ரமணன்,

த.பெ. குணசீலன்,

கிளைச் சிறை முகாம்,

பூவிருந்தவல்லி,

சென்னை - 600 056.

பெறுநர்

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம்.

மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து அகதிகளாக 10.09.2007 அன்று விசைப்படகு மூலம் தமிழகம் வந்து, மண்டபம் அகதி முகாமில் பதிவு செய்து, பின் திருச்சியில் வசித்து வந்தேன். அங்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து என் குடும்ப வாழ்வை நடத்தி வந்தேன். சந்தோசமாகவும் நிம்மதியாகவும் எங்கள் வாழ்வு கழிந்தது. என் மனைவியும் கர்ப்பமானார். இவ்வாறு 7 மாத காலமாக எங்கள் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த வேளையில் எனது நண்பன் விஜ‌யநீதன் என்பவர் தான் வாங்கிய மீன்பிடி உபகரணங்களை தனது வீட்டிற்குக் கொண்டு செல்வதற்காக வாடகை வண்டி ஏற்பாடு செய்து தரும்படி என்னிடம் கேட்டார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு வாடகை வண்டி ஒழுங்கு செய்து, அவரின் அன்பான வற்புறுத்தல் காரணமாக நானும் அவருடன் செல்ல வேண்டி வந்தது. இவ்வாறு அவரின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை 29.07.2008 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திர்ப்பாலைக்குடியில் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜ‌ர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

இரண்டு மாதங்களுக்குப் பின் எனது மனைவி கடன்பட்டு, தன் நகைகளை அடகு வைத்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. நீலகண்டன் என்பவருக்கு பிணையில் எடுப்பதற்காக ஒரு இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து அவரால் ஏமாற்றப்பட்டு பிணையில் வெளிவந்த என்னை மதுரை சிறைவாசலில் வைத்து மீண்டும் க்யூ - பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டேன். நான் முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால் நீதிமன்றத்தால் ஒரு நீதிபதி அவர்கள் 'இவர் பிணையில் வீடு செல்லலாம்' என அனுமதித்தும் திரும்பவும் சிறைவாசலில் வைத்து கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? இவ்வாறு திரும்பவும் சிறையில் அடைப்பதென்றால் எதற்கு நீதிமன்றம் கூட்டிச்செல்ல வேண்டும்? எனக்கு எனது பணம் மிஞ்சியிருக்குமே?

எனக்குத்தான் இந்திய சட்டதிட்டம் எதுவுமே தெரியாது ஏனெனில் நான் ஒரு இலங்கைத் தமிழன். எனக்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது எனத் தெரிந்திருந்தால் எனது கர்ப்பமான மனைவியை நீதிமன்றம், சிறை என மாறி மாறி அலைய வைத்திருக்க மாட்டேனே? எனது பணத்தையும் இழந்திருக்கமாட்டேனே? அவ்வாறு மீண்டும் சிறையில்தான் அடைக்கவேண்டுமெனில் ஏன் பிணை தர வேண்டும்? நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை அவர்கள் அவமதிப்பதென்றால் பேசாமல் என்னை சிறையிலேயே அடைத்து வைத்திருக்கலாமே? நீதிமன்றத் தீர்ப்பு செல்லாது என்று க்யூ - பிரிவு காவல்துறையினர் தாங்கள் சொல்வதுதான் சட்டம் எனில் எனக்கு பிணையில் விடுதலை தந்த நீதிமன்றம் எதற்கு? நீதிபதி எதற்கு? வழக்கறிஞ‌ர் எதற்கு? என்னை சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் தேவை, என்னை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் தேவையில்லையா? இந்திய சட்ட ஒழுங்குகளில் இந்த நடைமுறை எங்கு உள்ளது?

