“சூத்திரர்கள் – யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ-ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்?” என்ற எனது ஆய்வுக் கட்டுரை 1946 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது; அதன் தொடர்ச்சியே இந்த நூல். சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு காட்டப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:

  • குற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;
  • ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;
  • தீண்டப்படாதவர்கள், இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.

ambedkar 220இப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைப்புலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது! மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான, அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்; அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்க முடியும். குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும்? நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூற முடியும்? இதே போன்று, மனித உறவுக்கு, சமூகக் கூட்டுறவுக்கு அப்பாற்பட்டவர்களாக, தொட்ட மாத்திரத்திலேயே தீட்டு ஏற்படுத்தி விடக் கூடியவர்களாக, மிக மிக இழிவானவர்களாக, ஈனமானவர்களாக நடத்தப்படும் மூன்றாவதொரு வகைப் பிரிவு மக்களைப் படைத்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்?

            வேறு நாடாக இருந்தால் இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனச்சான்றைக் குத்தி குடைந்திருக்கும்; அவர்களது மரபு மூலம் பற்றி அழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, சிக்கலற்றது. இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத்தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ, இந்து கருதுவதில்லை; இந்தப் பழிபாவத்துக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டும் அல்லது இந்த இழிநிலை எப்படித் தோன்றிற்று, அது எவ்வாறு வளர்ந்து வலுப்பெற்றது என்பதை ஆராயவேண்டும் என்றும் அவன் உணர்வதில்லை. அதேசமயம் அவனது நாகரிகம் மிகத் தொன்மையானது மட்டுமல்ல, பல அம்சங்களில் ஈடு இணையற்றது, தன்னேரில்லாதது என்றும் ஒவ்வொரு இந்துவும் போதிக்கப்படுகிறான். தனது நாகரிகத்தைப் போற்றிப் புகழ்வதிலும் எந்த இந்துவும் ஒரு போதும் சலிப்பதில்லை, சளைப்பதில்லை. இந்து நாகரிகம் மிகப் பழமையானது என்று கூறப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். அதனை ஏற்கவும் கூட முடியும். ஆனால் இந்து நாகரிகம் தன்னிகரில்லாதது, ஒப்பற்றது என்று எந்த அடிப்படையில் உரிமை கொண்டாடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்துக்கள் விரும்பாவிட்டாலும், இந்துக்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரையில், இத்தகைய உரிமையை இந்துக்கள் ஒரே ஓர் அடிப்படையில்தான் கொண்டாட முடியும். இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ள இந்த வகுப்பினர் இருந்துவருவதே அந்த அடிப்படை. இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது ஒரு தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. எனவே எந்த இந்துவும் இதனைக் கிளிப்பிள்ளைப்போல் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இது பெருமிதம் கொள்வதற்குப்பதிலாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.

            இந்து நாகரிகத்தின் உயர்விலும், புனிதத்திலும், நல்லறிவாற்றலிலும், இவ்வாறு தவறான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதற்கு இந்து கற்றறிவாளர்களின் விநோதமான சமூகக் கண்ணோட்டமே முற்றிலும் காரணம்.

            இன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை; எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை. இந்த வால்டேர் யார்? கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது. பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது. அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனத்திற் கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர். பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.

            பிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை? போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழித்துரைக்கவில்லை? பிறக்கும்போதே இருதயக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீலம் பூத்த குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை? சுல்தானோ, போப்போ அல்லது பிரிட்டிஷ் நாடாளுமன்றமோ இவற்றை எல்லாம் செய்யாததற்’கு என்ன காரணமோ அதே காரணத்தால்தான் பிராமணர்களாலும் ஒரு வால்டேரை உருவாக்க இயலவில்லை. ஒருவனது சுயநலம் அல்லது அவன் சார்ந்த வகுப்பினது சுயநலம் எப்போதுமே ஓர் அகக்கட்டுப்பாடாகச் செயல்பட்டு, அவனது அறிவாற்றலின் திசை வழியை நிர்ணயிக்கிறது. பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும்; அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள் மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டு பண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது.

ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகனல்லாதவனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாளியாக இருந்தாலும், அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும் போது பிராமணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும்? பிராமணர்களிடையே ஒரு வால்டேர் தோன்றுவது பிராமண ஆதிக்கத்தை வளர்த்து வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு நாகரிகத்தைப் பேணிக்காக்கும் முயற்சிக்கு நிச்சயம் குந்தகத்தையே ஏற்படுத்தும். இங்கு நாம் கூற வந்த கருத்து என்னவெனில், ஒரு பிராமண அறிஞனது அறிவாற்றல் தனது நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையால், ஏக்கத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இந்த அகக் கட்டுப்பாட்டால் அவன் வெகுவாக அவதியுறுகிறான்; இதன் விளைவாக தனது அறிவாற்றல் நேர்மையோடும் நியாயத்தோடும் செயல்பட அவன் அனுமதிப்பதில்லை. தனது வகுப்பின் நலன்களும், தனது சொந்த நலன்களும் பாதிக்கப்படுமோ என்று அவன் அஞ்சுகிறான்.

            ஆனால் பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போது கூட மூட நம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான். இத்தகைய திறன்படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்; அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள்; ஏதேனும் அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள். பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.

            பிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை. இந்த வகுப்பினரது தோற்றம் இன்னமும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு பொருளாக இருந்துவருகிறது. துரதிருஷ்டிசாலிகளான இந்த வகுப்பினர்களில் ஒரு பிரிவைப்பற்றி அதாவது தீண்டப்படாதவர்களைப் பற்றி இந்த நூல் கூறுகிறது. இந்த மூன்று வகுப்பினரிலும் தீண்டப்படாதவர்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் அதிகமானவர்கள். அவர்கள் எவ்விதம் உருவானார்கள் என்பதும் இயல்புக்கு மிகவும் புறம்பானதாக இருக்கிறது. அவர்களது தோற்ற மூலம் குறித்து இதுவரை ஆழமான, அடிப்படையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்துக்கள் இத்தகைய ஆய்வினை மேற்கொள்ளாதது முற்றிலும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொது முறையான ஒரு விஷயம், இதனால் அவன் இதற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை. ஆனால் புதிய நவீன கால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக சட்டதிட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான். ஆனால் இதில் வேதனைக்குரிய விந்தை என்னவென்றால் சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்ந்துவரும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை தீண்டாமைப் பிரச்சினை ஈர்க்கத் தவறிவிட்டதேயாகும். இது ஏன் என்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எனினும் உண்மை நிலைமை இதுதான்.

            எனவே, அனைவராலும் அறவே புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு துறையை ஆராயும் ஒரு முன்னோடி முயற்சியாக இந்நூலைக் கருதலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பிரதான பிரச்சினையின், அதாவது தீண்டாமையின் தோற்றம் குறித்த பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த நூல் அலசி ஆராய்கிறது; அத்துடன் நிற்காமல், இது சம்பந்தப்பட்ட சகலபிரச்சினைகளையும் துருவித் துருவி ஆராய்கிறது. இவற்றில் சில பிரச்சினைகளை வெகுசிலரே அறிவர்; அவற்றை அறிந்தவர்கள் கூட அவற்றால் திகைப்படைகின்றனர்; அவற்றிற்கு எவ்வாறு பதில் சொல்வது என்று தெரியாது திணறுகின்றனர். பின்கண்ட சில கேள்விகளைப் பற்றி இந்த நூல் ஆராய்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்: தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர்? மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது? இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா? பிராமணரல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள்? பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது? இவ்வாறு எத்தனை எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூல் விடை அளிக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு இந்நூலில் தரப்பட்டிருக்கும் விடைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையாக இல்லாதிருக்கலாம். எனினும் பழைய விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்த நூல் உதவுகிறது.

            தீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாடு புதுமையாதொரு கோட்பாடாகும். அதில் பின்கண்ட முன்மொழிவுகள், கருத்துரைகள் அடங்கியுள்ளன:

  • இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே இன வேறுபாடு ஏதும் இல்லை;
  • தீண்டாமை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான வேறுபாடு குலமரபுக் குழுவினருக்கும் அந்நியகுலமரபுக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இடையேயான வேறுபாடாக அமைந்திருந்தது. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்கள்தான் பின்னர் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர்.
  • தீண்டாமைக்கு எவ்வாறு இன அடிப்படை இல்லையோ அவ்வாறே தொழில் ரீதியான அடிப்படையும் இல்லை.
  • தீண்டாமை தோன்றியதற்கு இரண்டு மூலவேர்கள் உள்ளன:

அ. பிராமணர்கள் பௌத்தர்களிடம் காட்டியது போன்று இந்த பிரிந்துசென்றவர்களிடம் காட்டிய வெறுப்பும் பகைமையும்.

ஆ. ஏனையோர் கைவிட்டு விட்ட பிறகு மாட்டிறைச்சி உண்பதைப் பிரிந்து சென்றவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தது.

  • தீண்டாமையின் அடி மூலத்தைத் தேடும்போது, தீண்டப்படாதோரை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா வைதிக எழுத்தாளர்களும் தூய்மையற்றவர்களை தீண்டப்படாதவர்களுடன் சேர்த்து ஒன்றாக இனம் கண்டுள்ளனர். இது தவறாகும். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.
  • தூய்மையற்றவர்கள் ஒரு வகுப்பினராக தர்மசூத்திரங்கள் காலத்தில் தோன்றினர்; தீண்டப்படாதவர்களோ இதற்கு வெகு காலத்திற்குப் பிறகு கி.பி.400ல் தோன்றினர்.

இந்த முடிவுகள் யாவும் நான் மேற்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டவையாகும். ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன் எத்தகைய குறிக்கோளை தன் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கெதே பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறார்: (கெதேயின் ஒழுக்க விதிகளும் சிந்தனைகளும், நிர். 453,543)

“பொய்மையிலிருந்து மெய்மையையும், நிலையற்றதிலிருந்து நிலையானதையும், ஏற்க முடியாததிலிருந்து ஐயப்பாடானதையும், பிரித்துக்காணுவது வரலாற்றாசிரியனின் கடமையாகும்…. ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தீர்ப்புச் சான்றாளர் (ஜூரி) குழுவில் சேவை செய்ய அழைக்கப்பட்டவராகத் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும். பிறகு அவர் தம் முன்னாலுள்ள விவரங்கள் தக்க ஆதாரங்களுடன் எந்த அளவுக்கு முழுமையாக உள்ளன என்பதை மட்டுமே பரிசீலிக்கவேண்டும். பின்னர் அவர் ஒரு முடிவுக்கு வந்து, தமது கருத்து, குழுவின் தலைவரது கருத்துக்கு இணக்கமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது வாக்கை அளிக்கவேண்டும்.”

            சம்பந்தப்பட்ட, தேவையான விவரங்கள் கிடைக்கும்போது கெதேயின் அறிவுரையின்படி நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. அவர் தெரிவித்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்தது, பெரிதும் இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை பரஸ்பரம் சம்பந்தப்படுத்தும் இடை இணைப்புகளும், நேரடிச் சான்றுகளும் இல்லாதபோது வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை கெதே கூறவில்லை. தீண்டாமையின் அடி மூலத்தையும், சம்பந்தப்பட்ட இதர பிரச்சினைகளையும் ஆராய்வதில் நான் ஈடுபட்டிருந்தபோது, பல இடை இணைப்புகள் இல்லாததைக் கண்ணுற்றேன்; இதனாலேயே இவ்விஷயத்தை இங்கு குறிப்பிட்டேன். இத்தகைய ஒரு நிலைமையை எதிர்கொண்டவன் நான் மட்டுமே அல்ல; பண்டைக்கால இந்திய வரலாற்றை ஆராய்ந்த எல்லா வரலாற்றாசிரியர்களும் இப்படிப்பட்ட நிலைமையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “அலெக்சாந்தரின் படையெடுப்புக்கு முன்னர்வரை இந்திய வரலாற்றில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியையும் பற்றிய காலத்தை நிர்ணயிக்க முடியவில்லை. இதே போன்று முகமதியர்களின் வெற்றிக்குப் பிறகுதான் பல்வேறு செயற்பாடுகளை பரஸ்பரம் ஒன்றுடன்  ஒன்று இணைத்துப் பார்க்க முடிந்தது” என்று மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டன் கூறயிருக்கிறார். இது சோகமயமான ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் என்பதில் ஐயமில்லை. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: “அப்படியானால் ஒரு வரலாற்றாசிரியன் என்னதான் செய்வது? விட்டுப்போன கண்ணியைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தனது பணியை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டுமா?” நான் அவ்வாறு நினைக்கவில்லை. இது விஷயத்தில் என் கருத்து வருமாறு: இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு வரலாற்றாசிரியன் நிகழ்ச்சிக் கோவையில், விட்டுப்போன இடங்களை இதுவரை கண்டுபிடிக்கப்படாத கண்ணியிழைகளைக் கொண்டு ஒன்றுசேர்த்து இணைக்க வேண்டும், இதில் அவன் தனது கற்பனைத் திறனையும் உள்ளுணர்வையும் பயன்படுத்த வேண்டும், பிணைக்கப்பட முடியாத உண்மைகளை தெரிந்த உண்மைகளைக் கொண்டு பரஸ்பரம் பிணைப்பதற்கு வகை செய்யும் ஒரு தற்காலிகக் கோட்பாட்டை அவன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கொண்ட பணியை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, விட்டுப்போன கண்ணிகள் தோற்றுவிக்கும் இக்கட்டைச் சமாளிப்பதற்கு இந்த வழியைத்தான் நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

            திறனாய்வாளர்கள் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இக்கோட்பாடு வரலாற்று ஆராய்ச்சி விதிகளுக்குப் புறம்பாக இருக்கிறது என்று கண்டிக்கக்கூடும். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பீடு செய்வதற்கு ஒரு விதிமுறை இருக்கும்போது, நேரடிச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்துக்காக ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது மோசமான விதிமுறையாகும். நேரடிச்சான்றா அல்லது ஊகச்சான்றா, ஊகச் சான்றா அல்லது கற்பனைச் சான்றா என்னும் பிரச்சினையில் திறனாய்வாளர்கள் மூழ்கிப்போய் இருப்பதை விட அவர்கள் (i) இந்தக் கோட்பாடு முழுக்க முழுக்க அனுமானத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா (ii) இக்கோட்பாடு பரிசீலிப்பதற்குத் தகுதியுடையதுதானா, அவ்வாறு தகுதியுடைதாக இருக்குமாயின் நான் முன் வைக்கும் விவரங்களை விட அவர்கள் முன்வைக்கும் விவரங்களுக்கு அது பொருத்தமுடையதாக இருக்கிறதா என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவது உசிதமானதாக இருக்கும்.

            முதல் பிரச்சினையைப்  பொறுத்தவரையில், இந்தக் கோட்பாட்டின் சிலபகுதிகள் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்திற்காக அது தவறானதாகி விடாது. தொன்னெடுங் காலத்துக்கு முந்தைய தோற்றுவாயைக் கொண்ட ஓர் அமைப்பைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதை என்னை விமர்சிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது. தீண்டாமையின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் இப்போதைய முயற்சி திட்டவட்டமான விவரங்களைத் தரும் மூலாதாரங்களிலிருந்து வரலாற்றை எழுதுவது போன்றதல்ல. எத்தகைய மூலாதாரங்களும் இல்லாமலேயே வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி இது; அப்படியே மூலாதாரங்கள் கிடைத்தாலும் கூட அவற்றுக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்காது. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் ஒரு வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும்? இந்த மூலாதாரங்கள் எதை மறைக்கின்றன அல்லது திட்டவட்டமான முறையில் உண்மையைக் கண்டறியாமலேயே அவை எவற்றை சூசகமாகக் கூறுகின்றன என்பதை அவர்கள் முன்னுணர வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் கடந்தகால மிச்சசொச்சங்களை, மரபெச்சங்களைச் சேகரிக்க வேண்டும்; அவற்றை ஒன்றிணைத்து அவை பிறந்த கதையைச் சொல்லும்படிச் செய்ய வேண்டும்.

