தமிழில் காந்திய நாவல்கள் நூலை முன்வைத்து... 

உலகச் சமூகத்தில் மனிதகுல வரலாற்றின் தத்துவ ஆயுட்காலம் மிகச் சொற்பமானது.  ஆசிய மற்றும் இந்தியச் சூழலில் தோன்றிய பல்வேறு தத்துவ மரபுகளில் ஒன்றாக காந்திய சிந்தனையும் அமைந்தது.  இந்தியச் சமூக வரலாற்றில் காலனித் துவமும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் வன்முறையும் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், தேசத்தில் கேட் பாரற்றுக் கிடந்த கோடானுகோடி மக்களுக்காக நம்பிக்கை தரும் குரலாக காந்தியின் வரவும் வார்த்தையும் அமைந்தது. 

காலனிய அரசாங்கத்திற்கு விசுவாசமும் பணிவும் சேவகமும் செய்துகொண்டும் திணறிக் கொண்டும் கிடந்த இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளை விமர்சித்து மனமாற்றம் செய்து விடுதலைப் போருக்குத் தயார் செய்து அதனை நம்பிக்கையுள்ள போர்ப்படையாகப் பணியாற்றியவர் பலர்.  காந்தி அவர்களுள் முன்னுக்கு வந்து பணியாற்றினார்.  இந்தியச் சமூகத்திற்கு காந்தியின் பங்கு அரசியல் ரீதியானது மட்டுமல்ல.  பல்வேறு சிறு சிறு ஜமீன்களாகச் சிதறிக் கிடந்த சமூகத்தைப் படேல் போன்றவர்களின் உதவியோடு ஒன்று படுத்தினார். தென்னாப்பிரிக்காவில் தான் பெற்ற நிறவெறிக் கொள்கைக்கு எதிராக நிகழ்த்திய போராட்ட முறை, அவரை இந்திய அரசியல் - சமூக மாற்றத்திற்கான வேலைகளில் செயல்படத் துணையாயிருந்தது.

இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததும் பிறகு சுதந்திரம் பெற்றதும் குறித்த வரலாறு நமக்குத் தெரிந்ததுதான்.  ஆனால் உலகச் சமூகம் சந்தித்த மாபெரும் இரண்டு உலகப் போர்களின் விளைவு களுக்குப் பின் மனித மனங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பதற்றமும் நம்பிக்கையின்மையும் கலை, இலக்கியப் பதிவுகளில் பெரும் மாற்றத்தை உரு வாக்கின. மக்களிடம் உருவாகி வளர்ந்து நின்ற சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறித்தவம், இசுலாம், சீக்கியம் முதலிய சமயங்களின் தத்துவச் சிந்தனைகளின் தொடர் கண்ணியில் ஒன்றாகக் காந்தியின் சிந்தனைகளும் வந்து நிற்பதை அவரது போதனைகளிலிருந்து நாம் அறியலாம்.  மேலும் தத்துவச் சிந்தனை வரலாற்றில் தத்துவங்களைச் சொன்னவர்கள் எல்லாருமே தம் சுயபரிசோதனையில் இருந்து தத்துவ விசாரணையைத் தொடங்கியவர்கள் என்பதையும் காந்தியும் தனது கொள்கைகளைச் சுய பரிசோதனையிலிருந்தே பெற்றார், பெற முயன்றார் என்பதையும் அவரது என் வாழ்க்கையே என் செய்திஎன்ற வரிகளால் உறுதிப்படுத்தலாம்.  காந்தியின் சமகாலத் தலைவர்களில் சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின்.  முதலியவர்களால் கூட இப்படிச் சொல்ல முடியவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தியா அடிமைதேசமாக இருந்தபோது பிறந்து, அதன் விடுதலைக்காகப் போராடியவர் களுள் ஒருவராக இருந்தபோதும், போராட்ட வடிவங்களை உருவாக்கி அதைக் கையாண்டதாலும் எடுத்த முடிவுகளுக்காகத் தொடர்ந்து உறுதியாக நின்றதாலும், அதற்காகத் தன் உயிரையே கொடுத்த தாலும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (எம்.கே, காந்தி எனப்படுபவர்) மகாத்மாஎன அவதார மெடுக்கிறார்.  அதாவது 1948-ஆம் ஆண்டு சனவரி 30-ஆம் நாள் காந்தி இந்து மத அடிப்படை வாதியான நாதுராம் கோட்ஸேயால் சுடப்பட்டு இறந்த அன்று முதல் சமூக- அரசியல்-சமயம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் தாக்கங்களை உருவாக்கிய காந்தியுகம்தொடங்குகிறது எனலாம். 

