ஈரோடு நகரசபையின் அமைப்பும், நிர்வாகமும் மிகவும் சீர்கேடான நிலைமையில் இருக்கின்றன. தற்போது உள்ள நகரசபையின் நிர்வாகத் திறனைக் காண்போர் ஒவ்வொருவரின் உள்ளத்தினும் நகரமாந்தரின் நலத்திற்காக நகர சபையா? நகர சபைக்காக நகர மாந்தரா? நகரசபை நிர்வாகி களுக்காக நகரசபையும், நகர மாந்தர்களுமா? என்ற எண்ணங்கள் குடி கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நகரசபையின் அமைப்பைப் பற்றியும், நிர்வாகத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்பு கின்றேன். அவைகளை நன்கு ஆலோசித்து தக்கது செய்ய வேண்டியது ஈரோடு நகர மாந்தர்களின் கடன்.

தத்துப்பிள்ளைகள் தலைவரானார்கள்

நகரசபையின் தலைவர் ஒரு வக்கீல், உபதலைவர் ஒரு டாக்டர். இவ்விருவர்களும் சில வருஷங்களுக்கு முன் தங்களுடைய தொழிலை முன்னிட்டு பிறந்த ஊர்களை விட்டு விட்டு இவ்வூரில் குடி ஏறினவர்கள். ஆகவே இவர்கள் ஈரோட்டார் அல்ல. ஆனால், பிற ஊரார் வேறு ஊரில் சில வருஷங்கள் வசித்தால் தாம் அண்டின ஊரின் தத்துப்பிள்ளைகள் ஆய் விடுகின்றனர் என்ற விதி சில நாடுகளில் இருக்கக் காண்கிறோம். அவ் வகையில் இவ்விருவர்களும் ஈரோட்டின் தத்துப்பிள்ளைகளாக ஆயினர். ஈரோட்டாரின் உரிமைகள் இவர்களுக்கும் உண்டு. ஆகவே, தற்காலம் இவர்கள் வகித்துவரும் பதவிகளுக்கு இவர்களுக்கு உரிமை உண்டு. அதை மறுக்க நமக்கு உரிமையில்லை. ஆனால் “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக் குக் கொண்டாட்டம்” என்ற பழமொழி தமிழில் உண்டு. இத் தமிழ்ப் பழ மொழியைப் பெற்ற தமிழர்கள் தத்துப்பிள்ளைகளின் ஆதரவிற்கு உட் படாமல் என் செய்யமுடியும் ? ஈரோடு மாந்தரின் தலைவிதி. இதுநிற்க.

நகர சபையில் இரட்டை ஆட்சி

‘இரட்டை ஆட்சி’ என்பதை அறியாத தமிழர் கிடையாது; ஆகை யால் ஈரோட்டாரும் இதை அறிந்துதான் இருக்க வேண்டும். இந்திய ஆங்கில அரசாங்கத்தில்தான் இந்த முறை என்று அநேகர் நினைத்துக் கொண்டி ருப்பார்கள். இந்த விதமான ஆட்சி நகரசபைகளில் இருப்பதை ஒருவரும் அறியமாட்டார்கள். பாவம்! ஈரோடு நகரசபை ஒன்று இருப்பது இவர்க ளுக்குத் தெரியாது. அதனால் அந்த மூட எண்ணம் “இரட்டை ஆட்சி” ஈரோடு நகரசபையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டு விட்ட சந்தோஷகரமான செய்தியைத் தமிழ்நாட்டாருக்கு இந்தக் குடி அரசின் மூலம் அறிவித்துக் கொள்ளுகிறேன்.