இந்தப் பணி உடைந்த கற்களிலிருந்து அங்கிருந்த நகரை நிர்மாணிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்துபோன ஒரு தொன்மைக்கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி தொடுவானத்தின் கோடுகளையும், குன்றுச்சரிவுகளின் சாயல்களையும் அப்படியே மனத்தில் படம்பிடித்துக் கொண்டு ஓர் அற்புதமான இயற்கைக் காட்சியை வரையும் ஓர் ஓவியரது பணியைப் போன்றது. இந்த அர்த்தத்தில் நோக்கும்போது இந்த நூலை ஒரு வரலாற்றுப் படைப்பு என்று கூறுவதைவிட, ஒரு கலைப் படைப்பு என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தீண்டாமையின் அடிமூலம் மடிந்துபோன கடந்த காலத்தில் புதையுண்டு கிடக்கிறது; இதனை யாரும் அறியார். இந்த மரபு மூலத்தைக் கண்டுபிடிப்பது என்பது தொன்னெடுங்காலத்துக்கு முன்னர் அழிந்து தகர்ந்து தரைமட்டமாகிவிட்ட ஒரு நகரை அதன் மூலவடிவில் வரலாற்றுக்கு மீண்டும் அர்ப்பணிக்கும் முயற்சியை ஒத்ததாகும். இத்தகைய ஒரு பணியில் கற்பனையும் அனுமானமும் ஒரு முக்கிய பங்காற்றாமல் இருக்க முடியாது. ஆனால் இது மட்டுமே இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதற்கு ஓர் ஆதார அடிப்படையாக இருக்க நியாயமில்லை. ஏனென்றால் திறமைமிக்க கற்பனையின்றி எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் பலன் தராது; ஊகம்தான் விஞ்ஞானத்தின் உயிர்க்கூறு, ஆன்மா, இது பற்றி மாக்சிம் கார்க்கி கூறியதாவது: (இலக்கியமும் வாழ்வும்மாக்சிம் கார்க்கியின் எழுத்துக்களிலிருந்து ஒரு பகுதி)

            “விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையே, பொதுவான அம்சங்கள் நிறைய இருக்கின்றன; இவை இரண்டிலும் கூர்நோக்கும், ஒப்பீடும், ஆழமான ஆய்வும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை; விஞ்ஞானியைப் போன்றே கவின் கலைஞருக்கும் கற்பனைத்திறமும் அகத்திற உணர்வும் அவசியம் தேவை. கற்பனையும் உள்ளுணர்வும் நிகழ்வுப்போக்குகள் தொடரில் இடைவிட்டுப் போன இடங்களை இன்னமும் இனம் கண்டறியாத பிணைப்புகளைக் கொண்டு இணைக்கின்றன; ஏறத்தாழ சரியான ஊகங்களையும் கோட்பாடுகளையும் விஞ்ஞானி உருவாக்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன; இயற்கையின் வடிவங்கள், இயல் நிகழ்ச்சிகள் குறித்த ஆய்வில் மனத்தோட்டத்துக்கு வழிகாட்டுகின்றன. இது இலக்கியப் படைப்புகளுக்கும் பொருந்தும்; பாத்திரங்களை உருவாக்கும் கலைக்கு கற்பனையும் உள்ளுணர்வும் எதையும் மனத்தில் வாங்கி ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வேண்டும்.”

            எனவே, விட்டுப்போன கண்ணிகளை இணைத்துக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டமைக்காக நான் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமில்லை. அதே போன்று இதனால் என் ஆய்வு எவ்விதத்திலும் வலிமை குன்றிவிடவில்லை; ஏனென்றால் எங்குமே வெறும் ஊகத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இணைப்புக் கண்ணிகளை உருவாக்கிவிட முடியாது. என் ஆய்வின் பெரும்பகுதி மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் ஆதாரமாகக் கொண்டிராத இடங்களில் எனது ஆய்வு பெருமளவுக்கு நம்பக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து எனது ஆய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாசகர்களை நான் கோரவில்லை. நான் கூறியிருப்பது மிகப் பெருமளவுக்கு நம்பத்தகுந்தது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். மிகப்பெருமளவுக்கு நம்பத் தகுந்தது என்று கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்க முடிவுக்குப் போதிய ஆதாரமாகாது என்று சிலர் வாதிக்கக்கூடும். ஆனால் இது கல்விச்செருக்கு மிக்க போலிவாதமே தவிர வேறன்று.

            அடுத்து, இரண்டாவது பிரச்சினைக்கு வருவோம். எனது ஆய்வுதான் இது விஷயத்தில் இறுதியானது, முற்றமுடிவானது என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு நான் தற்பெருமைக்காரன் அல்ல என்பதை என்னையும் எனது ஆய்வையும் விமர்சிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை. அவர்களது கருத்தின்மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் தமது சொந்த முடிவுக்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதுதான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம். அந்த அடிப்படையில் எனது ஆய்வு நடைமுறைப்படுத்தத்தக்கது இல்லையா, தற்காலிகமாகவாவது அங்கீகரிக்கதக்கது இல்லையா என்பதைப் பரிசீலித்துப் பாருங்கள். ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீட்டைத் தவிர என் விமர்சகர்களிடமிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.

பி.ஆர்.அம்பேத்கர்

ஜனவரி, 1,1948

1, ஹார்டிஞ்சி அவெனியூ,

புதுடில்லி.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14-ன் முன்னுரை)

Pin It

அமைச்சரவைத் தூதுக்குழு தனது மே 10ஆம் தேதிய அறிக்கையில் இந்தியாவின் அரசியல் நெருக்கடித் தீர்ப்பதற்கான இடைக்கால மற்றும் நீண்டகால யோசனைகள் முன்வைத்தது. அவர்களுடைய யோசனைகளில் மிகுந்த அதிர்ச்சியும் எரிச்சலும் அளிக்கக் கூடிய ஓர் அம்சமும் இடம்பெற்றிருந்தது.

ambedkar 408தீண்டப்படாதவர்களை கூடிய ஓர் அம்சமும் இடம்பெற்றிருந்தது. தீண்டப்படாதவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் ஒரு தனியான, குறிப்பிடத்தகுந்த அங்கமாக ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்ததுதான் அந்த அம்சம். குழு தனது நீண்ட அறிக்கையில் ஒருமுறை கூட தீண்டப்படாதவர் பற்றி குறிப்பிடவில்லை.

அந்த அளவுக்கு அவர்களை அது முற்றிலும் புறக்கணித்து விட்டது. தாழ்த்தப்பட்டவர்களை எந்த அளவுக்கு தூதுக்குழு ஒதுக்கியது என்பதைக் கீழ்க்கண்டவற்றின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்:

i) சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ளதுபோல் மத்திய நிர்வாக சபையில் தீண்டப்படாதவர்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.

தற்பொழுதுள்ள இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட வகுப்பு பிரதிநிதிகள் இருவர் இருக்கின்றனர்.

இவர்களில் எவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் விசுவாசம் கொண்டவர்களோ அல்லது அவர்களுக்கு எவ்வகையிலும் கடமைப்பட்டவர்களோ அல்ல. இவர்களில் ஒருவர் காங்கிரசால் நியமிக்கப்பட்டவர். மற்றொருவர் முஸ்லீம்லீக்கால் நியமிக்கப்பட்டவர்.

ii) இடைக்கால அரசில் முஸ்லீம்கள் விஷயத்தில் செய்திருப்பதுபோல் தீண்டப்படாதவர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்து பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பதினான்கு பேர் கொண்ட அமைச்சரவையில் தீண்டப்படாதவர்கள் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று 1945ல் நடந்த சிம்லா மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டது. 1945க்கும் 1946க்கும் இடையே இவ்வாறு களம் மானியத்திற்கான காரணம் தரப்படவில்லை.

iii)  அரசியல் நிர்ணய சபையில் தனிப் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

II

அமைச்சரவைத் தூதுக்குழுவின் முடிவு மன்னர்பிரான் அரசின் நிலைநாட்டப்பட்ட கொள்கையிலிருந்து எவ்வாறு ஒரு பிறழ்வாக அமைந்துள்ளது.

2. இந்தியாவின் அரசியல் சம்பந்தமாகவும், தீண்டப்படாதவர்களின் நிலை சம்பந்தமாகவும் மன்னர்பிரான் அரசுக்கு அதன் கொள்கையில் வழிகாட்டி வந்த கோட்பாடுகளிலிருந்து அது பெருமளவுக்கு விலகிச் சென்றுவிட்டதையே அமைச்சரவைத் தூதுக் குழுவின் முடிவு காட்டுகிறது.

i) 1920-க்கு முன், இந்திய அரசின் அரசியல் சட்டத் திருத்தங்கள் பிரிட்டிஷ் அரசின் சொந்த விருப்பத்தின் படியும், அவர்களுடைய சொந்த அதிகாரத்தின்படியும் செய்யப்பட்டு வந்தன. முதன்முதலாக 1920-ல் பிரிட்டிஷ் அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்க முடிவு செய்தது. அதற்கேற்ப, இந்தியர்கள் அழைக்கப்பட்டு ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.

அம்மாநாட்டில் பங்குகொண்ட இந்தியர்களுள், காங்கிரசுடனோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுடனோ சம்பந்தப்படாமல் சுயேச்சையாகவும் தனிப்பட்ட முறையிலும் அழைக்கப்பட்ட தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் இருந்தனர்.

ii) இந்திய தேசிய வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு தனி அங்கமாக குறிப்பிடுவதை எதிர்த்தும், அவர்கள் இந்துக்களில் ஒரு பகுதியினரே என்றும், ஆகவே தனிப் பிரதிநிதித்துவத்திற்கு அவர்கள் உரியவர்களல்லர் என்றும் காங்கிரஸ் பிரதிநிதியான திரு.காந்தி வாதிட்டார். பிரிட்டிஷ் அரசு திரு.காந்தியின் இந்த வாதத்தை நிராகரித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் இந்திய தேசிய வாழ்வில் ஒரு தனியான, குறிப்பிடத்தக்க அங்கம் என்றும் எனவே, அவர்கள் முஸ்லீம்கள், இந்திய கிறித்தவர்கள் போன்ற இதர சிறுபான்மையினர்களுக்குள் அதே பாதுகாப்புகள் பெற உரிமை உடையவர்கள் என்றும் வகுப்புவாரித் தீர்ப்பின் மூலம் பிரகடனம் செய்தது.

iii) பிரிட்டிஷ் அரசு இதே கொள்கையை 1945 ஜூனில் நடைபெற்ற சிம்லா மாநாட்டிலும் பின்பற்றியது. அந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட இந்தியர்களில் காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சியையும் சாராத தீண்டப்படாதவர்கள் பிரதிநிதி ஒருவர் மீண்டும் அழைக்கப்பட்டார்.

iv) 1942ல் கிரிப்ஸ் முன்வைத்த யோசனைகளில் ஒரு பகுதியாக இருந்த அரசியல் நிர்ணய சபையில் தீண்டப்படாதவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் அளிக்க வகை செய்யப்படவில்லை, எனவே அமைச்சரவைத் தூதுக்குழுவின் தற்போதைய யோசனைகள் முந்திய நிலையிலிருந்து விலகிச் செல்லுவதைக் குறிப்பதாகக் கூறமுடியாது என்று வாதிக்கலாம். ஆனால் உண்மையில் இந்த யோசனைகள் முந்திய நிலையிலிருந்து விலகிச் செல்லுகின்றன என்பதே பதிலாகும். 1942 ஆம் வருட கிரிப்ஸ் யோசனைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதல்ல.

உண்மையில், அரசியல் நிர்ணய சபையில் எந்தச் சிறுபான்மை வகுப்பினருக்குமே தனிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் அமைச்சரவைத் தூதுக்குழு முன்மொழிந்துள்ள அரசியல் நிர்ணய சபைக்கான அரசியல் சட்டத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தனிப் பிரதிநிதித்துவம் தீண்டப்படாதவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாரபட்சப் போக்கைப் பற்றித்தான் தீண்டப்படாதவர்கள் புகார்கள் எழுப்பியுள்ளனர்.

3. அமைச்சரவைத் தூதுக்குழுவின் யோசனைகள் நியாயமற்றவை; இந்திய தேசிய நீரோட்டத்தில் தீண்டத்தகாதவர்களை ஒரு தனி அங்கமாக ஏற்கும் கொள்கையிலிருந்து விலகிச் சென்றிருப்பதிலும் இஸ்லாமியர்களையும் சீக்கியர்களையும் போல் அவர்களை ஒரு தனி அங்கமாக ஏற்காததிலும், அவர்கள்பால் பாரபட்சம் காட்டுவதிலும்தான் இந்த அநீதி புதைந்து கிடக்கிறது.

தீண்டப்படாதவர்களுக்கு மன்னர்பிரான் அரசு அளித்த வாக்குறுதிகளை அமைச்சரவைத் தூதுக்குழுவின் முடிவு எவ்வாறு மீறுகிறது?

4. தீண்டப்படாதவர்களை ஒரு தனி அங்கமாக அமைச்சரவைத் தூதுக்குழு மறுப்பது பிரிட்டிஷ் அரசினால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறானது. கீழ்க்கண்ட சில வாக்குறுதிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை:

(i) “இந்திய ஒற்றுமையின் நலனைக் கருதி எந்த அரசியலமைப்புத் திட்டங்களிலும் இந்திய சமஸ்தானங்களை இணைக்க வேண்டும் எனும் முக்கியத் தேவையை நாம் மறந்துவிடக் கூடாது.

சிறுபான்மையினரின் விடாப்பிடியான கோரிக்கைகள் உள்ளன. இவற்றில் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெரும் இஸ்லாமியச் சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருமே அவர்கள். சிறுபான்மையினருக்குக் கடந்த காலத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் அவர்கள் நிலை பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

1940-ம் ஆண்டு ஜனவரி 10-ஆம் நாள், பம்பாய் பம்பாய் ஓரியண்ட் கிளப்பில் லின்லித்கோ பிரபு ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.

(ii) “இவைதாம் இப்போது எடுத்துள்ள இரண்டு முக்கியப் பிரச்சினைகள். இந்த இரண்டு பிரச்சினை குறித்த மன்னர் பிரான் அரசு தனது நிலைகளைத் தெளிவுபடக் கூறும்படி என்னைப் பணித்துள்ளது. முதலாவது, எந்த எதிர்கால அரசியலமைப்புத் திட்டத்திலும் சிறுபான்மையினரின் நிலை சம்பந்தப்பட்டது.

இந்தியாவின் தேசிய வாழ்வில் வலிமை மிக்க சக்திகளால் மறுக்கப்படும் எவ்வகையான ஓர் அரசாங்க அமைப்பிடமும் இந்தியாவின் அமைதியையும் நலன்களையும் காப்பதற்குத் தற்போது தங்களுக்குள்ள பொறுப்புகளை மாற்றிக் கொடுக்கும் எண்ணம் எதுவும் மன்னர்பிரான் அரசுக்கு இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சக்திகளை இப்படிப்பட்ட ஓர் அரசிற்குப் பணிந்து போகும்படி வல்லந்தப்படுத்துவதற்கு அவர்கள் துணை போகவும் முடியாது.”

-    1940, ஆகஸ்டு 8-ஆம் நாள் லின்லித்கோ பிரபு அளித்த உரையிலிருந்து  ஒரு பகுதி

“காங்கிரஸ் தலைவர்கள் ஒரு போற்றற்குரிய ஸ்தாபனத்தைக் கட்டி வளர்த்துள்ளனர்; அது இந்தியாவின் திறமை வாய்ந்த அரசியல் இயந்திரமாகும்… இந்தியாவின் அரசியல் வாழ்வின் (முக்கிய) பிரதான பகுதியினர் எல்லோருக்குமாக தான் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் உண்மையில் அது பேசுவதில் வெற்றி பெற்றிருக்குமானால் – வெற்றி பெற்றிருக்கக் கூடுமானால் – அவர்களின் கோரிக்கை எவ்வளவு தீவிரமுடையதாக இருந்தாலும், பல அம்சங்களில் நம் பிரச்சினை இன்று இருப்பதை விட மிக அதிகம் இலகுவானதாக இருந்திருக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் அவர்கள் மிகப் பெரிய தனிக் கட்சியாவர். அதன் காரணமாக இந்தியாவிற்காக பேசுவதாகச் சொல்வதை இந்தியாவின் சிக்கலான தேசிய வாழ்வில் உள்ள பல மிக முக்கியமான பகுதியினர் மறுக்கின்றனர்.

