பெறுநர்,

மேதகைய ஃபீல்ட் மார்ஷல்

ரைட் ஹானரபிள் வைகவுண்ட் வேவல்

(சைரனைகா மற்றும் வின்செஸ்டர்), சிம்லா

ஜி.சி.பி., ஜி.எம்.எஸ்., ஐ,ஜி.எம்.ஐ.இ., சி.எம்.ஜி., எம்.சி.,

இந்தியாவின் வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரல்

22, பிரிதிவிராஜ் சாலை,

புதுடில்லி

3.5.1946

அன்பார்ந்த வேவல் பிரபு அவர்களே,

   ambedkar 361  சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில், அமைச்சரவைத் தூதுக் குழு தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதியை அழைப்பதற்குத் தவறியதானது, சட்டபூர்வமான பாதுகாப்புகளுக்கான தங்களுடைய கோரிக்கைக்கு அமைச்சரவைத் தூதுக்குழு எவ்வாறு பரிகாரம் தேடப் போகிறது என்பது குறித்து தாழ்த்தப்பட்ட சாதியினரின் மனங்களில் அவநம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால், இது தொடர்பாக, தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிபலிப்புகளை உங்களிடம் எடுத்துச் சொல்வதற்கு விரும்புகிறேன்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதியைச் சிம்லா மாநாட்டிற்கு அழைக்காமலிருந்ததற்குப் பல விளக்கங்கள் கூறப்படக்கூடும். இவ்வாறு கூறப்படத் தோது உள்ள ஒரு விளக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கைகள் பிற கட்சிகளின் நியாயமான உரிமைகளில் தலையிடாத வரை அக்கட்சிகளின் இசைவு அவற்றுக்குத் தேவையில்லை எனக் கூறப்படலாம். குறைந்தபட்சம் அவர்களின் மூன்று கோரிக்கைகள் சம்பந்தமாக நிச்சயமாக இவ்வாறு கூறலாம்.

அவை வருமாறு: (1) தனித் தொகுதிகள், (2) மத்திய நிர்வாகக் குழுவில் போதிய பிரதிநிதித்துவம், மற்றும் (3) ஓர் இடைக்கால அரசு ஏற்படுவதற்கு முன்னதாக ஒரு நிபந்தனை என்ற வகையில், வருங்கால அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பது சம்பந்தமான சில பொதுவான கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகக் கட்சிகள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கைகளுக்குப் பிற கட்சிகளின் சம்மதம் தேவையில்லை என்ற கருத்தை, 1946 ஏப்ரல் 5ம் நாளன்று என்னுடைய பேட்டியின்போது அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் நான் மிகவும் பலமாக வலியுறுத்தியிருந்தேன்.

பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து மற்றும் வங்காளத்திலுள்ள பெரும்பான்மை சமூகமாகிய முஸ்லீம்கள் தனித் தொகுதிகள் வேண்டுமென்று கோருவது, தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போன்ற ஒரு சிறுபான்மை சமூகத்தினரின் கோரிக்கையினின்றும் வேறுபட்டதாகும். ஒரு பெரும்பான்மை சமூகத்தினரின் தனித் தொகுதிகளுக்கான கோரிக்கைக்கு சிறுபான்மை சமூகத்தினரின் சம்மதம் அவசியம் தேவை. ஆனால் ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித் தொகுதிகள் பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களைச் சார்ந்ததாக ஒரு போதும் இருக்க முடியாது.

இத்தகைய தொகுதி, அடிப்படையாகவே, பெரும்பான்மைக்கு எதிராக ஒரு சிறுபான்மையைப் பாதுகாப்பதற்காக வகுக்கப்பட்ட ஒரு ஏற்பாடாகும். இது இவ்வாறிருக்க, ஒரு தேர்தல் தொகுதி கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டுமா அல்லது தனித் தொகுதியாக இருக்க வேண்டுமா என்பதை இவற்றில் எது தங்கள் நலன்களுக்கு உகந்தது என்பதை சிறுபான்மையினர் அறிவார்கள் என்ற அடிப்படையில் அவர்களது முடிவுக்கே முற்றிலும் விட்டுவிட வேண்டும்.

பெரும்பான்மையினர் இந்த விஷயத்தில் எதுவும் சொல்வதற்கு இடமில்லை. சிறுபான்மையோரின் முடிவை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தனித் தொகுதி இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் இந்துக்களுக்கு சொல்வதற்கு ஏதும் இருக்க முடியாது.

தனித் தொகுதிக்கான தாழ்த்தப்பட்ட சாதியின் கோரிக்கை வேறு எந்த சமூகத்தையும், இன்னும் சொல்லப்போனால் இந்துக்களையும் கூட பாதிக்காது. அதனால்தான் இந்தக் கோரிக்கையை பிற எல்லா சமூகத்தினரும் ஏற்றுக் கொண்டனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்துக்களென்றும், எனவே அவர்கள் தனித் தொகுதிகள் கேட்க முடியாது என்றும் இந்துக்கள் வாதிப்பது அர்த்தமற்றதாகும்; ஏனெனில், தனித் தொகுதியானது மெய்யாகவே சிறுபான்மையோரின் பாதுகாப்புக்கான ஓர் ஏற்பாடாகும்.

அதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்ற அம்சத்தை இந்த வாதம் பார்க்கத் தவறுகிறது. இதற்கு ஏதாவது சான்று தேவையெனில், நீங்கள் ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் இந்திய கிறித்தவர்களின் விஷயத்தை எடுத்துக் கொண்டு பார்க்கலாம். இவர்கள் அனைவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களேயாயினும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தொகுதி இருக்கிறது.

இந்த விவரங்களையும் வாதங்களையும் அமைச்சரவைக் குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு தனித் தொகுதி முறைக்கு இந்துக்களின் சம்மதம் தேவையில்லை, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவம் என்பதை கூட்டுத் தொகுதிகள் கேலிக் கூத்தாக்கியிருக்கும் நிலைமையில் இது முற்றிலும் அமைச்சரவைத் தூதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயமேயாகும் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாதத்தை ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது.

இடைக்கால அரசியல் தங்களுடைய பிரதிநிதித்துவம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டுமென்ற தாழ்த்தப்பட்ட சாதியினரின் இரண்டாவது கோரிக்கைக்கும், அது வழங்கப்படுவதற்கு முன்னால் இந்துக்களின் சம்மதம் பெறத் தேவையில்லை.

மத்திய நிர்வாக சபையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் அமைச்சரவைத் தூதுக்குழு முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். இதுபற்றி முடிவு செய்வதற்கு முன்னால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை, அவர்கள் அனுபவித்துவரும் இழிநிலைகள், பிற முன்னேற்றமடைந்த சமூகங்களுக்கு இணையாக அவர்கள் முன்னேறச் செய்வதற்கு வேண்டிய வழிவகைகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த சிம்லா மாநாட்டின் சமயத்தில் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியது உங்களுக்கு நினைவிருக்கும். அப்பொழுது நீங்கள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரண்டு இடங்கள் தருவதற்குத் தயாராயிருந்தீர்கள். அது முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டதில் 50 சதவீதத்திற்கும் சற்று குறைவானதாகும்.

மூன்றாவது கோரிக்கையில் புதிதொன்றுமில்லை. 1944 ஆகஸ்டு 15ம் தேதிய உங்களுடைய கடிதத்தில் திரு.காந்திக்கு நீங்கள் தெரிவித்திருந்த உங்களுடைய சொந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்துவதேயாகும். அந்தக் கடிதத்தின் 5வது பாராவில் நீங்கள் இவ்வாறு கூறியிருந்தீர்கள்:-

“இந்த சூழ்நிலைமைகளில் நீங்கள் கூறும் அடிப்படையில் விவாதம் நடத்துவதினால் எந்தப் பயனும் ஏற்பாடாது என்பது தெளிவு. ஆயினும் தற்போதைய அரசியல் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு செயல்படும் ஓர் இடைக்கால சர்க்காரில் ஒத்துழைப்பதற்கு இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் முக்கிய சிறுபான்மையோரின் தலைவர்கள் தயாராயிருந்தால், நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன். அத்தகைய ஓர் இடைக்கால அரசு வெற்றியடைவதற்கு, அது அமைக்கப்படுவதற்கு முன்னால், புதிய அரசியல் சட்டம் எந்தவிதத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து முக்கிய உறுப்புகளிடையிலும் கோட்பாடு ரீதியில் உடன்பாடு ஏற்பட்டாக வேண்டும்.”

நீங்கள் எடுத்துக்கூறிய இந்தக் கோட்பாடு மன்னர்பிரான் அரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டதாகக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அது அமைச்சரவைத் தூதுக்குழுவை கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கோட்பாட்டை அமைச்சரவைத் தூதுக்குழு அமலாக்குவதற்கு கட்சிகளின் சம்மதம் வேண்டுமென்பது தேவையில்லை என்று தோன்றும். இதைத்தான் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோரியுள்ளனர்.

இந்த நிலைபாடுகள் போதிய வலுவுள்ளதாக இருப்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கைகள் மீது தீர்ப்புக் கூறுவதற்கு முன்னர் இந்துக்களின் சம்மதம் தேவை என்று அமைச்சரவைத் தூதுக்குழு கருதவில்லை. அதனால்தான் தங்களுடைய பிரதிநிதிகளை சிம்லா மாநாட்டுக்கு அனுப்பும்படி தாழ்த்தப்பட்ட சாதியினர் அழைக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வருவதற்கு இட்டுச் செல்கிறது என்று கூறுவேன்.

ஆனால், துரதிருஷ்டவசமாக நம் மனத்தில் தோன்றுவது இந்த ஒரு விளக்கம் மட்டுமல்ல. மற்றொரு விளக்கமும் சாத்தியமே. ஓர் இடைக்கால அரசை அமைக்கும் பணியை மேற்கொள்வதற்கும், இந்தியாவின் வருங்கால அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான ஏற்பாட்டை நிர்ணயம் செய்வதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் கோரிக்கை பற்றிப் பரிசீலனை செய்வதற்குக் காத்திராமல், காங்கிரசுக்கும் முஸ்லீம் லீகுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டாலே போதும் என்று அமைச்சரவைத் தூதுக்குழு கருதுகிறது என்பதே அந்த விளக்கம்.

தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒருவித ஏக்கத்துடன் இருக்கின்றனர். ஏனெனில், தூதுக்குழுவின் திட்டம் என்ன என்பதைப் பற்றி அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. தூதுக்குழு இரண்டாவதாகக் கூறிய திட்டத்தைக் கடைப்பிடிக்கிறார்களென்றால் – அது உண்மையாகவும் இருக்கக்கூடும் – தாழ்த்தப்பட்ட சாதியினர் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருப்பதற்கு எதிராக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்காமலும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள் என்று தூதுக்குழுவிற்குத் தெரிவிக்காமலும் இருந்துவிட்டால் என்னுடைய கடமையிலிருந்து நான் தவறியவனாவேன் என்று உணருகிறேன்.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் இந்தக் கடிதத்தை நான் எழுதியிருக்கிறேன். தங்கள் அமைச்சரவைத் தூதுக்குழுவின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உங்களுடைய சகாக்களுக்கு இந்தக் கடிதத்தை நீங்கள் சுற்றுக்கு விட்டால், நன்றியுடையவனாயிருப்பேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர்

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 19)

வேவல் ஆவணங்கள், அரசியல் வரிசை, 1944 ஏப்ரல் – 1945 ,ஜூலை பகுதி I, பக்கம் 207-9. (அதிகார மாற்றம், தொகுதி V, எண்.483, பக். 1094-97)

புதுடில்லி, ஜூன் 7, 1945

அன்புள்ள வேவல் பிரபு அவர்களே,

நிர்வாக சபையை இந்தியமயமாக்குவதற்கான உங்களுடைய பிரேரணையின் தொடர்பாக, நீங்கள் ஏற்பாடு செய்வதற்கு உத்தேசித்துள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைவர் என்ற வகையில் என்னை நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ambedkar 265இங்கு நான் மீண்டும் எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லாத காரணங்களுக்காக, உங்களுடைய அழைப்பை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று உங்களிடம் கூறினேன். அதற்குப் பின்னர், எனக்கு பதிலாக ஒருவருடைய பெயரைக் கூறும்படி நீங்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டீர்கள்.

உங்களுடைய பிரேரணைகளுக்கு என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், உங்களுடைய மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி இருப்பதன் மூலமாக உங்களுக்குக் கிடைக்ககூடிய உதவியை மறுப்பதற்கு நான் விரும்பவில்லை. எனவே எனக்குப் பதில் வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

எனக்குத் தோன்றுகிற பல்வேறு பெயர்களின் பொருத்தத்தைப் பற்றி மதிப்பீடு செய்கிறபோது, ராவ்பகதூர் என்.சிவராஜ், பி.ஏ.,பி.எல்.லைத் தவிர வேறு எந்தப் பெயரைப் பற்றியும் என்னால் சிந்திக்க முடியாது. அவர், அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார்.

மேலும், அவர் மத்திய சட்டப்பேரவை உறுப்பினராகவும், தேசியப் பாதுகாப்பு சபை உறுப்பினராகவும் இருக்கிறார். நீங்கள் விரும்பினால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் அந்த மாநாட்டிற்கு நீங்கள் அவரை அழைக்கலாம்.

2. இப்பொழுதே மற்றொரு விஷயத்தை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். நிர்வாக சபையைத் திருத்தி அமைப்பதற்கான மன்னர் பிரான் அரசாங்கத்தின் பிரேரணைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகவும் பற்றாக்குறையாக இருப்பது சம்பந்தப்பட்டதாகும்.

9கோடி முஸ்லீம்களுக்கு 5 இடங்கள், 5 கோடி தீண்டப்படாதாருக்கு ஓர் இடம், 60 இலட்சம் சீக்கியர்களுக்கு ஓர் இடம் என்பது விநோதமானதும், வஞ்சக வகைப் பட்ட அரசியல் கணக்கீடுமாகும்.

நீதி மற்றும் பகுத்தறிவு சம்பந்தப்பட்ட என்னுடைய கருத்துக்களுக்கு இது சிறிதும் உடன்பாடானதல்ல. இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தீண்டப்படாதவர்களின் தேவைகளைக் கணிக்கும்போது, அவர்களுக்கு முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற பிரதிநிதித்துவம் – அதற்கு அதிகம் இல்லாதபோதிலும் – தரப்பட வேண்டும்.

தேவைகள் ஒருபுறமிருக்க, எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டாலே, தீண்டப்படாதவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று இடங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு மாறாக, பதினைந்துப் பேர் கொண்ட நிர்வாக சபையில் அவர்களுக்கு ஒரே ஒரு இடம்தான் கொடுக்கப்படுகிறது. இது சகித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையாகும்.

ஜூன் 5ம் தேதியன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில், நிர்வாக சபை சம்பந்தமான அரசாங்கத்தின் பிரேரணைகளை நீங்கள் விளக்கியபோது, இந்த விஷயத்தை நான் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்தேன். 6ம் தேதி காலையில் நடைபெற்ற கூட்டத்தில், பிரேரணைகளின் தகுதி பற்றி முந்திய நாள் மாலையில் உறுப்பினர் செய்த விமர்சனங்களுக்கு நீங்கள் பதிலளித்தீர்கள்.

நான் எழுப்பிய பிரச்சினை பற்றியும் நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று இயல்பாகவே நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்கள் அதை முழுவதுமாகப் புறக்கணித்து, அதுபற்றி எதுவும் கூறாதது கண்டு மிகவும் வியப்படைந்தேன். நான் போதிய அளவு அழுத்தமாகக் கூறவில்லை என்று கூற முடியாது. ஏனெனில் நான் போதுமான அளவுக்கு அதிகமாகவே வலியுறுத்திக் கூறினேன்.

அதுபற்றிக் கூறுவதற்கு நீங்கள் விட்டுவிட்டதிலிருந்து, ஒன்று, நீங்கள் கவனிக்க வேண்டிய அளவிற்கு அது போதிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக நீங்கள் கருதாமலிருக்கலாம், அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அப்பால் எனக்கு வேறுநோக்கமில்லை என்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கே வந்தேன்.

இந்த எண்ணத்தைப் போக்கவும் நிவர்த்திப்பதற்கும் மன்னர்பிரான் அரசாங்கம் தவறினால் திட்டவட்டமான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்று மிகவும் தெளிவாக உங்களுக்கு எடுத்துக் கூறுவதற்குமே இந்தக் கடிதம் எழுதுவது அவசியம் என்று கருதுகிறேன். இத்தகைய ஒரு பிரேரணை காங்கிரசிடமிருந்தோ அல்லது இந்து மகாசபையிடமிருந்தோ வந்திருந்தால், நான் இந்த அளவுக்கு வருத்தமடைந்திருக்கமாட்டேன். ஆனால் இது மன்னர்பிரான் அரசாங்கத்தின் முடிவு.

பொதுவான இந்து அபிப்பிராயமும் கூட சட்டமன்றத்திலும், நிர்வாக சபையிலும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு ஆதரவாகவே உள்ளது. சப்ரூ கமிட்டியின் பிரேரணைகளைப் பொதுவான இந்து அபிப்பிராயத்தின் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்வதெனில், மன்னர்பிரான் அரசாங்கத்தின் பிரேரணை பிற்போக்கானது என்று நிச்சயமாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சப்ரூ கமிட்டி இவ்வாறுதான் கூறியுள்ளது:

“இந்திய அரசு சட்டத்தில் சீக்கியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் போதுமானதல்ல மற்றும் அநீதியானது என்பது தெளிவு. இது கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூடுதல் பிரதிநிதித்துவத்தின் அளவு அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் அமைப்புக்கு விட்டு விடப்பட வேண்டும்.

“(ஆ) பிரிவின் விதிகளுக்கு உட்பட்டு, யூனியனின் நிர்வாகக் குழு ஓர் கலப்பு அமைச்சரவையாக இருக்க வேண்டும். அதாவது, பின்வரும் சமூகங்கள் அதில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டும்:

  • இந்துக்கள், தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தவிர
  • முஸ்லீம்கள்
  •  தாழ்த்தப்பட்ட சாதியினர்
  •  சீக்கியர்கள்
  •  இந்தியக் கிறித்தவர்கள்
  •  ஆங்கிலோ – இந்தியர்கள்

“(ஆ) நிர்வாகக் குழுவில் இந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் சாத்தியமான வரையில், சட்டமன்றத்தில் அவர்களின் பலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.”

நிர்வாக சபையில் உள்ள என்னுடைய இரண்டு இந்து சகாக்கள் இன்று காலையில் உங்களிடம் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் (எண்.482ஐ பார்க்கவும்) மேன்மை தங்கிய அரசாங்கத்தின் பிரேரணைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் போதுமானதல்லவென்றும் நியாயமற்றதென்றும் தெரிவித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தாங்கள் பாதுகாவலர்களாக இருப்பதாக மன்னர் பிரான் அரசாங்கம் பறைசாற்றிய போதிலும், மேலும், மீண்டும் மீண்டும் அவர்கள் வெளியிட்ட பிரகடனங்களுக்கு மாறாகவும், தங்களது பராமரிப்பில் உள்ளவர்களின்பால் இவ்வளவு கருமித்தனமாகவும், அநீதியாகவும், நியாயமற்ற முறையிலும், இந்துக்களின் அபிப்பிராயத்தைக் காட்டிலும் மிகவும் மோசமாகவும் நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே, இந்தப் பிரேரணையை உறுதியாக எதிர்ப்பது என்னுடைய தலையாய மற்றும் புனிதமான கடமை என்று கருதுகிறேன்.

இந்தப் பிரேரணை தீண்டப்படாதோருக்குச் சாவுமணியடித்துவிடும். தங்களுடைய விமோசனத்திற்கு கடந்த 50 ஆண்டுகளாக செய்யப்பட்ட அவர்களது முயற்சிகளை இது ஒழித்துக் கட்டிவிடும். மன்னர்பிரான் அரசாங்கம், அதனுடைய பல அறிவிப்புகளுக்கு மாறாக தீண்டப்படாதவர்களின் கதியை இந்து-முஸ்லீம் கூட்டணியின் வசம் அவர்களின் தயவுக்கு ஒப்படைக்க விரும்பினால் மன்னர் பிரான் அரசாங்கம் அதன்படி செய்து கொள்ளலாம். ஆனால் என்னுடைய மக்களை ஒடுக்குவதற்கு நான் உடந்தையாக இருக்க முடியாது.

இழைக்கப்பட்ட அநீதியை நிவர்த்தி செய்து, புதிய நிர்வாக சபையில் தீண்டப்படாதவர்களுக்குக் குறைந்தபட்சம் 3 இடங்களாவது கொடுக்குமாறு மன்னர்பிரான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதென்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். மன்னர்பிரான் அரசாங்கம் இதை வழங்குவதற்குத் தயாராயில்லாவிட்டால், புதிய நிர்வாக சபையில் அதில் எனக்கு ஓர் இடம் வழங்கப்பட்டாலும் – நான் ஓர் உறுப்பினராக இருக்க முடியாது என்பதை மன்னர் பிரான் அரசாங்கம் உணர வேண்டும்.

