உயிருள்ள மனித உடல் இயற்கை நோய்ப் பொருள்களைவிட செயற்கை மருந்துப் பொருள்களால் அதிக அளவில் மிக எளிதில் தாக்குதல்களுக்கு ஆட்படுகின்றது. இயற்கை நோய் மருந்துப் பொருள்கள் ஒருவிதக் கட்டுப்பாட்டிற்கிணங்கியே மனித உடலின் நலத்தை பாதிப்பிற்குள்ளாக்குகின்றன. ஆனால் செயற்கை நோய் மருந்துப் பொருள்கள் எந்தவித கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் எல்லா கால கட்டங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் மனித உடல் நலத்தை கெடுத்துவிடக்கூடிய வல்லமை கொண்டவைகளாக இருக்கின்றன.

 அதிக ஆற்றல் வாய்ந்த செயற்கை மருந்துகள் நோய்களை உண்டாக்கும் வல்லமை பெற்றுள்ளன என்ற ஒரே காரணத்தினால்தான் மருந்துகள் இயற்கை நோய்களை நீக்குகின்றன என்றும் எண்ணிவிடக்கூடாது.

 இயற்கை நோய்க்குறிகளுடன் மிக நெறுங்கிய ஒற்றுமை கொண்ட செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமையும் மருந்துகளுக்கு இருக்கவேண்டும். அப்பொழுது தான் இயற்கை நோயினால் உயிராற்றலை தட்டியெழுப்பக் கூடிய எல்லா வகை தடைகளையும் தொடர்புகளையும் அறுத்தெறிந்து நோயை குணப்படுத்த அவைகளால் முடியும்.

முதலில் தோன்றிடும் ஒரு இயற்கை நோயை அடுத்ததாக வரும் வேறொரு இயற்கை நோயினால் எவ்வளவு வலிமை பெற்றதாக இருந்தாலும் ஒற்றுமையில்லாமல் போனால் நோய் நீக்கம் ஏற்படுத்த முடிவதில்லை என்பதனை கண்கூடாக காணமுடிகின்றது. அதே போல இயற்கை நோய்க் குறிகளுடன் ஒற்றுமையுள்ள செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்க முடியாத மருந்து எவ்வளவு வலிமை கொண்டதாக இருப்பினும் இயற்கை நோயை நீக்க முடிவதில்லை என்பதும் வெளிப்படையான உண்மையாகும்.

 வேற்றுமை குறிகளைக் கொண்ட இருவேறு இயற்கை நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போதும் இயற்கை நோய்க் குறிகளுடன் ஒற்றுமையில்லாத மருந்துகளை வழங்கி தீர்வு செய்ய முயலும் போது என்ன நேர்வினைக் காண முடிகின்றது என்பதை இனி கவனிப்போம்.

 சமவலிமை கொண்ட இருவேறு இயற்கை நோய்கள் அல்லது புதிய நோயைவிடப் பழைய நோய் அதிக வலிமை கொண்டதாக இருந்தால் பழைய நோய் புதிய நோயை உடலில் தங்க அனுமதிக்காமல் விரட்டி விடுகின்றது. கடுமையான நாட்பட்டு நீடிக்கும் நோயுள்ள ஒருவருக்கு இலையுதிர் காலங்களில் தோன்றும் வயிற்றுக்கடுப்போ அல்லது பெருவாரியாகத் தோன்றும் இயல்புள்ள இதர நோய்களோ தோன்றுவதில்லை. ஸ்கர்வி உள்ளவர் பிளேக் நோய் தாக்குவதில்லை என்று லாரி என்பவர் கூறுகின்றார். அதே போல கரப்பான்படை உள்ளவர்களையும் பிளேக் நோய் தாக்குவது கிடையாது. ராகிடிஸ் உள்ளவரின் உடலில் பெரியம்மை நோய்த் தடுப்பு மருந்து ஊசி மூலம் உள்செலுத்தினால் அம்மருந்து வேலை செய்வதில்லை என்று டாக்டர் ஜென்னர் கண்டுபிடித்திருக்கின்றார். மூச்சுக்காற்று நோயுள்ளவர்களை (காசநோய்) பெருவாரியான காய்ச்சல் நோய்கள் தாக்குவதில்லையென்று வான் ஹில்டன்ப்ராண்ட் எழுதியுள்ளார்.

