கடந்த 15 ஆண்டுகளாக இடஒதுக்கீடு விவாதம் நாடு முழுவதும் உச்ச கட்டத்தில் நடைபெற்று வந்தபோதும் - Anuradha Mohith இயலாதோருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள், இதில் நூறில் ஒரு பங்குகூட நடைபெற்றதில்லை. அன்றாட நடைமுறை வாழ்க்கையில், குறிப்பாக பேருந்துகளிலும், பொது இடங்களிலும், இயலாதோருக்கான இடங்களைத் தாமாகவே முன்வந்து அளிக்க யாரும் முயலுவதில்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இயலாதோருக்கென "தனி வழி' ஏற்பாடு செய்யப் படுவதில்லை. மிக முக்கியமாக சமூக சமத்துவத்தை நிலைநிறுத்த, கல்வி நிறுவனங்களில் இம்மக்களுக்கான இடஒதுக்கீடு, நியாயமாக நிறைவேற்றப்படுவதில்லை.

இவ்வாறாக, இயலாதோரின் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அதற்கானத் தீர்வுகள் குறித்து, இந்திய அரசின் "இயலாதோருக்கான தலைமை ஆணைய'த்தின் துணை தலைமை ஆணையராகவும், "பார்வையற்றோருக்கான தேசிய சங்க'த்தின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அனுராதா மொகித், இங்கு விரிவாகப் பேசியுள்ளார். "இயலாதோர் உரிமைக் குழு'வின் நிறுவன உறுப்பினராகவும் இருக்கும் அனுராதா அவர்கள், அய்க்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் குழுவின் உலகப் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

"இந்து' ஆங்கில நாளேட்டில், சித்தார்த் நாராயணனுக்கு அவர் அளித்த பேட்டியை இங்கு வெளியிடுகிறோம். தமிழில்: அமிழ்தினி

இந்தியாவில் இயலாதோர் (Disabled) எத்தனை பேர் இருக்கின்றனர்?

2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 2 கோடியே 19 லட்சம் இயலாதோர் இருக்கிறார்கள். ஆனால், இது ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளிவிவரமாக இல்லை. ஏனெனில், "உலக நலவாழ்வு அமைப்பு' (World Health Organisation) அளித்துள்ள தகவல்களின்படி, உலகின் மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவிகிதம் பேர் இயலாதோராக இருக்கின்றனர். ஆசிய பசிபிக் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியா, தமது மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர் இயலாதோராக இருப்பதாக அறிவித்துள்ளது. நியூசிலாந்தில் இயலாதோர் எண்ணிக்கை 19 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் மிகவும் குறைந்தளவாக 2.19 சதவிகிதம் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாடும் "இயலாதோர்' என்பதற்கு எந்தவிதமான வரையறையை அளிக்கிறது என்பதைப் பொறுத்தே புள்ளிவிவரங்கள் அமைகின்றன. இதில் பெருமளவுக்கு பண்பாட்டு வேறுபாடுகளால், இயலாமை குறித்த கேள்விகளை மக்களிடம் கேட்பதைப் பொறுத்தும் புள்ளி விவரங்கள் மாறுபடுகின்றன. பொதுவாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, ஒரு குடும்பத்தில் இயலாதோர் இருக்கின்றனரா என்று கேள்வி கேட்பது, பண்பாட்டு ரீதியாக நல்லதல்ல என்று கருதுவதே கணக்கெடுப்பாளர் தயங்குவதற்குக் காரணமாகும்.

இயலாமையைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்வதில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வெற்றியே அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, கிராமங்களில், குறைந்த அளவிலிருந்து மிதமான அளவிலான இயலாமை, கவனத்தில் வருவதே இல்லை. பண்பாட்டு ரீதியாக இயலாமை எப்படி கட்டமைக்கப்படுகிறது, புரிந்து கொள்ளப்படுகிறது, ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தே - பிற பெரும்பாலான விஷயங்களும் அமைகின்றன. மனநலப் பிரச்சினை போன்ற சில இயலாமைகளை மக்கள் மறைக்கப் பார்க்கின்றனர். இருப்பினும், தற்போதைய புள்ளிவிவரங்கள் அலட்சியப்படுத்தக் கூடிய அளவிலானவை அல்ல.

