ரமணன்,

த.பெ. குணசீலன்,

கிளைச் சிறை முகாம்,

பூவிருந்தவல்லி,

சென்னை - 600 056.

பெறுநர்

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம்.

மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து அகதிகளாக 10.09.2007 அன்று விசைப்படகு மூலம் தமிழகம் வந்து, மண்டபம் அகதி முகாமில் பதிவு செய்து, பின் திருச்சியில் வசித்து வந்தேன். அங்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து என் குடும்ப வாழ்வை நடத்தி வந்தேன். சந்தோசமாகவும் நிம்மதியாகவும் எங்கள் வாழ்வு கழிந்தது. என் மனைவியும் கர்ப்பமானார். இவ்வாறு 7 மாத காலமாக எங்கள் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த வேளையில் எனது நண்பன் விஜ‌யநீதன் என்பவர் தான் வாங்கிய மீன்பிடி உபகரணங்களை தனது வீட்டிற்குக் கொண்டு செல்வதற்காக வாடகை வண்டி ஏற்பாடு செய்து தரும்படி என்னிடம் கேட்டார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு வாடகை வண்டி ஒழுங்கு செய்து, அவரின் அன்பான வற்புறுத்தல் காரணமாக நானும் அவருடன் செல்ல வேண்டி வந்தது. இவ்வாறு அவரின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை 29.07.2008 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திர்ப்பாலைக்குடியில் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜ‌ர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

இரண்டு மாதங்களுக்குப் பின் எனது மனைவி கடன்பட்டு, தன் நகைகளை அடகு வைத்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. நீலகண்டன் என்பவருக்கு பிணையில் எடுப்பதற்காக ஒரு இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து அவரால் ஏமாற்றப்பட்டு பிணையில் வெளிவந்த என்னை மதுரை சிறைவாசலில் வைத்து மீண்டும் க்யூ - பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன். நான் முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால் நீதிமன்றத்தால் ஒரு நீதிபதி அவர்கள் 'இவர் பிணையில் வீடு செல்லலாம்' என அனுமதித்தும் திரும்பவும் சிறைவாசலில் வைத்து கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? இவ்வாறு திரும்பவும் சிறையில் அடைப்பதென்றால் எதற்கு நீதிமன்றம் கூட்டிச்செல்ல வேண்டும்? எனக்கு எனது பணம் மிஞ்சியிருக்குமே?

எனக்குத்தான் இந்திய சட்டதிட்டம் எதுவுமே தெரியாது ஏனெனில் நான் ஒரு இலங்கைத் தமிழன். எனக்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் எனது கர்ப்பமான மனைவியை நீதிமன்றம், சிறை என மாறி மாறி அலைய வைத்திருக்க மாட்டேனே? எனது பணத்தையும் இழந்திருக்கமாட்டேனே? அவ்வாறு மீண்டும் சிறையில்தான் அடைக்கவேண்டுமெனில் ஏன் பிணை தர வேண்டும்? நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை அவர்கள் அவமதிப்பதென்றால் பேசாமல் என்னை சிறையிலேயே அடைத்து வைத்திருக்கலாமே? நீதிமன்றத் தீர்ப்பு செல்லாது என்று க்யூ - பிரிவு காவல்துறையினர் தாங்கள் சொல்வதுதான் சட்டம் எனில் எனக்கு பிணையில் விடுதலை தந்த நீதிமன்றம் எதற்கு? நீதிபதி எதற்கு? வழக்கறிஞ‌ர் எதற்கு? என்னை சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் தேவை, என்னை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் தேவையில்லையா? இந்திய சட்ட ஒழுங்குகளில் இந்த நடைமுறை எங்கு உள்ளது?

ஒரு சிங்களவனைப் பிடித்து குறைந்தது 3 மாத காலத்தில் சிறையில் அடைத்து பின் விடுதலை செய்து இராஜமரியாதையோடு இலங்கைக்கு வழியனுப்பி வைக்கின்றார்கள். அதே சிங்களவன் பிறந்த அதே நாட்டில்தான் நானும் பிறந்தேன். அவன் சிங்களவன், நான் தமிழன். சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம் என உங்கள் சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா? ஒரு சிங்களவனையே அல்லது வேறு நாட்டுக்காரனையோ இவ்வாறு சிறப்பு சிறையில் அடைத்து வைப்பதில்லையே அது ஏன்? நான் குற்றவாளியா? அல்லது நிரபராதியா என்று நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதற்கு நீதிமன்றம் கூட்டிச்சென்றால்தானே? அவ்வாறு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் குறைந்தது 6 மாத கால தண்டனைதான். ஏன் இவ்வாறு இர‌ண்டு வருடகாலமாக சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? நீதிமன்றம் கூட்டிச்சென்றால்தானே என் வழக்கின் தன்மையும் வழக்கு எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவரும்? இரண்டு வருடகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? இதற்கு என்ன காரணங்கள்?

இந்தியாவிற்குள் பயங்கரவாதியாக நுழைந்தது மட்டுமின்றி மும்பையில் சுமார் 160 பேரை ஈவிரக்கமில்லாமல் நாயை சுடுவதுபோல சுட்டுத்தள்ளிய அஜ்மல் கசாப்பிற்கு சில மாதங்களில் சுமார் ஆயிரத்து நானூறு பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறையில் அஜ்மலை இராஜ மரியாதையோடு நல்லவிதமான சாப்பாடு (மட்டன், சிக்கன்) கொடுத்து வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் இந்தியாவிற்குள் அகதியாக நுழைந்து நிம்மதி பெருமூச்சுடன் என் மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து வந்த என்னை சிறையில் அடைத்து இரண்டு வருடகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

அகதியாக வந்த எனக்கு அகதி பதிவு அட்டை கொடுத்திருந்தும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழக்கு எப்படிபோட முடியும்? ஒரு நாடு ஒருவனை அகதியாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அகதிப்பதிவு கொடுத்து, தங்க வீடு கொடுத்து உண்ண உணவு கொடுத்து, வேலை கொடுத்து சில வேலைகளில் ஆணோ, பெண்ணோ இங்குள்ளவர்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கொடுத்தும் சட்டம் மட்டும் அயல் நாட்டார் சட்டம் போடுவது ஏன்? உதாரணமாக இந்தியாவின் திருமகள் சானியாமிர்சாவை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக்கிற்கு அயல்நாட்டார் ச‌ட்டம் போடவில்லையே அது ஏன்? அதுவும் திருமணம் முடிப்பதற்கு முன் இந்தியாவின் இன்னொரு பெண்ணான ஆயிசாவை திருமணம் முடித்தவர் அவரை சில நாட்களில் விடுதலை செய்து விட்டது. ஏன் அவருக்கு மட்டும் சட்டங்கள் வித்தியாசமாக இருக்கின்றது?

இங்கே வாழப்பழகி, இங்குள்ள கலாச்சாரத்தில் மூழ்கி இங்குள்ள தமிழகத் தமிழன்போல் மாறிவிட்ட ஈழத்தமிழனுக்கு இங்கு தமிழகத் தமிழனுக்கு போடும் சட்டத்தையே போடலாமே? ஈழத்தமிழனும் நாடு இழந்து, ஊர் இழந்து, உறவுகள் இழந்து, தனது தாய்த்தமிழகம் என்று நம்பித்தானே வருகிறான். ஏன் அவனை பிரிவு காட்டி வேறு சட்டம் போட வேண்டும்? பிறகு எதற்கு மேடைகளிலும், உலக அரங்கிலும் தொப்புள் கொடி உறவு என்று சொல்லவேண்டும்?

ஒரு சிங்களவனுக்கோ, ஒரு பாகிஸ்தானிக்கோ ஒரு ஈழத்தமிழனுக்கோ இந்திய சட்டம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இந்திய சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதா? மாறாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானதா?

நான் செங்கல்பட்டு சிறையில் இருக்கும்போதே எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது என்னவெனில் ஒரு தமிழகத்தமிழன் சிறையில் அடைக்கப்பட்டால் அவனது மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்கு சொந்தபந்தம் இருக்கும்; அவனையும் வந்து பார்ப்பதற்கு உறவுகள் இருக்கும்; வழக்காட உதவிகள் இருக்கும். இந்தியா சட்டதிட்டம் நன்றாகத் தெரியும். குறுகிய காலத்தில் வழக்காடி வெளியே வந்து விடுவான்.

ஆனால் ஈழத்தமிழனாகிய எனக்கு அவ்வாறு இல்லை. நான் அகதியாக வரும்போதே, எனது மனைவி பிள்ளையோடு மட்டும்தான் வந்தேன். உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. இப்படி இருக்கையில் என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தால் என் மனைவி எப்படி வாழ்வார்? அவர் வேலைக்குப் போனால் இரண்டு பிள்ளைகளையும் யார் பார்ப்பது? அவரின் செலவுக்கு என்ன செய்வார்? அவரின் தனிமை பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம்? தெரியாத நாட்டில் 22 வயது நிறைந்த ஒரு இளம் பெண் தன் இருகுழந்தைகளையும் வைத்துக்கொண்டு எப்படி பாதுகாப்போடு வாழ முடியும்?

ஆண்துனை இல்லாமல் வாழ்ந்தால் உடல்ரீதியாக எத்தனைவிதமான வன்சொற்களுக்கு ஆளாக வேண்டி வரும்? குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பார்? தனது இரண்டாவது கைக்குழந்தையை தனது அறுவை சிகிச்சை செய்த உடலோடு எப்படி கவனிப்பார்? இப்படி இரண்டு வருட காலமாக நான் சிறையில் இருந்தால் என் மனைவி தன் வாழ்வாதாரங்களை எப்படி பெற்றுக்கொண்டு வாழ முடியும்?

இங்குள்ள சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாமல் எங்குபோய் யாரைப் பார்ப்பதென்று தெரியாமல் என்னை விடுவிக்க வழி தெரியாமல் ஏமாற்றப்பட்டு, ஏமாற்றமடைந்து மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயன்றவரை என் இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்து என் அன்பான வார்த்தைகளால் தடுத்து வைத்திருக்கிறேன். (அவர் தற்கொலைக்கு முயன்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இலங்கை வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் அவரது இரண்டாவது அண்ணா விமானக்குண்டு தாக்குதலில் இறந்து அவரது தாய், சகோதரர்கள் காணமல் போனது)

இன்னும் எதுவுமில்லாமல் விடுதலைக்கான வழிதெரியாமல் இப்படியே நான் சிறையில் இருந்தால் என் மனைவி எதுவும் செய்துவிடுவாரோ என அஞ்சுகிறேன். இதே காரணங்களை கருத்திற்கொண்டு கடந்த 01.02.2010 அன்று செங்கல்பட்டு கிளைச்சிறையில் இரண்டு வருட காலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும் என் வழக்கில் உள்ள இருவரை (திருமணம் ஆகாதவர்கள், பணவசதி படைத்தவர்கள்) விடுதலை செய்துள்ளனர். ஒருவரை கடந்த ஆண்டு 15 ம் தேதி 7ம் மாதமும் அடுத்தவரை 11ம் மாதமும் விடுதலை செய்துவிட்டனர்.

ஒரே குற்றப்பிரிவு, ஒரே வழக்கு, ஒரே நீதிமன்றம், ஒரே சிறை, ஒரே அறையில் தங்கியிருந்தும் எல்லாம் ஒரே மாதிரி இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. எனக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்றும், எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழுந்தைகள் இருக்கிறதென்றும் ஒரு குழந்தை நோயால் அவதிப்படுவது குறித்தும் என் குடும்பத்துடன் வாழ என் வழக்கில் உள்ள இவரை விடுதலை செய்தது போல் என்னையும் விடுதலை செய்யக்கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தேன். பின் வேலூரில் அடைக்கப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தால் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் பூவிருந்தம‌ல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சாதாரண சிறையில் கூட மரம் செடிகள் இருக்கும்; மண்கூட இருக்கும்; மருத்துவமனைகள் இருக்கும்; நினைத்தவுடன் சிறை அதிகாரிகளைப் பார்க்க முடியும். கைதிகளின் குறைகளையும் அந்த அதிகாரிகள் உடனுக்குடன் தீர்த்துவிடுவார்கள். ஒரே ஒரு குறைதான் இரவு அறைக்குள் பூட்டி காலையி திறந்துவிடுவார்கள். ஒழுங்கு முறையில் வாய்தா சென்று வரலாம். நோய்கூடினால் வெளிமருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரலாம், உறவினர்கள் யாரும் வந்து எளிதில் எந்தக் கைதியையும் பார்த்துவிட்டுச் செல்லலாம். கல்வி வசதிகள் உண்டு. யோகா வகுப்புகள் உண்டு. இன்னும் பல வசதிகள் உண்டு.