எந்த நகரசபையிலும் காணாத ‘இரட்டை ஆட்சி’ எங்களூர் நகரசபையில் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிய அநேகர் ஆவல் கொள் வார்கள். அவர்களுக்கு அதன் பிறப்பு, வளர்ப்பைப் பற்றிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நகரசபையின் தலைவருக்கும், உபதலைவருக்கும் ஏற்பட்ட ஊடல் இரட்டை ஆட்சி என்னும் குழந்தையைப் பெறத் துணை செய்தது. ஊடல் உண்டாவதெல்லாம் இரண்டு உயிர் அன்பர்களுக்குள்தான். இது உலக இயற்கை. இயற்கை எங்கும் - எவ்விஷயத்திலும் மாறாது. இரு தலைவர்களும் முதலில் ஒரே கட்சியில் மும்முரமாக உழைத்து வந்தார்கள். எமது தலைவர் தமது தற்காலப் பதவியைப் பெற எமது உபதலைவர் பட்டபாடுகள் விவரிக்க முடியாது. அல்லும் பகலும் ஓயாமல் உழைத்து எமது தற்காலத் தலைவரை எமக்குத் தந்தார். ஆகவே, இருவர்களின் நேசத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இருவரும் அதிகாரப் பதவி பெற்றார் கள். மனமொத்து ஒரே கட்சியில் இருந்து வந்த இரு நண்பர்களுக்கிடையே அதிகாரம் என்ற பேய் குறுக்கிட்டு ஊடலை உண்டாக்கிற்று. இந்த ஊடல் நகரசபைக்கு சிப்பந்திகள் நியமிக்கும் விஷயத்தில் சண்டையை விளைவித் தது. தலைவர் நியமித்த சிப்பந்தியை உபதலைவர் ஓட்டி விடுகிறது; உப தலைவர் நியமித்த சிப்பந்தியை தலைவர் வெளியே தாட்டி விடுகிறது. இவர் களின் ஊடல் நகரசபைச் சிப்பந்திகளுக்குச் சனியனாக விளைந்தது. இது எப்படி முடியும் என்று அநேகர் நினைக்கலாம். காரணம் சொல்லுகிறேன். எங்கள் தலைவருக்கு வெளியூரில் அடிக்கடி வேலையுண்டு. அவர் இல்லாத காலத்தில் உபதலைவர் அவர் வேலைபார்த்து வருவதென்பது சட்டம். ஆகவே, தலைவர் ஊரில் இல்லாவிட்டால் உபதலைவருக்குக் கொண்டாட் டம்தான். அவர் இஷ்டத்தை முடித்துக் கொள்ள அதுதான் காலம். சிப்பந்தி நியமன விஷயத்தில் இவ்வளவு சண்டைகள் போட்டுக்கொள்ள என்ன காரணமோ? ஈஸ்வரனுக்குத்தான் தெரியும். நாம் தலைவராகச் செய்து வைத்த ஒருவர் தமது இஷ்டம் போல் நடக்க மறுக்கிறார் என்ற காரணமாக இருக்க லாம் உபதலைவருக்கு. தலைவரின் அதிகாரத்தில் ஒருவர் தலையிடக் கூடா தென்ற காரணமாக இருக்கலாம் தலைவருக்கு. இருவரும் எனக்கு அந்தரங்க நண்பர்கள் அல்ல. ஆகையினால் உண்மைக் காரணம் இன்ன தென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்படித்தான் இருக்கக்கூடும் என்று தானே இந்த நிலைமையில் சொல்லக்கூடும். இருவர்களும் இந்த மர்மத்தை ஈரோடு நகர மாந்தர்களுக்கு விளக்க முன் வருவார்களானால் அவர்களுக்கு ஆயிரம் நமஸ்காரம். ‘இரட்டை ஆட்சி’யை மறந்து விட்டதாக நேயர்கள் நினைக்க வேண்டாம். இந்த சண்டைகளினால் அலுத்துப்போய் இருவர்களும் ராஜி செய்து கொண்டார் போலத் தெரிகின்றது. நகரசபை நிர்வாகத்தில் சில இலாகாக்களைத் தலைவரும், சில இலாகாக்களை உப தலைவரும் வைத்துக் கொள்வதென்பதுதான் ராஜியின் முடிவு. இவ்வாறு ‘இரட்டை ஆட்சி’ ஸ்தாபிதமாயிற்று.

இவ்விதம் இருவரும் ஒருவாறு ஒன்றானார்கள். ஊடலின் முடிவு கூடல்தானே. இரட்டை ஆட்சிக் குழந்தை பிறந்து இரண்டொரு மாதங்கள் தான் ஆயின. ஆகையினால், அதன் வளர்ப்பைப் பற்றி என்னை ஒருவரும் கேட்கக்கூடாது. இன்னும் சில நாள் சென்றால் நானே சொல்லுகிறேன். அது வரை நீங்கள் பொறுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். இவ்வளவு கண்டிப்புக்காக மன்னிக்க வேண்டும்.