கடந்த சில காலமாக, தீண்டப்படாதவர்கள், தமது அரசியல் உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படுவதை எதிர்பார்த்து வந்துள்ளனர். மன்னர்பிரான் அரசாங்கத்தின் முடிவினால் அவர்கள் அதிர்ச்சி யடைவார்கள் என்பது குறித்து எனக்கு ஐயமில்லை. கண்டனம் தெரிவிக்கும் முகத்தான், புதிய அரசுடன் எவ்வித உறவும் கொள்வதில்லை என்று தாழ்த்தப்பட்ட சாதியினர் முழுவதும் முடிவு செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற ஏமாற்றத்தின் விளைவாக நாம் பிரிந்து செல்ல வேண்டியேற்படும் என்று திடமாக நம்புகிறேன்.

மன்னர்பிரான் அரசாங்கத்தின் பிரேரணைகள் திருத்தி அமைக்கப்படாவிட்டால், அதன் விளைவாக இவ்வாறுதான் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறேன். என்னைப் பொறுத்தமட்டிலும் நான் முடிவு செய்துவிட்டேன். இறுதி நிலவரம் இதுவல்ல என்று எனக்குக் கூறப்படலாம். இது ஓர் இடைக்கால ஏற்பாடுதான் என்று கூறலாம்.

நான் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறேன். சலுகைகளும், இணக்க ஏற்பாடுகளும் ஒரு தடவை வழங்கப்பட்டு விட்டால் அவை நிரந்தர உரிமைகளாக வளர்ந்துவிடும் என்பதையும் ஒரு தடவை ஒத்துக்கொள்ளப்படும் தவறான உடன்பாடுகள் வருங்கால உடன்பாட்டுக்கு முன்னுதாரணங்களாகி விடுகின்றன என்பதையும் நானறிவேன்.

எனவே என்னுடைய காலடியில் புல் முளைப்பதற்கு என்னால் அனுமதிக்க முடியாது. சரியாக மதிப்பிடுவதற்கு எனக்கு ஆற்றல் இருக்குமானால், இடங்கள் பரிவர்த்தனை, ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தொடங்கிய போதிலும், நிரந்தரமானதாகப் போய் முடியும். இறுதியில் வருந்துவதற்கு பதிலாக, தொடக்கத்திலேயே என்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.

வருங்கால இந்திய சர்க்காரில் நான் இல்லாமற் போவதையோ, தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம் பெறாமற் போவதையோ கூட மன்னர் பிரான் அரசாங்கம் பொருட்படுத்தாமலிருக்கலாம். இதன் விளைவாக இந்த நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்கும் ஷெட்யூல்டு சாதியினருக்கும் இடையில் பிளவு ஏற்படுவதைப் பற்றி வருத்தப்படாமலுமிருக்கலாம்.

ஆனால் இந்த விஷயம் பற்றி நான் சொல்ல வேண்டியிருப்பதை மன்னர் பிரான் அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டியது நியாயமானதேயாகும். எனவே நிர்வாக சபையில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென்ற என்னுடைய பிரேரணையையும், அவர்களால் என்னுடைய பிரேரணை நிராகரிக்கப்பட்டால், நான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை பற்றியும் மன்னர்பிரான் அரசாங்கத்திற்குத் தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர் 

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 19)


55. தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் சமர்ப்பிக்கப்படும் இந்தக் கோரிக்கை மனுவில் கொடுக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள், குறிப்பாக அரசியல் குறைகளை அகற்றுவதற்காக முன்வைக்கப்பட்டவையாகும்; இவை பொது கஜானாவுக்கு எந்த நிதி பளுவையும் உட்படுத்த மாட்டா. இவை பரிந்துரைகள் என்பதைவிட அரசியல் கோரிக்கைகள் எனக் கூறலாம்; இவை மிகவும் நியாயமான, நேர்மையான கோரிக்கைகள்; ஆகவே, இவற்றை சர்க்கார் அவசியம் ஏற்க வேண்டும். இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் மத்திய சர்க்காரின் வருவாயில் இவை ஏற்படுத்தும் அதிக சுமைதான்.

ambedkar 250நிதிப் பளு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன் காரணமாகவே அவற்றை நிராகரிக்க முடியாது. காரணம், தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் சர்க்காருக்கு ஒரு கடமை உள்ளது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. இது விஷயத்தில் தங்களுக்குள்ள கடமையை அவர்கள் உணர்ந்தால், பொதுப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நிதிச் சுமையாக இருந்தாலும் கூட, அவர்கள் அவற்றை நிறைவேற்ற கடமைப்பட்டவர்களாவர்.

56. தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் பிரிட்டிஷ் சர்க்காரின் கொள்கை அவர்களை தொடர்ந்து முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. தங்கள் கடமை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது மட்டுமல்ல, மக்களுக்குக் கல்வி வசதி அளிப்பதும் அவர்களின் நலவாழ்வைக் கவனிப்பதும் தங்கள் கடமை என்று பிரிட்டிஷ் சர்க்கார் உணர்ந்த காலம் முதலே இந்தப் புறக்கணிப்பு இருந்து வருகிறது. 1850-51 ம் ஆண்டுக்கான பம்பாய் மாகாண கல்வி வாரிய அறிக்கையிலிருந்து தரப்படும் கீழ்க்கண்ட வாசகத்திலிருந்து இது தெளிவாகும்.

இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்கள் பற்றிய ஆய்வு

“பத்தி 16. இந்தியாவில் அரசு வழங்கும் கல்வியின் செல்வாக்கின் கீழ் மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியைத்தான் கொண்டு வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்தப் பகுதி ‘மேல்தட்டு வர்க்கங்களை’ கொண்டதாக இருக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அரசு முடிவு செய்ததால், பின்னால் குறிப்பிடப்பட்டவர்கள் யார் யார் என்று உறுதிப்படுத்துவது அத்தியாவசியமாகும்.

இந்தியாவில் மேல்தட்டு வர்க்கங்கள்

“பத்தி 17. செல்வாக்குள்ளவை என்று கருதப்படும் இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்களை பொறுத்தவரை, அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்:

1வது: நிலச்சுவான்தார்கள், ஜாகீர்தார்கள், முன்னாள் ஜமீன்தார்களின் பிரதிநிதிகள், குறுநில மன்னர்கள், படை வீரர்கள் வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள்.

2வது: தொழில்-வாணிகத்தில் சொத்துச் சேர்த்தவர்கள் அல்லது வாணிக வர்க்கத்தினர்.

3வது: உயர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள்.

4வது: பிராமணர்கள்; பேனாவினால் வாழ்கிற எழுத்தாளர்களையும் இவர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்; பம்பாயின் பர்புக்கள், சீன்வீக்கள், வங்காளத்தின் காயஸ்தர்கள் – இவர்கள் கல்வியின் அல்லது சமுதாய படி நிலையில் உன்னத இடத்தை அடைந்திருந்தால்.

பிராமணர்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள்

பத்தி18: இந்த நான்கு வர்க்கங்களில், ஒப்பிட முடியாத அளவில் மிகவும் செல்வாக்குள்ளவர்கள், மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள், மொத்தத்தில் மிக சுலபமாக சர்க்காரால் சமாளிக்கப்படக் கூடியவர்கள், பின்னால் சொல்லப்பட்டவர்களேயாவர். பண்டைய ஜாகீர்தார்கள் அல்லது போர் வீரர்கள் வர்க்கம் நமது ஆட்சியில் தினமும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது.

* * *

சில விதிவிலக்குகள் தவிர்த்து, வணிக வர்க்கத்தினருக்கும் உயர் கல்வியின் கதவுகள் மிகத் தாராளமாகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்றும் கூற முடியாது.

* * *

கடைசியாக, சர்க்காரோடு தொடர்பு கொள்ள வரும் பெரும் எண்ணிக்கையானவர்களிடையே அரசு ஊழியர்கள் பெருமளவு செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், சர்க்காரிடமிருந்து சுதந்திரமாக உள்ள இன்னும் அதிக எண்ணிக்கையுள்ளவர்களிடையே இவர்களுக்குச் செல்வாக்கு எதுவும் இல்லை.

பிராமணர்களின் வறுமை

பத்தி 19: மேற்சொன்ன பரிசீலனை நீளமாக இருந்தாலும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது இன்றியமையாதது. முதலாவதாக, பல்வேறு வகையான கல்வியைப் பரப்புவதற்கு சர்க்கார் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய செல்வாக்குள்ள வர்க்கம் பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற உயர் சாதியினரும் என்பதை இது நிரூபிக்கிறது.

கீழ்ச்சாதிகளுக்குக் கல்வி அளிக்கும் பிரச்சினை

“பத்தி 21: நம்மிடமிருந்து கல்வி வசதி பெற விரும்பும் உயர் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளின் குழந்தைகளுக்கு வெகு விரிவாக கதவு திறந்துவிடப்பட வேண்டுமென்பதே ஆண்டுக் கணக்கான அனுபவம் நம்மீது திணித்துள்ள உண்மைகளிலிருந்து நாம் பெறக்கூடிய நடைமுறை சாத்தியமான முடிவாகும். ஆனால் இங்கு வேறு ஒரு சங்கடமான பிரச்சினை எழுகிறது என்பதை கவனிப்பது அவசியம். அரசுக் கல்வி நிறுவனங்களில், ஏழைகளின் குழந்தைகளை இலவசமாகச் சேர்க்கும்போது இழிவாகக் கருதப்படும் தெட்கள், மகர்கள் முதலிய பல்வேறு சாதியினரும் பெரும் எண்ணிக்கையில் மந்தைக் கூட்டம் போல் வருவதை தடுப்பதற்கு என்ன இருக்கிறது?