இலங்கை கொழும்பில் 4ம் மாடி என்றழைக்கப்படும் கொடூரமான சித்ரவதைக்கூடம் ஒன்று இருக்கின்றது. இதற்குள் அடைக்கப்படுபவர்கள் 40 சதவீதமானவர்கள் தப்பி விடுதலை ஆவார்கள். மீதி கணக்கில் காட்டப்பட மாட்டார்கள் காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டு விடுவார்கள். அந்த 4ம் மாடி சிறைக்கூடத்தில் கூட கணக்கில் காட்டப்பட்டவர்கள் U.N.H.C.R,I.C.R.C மனித உரிமைக்கான அமைப்புகள் வாராவாரம் சென்று பார்வையிட்டு விடுதலையை வலியுறுத்தியும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் வருவார்கள். இது எதுவுமே இல்லாமல் நாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை மிகவும் கொடூரமானது. என்னை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூவிருந்தம‌ல்லி சிறையானது சிறப்பு முகாம் என்ற பேரில் இயங்கும் மறைமுகமான சித்ரவதைக்கூடம் (தயவு செய்து நேரில் வந்து பார்வையிட்டால் புரியும்)

இங்கு நாம் நினைத்தவுடன் வைத்தியம் செய்ய முடியாது, நினைத்தவுடன் சமையல் பொருட்கள் வாங்க முடியாது, நினைத்தவுடன் எமது உறவினர்கள் வந்து பார்வையிட முடியாது. இந்த சிறையானது இராஜீவ் காந்தி கொலையாளிகளுக்காக விசேடமாக வடிவமைத்து கட்டப்பட்டது. வெறும் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 26 பேருக்காக கட்டப்பட்டது. மேற்பரப்பு முழுவதும் கம்பிகளால் மூடப்பட்டுள்ளது. கம்பிகளுக்கு ஊடாகத்தான் வானத்தைப் பார்க்க முடியும். ஒரு பிடி மண்கூட இல்லை. நில‌ப்பரப்பு ழுமுவதும் சிமெண்ட் பூச்சால் பூசப்பட்டு தரை வைக்கப்பட்டுள்ளது. மரம் செடி எதுவும் கிடையாது. நிழல் என்று ஒதுங்குவதற்கு எதுவும் கிடையாது. குறுகிய இடத்திற்குள் 20 அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளதால் காற்றுக்கூட உள்ளே வராது.

இப்போது வெயில் காலம் என்பதால் வெப்பத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை மேல் கம்பிகளிலும், கட்டிடங்களிலும் பகல் நேர வெப்பமானது தேங்கி கிடந்து இரவு முழுவதும் அந்த வெப்பத்தை வெளியேற்றிக் கொண்டு இருக்கும். இதனால் இங்குள்ள 19 பேருக்கும் வியர்வை, பரு உண்டாகி மிகவும் எரிச்சலுடன் வாழ்கின்றோம்.

2000 பேர் அடைக்கப்பட்ட சாதாரண சிறையில் கூட ஓர் அடுக்கு பாதுகாப்பு. இங்கு 19 பேருக்கு மட்டும் 4 அடுக்கு பாதுகாப்பு. நான் முக்கியமாகக் குறிப்பிடுவது என்னவெனில். எனக்கு செங்கல்பட்டு சிறையில் காவல் துறையினர் அடித்த கண்டல் காயம் தலையிலும், காலிலும், கையிலும் இருப்பதால் கடந்த மாதம் வட்டாட்சியர் திரு. வள்ளிமுத்து அவர்களிடம் என்னை மருத்துவமனை கூட்டிச்சென்று சிகிச்சை பெற அனுமதி கேட்டிருந்தேன் ஆனால் ஒரு மாதகாலம் மேலாகியும் அனுமதி தரவில்லை. இந்த சிறையிலும் மருத்துவ வசதி அறவே இல்லை. என் தலையில் வலி உள்ளதால் அடிக்கடி சாப்பிடும்போதும் பல்துலக்கும்போதும் மிகவும் வலி எடுப்பதால் தாங்க முடியாமல் மீண்டும் சென்னை அரசு மருத்துவமனை கூட்டிச் சென்று சிகிச்சை பெற 15.04.2010 அன்று வட்டாட்சியரிடம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அதற்கு அனுமதி தரவில்லை. என் தலைவலி தாங்க முடியாத வலியாக இருப்பதால் 15.04.2010 அன்றைய தினமே எனக்கு விஷ‌ம் வாங்கித்தரும்படி  மனு கொடுத்திருந்தேன்.

இவ்வாறு இருக்கையில் 16.04.2010 அன்று RA ஆன விஷயகுமார் என்பவர் எமது முகாமிற்கு சம்பளம் கொடுக்க வருகைதந்தார் அவரிடம் என்னை ஏதாவது ஒரு மருத்துவமனை செல்ல அனுமதி வாங்கித் தரும்படி கூறினேன் அவரோ சர்வசாதாரணமாக க்யூ - பிரிவு காவல்துறையினருக்கு எழுதி அனுமதி கேட்டிருக்கின்றோம். அவர்கள் அனுமதி தந்தவுடன் கூட்டிச் செல்கின்றோம் என கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பின் சில அதிகாரிகளிடம் தயவுடன் கேட்டால் திரும்பவும் என் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுகின்றார்கள். இவர்கள் மாறி மாறி சொல்லி அனுமதி தர ஒரு மாத கால அவகாசம் தேவையா? அமெரிக்கா வெள்ளை மாளிகைக்குகூட எழுதிப்போட்டால் இதுவரைக்கும் பதில் வந்துவிடும். ஐயா நன்றாக சிந்தித்துப் பாருங்கள்... உயிர் போகும் நிலையில் ஒரு வருத்தம் (நோய்) முற்றினால் இவர்கள் அனுமதி தரும் கால அவகாசம் வரை எமது உயிர் எம் உடலில் இருக்குமோ என்பது சந்தேகம்தான்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய எம்மை சிறப்பு முகாம் என்ற போர்வையில் திரும்பவும் அடைத்து வைத்துள்ளார்கள். சாதாரண சிறையை விட மிகவும் கொடூரமான இம்முகாம் எப்படி சிறப்பு முகாமாகும்? சிறப்பு சிறை என்று வைத்திருக்கலாமே! இச்சிறை பற்றியும் எம் வழக்கின் தன்மைகள் பற்றியும் “தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின்” செயலர் திரு.பா.புகழேந்தி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எமக்காக எமது அத்தியாவசிய தேவைகள் குறித்தும், எமது மனித உரிமைகள் குறித்தும் அடிக்கடி குரல் கொடுத்து மனிதாபிமான ரிதியில் பல உதவிகள் புரிவதும் தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின் செயலர் திரு.பா.புகழேந்தி அவர்கள்தான் எமது பல வழக்குகளை வாதாடி வருகின்றவர். எம்மைப் பற்றியும் எம் வழக்குகள் பற்றியும் எமது சிறை பற்றியும் நிறைய தெரிந்திருப்பவர்.

மிருகங்களுக்காக “மிருக வதை தடுப்புச்சட்டம்” இருக்கின்றது. மிருகங்களை துன்புறுத்தினால் கூட “புளுகிராஸ்” என்ற அமைப்பு தட்டிக்கேட்கும். சாதாரண சினிமாவில் கூடி நடிப்பு என்று தெரிந்தும் மிருகங்களை துன்புறுத்துவதாக மிருகங்களுக்காக குரல் கொடுக்க நிறைய அமைப்புகள் இருக்கின்றன. இதே போல் “மனித வதை தடுப்புச்சட்டம்” என்று ஏதாவது இருந்திருந்தால் நான் மட்டும் அல்ல ஈழத்தில் இறுதியுத்தத்தில் என் இன மக்களே பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

இறுதியாக நான் கேட்பது என்னவெனில், ஈழத்தமிழன் எந்த தமிழ் தெரியாத நாட்டிற்கு அகதியாக சென்றாலும் அந்தந்த நாடு ஈழத்தமிழனுக்கு குடியுரிமை கொடுக்கிறது. ஆனால் தமிழ் தெரிந்த தமிழகத்தில் மட்டும் குடியுரிமை கொடுக்காமல் மறுப்பது ஏன்? சாதாரண வழக்கைக் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் பிணையில் வந்தும் பல வருடங்களாக சிறையில் அடைத்து குடும்பத்தை பிரிந்து வாழவியலை சீரழித்து கணவன் சிறையில் பல வருடங்களாக வாழ்வதால், வெளியில் பிரிந்திருக்கும் மனைவியானவள் யாரும் உறுதுணை இல்லாததால் பல உடலியல் ரிதியான உபத்திரங்களுக்கு, உள்ளாகி மனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார்கள். வேறு சிலர் சொல்ல முடியாத பல பிரச்சனைகளால் விவாகரத்து செய்துள்ளார்கள்.

அகதியாக சகலவற்றையும் இழந்து பல வருடங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கண‌க்கான ஈழத்தமிழர்களுக்கு அண்மையில் தமிழக அரசு ஒதுக்கிய நிதி 100 கோடி. பல கோடிகள் சம்பாதித்து பல சுகங்கள், பல புகழ்கள் கண்டு மக்களுக்காக எந்தவித சேவையும் செய்யாமல் (நடிகர் லாரன்ஸ் தவிர்த்து) சமுதாயத்தை சீரழிக்கும் சினிமாத்துறையினருக்கு அண்மையில் தமிழக அரசு ஒதுக்கியிருப்பதோ பல நூறு கோடி. இந்தப் பாகுபாடுகள் பார்க்கும் நிலையில் இந்தத் தமிழக அரசிடம் நாம் எதையும் எதிர்பார்த்து நிற்பதில் எந்தப் பலனும் இல்லை. ஆகவே மனித உரிமைக்காகப் போராடும் உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன்.

செங்கல்பட்டு முகாமில் 02.02.2010 அன்று நடந்த சம்பவத்தை உற்று நோக்கினால், சட்ட நிபுணர்களே கேலிக் கூத்தாய் சிரிப்பார்கள். இப்படியொரு கேவலம் சர்வாதிகார இலங்கை அரசுகூட செய்யாது. ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் 4 அடுக்கு பாதுகாப்பிற்குள் மொத்தம் 33 இலங்கை அப்பாவித்தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சில பேரின் குடும்பம் தமிழகத்திலும், சில பேரின் குடும்பம் இலங்கை வன்னியில் நடந்த யுத்தத்தில் இறந்தும் காணாமல் போயும் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாமலும் மன ரிதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள். செங்கல்பட்டு சிறையில் 99 பேர் அடைக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டும் 33 ஆக குறைக்கப்பட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை நினைவில் வைத்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரியும் விடுதலையானவர்கள் போல் எங்களையும் விடுதலை செய்யக் கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர் (அன்று நானும் இருந்தேன்) எதையும் பேசித்தீர்க்காமல் அடித்து தாக்கி காயப்படுத்தியது மட்டுமல்லாமல் கொலை வழக்கு போட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. சிறையில் அடைக்கப்பட்டு மனரீதியாக பாதிக்கப்பட்டு எதையுமே செய்ய இயலாத நிலையில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்தவர்களால் எப்படித் திருப்பி தாக்க முடியும்? 33 அப்பாவி ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் சம்பவம் நடந்த அன்று அனைவரும் ஒரே இடத்தில் நிற்பதற்கு சாத்தியம் இல்லை. மாலை 7 மணி என்பதால் சமையல் வேலையில் சிலரும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு சிலரும், காரம் போர்ட் விளையாட்டில் சிலரும், உறங்கிய நிலையில் சிலரும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒவ்வொருவரும் இவ்வாறு இருக்கையில் சம்பவம் நடந்த அன்று அந்த நேரத்தில் எதிர்பாராத வேளையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் கண்களில் பட்டதோ வெளிமுற்றத்தில் நின்ற ஒரு சிலர்தான். அதுவும் நிராயுதபாணிகளாக....

ஏற்கனவே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தும் நாம் ஏதாவது வன் முறையில் ஈடுபட்டாலோ திருப்பி ஏதாவது செய்தாலோ தப்பி ஓடவே முடியாது எனறு தெரிந்தும் அந்த ஒரு சிலரால் நன்றாகப் பயிற்சி எடுத்து அதிகாரமுள்ள அதுவும் துப்பாக்கிகள் உருட்டுக்கட்டைகளுடன் சுமார் 150 பேருடன் வந்திறங்கிய காவல்துறை அதிகாரியான ASP சேவியர் தன்ராஜ் என்பவரை நாம் எப்படி திருப்பித் தாக்கியிருக்க முடியும்? இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூட 30.03.2010 அன்று எமது பக்கமே நியாயமானது என்றும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு அன்றைய தினமே ஒரு மாதகால அவகாசத்தில் வழங்குமாறு செங்கல்பட்டு J.M ‍ 1 நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது.

21.04.2010 அன்று எமது முகாமில் 12 மணி நேர கடமையில் இருந்த காவல் அதிகாரியிடம் எனக்கு தலையில் வலி அதிகமாக உள்ளது. மருத்துவமனை கூட்டிச்செல்லும்படி கேட்டிருந்தேன். அவரோ எமக்கு பொறுப்பாக இருக்கும் வட்டாட்சியரின் உதவியாளரான R.A (விஜ‌யகுமார் அவர்கள்) என்பவருக்கு தொலைபேசியில் தெரிவித்து மருத்துவமனை கூட்டிச்செல்ல ஒழுங்கு செய்யும்படி அறிவித்தார் ஆனால் R.A மாலை 5 மணிக்கு வருவதாக அறிவித்தும் பின் வரவே இல்லை. நான் மட்டும் அல்ல 8 பேர் சிகிச்சைக்காக அனுமதி கேட்டு 1 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள். எமக்கு சிகிச்சை பெற வழியேதும் தெரியவில்லை. சிகிச்சை பெறாமல் போனால் எதிர்காலத்தில் என் தலையில் ஏதாவது பிரச்சனையாகிவிடுமோ என அஞ்சுகிறேன.

சிகிச்சைக்கான நியாயமான வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் உங்களுக்கு எழுதி எனக்கு, என்னுடன் உள்ளவர்களுக்கும் சிகிச்சை பெற வழி அமைத்துத் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு வருடகாலமாகியும் எந்தவித வழியும் தெரியாமல், என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ முடியாமலும் என்மனைவி பிள்ளைகள் தமது வாழ்வினை மேற்கொண்டு நடத்த முடியாமல் மிகவும் வறுமையோடு தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள். என் மனைவி பிள்ளைகள் சீரழந்து கஷ்டப்படுவதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்று கூறினால் அந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன். ஆகவே இந்த தேவையில்லாத வழக்கில் இருந்து என்னை விடுவித்து சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய என்னுடன் என் மனைவி பிள்ளைகள் சேர்ந்து வாழ வழிவகை செய்து தருமாறும் என் வழக்கு முடிந்தவுடன் என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் திரும்ப எனது நாட்டிற்கே அனுப்பி வைக்க உதவி செய்யுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கிருந்து கொண்டு இலங்கை வவுனியாவில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு தொண்டை கிழிய கத்தி அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசாங்கம் தனது நாட்டில் உறவுகளைப் பிரிந்து தனிமைப்படுத்தி குடும்பத்தை சீரழித்து முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு பூந்தமல்லி சித்ரவதைக் கூடங்களை எப்போது அகற்ற போகிறது?