நகரசபை ஆபிஸ் தலைவர் வீடு

எங்கள் தலைவருக்கு நகரசபைக் கட்டிடம் தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் தெரியும். நகரசபை வேலை யெல்லாம் தலைவர் வீட்டிலேயே நடந்து வருகின்றன. நகர சபை சிப்பந்தி களைத் தினந்தோறும் காகிதக் கட்டுகளுடன் தலைவர் வீட்டில் காணலாம். நகரசபை வேலைகள் தலைவர் வீட்டிலேயே நடக்கும்போது, நகரசபை கூடும் கட்டிடத்தைத் தவிர வேலை செய்யும் கட்டிடத்தை வாடகைக்குக் கொடுத்து விட்டால் நகர சபைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் ஒரு தடை, இரட்டை ஆட்சி இல்லாமல் இருந்தால் இந்த யோசனையை ஒருவேளை நகரசபையார் அங்கீகரிக்கக்கூடும். உபதலைவர் இலாகா வேலைகள் நகர சபைக் கட்டிடத்தில் கவனிக்கப்பட்டு வருவதாகக் கேள்வி. கட்டிடத்தை வாடகைக்கு விட்டுவிட்டால் பாவம் ! அவர்கதி என்ன வாகும். எதற்கும் என் யோசனையை நகரசபை அங்கத்தினர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

பெருமாளுக்குப் பதிலாக “பெத்த” பெருமாள்

எங்களூர் நகரசபையாருக்கு சுகாதார விஷயத்தில் மிக்க கவலை. ஆகவே, சுகாதாரக் கேடான காரியங்களைக் கவனிக்காமல் இருக்க முடியா தல்லவா? லார்டு நேப்பியர் வீதியும், ஈஸ்வரன் கோவில் வீதியும் சந்திக்கு மிடத்தில் ரோட் மார்ஜனில் சிலர் பலகாரக் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். அவைகள் எல்லாம் ‘மிலிடேரி’ கடைகள். பக்கத்தில் விநாயகர் கோவில். பின்னால் நகரசபை அங்கத்தினரும் பணக்காரருமான ஒருவருடைய வியாபாரக்கடை. பலகாரக் கடைக்காரர்கள் அங்கு இருந்த தினால் சுகாதாரக் கேடான காரியங்கள் நிகழ்ந்ததென்பது வாஸ்தவமே. கடை களோ மிகச் சிறியது; எப்பொழுதும் குளம்போல முன்னால் தண்ணீர் இருந்த வண்ணம் தான் கொசுக்களுக்குத் தாயகம். இவ்வளவு சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் கடைகளை எடுத்துவிட வேண்டுமென நகரசபையார் தீர்மானித்தனர். ‘சிவில்’ விநாயகருக்கு ‘மிலிடேரி’ உணவு பக்கத்தி லிருப்பது இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை. இந்துக்களின் உணர்ச்சியை மகம்மதிய நண்பர்கள் மதித்து அவைகளை எடுத்துவிட வேண்டுமென்று கூறியதற்கு என்னுடைய வந்தனம். கடைகளை எடுத்துவிடக் காரணம் சுகாதாரக்கேடு - விநாயகர் ஆகிய இரண்டும்தான். இந்த இரண்டு காரணங் கள் தீர்மானித்த காலத்தில் வாயாரச் சொல்லிக்கொண்டது. கடைகள் எடுக்கப் பட்டு விட்டன. மிகவும் சந்தோஷம்! போதும் உங்கள் சந்தோஷம்; தயவு செய்து அடக்கிக் கொள்ளும்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். பலகாரக் கடை விஷயம் இன்னும் முடியவில்லை. ³ கடைக்காரர்கள் எல்லாம் இப்பொழுது முன்னிருந்த இடத்திற்கு 50 அடி தள்ளி குடிசைகள் கட்டி வியாபாரம் செய்து வருகிறார்கள். எங்கே? ரோட் மார்ஜனிலா? இல்லை, இல்லை. ரோட்டின் மேலே சாக்கடைகளை மூடி. பழைய நிலைமை யில் ³யார் உபயோகிக்கும் தண்ணீர் சாக்கடையிலாவது போயிற்று. இப் பொழுதோ நடுரோட்டிலே தான். எச்சில் இலைகளெல்லாம் நடுரோட்டில் தான். நகரசபையாரின் சுகாதார உணர்ச்சியை நேயர்கள்தான் மெச்ச வேண் டும். சுகாதாரம் சுகாதாரம் என நகரசபையில் முன்னமே கூச்சல் போட்ட தெல்லாம் மாய்மாலம் என்பது வெளியாய்ப் போய்விட்டது. ‘விநாயகர்’ கூச்சல் எல்லாம் வெறும் வார்த்தைகள் என்பதும் நிச்சயம். ‘மிலிடேரி’ உணவின் வாசனை 50 அடி தூரத்திலுள்ள விநாயகருக்கு எட்டாமல் போனால் அவருக்கு இந்துக்கள் “கௌரவமான கல்லறை அடக்கம்” செய்ய வேண்டியது. ஆகவே, அவர்கள் கூறின இரண்டு காரணங்களும் சரியல்ல என்பது நிச்சயம். வேறே காரணம் அவசியம் இருக்க வேண்டும். ³ கடை கள் பழைய இடத்தில் இருந்த காலத்தில் அவைகளுக்குப் பின்னால் இருந்த மண்டி வியாபாரக் கடையாருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கலாம். நண்பர் கள் உதவி செய்தார்கள் போலும்! இல்லையென்றால், தங்கள் நடவடிக்கைக் குத் தக்க சமாதானம் ஈரோடு மாந்தருக்குச் சொல்ல நகரசபையார் கடமைப் பட்டிருக்கிறார்கள் - கடமை ஏட்டுச் சுரைக்காய்தான் என்றால் நான் ஒன்றும் பேசவில்லை.