இந்த மற்றவர்கள் எண்ணிக்கையில் தங்களைச் சிறுபான்மையினராக மட்டுமன்றி எதிர்கால இந்திய அரசியல் வாழ்வில் தனிமையான அங்கங்களாகவும் தாங்கள் கருதப்பட வேண்டும் என்று உரிமை கோருகின்றனர். இவர்களில் மிக முதன்மையானவர்கள் (பெரும் எண்ணிக்கையில் உள்ள) மகத்தான முஸ்லீம் சமூகத்தினர். பூகோள அடிப்படையில் அமைந்துள்ள வாக்காளர் தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை வகுக்கும் அரசியல் சட்டத்தோடு அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக செயல்படுவோருக்கு எதிராக அரசியல் அமைப்பு சம்பந்தமான எந்த விவாதத்திலும் பங்கு பெறும் அங்கமாக தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உரிமை கோருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட (தீண்டப்படாத) ஜாதியினர் என்று அறியப்படும் மகத்தான முக்கிய பகுதியினருக்கும் இது பொருந்தும். அவர்கள் சார்பில் திரு.காந்தி எடுத்துக் கொண்ட அக்கறையுடன் கூடிய முயற்சிகள் இருந்தபோதிலும், ஒரு சமுதாயம் என்ற முறையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான இந்து சமூகத்திற்கு வெளியில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

-    காமன்ஸ் சபையில் 1940 ஆகஸ்டு 14ல் இந்தியா மந்திரி மேதகு திரு.எல்.எஸ்.அமெரி ஆற்றிய உரையிலிருந்து

(iv) இந்தக் காரணங்களை எல்லாம் விவரமாகத் திரும்பிக் கூறிக் கொண்டிராமல், அச்சமயம் மன்னர்பிரான் அரசாங்கம் தெளிவாகக் கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்:-

(அ) போர் முடிந்த பிறகு இந்திய தேசிய வாழ்வின் பிரதான சக்திகள் கலந்தாலோசித்து ஓர் உடன்பாடான அரசியலமைப்பை வகுக்க வேண்டும், தேவையான ஓப்பந்த ஏற்பாடுகளை மன்னர் பிரான் அரசுடன் செய்து கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

(ஆ) நீங்கள் தெரிவித்திருப்பதுபோல் மத்திய சட்டமன்றத்திற்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ள ஒரு “தேசிய அரசாங்கத்தை” அமைக்க வேண்டுமானால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்தத் திருத்தத்தைச் செய்வது சாத்தியமல்ல. இன, சமய சிறுபான்மையினரதும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரதும் நலன்களைப் பாதுகாக்கும் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்வதும், அதேபோன்று இந்திய சமஸ்தானங்களுடன் தங்களுக்குள்ள ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதுமே இந்த நிபந்தனைகளின் நோக்கமாகும்.

- 1944 ஆகஸ்டு 15ஆம் தேதியிட்டு திரு.காந்திக்கு வைசிராய் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.

5. தீண்டப்படாதவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை என்ற அமைச்சரவைத் தூதுக்குழுவின் முடிவு இது சம்பந்தமான உண்மைகளை நேர்மையாக ஆராய்ந்து எடுத்த முடிவல்ல. மாறாக, தூதுக்குழு செய்ததென்னவென்றால் திரு.காந்தியின் தப்பெண்ணங்களைத் தட்டிக் கொடுத்ததுதான். தீண்டப்படாதவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் ஒரு தனி அங்கமாக ஏற்பதை திரு.காந்தி மூர்க்கமாக எதிர்த்தார். வட்டமேசை மாநாட்டிலும் அவர்களை சிறுபான்மையினராக ஏற்க மறுத்தார்.

அவருடைய எதிர்ப்பிற்கு மாறாக திரு.ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாரித் தீர்ப்பில் அவர்கள் தனி அங்கமாக ஏற்கப்பட்டதை அறிந்ததும், தீண்டப்படாதவர்கள் தனி அங்கமாக ஏற்கப்பட்டதை அறிந்ததும், தீண்டப்படாதவர்கள் தனி இனம் எனக் குறிப்பிட்டதை திரும்பப் பெறவில்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் மிரட்டினார். மீண்டும் 1945-ல் முதல் சிம்லா மாநாட்டில் மன்னர் பிரான் அரசு தீண்டப்படாதவர்களுக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டதை அறிந்ததும் திரு.காந்தி அதனை எதிர்த்தார். அமைச்சரவைத் தூதுக்குழுவினர் தங்களுடைய யோசனைகள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். திரு.காந்தியின் இசைவைப் பெற்றாலொழிய இது சாத்தியமில்லாமல் இருந்தது.

திரு.காந்தி கேட்ட விலையை தூதுக்குழு கொடுத்தது. தீண்டப்படாதவர்களுக்கான தனி அரசியல் அங்கீகாரத்தைப் பலியிடுவதுதான் அந்த விலை. இன்னும் சொல்லப்போனால் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அமைச்சரவைத் தூதுக்குழுவின் பிரேரணைகள் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி முன்வைத்த திட்டத்தின் மறுபதிப்புத் தானே தவிர வேறல்ல. அரசியல் ரீதியாக மூன்று இனங்களைத்தான் தாம் ஏற்றுக் கொள்ளப்போவதாகத் திரு.காந்தி கூறினார். அவர்கள் 1) இந்துக்கள் 2) முஸ்லீம்கள் 3) சீக்கியர்கள். தூதுக்குழுவின் திட்டம் திரு.காந்தியின் திட்டத்தின் அசல்தான். வேறு விளக்கம் அதற்கு ஒன்றுமில்லை.

III

அமைச்சரவைத் தூதுக்குழு தனது முடிவுகளை நியாயப்படுத்த முன்வைத்த ஆதாரங்கள்

6. தீண்டப்படாதவர்களைத் தனி ஒரு அங்கமாக அங்கீகரிக்காததன் முடிவை நியாயப்படுத்த அமைச்சரவைத் தூதுக்குழு மாகாண சட்டசபைகளுக்கு 1948 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. 1946 ஜூலை 18-ஆம் நாள் அமைச்சரவைத் தூதுக்குழுவின் பிரேரணைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்பொழுது, தூதுக் குழு உறுப்பினர்கள் பின்கண்ட விஷயங்களை வலியுறுத்த முயற்சித்தனர்:

(i) அதாவது இந்தத் தேர்தலில், தீண்டப்படாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட எல்லா தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது; ஆகவே காங்கிரஸ் தீண்டப்படாதவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்நிலைமையில், தீண்டப்படாதவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிப்பது நியாயமல்ல.

(ii) அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்துக்கும் எனக்கும் பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களில் மட்டும் தான் ஆதரவு உள்ளது.

7. சோடையான ஆதாரங்கள்

இவை அதீதமான அசுரத்தனமான கருத்துகள்; ஆழமான, நேர்மையான நுண்ணாய்வின்முன் இவை எடுபட மாட்டா. காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மையை மதிப்பிட தேர்தல் முடிவுகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டதின் மூலம் அமைச்சரவைத் தூதுக்குழு துவக்கத்திலேயே ஒரு பெரும் தவறைச் செய்துவிட்டது. இதன் காரணமாக தூதுக்குழு கீழ்க்கண்ட சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது.

i) இந்து வாக்காளர்கள் போர்க்காலம் முழுவதும், தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாகவே இருந்தார்கள். அவர்கள் போர்க்காலப் பணிகளைச் செய்தாலும் அவற்றை விரும்பிச் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் எதிர்ப்பாளராய் இருந்ததும், போர் முயற்சிகளில் ஒத்துழையாமல் இருந்ததும் இந்து வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து அக்கட்சியின்பால் ஈர்த்தது. மற்றைய கட்சிகள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாய் இருந்தாலும் போர் முயற்சிகளில் ஒத்துழைத்ததாலும் தேர்தலில் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின.

ii) தேர்தல் நாள் குறிப்பிடப்பட்ட நாளுக்குச் சற்று முன்னர்தான், வைஸ்ராய் மற்றும் தலைமை தளபதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீது விசாரணையைத் துவக்கினர். காங்கிரஸ் உடனே இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆதரவாகக் கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிற்று. இந்த விசாரணை தேர்தல் பிரச்சினையாகவும் ஆகிவிட்டது. சடசடவென்று சரிந்து கொண்டிருந்த காங்கிரசின் செல்வாக்கைத் தூக்கிப்பிடித்து நிற்கும் ஒரு முக்கிய ஆதாரக்கோலாக இந்த விசாரணை அமைந்துவிட்டது என்று கூறலாம்.

iii) “சுதந்திரம் வேண்டும்”, “வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷத்தின் அடிப்படையில்தான் தேர்தல் நடைபெற்றது; எதிர்கால இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது இத்தேர்தலில் ஒரு பிரச்சினையாக இடம்பெறவில்லை. அவ்வாறு இந்தப் பிரச்சினை இடம்பெற்றிருந்தால் காங்கிரஸ் தற்பொழுது பெற்ற பெரும்பான்மையைப் பெற்றிருக்கவே முடியாது.

iv) காங்கிரசை எதிர்த்து நின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வேட்பாளர்களிடம் தேர்தல் அதிகாரிகளும், தொகுதி பொறுப்பு அலுவலர்களும் காட்டிய பகைமை உணர்வை தூதுக்குழு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் சாதி இந்துக்களாக இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாக்குச்சீட்டைத் தர மறுக்கும் அளவுக்கும் வேட்பு மனுக்களை ஏற்க மறுக்கும் அளவுக்கும் கூட அவர்கள் சென்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தீண்டப்படாத வாக்காளர்கள் தயாராக இல்லை என்ற காரணத்துக்காக சாதி இந்துக்கள் அவர்களை எத்தகைய கொடுமைக்கும் வன்முறைக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாக்கினார்கள் என்பதைத் தூதுக்குழு கணக்கில் எடுத்துக கொள்ளவில்லை.

ஆக்ரா நகரத்தில் தீண்டப்படாதவர்களின் 40 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பம்பாயில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற்றும் நகர்ப்புறங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லவே அனுமதிக்கப்படவில்லை. நாக்பூரில், தாழ்த்தப்பட்ட வாக்காளர்களை பயமுறுத்தித் துரத்துவதற்காகவே குற்றவியல் நடுவரின் அனுமதியில்லாமலேயே காங்கிரஸ் அனுதாபமுள்ள ஒரு காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். இதைப்போன்று இந்தியாவில் அனைத்து இடங்களிலும் எண்ணிலடங்கா நிகழ்ச்சிகள் நடந்தன.

8. இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால், தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி முற்றிலும் அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைமைகளால்தான் என்பதைத் தூதுக்குழுவினர் உணர்ந்திருப்பார்கள். இந்தச் சூழ்நிலைமைகளில் நடந்த தேர்தல்களின் முடிவுகளை வைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிக்க இயலாது என்று நியாயப்படுத்தக்கூடாது.

அமைச்சரவைத் தூதுக்குழு அதன் முடிவிற்கு எப்படி ஒரு தவறான அளவுகோலை எடுத்துக் கொண்டது

9. காங்கிரஸ் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியா, இல்லையா என்பதை முடிவு செய்யத் தூதுக்குழு எடுத்துக் கொண்ட அளவுகோல், தீண்டப்படாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இறுதித் தேர்தல்களில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது என்பதாகும். இந்த அளவுகோல் ஒரு தவறான அளவுகோல். ஏனெனில் இறுதித் தேர்தல்களின் முடிவுகள் தீண்டப்படாதவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. புனா ஒப்பந்தத்தின்படி இறுதித் தேர்தல்கள் இந்து வாக்குகளால் முடிவு செய்யப்படுகின்றன.

அப்படியானால் தூதுக்குழு எடுத்துக் கொண்டிருக்க வேண்டிய உண்மையான அளவு கோல் எது? தீண்டப்படாதவர்கள் எவ்வாறு வாக்களித்தார்கள், காங்கிரசுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை, எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை என்பதைக் கண்டறிவதுதான் உண்மையான அளவுகோலாகும்.

இது பூர்வாங்க தேர்தலின் முடிவுகள் மூலம்தான் கண்டறியப்படுமேயொழிய இறுதிச் சுற்றுத் தேர்தல் முடிவுகளின் மூலம் அல்ல. ஏனெனில் பூர்வாங்கத் தேர்தலில்தான் தீண்டப்படாதவர்கள் மட்டும் வாக்களிக்கின்றனர்.

பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டால் அமைச்சரவைத் தூதுக் குழுவின் முடிவுகள் உண்மைக்குப் புறம்பானவை, அபத்தமானவை என்பதை அறியலாம். ஏனெனில் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 28 சதவீதம் தான்; எதிர்த்து போடப்பட்ட வாக்குகளோ 72 சதவீதம்.

10. தாங்கள் காங்கிரசைச் சார்ந்தவர்கள் அல்ல என்று தீண்டப்படாதவர்கள் நினைத்திருந்தால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகள் ஒவ்வொன்றிலும் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலைப் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உண்மையில், இந்தியா முழுமைக்கும் 43 தொகுதிகளுக்கு மட்டும்தான் பூர்வாங்கத் தேர்தல்கள் இருந்தன. மீதம் 108 தொகுதிகளில் தீண்டப்படாதவர்கள் ஏன் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலை நடத்தவில்லை? இந்த வாதம் கீழ்க்கண்ட காரணங்களினால் அர்த்தமற்றது:

i) பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல் கட்டாயமானவையல்ல. ஒரு தொகுதியில் நான்கு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால்தான் அது கட்டாயமாகிறது. பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலில் நிற்பவர் இறுதித் தேர்தலிலும் போட்டியிடும் தேவை ஏற்படுகிறது என்பது உணரப்படுவதில்லை. இரண்டு தேர்தல்களிலும் போட்டியிடுவதால் ஏற்படக்கூடிய செலவை தாங்கிக் கொள்ள தீண்டத்தகாதவர்களால் முடியாது என்பதால் பூர்வாங்கச் சுற்று தேர்தல்களில் அவர்களை நிற்கத் தூண்டுவது சிரமமான காரியமாக இருக்கிறது.

ஆகவே, 43 தொகுதிகளுக்குத்தான் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல் நடத்தப்பெற்றது என்பதை தீண்டப்படாதவர்கள் காங்கிரசிடம் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்ற கருத்தினுக்கு அடிப்படையாகக் கொள்ள முடியாது.

ii) பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று காங்கிரசைத்தான் கேட்க வேண்டும். ஏனெனில், தீண்டப்படாதவர்களின் பிரதிநிதி தாங்கள்தான் என்று காங்கிரஸ் கருதியிருந்தால் 151 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு எந்த ஒரு கட்சியும் வர முடியாமல் செய்திருக்கலாம்.

காங்கிரஸ் இதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, 43 பூர்வாங்கத் தேர்தல்களில் கூட ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் ஒரு வேட்பாளரைத்தான் நிறுத்தியது. அதுவும் முதல் நான்கு பேர்களில் ஒருவராக வந்து இறுதிச் சுற்றில் இந்து வாக்குகளின் பலத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையால்தான் அவ்வாறு செய்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை என்பதை அக்கட்சி தெரிந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

iii) தாழ்த்தப்பட்டவர்கள் 1937-ல் தான் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். 1937-க்குப் பிறகுதான் தீண்டப்படாதவர்கள் தேர்தல்களில் பங்கு கொள்வதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் துவங்கினர். தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம் காங்கிரசால் தோற்கடிக்கப்பட்டது என்பதனால் தாழ்த்தப்பட்டவர்கள் காங்கிரசுடன் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது தவறானது.