ஒரு சிங்களவனைப் பிடித்து குறைந்தது 3 மாத காலத்தில் சிறையில் அடைத்து பின் விடுதலை செய்து இராஜமரியாதையோடு இலங்கைக்கு வழியனுப்பி வைக்கின்றார்கள். அதே சிங்களவன் பிறந்த அதே நாட்டில்தான் நானும் பிறந்தேன். அவன் சிங்களவன், நான் தமிழன். சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம் என உங்கள் சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா? ஒரு சிங்களவனையே அல்லது வேறு நாட்டுக்காரனையோ இவ்வாறு சிறப்பு சிறையில் அடைத்து வைப்பதில்லையே அது ஏன்? நான் குற்றவாளியா? அல்லது நிரபராதியா என்று நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதற்கு நீதிமன்றம் கூட்டிச்சென்றால்தானே? அவ்வாறு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் குறைந்தது 6 மாத கால தண்டனைதான். ஏன் இவ்வாறு இர‌ண்டு வருடகாலமாக சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? நீதிமன்றம் கூட்டிச்சென்றால்தானே என் வழக்கின் தன்மையும் வழக்கு எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவரும்? இரண்டு வருடகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? இதற்கு என்ன காரணங்கள்?

இந்தியாவிற்குள் பயங்கரவாதியாக நுழைந்தது மட்டுமின்றி மும்பையில் சுமார் 160 பேரை ஈவிரக்கமில்லாமல் நாயை சுடுவதுபோல சுட்டுத்தள்ளிய அஜ்மல் கசாப்பிற்கு சில மாதங்களில் சுமார் ஆயிரத்து நானூறு பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறையில் அஜ்மலை இராஜ மரியாதையோடு நல்லவிதமான சாப்பாடு (மட்டன், சிக்கன்) கொடுத்து வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் இந்தியாவிற்குள் அகதியாக நுழைந்து நிம்மதி பெருமூச்சுடன் என் மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து வந்த என்னை சிறையில் அடைத்து இரண்டு வருடகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

அகதியாக வந்த எனக்கு அகதி பதிவு அட்டை கொடுத்திருந்தும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழக்கு எப்படிபோட முடியும்? ஒரு நாடு ஒருவனை அகதியாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு அகதிப்பதிவு கொடுத்து, தங்க வீடு கொடுத்து உண்ண உணவு கொடுத்து, வேலை கொடுத்து சில வேலைகளில் ஆணோ, பெண்ணோ இங்குள்ளவர்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கொடுத்தும் சட்டம் மட்டும் அயல் நாட்டார் சட்டம் போடுவது ஏன்? உதாரணமாக இந்தியாவின் திருமகள் சானியாமிர்சாவை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக்கிற்கு அயல்நாட்டார் ச‌ட்டம் போடவில்லையே அது ஏன்? அதுவும் திருமணம் முடிப்பதற்கு முன் இந்தியாவின் இன்னொரு பெண்ணான ஆயிசாவை திருமணம் முடித்தவர் அவரை சில நாட்களில் விடுதலை செய்து விட்டது. ஏன் அவருக்கு மட்டும் சட்டங்கள் வித்தியாசமாக இருக்கின்றது?

இங்கே வாழப்பழகி, இங்குள்ள கலாச்சாரத்தில் மூழ்கி இங்குள்ள தமிழகத் தமிழன்போல் மாறிவிட்ட ஈழத்தமிழனுக்கு இங்கு தமிழகத் தமிழனுக்கு போடும் சட்டத்தையே போடலாமே? ஈழத்தமிழனும் நாடு இழந்து, ஊர் இழந்து, உறவுகள் இழந்து, தனது தாய்த்தமிழகம் என்று நம்பித்தானே வருகிறான். ஏன் அவனை பிரிவு காட்டி வேறு சட்டம் போட வேண்டும்? பிறகு எதற்கு மேடைகளிலும், உலக அரங்கிலும் தொப்புள் கொடி உறவு என்று சொல்லவேண்டும்?

ஒரு சிங்களவனுக்கோ, ஒரு பாகிஸ்தானிக்கோ ஒரு ஈழத்தமிழனுக்கோ இந்திய சட்டம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இந்திய சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதா? மாறாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானதா?

