மருத்துவத் துறையிலும் நலவாழ்விலும் இந்தியா மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளதைச் சுட்டிக்காட்டும் சில சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடும் செய்திகள் வருமாறு:

 உலக அளவில் முக்கிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான “குழந்தைகளைக் காப்பாற்றுவோம்” (save the children) அமைப்பு 55 நாடுகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது (TOI,மே 8,2008). இந்தியாவை உலகின் பெரு வல்லரசுகளில் ஒன்றாக ஆக்கியே தீருவது எனச் சவடால் அடித்து வருவதோடு, அதற்காக சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் இராணு வத்திற்குச் செலவிடும் மன்மோகன், சிதம்பரம், அலுவாலியா கும்பல் வெட்கித் தலைகுனியும் படியான சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. 55 நாடுகளில் 27 வது இடத்திற்கு காணா, எரித்ரியா, போன்ற வறுமைவயப்பட்ட நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டுள்ளது என்பதே அச்செய்தி.

 பிறந்து ஒரு மாதத்திற்குள் ஆண்டொன்றக்கு ஒரு மில்லியன் குழந்தைகள் இறந்து போகின்றன எனவும் இவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 53 சதத்துக்கும் மேற்பட்டவை (67 சதம்) அடிப்படை மருத்துவக் கவனிப்பின்றியே வளர்கின்றன. உலகில் இவ்வாறு மருத்துவ வசதியில்லாத ஐந்து வயதிற் குட்பட்ட குழந்தைகளில் 30 சதம் இந்தியாவி லுள்ளன. இந்தியா, பிரேசில், எகிப்து போன்ற நாடுகளிலுள்ள ஏழைக் குழந்தைகள் தம் 5ம் வயது முடிவதற்கு முன்னதாகவே சாகிற வாய்ப்பு பிறரைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஒன்றிலிருந்து ஐந்து வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் பெண்குழந்தைகள் சாவதற்கான வாய்ப்பு ஆண் குழந்தைகளைக் காட்டிலும் 61 சதம் அதிகம். பெண் குழந்தைகளின் நலத்திற்காகவும் மருத்துவத்திற்காகவும் செலவிடும் தொகை அவ்வளவு குறைவாக உள்ளது என்பதையும் இவ்வறிக்கை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றது.

 உலகிலுள்ள மொத்த காசநோயாளிகளில் 20 சதம்பேர் இந்தியாவிலுள்ளனர். மார்ச் 24 (2008)ல் உலக காச நோய் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3.8 மில்லியன் காசநோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் இருவர் காசநோயால் சாகின்றனர். உலக நல நிறவனத்தின் 2008ம் ஆண்டு அறிக்கை உலகளாவிய காசநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தோல்வியடைந்ததைச் சுட்டிக் காட்டுகிறது. 1997ல் தொடங்கப்பட்ட ‘திருத்தப்பட்ட தேசிய காச நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (RNTCP) டி.பி. இந்தியா RNTCP அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டுத் தம் காச நோய் தாக்கிய பெற்றோரைக் கவனிக்கச் செல்கின்றனர் எனவும் காசநோய் தாக்கிய சுமார் 1 லட்சம் பெண்கள் தம் வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது என்பதையும் வெளிப் படுத்தியுள்ளது.