தேர்தல்களின் முடிவுகளைக் கொண்டு சம்மேளனத்திற்குப் பாதகமான முடிவுகளை எடுப்பதற்கு முன் அமைச்சரவைத் தூதுக்குழு காங்கிரசுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்திற்கும் இடையே உள்ள சமமில்லாத பலத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தங்களுடைய முடிவுகளை நியாயப்படுத்த தூதுக்குழு முன்வைத்த ஏனைய ஆதாரங்களின் பயனற்றத் தன்மை

11. டாக்டர் அம்பேத்கரைப் பின்பற்றுவோர் பம்பாய் ராஜதானி மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே என்று அமைச்சரவைத் தூதுக்குழு உறுப்பினர்கள் வாதிட்டனர். இந்தக் கூற்றுக்கு அடிப்படையே இல்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் மற்ற மாகாணங்களிலும் இயங்கி வருவது மட்டுமன்றி, பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களைப் போல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தேர்தல் வெற்றிகளை அந்த இடங்களில் அது பெற்றிருக்கிறது.

தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிடுமுன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் பெற்ற தனிப்பெரும் வெற்றியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. அவர் வங்க மாகாண சட்டசபையிலிருந்து வேட்பாளராகப் போட்டியிட்டார். பொதுத் தொகுதியினைப் பொறுத்தவரை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.சரத் சந்திரபோசைக் கூடத் தோற்கடித்து வாக்களிப்பில் முன்னணியில் இருந்தார்.

டாக்டர் அம்பேத்கருக்கு பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு வெளியே செல்வாக்கு இல்லையெனில் அவர் எப்படி வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்? வங்க மாகாண சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 30 இடங்கள் உள்ளன என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். மொத்தம் 80 பேரில் காங்கிரஸ் வேட்பாளர்களாக 28பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர் கட்சியைச் சேர்ந்த இருவரில் தேர்தல் நாளன்று ஒருவருக்கு உடல்நலமில்லை. இதையும் மீறி டாக்டர் அம்பேத்கர் வாக்குபதிவில் முதன்மையில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் அவருக்காக வாக்களித்திருந்தாலொழிய இது நடந்திருக்க முடியாது வங்காளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர் டாக்டர் அம்பேத்கரின் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். காங்கிரசைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் அவருடைய இனத்தைச் சாராதிருந்தும் அவரைத்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவராகக் கருதுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இது தூதுக் குழு உறுப்பினர்களின் அறிக்கையை முழுவதுமாக நிராகரிக்கிறது.

12. அரசியல் நிர்ணய சபையை அமைப்பதில் ஒரு சீரான முறையை நடைமுறைப்படுத்த, மற்ற வகுப்பினரின் விஷயத்தில் நடந்ததைப் போலவே தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்திலும், இறுதிச் சுற்றுத் தேர்தல் முடிவுகளே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரவைத் தூதுக்குழு உறுப்பினர்கள் வாதிட்டனர். இது ஏதோ சாக்குப்போக்காக விளக்கங் கூறுவதாக இருக்கிறதே தவிர வலுவானதாகவே இல்லை; முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள் மற்று சீக்கியர்கள் ஆகியோரது இறுதிச் சுற்றுத் தேர்தல்கள் தனி வாக்காளர் தொகுதிகளைக் கொண்டது என்பது தூதுக்குழுவுக்குத் தெரியும். ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இறுதித் தேர்தல் தனி வாக்காளர் தொகுதிகளைக் கொண்டது அல்ல.

இதன் காரணமாக ஒரே சீரான முறையைக் கடைபிடிக்க அரசியல் நிர்ணய சபையில் தீண்டப்படாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு பூர்வாங்கத் தேர்தல் முடிவுகளை தூதுக்குழு கணக்கிலெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தூதுக்குழு இதைச் செய்யக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் தீண்டப்படாதவர்களுக்கான தேர்தல் முறை பற்றி புனா ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானது அல்ல என்று விவாதத்தின் பொழுது சர் ஸ்டாபோர்ட் கிரிப்சால் ஒப்புக் கொள்ளப்பட்டது. பின் ஏன் தூதுக்குழு அப்போது இதை தனது முடிவுக்கு அடிப்படையாக ஏற்றுக் கொண்டது?

 IV

எதிர்நோக்கும் அபாயத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

13. சாதி இந்துக்கள் அறுதிப் பெரும்பான்மையினராக உள்ள அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களை முற்றிலும் அவர்களது தயவில் இருக்கும் படி தூதுக்குழு விட்டுவிட்டது. மன்னர்பிரான் அரசின் வகுப்புவாரித் தீர்ப்பில் தங்களுக்கு வழங்கப்பட்டதான வாக்காளர் தொகுதிகளை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்றும், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து திரு.காந்தியினால் தங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட புனா ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் தீண்டப்படாதவர்கள் விரும்புகின்றனர்.

இதை, இந்துக்கள் எதிர்க்கக் கூடும். இந்துப் பெரும்பான்மையினரின் தயவில் தாங்கள் விடப்பட்டு விட்டதாக தாழ்த்தப்பட்டவர்கள் முறையீட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஓர் ஆலோசனைக்குழு அமைக்கலாம் என்ற யோசனையைத் தூதுக்குழு பிரபலப்படுத்தி வருகிறது. இந்த உத்தேச ஆலோசனைக் குழுவின் அதிகாரங்களையும் அமைப்பையும் ஆராயும் எவரும் அது மோசமானதிலும் மோசமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

i) அதன் அமைப்பில் அது அரசியல் நிர்ணய சபையின் ஒரு வெளிறிய பிரதிபிம்பமாகவே இருக்கும். அரசியல் நிர்ணய சபையைப் போலவே இதிலும் இந்துக்கள்தான் ஆதிக்கம் வகிப்பார்கள்.

ii) சிறுபான்மையினரின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனைக் குழுவின் முடிவுகள் சாதாரணப் பெரும்பான்மையைக் கொண்டே மேற்கொள்ளப்படும். இதன் பொருள் என்னவென்றால் அந்த முடிவுகள் சாதி இந்துக்களால் எடுக்கப்பட்டு, சிறுபான்மையினர் மீது திணிக்கப்படும் என்பதுதான்.

iii) சிறுபான்மையினரின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனைக் குழுவின் முடிவுகள் சாதாரணப் பெரும்பான்மையைக் கொண்டே மேற்கொள்ளப்படும். இதன் பொருள் என்னவென்றால் அந்த முடிவுகள் சாதி இந்துக்களால் எடுக்கப்பட்டு, சிறுபான்மையினர் மீது திணிக்கப்படும் என்பதுதான்.

iv) ஆலோசனைக் குழுவின் முடிவுகள் சாதகமாயிருந்தாலும் அவை வெறும் பரிந்துரைகளாகவே இருக்கும்; அவை அரசியல் நிர்ணய சபையை எந்த வகையிலும் கட்டுப்படுத்த மாட்டா.

14. ஆலோசனைக் குழுவை அமைக்கும் திட்டம் ஒரு மோசடி அல்லாவிட்டாலும் அது ஒரு கேலிக்கூத்து என்பதில் ஐயமில்லை. அது சிறுபான்மையினரின் நலனுக்கு இந்துப் பெரும்பான்மையினர் இழைக்கும் தீங்கிற்கு எதிராக செயல்படும் என்று நம்ப முடியாது. இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய நெடுநோக்கான திட்டங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களை இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றே கூற வேண்டும்.

ஒரு பெரும்பான்மையினர் அளிக்கக் கடமைப்பட்டுள்ள அரசியல் பாதுகாப்பினை அவர்களிடமிருந்து கோரும் உரிமையை தீண்டப்படாதவர்களுக்கு மறுக்க அவர்கள் முடிவு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி 1946 ஜூன் அன்று (இனம் 21, 6861) எழுதிய கடிதத்தில் இருந்து இது தெள்ளத் தெளிவாகிறது. அக்கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்ற ஒரு நிலையை காங்கிரஸ் எடுத்துள்ளது. இது ஓர் அதிர்ச்சியூட்டும் அறிக்கையாகும்.

ஏனெனில் 1939, அக்டோபர் 21 ஆம் தேதிய ‘ஹரிஜன்’ என்ற தமது வார இதழில் தாழ்த்தப்பட்டவர்கள்தான் இந்தியாவின் ஒரே உண்மையான சிறுபான்மையினர் என்று திரு.காந்தியே ஒப்புக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் இவ்வாறு ஒரு முழுக் குட்டிக்கரணம் அடித்துள்ளது. காங்கிரஸ் தற்பொழுது எடுத்துள்ள நிலையானது, தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினர் என்று குறிப்பிடும் இந்திய அரசின் 1935 ஆம் வருடச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முரணானது. இந்தத் தலைகீழ் மாற்றத்தின் மூலம் என்ன தீங்கு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது சாத்தியமல்ல.

தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினராகக் காங்கிரஸ் கருதவில்லை என்றால் அரசியல் நிர்ணய சபை மற்ற சிறுபான்மையினருக்கு அளிக்க ஒப்புக்கொண்டுள்ள அதே பாதுகாப்பினை இவர்களுக்கு அளிக்க மறுக்கக்கூடும். ஆகவே ஆலோசனைக் குழுவால் இந்த ஆபத்திலிருந்து தீண்டப்படாதவர்களைக் காப்பாற்ற முடியாது.

15. ஆகவே, தீண்டப்படாதவர்களின் நிலை ஆபத்துக்குள்ளாக்கப்படாமலிருப்பதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும். அது அளித்த வாக்குறுதிகளுக்காக மட்டுமன்றி அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படக் கூடியவை அல்ல என்பதற்காகவும் இதைச் செய்ய வேண்டும்.

16. நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும்? தற்காலிக அரசைப் பொறுத்தவரை தீண்டப்படாதவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் களையப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களுக்கான ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவாவுகின்றனர். நிர்வாக சபைக்கு தங்கள் பிரதிநிதியை நியமனம் செய்யும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று விழைகின்றனர்.

இவை புதிய கோரிக்கைகள் ஒன்றும் அல்ல. 1945 ஆம் வருட சிம்லா மாநாடு முதற்கொண்டே அவை தாழ்த்தப்பட்டவர்களின் தனிபெரும் உரிமைகள் என்று குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. இந்த தீங்கு இப்போது களையப்படுவது கடினம் என்று அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் சூழ்நிலைகள் மாறி, அரசு திருத்தியமைக்கப்பட்டால் இந்தத் தீங்கைச் சரிசெய்யும்படி நாடாளுமன்றம் மன்னர்பிரான் அரசை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

17. தங்களுடைய அரசியல் பாதுகாப்பினைப் பறிக்க முடிவுசெய்துள்ள சாதி இந்துக்கள் நிறைந்துள்ள அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தற்பொழுது எவ்வளவோ செய்ய முடியும். இந்த ஆபத்தினைத் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்:

I. தாழ்த்தப்பட்டவர்களை தாங்கள் சிறுபான்மையினராகக் கருதுவதாக பிரகடனம் செய்யும்படி மன்னர்பிரான் அரசை வலியுறுத்தலாம்.

1946 ஜூன் 25-ஆம் நாளைய கடிதத்தில் (இனம் 21/6861) காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டின்படி இது மிக முக்கியமானது. காங்கிரசுக்கு வைஸ்ராய் எழுதிய 1946 ஜூன் 27-ஆம் தேதிய (இனம் 38/6861) கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்ற காங்கிரசின் நிலைப்பாட்டைக் குறித்த ஒரு மறுப்பைத் தவிர்த்திருப்பதால் இது மிகமிக அவசியமாகிறது. தற்பொழுது அரசு ஓர் உறுதிமொழி அளிக்க வற்புறுத்தப்படவில்லையென்றால் தாழ்த்தப்பட்டவர் இரு வழிகளில் பாதிக்கப்படுவர்:

அ) இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் நிர்ணய சபை சிறுபான்மையினருக்கான உரிமையை அவர்களுக்கு அளிக்க மறுக்கும்.

ஆ) தாழ்த்தப்பட்டவர்களை ஒரு சிறுபான்மையினர் எனப்பாவிக்கத் தாங்கள் கட்டுப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தை வைத்து மன்னர்பிரான் அரசு அவர்களின் உதவிக்கு வர இயலாது போகும்.

II. சிறுபான்மையினருக்கு அரசியல் நிர்ணய சபை வகுத்துத் தந்திருக்கும் பாதுகாப்புகள் போதுமானவையா, உண்மையானவையா என்று ஆராய ஒரு அமைப்பை மன்னர்பிரான் அரசு நிறுவுமா, அப்படியெனில் எவ்வகையில் நிறுவும் என்பதை அறிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

அ) அமைச்சரவைத் தூதுக்குழுவினர் தங்களுடைய 1946, மே 25-ஆம் நாள் (6835) கூடுதல் அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

“அரசியல் நிர்ணய சபை தனது பணிகளை முடித்துக் கொண்டவுடன், இறையாண்மையை இந்திய மக்களுக்கு மாற்றித் தருவதற்குத் தேவையான செயல்பாடுகளை நாடாளுமன்றத்திற்கு மன்னர்பிரான் அரசு பரிந்துரைக்கும்; சர்ச்சைக் கிடமற்ற முறையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு விஷயங்களை மட்டுமே இதற்கு முன்நிபந்தனையாக விதிக்கும் அவையான: ஒன்று சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு (அறிக்கையின் 20வது பத்தி) போதுமானபடி வழி வகை செய்ய வேண்டும். இரண்டு அதிகார மாற்றம் (அறிக்கையின் 22-வது பத்தி) சம்பந்தமாக எழும் விஷயங்களைப் பற்றி மன்னர்பிரான் அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்க வேண்டும்.”

இந்தப் பத்தியின் பொருள் சரியாக விளக்கப்படவில்லை. எனவே, தங்களுடைய எண்ணத்தை தெள்ளத் தெளிவாக்கும்படி மன்னர்பிரான் அரசு வலியுறுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஆ) “மட்டுமே” என்ற சொற்கள், அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்படும் சிறுபான்மையினர் பாதுகாப்பு போதுமானவையா, அவை உண்மையானவையா என்பதை அறியும் உரிமையை மன்னர்பிரான் அரசே வைத்துக் கொள்ளும் என்ற பொருளைக் கொண்டதெனில், அந்த ஆய்வுக்கு எந்த வகையான அமைப்பை நிறுவப்போகிறார்கள் என்று அறிவிக்கும்படி மன்னர்பிரான் அரசை வலியுறுத்துவது அவசியம்.

சிறுபான்மை வகுப்பினரில் இருந்து சாட்சிகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைப்பது மிகப் பொருத்தமானதாக இருக்கும். இதற்கு ஒரு முன்னுதாரணம் உள்ளது. 1935 ஆம் வருட இந்திய அரசுச் சட்டம் வகுக்கப்பட்டு வந்த வேளையில் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் அறிக்கை சம்பந்தமாக இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை.

III. சாதாரண பெரும்பான்மையினர் மூலம் சிறுபான்மையினரின் பாதுகாப்பினை நீக்குவதற்கு எதிர்கால இந்திய சட்டமன்றங்களுக்குள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விதி அரசியல் நிர்ணய சபை உருவாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டத்தை மாற்றுவதற்கும் சிறுபான்மையினருக்குள்ள பாதுகாப்புகளை நீக்குவதற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

இந்திய சட்டமன்றங்களால் இந்தப் பாதுகாப்புகள் நீக்கப்படக்கூடுமானால் நாடாளுமன்றத்தில் இப்பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பயனே இல்லை. இச்செயல்களுக்கெதிரான ஒரே பாதுகாப்பு என்னவெனில் இந்திய சட்டமன்றங்களின் அரசியல் சட்ட அதிகாரங்களுக்கு ஒரு எல்லை நிர்ணயிப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்புகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும்தான். இவை போன்ற சில வழிவகை ஏற்பாடுகள் அமெரிக்க அரசியல் சட்டத்திலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளன.

அ) இவ்விஷயம் சிறுபான்மையினருக்கு மிக முக்கியமானது எனினும் அமைச்சரவைத் தூதுக்குழு இதைச் சிந்திக்கவே இல்லை. இதுபற்றி தனது கருத்தைத் தெரிவிக்கும்படி மன்னர்பிரான் அரசை வலியுறுத்துவது அவசியமாகும்.