இயலாதோர் சட்டம் நிறைவேற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இச்சட்டம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இயலாதோர் தொடர்பான சட்டம், பொருளாதார, சமூக உரிமைகளைப் பற்றியது. இதை விரைவாக நடைமுறைப் படுத்தினால்தான் குறிப்பிட்ட கால எல்லைக்குள் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியும். ஆனால், கெடுவாய்ப்பாக, சட்டத்தின் சில முக்கிய பிரிவுகளை நடைறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக, பொது இடங்களிலும், பணியிடங்களிலும் இயலாதோர் இயங்குவதற்குத் தடையற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், கெடுவாய்ப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இது நடைறைப்படுத்தப்படுகின்றது. இயலாதோர் இயங்குவதற்குத் தடையற்ற சூழலை உருவாக்குவதில் மாநில அரசுகள் குறிப்பாக, உள்ளாட்சி நிர்வாகம் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், அவை தங்கள் சட்டதிட்டங்களில் போதிய மாற்றங்களைச் செய்ய முன்வரவில்லை. இயலாதோர் ஆணையம், கடந்த மூன்றாண்டுகளாக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை சந்தித்து, பரிந்துரைகளை அளித்தபிறகுதான், பத்து மாநில அரசுகள் சில முன்முயற்சிகளை எடுத்து வருகின்றன. அண்மையில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான ஒரு பொதுநில வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

நாம் கவனமே செலுத்தாத மற்றொரு முக்கிய பகுதி, கல்விக்கான உரிமை. குழந்தைகளில் இயலாதோர் எண்ணிக்கை, பிற குழந்தைகளைப் போலவே வெவ்வேறாக உள்ளது. மற்ற குழந்தைகளைப் பொருத்தவரை, பள்ளிக்கூட அமைப்பைத் தேர்வு செய்யும் முறை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், இயலாத குழந்தைகளைப் பொறுத்தவரை, அரசும் ஆசியர்களுமே அக்குழந்தைகள் எத்தகைய கல்வியைப் பெற வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். இதை அக்குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும். கல்வி பெறுவதைப் பொறுத்தவரை, இச்சட்டம் முழுமையானது; உரிமைகளை உள்ளடக்கியது. ஆனால், இது நடைறையில் முழுக்க முழுக்க மருத்துவ முன்மாதியைப் போலவே பின்பற்றப்படுகிறது.

இச்சட்டத்தின்படி, அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்களில் இயலாதோருக்கு மூன்று சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

இயலாதோர் சட்டத்தில் உள்ளபடி மூன்று சதவிகித இடஒதுக்கீடு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்திவிட்டன. ஆனால், இயலாதோரின் சமூக சமத்துவத்திற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து கல்வித் துறை எவ்வித உணர்வுமின்றி, மோசமாக நடந்து கொள்கிறது. மூன்று சதவிகித இடங்களை இயலாதோருக்கு அளிப்பதன் மூலம், அவர்களுடைய கல்வி நிறுவனங்களின் திறன் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாது என்று அய்.அய்.டி. நிறுவனங்களுக்குப் புரிய வைப்பது மிகவும் கடினமாக இருந்தது. பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரி, பார்வை குறைந்த ஒரு மாணவரை சேர்க்க மறுத்து விட்டது. பாதிப்புக்குள்ளான இந்த மாணவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பளித்தது. "கேந்திர வித்யாலயா' பள்ளிகளில்கூட, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

தற்பொழுது இயலாதோருக்கான இடஒதுக்கீடு, பெரும்பாலான மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், அய்.அய்.எம். களிலும், மருத்துவ மற்றும் மருந்தியல் கல்லூரிகளிலும் இயலாதோருக்கான இடஒதுக்கீடு நடைறைப்படுத்தப்படுகிறது. ஆனால், தன்னாட்சி நிறுவனங்களிலும், மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதற்கான காரணம், இச்சட்டப்படி உள்ள மாநில ஆணையர்கள், இளநிலை அலுவலர்களாக கூடுதல் பொறுப்பு வகிப்பதேயாகும். இவர்கள், நிர்வாகத்தில் தங்களைவிட உயர்நிலையில் உள்ள அலுவலர்களுக்கு இடஒதுக்கீட்டை நிறைவேற்றும்படி ஆணையிடத் தயங்குவதே காரணமாகும். மாநில ஆணையர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும் எனில், இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும்.