நான் செங்கல்பட்டு சிறையில் இருக்கும்போதே எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது என்னவெனில் ஒரு தமிழகத்தமிழன் சிறையில் அடைக்கப்பட்டால் அவனது மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்கு சொந்தபந்தம் இருக்கும்; அவனையும் வந்து பார்ப்பதற்கு உறவுகள் இருக்கும்; வழக்காட உதவிகள் இருக்கும். இந்தியா சட்டதிட்டம் நன்றாகத் தெரியும். குறுகிய காலத்தில் வழக்காடி வெளியே வந்து விடுவான்.

ஆனால் ஈழத்தமிழனாகிய எனக்கு அவ்வாறு இல்லை. நான் அகதியாக வரும்போதே, எனது மனைவி பிள்ளையோடு மட்டும்தான் வந்தேன். உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. இப்படி இருக்கையில் என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தால் என் மனைவி எப்படி வாழ்வார்? அவர் வேலைக்குப் போனால் இரண்டு பிள்ளைகளையும் யார் பார்ப்பது? அவரின் செலவுக்கு என்ன செய்வார்? அவரின் தனிமை பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம்? தெரியாத நாட்டில் 22 வயது நிறைந்த ஒரு இளம் பெண் தன் இருகுழந்தைகளையும் வைத்துக்கொண்டு எப்படி பாதுகாப்போடு வாழ முடியும்?

ஆண்துனை இல்லாமல் வாழ்ந்தால் உடல்ரீதியாக எத்தனைவிதமான வன்சொற்களுக்கு ஆளாக வேண்டி வரும்? குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பார்? தனது இரண்டாவது கைக்குழந்தையை தனது அறுவை சிகிச்சை செய்த உடலோடு எப்படி கவனிப்பார்? இப்படி இரண்டு வருட காலமாக நான் சிறையில் இருந்தால் என் மனைவி தன் வாழ்வாதாரங்களை எப்படி பெற்றுக்கொண்டு வாழ முடியும்?

இங்குள்ள சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாமல் எங்குபோய் யாரைப் பார்ப்பதென்று தெரியாமல் என்னை விடுவிக்க வழி தெரியாமல் ஏமாற்றப்பட்டு, ஏமாற்றமடைந்து மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயன்றவரை என் இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்து என் அன்பான வார்த்தைகளால் தடுத்து வைத்திருக்கிறேன். (அவர் தற்கொலைக்கு முயன்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இலங்கை வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் அவரது இரண்டாவது அண்ணா விமானக்குண்டு தாக்குதலில் இறந்து அவரது தாய், சகோதரர்கள் காணமல் போனது)

இன்னும் எதுவுமில்லாமல் விடுதலைக்கான வழிதெரியாமல் இப்படியே நான் சிறையில் இருந்தால் என் மனைவி எதுவும் செய்துவிடுவாரோ என அஞ்சுகிறேன். இதே காரணங்களை கருத்திற்கொண்டு கடந்த 01.02.2010 அன்று செங்கல்பட்டு கிளைச்சிறையில் இரண்டு வருட காலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும் என் வழக்கில் உள்ள இருவரை (திருமணம் ஆகாதவர்கள், பணவசதி படைத்தவர்கள்) விடுதலை செய்துள்ளனர். ஒருவரை கடந்த ஆண்டு 15 ம் தேதி 7ம் மாதமும் அடுத்தவரை 11ம் மாதமும் விடுதலை செய்துவிட்டனர்.

