நாம் தினசரி காலைக்கடன் கழித்தவுடன், கழிப்பறையை கழுவி சுத்தமாக்கிக் கொள்கிறோம். அப்போது உருவாகும் கழிவுகள் எங்கு செல்கின்றன? வீட்டுக் குப்பைகளை எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் போட்டு குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அவை எங்கு செல்கின்றன? இதற்கான விடையும், அந்த விடையின் வேறு சில பரிணாமங்களும் ஆபத்தானவை. 

குப்பையை யாரும் மதிப்பதில்லை. எதற்கும் பயன்படாததைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்ற அலட்சியமே காரணம். இன்றைக்கு நமது அரசின் அலட்சியம் காரணமாக, உலகில் உருவாகும் ஆபத்தான குப்பைகள்கூட நமது ஊர்களில் ரகசியமாக கொட்டப்பட்டு வருகின்றன. சிறந்த உதாரணம், குஜராத்தில் உள்ள ஆலங் துறைமுகம். உலகில் பயன்படுத்த முடியாத கப்பல்கள் எல்லாம், காலங்காலமாக சேர்த்து வைத்த கழிவுகளை அகற்ற இங்கேதான் வருகின்றன. அதில் கிளமென்சியு என்ற ஃபிரான்ஸ் கப்பலை மட்டும் இங்கு வரவிடாமல், உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

தொழிற்சாலைகளில் உருவாகும் குப்பைகளில் பெரும்பாலானவை கடும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த குப்பைகளை கையாள்வோர் மட்டுமன்றி, அந்தப் பகுதியின் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் இயல்புடையவை. உதாரணமாக திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளையும், ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலைகளையும் கூறலாம். இங்கு உருவாகும் கழிவுகள் உரியமுறையில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும்போது பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. 

மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவமனைகளிலும் நோய்களை பரப்பக்கூடிய பல்வேறு கழிவுகள் உருவாகின்றன. மருந்துப் பொருட்கள், சிகிச்சைப் பொருட்கள், மனித உடல் பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கழிவாக மாறும்போது பெரும் நச்சாக உருவெடுக்கின்றன. அவற்றின் நச்சுத்தன்மையை அகற்றிவிட்டே இந்தக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று சட்டங்கள் சொல்கின்றன. முன்னணி மருத்துவமனைகள் உட்பட பலவும் இந்த சட்டத்தை மதிப்பதில்லை. சென்னை அடையாறு பாலம் அருகே இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனை அடையாறு கழிமுகப் பகுதியில் தன் மருத்துவக் கழிவுகளை ரகசியமாகக் கொட்டி வருகிறது. 

இதுபோன்ற நச்சுப்பொருட்கள் கேரள மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டு கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படும் செய்திகளை படித்திருக்கலாம். கேரளாவில் மட்டும் இருந்தல்ல, உலகெங்கும் இருந்து குப்பைகள் நம்மூரில் கொட்டப்பட்டு வருகின்றன. 

அமெரிக்க கழிவுகள் 

அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது 2001 செப்டம்பர் 11ந் தேதி நடந்த தாக்குதலை நாம் அனைவரும் டி.வி.யில் வாய்பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். நம்மில் பலருக்கு கனவாக உள்ள அமெரிக்காவை உலுக்கிய அந்த நிகழ்வு ஏற்படுத்திய ஆச்சரிய உணர்வில் இருந்து நாம் விடுபடுவதற்கு முன்னதாகவே, உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரங்களின் நச்சுக் கழிவுகள் சென்னைக்கு வந்திறங்கின. 

பிரோஸ்னா, ஷென் குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்களில் அந்த ஆபத்தான இரும்புக் கழிவுகள் இங்கு வந்தன. பிரோஸ்னா கப்பலில் மட்டும் சுமார் 30 ஆயிரம் டன் கழிவுகள் இருந்ததாம். அவற்றுடன் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின்கள், பாலி குளோரினேடட் பைபினைல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.  

இந்த இறக்குமதிக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் குரல் எழுப்பினர். அப்போது துறைமுக அதிகாரிகள் கூறிய பதில்: இரும்பை இறக்குமதி செய்வது சட்டத்திற்கு உட்பட்டது! அதில் நச்சுக் கழிவுகள் இருக்கின்றன என்பதை நீங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்!!  

மின்னணுக் கழிவுகள் 

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினைகளுள் முதன்மையானது: மின்னணுக் கழிவு மேலாண்மை. மின்னணு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்தும் அமெரிக்காவும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும், மின்னணுக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்ட இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளையே குறிவைக்கின்றன.  

