்ளனர். நான் போய் அவரை பார்ப்பது கூட முடியாது. இந்த கடிதம் எனக்கு இப்பொழுது தான் கிடைத்த்து” என்று காவல்துறையிடமிருந்து பால் ராஜின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் (U/S 147, 148, 353, 451, 121 (A), 124 (A), 374, 307 IPC r/w 3 of TNPPD act.) கிடைக்கப்பெற்ற கடித்ததைக் காட்டினார்.

Pin It