இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் பெரும் போர்களின் துயரம், அவை குடிமக்கள் மீது சுமத்திய மிகப்பெரிய மனிதத் துன்பம் ஆகியவை போர்க் காலங்களில் தனிப்பட்ட குடிமக்கள் பாதுகாப்புப் பற்றிய பொது அக்கறையை மிகப்பெரிய அளவுக்குத் தூண்டி விட்டுள்ளன. முதலாவது ஜெனீவா உடன்பாடு என்று குறிப்பிடப்படும் 1864ஆம் ஆண்டு உடன்பாடு சமகால மனிதநேயச் சட்டத்திற்கான அடித்தளங்களை இட்டுள்ளது. அது போர்க்காலங்களிலும் ஆயுதம் தாங்கிய மோதல் நேரங்களிலும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து அரசுகளும் பின்பற்ற வேண்டிய பன்னாட்டு விதிகளைக் கொண்ட உடன்பாடாகும். அந்த உடன்பாடு தொடர்ந்து பலமுறை விரிவாக்கப்பட்டும் திருத்தப்பட்டும் வந்துள்ளது. 1949இல் நடந்த நான்காவது ஜெனீவா மாநாட்டில், ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை, பாதிக்கப்படும் நான்கு வகையான பிரிவுகளுக்கு விரிவாக்கம் செய்ய அதில் கலந்து கொண்ட நாடுகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டன. முதலில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த உடன்பாட்டில் காஷ்மீர் போல, படை ஒன்றினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் குடிமக்கள் பாதுகாப்பும் அடங்கும்.

kashmir_boy_4001949 ஆம் ஆண்டு உடன்பாடு, நாடுகளுக்கிடையேயான மோதல் தன்மை கொண்டிராத, உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள தரப்பு ஒன்றின் ஆட்சிப்பகுதிக்குள் நிகழும் ஆயுதம் தாங்கிய மோதலின் போது, மனிதர் ஒருவரின் கண்ணியத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய மரியாதை குறித்ததாக இருந்தது. காசுமீர் ஒரு நாட்டிடை மோதல் என்று வாதிடப்படலாம். ஏனென்றால் தகராறில் உள்ள மூன்று தரப்பில் பாகிசுத்தானும் ஒன்றாக இருக்கிறது. எவ்வாறாயினும், காசுமீர் தற்போது இந்திய அரசியல், நிர்வாகக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளது என்ற அளவுக்கும், காசுமீர் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒரு நீண்ட கால மோதலை அடையாளப்படுத்தும் அளவுக்கும், இந்தியப் படையினர் அங்கு இருக்கின்றனர். அந்தப் பகுதி பல வழிகளில் இந்தியப் படை நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் 1949ஆம் ஆண்டு ஜெனிவா உடன்பாட்டின் சட்டபூர்வக் கடப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இந்தியாவிற்கு நீதிநெறிசார்ந்த பொறுப்புடைமை ஆகிறது.

அந்த உடன்பாட்டின் 3 வது பிரிவின் படி, குடிமக்களைப் பொறுத்தவரை எந்த ஒரு நேரத்திலும், எந்த ஓர் இடத்திலும் பின்வரும் செயல்கள் தடை செய்யப்படுகின்றன:

குடிமக்கள் உயரின் மீதும் உடலின் மீதும் வன்முறையை ஏவுவது, குறிப்பாக, சித்திரவதை, முடமாக்குதல், அல்லது கொடுமையான முறையில் நடத்துவது;

தனிநபர் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்துவது, குறிப்பாக, அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் வகையில் நடத்துவது; இனம், மதம் அல்லது நம்பிக்கை அடிப்படையில் எதிராக நடத்துவது.

நாகரீகம் அடைந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நீதி சார்ந்த உறுதிகளையும் வழங்கும், சட்ட அடிப்படையில் அமைந்த நீதிமன்றத்தில் முன்கூட்டி அறிவிக்கப்பட்ட தீர்ப்புரை இல்லாமல், வேறு எந்த வகையான தண்டனைகளும் வழங்குவதோ நிறைவேற்றுவதோ கூடாது என்றும் அந்தப் பிரிவு தடை செய்கிறது..

மேலும் அந்த உடன்பாட்டின் பிரிவு 27இன்படி, எந்தச் சூழ்நிலையிலும் குடிமக்கள், மனிதர் என்ற முறையில் மதிக்கப்படவும் அவர்களுடைய பெருமை, குடும்ப உரிமைகள், மதநம்பிக்கைகள், நடைமுறைகள், காலம் காலமாகக் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் ஆகியவை மதிக்கப்படவும் வேண்டும். அவ்வாறு நடத்தப்படுவதற்கான எல்லா உரிமைகளும் குடிமக்களுக்கு உண்டு. அவர்கள் எல்லா நேரங்களிலும் மனிதர்கள் என்ற முறையில் நடத்தப்பட வேண்டும், அனைத்து வகையான வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அல்லது அவமதிப்புகளுக்கும் எதிராக அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பெண்கள் அவர்களுடைய பெருமை, குறிப்பாகப் பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

உடன்பாட்டின் பிரிவு 5இன்படி அரசின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐயப்படுகிற, அல்லது ஈடுபட்டுள்ள எந்த ஒரு தனி நபரையும் படை மனிதப் பண்புடன் நடத்த வேண்டும், மேலும் உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ள நியாயமான மற்றும் ஒழுங்கான வழக்கு விசாரணை உரிமைகள் அவருக்கு வழங்கப்படுவது உறுதியளிக்கப்பட வேண்டும்.