இந்துக்களின் சமூக குரோதப் போக்குகள்

“பத்தி 22. பின் சொன்னவர்களுக்காக பம்பாயில் வகுப்பு அமைக்கப்பட்டால், வாரியத்தின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் இந்த வகுப்பில் எவரையும் விட அறிவில் மிகச் சிறந்த மனிதர்களாக இவர்களை ஆக்க முடியும். அப்பொழுது இத்தகைய கல்வி தகுதியைப் பெற்றுள்ள அவர்கள் நீதிபதிகள், ஜூரிகள், மாட்சிமை தங்கிய மன்னரின் சமாதான ஆணையத்தின் உறுப்பினர்கள் போன்ற மிக உயர்ந்த பதவிகளில் சேர விரும்புவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர்களை உயர் உத்தியோகங்களில் அமர்த்தப்படுவது சாதி இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும். இந்த விரோத குரோதங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் பணிவதை பண்பற்ற குறுகிய மனோபாவத்தின் உச்சக்கட்டம் என்றும், பலவீனம் என்றும் தாராள மனப்பான்மை மீது பகிரங்கத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

மதிப்பிற்குரிய மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டனின் கருத்துகள்

“பத்தி 23. இந்தியாவின் இந்தப் பகுதியினரை நன்கு அறிந்தவரும், பரந்த மனப்பான்மை கொண்ட நிர்வாகியுமான திரு.எலிபின்ஸ்டன் இத்துறையில் நாம் எத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கூறுகிறார்:

அடிமட்டத்திலுள்ள சாதியினர் தான் சிறந்த மாணவர்களாகத் திகழ்கின்றனர் என்று மதபோதகர்கள் கூறுகிறார்கள்; ஆனால் இம்மாதிரியான மக்களுக்கு எவ்வாறு விசேட ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மிகவும் இழிவாகக் கருதப்படுபவர்கள் மட்டுமல்ல; சமுதாயத்திலுள்ள மாபெரும் பிரிவுகளில் மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களும் ஆவர். நமது கல்வி முறை இவர்களிடம் முதலில் வேரூன்றினால், அது ஒரு போதும் மேலும் பரவாது என்று அஞ்சப்படுகிறது; பயனுள்ள ஞானத்தில் மற்றவர்களை விட அதிகம் உயர்வான ஒரு புதிய வர்க்கத்தின் தலைமையில் நலம் இருப்பதைக் காண்போம். வெறுக்கப்படும், கேவலமாகக் கருதப்படும் சாதியினருக்கு அவர்களின் இந்தப் புதிய ஆற்றல்களின் காரணமாக, முன்னுரிமை அளிக்க நாம் எப்பொழுதும் தூண்டப்படுவோம். நமது ராணுவத்தின்மீது அல்லது மக்களில் ஒரு பகுதியினரது பிணைப்பின் மீது நமது அதிகாரம் ஆதாரப்பட்டிருப்பதோடு நாம் திருப்தியடைவோமெனில் இத்தகைய ஒரு நிலவரம் விரும்பத்தக்கதே; ஆனால் மேலும் விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை மீது அதை நிலைநிறுத்தச் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் அது முரணானது.”

* * *

57. தாழ்த்தப்பட்ட சாதிகள்பால் உள்ள பகைமை உணர்வு இத்தகையது; இந்தியர்களுக்கு கல்வி அளிக்கும் சர்க்கார் கொள்கை இவ்வாறுதான் துவங்கியது. இந்தக் கொள்கை உறுதியுடன் பின்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறுவது இங்கு உசிதமாக இருக்கும்; தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு சர்க்கார் பள்ளியில் சேர்க்கப்படுவதற்காக 1856ல் ஒரு மகர் சாதிப் பையன் (தீண்டப்படாதவர்) சர்க்காருக்கு மனு செய்து கொண்டான். இந்த மனுவின் பேரில் சர்க்கார் வெளியிட்ட தீர்மானத்தின் வாசகம் வருமாறு:

“கடிதப் போக்குவரத்தில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயம் மிகுந்த நடைமுறைச் சிக்கலான ஒன்றாகும்.

“1.கோட்பாட்டளவில் பார்க்கும் போது மகர் மனிதர் பக்கம் நியாயம் உள்ளது எனபதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. கார்வாரில் இன்று நிலவும் கல்வி வசதியை அவர் பயன்படுத்துவதற்கு தடையாக உள்ள பகைமை உணர்வு அகற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சர்க்கார் நம்புகிறது.

“2.ஆனால் காலம் காலமாக உள்ள குரோதங்களுக்கு எதிராக திடீர் தீர்வுமுறையில் ஒரு தனி நபருக்காக தலையிடுவது கல்வி லட்சியத்துக்கே பெரும் தீங்கை ஏற்படுத்தலாம் என்பதை சர்க்கார் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மனுதாருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பாதகமான நிலைமை இந்த சர்க்காரிடமிருந்து தோன்றவில்லை. அவர் சர்க்கார் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளபடி, அவருக்கு சாதகமாக, தலையிட்டுத் தன்னிச்சையாகப் போக்கக்கூடிய ஒன்றல்ல அது.”

58. 1882ல் கல்விக் கொள்கையைப் பரிசீலிக்க ஹண்டர் ஆணையத்தை சர்க்கார் நியமித்து. முகமதியர்கள் மத்தியில் கல்வியைப் பரப்ப முக்கிய பல ஆலோசனைகளை ஆணையம் அளித்தது. தீண்டப்படாதவர்களைப் பொறுத்தவரை அது எதுவும் செய்யவில்லை. அது செய்தது எல்லாம் ஒரு கருத்தைத் தெரிவித்ததுதான்: “சர்க்கார் கல்லூரி அல்லது பள்ளியில் எவரையும் சேர்த்துக் கொள்ள சாதியைக் காரணம் காட்டி மறுக்கக் கூடாது என்ற கோட்பாட்டை அவசியம் சர்க்கார் ஏற்று கொள்ள வேண்டும்” என்பதேயாகும் அது; “ஆனால் இந்த கோட்பாடு போதுமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அதற்கு ஒரு வரையறையையும் வகுத்துத் தந்தது.

59. இந்தக் குரோத மனோபாவம் மறைந்தபோது, அதன் இடத்தை புறக்கணிப்பும் அக்கறையின்மையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தப் புறக்கணிப்பும் அக்கறையின்மையும் கல்வித் துறையில் மட்டும் வெளிப்படவில்லை. அது மற்ற துறைகளிலும், குறிப்பாக ராணுவத்திலும் தோன்றியது. கிழக்கு இந்தியக் கம்பெனியின் ராணுவம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினரைக் கொண்டதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ராணுவம் மட்டும் இல்லையென்றால், இந்தியாவை பிரிட்டன் கீழ்ப்படுத்தியிருக்க முடியாது என்பது உண்மை. தீண்டப்படாதவர்கள் 1892 வரை தொடர்ந்து ராணுவத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 1892-ல் ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுவது திடீரென்று நிறுத்தப்பட்டது; கல்வியையோ, கௌரவமாக வாழ்வதற்கு மற்ற வழிகளையோ தேடிக் கொள்வதற்கு வசதி எதுவும் இல்லாமல் அவர்கள் வெந்துயரில் வாடும்படி நடுத்தெருவில் விடப்பட்டனர்.

60. இப்பொழுது அவர்கள் உழன்று கொண்டிருக்கும் துயரிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினரை யார் கைதூக்கி விடமுடியும்? அவர்களின் சொந்த முயற்சியால் அவர்கள் இதைச் செய்ய முடியாது. தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு அவர்களுக்குள்ள ஆதார அடிப்படைகள் மிக மிகக் குறைவு. இந்துக்களின் அருளிரக்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. இந்துக்களின் தரும சிந்தனை வகுப்புவாதத் தன்மை கொண்டது; அதன் பலன்கள் தருமம் செய்பவர்களைச் சார்ந்தவர்க்கே சென்றடையும். தானம் செய்யும் இந்துக்கள் வியாபாரிகளாகவோ அல்லது உயர் அரசாங்க அதிகாரிகளாகவோ இருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், அவர்கள் பொதுமக்களிடமிருந்தே தங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். தருமம் செய்ய வேண்டுமென்ற விஷயம் வரும் போது, அவர்கள் பொதுமக்களை மறந்து விடுகின்றனர்; தங்கள் சாதி அல்லது வகுப்பை ஞாபகத்தில் கொள்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை; மேற்சொன்ன இரு பகுதியினர் நிறுவியுள்ள அறநிலையங்களிலிருந்து அவர்கள் பெருமளவுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் நம்பி இருக்கக் கூடிய ஆதாரம் சர்க்காரிடமிருந்து வரக்கூடிய நிதி உதவிதான். தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போன்று துன்பத்தில் உழலும் மக்களின் உதவிக்கு வரவேண்டியது மத்திய சர்க்காரின் கடமை என்று துணிந்து கூறுவேன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நியாயமான உரிமைகளை ஏற்றுக்கொண்டு தங்களுடன் போட்டி போடுபவர்களோடு சமமான நிலையிலிருந்து போட்டியிட அவர்களுக்கு உதவ மத்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை உயர்த்த விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கோருவதில் அசாதாரணமானது எதுவும் இல்லை. இம்மாதிரி நினைப்பவர்கள், ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உத்திரவாதம் செய்ய இந்திய சர்க்கார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கருத்தில் கொள்ளட்டும்.

(1) உயர்வான சம்பளங்கள்

இந்தியனரை விட ஆங்கிலோ-இந்தியர்கள் அதிகமான சம்பளத்தைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. இதை எடுத்துக்காட்ட மூன்று ரயில்வேக்களில் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சில பதவிகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்; ஆங்கிலோ-இந்தியருக்கும் இந்தியருக்கும் இடையே சம்பளத்தில் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகும்:

பதவி ஆங்கிலோ-இந்தியர்கள் இந்தியர்கள்
வடமேற்கு ரயில்வே:    
நிரந்தர பயண மேற்பார்வையாளர்கள்

625-25-675

550-25-600

475-25-500

400-25-450

இஞ்சின் ஓட்டுனர்கள் 260-10-220 நாள் ஒன்றுக்கு ரூ.1 முதல் 1 ரூபாய் 14 அணா வரை. விசேட விகிதம் நாள் ஒன்றுக்கு ரூ.2/-
கிழக்கு இந்திய ரயில்வே:    
பயணச்சீட்டுப் பரிசோதகர்கள்

300-25-400

200-20-280

125-15-180
ஜி.பி.ஐ. ரயில்வே    

தலைமை பயணச்சீட்டும் பரிசோதகர்கள்

சுத்தம் செய்யும் ஊழியர்கள்

275

315

365

145

125-275

115

சம்பளத்தில் உள்ள வித்தியாசம் 1920 வரை தொடர்ந்து இருந்தது. அதன் பின்பு அது நீக்கப்பட்டது. ஒரு வித்தியாசம் இன்னமும் இருக்கிறது. ஆங்கிலோ-இந்தியர் அடிப்படை சம்பளமாக மாதத்திற்கு ரூ.55 பெறுகிறார். ஆனால் இந்திய சப்ராசி ரூ.13-15 தான் பெறுகிறார். ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இவ்வாறு அளிக்கப்பட்ட சலுகையின் காரணமாக வருடந்தோறும் தபால் தந்தி துறையில் ரூ.10,000மும் சர்க்கார் பராமரிக்கும் ரயில்வேக்களில் 75,000மும் கம்பெனி பராமரிக்கும் ரெயில்வேக்களில் ரூ.75,000மும் அரசுக் கருவூலத்திலிருந்து செலவிட வேண்டி வந்தது. மொத்தத்தில் ரூ.1,50,000.

ஆங்கிலோ-இந்தியர்கள் போட்டிகளில் வெற்றிபெற உதவும் முறையில் தந்தி இலாகாத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் 50லிருந்து 40ஆகக் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் 66 சதவிகிதத்திலிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது.

