பாடல்கள் நவீன சினிமாக்கள் பொறுத்த வரை லாஜிக் இல்லாதவைகள் என்று கூறும் ஒரு பொத்தாம் பொது கருத்துக்குள் நானும் இருப்பதில் காலத்தின் கட்டாயம் என்று எல்லாரையும் போல நம்பும்  அதே நேரம்...பாடல்கள் தவிர்த்து தமிழ் சினிமாவை ஒரு கணம் யோசிக்கையில்...அது உலக சினிமாவிடம் போட்டியிடும் ஒரு யுத்த நூதனமே என்றபோதிலும்... ஏதோ ஒன்று மிஸ் ஆவதை நான் உணருகிறேன்.

பாடல்கள் சரி. அதற்கு இசை எங்கிருந்து வருகிறது என்று புத்திசாலித்தனமாக கேட்கும் உலக சினிமாவின் ரசிகன் என்ற போதிலும்...பாட்டு பாடி ஒரு குடும்பத்தை கண்டு பிடித்த அந்த கால சினிமாவின் ருசியை மறக்க முடியுமா....? சிறுவயதில் பாடிய பாடலை வளர்ந்த பின் பாடி காதலிக்கு தன்னை அடையாளம் காட்டும் கலர் கலர் காட்சிகளை தாண்டி தானே அகிராவையும் நோலனையும் கண்டடைந்தோம்.  தான் பாடிய பாடலை வேறோர் இடத்தில் கதை நாயகன் பாட அதை தேடி  நாயகி ஓடி வரும் போது விசிலடித்து சீட்டின் நுனிக்கு வந்த சினிமாக்களை தரமில்லாத சினிமா என்று கூறி விட முடியுமா...?

sivaji padmini

"உடலும் உள்ளமும் நலம் தானா" என்று பாடலின் நிரவைகளில் தலையாட்டி உள்ளம் பூரிக்கும் மொழியை இன்றும் நினைவு கூர்கிறேன். பாடல் மனிதனுக்கு கருவறை முதல் கல்லறை வரை உடன் வரும் கருவி. கடவுளையே இசைக்குள் அவதானித்த கூட்டம் தானே நாம். பாடலே வேண்டாம் என்றால் எப்படி. இளையராஜா இல்லாத 80 களின் ஒரு நாள் இரவை யோசித்துப் பாருங்கள். அது பாலையின் நிறமற்ற பூத்து குலுங்குதலின் மரணமாகவே இருக்கும். அவரவர் நாட்டுக்கு, ஊருக்கு தகுந்தாற் போல படங்கள் வரத்தான் செய்யும். நாம் நம் ஊருக்கு தகுந்தாற் போல பாடங்கள் எடுப்பதில்.... பார்ப்பதில்... விவாதிப்பதில்....தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. பாடல்களை குறைப்பதில்... அல்லது மொத்தமாக எடுத்து விடுவதில் ஒரு நல்ல தமிழ் சினிமாவை நாம் கண்டடைந்து விடுவோம் என்று நான் நம்பவில்லை. அதே நேரம் தேவைக்கு பாடல் வைத்து... கதையை மையப்படுத்தி.... திரைக்கதை இருக்கும் பட்சத்தில்.... அது நல்ல படமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

பாட்டே கதையை நகர்த்தி... கதையை முடித்து வைத்த எத்தனை சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஏனோ இன்று வரும் பாடங்களில்.. பாடல் என்ற யுக்தியை சரியாக பயன்படுத்தாமல் விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. அதே சமயம் காதலிக்கு கண் குருடாகி இருக்கும் காட்சிக்கு அடுத்த காட்சியில் கனவு பாடலுக்கு காதலனும் காதலியும் மச்சு பிச்சுவில் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டுமிருந்தால் அது கெக்க பிக்கே தான். டிசிகா வெட்டோரியை கொண்டாடும் அதே நேரம் கரகாட்டக்காரனின் "இந்த மான் எந்தன் சொந்த மான்" என்று கரையும் தனித்த தமிழ் மண்ணின் காதலின் பிரிவை உணரலாம் தானே.  "நீ காற்று நான் மரம்" என்று தலையாட்டுகையில்... சினிமாவின் பூரணம் திரை அரங்கு முழுவதும் வியாபித்திருந்தலை ஞாபகப் படுத்தி பாருங்களேன். ஸ்ரீ தரின் "இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா" என்று வளையும் பாதையின் இளமையை கொஞ்சிய சினிமாவை கடக்கத்தான் வேண்டுமா...?