ஜனங்கள் நொண்டியடிக்கிறார்கள்

வேறு சங்கதிக்குப் போகலாம். ஈரோட்டில் நகரசபை ரோட்டுகளில் நடக்கப்போகிறார் என்று வீட்டை விட்டவுடனே எப்படியோ என்னுடைய கால்கள் அறிந்து கொள்ளுகின்றன. பாவம்! அவைகள் கெஞ்சுவதைக் காண எனக்கு மனம் வருந்துகிறது. ஆனால் என்ன செய்வது? காலா சோறு போடுகிறது? கொஞ்ச நாளாக எங்களூரில் வருண பகவானுடைய கிருபை அதிகம். வறண்டு கிடக்கிற காங்கயம் முதலான இடங்கள் அந்த பகவானுக் குக் கண் தெரியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்றாலும் எங்களை விடுவதில்லை - பாவம்! எங்களூர் நகரசபையாரின் நிர்வாகத்திறன் அந்தப் பகவானுக்குத் தெரியவில்லை. பீஷர் வீதி கொஞ்சம் முக்கியமான வீதி. சந்தைப்பேட்டை அந்த வீதியில்தான் இருக்கிறது. சந்தை வியாபாரப் போக்குவரத்தும் அங்கேதான் அதிகம். நகரசபையாரை சற்று சந்தைப் பேட்டைக்கு முன்னால் எழுந்தருளி தங்கள் பாத தரிசனத்தை அந்த ரோட்டுக்குத் தந்தருளுமாறு வேண்டுகின்றேன். கருங்கல்பாளையம் ரோடு களில் ஓடுகின்ற நாய்கள் எல்லாம் கொஞ்ச தூரத்தில் காலை நொண்டி அடிக்க ஆரம்பித்து விடுகின்றன. மனிதர் சங்கதி சொல்ல வேண்டுமா? நகர சபையாருக்கு ஒரு யோசனை. நகரசபையின் ஆதரவில் ஒரு பாதரட்சைக் கடை திறந்து வைத்து விலையில்லாமல் - முடியாதென்றால் குறைந்த விலைக்காவது நகர மாந்தர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன். அவ்விதம் செய்வார்களானால் பல்லாயிரம் ஜனங்களின் ஆசீர்வாதத்தையும் வாழ்த்தையும் பெற்று நெடுங்காலம் சுக ஜீவர்களாக இருப்பார்கள். பெரும் புண்ணியமும் உண்டு. ஆனால் இந்த வம்பனுடைய யோசனையை யார் கேட்கப்போகிறார்கள்.