ஒரே குற்றப்பிரிவு, ஒரே வழக்கு, ஒரே நீதிமன்றம், ஒரே சிறை, ஒரே அறையில் தங்கியிருந்தும் எல்லாம் ஒரே மாதிரி இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. எனக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்றும், எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழுந்தைகள் இருக்கிறதென்றும் ஒரு குழந்தை நோயால் அவதிப்படுவது குறித்தும் என் குடும்பத்துடன் வாழ என் வழக்கில் உள்ள இவரை விடுதலை செய்தது போல் என்னையும் விடுதலை செய்யக்கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தேன். பின் வேலூரில் அடைக்கப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தால் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் பூவிருந்தம‌ல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சாதாரண சிறையில் கூட மரம் செடிகள் இருக்கும்; மண்கூட இருக்கும்; மருத்துவமனைகள் இருக்கும்; நினைத்தவுடன் சிறை அதிகாரிகளைப் பார்க்க முடியும். கைதிகளின் குறைகளையும் அந்த அதிகாரிகள் உடனுக்குடன் தீர்த்துவிடுவார்கள். ஒரே ஒரு குறைதான் இரவு அறைக்குள் பூட்டி காலையி திறந்துவிடுவார்கள். ஒழுங்கு முறையில் வாய்தா சென்று வரலாம். நோய்கூடினால் வெளிமருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரலாம், உறவினர்கள் யாரும் வந்து எளிதில் எந்தக் கைதியையும் பார்த்துவிட்டுச் செல்லலாம். கல்வி வசதிகள் உண்டு. யோகா வகுப்புகள் உண்டு. இன்னும் பல வசதிகள் உண்டு.

இலங்கை கொழும்பில் 4ம் மாடி என்றழைக்கப்படும் கொடூரமான சித்ரவதைக்கூடம் ஒன்று இருக்கின்றது. இதற்குள் அடைக்கப்படுபவர்கள் 40 சதவீதமானவர்கள் தப்பி விடுதலை ஆவார்கள். மீதி கணக்கில் காட்டப்பட மாட்டார்கள் காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கப்பட்டு விடுவார்கள். அந்த 4ம் மாடி சிறைக்கூடத்தில் கூட கணக்கில் காட்டப்பட்டவர்கள் U.N.H.C.R,I.C.R.C மனித உரிமைக்கான அமைப்புகள் வாராவாரம் சென்று பார்வையிட்டு விடுதலையை வலியுறுத்தியும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் வருவார்கள். இது எதுவுமே இல்லாமல் நாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை மிகவும் கொடூரமானது. என்னை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூவிருந்தம‌ல்லி சிறையானது சிறப்பு முகாம் என்ற பேரில் இயங்கும் மறைமுகமான சித்ரவதைக்கூடம் (தயவு செய்து நேரில் வந்து பார்வையிட்டால் புரியும்)

இங்கு நாம் நினைத்தவுடன் வைத்தியம் செய்ய முடியாது, நினைத்தவுடன் சமையல் பொருட்கள் வாங்க முடியாது, நினைத்தவுடன் எமது உறவினர்கள் வந்து பார்வையிட முடியாது. இந்த சிறையானது இராஜீவ் காந்தி கொலையாளிகளுக்காக விசேடமாக வடிவமைத்து கட்டப்பட்டது. வெறும் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 26 பேருக்காக கட்டப்பட்டது. மேற்பரப்பு முழுவதும் கம்பிகளால் மூடப்பட்டுள்ளது. கம்பிகளுக்கு ஊடாகத்தான் வானத்தைப் பார்க்க முடியும். ஒரு பிடி மண்கூட இல்லை. நில‌ப்பரப்பு ழுமுவதும் சிமெண்ட் பூச்சால் பூசப்பட்டு தரை வைக்கப்பட்டுள்ளது. மரம் செடி எதுவும் கிடையாது. நிழல் என்று ஒதுங்குவதற்கு எதுவும் கிடையாது. குறுகிய இடத்திற்குள் 20 அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளதால் காற்றுக்கூட உள்ளே வராது.

இப்போது வெயில் காலம் என்பதால் வெப்பத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை மேல் கம்பிகளிலும், கட்டிடங்களிலும் பகல் நேர வெப்பமானது தேங்கி கிடந்து இரவு முழுவதும் அந்த வெப்பத்தை வெளியேற்றிக் கொண்டு இருக்கும். இதனால் இங்குள்ள 19 பேருக்கும் வியர்வை, பரு உண்டாகி மிகவும் எரிச்சலுடன் வாழ்கின்றோம்.