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும், எழுத்தும் - தொகுப்பு 19)

Pin It

டாக்டர் அம்பேத்கருக்குத் திரு.அட்லி கடிதம் (அதிகார மாற்றம் , தொகுதி VIII, எண்.105, பக்.170-72)

பாரிஸ், ஆகஸ்டு 1, 1946

அன்பார்ந்த அம்பேத்கர் அவர்களே,

ஜூலை 1ம் தேதிய உங்களுடைய கடிதத்தையும் அத்துடன் இணைத்திருந்த ஆவணங்களையும் கவனமாக ஆய்வு செய்தேன். (ஜூலை முதல் தேதியன்று, டாக்டர் அம்பேதர்கர், திரு.அட்லிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அத்துடன் சமீபத்திய கடிதப் போக்குவரத்து, கோரிக்கை மனு, ஒரு சொற்பொழிவு ஆகியவற்றின் நகல்களையும் மற்றும் சிலவற்றையும் இணைத்திருந்தார். டாக்டர் அம்பேத்கரின் கடிதமானது, ஜூன் 17ல் திரு.அட்லிக்கு அவர் அனுப்பிய ஒரு தந்தியின் தொடர்ச்சியேயாகும். அதுவும் இதுபோன்ற விஷயங்களையே கொண்டிருந்தது. அந்தத் தந்தியின் வாசகம் வருமாறு:

ambedkhar 400“கடந்த ஆண்டு சிம்லா மாநாடு நடைபெற்ற சமயத்தில், வைஸ்ராய் நான் தெரிவித்த ஆட்சேபத்தின் பேரிலும், பிரிட்டிஷ் அரசின் சம்மதத்தின் பேரிலும் இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினரினர் பிரதிநிதித்துவத்தை 14 பேர் கொண்ட நிர்வாக சபையில் இரண்டு இடங்களாக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். நான் மூன்று இடங்களைக் கோரியிருந்தேன். சமரசத்தின் பேரில் இரண்டை ஏற்றுகொண்டேன். ஆனால் இடைக்கால அரசு நேற்று வெளியிட்ட புதிய பிரேரணைகளில், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஓர் இடம் மட்டுமே தரப்பட்டுள்ளது.

உரிய ஆலோசனைக்குப் பிறகு அளிக்கப்பட்ட புனிதமான வாக்குறுதி மோசமாக மீறப்பட்டுள்ளது. ஓர் இடம் என்பது மிகவும் அநீதியானது. ஆறுகோடி தாழ்த்தப்பட்டவர்களை 40 லட்சம் சீக்கியர்களுடனும், 30 லட்சம் கிறித்தவர்களுடனும் பிரதிநிதித்துவ விஷயத்தில் தூதுக்குழு சமமாகக் கருதுகிறது. தாழ்த்தப்பட்ட சாதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளவர் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இவர் முற்றிலும் இந்து வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இவர் காங்கிரசின் ஒரு கைப்பாவையே. தாழ்த்தப்பட்ட சாதி காங்கிரஸ்காரர் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குப் பிரதிநிதித்துவம் வகிப்பதில்லை. காங்கிரசையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அமைச்சரவைத் தூதுக்குழு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தீங்குக்கு மேல் தீங்காக இழைத்து வருகிறது. காங்கிரசைத் திருப்தி செய்வதற்காகவும், நாட்டின் பொதுவாழ்வில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சுயேச்சையான நிலையை ஒழித்துக் கட்டுவதற்காகவும் அவர்களைப் பலிகடாக்களாக்குவதில் முனைந்துள்ளனர். தயவு செய்து தலையிட்டு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரண்டு இடங்களை வழங்குமாறும் அவை சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் நிரப்பப்பட வேண்டுமென்றும் தூதுக்குழுவுக்கு ஆணையிடுங்கள்.

சம்மேளனம் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநிதித்துவம் வகிக்கிறது என்பதைத் தூதுக் குழு அறியும். தாழ்த்தப்பட்ட சாதியினர் இரு இடங்களை வற்புறுத்துகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் வேண்டாம். என்னுடைய நோக்கம் பற்றித் தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக இடைக்கால அரசில் அங்கம் வகிக்க நான் விரும்பவில்லை. நான் வெளியிலே இருக்கிறேன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காக நான் போராடி வருகிறேன். பிரிட்டிஷ் அரசிடம் ஓரளவு நீதி உணர்ச்சி இன்னும் இருக்கிறது என்று நம்புகிறன் – அம்பேத்கர்1

(எல்/பி அண்ட் ஜே/10/50: எஃப்எஃப்81-3 மற்றும் அட்லி ஆவணங்கள், பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு).

அமைச்சரவைத் தூதுக் குழுவும் வைஸ்ராயும் தாழ்த்தப்பட்ட சாதியினரின்பால் அநீதியாக நடந்து கொள்கிறார்கள் என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 1945 சிம்லா மாநாட்டில் கடைப்பிடித்த கொள்கையை அவர்கள் ஏன் மாற்றிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் கடந்த வசந்த காலத்தில் நடைபெற்ற மாகாண சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளே என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

வாக்களிப்பு புள்ளிவிவரங்களை தூதுக்குழு கவனமாக ஆராய்ந்தது. நானும் அவற்றைப் பரிசீலனை செய்தேன். தற்போதைய தேர்தல் முறை, காங்கிரசுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட சாதி வேட்பாளர்களுக்கு நீதி வழங்குவதில்லை என்ற கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது என்பதை நாங்கள் உணருகிறோம். மறுபுறத்தில், பூர்வாங்கத் தேர்தல்களில் உங்களுடைய சம்மேளனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களின் சாதனைகள் குறித்து நீங்கள் கூறுவதைப் புள்ளி விவரங்கள் ஆதாரப்படுத்தவில்லை. (ஜூலை 1ம் தேதிய தனது கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு எழுதினார்:

இந்தியாவில் பூர்வாங்க தேர்தல்கள் நடைபெற்ற இடங்களிலெல்லாம் அவற்றின் முடிவுகள் சம்மேளனம் நிறுத்தி வைத்த வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்கள், காங்கிரஸ் நிறுத்தி வைத்த வேட்பாளர்கள் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுத் தோல்வி அடைந்தனர். எல்/பி அண்ட் ஜே/10/50; எ/ஃ/ப 81) இங்கு இந்த விஷயம் குறித்து நான் விரிவாக வாதிக்க விரும்பவில்லை. ஆயினும், பூர்வாங்கத் தேர்தல்கள், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட 151 இடங்களில் 43க்கு மட்டுமே நடைபெற்றன என்பதே உண்மை. இந்த 43 பிரைமரி தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் 22 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களை வென்றது.

உங்களுடைய கடிதத்தில் நீங்கள் மூன்று திட்டவட்டமான வேண்டுகோள்களை விடுத்திருக்கிறீர்கள்.

(.அவையாவன: (1) தாழ்த்தபட்ட சாதியினர் அமைச்சரவைத் தூதுக்குழு அறிக்கையின் 20வது பத்தியின் பொருள்படி ஒரு சிறுபான்மையினர் என்று மன்னர்பிரான் அரசாங்கம் கருதுகிறது என்று வெளிப்பபடையாகக் கூற வேண்டும்.

(2) பெரும்பான்மையினர் பற்றிய அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு வகை செய்யும் திருப்திகரமாகவும் பாதுகாப்புகளை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு, அரசுரிமையை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தில்

(3) இடைக்கால அரரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் குறைந்தபட்சம் இரு பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். இவர்கள் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் நியமிப்பவர்களாக இருக்க வேண்டும். அதே கடிதம்: எஃப் 82)

முதலாவதைப் பொறுத்தமட்டிலும், அமைச்சரவைத் தூதுக்குழுவின் மே 16, மே 25 அறிக்கைகளின் ஷரத்துகளுக்கு இசைவான முறையில் அரசியல் நிர்ணய சபைக்கு சாத்தியமான முழு செயல் சுதந்திரம் இருக்க வேண்டுமென்பதில் மன்னர் பிரான் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு முக்கிய சிறுபான்மையினர் என்று நாங்கள் கருதவே செய்கிறோம், சிறுபான்மையினர் ஆலோசனைக் குழுவில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கும் பிரகடனத்தை தாழ்த்தப்பட்ட சாதியினரோடு மட்டும் நிறுத்திக் கொள்ளப்பட முடியாது.

ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையோர் என்ற வகையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்று நாங்கள் கருதும் அனைத்து சக்திகள் சம்பந்தப்பட்ட அறிக்கையாகவே அது இருக்க வேண்டும்.

அது மன்னர்பிரான் அரசாங்கத்தின் ஓர் அபிப்பிராயம் என்று மட்டுமே இருந்தபோதிலும்கூட, அது அரசியல் நிர்ணய சபையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தவிர்க்க முடியாமல் வியாக்கியானம் செய்யப்பட்டு விடும் அந்த வகையில் அது கடும் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். இந்த சூழ்நிலையில், அத்தகைய ஒரு பிரகடனம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

உங்களுடைய இரண்டாவது வேண்டுகோளைப் பொறுத்தமட்டிலும், காமன்ஸ் சபையில் கடந்த மார்ச் 15ம் தேதியன்று நிகழ்த்திய என்னுடைய உரையில், நான் கூறியதாக நீங்கள் சுட்டியுள்ள சொற்கள் இடம்பெறவில்லை. (சிறுபான்மையோரின் பாதுகாப்புக்குப் போதிய வகை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்கெனவே கூறியிருப்பதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்குப் பின்வரும் சொற்கள், அதாவது, ‘பெரும்பான்மை பற்றிய பயத்திலிருந்து விடுபட்டு தாழ்த்தப்பட்ட சாதியினர் சுதந்திரமாக வாழ்வதற்கு வகை செய்யும் பாதுகாப்புகள்’ – என்ற சொற்கள் சேர்க்கப்பட்டால் அவருடைய இரண்டாவது வேண்டுகோள் பூர்த்தி செய்யப்படும். இந்த சொற்களை மார்ச் 15ம் தேதிய உரையில் அட்லியே குறிப்பிட்டிருந்தார் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார். அதே கடிதம்.) நான் கூறியதெல்லாம் இதுதான்: “சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமாக நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். சிறுபான்மையோர் அச்சமின்றி வாழ்வதற்கு இயல வேண்டும்.”

மன்னர்பிரான் அரசாங்கத்தின் கருத்து இதுவே. மே 25ம் தேதிய அமைச்சரவைத் தூதுக்குழுவின் அறிக்கையின் 4வது பத்தியில் இது காணப்படுகிறது. அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளதை விளக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் வேறு எந்த அறிவிப்பும் மன்னர்பிரான் அரசாங்கம் வெளியிடுவது விவேகமாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் குறைந்தபட்சம் 2 பிரதிகளாவது இடம்பெற வேண்டும் என்பதும், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதும் உங்களுடைய இறுதியான வேண்டுகோள். இது சாத்தியம் என்ற வகையில் எந்த நம்பிக்கையும் உங்களுக்கு நான் அளிக்க முடியாததற்காக வருந்துகிறேன்.

அரசியல் நிர்ணய சபைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

சி.ஆர்.ஏ.

***

திரு.அட்லிக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் (எல்/பி அண்ட் ஜே/10/50: எஃப் 55)

“ராஜ்கிருஹா”

தாதர், பம்பாய் – 14

ஆகஸ்ட் 12, 1946

அன்பார்ந்த அட்லி அவர்களே,

     1946 ஆகஸ்டு 1ம் தேதிய உங்களுடைய கடிதத்திற்கு நன்றி. 1946 ஜூலை 1ம் தேதிய என்னுடைய கடிதத்திற்கு பதிலளிப்பதற்கு உங்களுக்கு அவகாசம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே என்னுடைய கடிதத்தில் நான் எழுப்பியிருந்த பிரச்சினைகள் குறித்த உங்களுடைய கருத்துகளை நான் அறியச் செய்வதற்கு உங்களுக்கு அவகாசம் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

     2. மன்னர்பிரான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கை 1945 சிம்லா மாநாட்டில் திருத்தப்படுவதை நியாயப்படுத்தி நீங்கள் கூறியுள்ளதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோன்றே தாழ்த்தப்பட்ட சாதியினர் விஷயத்தில் தூதுக்குழு நடந்து கொள்ளும் விதத்தையும் நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெரும்பான்மையோர் காங்கிரசின் பக்கம் உள்ளனர் என்று காமன்ஸ் சபையில் திரு.அலெக்சாண்டர் கூறியிருப்பது அட்டூழியமானது, உண்மையில் அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்று என்னால் கூறாமல் இருக்க முடியாது. இது என்னுடைய கருத்து மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ஆங்கிலேயரின் கருத்துமாகும். தற்போது இங்கிலாந்திலுள்ள சர் எட்வர்டு பெந்தாலை நீங்கள் ஆலோசனை கலந்தாலே, அவர் என்னை ஆதரிப்பார் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

     3. பூர்வாங்கத் தேர்தல்களில் சம்மேளனத்தின் சாதனைகள் பற்றிய உங்களுடைய பகுப்பாய்வு சம்பந்தமாக, நான் கூற வேண்டியதெல்லாம், நிலைமையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமே. மேலும், தேர்தலைப் பற்றிய விவரங்கள் அல்லது அது நடந்த வழிமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறியாத எவரும், போதிய விளக்கமில்லாமல், அவற்றின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். நிலைமையின் மறுபக்கத்தைக் காங்கிரஸ் எடுத்துக்கூறியபோது தூதுக்குழு என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும். அதை அவர்கள் செய்யவில்லை என்பதே தூதுக்குழுவின் மீது என்னுடைய முக்கிய குற்றச்சாட்டாகும்.

இதை அவர்கள் செய்திருக்க வேண்டியது நீதியின்பாற்பட்டதாகும். அவர்களுக்குத் திருப்திகரமான விளக்கம் அளிப்பதற்கு நான் தவறியிருந்தால், அவர்கள் எடுத்துள்ள முடிவு நியாயமாக இருந்திருக்கும். வங்காளத்திலிருந்து அரசியல் நிர்ணய சபைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதே, தூதுக்குழுவுக்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது என்பதை நிரூபணம் செய்துள்ளது. என்னுடைய செல்வாக்கு பம்பாயிலும் மத்தியப் பிரதேசத்திலும் மட்டுமே உள்ளது என்று தூதுக்குழு காமன்ஸ் சபையில் கூறியுள்ளது. அப்படியெனில் நான் எவ்வாறு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க முடியும்? என்னுடைய தேர்தல் சம்பந்தமாக, மூன்று விவரங்களை உங்கள் மனத்தில் பதியவைக்க விரும்புகிறேன்.

ஒன்று, நான் மயிரிழையில் வெற்றியடையவில்லை. மாறாக அதிக அளவு வாக்குகள் பெற்று, காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த வங்காளித் தலைவர் திரு.சரத் சந்திர போஸையே தோற்கடித்திருக்கிறேன். இரண்டாவதாக, வங்காளத்தின் தாழ்த்தப்பட்ட சாதி சமூகத்துடன் எந்த வகையிலும் வகுப்புவாத பந்தங்களின் மூலம் நான் இணைந்திருக்கவில்லை. அவர்கள் என்னுடைய சாதியின்றும் வேறுபட்டவர்கள். உண்மையில், என்னுடைய சாதியைச் சேர்ந்த மக்கள் வங்காளத்தில் இல்லவே இல்லை.