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தைப் பல கட்டங்களாகப் பிரித்தாலும், தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நுழைவது முதலாக அவரது  இறப்பு வரையிலான காலகட்டத்தில் உருவான முக்கியமான கருத்துக்களின் அடிப்படையில் சுதந்திரப் போராட்டம் முழுவதுமே காந்தியப் பார்வையில்  நடைபெற்றது வரலாற்று உண்மையாகும். இந்த அடிப்படையில் காந்தியின்  சிந்தனைகள்நாட்டு விடுதலை, கடையனுக்கும் கடைத்தேற்றம் காண விழையும் சர்வோதயம், அன்பு, அறம், உண்மை, சத்தியம், சேவை, அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, வகுப்பு ஒற்றுமை, மது விலக்கு, சுதேசியம், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் வளர்ச்சி, நிர்மாணத் திட்டங்கள், கிராம வளர்ச்சி, பெண்களின் சமூக அரசியல் விடுதலை எனப் பல கருத்தாக்கங்களின் ஒருமையாகஅமைந்ததை ஆய்வாளரே சுட்டிக் காட்டுகிறார்.

உலகம் முழுமையும் அதிகாரத்தின் கைகள் ஆயுதங்கள் ஏந்தி அழித்தொழிப்பதும் அடிமைப் படுத்துவதும்,  அடிமைப்பட்டவர்கள் ஆயுதமேந்திப் போராடுவதும் வழமையாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிற சூழலில் அகிம்சையும் சத்தியாக்கிரகமும போராட்ட ஆயுதமாக, உத்தியாகக் கையிலெடுக்கப் படுகிற சிந்தனை முறையும் அதைச் செயல்படுத்திய தன்மையும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு சிந்திக்கவும் செய்தது.  தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து, தம் பணியினைத் தொடங்குவதில் ஆரம்பித்து, சுடப்பட்டு, காந்தி மரணமடைவதும்; அதன்பிறகு அவரது சிந்தனைகள் பெரும் கேள்விக் குள்ளாகி, ஏற்றுக்கொள்ளலும் மறுப்புமாக  இன்று வரை நின்றிருப்பதுமான வரலாற்றுச் சூழலின் எண்பத்தைந்து ஆண்டுகளில் (1922 முதல் 2006 வரை) வெளியான காந்தியம் பேசும் 32-நாவல்களை மையமாகக் கொண்டு தோழர் இரா. விச்சலன் அவர்களால் ஆய்வு செய்யப்பெற்று, ‘தமிழில் காந்திய நாவல்கள்’ - என நூலாக வெளிவந்து உள்ளது.

தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், நாட்டுப்புறக் கலைகள்  எனக் கலை வடிவங்கள் நிறைய பயன்பாட்டு நிலையில் இருந்தபோதும், ‘நாவல்என்னும் வடிவம் கதையை மட்டுமல்லாது சமூகத்தின் பெரும் பான்மை வரலாறுகளையும் பதிவு செய்வதை அவதானிக்கலாம்.  தமிழில் காந்திய நாவல்கள் நிறைய வெளிவந்திருந்தாலும் ஏ.சூ. அரங்கசாமி அய்யங்காரின் சபேசன் அல்லது சுந்தர ரக்ஷகன் நாவல் (1922) தொடங்கி கு. ராஜவேலுவின் வைகறை வான  மீன்கள்’ (2006) வரையிலான காலகட்டங்களில் வெளியான முப்பத்திரண்டு நாவல்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