 உள்நாட்டுப் போரால் சிதைந்து நலிவடைந் துள்ள ஸ்ரீலங்கா நாட்டில் அடிப்படை மருத்துவ நலம், இலவசக் கல்வி ஆகியவற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவம்கூட இந்தியாவில் அளிக்கப்படு வதில்லை. தென் ஆசியாவில் அடிப்படைச் சேவைகளை வளர்த்தெடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்கிற தலைப்பில் சமீபத்தில் (டெல்லி, 2006) ‘ஆக்ஸ்ஃபாம் இன்டெர்நேஷனல்’ அமைப்பு அளித்த அறிக்கை இந்த உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளது. தென் ஆசிய நாடுக ளின் மனித வளர்ச்சிக் குறி எண்களில் ஸ்ரீலங்கா முன் நிற்கிறது. அடிப்படை மட்டத்தில் இலவச மருத்துவம் எல்லாருக்கும் வழங்கப்படுகிறது. கீழே இருக்கக் கூடியவர்கள் இலவசமாகவும், மேலே போகப்போக அதிகரிக்கும் வரிச் செலுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ள பொருளாதார முறையால் வசதியுள்ளவர்கள் பணம் செலுத்தி மருத்துவம் செய்து கொள்ளக் கூடியதாகவும் அங்கே மருத்துவ நல அமைப்பு செயற்படுகிறது. மாறாக இந்தியாவிலோ பொதுத்துறைச் செலவுகள் மிகமிகக் குறைந்த அளவிலேயே செய்யப்படுவதால் ஏழை எளியவர்களும்கூட சொந்தச் செலவு செய்தே மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலே குறிப்பிட்டது போல மருத்துவச் செலவுகளில் ஐந்தில் நான்கு பங்கு தனியார் பங்காக உள்ளது. ஸ்ரீலங்காவில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு வரையிலான வகுப்பு களுக்குத் தனியார்கள் பள்ளிகள் திறப்பது தடைசெய்யப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.

 இன்னும் உலகின் அதிக அளவு தொழு நோயாளிகள் இந்தயாவில்தான் உள்ளனர். உலக நல நிறுவனத்தின் கணக்குப்படி 2005ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கே 1,48.910 தொழு நோயாளிகள் இருந்தனர். அதாவது பத்தாயிரம் பேருக்கு 14 தொழு நோயாளிகள்(ரஏஞ, வாராந்திர கொள்ளை நோய்ப் பதிவு, ஆக.26, 2005)

 ஜனவரி 2000க்குள் தொழுநோயை ஒழிப்பது என்கிற உலகளாவிய திட்ட இலக்கை இந்தியா எட்டாததால் 2005 வரை உலக நல நிறுவனம் இந் யாவிற்குக் காலநீடிப்பு அறிவித்தது. உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறையின்படி தொழுநோயை இந்தியா ஒழித்துவிட்டது என் றொரு விளக்கமும் இந்திய அரசால் அளிக் கப்பட்டது. (பட்ங் ஏண்ய்க்ன், ஒஹய். 31. 2006) அதாவது உலக நல நிறுவனம் பத்தாயிரம் பேருக்கு உள்ள தொழு நோய் ஒழிக்கப்பட்டதாக புதிய வரையறை ஒன்றை ஆக்கியுள்ளது. இந்தியாவில் 2006 தொடக்கத்தில் இருந்த தொழு நோயாளிகள் 95,000 தானாம். அதாவது பத்தாயிரம் பேருக்கு 0.95 தொழு நோயாளிகள். இது 1ஐ விடக் குறைவு என்பதால் தொழுநோய் ஒழிக்கப்பட்டு விட்டதாம்.

 உலக நல நிறுவனத்தின் இந்தப் புதிய வரையறை இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு ஏற்புடையதல்ல. பத்தாயிரம் பேருக்கு ஒரு தொழு நோயாளி என ஆனால் பின்னர் தானாகவே தொழுநோய் அழிந்துவிடும் என எதிர்பார்க்க இயலாது. தவிரவும் தொழுநோய் தாக்கிக் குணமடைந்தவர்களுக்கு சமூகத்திலிருக்கும் இழிவு குறைந்த பாடில்லை. பொது இடங்களில் அவர்கள் வேலை செய்ய இயலாது. அவர்கள் தயாரிக்கும் உணவை மட்டுமல்ல, பொருள்களையும் கூட யாரும் வாங்குவதில்லை. தொழுநோய் தாக்கி குணமானோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது உட்பட மறு வாழ்வு குறித்த எந்தத் திட்டமும் இல்லாமல் தொழுநோய் ஒழிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பது மக்களை ஏமாற்றும் இன்னொரு வேலையே.

