பி.டி. கத்திரிக்காய் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்நேரத்தில் இயற்கை வேளாண்மையின் மேன்மையையும், அவசியத்தையும் வலியுறுத்தி வசனங்கள் வருவதற்காகவே இம்மண்ணை நேசிக்கும் அனைவரின் சார்பாக நாம் பேராண்மை திரைப்படத்துக்கும் அதன் இயக்குநர் ஜனநாதனுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது, இம்மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை. அதை இன்னும் முறைப்படுத்தி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரிவரக் கிடைக்குமாறு செய்வது நல்ல அரசாங்கத்தின் கடமை.

இட ஒதுக்கீடு என்பதே இன்னும் முழுமையாக மக்களுக்கு போய்ச் சேராத நிலையில், இடஒதுக்கீடால் பயனடைந்த சிலரின் சிறுவளர்ச்சியைக்கூட இந்துத்துவ மனோபாவம் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கிறது என்பதை பேராண்மைபடத்தில் இயக்குனர் தன்னால் இயன்ற அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளார். பழங்குடி மக்களுக்கான அரசியலை அந்த மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபட வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஜனநாதனைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

பழங்குடி மக்களிடமிருந்து ஒருவன் படித்து மேல்நிலைக்கு வருவதை, சராசரி இந்துத்துவ மனநிலைஏற்க மறுப்பதும் அதைக் கதாநாயகன் எதிர்கொள்வதும்தான் கதையின் முக்கிய அம்சம். சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் விளிம்பு நிலையிலிருக்கும் கதாநாயகன், இம்மண்ணின் விவசாய நிலம் மலடாக்கப்படுதல், அந்நிய ஆக்கிரமிப்பு, அரசியல், பொருளாதாரச் சீர்த்திருத்தம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்கும் காட்சிகள், சினிமா இரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் புதிதுதான். ஏழைகளுக்காகவும், சேரி மக்களுக்காகவும் பாடுபடுவது போல எம்.ஜி.ஆர். அதிக படங்களில் நடித்துள்ளார். ஆனால் அத்திரைப்படங்களில் அவர் ஒரு பணக்காரராகவும், உயர்சாதியினராகவும் இருந்து, அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடும் கடவுளாக காட்டப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் அரசியலை எசமான விசுவாசத்தோடு இருக்க வைத்ததற்கு இத்தகையத் திரைப்படப் போக்குகள் பெரிதும் உதவின. ஆனால் உண்மையான ஒடுக்கப்பட்டோர் அரசியலை ஒடுக்கப்பட்டோரின் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்கிற சரியான பார்வையைத் திரையுலகில் முதலில் கொண்டுவந்தவர் என்கிற பெருமை இயக்குநர் ஜனநாதனையே சாரும்.

பெண்களை ஆயுதம் பயன்படுத்தத் தெரிந்தவர்களாகவும், அதீதத் துணிச்சல்காரர்களாகவும், ஆணுக்கு எந்த ஒரு புள்ளியிலும் சளைக்காதவர்களாகவும் சர்வசாதரணமாகத் திரையில் கையாண்டிருப்பது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. போர்க்காட்சியில் கதாநாயகன் நான் இறந்துட்டா நீங்க போரை நடத்திப் பொதுவுடமை சமூகத்தை நிலைநாட்டுங்கள்என்று சொல்லும் காட்சியில் சமூக மாற்றத்துக்கான அனைத்துச் செய்திகளையும் இந்த ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்கிற இயக்குநரின் ஆசையையும், தவிப்பையும் உணர்கிறோம்.

மனிதர்களின் சாதியையும், மதத்தையும் சுட்டிக் காட்டியே வாழ்பவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் என்பதைக் கதாநாயகனுக்கு மேலதிகாரியாக வரும் கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்டோர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டினால்தான் தனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்று அறிவிற்குப் புறம்பாக புலம்பிக் கொண்டே காலம் தள்ளும் ஒடுக்குஞ் சாதியினருக்கு சரியான பாடத்தை அந்த கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகனிடம் பாடம் கற்கும் மாணவிகளில் எல்லோரும் அவனது பிறப்பை வைத்து அவனை வெறுத்து ஒதுக்க, ஒரே ஒரு இசுலாமியப் பெண் மட்டும் அவனது அறிவையும், ஆற்றலையும் கண்டு வியந்து அவனை விரும்புவது போல் காட்சியமைத்திருப்பது, சிறுபான்மைச் சமூகம், இந்துத்துவ மனநிலையிலிருந்து சற்று விலகியிருப்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம். கதாநாயகன் மாணவிகளிடம் நான் ஆங்கிலம் பேசினா என் மக்களுக்குப் புரியாது, உங்களுக்குப் பிடிக்காதுஎன்று சொல்லும் காட்சியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆதிக்க மனநிலைக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்என்ற அம்பேத்கர் அவர்களின் கொள்கை முழக்கங்களை அச்சிட்டே இப்படத்தின் தொடக்க விழா நடந்தது. ஆனால் மனுதர்மத்தைப் பற்றிய அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைக் கூட என்னால் இப்படத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்று ஜனநாதன் அவர்கள் தொலைக்காட்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனநாதன் அவர்களே! சட்டக் கல்வி படிக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களே இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் படமோ, பெயரோ கல்லூரியில் இருக்கக் கூடாது என் இந்துத்துவத் தீண்டாமை மன நிலையில் இருக்கும்போது, அந்த இந்துத்துவ மனநிலையை வளர்த்தெடுக்க உதவும் இந்த இந்தியத் தேசிய அரசாங்கம், எப்படி அம்பேத்கரின் மனுதர்ம விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் ?.

மார்க்சையும், ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் படித்து வளரும் கதாநாயகன், தனது மேலதிகாரியின் வக்கிரமான பேச்சுக்கும், கேவலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் அடங்கிப்போவது போல் படம் முழுக்கக் காண்பித்திருப்பது நமக்கு நெருடலாக உள்ளது. அடங்கிப் போகவா மார்க்சும், பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள்? மார்க்சிய சிந்தனை கொண்ட கதாநாயகனிடமிருந்து சின்ன பதிலடி கூட இல்லாமல் காட்சிகள் இருப்பது ஒரு குறைதான்.

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான வசனங்கள், மனுதர்ம விமர்சனம் போன்ற அனைத்தும் தணிக்கைக் குழுவினரால் வெட்டியெறியப்பட்டு விட்டது என்பது வேதனைக்குரிய செய்தி. தமிழ்நாட்டிற்கென்று தமிழ்த் திரைக்கென்று தனியாகத், தணிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்க் கலைஞர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழரல்லாதவர்களின் கையில் இருக்கக் கூடாது.

தணிக்கைக் குழுவினர் சில வசனங்களை வெட்டியெறிந்ததைப் போலவே, தணிக்கை குழு அனுமதித்த சில வசனங்களை நாம் வெட்டியெறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆபாச இரட்டைப் பொருள் வசனங்களை மட்டும் நாம் சொல்லவில்லை. இதோ:

இந்திய தேசத்தைக் காப்பேன்!

என் உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தைக் காப்பேன் !!

ஆண்டாண்டு காலமாக, இந்த இந்தியத் தேசம்நம் மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருப்பது போதாது என்று நாம் வேறு விரும்பி உயிரைக் கொடுக்க வேண்டுமாம்! (ஜனநாதன் அவர்களின் இக்கட்டான சூழ்நிலை நமக்குப் புரிகிறது). இந்த வசனங்களை மட்டும் நாம் தணிக்கை செய்து விட்டுப் பார்த்தால் பேராண்மைபேசப்பட வேண்டிய பேருண்மை.