ஒரு ராஜீவ் காந்தி கொலையை வைத்து அதன் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காமல் (ஜெயின் கமிமூன் அறிக்கையை விசாரிக்காமல்) ஒட்டு மொத்த ஈழத் தமிழர்கள் அனைவரையும் அதே கண்ணோடு பார்க்கும் இந்திய அரசாங்கம் எப்போது எங்களையும் சக மனிதர்களாக பார்க்கப்போகின்றது ?

இராஜீவ் காந்தியை கொன்றவர்கள் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்றால் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் அதே கண்ணோடு பார்க்க வேண்டியதுதானே? ஏன் தமிழர், சிங்களவர் என்று பார்க்க வேண்டும்? அப்படி பிரித்து பார்ப்பதென்றால் குற்றத்திற்குரியவர்களை மட்டும் பார்க்க வேண்டியதுதானே?

திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இலங்கை சென்று கொழும்பில் இராணுவ வீரனால் துப்பாக்கியின் பின் பக்கத்தால் தலையில் தாக்கப்பட்டார். அப்போது இராஜீவ் காந்தி அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்குமானால் இன்று இந்திய அரசாங்கம் இலங்கையையே வெறுத்து ஒதுக்கியிருக்குமா? தாக்கிய சிங்கள இராணுவ வீரனோ ஒருசில மாதத்தில் விடுதலையாகிவிட்டான்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய என்னை சிறப்பு முகாம் என்று அடைத்து வைத்துள்ளார்களே அவ்வாறெனில் இந்த சிறப்பு முகாமில் என் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கலாமே? அவ்வாறு அனுமதி இல்லையென்றால் அது எப்படி சிறப்பு முகாம் ஆகும்? இதுவும் ஒரு சிறைதானே?

சிறை என்று வைத்துக்கொள்வோமே... அவ்வாறெனில் ஒழுங்காக தவணை முறையில் வாய்தா அழைத்துச் செல்லலாமே, இல்லை முகாம் என்றால் குடும்பத்துடன் வாழ அனுமதிக்கலாமே. இது இரண்டுமே இல்லையென்றால் இந்த முகாம் எந்த வகையில் சேரும்?

ஆடு மாடுகளைக் கூட பட்டியில் அடைத்தால் பகல் முழுவதும் திறந்து விடுவார்கள். நல்ல விதமான சாப்பாடு கொடுப்பார்கள். காயங்கள் ஏற்பட்டால் மருத்துவம் கூட செய்வார்கள். அதுவும் ஆடு மாடுகளுக்குக் கூட இவ்வாறு இருக்கையில் நாம் இவைகளை விட கீழானவர்களா?

இக்கடிதம் உங்களுக்கு எழுதுவதால். எனக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து மேலும் பல வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைத்து அல்லது இங்கு விடுதலையாகாமல் இலங்கைக்கே திருப்பி அனுப்பி என் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

சில வேலைகளில் வெளியில் திருச்சியில் தங்கியிருக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது நேரக் கூடுமானால் அதற்கும் அவர்களே பொறுப்பாவார்கள்.

நன்றி.

இவ்வண்ணம்

தங்கள் உண்மையுள்ள

(கு. ரமணன்)

Pin It

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்கள் முதல்வர், மத்திய அமைச்சர் கண்முன்னே தாக்கப்பட்டனர், மேலும் தாக்குதல்களுக்கு ஆளான வழக்கறிஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஈழப் பிரச்சினை கொளுந்துவிட்டு எரிந்தபோது, தங்களது ஆட்சியை யாரெல்லாம் விமர்சித்தார்களோ அவர்கள் மீது தேச துரோக சட்டம் பாய்ந்தது (பின்னர் அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது). வேலை தேடி போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. இவை எல்லாம் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். வெளிவராதவை ஏராளம். இது போன்ற பிரச்சனைகளை களைய என்ன வழி என்று இந்தக் கட்டுரையில் கூறுகின்றார் பிரகாஷ் சிங்.

பிரகாஷ் சிங்கைப் பற்றி: இவர் உலகிலேயே மிகப்பெரிய துணை இராணுவக் குழுவான இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் உத்திர பிரதேசம் மற்றும் அசாமின் காவல்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றிவர்.

****

babri_masjid_341நந்திகிராமத்தில் நடந்த வன்முறையைத் தவிர்த்திருக்க முடியாதா? 2002 குஜராத் இனக்கலவரத்தை தடுத்திருக்க முடியாதா? நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற இயலும், இது போன்ற கலவரங்கள் தடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டிருந்தாலும் கூட இந்த வன்முறைகள் மேலும் பரவாமலும், இதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் இழப்புகளின் எண்ணிக்கையையும், வலியையும் குறைத்திருக்க இயலும், காவல்துறை அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இல்லாமல் இருந்திருந்தால்.

  காவல் துறை சீரமைப்பைப் பற்றி நாம் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருக்கின்றோம். செப்டம்பர் 22, 2006 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு காவல் துறையினை அரசியல்வாதிகளின் தளைகளிலிருந்து விடுவித்தது; 145 வருட காவல் துறை கட்டமைப்பை ஒரு தீர்ப்பில் மாற்றி எழுதியது. 1861ல் காவல்துறை சட்டம் ஆங்கிலேயனின் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்டது. 1857ல் நடைபெற்ற மக்கள் புரட்சி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தை சற்று பலமாகவே தாக்கியது. இது போன்ற கலகங்கள் நடைபெறாமல், தனது ஏகாதிபத்தியத்தை பாதுகாத்து கொள்ள ஆங்கிலேய அரசு உருவாக்கியது தான் காவல் துறைச் சட்டம். ஏகாதிபத்தியம் நம்மை விட்டுச் சென்றபின்பு இந்திய அரசியல் தலைவர்கள் இந்த காவல் துறை கட்டமைப்பை மாற்றி காவல் துறையை மக்களுக்கான ஒன்றாக மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவே இல்லை. தொடர்ந்து வந்த அரசுகள் காவல் துறையை தனது சொந்த அரசியல் விருப்பு வெறுப்பு சார்ந்து தவறாகவே பயன்படுத்தி வந்தன.

சுதந்திரத்திற்கு பின்னர் பல அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும், சமூக மாற்றங்களும் நடைபெற்ற பின்னரும் இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காவல் துறை கட்டமைப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லையே என்று எண்ணியதால் 1977ல் இந்திய அரசு தேசிய காவல் துறை ஆணையத்தை நிறுவியது. இந்த தேசிய காவல் துறை ஆணையம் 1979லிருந்து 1981க்குள், காவல் துறை அடி நிலையிலிருந்து மேல் மட்டம் வரை எவ்வாறு இயங்க வேண்டும் என்று எட்டு விரிவான அறிக்கைகளை அரசுக்கு கொடுத்தது.

 ஆனால் மைய அரசோ அந்த எட்டு அறிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை. 1983ல் இந்த அறிக்கைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன. மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கண்துடைப்புக்காக சொல்லப்பட்டது. இந்த அறிக்கையின் சில இடங்களில், தேசிய காவல் துறை ஆணையம் ஷா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரியது. ஆனால் பல மாநில அரசுகள் இந்தப் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்து விட்டன. மேலும் இந்த அறிக்கையின் சில இடங்களில் அரசியல் மற்றும் காவல் துறை செயல்படும் முறையையும் அதன் கட்டமைப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. தற்சமயம் நடைபெற்றுவரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை வெளிக் கொணரவும், அதை சரி செய்தவதற்கான வழிகளை உருவாக்குவதே இது போன்ற கடுமையான விமர்சனங்களின் நோக்கம். இவ்வளவு தெளிவான, இந்த தேசிய காவல் துறை ஆணையத்தின் பல முக்கிய பரிந்துரைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.

 இந்த பரிந்துரைகள் எல்லாம் 1996ல் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கின் மூலமாக மீக்கொணரப்பட்டன. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தின் கவனம் மேலும் சிலவற்றின் மீதும் விழுந்தது. இந்தியாவையே உலுக்கிய இரு பயங்கர வன்முறைகளே அது. இந்த இரு பயங்கர வன்முறைகளும் காவல் துறையினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் போனதால் ஏற்பட்டவை. 1984ல் நடந்த தில்லி கலவரம், 1992ல் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது.

1984 தில்லி கலவரத்தை ஆராய்ந்த நானாவதி கமிட்டி பின்வருமாறு பரிந்துரைத்தது ”எந்த வித அரசியல் தலையீடுகளும் இல்லாத சுதந்திரமான மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ள காவல் துறையே இது போன்ற கலவரங்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியும்”.

 இந்த பொது நல மனு நீதிமன்றத்தில் இருக்கும்போதே இன்னொரு வன்முறையும் காவல் துறையின் ஒரு தலைபட்சமான நடைமுறைகளால் இந்தியாவில் நடைபெற்றது. 2002 குஜராத் இனக்கலவரம். இந்த மதக்கலவரத்தை ஆய்வு செய்த தேசிய மனித உரிமை ஆணையம் இவ்வாறு கூறியது ”இந்த மதக்கலவரமும், இந்தியாவில் மற்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களும், இதற்கு முன்னரே தேசிய காவல் துறை ஆணையம் பரிந்துரைத்த காவல் துறை சீரமைப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இது காவல் துறையின் விசாரணைகளில் ஏற்படும் அரசியல் குறுக்கீடுகளை தவிர்க்க உதவும்”.

இந்த பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே அரசு காவல் துறையை சீரமைக்க வேண்டுமா என திட்டமிட்டே மூன்று ஆணையங்களை அமைத்தது. 1) ரிபேரியோ ஆணையம் 1998, 2) பத்மநாபன் ஆணையம் 2000, 3)குற்றவியல் தண்டணைச் சட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய மாலிமாத் ஆணையம் 2002. இந்த மூன்று ஆணையங்களும் புதிதாக உருவாகிவரும் சவால்களை சந்திக்க காவல் துறை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே முடிவுக்கு வந்தன. இந்த காவல் துறை சீரமைப்பு என்பது இன்று வரை அமல்படுத்தாததற்கு ஒரே காரணம் அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பே. 

காவல் துறை சீரமைப்பில் அரசுக்குத் தேவையான நேரத்தை நீதிமன்றம் வழங்கியது. இறுதியாக உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 1)இந்தப் பிரச்சனையில் உள்ள முக்கியத்துவத்தை கருதியும், 2) சட்டத்தைப் பாதுகாக்கவும், பலப்படுத்துவதற்குமான அவசர தேவை கருதியும், 3) இந்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக நிலுவையில் இருப்பதாலும், 4) பல்வேறு ஆணையங்களும் நாட்டின் காவல் துறை சீரமைப்பை வலியுறுத்தியுள்ளதாலும் 5) எப்பொழுது காவல் துறை சீரமைப்பு நிகழும் என்பது கேள்விக்குறியாக இருப்பதால், மேலும் நம்மால் காத்திருக்க இயலாத காரணத்தினால், காவல் துறை சீரமைப்பு குறித்த சட்டம் மைய / மாநில அரசுகள் இயற்றும் வரை கீழ்க்காணும் வழிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

 இந்த வழிமுறைகள் புதிய காவல் துறை சட்டம் வரும் வரை செயல்படுத்தப்படும். உச்ச நீதிமன்றம் மாநில அளவில் மூன்று அமைப்புகளை உருவாக்க வேண்டும். இவை விசாரணைகளில் ஏற்படும் வெளிப்புற(அரசியல்) குறுக்கீடுகளை களைவதற்கும், சுதந்திரமாகவும் அதே சமயம் தனது செயல்களுக்கான பொறுப்புடனும் காவல் துறை செயல்பட உதவும். அவையாவன,

 1984_riots1) கலவரங்களைத் தடுக்கவும், மக்களுக்கான சேவையை நோக்கியும் காவல் துறை செயல்படுவதற்கான விரிவான வழிமுறைகளை வகுத்து செயல்படுத்த ஒரு மாநில பாதுகாப்பு ஆணையம்.

 2) மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு கீழே உள்ள காவல் துறை அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு, பதவி மாற்றம் மற்றும் அவர்களுக்கான பணி தொடர்பான வேலைகளை செய்யவும், மேலும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது பணிக்கு மேலே உள்ள அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு மற்றும் பதவி மாற்றம் போன்றவற்றை மாநில அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு ஒரு தலைமை காவல்துறை இயக்குநரையும், நான்கு மூத்த அதிகாரிகளையும் கொண்ட காவல்துறை தேர்வாணையம்.

 3) காவல் துறை அதிகாரிகளின் மேலான புகார்களை விசாரிக்க மாவட்ட மற்றும் மாநில அளவில் காவல்துறை புகார் மையம்.

மேலும் இந்தத் தீர்ப்பில், மைய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்படும் தகுதியான மூன்று மூத்த அதிகாரிகளிலிருந்தே மாநில அரசுகள் காவல் துறை தலைமை அதிகாரியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இவ்வாறு நியமிக்கப்படும் தலைமை காவல் துறை இயக்குநர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அதே பொறுப்பில் இருக்க வேண்டும். மேலும் களத்தில் செயல்படும் காவல்துறை அதிகாரிகளான காவல்துறை தலைவர், காவல் துறை துணைத் தலைவர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர்களும் இரண்டு வருடம் அதே பொறுப்பில் இருக்க வேண்டும்.

