“இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க ஆணையம் அமைக்கக் கோரி ஐ.நா பொதுச் செயலாளருக்கு அளிக்கும் விண்ணப்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு தமிழ்நாட்டில் கையொப்பம் வாங்குகிறது. த.தே.பொ.க அக்கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட வில்லையா?” என்ற வினாவிற்குத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் நிகரன் விடையளித்திருக்கிறார்.

       நா.க.த.அ வழங்கியுள்ள விண்ணப் பத்தில் இராசபட்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற நேரடிக் கோரிக்கை இல்லை. இலங்கையின் அரசியல் தலைமை மற்றும் படைத் தலைமை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் உள்ளது. - இது சரியன்று என்கிறார் நிகரன்.

       ஐ.நா பொதுச் செயலர் அமர்த்திய மூன்று வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கை இராசபட்சேயை அல்லது வேறு எவரையும் போர்க் குற்றவாளியாக அறிவிக்கவில்லை. அது அக்குழுவின் வேலையும் அன்று. இராசபட்சேயையும் மற்றவர்களையும் பெயர் குறிப்பிட்டுப் போர்க் குற்றவாளிகள், மானுட எதிர்க் குற்றவாளிகள் அல்லது இனக் கொலைக் குற்றவாளிகள் என்று ஐ.நா. குழு அறிவிக்க வேண்டுமானால் முதலில் இக்குற்றங்கள் குறித்துப் புலனாய்வு செய்ய வேண்டியிருக்கும். ஐ.நா.குழு அறிக்கை குறித்து தோழர் கி.வெங்கட்ராமன் எழுதி த.தே.பொ.க வெளியிட்டுள்ள குறு நூலுக்கு 'மனித குலப் பகைவன் இராசபட்சே ஐ.நா குழு அறிக்கை' என்று தலைப்புத் தரப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கை இராசபட்சேயை மனித குலப் பகைவனாக அறிவித்துள்ளது என்ற தவறான கருத்தை ஏற்படுத்தக் கூடியது. தோழர் நிகரனும் இப்படித் தவறாக நினைத்திருக்கக் கூடும்.

       சிங்கள அரசின் குற்றங்களை 'நம்பும்படியான குற்றச்சாட்டுகள்' என்றுதான் ஐ.நா அறிக்கை வரையறுத்து ஐந்து விதமாக வகைப்படுத்துகிறது. இராசபட்சேயின் குற்றம் என்ன? மற்ற ஒவ்வொருவரின் குற்றமும் என்ன? என்பதை அது சொல்ல முற்படவில்லை. அப்படிச் செய்வதற்குத்தான் மேற்கொண்டு புலனாய்வு செய்யச் சொல்கிறது. புலனாய்வைக் கண்காணிக்கப் பன்னாட்டு விசாரணை ஆணையம் ஏற்படுத்தச் சொல்கிறது.

       இந்த ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கோரி எழுதும் விண்ணப்பத்தில் புலனாய்வு கோரலாம், அதற்கான விசாரணை ஆணையம் கோரலாம், புலனாய்வு முடிவுகளின் படி குற்றம் புரிந்ததாக அறிவிக்கப்பட்டவர்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றக் கோரலாம். புலனாய்வு கோரும் விண்ணப்பத்திலேயே புலனாய்வின் முடிவு இன்னதாகத்தான் இருக்க வேண்டும் என்று முன்னறிவிப்பது எவ்வாறு எடுபடும்?

       இராபட்சே பெயரை குறிப்பிடக் கூடாது என்பது நா.க.த.அ நிலைப்பாடன்று. ஐ.நா அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை கோருகின்ற விண்ணப்பத்தில் அது தேவையற்றது என்பதே. இராசபட்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று எழுதியிருந்தால், 'இராசபட்சேயைத் தூக்கிலிடுமாறு கேட்கவில்லையே' என்று வேறு சிலர் குறை காணக் கூடும். ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் மட்டும் இராசபட்சேயைத் தூக்கிலிடுமாறு கேட்க முடியாது என்றால், அதே அறிக்கையின் அடிப்படையில் அவரைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்குமாறும் கேட்க முடியாது.

       ஒரு கோரிக்கையை விடுதலை நீதியின் அடிப்படையில் எழுப்புவது வேறு, அதே கோரிக்கையைச் சட்ட நீதியின் அடிப்படையில் எழுப்புவது வேறு என்பதை நிகரன் புரிந்துகொள்ள வேண்டும்.

       இதே விடையில் நா.க.த.அ குறித்து நிகரன் சாற்றும் குற்றங்களும் சரியில்லை. நா.க.த.அ நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 29 பேரைப் புறக்கணித்து விட்டார்கள் என்கிறார். அவர்களை புறக்கணித்து விட்டார்கள் என்பது உண்மை என்றால், அதற்குக் காரணம் அவர்கள் புலி ஆதரவாளர்கள் என்பதுதானா? அந்த 29 பேரில் யாராவது “புலி ஆதரவாளர்கள் என்பதால் எங்களைப் புறக்கணித்து விட்டார்கள்” என்று கூறியுள்ளார்களா? இந்த 29 பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் புலி எதிர்ப்பாளர்கள் என்று நிகரனுக்கு உறுதியாகத் தெரியுமா?

       தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் ஏற்றுக் கொண்ட புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் யாரும் நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்கவில்லையாம்.

       தோழர் நிகரன் அவர்களே! எப்படி உங்களால் வீச்செடியாக இப்படி எழுத முடிகிறது? நா.க.த.அ உறுப்பினர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஒரு சிலரையாவது நான் அறிவேன். இங்கே பெயர் குறிப்பிடத் தேவையில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். புலிகள் இயக்கம் தடை செய்யப்படாத 'சுவிசு' போன்ற நாடுகளில் புலிகள் இயக்க மாகாணப் பொறுப்பாளர்களே நா.க.த.அ நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

       அவ்வளவு ஏன்? நா.க.த.அ தலைமை அமைச்சர் உருத்திரகுமாரன் யார்? புலிகள் இயக்கத்திற்கு எதிரானவரா? அவர் தேசியத் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர் என்பதை ஈழத் தமிழர் ஒவ்வொருவரும் அறிவர். இன்றளவும் உருத்திரகுமாரன் பிரபாகரனைத் 'தேசியத் தலைவர்' என்றே குறிப்பிட்டு வருகிறார்.

       போராட்டக் கட்டம் மாறும் போது இலட்சியக் குறிக்கோள் மாறாமலே அமைப்பு வடிவம் மாறுவது இயல்பு. பழைய வடிவத்திற்கு பொருந்தக் கூடிய எல்லாரும் புதிய வடிவத்திற்கும் பொருந்துவார்கள் என்று சொல்ல முடியாது. பழைய வடிவத்திற்கு பொருந்தாத பலர் புதிய வடிவத்திற்குப் பொருந்துவதும் நிகழக் கூடியதே. தமிழீழத் தனியரசு என்ற குறிக்கோளுக்கான போராட்டம் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. இந்தக் கட்டத்திற்குப் பொருத்தமான புதிய அமைப்பு வடிவங்களில் ஒன்றாக நா.க.த.அ உள்ளது. நிகரன் புரிந்து கொள்வாரா?