உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல் குத்தும் ஊசி முதல் அண்டம் பாயும் ஏவுகணை வரை,சீனாவின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்தேயிருக்கிறது.

US Dollarஉலகிலேயே அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படி,உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறது?

"கோட்டீஸ்வரன்" நிகழ்ச்சியிலோ அல்லது "kaun banega crorepathi " யிலோ கேட்கப்பட வேண்டிய கேள்வி.

புலித்தோல் போர்த்திக்கொண்டு சிறுத்தையை கட்டுப்படுத்தும் காரியமாக அல்லவா இது!.

அதற்கெல்லாம் மூலகாரணம் தான் என்ன? விடை அளிக்கவே இக்கட்டுரை.

இந்த கதையின் ஆரம்பம் உலகப்போர் காலத்தில் தொடங்குகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உற்பத்தி திறன் வெகு அதிகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வல்லுநர்களால் அமெரிக்கா, தொழில் நுட்ப மற்றும் உற்பத்தி துறையில் வெகு முன்னேறிய நாடாக இருந்தது. முதல் உலகப்போரில் நேரடியாக பங்கு பெறாததால் ஐரோப்பிய நாடுகள் அடைந்த பெரு இழப்பை போல் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் நன்கு முன்னேற்றம் அடைந்தது. ஹிட்ல்ரின் கொள்கையினால் நாடு பெயர்ந்த யூதர்களின் மூளையை கொண்டு அதன் வளர்ச்சியை வேகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போரில் மேற்கத்திய நாடுகளுக்கு உதவி செய்து கைமாறாக பெரும் தங்கத்தை தன் இருப்புக்கு கொண்டு வந்தது.

டாலரின் மதிப்பு அமெரிக்கா வைத்திருந்த தங்க இருப்பை கொண்டு மதிப்பிடபட்டது. டாலர் ஒரு வலுவான நாணயமாக இருந்தது. இரண்டாம் உலகபோரின் முடிவில் உலக தங்கத்தின் கையிருப்பில் 80% மற்றும் உற்பத்தி துறையில் 40% அமெரிக்கா கையில் இருந்தது. வெளிநாட்டு வங்கிகள் வாங்கும் டாலர் பணத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் தங்கமாக திருப்பி கொடுக்கும் நிலையில் இருந்தது. உலக நாடுகள் டாலர் மற்றும் தங்கத்தை கையிருப்பாக கொண்டு தங்களது நாணயத்தை வெளியிட தொடங்கின. உலகின் பல நாடுகளின் வங்கிகள் டாலரை தனது முதலீட்டு கையிருப்பாக வைக்க ஆரம்பித்தன, 1960 வரை இந்த நடைமுறை நன்றாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

வியட்நாம் போர்-மாபெரும் மாற்றத்தை எற்படுத்தியது. 1960களில் நடந்த இந்த போருக்காக அமெரிக்கா அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டி வந்தது. அதுவரை தங்க கையிருப்பிற்கு எற்றவாறு டாலரை வெளியிட்டு வந்த அமெரிக்கா அதிக அளவு டாலரை வெளியிட தொடங்கியது. ஒருநிலையில் வெளிநாட்டு வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை கொடுத்து அமெரிக்காவிடம் தங்கம் கேட்டால் அதனால் தரமுடியாது என்ற நிலை எற்படும் நிலை வந்தது. 1971ம் ஆண்டு நிக்ஸன் நிர்வாகம் உலக முக்கியத்துவம் பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தது. அதன் படி டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பை அறுத்து விட்டது அமெரிக்க அரசாங்கம். அதன் படி டாலரின் மதிப்பு இனி அமெரிக்க நிர்வாகத்திடம் உலகம் வைக்கும் நம்பிக்கையில்தான் என்றானது. அதன் பின்னர் நடந்த மாற்றங்கள் தான் உலகை இன்றைய நிலைக்கு இட்டு சென்று உள்ளது.

1970களின் ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கம் சவுதிஅரேபிய அரசாங்கத்திடம் ஓர் ஒப்பந்தம் போட்டது. அதன்படி சவுதி அரேபியா தனது எண்ணை விற்பனை அனைத்தையும் டாலர் அடிப்படையில் செய்வது என்று சம்மதித்தது. இதுதான் உலகபொருளாதாரத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் விளைவாக உலக பெட்ரோல் வணிகம் அனைத்தும் டாலரில் விற்பனை செய்யப்பட்டது. அதன் விளைவு ஒரு புறம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் டாலர் கையிருப்பு அதிகரித்தது.