61. இந்தியர்களை விட மேலும் பல சலுகைகளை ஆங்கிலோ-இந்தியர்கள் பெறுவதற்கு ஸ்டூவர்ட் குழு இதர பல பரிந்துரைகளையும் செய்தது. இந்தக் கோரிக்கை மனுவை மேலும் பெரியதாக ஆக்க விரும்பாததால் அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆங்கிலோ-இந்தியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே எடுக்கப்பட்ட நிலையிலுள்ள தெளிவான வித்தியாசத்தை எடுத்துக்காட்டவே அக்கறை கொண்டுள்ளேன். முந்தியவர்களுக்குக் காட்டப்பட்ட சலுகையும் பிந்தியவர்கள் பால் காட்டப்பட்ட புறக்கணிப்பும் மிகத் துலாம்பரமாக தெரிகின்றன.

இந்த வேறுபாட்டை எதனைக் கொண்டு நியாயப்படுத்த முடியும்? என் அபிப்பிராயத்தில் எதுவுமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவ மத்திய அரசு எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அளவுக்கு நல்ல சர்க்கார் என்ற பெயரை அது எடுக்கும். ஆங்கிலோ-இந்தியர்களை உயர்த்த வருடத்திற்கு 1,5000ஐ உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும். ஒரு சர்க்கார், அதற்கு மனமிருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒரு சில லட்சங்களையாவது செலவிட முடியும்.

  (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் IV)

(1942 ஜூலை 18,19,20 தேதிகளில் நாகபுரியில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாட்டின் அறிக்கை, பக்கங்கள் 100-106)

சட்டமன்ற உறுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவருமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பத்திரிகைகளில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது வருமாறு:

ambedkar 259“யுத்த மந்திரிசபையின் யோசனைகள் மன்னர் பிரான் அரசாங்கத்திடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைக் காட்டுகின்றன. சிறுபான்மையினரின் உரிமைகள் மீது படையெடுப்பு என்று அவர்களே கண்டித்த யோசனைகளை இப்போது முன்வைத்திருப்பது வலிமை பெறுவதற்கு நேர்மையை அறவே பலிகொடுக்கப்பட்டிருப்பதையே புலப்படுத்துகிறது. இதனை மூனிச் மனோபாவம் எனக் கூறலாம். மற்றவர்களைப் பலி கொடுத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதுதான் இந்த மனோபாவத்தின் சாராம்சம். இந்த மனோபாவம்தான் இந்த யோசனைகளில் மேலோங்கியிருப்பதைக் காண்கிறோம்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திசைவழியில் இந்தியா முன்னேறுவதற்கு மன்னர்பிரான் அரசு முன்வைத்த யோசனைகளை இந்தியர்கள் வரவேற்காதது குறித்தும், இதனால் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸின் தூது தோல்வியடைந்தது குறித்தும் அமெரிக்கர்களும் பிரிட்டிஷ் மக்களும் திகைத்துப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கர்களை அவர்களது போக்குக்காக மன்னித்து விடலாம்.

ஆனால் பிரிட்டிஷ் மக்களும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்சும் உண்மையை நன்கு அறிந்தவர்கள். மிகச் சிறந்த யோசனைகள் என்று கூறி மன்னர் பிரான் அரசாங்கம் இப்போது முன்வைத்துள்ள இதே யோசனைகள்தான் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மன்னர் பிரான் அரசால் மிக மோசமானவை என்று வன்மையாகக் கண்டிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவை என்ற உண்மை சரிவர உணரப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மன்னர் பிரான் அரசு தனது முந்திய பிரகடனங்களுக்கு மாறாக இப்போது அரசியலமைப்புச் சட்டம் நோக்கிய முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், திடீரென்று முயற்சியில் இறங்கியிருப்பதும் மிகவும் வெட்கக்கேடானது என்று கூறவே செய்வார்கள்.

கிரிப்ஸ் யோசனைகள் மூன்று பகுதிகளைக் கொண்டவை. அவை வருமாறு:

(1) இந்தியாவுக்கு ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தரும் உரிமை கொண்ட ஓர் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்படும். இந்த சபையில் இடம் பெறுவோரில் பெரும்பாலோர் விரும்பும் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தரும் முழு அதிகாரத்தை இச்சபை பெற்றிருக்கும்.

(2) இந்தப் புதிய அரசியலமைப்பில் இந்தியாவின் தற்போதைய மாகாணங்கள் அனைத்தும் இடம்பெற மாட்டா; அந்த அரசியலமைப்புக்குக் கட்டுப்படத் தயாராக இருக்கும் மாகாணங்கள் மட்டுமே அதில் இடம்பெறும். புதிய அரசியல் அமைப்பில் சேருவதற்கோ அல்லது சேராமல் இருப்பதற்கோ மாகாணங்களுக்கு உரிமை வழங்கப்படும். இது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும். சாதாரண பெரும்பான்மையைக் கொண்டே இந்த விஷயம் முடிவு செய்யப்படும்.

(3) அரசியல் நிர்ணய சபை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இன மற்றும் சமய சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்துக்கும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்படும். இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது அரசுரிமையை விலக்கிக் கொள்ளும். இதன் பிறகு, அரசியல் நிர்ணய சபை வகுத்துத் தந்த அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

இதுதான் மன்னர் பிரான் அரசாங்கம் சமர்ப்பித்த திட்டத்தின் சத்தும் சாரமும். அரசியல் நிர்ணய சபை சம்பந்தமான யோசனை புதியது ஒன்றுமல்ல. போர் வெடித்ததும் அரசியல் நிர்ணய சபை சம்பந்தமான ஒரு யோசனை காங்கிரஸ் முன்வைத்தது. காங்கிரஸ் பிரேரபித்த இந்த யோசனை அச்சமயம் மன்னர்பிரான் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும். அரசியல் நிர்ணய சபை சம்பந்தமாக 1940 ஆகஸ்டு 14ஆம் தேதி காமன்ஸ் சபையில் திரு.அமெரி பின்வருமாறு கூறினார்:-

“காங்கிரஸ் தலைவர்கள்… சிறப்பு மிக்க ஒரு ஸ்தாபனத்தை, மிகவும் ஆற்றல் வாய்ந்த ஓர் அரசியல் எந்திரத்தை இந்தியாவில் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இந்திய தேசிய வாழ்க்கையின் எல்லா சக்திகளுக்காகவும் பேசுவதில் வெற்றி பெற்றிருந்தால், அவர்களது கோரிக்கைகள் என்னதான் அதிகமாக இருந்தாலும் நமது பிரச்சினை பல அம்சங்களில் இன்று எளிதானவையாக இருந்திருக்கும். அவர்கள் இன்று பிரிட்டிஷ் இந்தியாவில் எண்ணிக்கை ரீதியில் தனிப் பெரிய கட்சியாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இந்த அடிப்படையில் இந்தியாவுக்காகப் பேசும்     உரிமை அவர்களுக்கு இல்லை என்று இந்தியாவின் சிக்கலான தேசிய வாழ்வில் இடம் பெற்றுள்ள முக்கியமான சக்திகள் தம்மை வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான சிறுபான்மையினராக அல்லாமல் எந்த எதிர்கால இந்தியக் கொள்கையிலும் தனித்தன்மை வாய்ந்த சக்திகளாகத் தம்மைக் கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இத்தகைய சக்திகளில் மாபெரும் முஸ்லீம் சமுதாயம் முன்னணியில் இருக்கிறது.

பூகோள ரீதியான தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசியல் நிர்ணய சபையால் வகுத்தளிக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். எந்த அரசியலமைப்புச் சட்ட விவாதங்களிலும் தங்களை ஒரு தனிச் சக்தியாகக் கருதப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

வெறும் எண்ணிக்கை அளவிலான பெரும்பான்மையினரின் செயற்பாடுகளுக்கு எதிரான ஒரு தனித்த சக்தி என்ற நிலையைத் தங்களுக்கு உத்தரவாதம் செய்யும் ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமே ஏற்க அவர்கள் உறுதிகொண்டுள்ளனர். ஷெட்யூல்டு வகுப்பினர் எனப்படும் ஒரு மாபெரும் அமைப்புக்கும் இது பொருந்தும். தங்கள் சார்பில் திரு.காந்தி எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் காங்கிரசால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டும் பிரதான அமைப்பான இந்து சமுதாயத்துக்கு வெளியேதான் ஒரு சமூகம் என்ற முறையில் தாங்கள் இருந்து வருவதாக அவர்கள் உணர்கின்றனர்.”

1940 ஆகஸ்டு 8 ஆம் தேதி வைசிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு விளக்கம் அளித்துப் பேசுகையிலேயே திரு.அமெரி மேற்கண்டவாறு கூறினார். இந்த அறிவிப்பில் சிறுபான்மையினருக்கு மன்னர் பிரான் அரசாங்கம் சார்பில் பின்கண்ட உறுதிமொழியை அவர் அளித்தார்:

“இப்போது இரண்டு முக்கிய விஷயங்கள் நம்முன் எழுந்துள்ளன. இந்த இரண்டு விஷயங்கள் குறித்து தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தும்படி மன்னர் பிரான் அரசாங்கம் என்னைப் பணித்துள்ளது. முதல் விஷயம் எந்த எதிர்கால அரசியலமைப்புத் திட்டம் சம்பந்தமாகவும் சிறுபான்மையினரின் நிலை குறித்ததாகும்… இந்தியாவின் தேசிய வாழ்க்கையிலுள்ள பெரிய, ஆற்றல் மிக்க சக்திகள் ஏற்காத எவ்வகையான அரசாங்க அமைப்பு முறைக்கும் அவர்கள் (மன்னர் பிரான் அரசாங்கம்) இந்தியாவின் சுபிட்ச வாழ்வு, சமாதானம் சம்பந்தமாக தங்களுக்குள்ள பொறுப்புகளை, கடமைகளை மாற்றுவது பற்றி சிந்திக்க முடியாது என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய ஓர் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் படி இந்த சக்திகளை நிர்ப்பந்தப்படுத்தும் எந்த முயற்சிக்கும் அவர்கள் உடந்தையாகவும் இருக்க முடியாது.”

அரசியல் நிர்ணய சபையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக 1941 ஏப்ரல் 23 ஆம் தேதி பேசும்போது அமெரி பின்வருமாறு குறிப்பிட்டார்:

“இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அல்லாமல், இந்தியர்கள் தாங்களாகவே வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பு அடிப்படையில் ஓர் இந்திய அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இந்திய நிலைமைகளையும் இந்தியாவின் தேவைகளையும் குறித்த இந்தியக் கண்ணோட்டத்துக்கு இணங்க அது வகுக்கப்பட வேண்டும். இதிலுள்ள ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அரசியலமைப்பும் சரி, அதனை வகுக்கும் அரசியல் நிர்ணய சபையும் சரி இந்தியாவின் தேசிய வாழ்க்கையின் பிரதான சக்திகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவாக தோன்றியவையாக இருக்க வேண்டும்.”