இச்சட்டப்படி, அரசு நடத்தும் மற்றும் நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களில், இயலாதோருக்கு மூன்று சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா?

அரசு நடத்தும் மற்றும் நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களில், இயலாதோருக்கான இடஒதுக்கீடு 1977 ஆம் ஆண்டே ஒரு செயல்முறை ஆணை மூலம் நடைமுறைக்கு வந்தது. இயலாதோருக்கான சட்டம் இதை மேலும் பலப்படுத்தியது. ஆனால், என்ன நடக்கிறது எனில், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, வேலைக்கு அமர்த்துபவரின் மனநிலையே தடைக்கல்லாக இருக்கிறது. இந்தச் சட்டத்திலும் குறைபாடுகள் உள்ளன. இயலாதோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்பதில், நிர்வாக ரீதியாக சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் (அரசு அல்லது அரசு ஆதரவு), செயலாளர்கள் அடங்கிய ஒரு குழுவின் முன்பு, இயலாதோரை பணியில் நியமிக்க முடியாததற்கான காரணங்களைச் சொல்லி ஒத்துக்கொள்ள வைத்துவிட்டால், அந்நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.

நான், இயலாதோருக்கான தலைமை ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையராக இருந்த காலத்தில், மூன்று சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றாத நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு வேண்டும் என்று கேட்பதற்கு, ஒரே மாதிரி மோசடியான காரணங்களையே கூறின. இது, மிக ஆழமான அளவுக்கு இனம் தெரியாத வெறுப்புணர்ச்சி இருப்பதையே காட்டுகிறது. இயலாதோரை எந்தப் பணியும் செய்வதற்கு லாயக்கற்றவர்களாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இயலாதோருக்கான இடஒதுக்கீடு, தனியார் துறைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

கண்டிப்பாக. ஒருங்கிணைக்கப்பட்ட பணிகளில் இன்றைக்குச் சில இயலாதோர் பணியாற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதில் பெரும்பான்மையினர், இடஒதுக்கீட்டின் மூலமே வரமுடிந்தது. நிறுவனங்களின் மீது அரசு ஏறக்குறைய இதைத் திணித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பொதுத்துறை பணிகளுக்குக்கான வாய்ப்புகள் சுருங்கிவிட்டன. இதுவரை இருந்ததைவிட இனிவரும் காலங்களில், இயலாதோருக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

பிற நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. பாகிஸ்தானில் தனியார் துறையில் இயலாதோரை நியமிக்கும் வகையில் ஊக்குவிக்க சில சிறப்பு ஏற்பாடுகளை அரசே செய்துள்ளது. ஒரு தனியார் நிறுவனம் தேவையான சதவிகித அளவுக்கு இயலாதோரை நியமிக்கவில்லை எனில், நிறுவன நிதிக்கென அத்தொகையை செலுத்திவிட வேண்டும். இந்நிதி பயிற்சித் திட்டத்திற்கும், வேலைவாய்ப்பற்றோருக்கு உதவி அளிப்பதற்கும், மற்றவைகளுக்காகவும் பயன்படுகிறது. இது மிகச் சிறப்பானதொரு முன்மாதியாக விளங்குகிறது. ஆனால், கிராமப்புறத்தில் உள்ள இயலாதோருக்கான வேலைவாய்ப்புதான் மிகவும் கடினமான சவாலாக இருக்கிறது. இதில் நாம் மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ளோம். கிராமப்புறங்களில் இயலாதோருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், வறுமை ஒழிப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் ஒருசதவிகித அளவுகூட நாம் எட்டவில்லை.

Anuradha Mohith
இயலாதோரைக் குறிக்க எந்த வகையான சொல்லாடல் சரியானதாக இருக்கும்?