இட மாறுதல்களும், பதவி மாறுதல்களும் மாநிலங்களில் மிகப் பெருமளவில் தற்பொழுது நடைபெறுகின்றன. எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் பதவியிலிருந்து தொடங்கி மாவட்ட தலைமைப் பதவி வரை பதவி மாறுதல்கள், இட மாறுதல்கள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் இது போன்ற பதவி, இட மாறுதல்களெல்லாம் அரிதாகி விடும்.

 விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரிகளையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பிரித்து வைக்க வேண்டும். இது விரைவாக விசாரணை நடக்கவும்,மக்களுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தவும் உதவும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

 மைய காவல் துறை தலைமை அதிகாரிகளை தெரிவு செய்யவும், அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் பணி சூழலை மேம்படுத்தவும் அதன்மூலம் அந்தப் படைகளை அடுத்த தளத்திற்கு நகர்த்துவதற்காக மைய அரசு ஒரு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 சோலி சரப்ஜீ கமிட்டி ஒரு உதாரண காவல் துறை சட்டத்தையும் மைய அரசுக்கு 2006 அக்டோபர் 30 அன்று கொடுத்துள்ளது. இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் உள்ள அடிப்படைக் கூறுகளை எடுத்து கொண்டு, சற்று வேறு வகையில் அதை நடைமுறைபடுத்துவது எவ்வாறு என கூறியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள ”மாநில பாதுகாப்பு ஆணையம்” சோலி சரப்ஜீ கமிட்டியில் “மாநில காவல்துறை ஆணையம்” என்றும், “மாநில காவல்துறை தேர்வாணையம்” என்பது ”மாநில காவல்துறை தேர்வாணைக் குழு” என்றும், “காவல் துறை புகார் ஆணையம்” என்பது "காவல்துறை பொறுப்பு ஆணையம்” என்றும் மாற்றப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றமும், சோலி சரப்ஜீ கமிட்டியும் காவல்துறை உயர்நிலை அதிகாரிகளின் பணி வருடத்திலும், விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரிகளையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதிலும் ஒத்த கருத்து கொண்டுள்ளன.

 இந்த சீரமைப்பு காவல் துறையின் புகழுக்காக அல்ல, நாட்டில் உள்ள மக்களை நல்லமுறையில் பாதுகாக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், அரசமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவும் என புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தலைமுறை காவல்துறை அதிகாரிகள் நிகழ்வுகளுக்கு தகுந்தாற்போல வளர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

 இந்த மாறுதல்கள் அவ்வளவு எளிதாக நடந்துவிட முடியாது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தராஞ்சல், கோவா போன்ற பத்து மாநிலங்களே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாகவோ (அ) பெரும்பான்மையாகவோ ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் இதை செயல்படுத்துவதில் இலுவை நிலையையே தொடர்கின்றன.

இந்தத் தீர்ப்பை சிறிது கூட மதிக்காத மிக மோசமான மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேஷ். நீதிமன்றங்களுக்கு மாநிலத்தின் அரசமைப்பை மாற்றுவதற்கு உரிமை இல்லை என்று வாதாடுகின்றது தமிழ்நாடு. மகாராஷ்ட்ரா அரசோ உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகள் “நடைமுறையில் உள்ள அமைப்புக்கு தொடர்பில்லாத வழிமுறைகள்” என்று கூறுகின்றது. உத்திரப் பிரதேசமோ காவல்துறை சீரமைப்பு ஆணையத்தை உருவாக்கி ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க முயன்றுவருகின்றது.

 மேலும் பீகார்,சட்டீசுகர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், குஜராத், கேரளா மற்றும் இராஜஸ்தான் போன்ற ஒன்பது மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடுக்கும் வகையில் சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளன. பீகார் காவல் துறை சட்டம் 2007ல் உருவாக்கப்பட்ட மிக மோசமான ஒரு சட்டம் ஆகும்.

 இது போன்ற காவல் துறை சட்டங்கள் நடைமுறைக்கு வரும் பொழுது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத மாநிலங்களில் பொது மக்களை பெருமளவில் ஒன்று திரட்டி அந்தந்த மாநிலங்களுக்கு நெருக்குதலை உண்டாக்க வேண்டும்.

 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்போது, காவல் துறை வேலை செய்யும் விதமே மாறி விடும். ஆட்சியாளர்களின் காவல் துறை என்பது மக்களுக்கான காவல் துறை என்பதாக மாறும்.

மூலம்: பிரகாஷ் சிங்

மூலப்பதிவிற்க்கான சுட்டி : http://www.littlemag.com/security/prakashsingh.html

மொழியாக்கம் ப.நற்றமிழன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

நம் கண் முன்னால் ஈழ மக்கள் வல்லாதிக்க நாடுகளால் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படுகையில் உணர்வு உந்த ஆவேசமாய்ப் போராடிய வழக்கறிஞர்கள், தன் தாய்மொழியை, தன் சொந்த நிலத்தின் நீதிமன்ற மொழியாக அறிவிக்கக் கோரி சாகவும் துணிந்திருக்கிறார்கள்.

 நீதிமன்றத்தின் வரலாறு விசித்திரமானது. வல்லான் வகுத்ததே சட்டம் என்ற முதுமொழிக்கேற்ப மன்னராட்சி காலத்தில் அரண்மனைகள்தான் அறம் கூறும் மனைகளாக திகழ்ந்தன. The king can do no wrong - என்றெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தெறிக்கின்ற துளிகளே நீதியாகவும், சட்டமாகவும் விளங்கிய காலத்தில் எளிய மனிதர்களுக்கு நீதி என்பது அவ்வப்போது எட்டிப் பார்க்கின்ற நிலவாய் நின்றது. நீதி பரிபாலனம், சட்ட விதிகள், நீதி பரிபாலன அலுவல் முறைகள் என அனைத்தையும் மேலை நாடுகளிடம் இருந்து உள் வாங்கிய இந்திய நீதி வழங்கல் தன்மை மிகவும் பழமைத் தன்மை உடையது. எடுத்துக்காட்டாக வெப்ப நாடான நம் நிலத்தில் வழக்கறிஞர்களின் உடை முற்றிலும் முரண் தன்மை உடையதாக விளங்குகிறது. ஆங்கிலேய வந்தேறிகளின் பல சட்டங்கள் இன்றளவும் நம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

வழக்கறிஞர்கள் தொழிலும், நீதிபதிகளுக்கான தகுதிகளும் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் வசமே சார்ந்து இருந்தன. உச்சமும், அதிகாரமும் எங்கு குவிகிறதோ அங்கு பார்ப்பன ஊடுருவல் உடனடியாக நடக்கும் என்ற வரலாற்று சமூக விதிக்கு ஒப்பாக வழக்கறிஞர் தொழிலையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இந்த நாட்டில் 90 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நீதித்துறையை மிகவும் அன்னியப்படுத்தி, கடவுளுக்கு நிகரான புனிதத் தன்மையை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் உயரத்தில் வைத்தார்கள். 1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே வழக்கறிஞராக முடியும். 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் சரசுவதி குடியிருந்த நாக்காக விளங்கிய பார்ப்பனர்களே இந்தத் தொழிலை ஆக்கிரமிக்கத் துவங்கினர். வழக்கறிஞர் சங்கம் என அழைக்கப்படும் வக்கீல் பார் 1888 ஆண்டு மயிலாப்பூரில் எஸ்.சுப்பிரமணிய அய்யர் என்ற பார்ப்பனரால் துவக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் தமிழுக்கு முற்றிலும் தொடர்பில்லாத வந்தேறிகளிடம் சிக்கிய நீதித்துறை இன்றளவும் தமிழை ஏற்றுக்கொள்ள தடுமாறிக் கொண்டு நிற்கிறது. தந்தை பெரியார் என்ற மகத்தான மனிதனின் வருகைக்குப் பிறகுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கரங்களுக்கு கல்வி போய் சேர்ந்த்து. அதற்குப்பிறகுதான் வானுயர நின்ற வழக்கறிஞர் தொழிலும் எளிய மக்களின் கரங்களிடம் வசப்பட்டது. 

மானுட இனத்தின் தனித்த அடையாளமாய் மொழி திகழ்கிறது. மொழியே ஒரு இனத்தின் பண்பாட்டு வரலாற்றின் அடிப்படையாகவும், தொடர்ச்சிக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. சமூகத்தின் தகவல் பரிமாற்றத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல மொழியின் பணி. ஒரு இனத்தின் அனைத்து சமூகக் கூறுகளிலும் மொழியின் ஆதிக்கமும், அவசியமும் தொடர்கிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கினை மொழிதான் உறுதி செய்தது. எனவே தான் தேசிய இன வரையறைவியலின் அடிப்படை அலகாக மொழி திகழ்கிறது. தேசிய இனத்தின் உயரிய சின்னமாக விளங்கும் மொழிதான் அந்தந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்களைத் தீர்மானிக்கிற காரணியாக விளங்குகிறது.

உலக மொழிகளில் மிகத் தொன்மையான தமிழ்மொழியை பேசுகின்ற நாம்… நம் தாய்மொழியை வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக மட்டும் காணாமல் நம் தனித்த அடையாளமாய்ப் போற்றிப் பாதுகாக்க முயன்று வருகிறோம். “வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி” என பாரதி சிலிர்த்து, “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி” என புறப்பொருள் வெண்பாமாலை புகழ்ந்து, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வளமையையும், இலக்கிய செழுமையும் பெற்று உயர்த்தனி செம்மொழியாக திகழ்கிறது நம் தமிழ் மொழி. 

இந்தியா போன்ற பல மொழிகளும், முரண்பட்ட பருவ காலங்கள் நிலவும் வெவ்வேறு விதமான நிலத் தன்மைகளும் நிரம்பிய ஒரு நாட்டில் அந்தந்த தேசிய இனங்களுக்கான அடிப்படை அடையாளமாக மொழியே திகழ்கிறது. இந்திய அரசியலமைப்பு இந்த பரந்துபட்ட நிலவியலில் உலவும் மொழிகளில் அதனதன் வரலாற்றுத் தன்மைகளுக்கு ஏற்பவும், மக்களின் உபயோகத் தன்மைகளுக்கு ஏற்பவும் 2003 ஆம் ஆண்டின் அரசமைப்பு 92 ஆம் திருத்தச் சட்டத்தின்படி தமிழ் உள்ளிட்ட 22 அலுவல் மொழிகளை அரசியலமைப்பு எட்டாம் அட்டவணையில் அடையாளம் காட்டுகிறது. இந்த மொழிகள் அதனதன் அளவில் செழித்தோங்க உரிமையும், பயன்பாட்டுத் தன்மையில் விரிந்து பரவ உரிமையும் கொண்டு தன்னகத்தே தனித்த இறையாண்மை கொண்டும் விளங்குகின்றன. ஒரு நிலைநிறுத்தப்பட்ட முழு சனநாயகம் தேசிய இனங்களின் தாய்மொழியின் அடுத்தகட்ட வளர்ச்சியை ஆதரித்து உறுதி செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து மத்தியில் ஆள்பவர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இருந்ததால் அவர்களின் தாய்மொழியை பெரும்பான்மை என்ற தட்டையான தகுதியை வைத்துக் கொண்டு பன்முக மொழிகள் நிலவும் ஒரு பரந்துப்பட்ட நிலத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் தேசிய மொழியாக தேவநாகரி வடிவத்திலுள்ள இந்தியை அறிவிக்க முடிந்தது. அதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பினை உறுதி செய்ய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 வழிவகை செய்கிறது. மேலும் எவ்வித மனத்தயக்கமும் இல்லாமல் மற்ற தேசிய இனத்தவர் வாழும் நிலங்களில் இந்தியை புகுத்தவும் முடிந்தது. உறுப்பு 351 இந்தியை பரப்புவது யூனியனின் கடமை என அறிவித்துள்ளது.

பல்வேறுபட்ட மொழி வாரி தேசிய இனங்கள் உள்ள நாட்டில் இந்தி மட்டும் பரப்ப வேண்டியது ஒரு கடமையாக அரசமைப்பு சட்டத்தினால் கூறப்பட்டிருப்பது முற்றிலும் ஒரு தலைச்சார்பானது. மேற்கண்ட உறுப்பு 351-ன் காரணமாகவே ஆர்.ஆர். தளவாய் எதிர் தமிழ்நாடு மாநிலம் (AIR 1976 SC 1559) என்ற வழக்கில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர்க்கு ஒய்வூதியம் அளிக்கும் தமிழக அரசின் திட்டம் உச்சநீதிமன்றத்தினால் ஏற்க முடியவில்லை. தமிழினத்தின் தேசிய தன்னெழுச்சி உணர்வாக பற்றிப் பரவிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தியின் ஆதிக்கம் ஒரளவு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும் இந்திய நிலத்தின் ஆகச் சிறந்த ஒற்றை மொழியாக இந்தியை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தேசிய இனத்திற்கான தன்னுரிமைகளில் முதன்மையானதாக திகழும் மொழிக்கான உரிமை நீதித்துறையில் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு அடையாளம் காட்டிய 22 அலுவல் மொழிகளில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக இருக்கின்றன. பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தி மட்டுமே நீதிமன்ற மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்திய அரசினால் அடையாளம் காட்டப்பட்ட 22 அலுவல் மொழிகளில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளை நீதிமன்ற அலுவல் மொழியாக அதனதன் மாநிலங்களில் மத்திய அரசு அறிவிக்காத பாரப்பட்ச தன்மை இந்தியா அணிந்து கொண்டிருக்கும் சனநாயக முகமூடிக்கு ஏற்புடையதாக இல்லை.