பிரிவு 18இன் படி, படையானது கட்டாயமாக அனைத்து நேரங்களிலும் பொது மக்களுக்கான மருத்துவமனைகளை மதிக்கவேண்டும், காயமடைந்தோருக்கும் நோயுற்றோருக்கும் உரிய பராமரிப்பை உறுதிப்படுத்த வேண்டும்

பிரிவு 33இன் படி குடிமக்களுக்குக் கூட்டாகத் தண்டம் விதிப்பதும், அவர்களுக்கோ, அவர்களுடைய உடைமைகளுக்கோ எதிரான அச்சுறுத்தும், பறிமுதல் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகின்றன.

இந்த விதிமுறைகள் அனைத்தும் காசுமீரில் இந்தியப் படையினரால் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப மீறப்பட்டு வருவதும், அதன் விளைவாகக் காசுமீர் குடிமக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும் பெரும் துயரமாகும். படையைப் பயன்படுத்திக் காசுமீர் ஆட்சிப் பகுதியைப் பறிக்கும் முயற்சியில் காசுமீர் குடிமக்களின் பாதுகாப்பு, கண்ணியம், பாலியல் நேர்மை ஆகியவை பறிக்கப்பட்டு வருவது மிகுந்த துயரம் தருவதாகும்.

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைகளால் 70,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பல பத்தாயிரக்கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர்; 10,000 பேர் காணாமல் போயுள்ளனர்; எத்தனை படுகொலைகள், எத்தனை பாலியல் வன்கொடுமைகள்; கணக்கிலடங்கா.

ஜம்முகாசுமீரில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அறுபதாயிரத்திலிருந்து பல நூறாயிரம் வரை இருக்கலாம் என்று பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் அமெரிக்க அரசுறவு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் குறிப்பிடுகிறது. இந்தச் சித்திரவதைகள் சித்திரவதைக்கு எதிரான நாட்டிடை உடன்பாட்டில் கண்டுள்ள விதிமுறைகளை மீறியவை ஆகும்.

2010இல் ஐந்து மாத இடைவெளியில் எட்டுக் குழந்தைகள் சித்திரவதையால் இறந்து போயுள்ளனர். 3000க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

kashmir_agitation_460

2009 அக்டோபர் 29 அன்று 11 சிறுவர்கள் அமர்வு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஆசனவாய் வழியே புணரப்பட்டு எவ்விதம் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை விவரித்தார்கள். மருத்துவ விசாரணைக்கு உட்படுத்தியதில் அது உண்மையானது, ஆனால் இதுவரை அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2009 காசுமீரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 4000 இளைஞர்கள் கல்வீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களில் 118 பேர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்; நூற்றுக்கணக்கானவர்கள் முடமாக்கப் பட்டனர். விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட இந்த இளைஞர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் காவல் நிலையத்தில் கையெழுத்திடக் கோரப்பட்டனர். அவர்களுடைய செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன; மின்னஞ்சல்களும், முகநூல் பக்கங்களும் கண்காணிக்கப்பட்டன.

2010இல் ஷாஜாத் அகமது, மொகம்மது சபி, ரியாஜ் அகமது ஆகிய மூன்று இளைஞர்களை ராபியாபாத்தின் நாடிஹால் கிராமத்திலிருந்து படைக்கு சுமைதூக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எல்லைப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் மூவருமே கொல்லப்பட்டு அடையாளம் தெரியாத போராளிகள் என்று கூறப்பட்டுப் புதைக்கப்பட்டு விட்டார்கள். உள்ளூர் மக்கள் இந்தக் கதையை நம்பாமல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி விசாரணை கோரினார்கள். இல்லாவிட்டால் இந்த உண்மை வெளியே தெரியாமலே போயிருக்கும். அதேபோல ராஜூரியிலிருந்து மனநிலை சரியில்லாத நபர் ஒருவரைப் படையினர் அழைத்துச் சென்று போராளி என்று போலி மோதலில் கொலை செய்தனர். அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்திய பிறகே உண்மை வெளிவந்தது. இது போல உண்மை வெளிவராமல் காணாமல் போய், கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் 10,000க்கும் மேல் இருப்பார்கள்.