  பொது மருத்துவமனைகளைத் தனியார் மயமாக்குவது மருத்துவ நல ஆராய்ச்சி முதலியவற்றை மேலும் தனியார் மயப்படுத்துவது, மருத்துவம் தொடர்பான அரசின் பொறுப்புகளை அரசு சாரா நிறுவனங்களிடமும் தனியார்களிடமும் தட்டிக் கழிப்பது, இதன் மூலம் தனியார்கள் கொள்ளை யடிக்க வழிவகுப்பது ஆகியவற்றின் மீதே இன்றைய கொள்கைகள் கவனம் குவிக்கின்றன. எளிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மருத்துவத்தை மக்கள் மயப்படுத்துதல் என்கிற அல்மா ஆடா கொள்கைக்குப் பதிலாக உயர் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட ‘கார்ப்பரேட்’ மருத்துவ சேவை என்கிற கருத்தாக் கம் இன்று வலியுறுத்தப்படுகிறது.

 பழைய மருந்துகளுக்குப் புதிய பயன் பாட்டைச் சொல்லிக் காப்புரிமை பெற்று மேலும் பல காலங்களுக்கு ஏகபோக ஆதிக்கம் செய்யும் அயோக்கியத் தனங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யத் தயங்குவதில்லை. 1963ல் கண்டுபிடிக்கப்பட்ட ‘AZT’ மருந்து 1985ல் தான் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படும் எனக் கண்டறியப்பட்டது. எனவே 2005 வரை புதிய பயன்பாட்டிற்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. இதை உற்பத்தி செய்து வந்த ‘கிளாக் சோஸ்மித்கிளின்’ என்னும் பன்னாட்டு நிறுவனம் 2003ல் மருந்தைத் தனியாகப் பயன்படுத்துவதால் உரிய பயன் விளையாது எனக் கண்டுபிடித்தது. 2007ல் காப்புரிமை ரத்தாகவிருந்த ‘லமுவிடின்’ என்னும் மருந்தைக் கலந்து ஒரு கூட்டுக் கலவை மருந்தை உருவாக்கி 2017 வரை காப்புரிமை பெற்றது. இவ்வாறு கிளாஸ்ஸோ நிறுவனம் AZT மருந்தின்மீது 54 ஆண்டுகள் ஏகபோக உரிமை பெற்று ஆண்டது. தவிரவும் ஏழை எளிய நாடுகளின் முக்கிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப் பதற்கான ஆய்வுகளுக்கு இப்பன்னாட்டு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. பெரும் லாபம் அளிக்கக்கூடிய மேற்கத்திய மருந்துச் சந்தையை நோக்கமாக வைத்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகமயம், தாராளமயம் ஆகியவற்றைச் சுருக்கமாக இப்படிக் கூறலாம். சட்ட ஒழுங்கு தவிர பிற எல்லாவற்றிலும் அரசுக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ளுதல்; கல்வி மருத்துவம் உள்ளிட்ட மக்கள் சேவைகளைத் தனியார்மயமாக்கல். அதாவது கல்வி, மருத்துவச் செலவுகளை அரசின் பொறுப்பிலிருந்து மக்களின் பொறுப்புக்கு மாற்றுதல், இதுகுறித்து விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. நாமெல்லோரும் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிற, அனுபவித்துக் கொண்டுள்ள ஒரு நிலை இது. மருத்துவ சேவைகளுக்கென அரசு மருத்துவமனைகளிலும் கூட சேவைக் கட்டணம் வசூலித்தல், தனியார் துறைப் பெருக்கம், மருத்துவத்துறையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நுழைவு என்பன இன்று நம் கண் முன் உருவாகியுள்ள மாற்றங்கள். பொதுத்துறை நிதி ஆதாரத்தைப் பெருக்குவது என்கிற பெயரில் அரசு மருத்துவமனையை நாடிவரும் அடித்தள மக்களின் கடைசிச் சொட்டு இரத்தமும் வடித்தெடுக்கப்படுகிறது. முக்கிய மருந்துகள் பலவும் எழுதிக் கொடுக்கப்பட்டு அதை வாங்குவது மக்களின் பொறுப்பாக்கப்படுகிறது.