2000 பேர் அடைக்கப்பட்ட சாதாரண சிறையில் கூட ஓர் அடுக்கு பாதுகாப்பு. இங்கு 19 பேருக்கு மட்டும் 4 அடுக்கு பாதுகாப்பு. நான் முக்கியமாகக் குறிப்பிடுவது என்னவெனில். எனக்கு செங்கல்பட்டு சிறையில் காவல் துறையினர் அடித்த கண்டல் காயம் தலையிலும், காலிலும், கையிலும் இருப்பதால் கடந்த மாதம் வட்டாட்சியர் திரு. வள்ளிமுத்து அவர்களிடம் என்னை மருத்துவமனை கூட்டிச்சென்று சிகிச்சை பெற அனுமதி கேட்டிருந்தேன் ஆனால் ஒரு மாதகாலம் மேலாகியும் அனுமதி தரவில்லை. இந்த சிறையிலும் மருத்துவ வசதி அறவே இல்லை. என் தலையில் வலி உள்ளதால் அடிக்கடி சாப்பிடும்போதும் பல்துலக்கும்போதும் மிகவும் வலி எடுப்பதால் தாங்க முடியாமல் மீண்டும் சென்னை அரசு மருத்துவமனை கூட்டிச் சென்று சிகிச்சை பெற 15.04.2010 அன்று வட்டாட்சியரிடம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அதற்கு அனுமதி தரவில்லை. என் தலைவலி தாங்க முடியாத வலியாக இருப்பதால் 15.04.2010 அன்றைய தினமே எனக்கு விஷ‌ம் வாங்கித்தரும்படி  மனு கொடுத்திருந்தேன்.

இவ்வாறு இருக்கையில் 16.04.2010 அன்று RA ஆன விஷயகுமார் என்பவர் எமது முகாமிற்கு சம்பளம் கொடுக்க வருகைதந்தார் அவரிடம் என்னை ஏதாவது ஒரு மருத்துவமனை செல்ல அனுமதி வாங்கித் தரும்படி கூறினேன் அவரோ சர்வசாதாரணமாக க்யூ - பிரிவு காவல்துறையினருக்கு எழுதி அனுமதி கேட்டிருக்கின்றோம். அவர்கள் அனுமதி தந்தவுடன் கூட்டிச் செல்கின்றோம் என கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பின் சில அதிகாரிகளிடம் தயவுடன் கேட்டால் திரும்பவும் என் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுகின்றார்கள். இவர்கள் மாறி மாறி சொல்லி அனுமதி தர ஒரு மாத கால அவகாசம் தேவையா? அமெரிக்கா வெள்ளை மாளிகைக்குகூட எழுதிப்போட்டால் இதுவரைக்கும் பதில் வந்துவிடும். ஐயா நன்றாக சிந்தித்துப் பாருங்கள்... உயிர் போகும் நிலையில் ஒரு வருத்தம் (நோய்) முற்றினால் இவர்கள் அனுமதி தரும் கால அவகாசம் வரை எமது உயிர் எம் உடலில் இருக்குமோ என்பது சந்தேகம்தான்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய எம்மை சிறப்பு முகாம் என்ற போர்வையில் திரும்பவும் அடைத்து வைத்துள்ளார்கள். சாதாரண சிறையை விட மிகவும் கொடூரமான இம்முகாம் எப்படி சிறப்பு முகாமாகும்? சிறப்பு சிறை என்று வைத்திருக்கலாமே! இச்சிறை பற்றியும் எம் வழக்கின் தன்மைகள் பற்றியும் “தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின்” செயலர் திரு.பா.புகழேந்தி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எமக்காக எமது அத்தியாவசிய தேவைகள் குறித்தும், எமது மனித உரிமைகள் குறித்தும் அடிக்கடி குரல் கொடுத்து மனிதாபிமான ரிதியில் பல உதவிகள் புரிவதும் தமிழக மக்கள் உரிமைக்கழகத்தின் செயலர் திரு.பா.புகழேந்தி அவர்கள்தான் எமது பல வழக்குகளை வாதாடி வருகின்றவர். எம்மைப் பற்றியும் எம் வழக்குகள் பற்றியும் எமது சிறை பற்றியும் நிறைய தெரிந்திருப்பவர்.