 Plague போதுமான அளவிலும் தரத்திலும் குறைவாக உள்ள உணவை உட்கொள்ளுவதால் உடலின் மேல்புறத்தில் திட்டுதிட்டாக குருதிக் குழம்பி நிற்கும் நோய் நிலைமை.

Rachitis குழந்தை பருவத்தில் தோன்றும் கோளாரான எலும்பு வளர்ச்சியும், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகள் சரிவர இயங்க இயலாமல் இருக்கும் ஒருவகை நோய் ‘டி’ உயிரூட்டி (Vitamin D) குறைவினால் தோன்று வதாகக் கருதப்படுகிற நோய் ரிக்கட்ஸ் (Rickets) என்ற ஒரு மறுபெயரும் இதற்குண்டு.

 இரண்டாவதாக பழைய இயற்கை நோயைவிட புதிதாகவரும் ஒற்றுமையில்லாத (முரண்பட்ட) இயற்கை நோய் அதிக வலிமை கொண்டதாக இருந்தால் என்ன நேரும் என்பதைப் பார்ப்போம். பழைய நோய் வலிமையற்றதாக இருப்பதால் வலிமையுள்ள புதிய நோய் ஏற்பட்ட உடன் அது பின்னுக்குத்தள்ளப்பட்டு செயலற்ற தாகிவிடுகிறது. புதிய நோய் குணமடைந்தவுடன் அல்லது ஆட்டம் அடங்கிய உடன் பழைய நோய் தன் தலையை மீண்டும் தூக்குகிறது. இதை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகள் மூலம் பார்க்கலாம்.

 காக்கை வலிப்புள்ள இரு குழந்தைகளுக்கு தலையில் கரப்பான் படை தோன்றியவுடன் வலிப்பு வருவது நின்றுவிட்டது. ஆனால் கரப்பான் படை குணமானவுடன் பழையபடி காக்கை வலிப்பு நோய் வரத் தொடங்கிவிட்டன.

 சொறி, சிறங்குகள், ஸ்கர்வி நோய்த் தோன்றிய உடன் மறைந்து போய் அது குணமானவுடன் மீண்டும் தோன்றின. மூச்சுக்காற்று (காச நோய்) உள்ள ஒருவருக்கும் கடுமையான பெருவாரி காய்ச்சல் தோன்றியது. அந்த காய்ச்சல் இருந்த வரையில் காச நோய் (எ) கூடிய நோய் கட்டிப் போடப்பட்டு அடங்கி யிருந்து பிறகு வளரத் தொடங்கியது. காச நோயுள்ளவருக்கு மன நோய் பிடித்தால் பைத்தி யம் உள்ளவரையில் காசநோய் மறைந்திருந்து அதுகுணமான உடன் மறுபடியும் தோன்றி மிகக் கடுமையாக மாறி மரணத்தில் கூட முடிவடையும்.

 சின்னம்மையும் பெரியம்மையும் சேர்ந்தாற் போல் தோன்றும் காலங்களில் ஒரு குழந்தைக்கு முதலில் சின்னம்மையும் பிறகு பெரியம்மையும் கண்டால் சின்னம்மை அடங்கிப்போய் பெரியம்மை குணமான பின்னரே வருகிறது. பெரியம்மைத் தடுப்பு மருந்தை உடலுக்குள் செலுத்திய பிறகே ஒருவருக்குச் சின்னம்மை தோன்றினால் மருந்தை செலுத்த குத்தப்பட்ட இடத்தில் வீக்கம், வேக்காடு ஆகிய குறிகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அப்படியே உள்ள முக்கப்பட்டு அல்லது முன்னேறாமல் நிற்கின்றன. சின்னம்மை முற்றிலும் குணமடைந்து தோலுரிய தொடங்கிய பின்னரே மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படுகிறது.

 தாடை வீக்கம் (தாளம்மை) இருந்த ஒருவருக்கு பெரியம்மைத் தடுப்பு மருந்தை உடலில் ஊசி மூலம் உள் செலுத்தி அது பூரிக்க தொடங்கிய உடன் தாடை வீக்கம் மறைந்து விட்டது. அம்மை குத்தப்பட்ட இடம் தழும்பிட்டு ஆறியபிறகே தாடை வீக்கம் மீண்டும் தோன்றி அதன் கெடுகாலமாகிய ஏழுநாட்களுக்கு நீடித்திருந்து பின்னர் குணமடைந்தது.