2012 ஜூலை 2 அன்று எஸ்.எஸ்.பி.பஷீர் அகமது தலைமயிலான விசாரணைக் குழு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் குப்வாரா, பாராமுல்லா, பந்திப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மறைக்கப்பட்ட 38 கல்லறைத் தோட்டங்களில் 2730 பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகள் இருப்பதும் அவற்றில் 2156 பேருடைய கல்லறைகள் அடையாளம் தெரியாத நபர்களுடையது என்றும் குறிப்பிட்டுள்ளது. அவை அடையாளம் தெரியாத தீவிரவாதிகளுடையவை என்று படையினர் கூறினர். ஆனால் அவற்றில் 574 காணாமல் போன தங்களுடைய உறவினர்களுடையவை என்று அவ்வூர்க்காரர்கள் கூறியுள்ளனர். இப்படி வடக்குக் காசுமீர் முழுவதும் கல்லறைகள், கல்லறைகள்; அனைத்திலும் அடையாளம் தெரியாத சடலங்கள் அடக்கம் செய்யபட்டுள்ளன.

காணாமல் போனவர்களின் மனைவிமார்கள் தங்களுடைய கணவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் மறுமணம் செய்துகொள்ள முடியாது, ஏனென்றால் இறப்புச் சான்றிதழ் எதுவும் அவர்களுக்கு இல்லை. அந்த அரை விதவைகள பல நேரங்களில் அவர்களுடைய புகுந்த வீட்டாரால் தெருவிற்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போனவர்களின் சொத்துகளைக் கூட, மரணமுற்றதற்கு உறுதியான சான்று இல்லை என்றால், 90 ஆண்டுகள் வரை வாரிசுகள் பெறமுடியாது என்று உருது நாளிதழ் அல்சபாவின் ஆசிரியர் ஜாஹிருதீன் சுட்டிக்காட்டுகிறார். இவையெல்லாம் மிகச் சில எடுத்துக்காட்டுகளே. உண்மையில் காசுமீர் மக்கள் படும் துயர் சொற்களில் விவரிக்க முடியாததாகும்.

kashmir_go_india_460

காசுமீர் தோட்டம் வலிதரும் புண்ணாக ஆகிவிட்டது,
எஜமானரின் இன்பம் மக்களின் வறுமை ஆகிவிட்டது.
அவர்கள் காசுமீரின் ஆன்மா மீது
சீற்றத்துடன் பாய்கிறார்கள்,
வெறிகொண்ட நாய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கதவுகள், சுவர்கள், கூரைகள், மற்றும் தெருக்கள்,
ஒவ்வோர் ஆன்மாவும் துன்பம் இசைக்கும்
குழலாக முறையிடுகிறது.
கொடுங்கோலர்களின் இதயங்கள்
கல்லைப் போலக் கடினமானவை,
அவர்கள் மக்களின் வேதனையை உணரமுடியாதவர்களாக விரைந்து கொண்டிருந்தார்கள்.

- கவிஞர் சைதுதீன் ஷஹபாடி

இப்படிக் காசுமீர் முழுதும் மக்கள் மீது இந்தியப் படைகளும் காவல்துறையும் மிகக் கொடிய முறையில் ஒருதலையான ஒரு போரை நடத்திவருகின்றன. இந்திய ஆட்சியாளர்கள் காசுமீர் மக்களின் விடுதலை வேட்கையை நசுக்கிவிட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்குமுறையில், வன்கொடுமையில் ஈடுபட்டு வருகிறார்கள்; மனித உரிமைகள் அனைத்தையும் காலடியில் போட்டு மிதித்து வருகிறார்கள். காசுமீர் மட்டுமல்ல உரிமை கோரும் எந்த ஒரு தேசிய இனத்தையும் அவர்கள் இவ்வாறே நடத்துகிறார்கள்; நடத்துவார்கள்.

ஜெனீவா நாட்டிடை உடன்பாடு காசுமீரில் அப்பட்டமாக மீறப்படுகிறது. ஓர் இனத்தையே கொன்றொழித்துவிடத் துடிக்கும் இராசபட்சேவின் கொடுஞ்செயலகளுக்கு இந்திய ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறைந்தவையல்ல. இராசபட்சேவைப் போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற போது, அவரது மேனிலைக் கூட்டாளிகளான இந்திய ஆட்சியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தபட வேண்டும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

பன்னாட்டு விசாரணை நடைபெற்றாலும் நடைபெறாவிட்டாலும் விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்படும் தேசிய இனமக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுக்கும் போது, தங்களை ஒடுக்கியோரை, தங்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்துவார்கள். அப்போது அந்தக் குற்றவாளிகளின் பிணங்களும் தோண்டி எடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்; தண்டனை வழங்கப்படும். அந்த நாள் விரைவில் வரும். இந்திய ஆட்சியாளர்களும் அதிலிருந்து தப்ப முடியாது.

- வெண்மணி அரிநரன்