இத்தகைய பாரபட்ச மொழிக்கொள்கை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு சாதகமாகவும், மற்ற மொழிசார் தேசிய இனங்களுக்கு விரோதமாகவும் இருக்கின்றது. மற்றொரு அலுவல் மொழியான ஆங்கிலம் தமிழின மக்களின் சமூக வாழ்வியலை மிகக் கடுமையாக நசிப்பதாக இருப்பதோடு மட்டுமில்லாமல் விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டிற்கு எதிராக உள்ளது. இந்த பரந்துபட்ட நிலத்தில் இங்கு வசிப்பவர் யாருக்குமே தாய்மொழியாக ஆங்கிலம் இல்லை. ஆனால் ஆங்கிலம் நமக்கான நீதிமன்ற மொழியாக இருப்பது வெட்கக்கேடான ஒன்று.

எளிய மனிதனின் இறுதி நம்பிக்கை நீதிமன்றம். நீதிமன்றங்களின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு இருட்டு அறைக்குள் புரியாத மொழியாய் வழிந்தோடும் நீதி எப்படி மக்களுக்கு எட்டும் ஒன்றாக இருக்கப் போகிறது என்பது புரியவில்லை. பரந்த எண்ணிக்கையில் வாழும் மக்களின் மொழியில் இல்லாத சட்டமும், நீதியும் எதன் பொருட்டு அன்னிய மொழியில் அமையவேண்டும் என்பதில் தான் அனைத்துவித சதிகளும் அடங்கி இருக்கின்றன. இந்திய அரசியலமைப்பு உறுப்பு 348 நீதிமன்ற அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இருக்கத் தடை இல்லை எனத் தெளிவாக உரைக்கின்றபோதும் கூட இன்றளவும் மத்திய, மாநில அரசுகளின் கனத்த மெளனம் கள்ளத்தனமான ஒன்று என்பது வெளிப்படை.

 மக்களுக்கான பயன்பாட்டு வெளியாக வெளிப்படையாகத் திகழ வேண்டிய நீதிமன்றம் யாருக்காக எதன் பொருட்டு மக்கள் மொழியில் இல்லாமல் போக வேண்டும்? சமூக தளத்திற்கு மிக நெருக்கமான வழக்கறிஞர்களின் வாதங்கள் மிக வெளிப்படையாக, மக்களின் தாய்மொழியில் அமைவதுதான் நேர்மையானதாக இருக்க இயலும். கடவுளின் இருக்கைக்கு நிகரானதாக புரியாத மொழி பீடங்களினால் நிர்மாணிக்கப்பட்ட நீதிபதிகளின் இருக்கையும்… மக்களுக்குப் புரியாத ஆங்கிலத்தில் புரளும் சட்டத்தின் நாக்குகளும், மக்களின் மொழிக்கு எதிராக இருக்கும் போது தகர்த்தெறியாமல் என்ன செய்வது..? 

உயர் தனிச்செம்மொழியாக மத்திய அரசு தமிழ் மொழியை அறிவித்து விட்டதாக ஆடம்பரம் பொங்க, கொண்டாட்ட காட்சிகள் அரங்கேறுகின்ற இவ்வேளையில்… ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியால் ஒற்றை சுற்றறிக்கை மூலம் கூட தமிழுக்கு அங்கீகாரம் தர இயலவில்லை. கேட்டால் வந்து பேசுங்கள். .நாங்கள் தடுக்க மாட்டோம் என்று தர்க்கம் வேறு. தமிழில் பேசினால் தடுக்காமல் இருப்பது, எப்படி தமிழ்மொழிக்கான அங்கீகாரமாக நினைக்க முடியும்…? . தமிழில் பேசுவது மட்டுமே பயன்பாட்டின் மொத்த வடிவத்தினை உள்ளடக்காது. மாறாக நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியில் நிகழ்வதற்கு யாருமே வாய்மொழியாகக் கூட உத்திரவிட மறுக்கிறார்களே ஏன்..?

எம் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தினை ஓர் ஒற்றை சுற்றறிக்கையில் சுருக்கி வைத்து இந்தி பேசாதவர்களின் எண்ணிக்கை 50% விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் இந்த நாட்டில் இந்திக்கும், வந்தேறி மொழியான ஆங்கிலத்திற்கும் கொடுக்கும் குறைந்தபட்ச மதிப்பினை 3000 ஆண்டுகட்கு முந்தைய எம் உயிருக்கு நிகரான எம் தாய்மொழிக்கு வழங்காத நீதிமன்றமும், அதன் சட்டங்களும் எதன் பொருட்டும் எமக்கு எதிரானவைகளே... நீதிமன்றத்தில் தமிழ் என்பது தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரல் மட்டுமல்ல ஏற்கனவே ஒடுக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் ஓர் இனத்தின் தன்னெழுச்சி முழக்கம். 

எனதருமை தமிழர்களே… 

நம் பண்பாட்டின் ஆணிவேராகத் திகழும் நம் உயிருக்கு நிகரான நம் தாய்மொழியாம் தமிழினை இத்தனை ஆண்டு காலம் இருட்டில் வைத்து ஒதுக்கி வைத்தது போதும். தமிழர்களின் அடிப்படையான இக்கோரிக்கைக்காக உணர்வுள்ள வழக்கறிஞர்கள் உயிரை விடவும் துணிந்து இருக்கிறார்கள்.  

இனி இழப்பதற்கு நம்மிடத்தில் ஏதும் இல்லை, நம் உயிரான மொழியைத் தவிர.. 

மொழியையும் இழந்து சொற்கள் அற்ற ஊமைகளாய்.. உணர்வற்று திரிவதைத்தான் ஆள்பவர்கள் விரும்புகிறார்கள்.. 

நம் உயிருக்கு நிகரான தமிழினை உயர்நீதிமன்றத்தில் உயர்த்துவோம். 

விரல் கோர்த்து உயர்த்தும் கரங்களால் விண்ணையும் முட்டுவோம். 

வாருங்கள்.. மொழி போற்ற போரிடுவோம்.

செந்தமிழைச் செந்தமிழ்நாட்டைச் சிறைமீட்க

நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்தி குரலெடுத்து கூவாய்” - பாவேந்தர் பாரதிதாசன்

 - மணி.செந்தில், வழக்கறிஞர், கும்பகோணம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.),பேச : 9443677929 

Pin It

(கோபால்ஜி, மாவோயிஸ்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர். அல்பா ஷா, இலண்டன் பல்கலைக் கழகத்தின் கோல்டு ஸ்மித் கல்லூரியில் மானுடவியல் பிரிவில் பணியாற்றுபவர். அல்பாஷா ஜார்கண்டில் காட்டில் கோபால்ஜியை சந்தித்து உரையாடினர். அந்த நேர்காணல் க.முகிலனின் தமிழாக்கத்தில்  இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மூலம் : எக்கனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, மே 8, 2010).

அல்பாஷா : உலகின் பிற பகுதிகளில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிறது. இந்தியாவின் சோசலிக அரசை அமைக்க முடியும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கோபால்ஜி : சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இனி எதிர்காலமே இல்லை என்கிற கருத்து ஏகாதிபத்தியவாதிகளாலும் முதலாளியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் முதல் சுற்றுப் புரட்சிகள் நடந்தன. உழைக்கும் வர்க்கத்தால், கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளிகளால் உலகின் பல பகுதிகளில் - இரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, வியத்நாம் புரட்சி முதலான புரட்சிகள் வெற்றி பெற்றன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய புரட்சி அலை வீசும். இந்தியாவில் எங்கள் கம்யூனிஸ்ட கட்சியின் தலைமையின் கீழ் இப்புரட்சி நடக்கும்.

பெருமளவில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்பட நீண்டகாலம் தேவைப்படும். முதலாளியத்திற்கு நிலப்பிரபுத்துவ சமூகத்தை வெல்வதற்கு 400 ஆண்டுகளாயிற்று. அப்படியிருந்தும், பாட்டாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்காக முதலாளிகள், நிலப்பிரபுக்களுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தனர். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் உள்ள பல நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிகளைத் தடுப்பதற்காக முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ‘முதலாளியத்துக்கு மாற்று இல்லை’ என்கிற முதலாளியக் கூற்று அதன் மதிப்பை இழந்துவிட்டது. வளர்ச்சி பெற்ற நாடுகளில் பல அறிஞர்களும், மக்களில் பலரும் காரல்மார்க்சு எழுதிய மூலதனத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். மார்க்சியத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதையும், சோசலிசமும் கம்யூனிசமும் இன்றியமையாத தேவைகள் என்பதையும் அண்மைக்கால நிகழ்வுகள் எண்பித்துள்ளன. சோசலிசத்தாலும் கம்யூனிசத்தாலும் மட்டுமே வறுமையை, பட்டினியை, சமத்துவமின்மையை ஒழிக்க முடியும். மேலும் நாம் வாழும் இப்புவிக்குப் பேராபத்தாக உள்ள தட்பவெப்பச் சீர்கேடு முதலான சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

அல்பாஷா : சீனாவில் நீண்டகால மக்கள் போர் நடந்தபோது இருந்த நிலைமைக்கும் இந்தியாவில் உள்ள நிலைமைக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாடுகள் எவை?

கோபால்ஜி : நாங்கள் உதவி பெறுவதற்காக உலக அளவில் ஒரு சோசலிச நாடோ அல்லது தளமோ இல்லாத நிலையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பல்வேறு நாடுகளில் எழுந்த தேச விடுதலைப் போராட்டங்கள், ஏகாதிபத்தியவாதிகளை, நேரடியாக ஆளுகின்ற பழைய காலனிய ஆதிக்க முறையைக் கைவிட்டு, புதிய காலனிய முறைகளில் புதிய சுரண்டல் வடிவங்களை மேற்கொள்ளச் செய்தன. இந்தியாவைப் பொறுத்த அளவில், அதிகாரங்கள் அனைத்தும், மய்ய அரசில் குவிக்கப்பட்டுள்ளன. இராணுவ வலிமை மிக்க நாடாக இப்போது இந்தியா இருக்கிறது. அதன் அதிகாரமும் படைவலிமையும் இந்தியாவின் எந்தவொரு மூலை முடுக்கையும் சென்றடையக் கூடியதாக உள்ளன. போக்குவரத்தும் தகவல் தொடர்பும் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

தங்களுக்கென தனியாகப் படை வைத்துக் கொண்டிருந்த இனக்குழுத் தலைவர்கள் சீனாவின் கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்தியாவில் அது போன்ற நிலைமை இல்லை. ஆனால் அருவருப்பான, மீற முடியாத பார்ப்பன தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனால் சமூக - பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் மிகவும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

‘சனநாயகம்’ என்று சொல்லப்படுகின்ற கட்டமைப்பில், இந்திய ஆளும் வர்க்கங்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நகர்ப்புற குட்டி முதலாளிய வர்க்கத்தினரும், பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் வர்க்கத்தினரும் உள்ளனர். இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இவற்றின் வளர்ச்சியில் வேறுபாடுகள் இருக்கின்றன. பழைமை வாதச் செயல்களைப் போற்றுவதில் இந்தியாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இப் பழைமைவாதப் போக்குகள் உழைக்கும் மக்கள் மீது இன்றளவும் குறிப்பிடத்தக்க அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்பழைமை வாதிகள் இந்தப் பிற்போக்கான ஆட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

படையைக் கட்டியமைத்தல், தளப்பகுதிகளை உருவாக்குதல்  ஆகியவற்றில் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. சீனாவில் அவர்கள் முன்பே தளப்பகுதியும் படையும் பெற்றிருந்தனர். கம்யூனிஸ்டு கட்சி உருவாவதற்கு முன்பே, கோமின்டாங் கட்சி ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபத்துவத்துக்கும் எதிராக ஒரு பூர்ஷ்வா சனநாயகப் புரட்சியை நடத்தியது. இந்தியாவில் நாங்கள்செயல்படத் தொடங்கியபோது எங்களுக்கு தளப்பகுதியோ, படையோ இல்லை. சிறு எண்ணிக்கையில் போராடத் தொடங்கினோம். இன்று மக்கள் விடுதலை கொரில்லாப் படை யை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். எனவே,  எங்கள் போராட்டம் நீண்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும்.

மேலும், இங்கு பெரிய சமவெளிப் பகுதிகள் உள்ளன. மலைகளிலும் காடுகளிலும் மேற்கொள்ளப்படும் போராட்ட உத்திகளிலிருந்து வேறுபட்ட நடைமுறைகளை சமவெளிகளில் கையாள வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களில் செயல்படுவதும், உழைப்பாளிகளை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதும் நம் நாட்டில் பெரிய பணியாக உள்ளது. நான்கு வர்க்கப் பிரிவினரையும் ஆற்றல் மிக்க அணியாக ஒருங்கிணைப்பதுடன், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், மற்றும் பல்வேறு தேசிய இனத்தவர் ஆகியோரையும் அணிதிரட்ட நாங்கள் சிறப்புக் கவனம் செலுத்திச் செயல்பட்டு வருகின்றோம்.

அல்பாஷா : உலகில் மிகப்பெரிய சனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பெருமையுடன் கூறப்படுகிறது. நீங்கள் திட்டவட்டமாக எப்படி மறுக்கிறீர்கள்?

கோபால்ஜி : இந்தியா ஒரு முதலாளித்துவ சனநாயக நாடாகக்கூட இல்லை. உண்மையில் இது அரைக்காலனிய, அரைநிலப் பிரபுத்துவ அரசாக உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு சனநாயக உரிமைகள் இல்லை. 1947இல் ஆட்சி அதிகாரம், பிரிட்டிஷாரிடமிருந்து, காலனிய ஆட்சிக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பெரிய பண்ணையார்களுக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆட்சி அதிகார மாற்றத்தால், வெகு மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. புதிய அரசு நிலச்சீர்திருத்தம் பற்றிப் பேசியது. ஆனால் உண்மையில் உழுதவனுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்க

வில்லை. கல்வி பெறுவதில், வேலை வாய்ப்பில், நலவாழ்வு வசதிகளைப் பெறுவதில், மக்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவில் ஊழல் என்பது வாழ்க்கை நெறியாகிவிட்டது. தற்போது பல இலட்சம் மக்கள் பட்டினியாலும் நோய்களாலும் இந்தியாவில் மடிந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கும், அணிதிரள்வதற்கும் அரசு தடை போடுகிறது. ஆனால் அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை என்று பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பெரும்பாலான சட்டங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. நேற்றுவரை காலனி ஆட்சிக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த  நிர்வாகத்துறை ஒரே இரவில், சனநாயகத் தன்மை கொண்டதாக, மக்கள் நலம் நாடுவதாக, நாட்டுப்பற்று உடையதாக மாறிவிடுமோ?