தமிழில் காந்திய நாவல்கள் என்னும் பொருண்மை கொண்ட இந்தநூல், தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பரிமாணத்தை இனங்காட்டியுரைக்கிறது.  தன்னுடைய சமகாலத்திய ஒரு சிந்தனை முறையை -  நிகழ்வுகளின் சாராம்சமான ஒரு செல் நெறியை  தமிழ்  இலக்கியம் எதிர்வினை கொண்டிருக்கிறது-சரியாகப் பதிவு செய்திருக்கிறது என்பதற்குரிய சாட்சியம்என்று நூலின் சிறப்பினை தி.சு. நடராஜன் குறிப்பிடுகிறார்.  ஆனால் இன்றைய சமகால இலக்கியச் சூழலையும் வாசிப்பின் தேவையையும் இந்நூல் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பது காணப்படவேண்டும்.   இந்நூலின் ஆய்வு முறையும் அமைப்பு முறையும் தமிழ் ஆய்வுலகத்தின் ஆய் வாளரின் வரலாற்றுக் கடமையை நிறைவு செய்து வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நூலின் ஆய்வியல் அமைப்பு, விளக்கம், வரலாறு, தத்துவம், ஒப்பீடு, மதிப்பீடு என்ற முறையில் நுட்பமாகவும் தெளிவாகவும் அமைந்திருக்கிறது என்பதை நூல் ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.  ஒப்பீடு என்ற நிலையில் நாவல்களைப் பிறநாவல் களோடு ஒப்பிடுவது மட்டுமன்றி காந்தியத்தை மார்க்சியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முறை  இழையிழையாய்ப் பின்னிக் கிடப்பதை நூல் முழுக்கக்  காணமுடிகிறது.  கருத்துக்கு ஒரு வகை  மாதிரியாகத் தேர்வு செய்யப்பட்ட நாவல்கள் என்றாலும் காந்தியம்என்கிற சங்கிலித் தொடரின்  இழைகளால் அமைகிற அவரது அடிப்படைக் கொள்கைகள், ஒவ்வொரு நாவலிலும் காலந் தோறும் எவ்வாறு முன் மொழியப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது. 

இந்திய சுதந்திரத்திற்கு முன் - பின்னான எண்பத்தைந்து ஆண்டுக்கால வரலாறு நாவல்களின் பாத்திரங்கள் வழி, மீள் நினைவுக்கும் மீள் விசாரிப்புக்கும் உள்ளாக்கப் படுவதை ஆய்வாளர் ஒவ்வொரு கட்டமாக,  தலைப்பாகப் பிரித்துக் காண்கிறார்.  காலங் கடந்தும் நிற்கும் காந்தியம்என்னும் சொல்லாடலைக் (னுளைஉடிரசளந) குறுக்கு விசாரணை செய்யும் விளக்கிக் காட்டும் நாவல்களின் கதாப் பாத்திரங்களோடு ஆய்வாளரும் ஒரு பாத்திரமாகப் பயணம் செய்து உள்ளார்.

1920 - காலத்திய இளைஞர்களின் பிரதிநிதியாக வரும் சபேசன், பெண் விடுதலைச் சிந்தனையின் பிரதிநிதியான ராமஸ்வாமி அய்யரின் மனைவி சீதை, சபேசனைப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் புரட்சிகரப்  பெண் ஜானகி; கிராம முன்னேற்றத்தை நாட்டு விடுதலைக்கான வழியாக முன்வைக்கும் முருகன் ஓர் உழவன்ராமு, தேச பக்தன் கந்தன்; யோக மார்க்கத்தில் பக்திவழியில் பெண்களுக்கு ஆன்மிகத்தைப் போதிக்கும் மைதிலி; சமூக சீர்திருத்தத்தையும் பெண்விடுதலைச் சிந்தனை யையும் முன் வைக்கும் தியாகபூமிசாவித்திரி; நாட்டு விடுதலை, அகிம்சை, மதுவிலக்கு ஆகிய கருத்துக்களை முன் மொழியும் மகுடபதி; சோசலிசக் கருத்துக்களை காந்திய வழியில் நின்று பேசும் அலை ஓசைசூரிய நாராயணன்; சுதேசியக் கொள்கை,  மதுவிலக்கு, அகிம்சை ஆகியவற்றோடு ஹரிஜன இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இருபது வருசங்கள்கேசவராவ்;

பெண் உரிமை, அகிம்சை என்னும் இரு தளங்களில் இயங்கினாலும் அகிம்சை, வன்முறை ஆகிய இரு எதிர்வுகளின் சார்பாளர்களாக வரும் திரிவேணி மற்றும் ரங்க மணி; இந்திய  விடுதலைக்குப் பின்னும் காந்தியின் கனவுகள் நனவாக்கப்படாதது கண்டு கவலை கொண்டு காந்தியத்தை நடைமுறைப்படுத்தத் தொடர்ந்து போராடும் குறிஞ்சி மலர்அரவிந்தன்; ‘ஆத்மாவின் ராகங்கள்ராஜாமணி என்ற காந்திராமன்; உலகப் போர்ச் சூழலில் இந்தியாவில் வணிக முதலாளித்துவம் நகர்மயத் தொழில் முதலாளியம் உருவாகும் சூழலில் காந்தியின் அகிம்சையைவிடாது பின்பற்றும் புது வெள்ளம்முருகையன் மற்றும் மக்களின் தன் எழுச்சியான வன்முறையின் குறியீடாகப் படைக்கப் பட்ட பெருமாள்சாமி;

