புரட்சியாளர் சே குவேராவின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா கியூபாவிலிருந்து ஓர் அறிக்கை வெளியிட்டார்:

என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிகச் சின்னமாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் ஃபிஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச் சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.

ஆனால், சே குவேராவைக் காலில் போட்டு மிதிக்கும் காரியம் இந்தத் தமிழ்நாட்டிலேயே நடைபெறுகிறது. சிவகங்கையில் ஒரு கடையில் சே குவேரா படம் போட்ட கால் மிதியடிகள் விற்பனை ஆகின்றன. செந்நிறப் பின்னணியில் சேவின் படம் கருப்பு வெள்ளேயில் உள்ளது.

விசாரித்துப் பார்த்த போது, மதுரை நடராசா நகரில் சூரியன் நீடு ஹோம் என்ற கடையிலிருந்து சே குவேரா மிதியடிகள் வாங்கி வரப்பட்டிருப்பது தெரிந்தது.

மதுரைக்கு எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், கேரளத்திலிருந்து என்ற பதில் கிடைத்தது. இந்த மிதியடிகளே மதுரையில் விற்பவரும் கேரளத்தில் ஆக்குபவரும் சி.பி.எம். கட்சியினராம். இது ஏற்றுமதிக்கான அழகு சாதனப் பொருள் என்பது அவர்கள் கூறும் சமாதானமாம்!

எது எப்படியோ, சே குவேராவை மதிக்காவிட்டாலும், மிதிக்காமல் இருந்தால் சரி.

(தகவல் உதவி: சி. சோமசுந்தரம், தமிழர் தேசிய இயக்கம், சிவகங்கை)