ஆகவே, 1947இல் பெற்ற சுதந்தரம் வெகு மக்களுக்கானதன்று. மேலும், இன்று இந்திய நாடாளுமன்றம் உலக வங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் கட்டளைகளுக்குச் கீழ்ப்படிந்து நடக்கிறது. உலக ஏகாதிபத்தியத்திற்குத் தலைவனாக உள்ள அமெரிக்காவின் ஆணைகளைத் தலைமேற்கொண்டு செயல்படுத்துகிறது.

இந்திய ஆளும் வர்க்கம், இந்தியாவை ஒரு கூட்டாட்சி என்றும் மதச்சார்பற்ற குடியரசு என்றும் சொல்கிறது. ஆனால் இது எந்த அளவுக்குக் கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இருக்கிறது? காஷ்மீர் மக்களிடம் தனிவாக்கெடுப்பு நடத்தி தனி காஷ்மீர் நாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர். தனிநாடு கோரி வடகிழக்குப் பகுதியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இந்திய அரசு எவ்வளவு கொடுமையாக ஒடுக்கி வருகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நடுவண் அரசுக்கும் - மாநிலங்களுக்கும் உள்ள உறவை ஆராய்ந்து பாருங்கள். மாநில அரசுகள் எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில் தில்லியில் தான் அதிகாரம் அனைத்தும் குவிக்கப்பட்டுள்ளன. மய்ய - மாநில உறவு என்பது நிலப்பிரபத்துவ காலத்து உறவாகவே  உள்ளது. தன் அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும் என்பதில் மய்ய அரசு எள்ளளவும் அக்கறை காட்டவில்லை. மூலதனம், பெரிய தரகு முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது; இதற்கு ஏகாதிபத்தியம் பின்புலமாக உள்ளது; இந்தச் சூழலில் நடுவண் அரசு தன்னுடைய அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படுவதைப் பொறுத்த அளவில், கடந்த பல ஆண்டுகளாக அரசே சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவித்து உறுதுணையாக விளங்கி வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தியா ஒரு சனநாயக, கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற குடியரசு என்று கூறப்படுவது ஒரு கேலிக் கூத்தேயாகும்.

அல்பாஷா : அப்படியாயின், சனநாயகம் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

கோபால்ஜி : எங்களது உடனடியான குறிக்கோள், ஒரு புதிய சனநாயகப் புரட்சியாகும். புதிய சனநாயக இந்தியாவில், அதிகாரம் என்பது நான்கு வர்க்கங்களில் கூட்டணியிடம் இருக்கும். பாட்டாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டணியாக அது இருக்கும். இதில் எந்தவொரு தனிவர்க்கமும் அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. புதிய அரசு விவசாயிகளை நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து விடுதலை செய்யும். தேசிய மூலதனத்தைத் தரகு மூலதனத்திலிருந்து விடுவிக்கும். தரகு முதலாளிகளின் உடைமைகள் பறி முதல் செய்யப்படும். அயல்நாட்டுக் கடன்கள் இரத்து செய்யப்படும். பண்ணையார்களிடமிருந்து உபரி நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பிரித்தணிக்கப்படும். சமூகம், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்து வத்தையும் ஒழிக்கும்.

புதிய சனநாயகப் புரட்சி உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக இந்தியாவை உருவாக்கும். அதில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன்னுரிமையும், பிரிந்து போகும் உரிமையும் அங்கீகரிக்கப்படும் புதிய சனநாயக அரசு எந்தவொரு மதத்தையும் ஆதரிக்காது. மதம் தனி மனிதரின் சொந்த விசயமாக இருக்கும். வேலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சமவாய்ப்பு இருக்கும் என்பதுடன் ஒவ்வொருவரும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

அல்பா ஷா : அரசின் வளர்ச்சித் திட்டங்களை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்?

கோபால்ஜி : பொது மக்களின் வளர்ச்சி பற்றி இந்திய அரசு குறைந்த அளவிற்குக்கூட அக்கறை இல்லாமல் இருக்கிறது. அரசின் கணக்குப்படி, 77% மக்கள் ஒரு நாளைக்கு %.20க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதன்படி, 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 62 ஆண்டுக்கால சுதந்தரத்துக்குப் பின் இத்தகைய கேவலமான நிலை! ஆனால் அதே சமயம் சில இந்தியர்கள் கோடீசுவரர்களாகி வருகின்றனர். இந்திய அரசு இதுபற்றிப் பெருமிதம் கொள்கிறது.

பங்குச்சந்தைக் குறியீட்டு எண், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தக் கூடாது. சில பணக்காரர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று அரசு கருதுகிறது. சாதாரண மக்களின் அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசு அக்கறையின்றி இருக்கிறது. உலகவங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் அறிவுரைகளின்படி, தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய இயற்கை வளங்களை, நிலங்களை, காடுகளை, இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய எசமானர்களுக்கும் விற்றிட முயல்கின்றனர்.

தற்செயல் நிகழ்வாக, மாவோயிஸ்டுகள் வலிமையுடன் உள்ள ஜார்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இயற்கை வளங்கள் மிகுந்து உள்ளன. இந்தியாவின் இயற்கை வளங்களில் 80%  இப்பகுதியில் உள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கி, இப்பகுதியிலிருந்து விரட்டாத வரையில், நிலத்தையும் இயற்கை வளத்தையும் அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களுக்கு வெளிப்படையாக விற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அல்பா ஷா : கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

கோபால்ஜி : அப்படியில்லை. சுரங்கம் தோண்டுவது அல்லது ஆலைகள், தொழிற்சாலைகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நம்முடைய இயற்கை வளங்களும், தாயக நிலமும் இந்தியப் பெருமுதலாளிகளாலும், அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களாலும், அவர்களுடைய சொந்த இலாபத்திற்காகச் சூறையாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களின் மேம்பாட்டிற்காக ஆலைகளையும் சுரங்கங்களையும் அமைக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டுவதில்லை. இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று நெருக்குதல் தரப்படுகிறது. அவ்வாறு வெளியேறாவிடில், அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். நகரங்களில் இம்மக்கள் கூலியாட்களாக வாழும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டனர். அதைப் போலவே இப்போதும் நிகழும். பொக்காரோவிலும் மற்ற இடங்களிலும் பெருந்திட்டங்களைச் செயல்படுத்திய போது, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர்க்கு, நிலமோ, வீடோ, அங்குக் கட்டப்பட்ட ஆலையில் வேலையோ வழங்கப்படவில்லை. பல ஆயிரக் கணக்கில் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டனர்.

எனவே, மீண்டும் அதுபோல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இயற்கை வளங்கள் கொள்ளை போவதையும், சூறையாடப்படுவதையும் எதிர்த்திட நாங்கள் மக்களை அணிதிரட்டுகின்றோம். எங்களுடைய நிலமும், இயற்கை வளங்களும் ஏகாதிபத்திய வாதிகளாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் இந்தியப் பெரு முதலாளிகளாலும் சூறையாடப்படுவதை அனுமதிக்க மாட்டோம். மாவோயிஸ்டு அரசில், ஆலைகளை, சுரங்கங்களை அமைப்பதற்குமுன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலில் சுரங்கங்களும் ஆலைகளும் நாட்டுடைமையாக்கப்படும். நாட்டின் நலனுக்காக அவை இயங்கும். முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக அவை செயல்படா. இரண்டாவது, பொதுவாகப் பயிரிடப்படும் நிலங்களைச் சுரங்கம் வெட்டுவதற்காகவோ, பிறவற்றுக்காகவோ எடுக்கக் கூடாது. மூன்றாவதாக, அவ்வாறு நிலங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளபோது, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்ததற்கு உரிய இழப்பீடும், வேலையும், வீடும், பயிரிடுவதற்கு சிறுபகுதி நிலமும் அளிக்கப்பட வேண்டும். புதிய சனநாயக அரசு இடம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றுச் செயல்படும்.

நான்காவதாக, இச்சுரங்கங்களும் ஆலைகளும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில் அமைக்கப்படும். அய்ந்தாவதாக, இத்திட்டங்களை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல் பெறப்படும். சுரங்கங்களையும் ஆலைகளையும் நிர்வாகம் செய்வதில் அம்மக்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும். இந்தியாவில் புதிய சனநாயக அரசு அமையும் போது, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் அரசு செயல்படும்.

அல்பா ஷா : ஜார்கண்ட் பகுதியில் உங்கள் கட்சி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளின்  திட்டவட்டமான சாதனைகள் எவை?

கோபால்ஜி : உழைக்கும் மக்களும், நிலமற்ற தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் இந்தியாவில் ஓர் ஆற்றல் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக உருவாகியுள்ளனர். இதுவே எமது முதலாவதும் முதன்மையானதுமான சாதனையாகும். நாங்கள் போராடும் பகுதிகளில் நிலப்பிரபுத்துவ அதிகாரம் என்பது பெரும்பகுதி தகர்க்கப்பட்டுவிட்டது. இப் பகுதியில் போராடும் மக்கள் தமக்கெனத் தனியாக கொரில்லாப் படையை  அமைத்து உள்ளனர்.

காலங்காலமாக இழிவாக நடத்தப்பட்டு வந்த தலித்துகளும், பழங்குடியினரும் இப்போது சமூகத்தில் உரிய இடமும், மதிப்பும் பெற்றுள்ளனர். இது எமது இரண்டாவது சாதனை. பெண்களை, தலித்துகளை, பழங்குடியினரை இழிவாக நடத்தும் போக்குகளும், காட்டுப்பகுதிகளில் மேல்சாதியினரும் அயலாரும் செலுத்தி வந்த ஆதிக்கமும் வேகமாக மாறத்தெடங்கி உள்ளன. ஊழல் மலிந்த, கொடிய வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மூன்றாவது சாதனை

யாகும். வனத்துறையின் கீழ்நிலை ஊழியர்கள்கூட கடுமையான ஒடுக்கு முறைகளை ஏவினர். ஆனால் இவர்கள் மாஃபியா கும்பலின், பண்ணையார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து காடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் காடுகளில் சுதந்தரமாக நடமாடி, தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். காடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் தடுத்து வருகிறோம். நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டம் எமது நான்காவது சாதனையாகும். எங்கள் போராட்டப் பகுதிகளில் மக்கள் சனநாயக உரிமைகளைத் துய்க்கின்றனர். பண்ணையார்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பெரும்பாலான இடங்களில் பண்ணையார்களை கிராமங்களை விட்டு விரட்டியுள்ளோம். பல இடங்களில் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். நிலத்தை இதற்கு முன் உழுது கொண்டிருந்த நிலமற்றவர்களுக்கும், ஏழை உழவர்களுக்கும் இந்நிலங்களைப் பிரித்து அளித்துள்ளோம்.

ஜார்கண்டிலும் பீகாரிலும் விவசாயக் கூலி மிகவும் குறைவாக இருந்தது. காடுகளில் டெண்டு இலைகளையும் பிற பொருள்களையும் பொறுக்கி எடுத்து வருவதற்கான கூலி மிகவும் குறைவாக இருந்தது. எனவே அதிகக் கூலி கேட்டுப் போராடுமாறு செய்தோம். எனவே தற்போது முன்னைவிட அதிகக் கூலி பெறுகின்றனர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திருட்டையும் வழிப்பறியையும் ஒழித்து விட்டோம். அத்துடன், அரசோ அல்லது பெரிய ஒப்பந்தக்காரர்களோ குளம், ஆற்றுப்படுகை, கடைவீதி, தோப்புகள் முதலானவற்றை ஏலம் விடும் முறைக்கு முடிவுகட்டி விட்டோம். எனவே இவற்றை மக்கள் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கள் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதியில் வகுப்பு மோதல் இல்லை. சங்பரிவாரக்  குண்டர்கள் எம் பகுதியில் வகுப்பு மோதலை உண்டாக்கத் துணியமாட்டார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் அவ்வாறு முயன்றபோது, ஒரிசாவில் கந்தமாலில் சாமி இலட்சுமானந்தாவைத் தண்டித்தது போல் தண்டனைகள் தருகின்றோம். மற்றொரு முக்கியமான சாதனை என்னவெனில், முதலாளிகள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருவதாகும். எனவே, நிலத்தையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரையில், நடுவண் அரசில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாத வரையில் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த இயலாது. இருப்பினும், எங்கெல்லாம் புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் மக்களுக்கு நலம் பயக்கும் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். வேளாண்மையிலும் வேளாண்மை சார்ந்த பிற தொழில்களிலும் கூட்டுறவு முறையை ஊக்குவித்துள்ளோம். மிகவும் பின் தங்கிய பகுதிகளின், கூலியில்லா விருப்ப உழைப்பைக் கொண்டு கிணறுகள், குளங்கள், கால்வாய்களை வெட்டி வருகின்றோம். பள்ளிகளை மருத்துவமனைகளைத் திறந்துள்ளோம். குறைந்த விலையில் மருந்துகளை அளிக்கின்றோம். புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இப்பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆயினும் இவை தொடக்க நிலைப் பணிகளேயாகும்.