காந்திய அடித்தளத்தில் தார்மீக நெறியில் நின்று சுதந்திரத்திற்குப் பிந்தைய இருபதாண்டுக்கால சமூக-பொருளாதார-பண் பாட்டு வாழ்வியலின் சாட்சியாகப் போராடும் எங்கே போகிறோம்இராமலிங்கம்; விடுதலைக்குப் பின்பு தமிழகத்தில் ஏற்பட்ட கழக ஆட்சி (திராவிடப் பின்புலத்தில் வந்த  தி.மு.க மற்றும் அ.தி.மு.க)யின் பின்புலத்தில் காந்திய  - சோசலிசத் தேவையை வலியுறுத்தும் சத்திய வெள்ளம்பிச்சைமுத்து - கதிரேசன் காந்தியத்திற்கும் நக்சலியத்திற்கும் இடையில் அகிம்சையை  முன்மொழியும்  வேருக்கு நீர்சுதீர் -யமுனா; திருவள்ளுவர், இளங்கோவடிகள், விவேகானந்தர், டால்ஸ்டாய், தாயுமானவர், வள்ளலார்,

திரு.வி.க. போன்றோரின் சிந்தனை களைத் தேவையான இடங்களில் பெய்துகாந்திய சிந்தனையை முன் வைக்கும் மு.வ. வின் அந்த நாள், அல்லி, மலர்விழி, கரித்துண்டு, கயமை, அகல்விளக்கு, வாடாமலர் ஆகிய ஏழு நாவல்களில் வரும் பல்வேறு பாத்திரங்கள்; காந்தியின் மறைவுக்குப் பின் இந்தச் சமுதாயமே போர்க்களமாக  மாறிவிட்டது எனப் பேசும் புதிய போர்க்களங்கள்முத்துக் குமரன்; கிராம சுயராஜ்ஜியத்தையும் கிராமத்தில், நடக்கிற அரசியலையும் காந்தியப் பார்வையில் முன்வைக்கும் சுவடுகள்குருசாமித்தாத்தா மற்றும் குருசாமித்தாத்தா (காந்தி)வின் வாரிசாக  காமராஜரின்  பிம்பமாக வரும் ரகுபதி; இந்திய சுதந்திரப் போராட்டத்தினைப் பல்வேறு கட்டங்களாகப் பிரித்துப் பேசும் சுதந்திர தாகம்சிவராமன் முதலியவர்கள்; விடுதலைப் போரில் ஈடுபட்டு அழியாத புகழைப்பெற்ற புரட்சி யாளர்களின் வீரவரலாறு பேசும் வைகறை வான மீன்கள்நாவலின் சேந்த மங்கலம் - பாண்ட மங்கலம் பாளையக் காரர்கள் - என்றிவர்களோடு எல்லாச் சூழலிலும் உடன் வருபவராக காந்திய  இந்தியாவின் - தமிழகத்தின்  வரலாற்றினைப் படம் பிடித்துக்  காட்டியுள்ள முப்பத்திரண்டு நாவல்களின் பொதுப்பார்வையாளரென்னும் பாத்திரமாகத் தோழர் விச்சலன் வாழ்கிறார்.

இந்த ஆய்வு நூலின் செல்நெறிக் கோட்பாடு களும் நூலமைப்பு முறையின் சில முக்கிய கூறுகளும் சொல்முறையும் பாராட்டுக்குரியவை. ஆய்வுக்கு உதவிய துணைநூற்பட்டியலோடு சேர்த்து மொத்தம் இருபது தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது. ஆய்வின் முறையை விளக்கி, காந்தியத்தின்  சாரா அம்சமான விடயங்களை அறிமுகப்படுத்தி, கால வரிசைப்படி நாவல்களை விளக்கம், வரலாறு, தத்துவம், ஒப்பீடு, மதிப்பீடு என்னும் வரிசைமுறை நிலையில் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. 

அதாவது, காந்தியத் தத்துவ உருவாக்கம், வரலாற்றுப் போக்கில் உருவானதும் பரிசோதனைக்குள்ளானதும், தற்காலச் சூழலில் மீள் பார்வைக்கும் - பரி சோதனைக்கும் உள்ளாக்கப்படுவதன் தேவையையும்  முன்வைக்கிறது.  அதாவது காந்தியம், மார்க்சியத்தின் இணைமுரண் தன்மை உடையதாகப் பார்க்கப் படுகிறது.