இருந்தபோதிலும் வங்காளி தாழ்த்தப்பட்ட சாதியினர் மிகவும் தீவிரமாக என்னை ஆதரித்தனர். அதனால் நான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது. மூன்றாவதாக, வங்காளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் காங்கிரஸ் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும், காங்கிரஸ்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் ஓட்டளிக்கக் கூடாது என்று அவர்களது கட்சியின் விதியை மீறி அவர்கள் எனக்கு வாக்களித்தனர். வங்காளத்தில் எனக்கு ஆதரவாளர்கள் யாரும் இல்லையென்பதையா இது நிரூபணம் செய்கிறது? அமைச்சரவைத் தூதுக்குழு தனது முடிவில் நேர்மையாக இருந்தால், காமன்ஸ்சபையில் அவர்கள் தெரிவித்த தவறான கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும், மற்றும் சம்மேளனம் குறித்த கருத்தையும் மாற்றிக் கொண்டு, அதற்கு முறையான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

     4. சிறுபான்மையினர் குறித்த ஆலோசனைக் குழுவில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் தகுதியைப் பொறுத்தமட்டிலும், பிரிட்டிஷ் அமைச்சரவை தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒரு முக்கிய சிறுபான்மையினராகக் கருதுவதாக வாக்குறுதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அமைச்சரவைத் தூதுக்குழு ஒரு பகிரங்கமான அறிக்கை விடுத்தாலன்றி, அதுவரையிலும் இந்தக் கருத்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவி செய்யாது என்று மீண்டும் கூறுவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் இதைக் கூறுவதற்குக் காரணம், பேச்சுவார்த்தைகள் முறிந்து போவதற்கு முன்னால், காங்கிரசின் சார்பில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் வைஸ்ராயிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு சிறுபான்மையினர் என்னும் கருத்தை உறுதியாக மறுத்திருந்தார். இந்தக் கருத்தை பிரிட்டிஷ் அமைச்சரவை உரிய காலத்தில் திருத்தாவிட்டால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாதம் ஆலோசனைக் குழுவில் பரிசீலிக்கப்படாமல் போகக்கூடும் என்று தாழ்த்தப்பட்ட சாதியினர் அச்சமடைகின்றனர்.

ஏனெனில் அந்தக் குழுவில் காங்கிரஸ்காரர்களே பெரும் எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது நிச்சயம். திரு.காந்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கையைப் பார்க்கும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு சிறுபான்மையினர் என்று கருதப்படாமல், இந்து சமூகத்தினுள் ஒரு சமூகப் பிரிவு என்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் மிகவும் நிச்சயமெனத் தோன்றுகிறது. பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அவர்களுடைய ஆதரவை அளிப்பதற்கு மறுத்துவிட்டுள்ள நிலைமையில், தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்பந்தமாகத் தான் விரும்பும் எதையும் இப்பொழுது செய்ய முடியும் என்று திரு.காந்தி நினைக்கிறார் என்பது தெளிவு.

     5. இந்த சூழ்நிலைமைகளில், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வருங்காலத் தகுதிக்கு ஏற்படவிருக்கும் உத்தேச அபாயத்தைத் தடுப்பதற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு முக்கிய சிறுபான்மையினர் என்று ஒரு பிரகடனம் வெளியிட வேண்டுமென்றும் உங்களை வற்புறுத்துகிறேன்.

     6. இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இரண்டு இடங்களைப் பெறுவதற்கு நீங்கள் எந்த உறுதியும் வழங்க முடியாது என்பதை அறிய வருத்தமடைகிறேன். இந்த மறுப்பை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று கருதுகிறேன். அவர்களின் (தாழ்த்தப்பட்ட சாதியினரின்) எண்ணிக்கையின் அடிப்படையிலும் மற்றும் 1945ம் ஆண்டில் நடைபெற்ற கடந்த சிம்லா மாநாட்டின் போது வழங்கப்பட்ட உறுதிமொழியை முன்னிட்டும், சீக்கியர்களுக்கும் பிற சிறிய சிறுபான்மையோருக்கும் வழங்கப்பட உத்தேசித்திருப்பதைக் காட்டிலும் அவர்கள் (தாழ்த்தப்பட்ட சாதியினர்) கூடுதல் மேம்பட்ட முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியுள்ளவர்கள். நான் முன்வைத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது என்று கருதுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர்.

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுப்பும் 19)

Pin It


இந்தியாவில் நிலவும் அரசியல் தேக்க நிலைக்கு தீர்வு காணுவதற்காக, முட்டுக்கட்டை நிலைக்கு முடிவுகட்டுவதற்காக இந்த ஆண்டின் துவக்கத்தில் தொழிற்கட்சி அரசாங்கம் அமைச்சரவைத் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. ஓர் அரசியல் நிர்ணயசபை மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் ஒரு திட்டத்தை இத்தூதுக்குழு முன்வைத்தது.

ambedkhar 350மாகாண சட்டமன்ற உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்த அரசியல் நிர்ணய சபை அமைந்திருக்கும். அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் நோக்கத்துக்காக மாகாண சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவைத் தூதுக்குழுத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.

அவை வருமாறு: (1) முஸ்லீம்கள், (2) சீக்கியர்கள், (3) பொதுப் பிரிவினர்கள். இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கெனத் தனிப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருப்பர். இதன் பிரகாரம், அரசியல் நிர்ணய சபைக்கான முஸ்லீம் பிரதிநிதிகள் மாகாண சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதேபோன்று சீக்கியப் பிரதிநிதிகள் சீக்கிய உறுப்பினர்களாலும், பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏனையோராலும் தேர்ந்தெடுக்கப்படுவர். ‘பொதுப் பிரிவினர்’ எனப்படுவோரில் 1)இந்துக்கள் 2)தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 3)இந்தியக் கிறித்தவர்கள் மற்றும் 4) ஆங்கிலோ-இந்தியர்கள் முதலானோர் அடங்குவர்.

2. இந்துக்களோடு தங்களையும் சேர்த்திருப்பதை அறிந்த இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் வியப்புக்குள்ளானார்கள். இந்திய தேசிய நீரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒரு தனி சக்தியாக அங்கீகரிப்பதாக பன்முறை திரும்பத் திரும்ப ஓர் அரசியலமைப்புச் சட்டமும் திணிக்கப்பட மாட்டாது எனவும் மன்னர்பிரான் அரசு உறுதி அளித்திருந்தது. அமைச்சரவைத் தூதுக்குழு முஸ்லீம்களையும் சீக்கியர்களையும் தனி சக்திகளாக ஏன் அங்கீகரித்திருக்கிறது. அதே தகுதி ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டது என்று கேட்கப்படுகிறது.

அமைச்சரவைத் தூதுக்குழுவின் யோசனைகள் மீதான விவாதம் ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் நடைபெற்றது; அப்போது சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ், திரு.அலெக்சாண்டர் மற்றும் பெதிக்-லாரன்ஸ் பிரபு ஆகியோர் இந்த விமர்சனத்திற்கு எதிராக பின்வரும் இரு வகைப்பட்ட வாதங்களை எடுத்து வைத்தனர்.

1) கடந்த பிப்ரவரியில் சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காங்கிரசுடன் இருப்பதையும், தங்களுடைய கதிப்போக்கை காங்கிரசிடம் அதாவது இந்துக்களிடம் ஒப்படைத்து விட்டதையும் காட்டுகிறது. இவ்வாறு இருக்கும்போது அவர்களைத் தனியாகப் பிரிப்பதற்கான முகாந்திரம் ஏதுமில்லை.

2) சிறுபான்மையினர் சம்பந்தமான ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். அவர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை வகுத்துக் கொள்வது சம்பந்தமான கருத்துகளைத் தெரிவிக்க உரிமை பெற்றிருப்பார்கள்.

இதில் இரண்டாவது வாதம் பயனற்றது மட்டுமல்ல மிக மோசமானதும் கூட. இதன் காரணங்கள் மிகத் தெளிவானவை. ஆலோசனைக் குழுவின் தகுதியும் அதிகாரங்களும் நிர்ணயிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை. ஆலோசனைக் குழுவின் முடிவுகள் ஒரு சாதாரணப் பெரும்பான்மையினாலேயே நிறைவேற்றப்படும்.

கடைசியாக, அந்தக் குழு அரசியல் நிர்ணய சபையின் வெறும் பிரதிபலிப்பாக இருக்குமே அன்றி வேறல்ல. அரசியல் நிர்ணய சபையில் இடம்பெறும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பர். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் அல்லர். ஆகவே அவர்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர். ஆலோசனைக் குழுவில் அமர்த்தப்படுவோரும் அதே கட்சிக் கட்டளைக்கு உட்பட்டவர்கள். அவர்கள் அரசியல் நிர்ணய சபையிலும் சரி அல்லது ஆலோசனைக் குழுவிலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உண்மையான கருத்தை எடுத்துக் கூறுமுடியாது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியான சுதந்திரமான பிரதிநிதித்துவத்தை தாங்கள் தவறியதை நியாயப்படுத்துவதற்கு அமைச்சரவைத் தூதுக்குழு எடுத்தளித்த பிரதானவாதம் கடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை காங்கிரஸ் தான் வென்றது என்பதேயாகும். இந்த வாதம் கூட தாக்குப்பிடித்து நிற்க முடியாது. இறுதித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இடங்களில் காங்கிரஸ் வென்றது என்பது உண்மையே. ஆனால் பல காரணங்களுக்காக இத்தேர்தல் முறைகளை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

முதலாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைத்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கட்சி போன்ற கட்சிகள் இதன் காரணமாக மக்களிடையே செல்வாக்கு இழந்து போயிருந்தன.

இரண்டாவதாக, தேர்தல் சமயத்தில் நடைபெற்ற இந்திய தேசிய ராணுவ விசாரணை காங்கிரசுக்கு அனுகூலமாகவும் ஏனைய கட்சிகளுக்குப் பிரதிகூலமாகவும் அமைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் இந்திய தேசிய ராணுவ விசாரணை நடைபெற்றிருக்கவில்லை என்றால், காங்கிரஸ் படுதோல்வியடைந்திருக்கும். அந்த அளவுக்கு அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்திருந்தது.

இந்தத் தேர்தல் முடிவுகளை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு இந்த இரண்டு காரணங்களை தவிர, இதுபோல் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு இத்தேர்தல் முடிவுகளை ஓர் அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கும் ஒரு விசேடக் காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தேர்தல்களை இறுதியாக முடிவு செய்யும் விஷயத்தில் இந்துக்களும் வாக்களிக்கக்கூடிய ஒரு கூட்டு வாக்காளர் முறை இருந்து வருவதுதான் அந்தக் காரணம்.

இந்துக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாதலால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரை முற்றிலும் இந்து வாக்குகளைக் கொண்டு தேர்ந்தெடுப்பது காங்கிரசுக்குச் சுலபமாகி விடுகிறது. ஆகவே மாகாண சட்டசபைக்களுக்கு காங்கிரசின் சார்பாக நிற்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வேட்பாளர்கள் முற்றிலும் இந்துக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களேயன்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளால் அல்ல என்பதை அமைச்சரவைத் தூதுக்குழு மறுக்க முடியாது.

இறுதி சுற்றுத் தேர்தலுக்கு முன் நடக்கும் பூர்வாங்கத் தேர்தல் முடிவுகள்தான் காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதை நிர்ணயிக்கும் உண்மையான அளவுகோலாகும். ஏனெனில் பூர்வாங்கத் தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனி வாக்காளர் தொகுதி உள்ளது. அதில் வாக்களிக்க இந்துக்களுக்கு உரிமை கிடையாது. ஆகவே பூர்வாங்க தேர்தல்கள்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. அவ்வாறு பார்க்கும்போது பூர்வாங்கத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன? தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காங்கிரசுடன் இருக்கின்றனர் என்பதை அவைக் காட்டுகின்றனவா?

மாகாண சட்டசபைகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 151 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களைத் தவிர ஏனைய பல்வேறு மாகாணங்களில் அவை பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. பூர்வாங்கத் தேர்தல்கள் என்பவை கட்டாயமல்ல. ஆனால் ஒரு இடத்திற்கு நான்கு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் அப்போது பூர்வாங்கத் தேர்தல்கள் நடத்துவது அவசியமாகிறது.

கடந்த இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு முந்தைய பூர்வாங்கத் தேர்தலில், மொத்தம் 151 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பூர்வாங்கத் தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அவை பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்பட்டன:

மெட்ராஸ்            -     10

பம்பாய்               -     3

வங்காளம்            -     12

ஐக்கிய மாகாணங்கள்  -     3

மத்திய மாகாணங்கள் -     5

பஞ்சாப்               -     7

பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாகாணங்களில் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்கள் இல்லை.

40 தொகுதிகளின் துவக்கச் சுற்றுத் தேர்தல் முடிவுகள் இவ்வறிக்கையின் இணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன அம்முடிவுகள் நிரூபிப்பதாவது:

1) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தம் இருந்த 283 இடங்களில் 46 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது (பார்க்க:அட்டவணை 1). வெற்றி பெற்ற மொத்த வேட்பாளர்கள் 168 பேரில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 38 பேர் மட்டுமே. (பார்க்க: அட்டவணை 5)

2) பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலில் ஒரு கட்சி நுழைவதன் நோக்கமே, அது தன் கட்சியின் சார்பாக நான்கு வேட்பாளர்களை நிறுத்தி அதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு வருவதுதான். ஒரு கட்சி தன் சார்பாக நான்கு வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என்பது தன் கட்சிக்கு வாக்காளர்கள் எந்த அளவுக்கு வாக்களிப்பார்கள் என்று அது கொண்டுள்ள நம்பிக்கையைப் பொறுத்துள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளருக்கு மேல் நிறுத்த முயன்றதே இல்லை.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லாததே காங்கிரசின் இந்தச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவு. தான் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு வேட்பாளர்களை நிறுத்த ஒரு கட்சியினால் முடிந்ததென்றால் அது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம்தான். (பார்க்க: அட்டவணை 2, பகுதிகள் 1, 5 பத்திகள் 3 மற்றும் 4)

3) காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களின் மொத்த வாக்குப் பதிவில் அது பெற்றது 28 சதவீதமே என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: அட்டவணை IV)

4) இறுதிச் சுற்றுத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் உதவியுடனாவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லையென்றால், சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவ்வகையில் பார்த்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம்தான் அச்சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி என்பதும், காங்கிரஸ் அல்லாத 72 சதவீத வாக்களிப்பும் அவர்களையே சேரும் என்பதும் ஏற்கக் கூடியதாகும். (பார்க்க: அட்டவணை IV).

டாக்டர் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே என்று அமைச்சரவைத் தூதுக் குழுவினர் வாதிட்டனர்.

இந்தக் கூற்றுக்கு எத்தகைய அடிப்படையும் இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம் பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களைப் போல் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளை ஏனைய மாகாணங்களிலும் பெற்றுள்ளது. சம்மேளனம் மற்ற மாகாணங்களிலும் இயங்கி வருகிறது. இவ்வறிக்கையை அளித்த தூதுக்குழுவினர் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் பெற்ற மகத்தான வெற்றியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிட்டனர்.

அவர் வங்காள சட்டசபையிலிருந்து ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டார். அவர் அதில் 7 முதன்மை வாக்குகளைப் பெற்றதோடல்லாமல் காங்கிரஸ் கட்சித் தலைவரான திரு.சரத் சந்திரபோசையே தோற்கடித்து பொது இடத்துக்கான வாக்களிப்பில் முன்னணியில் நின்றார். டாக்டர் அம்பேத்கருக்கு பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு வெளியே செல்வாக்கு இல்லையென்றால் அவரால் எப்படி வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது? வங்க மாகாண சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 30 இடங்கள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவற்றில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அம்பேத்கர் கட்சியைச் சேர்ந்த மீதம் இருவரில் ஒருவர் தேர்தல் நாளன்று உடல்நலமின்றி வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் 6 பேர் காங்கிரஸ் கட்டளையை மீறி டாக்டர் அம்பேத்கருக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இதிலிருந்து காங்கிரசைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் கூட அவரை தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. ஆகவே இது தூதுக்குழுவின் அறிக்கை முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது.

அமைச்சரவைத் தூதுக்குழுவின் சரணாகதியால் மிகவும் ஊக்கம் பெற்ற காங்கிரஸ் அக்குழுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சிறுபான்மையினர் அல்ல என்று கூறும் அளவிற்கு சென்றுவிட்டது. இது எதைக் குறிக்கிறது? மற்ற சிறுபான்மை சமூகத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பினைக் கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் அளிக்கத் தயாராய் இல்லை என்பதையே குறிக்கிறது. காங்கிரசின் இந்தக் கூற்றை அமைச்சரவைத் தூதுக்குழு மறுக்கவில்லை. இங்குதான் ஒரு பெரிய ஆபத்து மறைந்திருக்கிறது. ஆகவே விவாதத்தின்பொழுது தூதுக்குழுவை மடக்கி, அது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என்பதைக் கூறும்படிக் கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது.