அல்பா ஷா : இந்திய அரசு மாவோயிஸ்டு கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கோபால்ஜி : பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது என்பது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருப்பதன் ஒரு பகுதியே ஆகும். தெற்காசியப் பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இந்திய ஆளும்வர்க்கம் உருவாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிரானது என்று கருதப்படுகின்ற எந்த ஒரு இயக்கத்தையும் அல்லது எந்தவொரு எதிர்ப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் தான், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன எழுச்சிப் போராட்டங்களையும், உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் பயங்கரவாதச் செயல்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவதன் மூலம், மாவோயிஸ்டு கட்சியின் மக்கள் திரன் அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களை  - சனநாயக உணர்வு கொண்டோரை எளிதில் கைது செய்ய முடியும். அரசின், சனநாயகத்துக்கு விரோதமான செயல்களை, அதன் ஒடுக்கு முறைகளைக் கண்டித்துப் பேசுவோரைக் காவல்துறை கைது செய்வதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளர்கள், மக்கள் உரிமை இயக்கத்தினர் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். எனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இரண்டாவதாக, எங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கண்மூடித்தனமாகக் கொல்வது, அப்பாவி மக்களைக் கொல்வது பொதுவாகப் பயங்கரவாதச் செயலில் நிகழும். அத்தகைய கொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். குறிப்பாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிரானவர்கள் நாங்கள். கிராமப்புறங்களில் அப்பாவி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எச்செயலையும் நாங்கள் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆயுதமேந்திய எங்கள் படையினர் அத்தகைய தவறைச் செய்யும் போது நாங்கள் எமக்குள் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறோம்.

எங்கள் தத்துவம் மார்க்சியம் - லெனினியம் - மாவோயிசம் என்பதாகும். இந்தியாவை உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவது வஞ்சமும் தந்திரமும் கொண்ட சூழ்ச்சியாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று இந்திய அரசு நினைக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதால், எங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் நாங்கள் தொடக்கக் காலம் முதலே தலைமறைவு இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, பொது மக்களைக் குறிப்பாக, போராட்டப் பகுதிகளில் உள்ள மக்களைத் துன்புறுத்துவதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரம் தருவதற்காகவேயாகும்.

அதேசமயம் இதன் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்லாயிரம் இராணுவத்தினரும் துணை நிலைப்படையினரும் என்ன செய்வது கொண்டிருக்கிறார்கள்? போலி மோதலில் அன்றாடம் இளைஞர்களைச் சுட்டுக்கொன்று கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் போராடுகின்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் என்ன செய்கிறார்கள்? நூற்றுக் கணக்கில் இளைஞர்களைக் கொல்கிறார்கள். ஆளும் வர்க்கத்தினர் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1984 கலவரத்தில் சீக்கியர்களைக் கொன்று குவித்தார்கள். அண்மையில் ஒரிசாவில் கிறித்தவர்களையும், 2002இல் குசராத்தில் இசுலாமியரையும் ஆயிரக்கணக்கில் கொன்றனர். இக் கலவரங்களில் எத்தனை இந்து வெறியர்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்? 1947 முதல் காவல் துறையும் இந்தத்துவ சக்திகளும் கைகோத்துச் செயல்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அய்ந்து இலட்சம் விவசாயிகள் அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-09ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்றாடக் கூலிகளாக மாறிவிட்டனர். பட்டினியால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். உட்சா பட்நாயக் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு ‘வறுமைக்குடியரசு’. இச்சாவுகளுக்குயார் பொறுப்பு? பட்டினியாலும் பசியாலும் பிற நோய்களாலும் பல்லாயிரம் மக்கள் மடிந்து கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் அவலத்தை - இன்னலை கேட்பதற்கு யாருமில்லை! இந்திய மக்கள் மீது அரசு வன்முறையைத் திணிக்கிறது.

அல்பாஷா : போர் தீவிரமடைந்து வருகிறது. அரசும் தன்னுடைய இராணுவத் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது. இருதரப்பினருக்குமான போரில் ஏழை விவசாயிகள் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். உங்களிடம் ஏ.கே.47 துப்பாக்கிகளும் கண்ணி வெடிகளும் உள்ளன. அதனால் உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். இச்சண்டையில் சாதாரண கிராமமக்கள் மடியப்போகிறார்கள். இதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

கோபால்ஜி : மன்னிக்க வேண்டும். உங்கள் கேள்வியே தவறான முறையில் கேட்கப்பட்டுள்ளது. இப்போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் அன்று. இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான போர். மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி என்பது என்ன? மக்கள் விடுதலை கொரில்லாப்படை என்பது என்ன? இவை மக்கள் வலிமையாக அணி திரண்டுள்ள அமைப்புகளே தவிர வேறு அல்ல. ஆகவே மாவோயிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சியை - மக்கள் விடுதலை கொரில்லாப்படையை அரசுப்படைகள் தாக்குவது மக்கள் அணிதிரள்வதையே ஒடுக்குவதாகும். மக்கள் இதை உணர்த்திருக்கிறார்கள். எனவே இத்தகையபோர் என்பது எங்கள் கட்சிக்கு எதிரான போர் அன்று. இது மக்களுக்கு எதிரான போரேயாகும்.

அல்பா ஷா : மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேறல்ல; மக்கள் வேறல்ல; இரண்டும் ஒன்றே என்று நீங்கள் கூறுவதைப் போலவே இந்திய அரசும் மக்களும் வேறு வேறானவர் என்று நீங்கள் பிரித்துக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் தாக்குதலின் இலக்காக இருக்கின்ற காவல்துறையினர் - உங்களுடைய ஆதரவாளர்கள், கொரில்லாப்படையினர் எந்தக்குடும்பங்களிலிருந்து வந்துள்ளனரோ, அதே குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற காவல்துறையினரை நீங்கள் ஏன் கொல்லுகிறீர்கள்?

கோபால்ஜி : பொதுவாகப் போலீசுக்காரர்கள் கிராமப்புற ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பதும், எங்கள் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதும் உண்மை. போலீசுக்காரர்கள் எங்கள் பகுதியைக் கைப்பற்ற வரும்போது, எம்மீதான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போது, மக்களையும் மக்கள் இயக்கத்தையும் ஒடுக்க முனையும் போது மட்டுமே எங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகின்றேன்.

காவல்துறையிலும் இராணுவத்திலும் பல இடங்களில் பணியாற்றும் பலபேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் குடும்பத்தினரின் பிள்ளைகள். இவர்களுடைய குடும்பத்தினர் எங்கள் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். விழாக்காலங்களிலோ, வேறு விடுமுறைகளிலோ காவல்துறையிலும் இராணுத்திலும் பணியாற்றுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கும் போது அவர்களை நாங்கள் தாக்குவதில்லை. அப்படியான ஒரு நிகழ்ச்சி கூட நடந்ததில்லை. அடுத்து பொதுவாக மாவட்ட அளவில் இயங்கும் போலீசாரை நாங்கள் தாக்குவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களைத் தாக்க வரும் போதும், மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒடுக்கப்படும்போது மட்டுமே நாங்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

போரில் எதிரி, நம் சொந்த வர்க்கத்தினரையே நம்மீது ஏவிவிடும் போது, அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. காவல்துறையிலும் இராணுவத்திலும் பணியாற்றுவோருக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான். நீங்கள் எந்த அரசுக்காகப் போராடுகிறீர்களோ, அது உங்களுக்கான அரசு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஆளும் வர்க்கத்திற்காகச் சேவை செய்கிறீர்களோ அவர்கள் உங்கள் குடும்பங்களின் நலனுக்கு எதிரானவர்கள். எனவே, பிற்போக்குத்தனமான இராணுவத்திலிருந்தும் காவல்துறையிலிருந்தும் விலகி மக்கள் விடுதலை கொரில்லாப் படையில் சேருங்கள் என்பதே எங்கள் அழைப்பாகும்.         

(சிந்தனையாளன் ஜூன் 2010 இதழில் வெளியானது)

Pin It

சமீபத்தில் லீனா மணிமேகலையின் 'ஒரு பெட்டை நாயின் கூச்சல்' என்று தலைப்பிட்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரை குறித்து சில விடயங்களைச் சொல்லத் தோன்றுகிறது.

 1. லீனா மணிமேகலை தனது கட்டுரையில், 'ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப்பார்த்தால் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரணச்சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளலாம்' என்று கூறுகிறார்.

 leena_220இக்கருத்து உண்மைக்கு முரணாக உள்ளது. யாரோ ஒருசிலருக்கு இதுபொருந்தலாம். ஆனால் எல்லோருக்கும் இது பொருந்தாது. இருப்பினும் இப்படித் திறந்த மனதுடன் கூறியிருப்பது நல்லதே.

 ஒளவை முதல் இன்றுவரை எழுதப்பட்ட பெண்கவிதைகள் யாவும் தெளிவற்றவை, சுதந்திரமற்றவை, ஆணாதிக்கத்துள் அடைபட்டுக் கழிவிரக்கம் கோருபவை, பன்முகத்தன்மையற்றவை, லிங்கமைய வாதத்தையே முன்வைப்பவை என்பன போன்ற விமர்சனங்கள் போகிற போக்கில் ஆய்வு அடிப்படையற்று முன்வைக்கப்பட்டுள்ளன. 

 ஆணாதிக்க சமூகத்திற்குள் ஒடுங்கிப்போன பெண்ணிருப்பு சொல்லப்பட்ட போதிலும் சங்கப் பெண் கவிதைகளையும் மருதத்திணைக் கவிதைகளையும் (மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி. அகம்-146 முதலியன) வாசித்தால் பெண் ஆளுமை பதிவாகியிருப்பதை உணர முடியும். ஒளவையின் 'முட்டுவென்கொல்....' கவிதைக்கு இணையேது.

 2. மகாஸ்வேதா தேவியின் 'திரௌபதி' கதையை முன் உதாரணமாகக் கொண்டு லீனா பேசுகிறார். இங்கு படைப்பில் நிர்வாணத்தை ஆணுடலுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலையினில்தான் லீனா மணிமேகலை இருக்கிறார். அரசுக்கு எதிராக, அரசப் பயங்கரத்திற்கு எதிராக நிர்வாணத்தை ஆயுதமாக அவர் முன்வைக்கவில்லை. ஆனால் மகாஸ்வேதா அரசுப் பயங்கரத்துக்கு எதிராக உடலை முன்நிறுத்துகிறார். (மேலும் காண்க: உலக அளவில் நிர்வாணத்தைப் பெண்கள் ஆயுதமாகக் கொண்ட விபரங்கள், விடுதலையை எழுதுதல் ப.61-64, மாலதி மைத்ரி:2004)
 
 3. "தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள்கொடியை சங்ககாலத்திலிருந்து எடுக்கிறார்கள். நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது, பெருங்கதையாடல்களைப் புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட் கலகத்தைச் செய்தாலும் உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்பத் திரும்ப லிங்க மய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது. ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல கீழானவளும் அல்ல வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. இந்த நகர்வைக் கொண்டுவந்தவர்கள் பெண்கவிஞர்கள்தான் என்பதை மறைக்க இயலாது" என்று லீனா கூறுவன‌ முரண்பாடுடையவை.

 மனித  சமூக அமைப்பே தொன்மங்களாலும் புனைவுகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆக எந்த ஒரு புத்தெழுச்சியும், மாற்றுச்சிந்தனை மரபும், கலகமும் அங்கிருந்து துவங்காமல் வேறு எங்கிருந்து துவங்க முடியும்? சங்கப் பெண்கவிதையின் ஆளுமைகள் அசாத்தியமானவை. நவீனப் பெண்கவிதைகளின் ஆளுமையும் அதன் தொடர்ச்சியே. ஏனெனில் இக்கவிஞர்கள் வேற்று மரபில் இருந்து வந்தவர்களல்லர்.

 4. "சமணம், பௌத்தம் என்று பெருமதக் காலங்களில் மடிந்து....." என்ற லீனாவின் கூற்று சமண, பௌத்த இலக்கிய மரபிலுள்ள பெண் அடையாளம், பெண் சார்ந்த தத்துவங்களை அறியாததனால் முன்வைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் உள்ள கவுந்தியடிகள், மணிமேகலை, கண்ணகி, மாதவி போன்ற பாத்திரங்கள் வழியாக முன்வைக்கப்படும் பெண் சார்ந்த விவாதங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. இது பற்றி “இந்த இரு காப்பியங்களும் ஆண்மையம் என்பதையும் முற்றுண்மை என்பதையும் கேள்விக்குள்ளாக்கிய இரு சிந்தனை மரபுகளின் பின்னணியில் மொழிப்படுத்தப்பட்டவை." என்று பிரேம் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். (சிலப்பதிகாரம் - மணிமேகலை: பெண்மையின் நாடகம் பின்நவீனத்துவ ஆய்வு. பிரேம், ஜனவரி-மார்ச்:2000,சொல்புதிது)
 
 5. 'வேட்கை, விழைவு, இச்சை என்பவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காமவிழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார்' என்ற கருத்தும் மற்றும் ஒரு தன்னிலை, படிநிலை நீக்கம் போன்ற சொல்லாடல்களும் ப.2 ல் உள்ள கருத்துக்களும் பிரேம்-ரமேஷ் வாசகர்களுக்கு அறிமுகமாகாதவையல்ல.

  'சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள்' (காவ்யா:2000) கட்டுரை தொகுப்பில் 'சிலப்பதிகாரம் - மணிமேகலை: பெண்மையின் நாடகம் பின் நவீனத்துவ ஆய்வு' (7ஆம் கட்டுரை) மற்றும் 'ஆண்டாள்களின் தேடல்களும் பிம்பங்களின் வன்முறையும்' (8ஆம் கட்டுரை) ஆகிய இரு கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாரமாக ப.2 ல் உள்ள கருத்துகள் அமைந்துள்ளன.

 "வரலாறு என்பதும் நிகழ்வுகள் என்பதும் வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றின் ஊடாட்ட வினைக்களம் என்பதிலிருந்து தொடங்கலாம் ...." (சிலப்பத்திகாரம் - மணிமேகலை பெண்மையின் நாடகம்... ப.96) என்று அவை குறித்து விரிவாகப் பேசுகிறது பிரேமின் கட்டுரை.