காந்திய இலக்கியப் படைப்புகளின் வழி, எப்படி ஒரு வாழ்க்கை முறை, நெறியாக , ஏற்றுக் கொள்ளல், மறுத்தல் ஆகிய நிலைகளில் உள் வாங்கப்பட்டது என்பதும், பாத்திரங்களின் வழி அது எடுத்துரைப்புச் செய்யப்படுவதும் ஆய்வு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் உலக மயம், தாராளமயம், தனியார்மயம், பின்னைக் காலனித்துவம் முதலிய சிந்தனைச் சூழலில் காந்தியம் ஒரு தத்துவச்சிந்தனையாக எவ்வாறு மீள் வாசிப்பும் - மீள் பயிற்சியும் - பரிசோதனையும் செய்யப்படவேண்டும் என்பதையும் அதற்கான இன்றைய தேவையையும் சான்றுகளோடு ஆய்வாளர் முன் வைக்கிறார்.

காலந்தோறும் மாறுதலுக்குள்ளாகி வரும் வரலாற்றுப் போக்குகளின் பின்புலத்தில் காந்தி யத்தைப் பின்பற்ற முயலும் ஒரு தனிமனிதனின் சிந்தனைப் போக்கின் சமூகம் - அரசியல் - பண்பாடு மற்றும் உளவியல் போக்குகளின் அடிப்படையில் காந்தியும் காந்திய சிந்தனையும் மறுபரிசீலனைக்கும் பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படும் பாங்கு நூலாசிரியரின் பார்வையிலிருந்து மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும்.  காந்தியத்தை உள்வாங்கிக் கொண்ட சோசலிஸ்ட் சூர்யா பேசும் கருத்துக்கள் இதற்குச் சான்றாகும்.

தேசியம் - விடுதலை - சமூக சீர்திருத்தம் இளைஞர்களின் வழி வெளிப்பட வேண்டும்; விடுதலை உணர்வு பேரின்ப உணர்வாக மடை மாற்றம் செய்யப்பெற்று ஆன்மிகத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்; அகிம்சைக்கு மெல்லிதாய் ஒரு எதிர்ப்புக்குரல் எழுப்புதல்; நீர், நில, மராமத்துப் பணிகள் அழித்தொழிக்கப்படுதல்; தேசங்களுக்குள் யுத்தங்களும் சாதிக் கலவரங்களும் பசிப் பிணியினாலேயே பிறக்கின்றன (பௌத்தம்); நகர்மயப் பொருள் குவிப்புக்குப் பதில் கிராமமயப் பொருளாதாரத்தை முன்னெடுத்தல்; நாட்டு விடுதலைக்கான  அரசியல் சர்வோதய சமுதாயச் சமத்துவத்திற்கான பொருளாதாரம், அதற்காக வறுமையிலிருந்து விடுதலை;

பழமரபு ஆன்மிகச் சிந்தனை மேற்கத்திய மரபு என்னும் முரண்கள்; அரசியலா? ஆன்மிகமா? என்னும் தேடலுக்கு அரசியலே என்று முடிவு செய்தல்; நிலக்குவிப்பு, நிலவுடைமை ஒழிப்பு வழி சோசலிசத்திற்குச் செல்லுதல்; விடுதலைக்குப்பின் இந்திய - தமிழகச் சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள்; மார்க்சைப் பிடித்துக் கொண்டு லெனின் வென்றது போலக் காந்தியத்தைப்  பிடித்துக் கொண்டு வெற்றி பெறுவதைச் சிந்தித்தல்; காந்தியின் சத்திய சோதனை’ - மார்க்சின் வாழ்க்கை வரலாறுஆகியவை இணைத் தண்டவாளங்களாக சமூக மாற்றத்திற்குப் பயன்படுதல்; காந்திய அரசியல் - கழக அரசியல் - நக்சல் அரசியல் என்ற மூன்றின் விமர்சனத்திற்குட்பட்ட வரலாற்றுப்போக்குகளின் தன்மைகள்; நாவலாசிரியனுக்கு வரலாற்றுச் சான்றுகள் ஆவணங்களைப் பயன்படுத்தும் உணர்வு வேண்டும் என்ற பட்டறிவு கூறல் எனப் பகுத்ததில் இந்த ஆய்வின் செல்நெறி கூர்மையயுடன்  செயல்பட்டிருக்கிறது.