 வேற்றுமைக் குறிகளுள்ள நோய்கள் எல்லாவற்றிலும் இவ்வாறுதான் நடைபெறுகிறது. அதாவது வல்லமை கொண்ட நோய் வலிமையற்ற நோயை அடக்கத்தான் செய்கிறது. குணம் செய்வது கிடையாது. திடீரெனத் தோன்றும் குணமுள்ள இருவேறு கடுங்குறு நோய்கள் சந்திக்கும் போது பல சமயங்களில் அவை ஒன்றோ டொன்று கலந்து கொண்டு சிக்கலான நோய் நிலைமையை தோற்றுவிப்பதும் உண்டு.

ஓமியோபதி மருத்துவ பத்தியம் – உணவுக்கட்டுப்பாடுகள் (ஆர்கனான் 259 முதல் 263 வரை விளக்கம்)

 ஓமியோபதி மருத்துவத்தில் மருந்துகளின் அளவு மிகக்குறைவாக இருக்கின்றது. இதனால் அம்மருந்தின் செயல்பாடுகளை தடுக்கக் கூடிய அல்லது கெடுக்கக்கூடிய வேற்றுப் பொருள்கள் நோயாளியின் உணவிலும் குடிப்புக்களிலும் இருக்கக்கூடாது.

 நோய் குணமாவதைத் தடை செய்யக்கூடிய குறிப்பிட்ட காரணங்களை கவனமாக ஆராய்ந்து அகற்றிவிட வேண்டும். நீடித்த நோய்களில் இது மிகவும் முக்கியமானதாகும். உணவிலும் குடிப்பு பானங்களிலும் காணப்படும் நச்சுப் பொருள் களாலும் பிழைகளாலும் பல சமயங்களில் நோய் அதிகமாகிவிடுகிறது.

 காப்பி, தேநீர், நோயாளியின் நிலைக்கு ஒவ்வாத தாவரப் பொருள்களால் கலந்து தயாரிக்கப்படும் புளிப்பு சாராயம், நறுமணப் பொருள் கலந்து தயாரிக்கப்படும் சாராயம், சர்பத் எனப்படும் பானங்கள், நறுமண சாக்லேட், அத்தர், சென்ட், அதிக நறுமணமுள்ள பூக்கள், நறுமணப் பல்பொடி, ஏலம் கிராம்பு, மிளகு முதலிய நறுமணப் பொருள்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு, கலப்பட எண்ணெய், பாலாடைக்கட்டி, இறைச்சி,. மருந்து குணம்பெற்றுள்ள (பன்றி, பெண்வாத்து, நீர் வாத்து, உணவுக்காக வளர்க்கப்படும் கோழி) இறைச்சிகள், இளங்கன்றின் இறைச்சி, புளித்துப்போன உணவுகள், மருத்துவ குணமுள்ள செடி, கொடி, மரங்களின் காய், கனி, கிழங்கு, வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள், இவைகளை நோயாளியின் அருகில் கூட கொண்டு வரக்கூடாது. உணவு, சர்க்கரை, உப்பு, காரம், புளிப்பு ஆகியவை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். மயக்கம் தரும் பானங்களைக் குடிப்பதும் வெப்பம் வீசும் அறைகளில் இருப்பதும் உள்ளாடை (பனியன், ஜட்டி) இல்லாமல் உடலின் மீது நேராகப் படும்படியான கம்பளி உடைகளை அணிவதும் கூடாது. அறையை மூடிக்கொண்டு சோம்பேரித் தனமாக உட்கார்ந்து கொண்டிருத்தல், சவாரி செய்தல், வண்டி ஓட்டுதல், ஊஞ்சலாடுதல் முதலான உடலுக்குச் சிறிதளவே வேலை கொடுக்கும் செயல்பாடுகளில் அடிக்கடி ஈடு படுதல், இடைவிடாமல் நீண்ட நேரம் குழந் தைக்குப் பால் கொடுத்தல், படுக்கையில் சாய்வாக படுத்து நீண்ட நேரம் தூங்குவது போலிருத்தல், இரவு முழுவதும் உட்கார்ந்தே இருத்தல், தூய்மை இல்லாதிருத்தல், அளவு கடந்த கெட்ட பழக்கங் கள், காம உணர்வை தூண்டும் நூல்களைப்படிப் பதன் மூலம் உடல் வலிமையை இழத்தல், கோபம், வருத்தம், தன்னைத்தானே நொந்து கொள்ளுதல், மிக அதிகமாக விளையாட்டில் ஈடுபட்டிருத்தல், உடல், மனம் இரண்டையும் அளவுக்கு மீறி பயன்படுத்துதல், ஈரம் மிகுந்த சதுப்பு நிலப்பகுதி களில் குடியிருத்தல், ஈரப்பதமுள்ள அறைகளில் இருத்தல், வறுமை கொண்ட வாழ்க்கை ஆகிய பல்வேறு காரணங்களை கூடிய வரைவிலக்கினால் போதும். எல்லாவற்றையுமே விலக்கி நோயாளிக்கு தேவையற்ற தொல்லைகளை அளிப்பதும் கூடாது.