இவைதான் அரசியல் நிர்ணய சபை சம்பந்தமாக மன்னர் பிரான் அரசாங்கம் தெரிவித்த கருத்துகளும், அவர்கள் அளித்த உறுதி மொழிகளுமாகும். பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பொறுத்தவரையில், இது முஸ்லீம் லீக் முன்வைத்த கோரிக்கை. இந்த கோரிக்கையும் மன்னர் பிரான் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து 1940 ஆகஸ்டு 1ல் காமன்ஸ் சபை யில் திரு.அமெரி பேசும்போது குறிப்பிட்டதாவது:

“காங்கிரஸ் ராஜ்யம் அல்லது இந்து ராஜ்யம் எனப்படும் அபாயங்களுக்கு எதிரான கருத்துப்போக்கு இந்தியாவை இந்து அரசுப் பகுதி என்றும் முஸ்லீம் அரசுப் பகுதி என்றும் முற்றிலுமாகப் பிரிக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இத்தகைய கோரிக்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பைப் பற்றி நான் எதுவும் கூறத் தேவையில்லை. நிரந்தரமான சிறுபான்மையினர் பிரச்சினையை அதற்குத் தீர்வு காணாமலேயே சிறுபிரதேசங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அது மாற்றிவிட்டது என்பதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.”

1941 ஏப்ரல் 23 ஆம் தேதி காமன்ஸ் சபையில் பேசும்போது இந்தப் பிரச்சினை குறித்து அமெரி பின்வருமாறு கூறினார்:

“பாகிஸ்தான் கோரிக்கைக்கு குறுக்கே நிற்கும் மிகப் பெரும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி இங்கு நான் கூற வேண்டியதில்லை. இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை சீர்குலைக்கப் படுவதிலுள்ள பயங்கர அபாயங்களை எடுத்துரைப்பதற்கு 18ஆம் நூற்றாண்டைய இந்தியாவின் துயரமிக்க வரலாற்றையும் இங்கு நான் நினைவுகூர வேண்டியதில்லை. இன்று நம் கண்முன்னேயே காணும் பால்கன் நாடுகளின் கசப்பான அனுபவத்தை நான் எடுத்துரைக்க வேண்டியதில்லை. இந்த வகையில் பார்க்கும்போது, இந்திய நாட்டுக்கு நாங்கள் அளித்துள்ள ஒற்றுமைதான் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிகப் பெரிய சாதனையாகத் திகழ்கிறது. அதற்காக நாங்கள் பெருமிதமடைகிறோம்.”

அரசியல் நிர்ணய சபை குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் ஓராண்டுக்கு முன்னர் வரைகூட மன்னர்பிரான் அரசாங்கம் இத்தகைய கருத்துக்களைத்தான் கொண்டிருந்தது.

அப்படியிருக்க இப்போது அரசியல் நிர்ணய சபையை அமைப்பது சம்பந்தப்பட்ட யோசனையை முன்வைத்திருப்பது காங்கிரசைத் திருப்திபடுத்துவதற்காகவும், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட யோசனை முஸ்லீம் லீகை திருப்திப்படுத்துவதற்காகவும் தான் என்பது தெளிவு. சரி, இனி தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை என்ன? இரத்தினச் சுருக்கமாகக் கூறினால் அவர்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்துக்கள் அவர்களுக்கு ரொட்டிக்குப் பதிலாக கல்லைத் தருகின்றனர். அரசியல் நிர்ணய சபை என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தவரையில் ஓர் ஏமாற்று வித்தையே ஆகும். அரசியல் நிர்ணய சபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை; அரசியல் நிர்ணய சபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் பிரதிநிதிகள் எவரும் இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் இதற்கு வகுப்புவாரி ஒதுக்கீடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அப்படியே தாழ்த்தப்பட்ட இனத்தோரின் பிரதிநிதிகள் இடம் பெற்றாலும் அவர்கள் எத்தகைய நிர்ப்பந்தமுமின்றி, சுதந்திரமாகவும், தீர்மானமாகவும் வாக்களிக்க முடியாது. ஏனென்றால், முதலாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் மிகவும் சிறுபான்மை யினர்களாக இருப்பார்கள்.

இரண்டாவதாக, அரசியல் நிர்ணய சபையின் எல்லா முடிவுகளும் ஏகமனதான வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில்லை. எந்த ஒரு பிரச்சினையும் அது எத்தனை அரசியல் சட்ட ரீதியானதாக இருந்தாலும் அது பற்றி முடிவு எடுப்பதற்கு பெரும்பான்மை வாக்குகள் இருந்தாலே போதும். இத்தகைய நிலைமையில் அரசியல் நிர்ணய சபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குரல் எடுபடாது என்பது தெளிவு.

மூன்றாவதாக, மன்னர் பிரான் அரசு தெரிவித்துள்ள யோசனைகளின்படி, அரசியல் நிர்ணய சபைக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இப்போதைய முறை அரசியல் நிர்ணய சபைக்கு தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதிகளை நியமிக்கும் உரிமையை சாதி இந்துக்களுக்கு வழங்குகிறது. இத்தகைய தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதிகள் சாதி இந்துக்களின் கைக்கூலிகளாகவே இருப்பார்கள்.

நான்காவதாக, அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ்காரர்களே பெரு எண்ணிக்கையில் இருப்பார்கள். அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை கட்சியினராக இருப்பார்கள். இதனால் அச்சபையில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருபவர் என்று திரு.காந்தி என்னதான் வருணிக்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்டவர்கள் இந்திய தேசிய வாழ்க்கையில் ஒரு தனித்த, வேறுபட்ட சக்தியினர் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்படுவதை அவர் முற்றிலும் எதிர்ப்பார்.

இத்தகைய சூழ்நிலையில், அரசியல் நிர்ணய சபையில் உள்ள பெரும்பான்மைக் கட்சியின் திட்டம் இப்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை ஒழித்து கட்டிவிடும்.

அரசியல் நிர்ணய சபையின் இயல்பை உணர்ந்தவர்கள் எவரும் மன்னர் பிரான் அரசு தான் தெரிவித்துள்ள யோசனைகள் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை அநேகமாக ஓநாய்களின் முன் எறிந்து விட்டனர் என்ற முடிவுக்கே வருவர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அரசியல் சட்டப் பாதுகாப்புகளை வழங்க அரசியல் நிர்ணய சபை மறுத்துவிட்டாலும் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டு விடாது.

ஏனென்றால் மன்னர் பிரான் அரசாங்கம் தனது யோசனைகளில் ஒரு நிபந்தனையைப் புகுத்தியுள்ளது. அதாவது அரசியல் நிர்ணய சபை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஓர் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கையின் நோக்கம் என்று சிலர் வாதிக்கலாம். இந்த ஒப்பந்த யோசனை ஐரிஷ் சிக்கலுக்கு தீர்வு காணுவதற்கு மன்னர் பிரான் அரசு மேற்கொண்ட திட்டத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

மன்னர் பிரான் அரசு எத்தகைய பாதுகாப்புகளை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கும் என்பது பற்றி இந்த ஒப்பந்த யோசனை எதுவும் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விஷயம், ஏனென்றால் புதிய அரசியலமைப்பின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான அரசியல் பாதுகாப்புகளின் தன்மை, எண்ணிக்கை, அவற்றைக் கையாளும் முறை போன்ற விஷயங்களில் மன்னர் பிரான் அரசுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழக்கூடும்.

இரண்டாவது முக்கியமான விஷயம் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதார பிரமாணமாக இருக்கபோவது என்ன என்பதாகும். இந்த ஒப்பந்தம் அரசியல் நிர்ணய சபை வகுத்துத்தரும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமா? ஒப்பந்தத்துக்கு முரணாக அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் எந்த விதியும் செல்லுபடியற்றதாக ஆக்கப்படுமா? அல்லது இந்த ஒப்பந்தம் இரண்டு அரசாங்கங்களுக்கிடையேயான அதாவது இந்திய தேசிய அரசாங்கத்துக்கும் மன்னர் பிரான் அரசாங்கத்துக்கும் இடையேயான வெறும் சம்பிரதாயபூர்வமான ஒப்பந்தமாக மட்டுமே இருக்குமா? இந்த ஒப்பந்தம் முதலில் கூறிய வகையைச் சேர்ந்ததாக இருக்குமாயின் அது நாட்டின் சட்டமாக இருக்கும்.

இந்திய அரசாங்கத்தின் சட்ட இசைவாணை அதற்கு ஆதார அடிப்படையாக இருக்கும். இவ்வாறின்றி, இந்த ஒப்பந்தம் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்குமாயின் அது நாட்டின் சட்டமாக இருக்க முடியாது, அதற்கு எவ்வித சட்ட வலுவும் இருக்காது என்பது தெளிவு. அதன் பிரமாணம் அரசியல் பிரமாணமாகவே இருக்கும்.

ஐரிஷ் சுதந்திர அரசு விஷயத்தில் நடந்தது போன்ற காரணங்களுக்காக, ஓர் ஒப்பந்தம் தேசிய அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செல்ல முடியாது. இத்தகைய ஒப்பந்தத்துக்குப் பின்னாலுள்ள ஒரே இசைவாணை அரசியல் இசைவாணையே ஆகும். இத்தகைய இசைவாணையைப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இயல்பையும் பொதுமக்களின் அபிப்பிராயத்தையும் பொறுத்திருக்கும் என்பது தெளிவு.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது பின்கண்ட கேள்விகள் எழுகின்றன: (1) ஒப்பந்த விதிகளைச் செயல்படுத்துவதற்கு மன்னர் பிரான் அரசிடம் எத்தகைய வழிமுறைகள் இருக்கின்றன? (2) இரண்டாவதாக, ஒப்பந்த விதிகளின்படி நடந்து கொள்ளுமாறு இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த மன்னர் பிரான் அரசு இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தத் தயாராக இருக்குமா? முதல் கேள்வியைப் பொறுத்தவரையில், ஒப்பந்தத்தை இரண்டு வகைகளில் செயல்படுத்தலாம்.

படைபலத்தைப் பயன்படுத்துதல், வாணிகப் போர் நடத்துதல். படைபலத்தைப் பொறுத்தவரையில் இப்பணிக்கு இந்திய சைன்யத்தின் சேவை கிட்டாது. அது முற்றிலும் புதிய இந்திய தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும். எனவே, ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான இந்த வழிமுறையை மன்னர் பிரான் அரசு பயன்படுத்த முடியாது.