மிருகங்களுக்காக “மிருக வதை தடுப்புச்சட்டம்” இருக்கின்றது. மிருகங்களை துன்புறுத்தினால் கூட “புளுகிராஸ்” என்ற அமைப்பு தட்டிக்கேட்கும். சாதாரண சினிமாவில் கூடி நடிப்பு என்று தெரிந்தும் மிருகங்களை துன்புறுத்துவதாக மிருகங்களுக்காக குரல் கொடுக்க நிறைய அமைப்புகள் இருக்கின்றன. இதே போல் “மனித வதை தடுப்புச்சட்டம்” என்று ஏதாவது இருந்திருந்தால் நான் மட்டும் அல்ல ஈழத்தில் இறுதியுத்தத்தில் என் இன மக்களே பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

இறுதியாக நான் கேட்பது என்னவெனில், ஈழத்தமிழன் எந்த தமிழ் தெரியாத நாட்டிற்கு அகதியாக சென்றாலும் அந்தந்த நாடு ஈழத்தமிழனுக்கு குடியுரிமை கொடுக்கிறது. ஆனால் தமிழ் தெரிந்த தமிழகத்தில் மட்டும் குடியுரிமை கொடுக்காமல் மறுப்பது ஏன்? சாதாரண வழக்கைக் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் பிணையில் வந்தும் பல வருடங்களாக சிறையில் அடைத்து குடும்பத்தை பிரிந்து வாழவியலை சீரழித்து கணவன் சிறையில் பல வருடங்களாக வாழ்வதால், வெளியில் பிரிந்திருக்கும் மனைவியானவள் யாரும் உறுதுணை இல்லாததால் பல உடலியல் ரிதியான உபத்திரங்களுக்கு, உள்ளாகி மனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார்கள். வேறு சிலர் சொல்ல முடியாத பல பிரச்சனைகளால் விவாகரத்து செய்துள்ளார்கள்.

அகதியாக சகலவற்றையும் இழந்து பல வருடங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கண‌க்கான ஈழத்தமிழர்களுக்கு அண்மையில் தமிழக அரசு ஒதுக்கிய நிதி 100 கோடி. பல கோடிகள் சம்பாதித்து பல சுகங்கள், பல புகழ்கள் கண்டு மக்களுக்காக எந்தவித சேவையும் செய்யாமல் (நடிகர் லாரன்ஸ் தவிர்த்து) சமுதாயத்தை சீரழிக்கும் சினிமாத்துறையினருக்கு அண்மையில் தமிழக அரசு ஒதுக்கியிருப்பதோ பல நூறு கோடி. இந்தப் பாகுபாடுகள் பார்க்கும் நிலையில் இந்தத் தமிழக அரசிடம் நாம் எதையும் எதிர்பார்த்து நிற்பதில் எந்தப் பலனும் இல்லை. ஆகவே மனித உரிமைக்காகப் போராடும் உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன்.