இறையாண்மை மாற்றப்படுவதற்கு முன் எல்லாச் சிறுபான்மையினரும் போதுமான பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள் என்ற மனநிறைவு நாடாளுமன்றத்திற்கு ஏற்பட வேண்டும் என்று தூதுக் குழுவினர் தங்கள் பிரேரணைகளில் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்பாதுகாப்பினைப் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் குழுவினர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பினை ஆராய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த ஒரு கூட்டுக் குழு ஏற்படுத்தப்படுமா என்பதும் தெளிவாக்கப்படவில்லை.

பாதுகாப்புகள் போதுமானவையா என்ற முடிவுக்கு வருவதில் மன்னர்பிரான் அரசு தனது சொந்த மதிப்பீட்டை மேற்கொள்ளும் என்று கூட குழு கூறவில்லை. இந்த விஷயங்கள் திட்டவட்டமாக்கப்படுவது அவசியம். ஏனென்றால் இது தூதுக் குழுவுக்கு பின்னால் தோன்றிய யோசனையாகும். அதன் ஆரம்ப திட்டங்களில் இது இடம்பெறவில்லை. சிறுபான்மையினரை மயக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் உந்தி என்றே இதனை எண்ணத் தோன்றுகிறது. 

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 19)

Pin It

பீமராவ் ஆர்.அம்பேத்கர் ( ஆதாரம்: அம்பேத்கர் தனிப்பட்ட வகையில் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் –ஆ-ர்.)

எம்.ஏ., பிஎச்.டி., டி.எஸ்சி., பார்-அட்-லா,

கவர்னர் ஜெனரலின்

நிர்வாக சபை உறுப்பினர்

22, பிருத்விராஜ் சாலை

புதுடில்லி,

மே14, 1946

அன்பார்ந்த திரு.அலெக்ஸாண்டர் அவர்களே,

காங்கிரசுக்கும் முஸ்லீம் லீகுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்து வருந்துகிறேன். உங்களுக்குப் பரிவும் நன்றியும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

அதே சமயத்தில் உடன்பாடு ஏற்படுத்துவதற்காக தூதுக்குழு மேற்கொண்ட முயற்சியானது ஒரு முதிய பனியா தனது சொத்துக்கு வாரிசு இல்லாத நிலையில், ஒரு வாரிசைப் பெறுவதற்காக ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தை எனக்கு நினைவூட்டுகிறது என்று என்னால் கூறாமலிருக்க முடியவில்லை.

ambedkar 460மணமகள் கருவுற்றாள். ஆனால் மணமகன் கடும் நோய்வாய்ப்பட்டான். ஆயினும், குழந்தையைப் பார்க்காமல் தான் மரணமடையப் போவதில்லை என்று உறுதி பூண்ட அவன் பிரசவமாகும் வரையில் காத்திருக்க விரும்பவில்லை. பிரசவமாவதற்கு நிறையக் காலமிருந்தது. மிகவும் பொறுமை இழந்த அவன் மருத்துவரை அழைத்து, மனைவியின் வயிற்றை அறுத்து, பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தனக்குக் காட்டும்படி கூறினான்.

அறுவை சிகிச்சையின் விளைவாகக் குழந்தை, தாய் இருவருமே மரணமடைந்தனர். அந்த பனியா செய்ததைப் போலவே தூதுக்குழுவும் செய்ய விரும்பியது என்று கூறினேன். உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், கர்ப்பம் முதிர்ச்சியடைவதற்கு இயற்கையாகத் தேவைப்படும் காலத்திற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாகப் பிரசவத்தை ஏற்படுத்தும் பணியில் தூதுக்குழு இறங்கியது என்று என்னைப் போலவே பலர் நினைக்கிறார்கள்.

2. இந்துக்களும் முஸ்லீம்களும் இந்த நாட்டின் வருங்காலத்தைப் பற்றி முடிவு செய்வதற்கு இன்று மனரீதியில் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுவது சரியே என்று எனக்குத் தோன்றுகிறது. இந்துக்களும் முஸ்லீம்களும் வெறும் கும்பல்கள். ஒரு கும்பல் கூட்டு முறையில் பகிர்ந்து கொள்ளும் ஓர் ஆவேசத்தைக் காட்டிலும் பொருளாயத ஆதாயத்தினால் அவ்வளவாகக் கவரப்படுவதில்லை என்பதை உங்களுடைய அனுபவத்தில் கண்டிருப்பீர்கள், ஏற்படவிருக்கும் அனுகூலங்களைப் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்து அதனடிப்படையில் செயல்படச் செய்வதைக் காட்டிலும் ஒரு மக்கள் திரளைக் கூட்டாகத் தியாகம் செய்யும்படி இணங்க வைப்பது எளிதாகும்.

ஒரு கூட்டம் லாப, நட்டம் பற்றிய உணர்வை இலகுவாக இழந்து விடுகிறது. அது உயர்வான அல்லது தாழ்ந்த, அன்பான அல்லது காட்டுமிராண்டித்தனமான, கருணையான அல்லது கொடூரமான நோக்கங்களால், உந்துதல்களால் நெகிழ்ந்து விடுகிறது. ஆனால் எப்போதும் விவேகத்துக்கு அப்பாற்பட்டதாகவே கீழான தாகவோ இருக்கிறது. அனைவரின் ஆவேச உணர்ச்சியில் ஒவ்வொருவரின் பகுத்தறிவும் இழக்கப்பட்டு விடுகிறது.

மரபுரிமைப் பண்பை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் தற்கொலை செய்து கொள்ளும்படி ஒரு கூட்டத்தை இணங்க வைப்பது எளிதானதாகும். நீங்கள் எவ்வாறு முன்செல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை கூற வேண்டியது என்னுடைய பொறுப்பல்ல. பங்கி பஸ்தியிலும் (பங்கி பஸ்தி – மகாத்மா காந்தி தங்கியிருந்த இடம்) 10, அவுரங்கஜிப் சாலையிலும் (10, அவுரங்கஜிப் சாலை – எம்.ஏ.ஜின்னா தங்கியிருந்த இடம் (மொ.ர்)) தூதுக்குழு கூடுதல் அறிவொளியையும், உயர்வான உத்வேகத்தையும் பெற்றுள்ளது.அத்தகைய அறிவொளியையும், உத்வேகத்தையும் மட்டுப்படுத்தும் வகையில் நான் எதையும் கூறமாட்டேன்.

ஆனால் அதேசமயத்தில், அவசரப்பட்டு செயல்பட்ட முதியவரைப் போன்ற ஒரு பரிதாபகரமான காட்சியை தூதுக்குழு வெளிப்படுத்தாமலிருக்க வேண்டுமெனில் (அயர்லாந்தின் சுயாட்சிக்கான தனது பிரச்சாரத்தில் கிளாட்ஸ்டன் ஈடுபட்ட முறையை வர்ணிப்பதற்கு சேம்பர்லேன் உபயோகப்படுத்திய சொற்றொடர்) ராஜதந்திரத்தில் ‘நிதானமடைவதற்கான காலகட்டம்’ என்று அழைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிலைமைக்குப் பரிகாரம் காண்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்று நிச்சயமாகக் கருதுகிறேன்.

3. தூதுக்குழு, பெரிய கட்சிகள், மற்றும் பெரிய கட்சிகளிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. தீண்டப்படாதவர்களின் பிரச்சினைக்கும் அரசியல் சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைக்கும் நீங்கள் எவ்வாறு பரிகாரம் காணப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வதில் நான் அக்கறை உடையவனாக இருக்கிறேன்.

சிம்லா பேச்சுவார்த்தைகளின் கடைசி நாளன்று தூதுக்குழு வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் டில்லிக்குத் திரும்பியபின், ஒரு சில நாட்களுக்குள், தாங்கள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப் போவதாகக் கூறப்பட்டிருந்தது. அனைத்து தாழ்த்தப்பட்ட சாதியினரும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துப் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவு தூதுக்குழு அடுத்து செய்யப்போவது இறுதியாக அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்யும்.

தூதுக்குழுவின் முடிவு, ஒன்று தீண்டப்படாதவர்களுக்கு வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சிக்கான பாதையைத்திறக்கும், அல்லது அது அவர்களது சவப்பெட்டியில் ஓர் ஆணியை அறையும். பிரச்சினை வாழ்வா சாவா என்றிருப்பதனால், தீண்டப்படாதவர்களின் பிரச்சினையை ஒரு சில நிமிடங்கள் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவது தவறாகாது என்று நினைக்கிறேன்.

4. தீண்டப்படாதவர்களின் பிரச்சினையானது அவர்களை எதிர்நோக்கும் மிகவும் கஷ்டமான பிரச்சினையாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாகக் கீழ்வரும் உண்மைகளை மனதில் பதியவைத்துக் கொண்டால், அதைப் புரிந்து கொள்வது எளிதாகும்: தீண்டப்படாதவர்கள் மிகப் பரந்த இந்து மக்கள் திரளினால் சூழப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பகை உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கிறார்கள். தீண்டப்படாதவர்களுக்கு எதிராக எத்தகைய அநீதியையும் அட்டூழியத்தையும் இழைப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. அன்றாடம் நிகழ்ந்து வருகின்ற இந்தக் கொடுமைகளை நிவர்த்தி செய்வதற்குத் தீண்டப்படாதவர்கள் அரசாங்கத்தின் உதவியைக் கோர வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த நிர்வாகத்தின் (அரசின்) தன்மையும் இயைபும் என்ன? சுருங்கக் கூறின், இந்தியாவிலுள்ள அரசு நிர்வாகம் முற்றிலும் இந்துக்களின் கைகளில் உள்ளது. அது அவர்களின் ஏக போகமாகும்.

மேலிருந்து கீழ்வரை அது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் ஆதிக்கம் செலுத்தாத இலாகாவே இல்லை. காவல்துறை, நீதித்துறை மற்றும் வருவாய்த் துறை, உண்மையில் அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நினைவில் கொள்ள வேண்டிய அடுத்த விஷயம் என்னவெனில், நிர்வாகத்தில் உள்ள இந்துக்கள் சமூக-நேசமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமன்றி, அவர்கள் சமூக-விரோதிகளாகவும், தீண்டப்படாதவர்களின் பகைவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களின் ஒரே நோக்கம் தீண்டப்படாதவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதும், அவர்களுக்கு சட்டத்தின் அனுகூலங்கள் கிடைக்காமல் பறிப்பதும் மறுப்பதும் மட்டுமன்றி, கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சட்டத்தின் பாதுகாப்பை அவர்களுக்கு மறுப்பதுமாகும். இதன் விளைவாக, தீண்டப்படாதவர்கள் இந்து மக்களுக்கும் இந்துக்கள் நிரம்பிய நிர்வாகத்திற்கும் இடையில் வைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஒருவர் அவர்களுக்கு எதிராக அநியாயங்கள் புரிகிறார், மற்றொருவர் பாதிக்கப்படுவோர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக அநீதி இழைப்பவரைப் பாதுகாக்கிறார்.

5. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் வகைப்பட்ட சுயராஜ்யம் தீண்டப்படாதவர்களுக்கு என்ன பொருள்பட முடியும்? அதன் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதாவது, இன்று, நிர்வாகம் மட்டும் தான் இந்துக்களின் கைகளில் உள்ளது, சுயராஜ்யத்தின் கீழ் சட்டப்பேரவையும் அரசும் கூட இந்துக்களால் நிரப்பப்பட்டுவிடும்.

சுயராஜ்யம் தீண்டப்படாதவர்களின் துன்ப துயரங்களை உக்கிரமாக்கவே செய்யும் என்பதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில், பகைமை உணர்வு கொண்ட நிர்வாகத்தை எதிர்க்கொள்வதோடு கூட, தீண்டப்படாதவர்கள் பகைமையான அல்லது அசட்டையான சட்டப் பேரவையையும், ஒரு சொரணையற்ற அரசையும், தீண்டப்படாதவர்கள்பால் கட்டுப்பாடற்ற மற்றும் கடிவாளமில்லாத நச்சுமனப்பாங்கையும், கொடுமையும், அநீதியான போக்கையும் கொண்ட ஒரு நிர்வாகத்தையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வேறு விதமாக இதை கூறவேண்டுமெனில், காங்கிரஸ் வகைப்பட்ட சுயராஜ்யத்தின் கீழ் தீண்டப்படாதவர்களுக்கு இந்துக்களும் இந்து மதமும் அவர்களுக்கு நிர்ணயித்துள்ள இழிவார்ந்த எதிர்காலத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு அவர்களுக்கு வழியே இருக்காது.

6. இந்தச் சுயராஜ்யம் தங்களுக்கு ஒரு பேரழிவாவதினின்றும் தடுப்பதற்குள்ள ஒரேவழி சட்டப்பேரவையில் தங்களுடைய பிரதிநிதிகள் இடம்பெறச் செய்வதுதான் என்று தீண்டப்படாதவர்கள் ஏன் வலியுறுத்தி வருகிறார்கள் என்பதற்கான காரணத்தை இது ஓரளவு உங்களுக்குப் புரியவைக்கும் என்று நம்புகிறேன், அப்பொழுது தான், இந்துக்களினால் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அநீதிகளையும் எதிர்த்து அவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க முடியும். அரசில் தங்களுடைய பிரதிநிதிகள் இருப்பதன் வாயிலாக அவர்கள் தங்களுடைய மேம்பாட்டுக்கானத் திட்டங்களை உருவாக்க முடியும்.

அரசுப்பணிகளில் பிரதிநிதிகள் இருப்பதன் வாயிலாக, அரசு நிர்வாகம் முற்றிலும் தங்களுக்குப் பகைமையாக இல்லாமற் செய்ய முடியும். சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் வேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கையின் நியாயத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களானால், தீண்டப்படாதவர்கள் ஏன் தனித் தொகுதிகளை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில் எவ்வித சிரமமுமிருக்காது. சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள், அவர்கள் சிறுபான்மையாக இருக்குமாறு விதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பெரும்பான்மையினரை சமாளிக்க முடியாது, இந்தப் பெரும்பான்மையினர் வகுப்புவாதிகளாக இருப்பது நிலையானது, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும்.

பெரும்பான்மையினருடன் எந்த அடிப்படையில் தங்களால் ஒத்துழைத்துப் பணியாற்ற முடியும் என்ற நிபந்தனைகளை நிர்ணயிக்கும் நிலையில் தங்களை வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களால் செய்ய முடியும். பெரும்பான்மையினர் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது.

இரண்டாவதாக, பெரும்பான்மையினர் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு மறுத்து, தங்களுடைய அநீதிகளைப் போக்குவதற்கு இணங்காவிடில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையினருக்கு எதிராக குறைந்தபட்சம் தங்களுடைய கண்டனத்தைத் தெரிவிப்பதற்கான தங்களுடைய சுதந்திரத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு நிலைநாட்டுவது? சட்டப்பேரவைகளில் உள்ள அவர்களது பிரதிநிதிகள், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பெரும்பான்மையினரின் வாக்கு காரணமாயில்லாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தனித் தொகுதிகள் வேண்டுமென்ற அவர்களுடைய கோரிக்கைக்கு இதுதான் அடிப்படை.

7. தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கிடைத்தாலன்றி, எந்தப் பாதுகாப்புகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எவ்வித மதிப்புடையவையாகவும் இருக்கப் போவதில்லை. தனித் தொகுதிதான் பிரச்சினையின் மையமான அம்சமாகும். 1946 ஏப்ரல் 9ம் தேதியன்று, தூதுக்குழுவினர் பேட்டி கண்ட மூன்று காங்கிரஸ் ஹரிஜனங்கள் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் சமர்ப்பித்த மனுவின் ஒரு நகல் எனக்கு முன்னால் இருக்கிறது. அவர்கள், “இங்கிலாந்தின் மக்களாகிய நாங்கள்” என்று கூறி, நாடாளுமன்றத்திற்கு ஒரு மனுவை சமர்ப்பிப்பதற்குத் துணிவுகொண்ட டூலி தெருவின் மூன்று தையற்காரர்களைக் காட்டிலும் எவ்விதத்திலும் மேம்பட்டவர்கள் அல்ல.

இதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சாதியினரின் சம்மேளனத்தின் சார்பில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் இந்தக் காங்கிரஸ் ஹரிஜனங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை என்பதை உணர்வது உசிதமாகும். இதிலுள்ள ஒரே வேறுபாடு, தேர்தல் தொகுதிகள் பிரச்சினை சம்பந்தமானதேயாகும். காங்கிரஸ் ஹரிஜனங்களின் கோரிக்கைகளை நீங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அவை உண்மையில் கோரிக்கைகள் அல்ல. அரசியல் பாதுகாப்புகள் என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் காங்கிரஸ் என்ன கொடுப்பதற்குத் தயாராயிருக்கிறது என்பதையே அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இது நான் புரிந்து கொண்டிருக்கும் விஷயம் மட்டுமல்ல. இதுதான் நான் அறிந்து கொண்டதும் ஆகும். கூட்டுத் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராயிருந்தால், காங்கிரஸ் அதனுடைய பங்குக்கு, என்னுடைய இதர கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதற்குத் தயாராயிருக்கும் என்று காங்கிரசின் மனநிலையை அறிந்த நபர்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினரின் இதர எல்லா கோரிக்கைகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கும் காங்கிரஸ் ஒரே ஒரு கோரிகையை, அதாவது தனித் தொகுதிகளை மட்டும் அது ஆட்சேபிப்பது ஏன் என்று நீங்கள் வியப்படைவீர்கள். காங்கிரஸ் என்ன சூழ்ச்சியைக் கையாள்கிறது என்பதை நீங்கள் அறிந்தால் வியப்படைய மாட்டீர்கள். அது ஒரு மிகவும் ஆழமான சூழ்ச்சியாகும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில பாதுகாப்புகள் வழங்குவதினின்றும் தப்பித்துக் கொள்வதற்கு வழி இல்லை என்பதை உணர்ந்துள்ளதினால் காங்கிரஸ், அந்த பாதுகாப்புகளைப் பயனற்றவையாக ஆக்குவதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு விரும்புகிறது. கூட்டுத் தொகுதிகள் ஏற்பாட்டில், பாதுகாப்புகளைப் பயனற்றதாகச் செய்யும் கருவி அடங்கியுள்ளதாகக் காங்கிரஸ் கருதுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கூட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கூட்டுத் தொகுதிகள் என்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரமில்லாத பதவியைக் கொடுப்பது என்று பொருள். அதிகாரத்துடன் கூடிய பதவியையே தாழ்த்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். தனித் தொகுதிகள் மூலமாகத்தான் அவர்கள் இதைப் பெற முடியும். அதனால்தான் அவர்கள் அதை வலியுறுத்தி வருகின்றனர்.

8.தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தனித்தொகுதிக்கு ஆதரவான வாதம் மிகவும் உறுதியான வாதமாகும். காங்கிரசைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் அதை ஏற்றுக் கொள்கின்றன. தனித்தொகுதிகளுக்கு ஆதரவான வாதங்களை, 1946, மே 3ம் தேதியன்று வேவல் பிரபுவுக்கு நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதை அவர் உங்களுக்குக் காண்பித்திருப்பார், எனவே அவற்றை மீண்டும் இங்கே எடுத்துக் கூறுவது அவசியமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின் இந்தக் கோரிக்கை சம்பந்தமாக தூதுக்குழு என்ன செய்யப்போகிறது என்பதே கேள்வி. தீண்டப்படாதவர்களை இந்துக்களின் அரசியல் நுகத்தடியின் கீழிருந்து அவர்கள் விடுவிக்கப் போகிறார்களா?

அல்லது காங்கிரசையும் அது பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இந்து பெரும்பான்மையோரையும் நண்பர்களாக்கிக் கொள்வதற்காகக் கூட்டுத் தொகுதிகள் முறைக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக அவர்களை ஓநாய்களுக்கு இரையாக்கப் போகிறார்களா?

பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிச் செல்வதற்கு முன்னதாக சுயராஜ்யம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு கழுத்துச் சுருக்காக மாறாமல் இருப்பதை மன்னர்பிரான் அரசாங்கம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்னர்பிரான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உரிமை இருக்கிறது.

9. தாழ்த்தப்பட்ட சாதியினரின்பால் பிரிட்டிஷாருக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு இருக்கிறது என்று கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள். எல்லா சிறுபான்மையோர்பாலும் அவர்களுக்கு தார்மிகப் பொறுப்பு இருக்கக்கூடும். ஆனால் அது ஒருபோதும் தாழ்த்தப்பட்டவர்கள்பால் அவர்கள் மீது சார்ந்துள்ள பொறுப்பைக் கடந்து அப்பால் செல்ல முடியாது.

மிகச் சொற்பமான பிரிட்டிஷ்காரர்களே இதை உணர்ந்துள்ளனர் என்பதும் மிகக் குறைவான பிரிட்டிஷ்காரர்களே இதை நிறைவேற்றத் தயாராயிருக்கிறார்கள் என்பதும் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருப்பதற்கு தீண்டப்படாதவர்கள் நல்கிய உதவிதான் காரணமாகும். கிளைவ்கள், ஹேஸ்டிங்கள், கூட்ஸ்கள் முதலியோரால் இந்தியா வெல்லப்பட்டது என்று பல பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் பெரிய தவறு வேறொன்றும் இருக்க முடியாது. இந்தியா, இந்தியர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தினால் வெல்லப்பட்டது.

அந்த ராணுவத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள். இந்தியாவை வெல்வதற்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் உதவி செய்யாமலிருந்திருந்தால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி சாத்தியமாயிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சியின் துவக்கத்திற்கு அஸ்திவாரம் அமைத்த பிளாசி சண்டையை, இந்தியாவை வெல்வதைப் பூர்த்தி செய்த கிர்கி போரை எடுத்துக் கொண்டு பாருங்கள். விதியை நிர்ணயித்த இந்த இரண்டு போர்களிலும் பிரிட்டிஷ்காரர்களுக்காக போரிட்ட படைவீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களே.

10. தங்களுக்காகப் போரிட்ட இந்த தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பிரிட்டிஷ்காரர்கள் என்ன செய்தார்கள்? அது ஓர் அவமானகரமான வரலாறு ஆகும். அவர்கள் செய்த முதல் காரியம் அவர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்தியதுதான். இதைக் காட்டிலும் ஈவு இரக்கமற்ற, கருணையற்ற, நன்றியற்ற, கொடூரத்திலும் கொடூரமான செயலை வரலாற்றில் எங்கும் காணமுடியாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ராணுவத்தின் கதவை மூடியதில் அவர்களின் ஆட்சியை இங்கு நிறுவுவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு உதவி செய்ததையும், 1857ம் வருடக் கலகத்தின்போது சுதேசிப் படைகளின் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியினால் பேராபத்துக்குள்ளானபோது அவர்களைப் பாதுகாத்து நின்றதையும் பிரிட்டிஷ்காரர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இதனால் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு பாதிப்புக்குள்ளானார்கள் என்பது குறித்து பிரிட்டிஷ்காரர்கள் எவ்விதக் கவலையும் படவில்லை. அதற்கு மாறாக ஒரே ஒரு வரி எழுதி அவர்களின் வாழ்க்கை ஆதாரத்தைப் பறித்துவிட்டு, அவர்களுடைய முந்திய இழிவான நிலைக்குள் அவர்களை மீண்டும் விழும்படிச் செய்தார்கள். அவர்களைச் சமூக இழிவுகளிலிருந்து மீட்பதற்கு எவ்வகையிலாவது பிரிட்டிஷ்காரர்கள் அவர்களுக்கு உதவி செய்தார்களா? மீண்டும் இதற்கு பதில் “இல்லை” என்பதுதான். பள்ளிக்கூடங்கள், கிணறுகள், பொது இடங்கள் முதலியவை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மூடப்பட்டன.

பொது நிதிகளிலிருந்து நிர்வகிக்கப்படும் எல்லா நிலையங்களிலும் அனுமதிக்கப்படுவதற்கு, குடிமக்கள் என்ற வகையில் தீண்டப்படாதவர்கள் தகுதி பெறும்படிச் செய்வதற்கு உதவுவது பிரிட்டிஷ்காரர்களின் கடமையாகும். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் அது எதையும் செய்யவில்லை. இன்னும் மோசமானது என்னவென்றால் தீண்டாமையைத் தாங்கள் தோற்றுவிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய செயலற்ற தன்மையை அவர்கள் நியாயப்படுத்தினர். தீண்டாமை பிரிட்டிஷ்காரர்களால் தோற்றுவிக்கப்படாமலிருந்திருக்கலாம்.

ஆனால் அன்று ஆட்சிபுரிந்த அரசு என்ற முறையில், தீண்டாமையை அகற்றுவது நிச்சயமாக அவர்களின் பொறுப்புத்தான். ஓர் அரசின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைப் பற்றி உணர்வுள்ள எந்த அரசும் அதைத் தவிர்த்திருக்க முடியாது. பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது? இந்த சமுதாயத்தை எந்த வகையிலும் சீர்திருத்தம் செய்வது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் தொடுவதற்கு அவர்கள் மறுத்தனர். இது விரைவில் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட மட்டிலும் தீண்டப்படாதவர்கள் வாழ்ந்து வரும் இக்காலத்திய அரசு, அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து, துன்புற்று, வாழ்ந்து, மரணமடைந்து வந்த, மறக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திய சுதேச மன்னராட்சிகளினின்றும் எந்த ஜீவாதார அம்சத்திலும் வேறுபட்டிருக்கவில்லை.

அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது, மாற்றம் பெயரளவானதேயாகும். இந்துக்களின் கொடுங்கோன்மை எப்போதும் போலவே தொடர்ந்து நீடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அது தடை செய்யப்படுவதற்கு மாறாக, அது தட்டிக் கொடுத்து வளர்க்கப்பட்டது. சமூகக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது பிரிட்டிஷ்காரர்கள், ஏற்கெனவே இருந்து வந்த ஏற்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணிக் காத்தனர். இதற்கு உதாரணமாக ஒரு சீனத் தையற்காரர் செய்ததைத் தான் கூற முடியும். பழைய கோட்டு ஒன்று அவரிடம் மாதிரிக்காகக் கொடுக்கப்பட்டது.

அவர் அதிலிருந்ததைப் போன்றே கிழிசல்களையும், ஒட்டுத் தையல் துண்டுகளையும் கொண்ட அதே போன்று ஒரு புதிய கோட்டைத் தைத்துப் பெருமிதத்துடன் கொடுத்தாராம்!  இதன் விளைவு என்ன? இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும கொடுமைகளுக்குப் பரிகாரம் காணப்படாமலேயே இருந்து வருகிறது. அவர்களது முன்னேற்றம் ஒவ்வொரு கட்டத்திலும் தடுக்கப்பட்டு வருகிறது.

உண்மையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி எதையாவது சாதித்திருக்கிறதென்றால், அது, தீண்டப்படாதவர்களின் நிலையான விரோதியாக இருந்து வருவதும், தொன்றுதொட்டு தீண்டப்படாதவர்கள் அனுபவித்து வரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிதாமகராக இருந்து வருவதுமான பிராமணீயத்தை வலுப்படுத்தி, அதற்குப் புத்துயிர் ஊட்டியதேயாகும்.

11. பிரிட்டிஷ்காரர் தங்கள் அதிகாரத்தைக் கைவிட்டுப் போகப் போகிறார்கள் என்று அறிவிப்பதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். “ஆட்சியையும் அதிகாரத்தையும் நீங்கள் யார் கையில் கொடுத்துவிட்டுப் போகப் போகிறீர்கள்?” என்று ஒரு தீண்டப்படாதவர் கேட்டால், அது தவறல்ல. பிராமணீயத்தின் ஆதரவாளர்கள் கையிலா? அவ்வாறாயின் இதன் பொருள் என்ன? வன்னெஞ்சகக் கொடுங்கோலர்களின், தீண்டப்படாதவர்களை கொடூரமாக ஒடுக்கின்றவர்களின் கைகளில் அதிகாரம் தரப்படுகிறது என்றுதான் இதற்குப் பொருள்.

இந்தியாவின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழீத்துக் கட்டுவதானது பிற கட்சிகளின் உறுப்பினர்களிடையில் எத்தகைய மனசாட்சி உறுத்தல்களையும் ஏற்படுத்த தேவையில்லை. ஆனால் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் நிலைபாடு என்ன? உரிமைகளற்றவர்களுக்காகவும் சமூகத்தின் அடித்தட்டிலுள்ளவர்களுக்ககாகவும் நிற்பதாகத் தொழிற்கட்சி உரிமை கொண்டாடுகிறது.

அது தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வதென்றால், அது இந்தியாவின் ஆறு கோடி தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்பதிலும், அவர்களின் நிலைமைப் பாதுகாப்பதற்குத் தேவையான யாவற்றையும் செய்யுமென்பதிலும், தமது மதத்தினாலும் தமது வாழ்க்கைத் தத்துவத்தினாலும் நிர்வாகம் செய்வதற்குக் தகுதியற்றவர்களாக உள்ள, உண்மையில் தீண்டப்படாதவர்களின் பகைவர்களாக உள்ளவர்களின் கைகளில் அதிகாரம் போய்ச் சேர்வதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரின் தர்மகர்த்தாக்கள் என்று எப்போதும் தங்களைக் கூறிக்கொண்டு வந்திருக்கும் பிரிட்டிஷ்காரர்கள், அந்த தாழ்த்தப்பட்ட சாதியினரைப் புறக்கணித்ததற்குப் பிராயச்சித்தமான ஒரு நடவடிக்கையாக இது இருக்கும் என்பதைத் தவிர வேறல்ல.

12. இவ்வளவு விரிவாக இதைப் பற்றி நான் கூறுவதற்கு, தீண்டப்படாதவர்கள் எழுப்பிய சட்டபூர்வமான பாதுகாப்புகள் என்ற பிரச்சினை சம்பந்தமாக தூதுக் குழுவினர் சாதித்துவரும் மௌனத்தினால் எழுந்துள்ள கவலையே காரணமாகும். தீண்டப்படாதவர்களுக்கும் சிறுபான்மையோருக்கும் மன்னர் பிரான் அரசினால் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் சம்பந்தமாக தூதுக் குழு கடைப்பிடித்துவரும் கண்ணோட்டத்தினால் இந்த கவலை ஆழமாகியுள்ளது. இந்த உறுதிமொழிகள் குறித்த தூதுக்குழுவின் கண்ணோட்டம் பால்மர்ஸ்டன் பிரபுவை எனக்கு நினைவுபடுத்துகிறது. “எங்களுக்கு நிரந்தரமான விரோதிகள் இல்லை; நிரந்தரமான நண்பர்களும் இல்லை.

நிரந்தரமான நலன்கள் மட்டுமே எங்களுக்கு உண்டு” என்று அவர் கூறியிருந்தார். இந்தப் பால்மர்ஸ்டனின் கோட்பாட்டைத் தனது வழிகாட்டியாக தூதுக்குழு ஏற்றிருக்கிறது என்ற எண்ணம் உருவாகுமேயானால், தீண்டப்படாதவர்களுக்கு இது எவ்வளவு பயங்கரமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். பிரிட்டனின் உரிமைகளற்ற வர்க்கங்களிலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள்.

எனவே, இந்தியாவின் உரிமைகளற்ற 6 கோடி மக்களுக்கு செய்யப்படவிருக்கும் உத்தேச துரோகத்தைத் தடுப்பதற்கு உங்களாலான எல்லாவற்றையும் நீங்கள் செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தான் அவர்களின் கோரிக்கையை உங்கள் முன்வைப்பதற்கு எண்ணினேன். தூதுக்குழுவில் உங்களைக் காட்டிலும் மேலான நண்பர் தங்களுக்கு இல்லை என்று தீண்டப்படாதவர்கள் கருதுகிறார்கள் என்று உங்களிடம் கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள்.”

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர்

பெறுநர்;

ரைட் ஹானரபிள் திரு.ஏ.வி.அலெக்சாண்டர்,

சி.எச்.எம்.பி., உறுப்பினர், அமைச்சரவைத் தூதுக்குழு,

வைஸ்ராய் மாளிகை,

புதுடில்லி.

Pin It