ஒப்பந்தப்படி செயல்படுமாறு தேசிய அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த மன்னர்பிரான் அரசு தனது சொந்தப் படைகளை அனுப்பும் என்று எதிர்ப்பார்ப்பதற்கில்லை. அதேபோன்று வாணிகப்போரும் சாத்தியமில்லை. இது தற்கொலைக்கு ஒப்பான கொள்கையாகும். நில ஆண்டுத் தொகைகளை வசூலிப்பது சம்பந்தமாக ஐரிஷ் குடியரசுடன் நடைபெற்ற ஐரிஷ் போர் அனுபவம் காட்டுவது என்ன? கடைக்காரர்களை ஏராளமாகக் கொண்ட ஒரு தேசம் இதை அனுமதிக்காது.

எனவே, இந்த ஒப்பந்தம் ஒரு வெத்துவேட்டாகத்தான் இருக்கப் போகிறது. இந்தியர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் மன்னர்பிரான் அரசாங்கம் இந்தப் பிரேரணைகளை முன் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தாங்களே வன்மையாகக் கண்டித்து நிராகரித்த அதே யோசனைகள் இப்போது இந்தியர்கள் முன் ஏன் வைக்கப்படுகின்றன என்பதை மன்னர் பிரான் அரசும் சரி, சர் ஸ்டாபோர்டு கிரிப்சும் சரி எவ்வகையிலும் விளக்கவில்லை.

அரசியல் நிர்ணயசபை அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம், ஏனென்றால் அது சிறுபான்மையினருக்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் ஓர் ஏற்பாடாக இருக்கும் என்று ஓர் ஆண்டுக்கு முன்னர் மன்னர் பிரான் அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இப்போது அரசியல் நிர்ணயசபை அமைப்பதை அனுமதிப்பதற்கும் சிறுபான்மையினரை வல்லந்தப்படுத்துவதற்கும் அது தயாராக இருக்கிறது. பாகிஸ்தான் உருவாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஏனென்றால் அது இந்தியாவைத் துண்டாடிவிடும் என்று ஓராண்டுக்கு முன்னர் மன்னர் பிரான் அரசாங்கம் கூறிற்று.

இன்று இந்தியாவை இருகூறாகப் பிரிப்பதை அனுமதிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அரசாங்கம் சிறிதும் கூச்சநாச்சமின்றி கோட்பாட்டை எவ்வாறு காற்றில் பறக்க விடுகிறது என்பது தெரியவில்லை. யுத்தத்தின் விளைவாக மன்னர் பிரான் அரசாங்கம் மிகுந்த கிலி அடைந்து போயிருக்கிறது. என்பதுதான் இந்தக் கேள்விக்கு விடையாக இருக்க முடியும். பிரிட்டிஷ் அரசு நம்பிக்கை இழந்துபோனதன் விளைவே இந்தப் பிரேரணைகள்.

காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகளையும் லீக் முன்வைத்த கோரிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த யோசனைகளின் மூலம் அக்கட்சிகளுக்கு அளித்துள்ள சலுகைகளை எண்ணிப் பார்த்தால் மன்னர்பிரான் அரசாங்கம் எந்த அளவுக்குப் பெரும் பீதியடைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவுக்கான அரசியல் அமைப்புச் சட்டம் ஓர் அரசியல் நிர்ணய சபையால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிற்று.

ஆனால் காங்கிரசின் இந்தக் கோரிக்கை சிறுபான்மையினரை வல்லந்தப்படுத்துவதாக இருந்தால் அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உடந்தையாக இருக்காது என்று வைசிராய் அறிவித்தபோது, காங்கிரஸ் காரியக் கமிட்டி 1940 ஆகஸ்டு 22ல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பின்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றிற்று:-

“எந்த சிறுபான்மையினரையும் கட்டாயப்படுத்துவது குறித்து காங்கிரஸ் என்றுமே எண்ணியதில்லை. அவ்வாறு செய்யும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஒருபோதும் வலியுறுத்தியதும் இல்லை. அவ்வாறிருக்கும்போது முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் நிர்ணய சபை மூலம் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை ஒரு நிர்ப்பந்த நடவடிக்கையாக தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் பிரச்சினை இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடைக்கல்லாக ஆக்கப்பட்டிருப்பதையும் கண்டு கமிட்டி மிகவும் வருந்துகிறது.”

காரியக் கமிட்டி மேலும் கூறியதாவது:

“சிறுபான்மையினரின் உரிமைகள் அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் உடன்பாடு கண்டு முழு அளவுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.”

சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய முடிவு அரசியல் நிர்ணய சபையின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கூட கோரவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனினும் இந்த சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த பிரச்சினைக்கு முடிவு காணும் கூடுதல் உரிமையை மன்னர் பிரான் அரசாங்கம் அவர்களுக்கு அளித்தது. பாகிஸ்தான் பிரச்சினையிலும் இதே போக்கு கடைப்பிடிக்கப்பட்டதைக் காணலாம். பாகிஸ்தான் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் லீக் கோரவில்லை.

முஸ்லீம் லீக் கோரியதெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் அடுத்தமுறை திருத்தியமைக்கப்படும்போது முசல்மான்கள் பாகிஸ்தான் பிரச்சினையை எழுப்புவதைத் தடுக்கக்கூடாது என்பதேயாகும். ஆனால் இப்போதைய யோசனைகள் மேலும் ஒருபடி மேலே சென்று, பாகிஸ்தானைத் தோற்றுவிக்கும் உரிமையை முஸ்லீம் லீகுக்கு அளித்துள்ளன. இவை அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட யோசனைகள், இந்துக்களும், முசல்மான்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும், சீக்கியர்களும் முழு மனதோடு பங்கு கொள்ளக் கூடிய ஒரு யுத்தத்துக்கு இந்தியாவை வழிநடத்திச் செல்லும் நோக்கம் கொண்டவை.

அப்படியிருந்தும் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் மன்னர் பிரான் அரசாங்கத்தின் அனுமதியுடனோ அல்லது அனுமதி இல்லாமலோ பிரதான கட்சிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் இடையே பாரபட்சம் காட்டினார். எவற்றின் சம்மதம் அவசியமோ அவை பிரதான கட்சிகள் எனப்படுகின்றன. எவற்றுடன் கலந்தாலோசனை செய்வது மட்டும் போதுமானது என்று கருதப்படுகிறதோ அப்படிப்பட்ட கட்சிகள் சிறு கட்சிகள் எனப்படுகின்றன.கட்சிகளை வேறுபடுத்திக் காண்பதில் இது ஒரு புதுவகையான முறையாகும்.

மன்னர் பிரான் அரசாங்கமோ, வைசிராயோ தமது முந்திய அறிக்கைகளில் இதை ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. ‘இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் பிரதான சக்திகளின் சம்மதம்’ பற்றி அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.”

தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்த வரையில், எந்த ஓர் அறிக்கையிலும் முஸ்லீம்களுக்கு தரப்பட்டுள்ள இடத்துக்குக் கீழான இடம் தரப்படுவதை நான் பார்த்ததில்லை. 1941 ஜனவரி 10 ஆம் தேதி பம்பாயில் வைசிராய் நிகழ்த்திய உரையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை முசல்மான்களுடன் இணைத்துக் கூறியிருப்பதைக் காணலாம். அவரது உரையிலிருந்து ஒரு மேற்கோளை இங்கு தருகிறேன்:

“சிறுபான்மையினர்கள் இடையறாது பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவர்களில் மாபெரும் முஸ்லீம் சிறுபான்மையினரையும் ஷெட்யூல்டு வகுப்பினரையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். கடந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு பல உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களது நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.”

ஆனால் இப்போது பரஸ்பரம் பகைமையை உண்டு பண்ணக்கூடிய வகையில் சிறுபான்மையினர் பிரித்துக் காட்டப்படுகின்றனர்; இதனால் அவர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அரசியலமைப்பு ரீதியில் பார்க்கும்போது நாட்டில் இது அமைதிக்கேட்டையும் விசுவாசமின்மையையுமே தோற்றுவிக்கும். ஏற்கெனவே இதர நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டவர்களின் நட்பைப் பெறுவதற்காக செய்யப்படும் இந்த முயற்சியில் தங்களது உண்மையான நண்பர்களை இழக்க நேரிடும் என்பதை பிரிட்டிஷார் கவனத்தில் கொள்ள வேண்டும். மன்னர் பிரான் அரசு தீடீர் குட்டிக்கரணம் அடித்துள்ளதையே இந்த கிரிப்ஸ் யோசனைகள் காட்டுகின்றன.

சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் படையெடுப்பு என்று தாங்களே வருணித்த அதே யோசனைகளை இப்போது முன்வைத்திருப்பது வலிமை பெறுவதற்காக நேர்மை பலியிடப்பட்டிருப்பதையே காட்டுகிறது. இது மூனிச் மனோபாவமே தவிர வேறல்ல. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்களைப் பலியிடுவதே இந்த மனோபாவத்தின் சாரமாகும்.

இந்த மனப்போக்கே இந்த யோசனைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு நான் கூறும் யோசனையாகும்.

நேர்மைக்கும் நீதிக்கும் அவர்களால் போராட முடியவில்லை என்றால், தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் அவர்கள் வாய்மூடி மௌனமாக இருப்பதே உசிதம். அதன் மூலம் குறைந்தபட்சம் தங்களது மரியாதையையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

 

VII. விளம்பர விஷயத்தில் புறக்கணிப்பு

47. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரதான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தனி நபர்கள் மற்றும் கட்சிகளின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் விளம்பரப்படுத்த இந்திய சர்க்கார் மிக விரிவான அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது நன்கு தெரிந்த ஒன்றாகும்.

ambd 400 1இந்திய சர்க்காரின் தகவல் துறை அலுவலகம் “இந்தியாவும் ஆக்கிரமிப்பாளரும்” (1935-40 இடையே இந்திய கருத்துப்போக்கு) என்ற தலைப்பில் வெளியிட்ட தொகுப்பு நூலை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட விரும்புகிறேன். அந்த நூலின் தலைப்பு தவறான அர்த்தத்தை அளிக்கிறது.

ஆக்கிரமிப்பாளரோடு அது எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. மாறாக நாட்டின் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கூற்றுகள் மற்றும் செயல்பாடுகளை அது தொகுத்துரைக்கிறது; இந்தியாவின் பெரும்பான்மையினரதும், சிறுபான்மையினரதும் கருத்துக்களை முழுமையாகத் திரட்டித் தருகிறது.