இருட்டுக்கு வரி

எங்களூர் முழுவதிலும் மின்சார விளக்குப் போடவேண்டுமென்ற உத்தேசம் நகரசபையாருக்கு இருப்பதாக அறிகிறேன். அவ்விதம் ஏற்பட்டு விட்டால் ஈரோட்டை என்னவென்று அழைப்பது என்று எனக்கு இப் பொழுதே யோசனை. தேவலோகத்தில்தான் இருட்டே இல்லை என்கிறார்கள். ஆகையினால் ஈரோட்டை “தேவலோகம்” என்று அழைக்கலாம் என்று யோசனை கூறுகிறேன். இந்த யோசனையின் கதி அதோகதி தான் என்பதும் தெரியும். காரணம் அறிய விரும்பலாம். தேவலோகம் இந்து பெயராயிற்று. இங்கிலீஷ்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள். என்ன செய்வது? கொஞ்ச வருஷங்களுக்கு முன் நமது ஊரில் நகரசபையார் கட்டின மார்க்கெட்டுக்கு நாமகரணஞ் செய்தது ஞாபகம் இருக்கலாம். ஹெம்மிங்வே மார்க்கெட் என்பது அதன் திருநாமம். இங்கிலீஷ்காரர்கள் பெயரை வைக்காவிட்டால் அவர்கள் கோபித்துக் கொண்டு இந்தியாவை விட்டுப் போய்விடுவார்களே! அப்பொழுது நம் கதி என்ன? முட்டாள் நான், இந்த யோசனை எனக்கு முன்னமே தோன்றாமல் என்னமோ உளறினேன். நகர சபையார் மன்னிப் பார்களாக.

ஆனால் இன்னொரு விஷயம். மின்சார விளக்குதான் வரப்போ கிறதே; அதற்குள் கொஞ்சம் இருட்டில்தான் நம்மவர் இருந்தால் என்ன என்று தற்காலம் நகரசபையார் நினைக்கிறார்கள் போலும். வாஸ்தவம். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும். இருட்டில் இருந்து வந்தால்தானே மின்சார வெளிச்சத்தின் வேகம் தெரியும். நகரசபையார் இந்த ஊரில் சுமார் 15 காஸ் லைட்டுகள் போட்டு வருகிறார்கள். அவ்வேலை காண்ராக்ட்டில் நடந்து வருகிறது. சென்ற அமாவாசையன்று காலை 3.30 அல்லது 4 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்குப் போக வேண்டியிருந்தது. பெண்டு பிள்ளைகளுமாகச் சுமார் 12 பேர்கள் போனோம். எங்கள் வழி லார்டு நேப்பியர் வீதிதான். அந்த வீதியில் 6 காஸ் லைட்டுகள் இருப்பதாக என்னு டைய நம்பிக்கை. தப்பாயிருந்தால் தயவு செய்து திருத்தினால் ஒப்புக் கொள்ளுகிறேன். ஈரோடு மரப்பாலத்தருகில் ஒரே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எல்லா விளக்கும் தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்த விளக்குக்கு வந்த கேடென்ன என்று யோசித்து இங்குமங்கும் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனேன். இன்னும் இரண்டு விளக்குகள் கண்ணுக்குத் தென்பட்டன. எங்கே ? காரை வாய்க்கால் ரோட்டில். இந்த மூன்று விளக்குகள் மாத்திரம் எரிய என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே முடிவுக்கு வராமல், ரயிலுக்கு டிக்கட் வாங்கி எல்லோருமாக ............................க்குப் போய் விட்டோம். ஆனால், இந்த சங்கதி மாத்திரம் என் மனதைவிட்டு அகலவே யில்லை. என் மூளைக்கும் எட்டவில்லை. ஒரு நண்பரிடம் இதைப்பற்றிச் சொன்னேன். அவர் ஒரு காரணம் சொன்னார். அது என்னமோ எனக்கு அவ்வளவு நல்ல காரணமென்று தோன்றவில்லை. ஆனால், அவர் சொன்ன காரணத்தைச் சொல்லி விடுகிறேன். இதைப் படிப்பவர்கள் என்ன முடிவு செய்து கொண்டாலும் சரி. காரணம் இதுதான். நகரசபைத் தலைவர் வீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் தான் அமாவாசை ராத்திரியிலுங்கூட காஸ் லைட் எரியாவிட்டால் காண்ராக்டர் கதி என்னவாகிறது என்பதுதான். அது எப்ப டியோ போகட்டும். இன்னொரு முக்கியமான சங்கதி. காஸ் லைட் காண் ராக்ட்டு வருஷா வருஷம் கொடுப்பது வழக்கம். இந்த வருஷம் இரண்டு வருஷத்திற்கு ஒட்டுக்காக நகரசபையார் கொடுத்து விட்டார்களாம். இப்பொ ழுதுள்ள காண்டிராக்டர் தான் போன வருஷமும் இவ்வேலை செய்தவர். அக்காலத்தில் அவருடைய வேலையின் திறமையைப்பற்றி அப்பொழு துள்ள நகரசபை அங்கத்தினர்களும், தலைவரும் ³யாருக்குக் கொடுத் திருக்கும் “நற்சாட்சி” பத்திரங்களை இப்பொழுதுள்ள நகரசபையார் வெளியிடுவார்களா என்று கேட்கிறேன். எனக்குப் பதில் யார் சொல்வார்களோ தெரியாது.