அந்த நாடுகளிடம் தேவைக்கு மிக அதிகமான பணம் இருந்ததால் அந்த டாலரை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தன. அதற்கு அமெரிக்கா அந்த நாடுகளிடம் உள்ள பணத்தை முதலீடு செய்ய treasury bond வெளியிட்டு அதில் முதலீடு செய்ய வைத்தது. அவர்கள் பணத்தை மேன்மேலும் அமெரிக்காவின் bondல் முதலீடு செய்தனர். மற்றொரு பக்கம் பெட்ரோல் உபயோகப்படுத்தும் நாடுகள் பெட்ரோல் கிடைக்க டாலர் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. டாலரை உற்பத்தி செய்யும் ஒரே நாடு அமெரிக்கா. எனவே அமெரிக்காவுக்கு தேவையான பொருள்கள் எவையோ, அவற்றை உற்ப்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருளை வாங்க வேண்டுமானால் விலை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டும்.அந்த நாடுகளில் உற்பத்தி செலவை குறைக்க முடியாது. அதற்கு ஒரே வழி, நாட்டின் நாணயத்தின் மதிப்பை குறைக்க ஆரம்பித்தன. அதாவது தனது மக்களின் உழைப்பு மற்றும் கனிம வளங்களை மலிவாக மாற்றி அமெரிக்க மார்க்கெட்டில் மலிவான விளைக்கு பொருள்களை ஏற்றுமதி செய்தன. அந்த நாடுகள் தங்கள் சுய தேவை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு எற்றபடி முன்னேற்ற திட்டங்கள் வகுப்பதை விட்டு விட்டு, டாலர் கிடைக்க எந்த பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கின. தனது முழு உழைப்பையும் செலவிட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபங்களை அரசாங்கங்கள், மீண்டும் அமெரிக்க வங்களிடம் Bond வாங்கி சேமித்து வைக்க தொடங்கின.

பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகளும் அமெரிக்காவிடம் முதலீடு செய்கிறது. பெட்ரோல் வாங்கும் நாடுகள் தனது சக்தி(energy),மனிதவளம், மற்றும் பொருளாதார வளங்களை கொண்டு உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்து டாலர் வாங்கி மீண்டும் அதனை அமெரிக்காவிடமே குறைந்த வட்டிக்கு பத்திரமாக முதலீடு செய்கிறது. இதன் விளைவாக டாலருக்கு சர்வதேச சந்தையில் அதிக தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஆசிய மற்றும் பிற நாடுகளின் கையிருப்பில் 2.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு treasury bond உள்ளது. இதில் சைனா மட்டுமே 350 பில்லியன் டாலர்கள் வைத்துள்ளது.

அமெரிக்காவை பொருத்தவரை அது உற்பத்தி செய்யும் டாலருக்கு உலக மார்கெட்டில் என்றுமே தேவை இருக்கும். அந்த டாலரை எந்த ஒரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பி கொடுத்து அதற்குரிய பொருளை கேட்க போவதில்லை. அதன் விளைவாக அமெரிக்கா உற்பத்தியை மீறி நிறைய டாலரை வெளியிட ஆரம்பித்தது.

அதன் விளைவாக வருமானத்தை மீறி அமெரிக்கா செலவு செய்ய ஆரம்பித்தது. மாபெரும் தொகையை தன் இராணுவ ஆராய்ச்சி மற்றும் பிற நாடுகள் மீது படையெடுப்பு போன்றவற்றுக்கு செலவு செய்ய ஆரம்பித்தது. பிற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு இறக்குமதி பொருள்கள் மூலம் பெரும் லாபம் சேர்க்க ஆரம்பித்தன.

அமெரிக்கா கடந்த ஆண்டு மட்டும் எற்றுமதியை விட 811 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் மிக அதிக அளவிற்கு லாபம் ஈட்ட தொடங்கின. அதன் விளைவு, அதிக பணத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு செலவிட முடிந்தது.

இனி WTO சட்டதிட்டங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டால், எந்த புதிய மருந்து/கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் கம்பெனிகளுக்கும் முழுமையாக உரிமை கிடைத்துவிடும். அந்த உரிமம் மூலம் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் அவற்றை விற்று பெருத்த லாபம் ஈட்டமுடியும். அவ்வாறு கிடைக்கும் லாபம் மூலம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். சிறு கம்பெனிகள் அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும். இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் ஒன்று அல்லது இரண்டு கம்பெனிகள் ஏகபோக(monopoly) உரிமை தாரர்களாக ஆகி விடுவர்.

இன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபங்கள் மூலமாக, இந்த நிறுவனங்கள் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் ஏகபோக உரிமையாளர்களாக மாறி, உலகின் அனைத்து செல்வங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு வரும். இதற்கிடையில் அமெரிக்கா அதிக அளவு இராணுவ தொழில்நுட்பத்திற்கு செலவு செய்து உலக பொருளாதாரத்தையும் இராணுவ பலம் மூலமாக கட்டுப்படுத்த தொடங்கலாம். அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக பாதகமாக செயல்படும் நாடுகளை இராணுவ பலம் கொண்டு அடக்கும்.

இதன் விளைவாக உலக நாடுகளுக்கு எத்தனையோ இழப்புகள் ஏற்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இதன் மூலம் நிறைய நன்மை கிடைக்கிறது. இந்தியாவிற்கு கிடைகும் குறுகிய கால நன்மை என்ன என்பது பற்றியும் அந்த நன்மைகளை நீண்ட கால ஆதாயமாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் அடுத்த பகுதியில் காண்போம்.

- சதுக்கபூதம்

Pin It