உன்னை
குரூரமான
ஆரவாரத்தோடு
சூழ்ந்து கொண்ட
இந்த இரவு மழையை
எவருக்கும் தெரியாமல்
இரு கைகளிலும்
ஏந்திக்கொள்கிறேன்

முன்வரும்
மின்னலின் ஒளியில்
அது
மிளிர்கிறது

பின்வரும்
இடியோசையில்
அது
அதிர்கிறது

அதில்
எவ்வித நிழலும்
விழாதபடி
மறைத்து வைத்திருக்கிறேன்
உனது பிரக்ஞ்ஞையை
காகிதமெனக் கிழித்து
என்னிடம்
தூதனுப்புகிறாய்

மழையற்ற
இரவொன்று உன்னிடம்
பத்திரப்பட்டிருப்பதாக...

அந்த
இரவின் மின்னல்கள்
ஒளியற்றும்
இடியோசைகள்
சப்தமற்றும்
இருப்பதாக..

அந்த இரவின்
கோப்பைக்குள்
வெகுளித்தனமான
நிழல்களை
ஊற்றி வைத்திருப்பதாக..

மற்றும்
அந்தக் கோப்பையை
மீதமின்றி
சுவைத்துப் பருகுவது
உனக்கு
மிகவும் பிடித்திருப்பதாக...

- கலாசுரன்