 நாட்பட்ட நோய்களில் மருந்து உண்டு வரும்நிலையில் நோய் குணமடைந்து வருவதை தடை செய்யக்கூடிய காரணங்களை விலக்குவதும், தேவையானால் நல்லொழுக்கத்தையும் அறிவை யும் வளர்க்கக் கூடிய வேலைகளில் ஈடுபடுதல். எல்லாப் பருவநிலைகளிலும் (நாள் தோறும் சிறிது தொலைவு நடத்தல், உடலுழைப்பு முதலியவை) திறந்த வெளியில் சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், உடலுக்கேற்ற ஊட்டத்தை அளிக்கும் உணவு ஆகியவைப் பின்பற்றுவதும் நோய் நீக்கத்திற்கு மிகவும் ஏற்றதான பத்தியங் களாகும்.

 கடும்குறு நோய்களில் மருந்தின் மூலம் விழித்தெழுந்து வீறுகொண்டுவிட்ட உயிராற்றல் தெளிவாகவும், தவறு இல்லாமலும் உடலுக்குத் தேவையானதை நோயாளிக்கு அறிவித்து விடுகின்றது. ஆதலால் அவர் மிகுந்த அவசரத்துடன் தேவைக்கேற்ப கோரும் உணவுப் பொருள்களை தடையின்றி கொடுக்கவும், உடலுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய உணவுப் பொருள்களை வற்புறுத்தி கொடுக்காமலும் இருக்க வேண்டியது நோயாளியைக் கவனித்துக் கொள்பவருக்கும், நண்பர்களுக்கும் மருத்துவர் பயனுரையாக வழங்கவேண்டும்.

 கடுங்குறு நோய்களால் தாக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி தனது, துன்பங்களை சிறிது நேரம் அடக்கிவைக்கக் கூடிய உணவையும் பானத்தை யுமே விரும்புவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்பொருள்களை மருத்துவக்குணம் கொண்டவை என கூற முடியாது. உடலின் ஏதோ ஒரு தேவையை அவை நிறைவு செய்கின்றன. நோயாளியின் இவ்விருப்பத்தை நாம் நிறைவேற்றினால் நோய் குணமாவதில் தடை ஏற்படுமென்று நாம் நினைக்க வேண்டாம். நோயாளிக்கு நன்கு தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டுள்ள மருந்தும், அம்மருந்தினால் இயற்கை நோயிலிருந்து விடுதலைப் பெற்றுள்ள உயிராற்றல், நோயாளியின் விருப்பத்தை நிறைவேற்றியதால் ஏற்படும் மன நிறைவு, ஆகிய மூன்றும் சேர்ந்து தடைகளை தகர்த்துவிடும். இதைப்போலவே கடுங்குறு நோய்களில் படுத்திருக்கும் அறையின் தட்ப வெப்ப நிலை, படுக்கை விரிப்புகள் கதகதப்பாக அல்லது குளிர்ச்சியாக இருத்தல் ஆகிய நேர்வுகளிலும் நோயாளியின் விருப்பப்படியே நடக்கவேண்டும். நோயாளி தன் மனதை அளவுக்குமீறி அலைபாய விடக்கூடாது; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

Pin It