காலவரையற்ற
உரையாடலின் கசப்பை...
உதடுகளை நக்கியவாறு
சுவைத்துப்பார்க்கிறது
முன் காலத்திலான ஒரு மௌனம்..

மௌனங்களின் இனிப்பும்
வார்த்தைகளின்
தாங்க முடியாத கசப்பும்
விருந்தினர்களுக்கு
அளிப்பது குறித்த
யோசனைகள் சற்று காரத்துடன் தான்
கரைந்து போகிறது

மூக்கில் நுழையும்
நாற்றத்தை வைத்து
இதற்க்கு இதுதான் சுவையென்று
சொல்வதுபோல
அவ்வளவு எளிதல்ல
இவ்வகைச் சுவைகள்

கவிதைகளைப் பெற்றெடுக்கும் வரை
சில வார்த்தைகளின்
புளிப்புத் தன்மை
சுவை மிகுந்ததாகத் தான்
இருக்கிறது

பின்னர் அது
புளித்துவிடுகிறது

அதற்கு காரணம்
அவனல்லன்
அவனுக்கு முக்கியம்
அதுவன்று
படைத்தலிலான
உப்பின் சுவை

அது
ஒரு துளி
வியர்வையோ
அல்லது
ஒரு துளி
விழிநீரோ ஆகலாம்..

இனி
இதுவெல்லாம்
திகட்டும்படிக்கு
ஒரு
புதுச் சுவை
வந்து சேர்வதை
ஒரு படைப்பும்
புறக்கணிப்பதில்லை

ஒருவேளை
இது
அழித்தலுக்கும் பொருந்தும்.

- கலாசுரன்