48. இந்த தொகுப்பு நூலின் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் கருத்துகளும் செயல்பாடுகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். மொத்தம் 940 பக்கங்களில், 158 பக்கங்கள் காங்கிரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன; முகமதியர்களுக்காக 85 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இந்து மகாசபையும், இந்து லீகும் தலா 10 பக்கங்களை கைப்பற்றியுள்ளன. லிபரல் பெடரேஷன் 16 பக்கங்கள் பெற்றுள்ளது. சீக்கியர் 6 பக்கங்களும், இந்தியக் கிறித்தவர்கள் 2 பக்கங்களும் பெற்றுள்ளனர்; தாழ்த்தப்பட்ட சாதியினர் 3 பக்கத்தோடு விட்டு விடப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியமளிப்பது என்னவெனில், இந்த மூன்று பக்கங்களும் கூட மிக அற்பமானத் தகவல்களைக் கொண்டவை.

இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்களும், தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சார்ந்த பிரமுகர்களின் அறிவிப்புகளும் முற்றிலுமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இத்தகைய ஒரு நிகழ்ச்சியை இங்கு கூறுவது உசிதமாக இருக்கும். அதாவது மதமாற்றத்திற்கான இயக்கத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். இந்து சமூகத்தை ஆட்டம் கொள்ளச் செய்தது அந்த இயக்கம் என்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகும். இந்தத் தொகுப்பு நூலில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எந்த லட்சணத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது என்பதற்கு ஒன்றைக் குறிப்பிட்டால் போதும்.

குர்சியாங்கிலுள்ள புனித மேரிக் கல்லூரி ஒரு சமயம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் லட்சியங்களைப் பிரபலப்படுத்தும் பணியை மேற்கொண்டது; அக்காலகட்டத்தை சேர்ந்த பல்வேறு விவரங்களை 507 பக்கங்கள் கொண்ட நூலில் வெளியிட்டது. அந்த அளவுக்கு 1935-40 காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன; அவர்களது இயக்கங்கள் விரிந்து பரந்திருந்தன. என்னைப் பொறுத்தவரை, தாழ்த்தப்பட்ட சாதியினர் பற்றி எத்தனை எத்தனையோ கருத்துகளை நான் வெளியிட்ட போதிலும், அவற்றில் ஒன்றுகூட இந்திய சர்க்கார் தகவல்துறை வெளியிட்ட தொகுப்பில் இடம்பெறவில்லை.

49. இந்தத் தொகுப்பு அதிகாரப்பூர்வ உபயோகத்திற்காக மட்டுமே உத்தேசிக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால் எனது கருத்தில், இந்தத் தொகுப்பிற்குள்ள மகத்தான முக்கியத்துவத்தை இது எவ்வகையிலும் மாற்றிவிடவில்லை. அரசின் விவகாரங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை பெருமளவுக்கு நிர்ணயிப்பது அதிகாரியின் சிந்தனைப் போக்குதான் என்பது சொல்லாமலே விளங்கும். வகுப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது. எந்த மாதிரியான விவரங்கள் அதிகாரியிடம் முன்வைக்கப்படுகிறதோ அவற்றின் அடிப்படையில்தான் அவருடைய கண்ணோட்டமும் சிந்தனையும் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த சிந்தனைப் போக்கைத்தான் இம்மாதிரியான ஒரே தொகுப்பு நூலில் அவர் வெளியிடுகிறார். மேலும், ஒரு சர்க்கார் வெளியீட்டில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு சர்க்கார் அளிக்கும் முக்கியத்துவத்தையே அதற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவமாக அந்த அதிகாரி கருதுகிறார்; பல்வேறு சமூகங்களில் தேவைகளையும் உரிமைகளையும் மதிப்பிடுவதற்கான திசைவழியாகவும் அதை அவர் எடுத்துக் கொள்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் மதிக்கப்பட வேண்டாத, கவலைப்பட வேண்டாத ஒரு சக்தி என்ற எண்ணத்தைத்தான் மத்திய தலைமைச் செயலகத்திலும் மாகாண செயலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சருக்கும் கூட இந்தத் தொகுப்பு நூல்  நிச்சயமாக அளிக்கும்.

இம்மாதிரி பாதிப்பை இந்தத் தொகுப்பு நூல் ஏற்படுத்தியுள்ளது என்பது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து தெளிவாகிறது. அதில் முகமதியர்களைப் பற்றிக் கூறப்பட்டவை அழுத்தம் திருத்தமாக ஆக்கபூர்வமாகவும் இருந்தன; ஆனால் அதேசமயம் தாழ்த்தப்பட்ட சாதியினர் பற்றிக் குறிப்பிட்டது ஏனோதானோ என்ற தன்மையையே பெற்றிருந்தது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய கொடுமையாகும்; அவர்கள் விஷயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் ஒரு நிலையற்ற, நேர்மையற்ற போக்கால் அவர்களது போராட்டத்தின் மிக நெருக்கடியான கட்டத்தில் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தாழ்த்தப்பட்ட சாதியினர் நடத்திய இயக்கங்களையும் அவர்களின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும் முழுவதுமாக கொடுக்கும் வகையில், தகவல்துறை அலுவலகம் ஏற்கெனவே தான் வெளியிட்ட தொகுப்பு நூலுக்கு அனுபந்தமாக தயாரித்து வெளியிட வேண்டுமென வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

50. கட்சிகளையும் வகுப்புகளையும் பற்றிப் பிரசாரம் செய்யதான் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும், கட்சிகளும் வகுப்புகளும் தான் தாமே தம்மைப் பற்றி பிரசாரம் செய்து கொள்ள வேண்டுமென்றும் சர்க்கார் நிச்சயம் கூறக்கூடும். ஆனால் இங்கு விஷயம் அதுவல்ல. நான் எடுத்துக் காட்டியுள்ளபடி, இந்தப் பிரசாரப் பணியில் சர்க்கார் தன்னை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. இதைச்சர்க்கார் செய்யும்போது, பிரசாரம் செய்யும் விஷயத்தில் எல்லாக் கட்சிகளையும் சமநிலையில் நடத்துவதும், நாட்டில் செயல்பட்டுவரும் இயக்கங்கள் பற்றி சரியான படப்பிடிப்பினை வழங்குவதும் சர்க்காரின் கடமையாகிறது.

VIII. சர்க்காரின் தொழில் ஒப்பந்தங்களில் விலக்கி வைக்கப்படுதல்

51. பொதுத்துறை வேலைகளில் பெரும்பகுதி இலாகா ரீதியாகச் செய்யப்படாமல் ஒப்பந்தங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. சாதாரண காலங்களில் நிலைமை இதுவே. யுத்த காலத்தில் ஒப்பந்தங்கள் முறை மூலம் சர்க்காருக்காகச் செய்யப்படும் வேலைகள் பல நூறு மடங்கு பெருகியுள்ளன. மத்திய பொதுப்பணித்துறை பற்றி மட்டும்தான் இங்கு நான் பேச முடியும். மத்திய பொதுப்பணித்துறையினரிடம் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் பட்டியலில் 1171 பேர் உள்ளனர். இவர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சார்ந்த ஒப்பந்தக்காரர் ஒரே ஒருவர்தான் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

மற்றவர்கள் இந்துக்கள், முகமதியர்கள், சீக்கியர் ஆவர். எல்லா சமூகத்தினரும் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்தமுறை இருக்குமாறு அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்காரின் ஒப்பந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு நம்பிக்கையுடன் ஒப்படைக்கக் கூடியவர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே உள்ளனர். ஏற்கெனவே இந்து, முகமதிய, சீக்கிய ஒப்பந்ததாரர்களிடம் தாழ்த்தப்பட்ட சாதியினரைச் சேர்ந்த பலர் சிப்பந்திகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விளைவு என்னவெனில், இந்து, முகமதிய, சீக்கிய ஒப்பந்தக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துவரும் அதேசமயம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

52. அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சாதியினரிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்களைச் சேர்த்துக் கொள்வதில் கஷ்டம் எதுவுமில்லை. ஆனால் முக்கியமானது என்னவெனில், அவர்கள் ஒப்பந்த வேலையைப் பெறுவதைச் சாத்தியமாக்குவதுதான். சர்க்கார் ஒப்பந்தப் பணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு விதிகள் உள்ளன:-

(1) எந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளி மற்றவர்களைவிட மிகக் குறைவாக இருக்கிறதோ அவரது ஒப்பந்தப் புள்ளி ஏற்றுக்கொள்ளப்படும்.

(2) ஆனால் அதேசமயம் மற்ற எல்லாவற்றையும் விட குறைவான ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது சர்க்காருக்கு கட்டாயம் இல்லை.

53. எனவே ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு ஓர் ஒப்பந்த வேலை அளிக்கப்படுமா இல்லையா என்பது பொறுப்பில் உள்ள அதிகாரி தமது உசிதப்படி முடிவு செய்வதற்கு அவருக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்த விஷயம் இது. ஆனால் தமது உசிதப்படி முடிவு செய்வதற்கு ஓர் அதிகாரிக்குள்ள இந்த அதிகாரம் ஒரு தாழ்த்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு சாதகமாக பயன்படுத்தப்படும் என்பது நடக்காது. அவருடைய ஒப்பந்தப்புள்ளி மற்றெல்லாவற்றையும் விட குறைந்ததாக இருக்கலாம். வகுப்பு குரோதத்தின் காரணமாக அந்த அதிகாரி அதை ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.

“எல்லாவற்றையும் விடக் குறைந்ததை ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் அவருக்கு இல்லை” என்ற இரண்டாவது விதியின்படி அவர் நடந்து கொள்ளலாம். அவருடைய ஒப்பந்தப்புள்ளி எல்லாவற்றிற்கும் குறைவானதை விட அதிகமாக இருந்தாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ள முடியும். என்றாலும் அவ்வாறு செய்யமாட்டார். அவர் இரண்டு விதிகளில் முதல் விதியைச் சார்ந்து நிற்பார். எப்படியாயினும் தாழ்த்தப்பட்ட சாதி ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தப் புள்ளிகளை நிராகரிப்பதை அவர் நியாயப்படுத்த முடியும்.

54. வகுப்புக் குரோதத்திற்கு எந்தப் பரிகாரமும் நிச்சயமாக இல்லை. என் மனதில் படும் ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். மிகவும் குறைந்த ஒப்பந்த புள்ளியை விட 5 சதவிகிதம் அதிகமாக ஒரு தாழ்த்தப்பட்ட சாதி ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளி இல்லாது இருந்தால், மற்ற எல்லாவற்றையும் விடக் குறைந்தது என்று கருதி அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று விதியைத் திருத்தலாம் என்பது என் கருத்தாகும். இதன் காரணமாக அரசுக்கு நஷ்டம் ஏற்படக் கூடும். நிதி இலாகா இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய சலுகையால் எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்பது பற்றி எனக்குக் கருத்து எதுவும் இல்லை. எனினும் ஒன்று மட்டும் நிச்சயம். ஒட்டகத்தின் முதுகை உடைப்பது போன்று அது பெரும் சுமையாக இருக்காது.

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் III)