 தவிரவும் இன்று மாவட்ட அளவு வரை பல்கிப் பெருகியுள்ள கார்ப்பரேட் மருத்துவ மனைகள். உயர் தொழில்நுட்பம் சார்ந்த இவற்றை நோக்கிச் சாதாரண மக்களும் தள்ளப்படுகின்றனர். எந்த நோயையும் செலவு செய்தால் குணப்படுத்தி விட இயலும் என்கிற நம்பிக்கை இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 சில பத்தாண்டுகளுக்கு முன் இதயநோய் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நிலை வந்தால் ஏழை எளிய மக்கள் விதி முடிந்துவிட்டது என்பதாக மரணத்தை எதிர்கொள்ளும் நிலை இருந்தது. இன்று அப்படியில்லை. செலவு செய்தால் குணப்படுத்த இயலும். அல்லது குறைந்தபட்சம் இன்னும் சில ஆண்டுகள் மரணத்தை ஒத்திப்போட இயலும் என்கிற நிலை உள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வுதான் எனினும் அரசு ஆதரவு, இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஆகியவை இல்லாத நம் கிராமப்புற மக்கள் சொத்தை விற்று கடன் வாங்கித்தான் இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நெருங்கிய உறவுகளின் ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் நீடிப்பதற்கான எதையும் செய்யத் துணிவது மனித இயல்புதானே. சில சந்தர்ப்பங்களில் முன்று அல்லது நான்கு இலட்ச ரூபாய்கள் வரை இப்படிச் செலவிட வேண்டிய நிலை நோயாளியைச் சுற்றியுள்ளவர்களைப் பெருங்கடனாளியாக ஆக்கிவிடுகிறது. மகாராஷ் டிரம், பஞ்சாப், ஆந்திரம் முதலான மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து விரிவாக ஆய்ந்து தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத் தற்கொலைகளுக்கான காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு என்கிறார் (Anatomy of a Health Disaster. The Hindu, June 30, 2005).

 கடந்த இருபதாண்டுகளில் நிலைமை மோசமாகியுள்ளது. மருத்துவத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது அரசின் அணுகுமுறை யாக உள்ளது. 1990களில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவங்களில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப் பட்டது. பிரசவ மற்றும் குழந்தைநலம், நோய்க் கட்டுப்பாட்டுச் செயல்பா டுகள் முதலான பல வெளிநாட்டு உதவி பெறும் திட்டங்களில் தனியார் பங்கேற்பு உலக வங்கியின் ஆணைக் கிணங்க மேற்கொள்ளப்பட்டது. புதிய பொது நிர்வாகம் என்கிற பெயரில் இந்த பொதுதனியார் ஒத்துழைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. புதிதாக உருவான சட்டிஸ்கார், ஜார்கண்ட், உத்தராஞ்சல் முதலான மாநிலங்கள் பெரிய அளவில் இந்தப் பொதுதனியார் ஒத்துழைப்பையே அதிகம் நம்பியுள்ளன. பொதுத்துறை வலுவாக உள்ள இடங்களில் மட்டுமே இந்த ஒத்துழைப்பு ஓரளவேனும் மக்களுக்குப் பயனுடையதாக அமைகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . நிலம் வழங்குதல், கருவிகளை இறக்குமதி செய்ய வரிகளைத் தள்ளுபடி செய்தல் முதலியவற்றிற்கு ஈடாக பெரும் கார்ப்பரேட் மருத்துவமனை குறைந்தபட்சமாகச் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும்.

 எடுத்துக்காட்டாக புதுடெல்லி இந்திரப் பிரஸ்தாவில் உள்ள அப்போலோ மருத்துவ மனைக்கு நூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை அரசு அடிமாட்டு விலைக்கு வழங்கியுள்ளது. ஈடாக உள்நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட சதத்திற்கும், அதுபோல வெளி நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கும் அது இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும். ஆனால் அப்போலோ இந்த ஒப்பந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை என்பதை மத்திய புலனாய்வுத் துறையே சுட்டிக்காட்டி யுள்ளது. இப்படி நிறையச் சொல்ல இயலும்.