திருடனுக்குப் பதிலாக பக்காத் திருடன்

தற்கால நகரசபையார் ஈரோட்டாரின் சுகாதாரத்திற்காகப் பாடுபடுகிற சங்கதியை முன்னமே சொன்னேன். இன்னொரு சங்கதி. ஈரோட்டிற்குப் புதிதாக ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். நமது நகரசபையாரின் தண்ணீர் தர்மத்தைக் காணவே வந்திருக்கிறார். மலேரியா ஜுரம் ஈரோட்டில் கிடைய வே கிடையாது. தண்ணீர்க் குழாய் ஏற்பட்ட நாள் தொட்டு மலேரியா ஜுரம் நடமாடுகிறது. ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருந்தால் போதாது. வீணாகிற தண்ணீரும் கெட்ட தண்ணீரும் நகர எல்லையை விட்டு ஓடிப் போனாலல்லவோ கொசு ராஜாவின் பரிபாலனம் இல்லாமல் இருக்கும். குழா யில் இருந்து வரும் ஜலமெல்லாம் குழாய்க்கு அடியிலே குட்டையாகத்தான்; மீறினாலோ, ரோட்டிலேதான். சரியாக சாக்கடைகள் கட்டி, தண்ணீரை வெளியேற்றினால் அல்லவோ நிலம் காய்ந்து கொசுக்கள் இல்லாமல் இருக்கும். கொசு ராஜாவின் இளங்குமாரன்தான் நமது மலேரியா ஜுரம். நகரசபை ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேர் மலேரியா ஜுரத்திற்காக வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நகரசபையார் ஒரு நாளைக்குச் சென்று பார்த்தால் சங்கதி தெரியும். நல்ல தண்ணீர் ஜனங்களுக்குக் கொடுத்து காலரா என்ற வியாதியை ஊரை விட்டு ஓட்டின புண்ணியம் நகரசபை யாருக்கு உண்டென்பதை மறக்கவில்லை. திருடனைத் துரத்திவிட்டு பக்காத் திருடனைக் கொண்டு வந்த மாதிரியல்லவோ இருக்கிறது காலராவை யோட்டி மலேரியாவைக் கூட்டிவந்தது. காலராவோ மனிதனை இரண்டொரு நாளில் முடிவு செய்துவிடுகிறது. மலேரியா மனிதனை வாட்டி, வாட்டி சித்திரவதை செய்கிறதென்பதை நகரசபையாருக்கு நான் சொல்ல வேண்டிய தில்லை. ‘ தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான் ஒருவன்’ என்பார்கள். அந்த மாதிரி இருக்கிறது நமது நகரசபையார் காரியம். மலேரியா ஜனங்களை வாட்டுகிறது. சாக்கடை கட்டுகிற சத்தமே காணோம். குளிர் காய்ச் சலினால் வருந்துகிற ஜனங்கள் முக்காடு போட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு நல்ல காற்று வாங்குவதற்காக “சிங்கார நந்தவனங்கள்” ஏற்படுத்தும் முயற்சி யில் நமது நகரசபையார் இறங்கியிருக்கிறார்கள்! உண்மையாக இந்த ஊரின் சுகாதாரத்தைத் தேடினால் இந்தக் கடைகளையெல்லாம் கட்டிவிட வேண்டும், அவைகளைப் பின்னால் திறந்து கொள்ளலாம். அவசியமான செலவு போக மிச்சமாகும் ஒவ்வொரு தம்பிடியையும் சாக்கடை கட்டுவதில் செலவிட நகரசபையார் முன்வர வேண்டும். ஏழை அழுதகுரல் அம்பலம் ஏறுமா?