செங்கல்பட்டு முகாமில் 02.02.2010 அன்று நடந்த சம்பவத்தை உற்று நோக்கினால், சட்ட நிபுணர்களே கேலிக் கூத்தாய் சிரிப்பார்கள். இப்படியொரு கேவலம் சர்வாதிகார இலங்கை அரசுகூட செய்யாது. ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் 4 அடுக்கு பாதுகாப்பிற்குள் மொத்தம் 33 இலங்கை அப்பாவித்தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சில பேரின் குடும்பம் தமிழகத்திலும், சில பேரின் குடும்பம் இலங்கை வன்னியில் நடந்த யுத்தத்தில் இறந்தும் காணாமல் போயும் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாமலும் மன ரிதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள். செங்கல்பட்டு சிறையில் 99 பேர் அடைக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டும் 33 ஆக குறைக்கப்பட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை நினைவில் வைத்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரியும் விடுதலையானவர்கள் போல் எங்களையும் விடுதலை செய்யக் கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர் (அன்று நானும் இருந்தேன்) எதையும் பேசித்தீர்க்காமல் அடித்து தாக்கி காயப்படுத்தியது மட்டுமல்லாமல் கொலை வழக்கு போட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.. சிறையில் அடைக்கப்பட்டு மனரீதியாக பாதிக்கப்பட்டு எதையுமே செய்ய இயலாத நிலையில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்தவர்களால் எப்படித் திருப்பி தாக்க முடியும்? 33 அப்பாவி ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் சம்பவம் நடந்த அன்று அனைவரும் ஒரே இடத்தில் நிற்பதற்கு சாத்தியம் இல்லை. மாலை 7 மணி என்பதால் சமையல் வேலையில் சிலரும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு சிலரும், காரம் போர்ட் விளையாட்டில் சிலரும், உறங்கிய நிலையில் சிலரும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒவ்வொருவரும் இவ்வாறு இருக்கையில் சம்பவம் நடந்த அன்று அந்த நேரத்தில் எதிர்பாராத வேளையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் கண்களில் பட்டதோ வெளிமுற்றத்தில் நின்ற ஒரு சிலர்தான். அதுவும் நிராயுதபாணிகளாக....

ஏற்கனவே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தும் நாம் ஏதாவது வன் முறையில் ஈடுபட்டாலோ திருப்பி ஏதாவது செய்தாலோ தப்பி ஓடவே முடியாது எனறு தெரிந்தும் அந்த ஒரு சிலரால் நன்றாகப் பயிற்சி எடுத்து அதிகாரமுள்ள அதுவும் துப்பாக்கிகள் உருட்டுக்கட்டைகளுடன் சுமார் 150 பேருடன் வந்திறங்கிய காவல்துறை அதிகாரியான ASP சேவியர் தன்ராஜ் என்பவரை நாம் எப்படி திருப்பித் தாக்கியிருக்க முடியும்? இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூட 30.03.2010 அன்று எமது பக்கமே நியாயமானது என்றும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு அன்றைய தினமே ஒரு மாதகால அவகாசத்தில் வழங்குமாறு செங்கல்பட்டு J.M ‍ 1 நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது.

21.04.2010 அன்று எமது முகாமில் 12 மணி நேர கடமையில் இருந்த காவல் அதிகாரியிடம் எனக்கு தலையில் வலி அதிகமாக உள்ளது. மருத்துவமனை கூட்டிச்செல்லும்படி கேட்டிருந்தேன். அவரோ எமக்கு பொறுப்பாக இருக்கும் வட்டாட்சியரின் உதவியாளரான R.A (விஜ‌யகுமார் அவர்கள்) என்பவருக்கு தொலைபேசியில் தெரிவித்து மருத்துவமனை கூட்டிச்செல்ல ஒழுங்கு செய்யும்படி அறிவித்தார் ஆனால் R.A மாலை 5 மணிக்கு வருவதாக அறிவித்தும் பின் வரவே இல்லை. நான் மட்டும் அல்ல 8 பேர் சிகிச்சைக்காக அனுமதி கேட்டு 1 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள். எமக்கு சிகிச்சை பெற வழியேதும் தெரியவில்லை. சிகிச்சை பெறாமல் போனால் எதிர்காலத்தில் என் தலையில் ஏதாவது பிரச்சனையாகிவிடுமோ என அஞ்சுகிறேன.