 ‘மருத்துவச் சுற்றுலா’ என்கிற பெயரில் வெளிநாட்டார்கள் இங்கு வந்து சொகுசாகத் தங்கி மருத்துவம் செய்து கொண்டு செல்வது இன்று அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. வெளிநாட்டு நோயாளிகளிடம் கட்டணம் பெற்றுக் கொண்டு மருத்துவ சேவை அளிப்பது

ஊக்குவிக்கப்படும் எனப் புதிய தேசிய நலக் கொள்கை அறிவித்துள்ளது. அந்நியச் செலா வணியை ஈட்டித்தரும் சிறந்த வழியாக இதனை நாம் ஆட்சியாளர்கள் பார்க்கின் றனர். இதில் காங். அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மருத்துவச் சுற்றுலா “ஏற்றுமதிக்குச் சமமாக” கருதப்படும் எனவும் எனவே ஏற்றுமதிக்குரிய எல்லாச் சலுகைகளும் வழங்கப்படும் எனவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்தது. காங். அரசு அதைப் பின்பற்றிச் செயல்படுகிறது. ஏக்கர் ஒரு ரூபாய் என்பது போல நகர்ப்புற முக்கிய நிலங்களை கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு வழங்கு வதற்கும், கருவிகளை வரிகளின்றி இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கும் இதுவும், அதாவது அந்நியச் செலாவணியை ஈட்டுவதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக நமது ஆட்சியாளர்கள் எதையும் செய்யத் தயார். இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றை விற்று நாட்டை வளமாக்க லாமே என்று கூட மன்மோகன்சிங் வகையறாக் கள் எதிர் காலத்தில் பேசினாலும் வியப்படை வதற்கில்லை. இந்திய அளவில் கிட்னி வியாபாரம் மருத்துவச் சுற்றுலாவுடன் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்மூர் எளிய மக்களின் சிறுநீரகங்களையும் இதர உடல் உறுப்புகளையும் அறுத்து விற்பதற்கு இங்கு சில மருத்துவர்களும், தனியார் மருத்துவ மனைகளும் தயங்குவதில்லை.

 அரசுக்கே இந்த மாதிரி அம்சங்களில் அறம் சார்ந்த அணுகல் முறை இல்லாதபோது லாபம் ஒன்றையே குறிக்கோளாக இயங்கும் தனியார் களிடம் இதை எப்படி எதிர்பார்ப்பது இயலும். உலகின் மிக அதிகமான எய்ட்ஸ், மலேரியா, காசநோய் மற்றும் தொழு நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். இப்படியான ஒரு சூழலில் இருக்கும் கொஞ்சநஞ்ச வசதிகளையும் அந்நியச் செலாவணியை நோக்கித் திரும்புவது எப்படிச் சரியாக இருக்கும். மருத்துவ முதலீடு என்பதே இப்படி அந்நியச் செலாவணியை நோக்கியதாக இருக்கும்போது ஆரம்ப நலம் எந்த அளவிற்குப் புறக்கணிக்கப்படும்? அந்நியச் செலாவணி என்கிற பெயரில் வரிச் சலுகைகளை வாரி வழங்குவது, இந்திய மக்களின் வரிப் பணத்திலிருந்து வெளிநாட்டுப் பயணிகளின் சிகிச்சைக்கு மான்யம் வழங்குவதாகாதா? மருத்துவச் சுற்றுலாவுக்கான வரத்து அதிகரிக்க அதிகரிக்க விநியோகத்திற்கும் தேவைக்குமான இடைவெளிஅதிகமாகி மருத்துவச் செலவு மேலும் அதிகரிக்காதா? இவை எல்லாம் உள்நாட்டு மக்களின் துன்பத்தை அதிகரிப்பதற்கு இட்டுச் செல்லாதா?

(“நமது மருத்துவ நலப் பிரச்சனைகள்” நூலின் மூன்றாம் பதிப்பு முன்னுரையிலிருந்து சில பகுதிகள்)

- மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது

Pin It