1934 - இல் பீஹார் நிலநடுக்கத்தின் நலப் பணியின் போது ஓர் ஆளுக்கு மூன்றணா செலவுத் தொகை என்றபோது காந்திக்குக் கூடுதலாகச் செலவானதை ஜே.சி. குமரப்பா எதிர்த்தார்”, “வட இந்தியத் தலைவர்களின் பெயர்கள்தென் இந்தியப் பகுதி தெரு, வீதிகளுக்கு வைக்கப்படுவதைப் போலத் தென்பகுதித் தலைவர்கள் பெயர்கள் வடபகுதியில் வைக்கப்படுகிறதா? என்பது போன்ற அரசியல்  வரலாற்று முக்கியத்துவமுடைய கேள்விகளை ஆய்வாளர் நூல் நெடுகிலும் கேட்டுக் கொண்டே செல்கிறார்.  ஒவ்வொரு இயலின் இறுதியில் முடிவு களைப் போலமையும் ஆய்வுக் கருத்துக்கள் ஆய்வாளரின் கூர்மையான பார்வையைக் காட்டு கின்றன; எதிர்கால ஆய்வுகளுக்கான அவதானிப்பு களையும் தருகின்றன.

மேலும் ரஸ்கினின் கடையனுக்கும் கடைத் தேற்றம்என்னும் நூல், விவிலியத்தின் மலைப் பொழிவு, டால்ஸ்டாயின் சிந்தனைகள், தோரோவின் சிந்தனைகள், சமண-பௌத்தத்தின் அகிம்சைக் கோட்பாடு, நாடு விடுதலை அடைகிறபோது காந்தியிடம் ஏற்பட்ட மார்க்சியத் தாக்கம் (ப-17); தேசியத்தையும் விடுதலை உணர்வையும் இணைத்துப் பார்க்கும் நாவல் (காந்திமதி) காந்தியத்தோடு தமிழின் அகப்புறச்  சிந்தனைகளான காதலையும் வீரத்தையும் இணைத்துப் பேசுகிறது (ப-23); காந்தியம், அகிம்சை இவைகளைத் தெரிவதோடு, கீதையின் வர்ணக் கோட்பாடு, மதத்தின் தலைவிதித் தத்துவம்; முதலாளியத்தின் மார்க்சிய எதிர்ப்பு என்னும் அவரது ஆழ்மன விருப்பத் தத்துவங்களும் சேர்ந்தே தெரி கின்றன (ப-88) என்றிவ்வாறு அமையும், ஆசிரியரே தன் கருத்துக்களை முடிவுகளாகக் கூறும் பகுதிகளைச் சான்றாகக் கொள்ளலாம்.

இந்தியச் சமூக அரசியல் வரலாறு, விடுதலைப் போராட்டம், போராட்டத்தின் பல்வேறு நிலைகள், காந்தியின் பங்களிப்பு, காந்தியத்தை முன்மொழிந்து காலந்தோறும் வெளிவந்த நாவல்கள், நாவல்களைப் படிக்காதவர்களும்கூடப் புரிந்துகொள்ளும் வகையில் கதைச் சுருக்கம் தருதல், பாத்திரங்களின் தன்மை-அவை காந்தியத்தை  முன்மொழியும் விதம், ஒரே ஆசிரியரின் நாவல்களுக்குள்  வரும் பாத்திரங்களின்  ஒற்றுமை - முரண், நாவலுக்குள் பதிவு செய்யப் பெறும் வரலாறு , வரலாற்றைப் பிரதிமை செய்ய முயலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரங்கள், தத்துவங்களின் விளக்கம் - தத்துவங்களை நடை முறைப்படுத்துவதின் தேவை, நடைமுறைப்படுத்து வதில் உள்ள சிக்கல்கள், ஆய்வாளர் என்ற முறையில் ஆய்வு முடிவுகள்- தன்னுடைய கருத்துக்கள் ஆகிய வற்றைத் தொகுத்துக் கூறும் முறை - அந்த முறையை அடுத்த நாவல்  தோன்றுவதற்கான தேவையை முன்மொழியும் உத்தியாக அமைந்துள்ளது எனக் கூறுதல், என்றின்னபிற கூறுகளால், இந்நூல் பின்னே வருகிற ஆய்வாளர்களின் தேடலுக்கான ஆவணமாக அமைகிறது.

Pin It