சிகிச்சைக்கான நியாயமான வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் உங்களுக்கு எழுதி எனக்கு, என்னுடன் உள்ளவர்களுக்கும் சிகிச்சை பெற வழி அமைத்துத் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு வருடகாலமாகியும் எந்தவித வழியும் தெரியாமல், என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ முடியாமலும் என்மனைவி பிள்ளைகள் தமது வாழ்வினை மேற்கொண்டு நடத்த முடியாமல் மிகவும் வறுமையோடு தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள். என் மனைவி பிள்ளைகள் சீரழந்து கஷ்டப்படுவதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்று கூறினால் அந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன். ஆகவே இந்த தேவையில்லாத வழக்கில் இருந்து என்னை விடுவித்து சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய என்னுடன் என் மனைவி பிள்ளைகள் சேர்ந்து வாழ வழிவகை செய்து தருமாறும் என் வழக்கு முடிந்தவுடன் என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் திரும்ப எனது நாட்டிற்கே அனுப்பி வைக்க உதவி செய்யுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கிருந்து கொண்டு இலங்கை வவுனியாவில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு தொண்டை கிழிய கத்தி அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசாங்கம் தனது நாட்டில் உறவுகளைப் பிரிந்து தனிமைப்படுத்தி குடும்பத்தை சீரழித்து முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு பூந்தமல்லி சித்ரவதைக் கூடங்களை எப்போது அகற்ற போகிறது?

ஒரு ராஜீவ் காந்தி கொலையை வைத்து அதன் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காமல் (ஜெயின் கமிமூன் அறிக்கையை விசாரிக்காமல்) ஒட்டு மொத்த ஈழத் தமிழர்கள் அனைவரையும் அதே கண்ணோடு பார்க்கும் இந்திய அரசாங்கம் எப்போது எங்களையும் சக மனிதர்களாக பார்க்கப்போகின்றது ?

இராஜீவ் காந்தியை கொன்றவர்கள் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்றால் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் அதே கண்ணோடு பார்க்க வேண்டியதுதானே? ஏன் தமிழர், சிங்களவர் என்று பார்க்க வேண்டும்? அப்படி பிரித்து பார்ப்பதென்றால் குற்றத்திற்குரியவர்களை மட்டும் பார்க்க வேண்டியதுதானே?

திரு. இராஜீவ் காந்தி அவர்கள் இலங்கை சென்று கொழும்பில் இராணுவ வீரனால் துப்பாக்கியின் பின் பக்கத்தால் தலையில் தாக்கப்பட்டார். அப்போது இராஜீவ் காந்தி அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்குமானால் இன்று இந்திய அரசாங்கம் இலங்கையையே வெறுத்து ஒதுக்கியிருக்குமா? தாக்கிய சிங்கள இராணுவ வீரனோ ஒருசில மாதத்தில் விடுதலையாகிவிட்டான்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகிய என்னை சிறப்பு முகாம் என்று அடைத்து வைத்துள்ளார்களே அவ்வாறெனில் இந்த சிறப்பு முகாமில் என் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கலாமே? அவ்வாறு அனுமதி இல்லையென்றால் அது எப்படி சிறப்பு முகாம் ஆகும்? இதுவும் ஒரு சிறைதானே?

சிறை என்று வைத்துக்கொள்வோமே... அவ்வாறெனில் ஒழுங்காக தவணை முறையில் வாய்தா அழைத்துச் செல்லலாமே, இல்லை முகாம் என்றால் குடும்பத்துடன் வாழ அனுமதிக்கலாமே. இது இரண்டுமே இல்லையென்றால் இந்த முகாம் எந்த வகையில் சேரும்?

ஆடு மாடுகளைக் கூட பட்டியில் அடைத்தால் பகல் முழுவதும் திறந்து விடுவார்கள். நல்ல விதமான சாப்பாடு கொடுப்பார்கள். காயங்கள் ஏற்பட்டால் மருத்துவம் கூட செய்வார்கள். அதுவும் ஆடு மாடுகளுக்குக் கூட இவ்வாறு இருக்கையில் நாம் இவைகளை விட கீழானவர்களா?

இக்கடிதம் உங்களுக்கு எழுதுவதால். எனக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து மேலும் பல வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைத்து அல்லது இங்கு விடுதலையாகாமல் இலங்கைக்கே திருப்பி அனுப்பி என் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

சில வேலைகளில் வெளியில் திருச்சியில் தங்கியிருக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது நேரக் கூடுமானால் அதற்கும் அவர்களே பொறுப்பாவார்கள்.

நன்றி.

இவ்வண்ணம்

தங்கள் உண்மையுள்ள

(கு. ரமணன்)