"தென்மதுரை சீமையிலே மீனாட்சி கோவிலுல கல்யாணம் எப்போ கண்ணம்மா" என்று தோழிகளுடன் தன் வருங்கால கணவன் பற்றி பாடி ஆடும் பெண்கள் கூட்டத்தை ரசித்து  பழகிய காலங்களை எந்த உலக சினிமாவுக்குள் போட்டு அடைக்க. "எட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை" என்று காதலின் வலியை பாடி தீர்த்த அண்ணன்களின் கதையை ஜஸ்ட் லைக் தட் கடந்து விட முடியாது. உள்ளுக்குள் தானாக பிசைந்து வழியும் கண்ணீரை பக்கத்து சீட்டுக்காரர் பார்க்காவண்ணம் திரை இருட்டில் அழுந்த துடைத்தலில் அல்லவா இருக்கிறது இளமையில் கற்ற காதலின்  ஞாபகம். காதலை சொல்ல... காதலியை வர்ணிக்க... மனைவியை பிரிந்த துக்கம்.. அண்ணன் தம்பி பாசம்.. அம்மா இறந்த துக்கம்.... தங்கை திருணம் முடிந்த பிறகு அண்ணனின் வெறுமை...நட்பின் வெளிப்படுத்துதல்.... குடும்பத்துக்காக உழைத்தவனின் தனிமை.... ஊர் திருவிழா... நேர்மை வெல்லும் சபதம்... நீதி ஜெயிக்க போகும் நீள்வெளி... என்று வாழ்வின் எப்பக்கம் திரும்பினாலும் பாடல்கள் தானே நம் திரை நிறைத்திருந்தது. அதை விடுத்த சதுரத்துக்குள் தமிழ் சினிமா வேட்டை எப்படி...

பாட்டு தமிழ் சினிமாவின் அங்கம். நேரில் யார் பாடுகிறார்கள் என்றால் நேரில் யார் கிரேன் ஷாட் வைக்கிறார்கள் என்று கேட்க தோன்றும். மற்றும்.... சினிமா என்பதே சற்று மிகைப்படுத்தல் தானே. "சினிமா மாதிரியே இல்லை.. அப்டியே நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு" என்று சொல்ல எதற்கு அந்த சினிமாவை எடுக்க வேண்டும்... சினிமாத்தனம் இல்லாத சினிமா என்ன சினிமா. காதலிக்கு கல்யாணமே என்றாலும்... கூட்டத்தில் நின்று பாடி வாழ்த்தி விட்டு வருவது தான் காதலின் குணம். அதைத்தான் தமிழ் சினிமா பாடல்கள் செய்தன. 

உள்ளூர் சித்தப்பாக்களும்.... பக்கத்து வீட்டு ராஜா அண்ணாக்களும்.......பக்கத்தூர் ரவி மாமாக்களும்... சித்ரா அக்காக்களும்...திருவிழாவுக்கு வந்த அனிதாக்களும்.... வாழ்ந்த சினிமாவில் இன்னும் உள்ளம் அசைய உதடு முணுமுணுக்கும் பாடல்களில் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை இருக்கிறது.... ஞாபகம் இருக்கிறது. அது மதுபாலா ஒளிந்திருந்து பார்க்கும்....." குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு....கேட்டு அதைத்தான் கேட்டு... மெல்ல திரும்பும் எனது தாயின் பழைய நினைவு..." பிரசாத்தின் பாடலாய் கொட்டுகிறது.  இன்றும் செவி நிறைக்க அருவியாய் சொட்டும் கட்டிங்... ஜம்பிங் தெரியாத திரைத்தொகுப்பின் நீட்சியியை கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. "நான் ஆணையிட்டால்" என்று திரைக்குள்ளே இருந்து வெளியே கேட்கும் பாடலின் நூதனமே சட்ட சாசனம் ஆனது. கல்லுக்குள் ஈரம் பாரதி ராஜாவை சுமந்து திரிந்த அருணாக்களை கொண்டாடாமல் எப்படி இருப்பது..."சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்" என்று காட்சியின் கூடவே பாடும் சந்தோசமே ஜேம்ஸ் கேமரூனுக்கு முன்னால் காலர் தூக்கி விட்டுக் கொண்டு நடப்பது.

"ஏலேலங்குயிலே என்னைத் தாலாட்டும் இசையே.... உன்னை பாடாத நாள் இல்லையே" என்று விக்கிரமன் வைத்த கிளைமாக்ஸை கண்கள் பனிக்க பார்த்த இளமையின் நுனியை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.... எபோதாவது சிறகடிக்கும் திசையை உங்களுக்கும் காட்டவே இந்த கட்டுரை என்பதில்..... முணுமுணுக்கும் பாடலின் வரியை நீங்களே கண்டெடுங்கள்....அது எனக்கானதாகவும் இருக்கும்...

- கவிஜி