  ".... உடல் இருப்பைக் கடத்தல் என்பது அதிதன்மை பிம்பங்களுக்குள் ஒடுங்குதல் மற்றும் அதன் மூலகங்களால் கட்டப்பட்ட குறிகளுக்குள் புதைதல் என்பவையாகவே இருக்கின்றன, இவ்விடத்திலிருந்தே நாம் மதம் சார்ந்த கருத்தாக்கங்களையும் சிதைத்துப்பார்க்க வேண்டியவர்களாக நிற்கிறோம். ..." (ஆண்டாள்களின் தேடல்களும் பிம்பங்களின் வன்முறையும் ப.119) என்ற பிரேமின் கருத்தாக்கங்கள் லீனா மணிமேகலையால் "வேட்கை, விழைவு, இச்சை என்பவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் காமவிழைவாக எழுதிய ஆண்டாள்..." என உள்வாங்கப்பட்டிருக்கிறது. இங்கு சொல்ல விரும்புவது, எந்த ஒரு குறிப்பையும் தராமல் தாமே சுயமாக எழுதியது போன்ற பாவனையில் லீனா கட்டுரையை அமைத்திருப்பதைத்தான்.

 நிலம் - உடல் - மனம் இவற்றிற்கான பிணைப்பை தொன்மங்கள், மரபுகளினூடே பின்னப்பட்ட அதிகார முறைகளை அதன் அடிப்படைகளை நுட்பமாக ஆய்ந்து அப்பின்னல்களைக் கலைத்துப்போட்டு விவாதத்திற்கு முன்வைக்கும் திறனாய்வை பிரேமின் கட்டுரைகள் பேசுகின்றன. ஆக முற்குறிப்பிட்ட அவ்விரு கட்டுரைகளையும் வாசித்தவர்கள் படித்தால் லீனா மணிமேகலையின் இந்தக் கட்டுரை தனக்கு முன்னோடியான, அடிப்படையான ஒரு ஆய்வை இருட்டடிப்புச் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கினைக் கொண்டுள்ளது என்று கருதாமலிருக்க முடியாது. அட்ரியன் ரிச் மற்றும் காதரீன் மக்கின்னென் போன்ற மேலைநாட்டு பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும் கட்டுரை தமிழில் இச்சிந்தனை பதிவாகியிருப்பதை முற்றிலும் மறைத்துவிட்டு தன் சுய கண்டுபிடிப்பு போல பேசுவதும் அதிலும் தெளிவற்றுப் பேசுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழ்ச்சூழலில் இது புதியதன்று. ஆயினும் குறிப்பினைத் தராமையின் பொருட்டு தனது கருத்தாக அவற்றை முன்வைக்கும் முனைப்பை லீனா கொண்டுள்ளார்.

 6. மாலதி மைத்ரியின் கவிதைகள் குறித்துப் பேசுகையில் 'ஆண்-பெண் இணைமுரணை தலைகீழாக மாற்றிப் போட்டு பெண்-ஆண் என்று பெண்ணை முதன்மைப்படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்து பார்க்கின்றன. ஆனால் அந்த இணைமுரணை முரண்களாகவே நிறுத்திவிடாமல் சிதைத்து கலவையாக்கிவிடும் எழுத்து முறையை, பன்மைத்துவத்தை எழுதிப்பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணைத் தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள் அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளைச் சொல்லத் தவறுகின்றன' என குற்றம் சாட்டுகிறார்.

 இங்கு நாம் கவனிக்க வேண்டியது, கவிதையென்பது எல்லாவற்றுக்கும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அமைபவையல்ல. அப்படிச் சொல்ல வேண்டிய தேவையுமில்லை. மௌனங்களாலும் இடைவெளிகளாலும் புனைவுகளாலும் அதிகாரமிக்க சமூகவெளியைக் குலைத்துப் போடும் கலகத்தை உண்டு பண்ணும் கனத்த அடர்த்தியை கவிதை தன் உள்ளியக்கமாகக் கொண்டிருக்கிறது. இது சிக்கல், இதற்கு இது தீர்வு என்று கட்டுரை போல திட்டம் போல அமைவதல்ல கவிதை என்பது யாவரும் அறிந்ததுதான். மாலதி மைத்ரியின் கவிதைகள்தான் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் பன்முகத் தன்மையுடன் இயங்குகின்றன என வாசகர்கள் பரவலாகக் குறிப்பிடுவதை இங்கு நினைவுகொள்ள வேண்டும். 
 
 "எலி கீறிய காலில் குருதி கசிகிறது
 கரப்பான் எகிறிப் பறக்கின்றன
 முதுகில் நடந்துசென்ற புலியின் சுவடுகளை
 எப்படிப் பார்ப்பது"  என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழிச் சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது. போலி ஒழுக்கங்களுக்கு கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமான பங்காற்றுகிறார்." என்று லீனா மணிமேகலை எழுதிச் செல்கிறார். இவர் கட்டுரையில் பன்மைத்துவம் இல்லாமல் எழுதுவதாகக் குறிப்பிடப்படும் மாலதி மைத்ரி, ஒவ்வொரு கவிதையும் முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு வடிவத்தில் எழுதும் உத்தி தெரிந்தவரோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது லீனா மணிமேகலையின் இந்த புதிய கண்டுபிடிப்பு. ஏனென்றால் இக்கவிதை மாலதி மைத்ரியின் 'சங்கராபரணி' தொகுப்பில் ‘தெய்வ உடல்’ எனும் தலைப்பில் (ப.33) வருகிறது.  இப்பொழுது பெண்ணிற்கே உரிய மூர்க்கம், எதிர் அழகியல் உருவாக்கம் என்பவை யாருக்குப் பொருந்தும் என்ற கேள்வி முன்னே வந்து நிற்கிறது.

ஆக மாலதி மைத்ரியின் கவிதைகளையும் இவர் முழுமையாகப் படிக்கவில்லை, சுகிர்தராணியின் கவிதைகளையும் இவர் முழுமையாகப் படிக்கவில்லை என்பதிலிருந்து லீனா மணிமேகலையின் 'தீவிர வாசிப்பின்' ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனைவரின் கவிதைகளையும் ஒருவர் வாசித்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ஆனால் கவிஞர்களை மதிப்பிட்டு ஒரு வரியில் தீர்ப்பு சொல்லும் உரிமையை எடுத்துக்கொள்ளும் ஒரு கட்டுரையாளர் தான் மதிப்பிட எடுத்துக்கொண்ட கவிஞர்களின் எழுத்துகளை முழுமையாகப் படித்திருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச தேவை. 

 7. மாலதி மைத்ரி முதற்கொண்டு ரிஷி, சல்மா, சுகந்தி சுப்ரமணியன், வெண்ணிலா, இளம்பிறை, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி என்று ஒவ்வொருவரையும் கூறி அவர்களின் கவியாளுமை இவ்வளவே என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடிகிறது? மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோர் நவீன கவிதையில் தவிர்க்க இயலாத ஆளுமைகளாய் மாறியுள்ளனர்.

 இரா. மீனாட்சி, க்ருஷாங்கினி முதற்கொண்டு இன்றுவரை இயங்கிகொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கவிதை வெளியென்பது அசாத்தியமானது. 'பறத்தல் அதன் சுதந்திரம்' முக்கியமான ஆவணம். 2000க்குப் பிறகு பெண் எழுத்து பன்முகத் தன்மையுடன் தீவிரம் கொண்டது. அந்தத் தீவிரத்தை தாங்க இயலாமல் தமிழ் பண்பாட்டின் காவலர்களால் மிரட்டப்பட்டதும் அச்சுறுத்தப்பட்டதும் அதன் தொடர்விவாதங்களும் (தீராநதி பிப்-2004, மார்ச்-2004) மாலதி மைத்ரி அவர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிற பெண்கவிஞர்கள் எதிர்கொண்டு பேசத் தயங்கிய சூழலில் மாலதி மைத்ரி துணிவுடன் அக்காலகட்டத்தை எதிர்கொண்டவர்.

 குறிப்பாக லீனா மணிமேகலை குறிப்பிடும் அளவீடுகளுக்குள் பெண் எழுத்து உள்ளொடுங்கிப் போகவில்லை. இதைத் தமிழின் தீவிர வாசகர்கள் யாரும் உணர முடியும்.

 'பெண் கவிதைகள் ரணச் சிகிச்சையாகத்தான் இருக்கிறது' என்று சொல்லிவிட்டு பெண்கவிதைக்குப் புத்துயிர்ப்பும் புதிய திசைகளையும் காட்டுபவர்போல் கட்டுரையாளர் பேசியிருப்பது பிற பெண் கவிஞர்களின் ஆளுமையையும் வளர்ச்சியையும் தாங்க இயலாத ஆற்றாமையின் வெளிப்பாடுபோல் தோன்றுகிறது.

 ஞானி, எஸ்.என். நாகராஜன், பிரேம் போன்ற பலரும் மனித விடுதலையென்பது பெண்ணின் விடுதலையால்தான் சாத்தியம் என்று தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான நெறியில்தான் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என்று பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் அமைகின்றன. ரிஷியின் 'காலத்தின் சில தோற்றநிலைகள்', 'அன்பின் பெயரால்' போன்ற படைப்புகள் கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல் துறவை மட்டுமே வழிமொழிந்து கொண்டிருக்கவில்லை. அப்படித்தான் மற்றவர்களின் கவிதைகளும்.

 இதுவரைக்குமான பெண் எழுத்து ஆணாதிக்கச் சமூகத்தை கலைத்துப்போடும் வேலையைத் தீவிரமாகச் செய்வதுடன் இயற்கைக்கும் மனிதருக்குமான உறவை நெருக்கமாக்கி பெண்ணுடலை இயற்கையின் சுதந்திர வெளிபோல் கண்டடைந்துள்ளது. இயற்கையின் எல்லையற்ற வல்லமையை தனக்குரியதாக இயல்பில் பெற்றுள்ளமையை நுட்பமாக முன்வைக்கின்றன. உலகமயச் சூழலும் நுகர்வு மயமும் பெண்ணுடல் மீது விதிக்கிற தொடர் வன்முறைக்கு எதிரான கலகத்தை வன்மையாகப் பேசுகின்றன. இதற்கு மாற்றாக பெண் முதன்மை பெற்ற தாய்வழிச் சமூகத்தை, இயற்கையுடன் மாறுபாடற்று இணக்கமுறும் தன்மையை (நும்பினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே -நற். 172) அழகியலாக்குகின்றன.

 சரியாகச் சொன்னால் மனித விடுதலையென்பதும் ஆணுக்கான விடுதலையென்பதும் பெண் விடுதலையின் வழிதான் சாத்தியமானது என்ற தளத்தில் பெண்கவிதை மையம் கொண்டுள்ளது எனலாம். இதற்கு மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணியின் படைப்புகள் சாட்சியங்கள். இங்கு கட்டுரையாளர் பெண் எழுத்தைப் பற்றி பொதுவான ஒரு மதிப்பீட்டைச் சொல்வதன் வழி இதுவரை நிகழ்ந்த வளர்ச்சியை இருட்டடிப்புச் செய்கிறார் என்பதைவிடவும் தன்முனைப்பைக் கூற விழைகிறார் என்றே தோன்றுகிறது. பெண் எழுத்தைப் பற்றிய இவ்வாறான மதிப்பீடுகள் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட பொதுப்புத்திகாரர்களுக்கு இனிப்பான ஒன்றுதான். அத்துடன் பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை சொல்வதுபோல் லீனா மணிமேகலை சிலவற்றைக் கூற விரும்புவது இதுவரை அவர்கள் செய்த ஆக்கங்கள் பயனற்றவை என்று சொல்ல விழைந்து அந்த வெற்றிடத்தில் தன்னை நிறுவ முயல்கிறார்.

 ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்கவிதை வெளியை மதிப்பிடுவதன்வழி தனது முதிர்ச்சியை காட்டிக்கொள்ள விழைகிறார். அதன் உள்ளீடாக பெண் எழுத்தின் பன்முகத்தன்மையை கவனிக்கத் தவறி தன் அறியாமையை ஆர்ப்பாட்டமாக லீனா முன்வைக்கிறார். மாலதி மைத்ரியின் கவிதையை சுகிர்தராணியின் கவிதையென குறிப்பிடுவதன் மூலம் தனது வாசிப்பின்மையை புலப்படுத்திவிடுகிறார். நிதானமாக பெண்கவிதைகள் குறித்து ஆழ்ந்து வாசித்து எழுதியிருந்தால் லீனா தனது கருத்துகளை மாற்றி எழுதியிருக்கக் கூடும். விமர்சனம் ஆக்கபூர்வ வளர்ச்சியை நோக்கியதாக இருப்பதே நன்று. அதுவே தமிழ் கவிதையின் அடுத்தகட்ட நகர்வாக இருக்க இயலும். தன்னை முன்னிருத்துவதற்காக‌ சில உண்மைகளைத் திரிப்பது ஆரோக்கியமானதல்ல.
  
சான்றுகள்:

பிரேம்-ரமேஷ்.2000. சிதைவுகளின் ஒழுங்கமைவு. பெங்களுர்: காவ்யா.
மாலதி மைத்ரி.2004. விடுதலையை எழுதுதல். நாகர்கோவில்: காலச்சுவடு,
---------------------- 2001. சங்கராபரணி. நாகர்கோவில்: காலச்சுவடு.
---------------------- 2008. நம் தந்தையரைக் கொல்வதெப்படி. சென்னை: புலம்.
குட்டி ரேவதி. 2009. காலத்தைச் செறிக்கும் வித்தை. சென்னை: ஆழி.

- யாழ் அதியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

உட்பிரிவுகள்