ஏழை ஆசிய நாடுகளின் குழந்தைகளுக்கு கணினியை அறிமுகப்படுத்துவது போன்ற "தர்ம காரியங்களுக்காக", பயன்படுத்தப்பட்ட கணினியை கொடையாக அளிப்பது என்ற பெயரில் இந்த குப்பைகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஏனெனில், அந்த நாடுகளில் மின்னணுக் கழிவை அப்படியே குப்பையில் போட்டுவிடமுடியாது. நச்சுப் பொருட்களை நீக்கிய பிறகே குப்பையில் போட முடியும். நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு ஆகும் செலவில், பத்தில் ஒரு பங்கு செலவில் அந்த குப்பைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துவிடமுடிகிறது.  

இந்திய தொழிலதிபர்கள் இந்த மின்னணுக் கழிவுகளை டன் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் கொடுத்து வாங்குகிறார்கள். ஒரு டன் மின்னணுக் குப்பையில் சுமார் 10 கிராம் தங்கம், 30-40 கிலோ செம்பு, அலுமினியம், வெள்ளி, சில நேரம் பிளாட்டினம்கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் 40 ஆயிரம் ரூபாய் வரை தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட முடிகிறது. ஆனால் இந்தப் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள் மின்னணுக் குப்பைகளில் உள்ள நச்சுப் பொருட்களால் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படலாம். தொழிலாளர்களைப் பற்றி யாருக்குக் கவலை?

இவ்வாறு இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் மின்னணுக் கழிவுகள் வருகின்றன. இதனால் தொழிலதிபர்களுக்கு எத்தனை கோடி லாபம்? அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பங்கு எவ்வளவு இருக்கும்? சந்தேகமில்லை, இந்தக் கழிவுகளால் இந்தியா ஒளிரும். 

நகராட்சி குப்பைகள் 

அமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் கெட்டப்படும் குப்பையும்கூட இந்தியாவுக்கே வருகிறது. ஐ.டி.சி. போன்ற பிரபல நிறுவனங்கள் இந்த கழிவுகளை பல்வேறு பெயர்களில் வாங்கி இந்தியா கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இப்படிப்பட்ட குப்பைகள் கண்டெய்னர், கண்டெய்னராக வந்திறங்கியுள்ளன. லேடக்ஸ் எனப்படும் ரப்பர் தொழிற்சாலைக் கழிவுகள் என்ற பெயரில் வந்த இந்தக் கழிவில், மருத்துவமனை நச்சுப் பொருட்கள் கலந்த மருத்துவக் கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை அடுத்து அந்தக் குப்பைகள் திரும்ப அனுப்பப்பட்டன. ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அந்நாடு மறுத்துவிட்டது. இதனால் அந்தக் குப்பைகள் நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடி துறைமுகத்திலேயே கிடந்து அழுகிக் கொண்டிருக்கின்றன. சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அறியப்பட்டுள்ள ஐ.டி.சி. நிறுவனம் இப்படிப்பட்ட வகைகளில்தான் சூழலை காப்பாற்றுகிறது போலும். 

கதிர்வீச்சு கழிவுகள் 

மேலை கூறப்பட்ட பல்வேறு கழிவுகளைப் போல எளிதில் அடையாளம் காண முடியாதவை கதிரியக்க கழிவுகள். அணுக் கதிரியக்கத்திற்கு நிறமோ, மணமோ கிடையாது. கருவிகள் இன்றி இதை கண்டுபிடிக்க முடியாது. நமக்கு வரும் உலோகக் கழிவுகளுக்குள் கதிரியக்க கழிவுகள் ஊடுவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 80களில் ரஷ்யாவின் செர்னோபில்லில் அணுஉலை விபத்து ஏற்பட்டபோது உருவான அணுக் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இந்தியாவிற்குள் வந்தபோது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். ஆனால் வழக்கம் போல அரசு கண்டுகொள்ளவில்லை. 

கழிவு, குப்பை விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை தீர்மானங்கள் நிறைவேற்றி, விருப்ப உடன்படிக்கை என்ற பெயரில் சர்வதேச சட்டமாக உள்ளது. சர்வதேச சட்டங்களை மதிக்கும் வழக்கமில்லாத அமெரிக்கா முதல், அதையே பின்பற்றி நடக்க முயற்சிக்கும் இந்தியா வரை பல நாடுகள் இந்த விருப்ப உடன்படிக்கையை புறக்கணித்துள்ளன. இதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை.  

முறையாக சுத்திகரிக்கப்படாத அனைத்துக் கழிவுகளுமே நச்சுத்தன்மை வாய்ந்தவைதான். பாதாள சாக்கடைக்குள் சிக்கி சுகாதாரத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் செய்திகள் நமக்கு புதியதல்ல. இருந்தாலும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை இந்தியாவிற்குள் அனுமதித்து, நம் உயிருக்கு உலை வைக்கும் இந்த வணிகம் குறித்து படித்தவர்கள் கேள்வி எழுப்புவதில்லை. அதற்குக் காரணம், அவற்றை பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய தலித், அடித்தட்டு ஏழை மக்கள், பெண்கள்தான். இந்தியா ஒளிர்கிறதோ இல்லையோ, சர்வதேச நாடுகளின் குப்பைக்கூடையாகி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  

Pin It