சிங்கார நந்தவனம்

இதேது இவன் நிறுத்தமாட்டான் போல் இருக்கிறதே என்று நினைக் காதீர்கள். ‘அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்’ என்று என் தாயார் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். என் தாயார் போய்விட்டார்கள். நகரத் தந்தையாரிடம் அழுதால் ஏதாவது கிடைக்காதா என்று முன் வந்திருக்கிறேன். தந்தையின் யோக்கியதை உலகம் அறிந்ததே. அடித்தாலும் அணைத்தாலும் தாய் என்பது தெரியும். ஆனால் வேறுகதி இப்போது இல்லையே. “சிங்கார நந்தவனம்” என்று மேலே சொன்னேன். அந்த வனம் ஏற்படுத்தப்போகும் இடங்களில் உள்ள சொந்தவனமான கள்ளிகளை எடுக்க காண்டிராக்ட் கொடுத்திருக் கிறார்களாம். இந்த வேலைக்கு நகரசபையின் அநுமதியுண்டோ இல்லையோ தெரியாது. அவர்களின் அநுமதியை எதிர்பார்த்து தலைவரே செய்கிறாரோ என்னவோ அதுவும் தெரியாது. உண்மையை யாராவது சொன்னால் மிக்க வந்தனம். இதற்காக 500 செலவாகுமாம். இதுவும் கேள்வித்தொகைதான். திருத்தினால் வந்தனத்துடன் ஒப்புக் கொள்ளுகிறேன். இந்தத் தொகை உண்மையாக இருக்குமானால் ஈரோட்டாரின் வரிப்பணம் நாசமாகப் போவ தைக் குறித்தும் வருந்தாமல் இருக்க முடியவில்லை. ³ இடத்திலுள்ள கள்ளியை எடுக்க எவ்வளவு அதிகமானாலும் ரூ.250க்கு மேல் தேவை யில்லை. ஏன் இரட்டிப்புச் செலவு என்று கேட்கிறேன்? அநியாயமாக ஏழைகளின் பணத்தை இப்படி நாசமாக்கலாமா? என்று கேட்கிறேன். அவர்கள் தானே வாயில்லாப் பூச்சிகள். பணக்காரனுக்கு வரி போட்டால் அப்பீல் என்கிறான் - பெரிய இடத்து சிபார்சுகள் பறக்கின்றன - அடுத்த எலக்ஷனில் வோட்டு பயம் உண்டாக்குகிறான் - தன் காரியத்தைச் செயித்து விடுகிறான் - ஏழையோ? வரி போட்ட சங்கதியும் தெரியாது, அப்பீல் போட்டாலும் ஆதரிப் பாரைக் காணோம் - அவனுடைய தயவு யாருக்கு வேண்டும்? ஆனால் நகரசபையாருக்கு ஒரு வார்த்தை. “ஏழை அழுத கண்ணீர் .....” அதற்கு மேல் அவர்கள் இஷ்டம்.இவ்வளவோடு போதும் - அழுது அழுது தொண்டையும் காய்ந்து விட்டது; உடலும் சலித்து விட்டது; ஊற்றுப் பேனாவில் இங்கியும் தீர்ந்து விட்டது - பாக்கி அழுகை பின்னால்.......

(குடி அரசு - கட்டுரை - 05.07.1925)

Pin It