‘இயலாத மக்கள்' என்ற சொல்லே பெரும்பாலும் சட்டம் மற்றும் கொள்கை அளவில் பயன்படுத்தப்படுகிறது. நம்டைய சரிபகுதி ஆற்றல், சரியான சொல்லைத் தேர்ந்தெடுப்பதிலேயே செலவழிக்கப்படுகிறது. இது, தேவையற்றது என்றே நான் கருதுகிறேன். என்னைப் போன்ற இயலாதோரைக் கேட்டால், இயலாத மக்கள் என்று அழைக்கப்படுவதிலேயே மகிழ்ச்சி அடைகிறோம். அரசியல் ரீதியான புரிதலிலும், ‘இயலாத மக்கள்' என்பதே சரியானதாக இருக்கும். இதன் உள்ளார்ந்த பொருள் என்னவெனில், எங்களால் எதுவும் செய்ய இயலும்; ஆனால், சில புறச்சூழல்களால் அது இயலாததாக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குப் பத்து வயதில் பார்வை இல்லாமல் போனது. தனிப்பட்ட அளவில் உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?

ஒரு பெண்ணாகவும், இயலாதோராகவும் இருந்தால் நீங்கள் அதிகளவு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நமக்கு எதிரான சூழலில், உங்களுடைய அன்றாட அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. ஒரு பேருந்தில் ஏறுவதுகூட, இமயமலையில் ஏறுவதைப் போன்று கடினமானது. நான் பங்கேற்கும் செயல்முறைக் கூட்டங்களில்கூட, ஒரேயொரு செயல்திட்ட அறிக்கைகூட, ‘பிரெய்ல்' மொழியில் அச்சிட்டுத் தரப்படுவதில்லை. ஒருவருடைய வெற்றி என்பது, அவருக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளைப் பொறுத்ததாகும். பார்வையின்மை ஒரு பிரச்சினை அல்ல; மற்றவர்களின் அணுகுமுறையே பிரச்சினை.


பழங்குடி மாணவர்களின் ‘கண்கள்'

கலையும், திறமையும் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அதை வெளிப்படுத்தும் விதத்திலும், காட்சிப்படுத்தும் வகையிலும் கலைஞனின் உணர்வு மட்டுமின்றி, புறச்சூழல்கள் காரணங்கள் யாரை முன்நிறுத்துகிறதோ, அவர்களே வெளிச்சத்திற்கு வருகிறார்கள். கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை, முதலில் நேரடியாக ஆதிக்க சாதியினர் அனுபவித்து விட்டு பல ஆண்டுகள் கழித்தே பிறர் அனுபவிக்கும்படியான சமூக, அரசியல் நடைமுறைகள், இன்னும் புழக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வெற்றி மலையில் உள்ள ‘ஏகலைவா முன்மாதிரிப் பள்ளி' பழங்குடி மாணவர்கள், ‘டிஜிட்டல்' புகைப்படக் கலையைக் கற்றுக் கொள்ளும் வகையில் பழங்குடியினர் நலத்துறையும், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியும் இணைந்து பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. பத்து நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் பதிப்புக்கலை, களிமண் சிற்பம், சாயம் போடுதல், புகைப்படக் கலை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பழங்குடி நலத்துறை ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் மற்றும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் சந்ரு ஆகியோர் இப்பட்டறையை முன்னின்று நிடத்தினர்.

புகைப்படக் கலைப்பயிற்சியை, ‘காஞ்சனை' திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ‘காஞ்சனை' மணி, ஆர்.ஆர். சீனிவாசன், குட்டி ரேவதி மற்றும் ஓவியக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் அளித்தனர். மாணவர்கள் மிக நுட்பமாகத் தங்களுடைய பயிற்சியினைப் பெற்றுக் கொண்டனர். ஆங்கில அறிவு, வழக்கமான கல்வி முறை, நகரங்களின் பாதிப்பு ஆகியன இல்லாத பழங்குடி மாணவர்கள், தங்களுடைய தனித்துவமான பார்வை மூலம் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். இதற்கு அவர்களுடைய படைப்புகளே சான்று பகர்கின்றன. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் நுண்கலைப் பயிற்சிகள், அவர்களுடைய தனித்த வாழ்வியலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை என்பது கண்கூடு.
Pin It